வரலாற்று காலம் முழுவதும், தெய்வீக அவதாரங்களின் மூலமாக கடவுள் மனிதகுலத்திற்குத் தம்மை வெளிப்படுத்தி வந்துள்ளார். அந்த அவதாரங்களின் வாயிலாக நமக்கு வழிகாட்டவும் கல்வியூட்டவும் செய்து, மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான அடிப்படையை வழங்கி வந்துள்ளார். இந்த தெய்வீக அவதாரங்களின் வரிசையில் வந்தவர்களுள் தலையாய அவதாரங்களாக ஆபிரகாம், கிருஷ்ணர், மோசஸ், புத்தர், இயேசு, முகம்மது நபி போன்றோர் அடங்குவர். இவர்கள் அனைவரின் சமயங்களும் ஒரே தோற்றுவாயைக் கொண்டுள்ளன என்பதோடு அச் சமயங்கள் யாவும் கடவுளின் ஒரே சமயத்தின் அடுத்தடுத்த வெளிப்பாடுகளும் ஆகும்.
இந்த தெய்வீக அவதாரங்களின் வரிசையில் ஆகக் கடைசியாக வந்தவர்தான் பஹாவுல்லா. பஹாவுல்லா அவர்கள், இக்காலத்திற்குத் தேவையான புதிய ஆன்மீக மற்றும் சமூக போதனைகளைக் கொண்டுவந்துள்ளார். கடவுள், மனிதகுலம் மற்றும் சமயங்களின் ஒருமைப்பாடு குறித்து போதித்தார்.
“உலகம் ஒரே நாடு, மனிதர்கள் யாவரும் அதன் பிரஜைகள்,” என பஹாவுல்லா கூறியுள்ளார். அதோடு, கடந்த காலத்தின் அனைத்து புனித நூல்களிலும் முன்கூறப்பட்டுள்ளது போல் மனிதகுலம் ஒற்றுமையோடு வாழ வேண்டிய காலம் இதுவே எனவும் பஹாவுல்லா கூறுகிறார்.
1844ம் ஆண்டு உருவான பஹாய் சமயம், இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. பஹாய் சமயத்தின் உறுப்பினர்கள் இன்று 100,000க்கும் அதிகமான உள்ளூர்களில் வசித்து உலகின் ஒவ்வொரு நாடு, இனக்குழு, கலாச்சாரம், தொழில், மற்றும் சமூக அல்லது பொருளாதாரப் பின்னனியைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.
மனிதக்குலத்திற்கு இன்று ஒரு முக்கிய தேவை உள்ளதென பஹாய்கள் நம்புகின்றனர். முதலில், மனிதவாழ்வின் இயல்பு, நோக்கம் ஆகியவை, பிறகு சமுதாயத்தின் வருங்காலம் எனும் இரண்டையும் ஒன்றுபடுத்தக்கூடிய தூரநோக்கை மனிதர்கள் இன்று பெறவேண்டும் என்பதே அந்தத் தேவையாகும். பஹாவுல்லாவின் புனித எழுத்துக்களில் இது குறித்த ஒரு தூரநோக்கு வெளிப்படக்காணலாம்.
"ஆவியின் புத்திரனே!
எனது முதல் அறிவுரை இதுவே: தூய்மையும், அன்பும், பிரகாசமும் நிறைந்த உள்ளத்தினைக் கொண்டிருப்பாயாக. அதனால் தொன்மையும் அழியாத் தன்மையும் வாய்ந்த, என்றும் நிலையான இராஜ்யம் உனக்கே உரியதாகட்டும்."
மனிதனின் புத்திரனே!
நினைவுக்கெட்டாத எனது நிலையிலும், எனது சாராம்சம் எனும் புராதன நித்தியத்திலும் மறைந்திருக்கும் யான், உன்பால் எனக்குள்ள அன்பினை உணர்ந்தேன், ஆகவே உன்னைப் படைத்தேன்; எனது உருவத்தை உன்னில் செதுக்கியுள்ளேன்; எனது அழகையும் உனக்கு வெளிப்படுத்தினேன்.
-பஹாவுல்லா-
மேலும் விளக்கங்களுக்கு...