தப்ரீஸ் நகரில் ஒரு நாள்...
தாப்ரீஸ் நகரில் அன்று.....
(மார்ஸியே கேய்ல் அவர்களின் - "தப்ரீஸ் நகரில் ஒரு நாள்" எனும் கட்டுரையில் தமிழாக்கம்)
மரம் ஒன்றின் கீழ் ஓடும் நீரோடையின் கரையில் சாய்ந்துகொண்டு, ஓடையில் ஓடும் நீரை ஒரு பாரசீகர் மணிக்கணக்காகப் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார். சீனர்கள், கண்ணாடியைப் போன்று தோற்றமளிப்பதும், சப்பென்றிருப்பதுமான நீரையே விரும்புவார்கள் எனக் கூறுகின்றனர்; ஆனால் ஒரு பாரசீகரோ, தெளிந்த குறுகிய நீரோடையில் நெளிந்து பிரயாசையுடன் ஒடும் நீரையே விரும்பி ரசிப்பார்.
ஒரு வேளை அக்குளிர்ந்த நீரோடையினுள் ஒரு குடுக்கை நிறைய திராட்சை மதுவை அவர் குளிர வைத்துக்கொண்டும் இருக்கலாம். சித்திரங்களில் மட்டுமே காணப்படும் மறைந்து போய்விட்ட பாரசீகர்களைப் போல், மனித சஞ்சாரத்திற்கு அப்பால் அவரும் ஒரு குன்றின் ஓரமாக ஒரு சமுக்காளத்தில் சாய்ந்துகொண்டிருக்கலாம். முசுக்கட்டை மரத்தின் இலைகள் பரப்பப்பட்ட ஒரு தட்டில் நிறைய இலந்தைப் பழங்கள் அவர் முன் இருக்கின்றன. அவர் ஹஃபீஸின் கவிதைகளில் ஒன்றை முனுமுனுத்துக் கொண்டிப்பார். ஹஃபீஸ் பல காலங்களுக்கு முன் ஷீராஸில் வாழ்ந்த, “அருவமானவரின் நாவென” போற்றப்பட்ட ஒரு மாபெரும் கவிஞராவார். ‘உமது முக ஒளியினைத் தவிர வேறெதனிலும் என் பார்வை படாதிருக்க, உலகில் உள்ள அனைத்திலிருந்தும், ஒரு வல்லூறுக்கு மறைக்கப்பட்டிருப்பது போல் நான் என் கண்களை மறைத்துக்கொண்டுள்ளேன்.” அந்த பாரசீகரைச் சுற்றி மஞ்சள் நிற பாலைவனம்; அவரும் பூத்துக் குலுங்கும் ஒரு சேர்ரி மரத்தின் கீழோ, ஓடைக்கருகே நீரில் சாயந்துகொண்டிருக்கும் வில்லோ வகை மரத்தின் கீழோ அவர் சாய்ந்துகொண்டிருக்கலாம். ஏனெனில், இது நகரத்திற்கு வெகு தூரத்திற்கப்பால் இருக்கும்; அவருக்குப் பின்னால், பல மைல்களுக்கும் அப்பால், பளிச்சிடும் வெள்ளி மலைகள் இருக்கின்றன.
அவர் தான் அருந்திய மதுவாலும், கவிதையினாலும், அல்லது ஒரு வேளை நீரோடையின் ஈர்ப்பினாலும் போதையுற்று இருக்கலாம். ஓடைக் கரையின் ஓரங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் இளம் பசுமை நிற கொடிகளை அவரால் தொட முடிகிறது; இதை உமார்-இ-ஃகய்யாம் பின்வரும் நாலடிகளில் விவரித்துள்ளார்:
நாம் சாய்ந்திருக்கும் ஆற்று விளிம்பெனும் உதடுகளுக்குச் சிறகுகளோ,
வெனக் காட்சி தரும் பசுமை நிற மென் கொடிகள்.
சாயும் போது மெல்லச் சாயுங்கள்! யாரே அறிவார் இங்கு
கனிந்த உதடு எதனிலிருந்து அறியா வன்னம் இங்கே இது உதித்தது!
இக்கவிஞர், ஆற்று விளிம்பின் இப்பசுமையை, இளைஞன் ஒருவனின் முகத்தில் தோன்றும் முதல் குறுமுடிகளுக்கு இணையாக வருணிக்கின்றார்.
பாரசீகர்களுக்கு நகரத்தை விட்டு வெளியேறுவது மிகவும் விரும்பத்தக்கதாகும். ஏனெனில், நகரங்களில் காவி நிற செங்கற்களிலான சுவர்களே எங்கும் காணப்படுகின்றன. அச் சுவர்களுக்கிடையே குளங்களும், எலுமிச்சை இன மரங்களும், மல்லிகைப் புதர்களும்; தட்டையான கூறை கொண்ட சேறு பூசப்பட்ட வீடுகளுமே இருக்கின்றன. குளிர்காலத்தில் அக்கூறைகளிலுள்ள வெண்பனி குவியல்கள் அப்புறப்படுத்தப்பட்டு, சீர்படுத்தப்படுகின்றன; கோடைக்கால இரவுகளில் அக்கூறைகளில் கொசுவலைகளின் தோற்றம். வீடுகளுக்கு உள்ளே, வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள்; பளிச்சிடும் மாதாக்கோவில் சன்னல்கள் போன்ற நிறத்திலான செம்மையாகப் பின்னப்பட்ட சமுக்காளங்கள். நகங்களில் மருதானி பூசப்பட்டும், தலைகளில் முத்துக்கள் சூடியுமுள்ள பெண்களும் அங்கிருக்கின்றனர். வெளியே தூசிப்படலம் சூழ்ந்த தெருக்கள். பளிச்சிடும் பழுப்பு நிற மை பூசப்பட்ட வால்களைக் கொண்ட அரசகுலத்தினரின்அரபுக் குதிரைகளில் பவனி வரும் பிரபுக்கள். புண் அரித்துப்போன முகங்களுடைய பிச்சைக்காரர்களும் பிரபு ஒருவரின் வாசலில் நின்றுகொண்டிருக்கின்றனர். பஹாய்ப் பிரார்த்தனைகளில் இத்தகைய பிச்சைக்காரர்களை நாம் காணலாம். அருவமானவரின் வாயிலினருகில் நிற்கும் மனிதர்களின் ஏழ்மை நிலையைக் குறிப்பதற்கு இவர்களுடைய உவமானம் பயனுள்ளதாகின்றது.
19-ம் நூற்றாண்டுக்கும், 20-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்த பாரசீகத்தின் ஓர் அகக்காட்சியே இது. பாப் அவர்கள் இதைக் கண்டிருக்க வேண்டும்; அவர் இவ்வாறு கண்டிருக்கக்கூடும்: நாம் இப்போது பார்க்க முடிவது போல, வேலமரத்தினூடே எழும் சந்திரோதயத்தை அவர் பார்த்திருந்திருக்கலாம். "கடவுளே, கடவுளே" என இரவு முழுவதும் கத்திக்கொண்டிருக்கும் ‘ஹக்’ பறவையை அவர் பார்த்திருந்திருப்பார்; இப்பறவை இரவு முழுவதும் கடவுளே, கடவுளே என கத்தி விடியற்காலையில் தன் தொண்டையைக் கிழித்துக் கொள்ளும் என்பது ஐதீகம்.
18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் நிலை குறித்து வில்லியம் போலித்தோ இவ்வாறு எழுதியுள்ளார்: ‘ஐரோப்பா தன் கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு சாவியைத் தொலைத்துவிட்டது.... ஒரு பூட்டிய அறைக்குள் ஏற்படக்கூடிய ஒரு வெடிப்பைப் பற்றி கற்பனைப் பண்ணிப்பாருங்கள்...’. பாப் அவர்கள் பாரசீகத்தில் தோன்றியது இதற்குச் சமமான ஒறு நிகழ்ச்சியாக வருணிக்கப்படலாம். அக்காலத்தில் பாரசீகம் ஓர் ஆன்மீகச் சிறைக்கூடமாக ஆகிவிட்டிருந்தது. ‘பாஸ்ட்டில்’ எனப்படும் பாரீஸ் சிறைச்சாலையைவிட பயங்கரமாக இருந்தது; ஆனால் மனிதர்கள் விடுதலையையும், ஒளியையும் தேடிக்கொண்டிருந்தனர். ஒரு மகத்தான நாள் நெருங்கி வந்துகொண்டுள்ளதாகையால், நம்பிக்கையை இழக்கவேண்டாமெனக் கூறும், மரபுக்கூற்றுகள் வழிவழியாக அவர்களையும் வந்தடைந்திருந்தன. திருக்குரானின், ஆராதனை அத்தியாயத்தில் ஒரு வரியுண்டு; அது பின்வருமாறு கூறுகின்றது:
விண்ணுலகங்களையும், மண்ணுலகையும் இறைவனே படைத்துள்ளார்... அவரைத் தவிர இரட்சகரோ, இடையீட்டாளரோ வேறு எவரும் இலர். ஆதலால் நீங்கள் இதைக் கருதமாட்டீர்களா? விண்ணுலகிலிருந்து மண்ணுலகு வரை அவர் அனைத்தையும் நிர்வகிக்கின்றார்; ஆயிரம் ஆண்டுகள் அளவு கொண்ட அந்த நாளில், அவர்கள் அவரிடமே திரும்பிச் செல்லப் போகின்றனர்...
வருடம் 260 ஹிஜ்ரியில் இறுதியாகத் தோன்றிய இமாம் மறைந்துவிட்டார் என்பது எல்லா (ஷீயா) முஸ்லிம்களுக்கும் தெரியும்; ஹிஜ்ரி 1260ம் வருடத்தில் அவர்கள் காத்திருந்த நாட்கள் ஒரு முடிவுக்கு வரும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
வேறு தீர்க்கதரிசனங்களையும், வேறு சமய நூலையும் பயன்படுத்தி மேற்கத்திய நாடுகளில் வில்லியம் மில்லர் போன்ற சில மனிதர்கள் போதித்து வந்தது போல், பாரசீகத்திலும் குறிப்பிட்ட சில மனிதர்கள் இது குறித்து அவர்களுக்குப் போதித்து வந்தனர். ஒரு நாள் இத்தகைய தீர்க்கதரிசனங்கள் விளக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வகுப்பிற்குள் பாப் அவர்கள் பிரவேசித்தார். அவர் உட்கார்ந்த போது அவருக்குக் குறுக்காக ஒளிக் கீற்று ஒன்று பளிச்சிட்டது. போதித்துக் கொண்டிருந்தவர் தமது பாடத்தை நிறுத்தினார். பாப் அவர்களை அவர் பார்த்தார். ‘அகோ, அந்த மடியில் விழுந்துள்ள ஓளிக் கீற்றைவிட உண்மை அதி வெளிப்படையாகவுள்ளது,’ எனக் கூறினார்.
ஒரு மாதாக்கோவிலைவிட ஒரு பள்ளிவாசல் வசிப்பிடமாக அதிகம் பயன்படுத்தப்பட்டும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கும். வாரத்தின் எந்த நாளில் வேண்டுமானாலும் மக்கள் அங்கு நடமாடிக்கொண்டும், பிரார்த்தித்துக்கொண்டும் இருப்பர். தேகசுத்திக்காக அங்கு நீரூற்றுகள் பாய்ந்த வண்ணம் இருக்கும் - அஃது உண்மையான நீராகும்; (மாதாக்கோவில்களில் காணப்படுவது போல, ஓர் அடையாள அறிகுறியாக நிலைதாழ்ந்துள்ள, ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரல்ல. தரைகளில் கம்பளங்கள் ஜொலித்துக்கொண்டிருக்கும். மனிதர்கள் மண்டியிட்டுக்கொண்டும், எழுந்துகொண்டும், தலைவணங்கிக்கொண்டும் இருப்பர்; அங்கு, உள்ளம் விண்ணுலகச் சிந்தனைகளில் ஈடுபடுவதை தடுக்கும் சிலைகளோ, படங்களோ கிடையாது. பாப் அவர்கள் அடிக்கடி பள்ளிவாசல் செல்வார்; அங்கு அவருடைய கண்களில் கண்ணீர் மல்கும்; அவர், ‘கடவுளே, எ கடன்வுளே, எனதன்பரே, என் இதயத்தின் ஆவலே!’ எனக் கூறிக்கொண்டிருப்பார். அவர் வானிபத் தொழில் புரிந்து வந்தவர். வெளிக்கிழமைகளில் அவருடைய கடை அடைக்கப்பட்டிருக்கும். அன்று அவர் தமது வீட்டின் உப்பரிகைக்குச் சென்று, வெள்ளி நிற சூரிய ஒளியில் நின்றும், மண்டியிட்டுக் கொண்டும், முஸ்ஸுல்மான்கள் வழிபடுவது போல் தாமும் வழிபடுவார்.
பார்ப்பதற்கு அவர் வசீகரம் மிக்கவராவார். ஒரு சாதாரன பாரசீகரைவிட அதிக சிகப்பு நிறம் மிக்கவர்; உயரம் குறைந்தவர், மனதில் நிற்கும் குரலொலி படைத்தவர். இங்கு நான்காவது இமாமாகிய, பாதி பாரசீகராகிய சைனு’ல்-அபிதினை நாம் நினைவு கூறுகின்றோம். அவர் தமது வீட்டின் கூறையில் இரவு நேரங்களில் பிரார்த்தனைகளை ஓதிக் கொண்டிருப்பார்; கீழே கனத்துடனான தோல் பைகளில் நீர் கொண்டு செல்வோர் கூட அவர் ஓதுவதை சிறிது நேரம் நின்று கேட்டுவிட்டே செல்வர் என்பர். அவருடைய நடையும் நினைவில் நிற்கக்கூடியதாகும். தெய்வங்கள் அவற்றின் நடையிலிருந்து அறியப்படுகின்றன என வெர்ஜில் என்பவர் கூறியுள்ளார்; நம்மிடையே தோன்றும் மகாபுருஷர்களுக்கும் இது பொருந்தக்கூடியதாகும். ஒரு முறை பாப் அவர்களை முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் தேடிக்கொண்டிந்தார். ஆனால், பாப் அவர்களின் சிஷ்யர் ஒருவர் வழியை மறைத்துக்கொண்டிருந்தார். அப்போது பாப் அவர்கள் அவ்வழியே நடந்து சென்றதைக் கண்ட அம்மனிதர்: ‘அவரை என்னிடமிருந்து ஏன் மறைக்க முயலுகின்றீர்? அவருடைய நடையிலிருந்தே அவர் யார் என்பது எனக்குத் தெரியும்,’ என்றாராம். பாப் அவர்கள் இறைத்தூதர் முகம்மது அவர்களின் வழித்தோன்றலாவார். அவர் அவரைப் போன்றே இருந்திருக்கக்கூடும். அவரைப் பற்றி சகாபாக்களில் ஒருவர், ‘முகம்மதைப் போன்று வேறு அழகு எதனையும் நான் கண்டதில்லை; அவருடைய முகத்தில் சூரியனே நகருகின்றது என கூறலாம், என்றாராம்.
பாப் அவர்கள் திருமணம் புரிந்தார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை சிறிது நாளில் இறந்தது. அதன் தந்தையார் அக்குழந்தையை இறைவனுக்கே அற்பணித்தார்: ‘என் இறைவா, என் மகனை நான் தியாகம் செய்துள்ளதானது... உமக்கு ஏற்புடையதாக இருந்திட அருள்வீராக. உமது நல்விருப்பம் எனும் பாதையில் என்னையே... நான் அர்ப்பணம் செய்திடுவதற்கு இது ஒரு முன்னோடியாக இருந்திட அருள்வீராக.
பிறகு அவர்பால் சில மனிதர்கள் ஈர்க்கப்பட்டனர். அவர் அவர்களை ஆணையிட்டு அழைக்கவில்லை - அவர்களே, பாலைவனப் பிரதேசங்களைத் தாண்டி அவரைக் காணவந்தனர். சிலர் கழுதைகளின் மீதமர்ந்து வந்தனர் - வெள்ளை நிற கழுதைகள். ஒரு வேளை அவற்றின் மீது மருதானி பூசப்பட்ட கைகளின் கறை படிந்திருத்திருக்கலாம், நீலக்கல் மாலைகளை அவை அனிந்திருந்திருக்கலாம்; இத்தகைய கழுதைகள் பாரசீகத்தின் தெருக்களில் இன்னமும் காணப்படுகின்றன - கார்களும், இரயில் வண்டிகளும் அவற்றை இதுவரை ஒழிக்க முடியவில்லை. இம் மனிதர்கள் தாங்கள் கண்ட கனவுகளின் வாயிலாகவும், மனக்காட்சிகளின் வாயிலாகவும் பாப் அவர்களைக் காண வந்தனர்; பார்க்கப்போனால் பல அமெரிக்கர்களும் இதே முறையில் பஹாய்கள் ஆகியுள்ளனர். இந் நிகழ்ச்சிகள் விஞ்ஞானிகளால் ஆராயப்பட வேண்டியவை. அவற்றை நாம் அறிவியற்கூட ரீதியில் புரிந்துகொள்ள இயலாது. ஓர் இறைத்தூதர் தோன்றப்போகும் வேளையில், அவருக்காகப் பல சிஷ்யர்கள் காத்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். காலங்கள் தோறும் தோன்றும் ‘நம்பமுடியாத நூற்றுக்கணக்கான இறைக்காவலர்களிலிருந்து,’ தனிப்பட்டு நிற்கும் உண்மையான இறைத்தூதர்கள் உண்டென்பதும் நமக்குத் தெரியும்; மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் மறுஉயிர்ப்புறச் செய்யும், மூலாதாரமாக இருக்கும் ஒருவர் இருக்கின்றார் என்பதும் நமக்குத் தெரியும். திருத்தூதர் முகம்மது அவர்களைப் பற்றி கார்லைல் இவ்வாறு கூறுகின்றார்:
புராதன மனிதர் என இத்தகைய மனிதரையே நாம் கூறுகின்றோம்; அவர் நம்மிடம் நேரடியாகத் தோன்றுகின்றார்... அவரை, கவிஞர், இறைத்தூதர், இறைவன் என நாம் அழைக்கலாம்; - இப்படியோ, அப்படியோ, அவர் உச்சரிக்கும் வார்த்தைகள் வேறு எந்த மனிதனும் உச்சரிக்க முடியாத வார்த்தைகள் என நாம் உணருகின்றோம். விஷயங்களின் உள்ளார்ந்த மெய்மையிலிருந்து அவர் நேரடியாகத் தோன்றுகின்றார்; - அவர் வாழுகின்றார், அதனோடு தினசரி தொடர்பு கொண்டு, அவர் வாழ்ந்துதான் ஆகவேண்டும்... உலகின் மையத்திலிருந்தே அவர் தோன்றுகின்றார்; அவர் விஷயங்களின் பூர்வமெய்மையின் ஒரு பகுதியாவார்.
பாப் அவர்கள் இச் சிஷ்யர்களை ஆங்காங்கு அனுப்பினார். அவர்கள் கிழக்குப் பிரதேசங்களை தட்டியெழுப்பி, நூறு நகரங்களில், கருகிப்போனதும் உருக்குலைந்து போனதுமான தங்கள் உடல்களை விட்டுச் சென்றனர். அவர்கள் தங்கள் தலைவரின் செய்தியை வழங்கினார்கள். எந்தத் தோட்டாவும் அவர்களுடைய உதடுகளின் அசைவை நிறுத்தமுடியவில்லை. ஒரு மாபெரும் உலகக் காப்பாளர் குறித்த நற்செய்தியை அவர்கள் வழங்கினர். பாப் அவர்கள், ‘இறைவன் வெளிப்படுத்தவிருக்கும் அவருடைய கைகளில் நான் வெறும் ஒரு மோதிரம் மட்டுமே ஆவேன்.’ பிறகு அவர், இஸ்லாத்தின் அதிப்புனிதஸ்தலமாகிய மெக்காவுக்கு பயணம் செய்தார். அங்கு, கா’பாவின் புனித கருப்புநிற கல்லிற்கு முன்பாக அவர் தமது செய்தியைப் பிரகடணம் செய்தார்; அதன் வாயிலாக தீர்க்கதரிசனமும் நிறைவேறியது. சம்பிரதாயமாக வழங்கி வந்தது போல், அவர் மிகவும் சிறந்த செம்மறியாட்டு வகையிலிருந்து பத்தொன்பது ஆடுகளைப் பலி கொடுத்தார்; மிகவும் கவனமான வாய்களில் சர்க்கரை ஊட்டப்பட்டவையாகவும், கண்களில் அஞ்சனம் பூசப்பட்டவையுமாக, அந்த ஆடுகள் இருந்திருக்கலாம். இந்தப் பலியானது ஏழைகளுக்குப் பெரும் ஆசீர்வாதம் போன்றதாகும், ஏனெனில், இறுதியில் அந்த ஆட்டிறைச்சி ஏழைகளுக்கே விநியோகம் செய்யப்படும். இந்த இறைச்சியிலிருந்து பாப் அவர்கள் தமக்கென ஒரு பங்கு எடுத்துக்கொள்ளவில்லை. இது, எப்போதும் குறைவான உணவே இருக்கும் முகம்மது அவர்களின் இல்லத்தில் ஓர் ஆடு எவ்வாறு பலி கொடுக்கப்பட்டது எனும் கதையை நினைவிற்குக் கொண்டுவருகின்றது. பலி கொடுக்கப்பட்ட அந்த ஆடு ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது, நபியவர்களின் மனைவியான ஆயிஷா, இறைச்சி அனைத்தும் கொடுக்கப்படுகின்றதே என அங்கலாய்த்தார். ‘தோள்பட்டையைத் தவிர வேறொண்றும் மீதமில்லை,’ எனக் கூறினார். அதற்கு நபியவர்கள், ‘தோள்பட்டையைத் தவிற முழு ஆடும் மீதமுள்ளது,’ என்றாராம்.
பாரசீகத்தில் பாப் அவர்கள் பள்ளிவாசல்கள் அனைத்திலும் பிரகடனம் செய்தார். அங்கு அவர் நுழையும் போதெல்லாம் மக்கட் கூட்டம் அவரைச் சூழ்ந்துகொள்ளும். ஷீராஸில் நீர் ஓரத்தில் சா’ஆடி கூறியது போல்: ‘எங்கெங்கு அதிமதுரமான நீரின் ஊற்று இருக்கின்றதோ, அங்கெல்லாம் மனிதர்களும், பறவைகளும், பூச்சிகளும் ஒன்றாகத் திரளும்.’ உரையாற்றிட அவர் பள்ளிவாசல்களின் சமயமேடை ஏறி பேசும்போதெல்லாம் அவர்கள் அமைதியோடு நிற்பார்கள்.
இஸ்லாத்தின் மையங்களாகிய அவற்றில், அவர் முன்னெழுந்தார், தாக்கினார். மரணத்தை அரவனைக்கப் போகும் மனிதரைப்போல் அவர் அறைகூவல் விடுத்தார். அவர் மக்கட் கூட்டத்தின் பிரபுக்களாக விளங்கிய சமயத்தலைவர்களுக்கு எதிராக குரலெழுப்பினார். முல்லாக்களுக்கு திருக்குரான் மனப்பாடமாகும். ஆனால், பாரசீகர் எவருமே அதைத் தங்கள் சொந்த மொழியில் படிக்கும் வாய்ப்புக் கிடையாது. முல்லாக்களுக்கு எது சட்டரீதியானது எது சட்டரீதியானதல்ல என்பதும், ஒரு மருந்து எப்போது உட்கொள்ளப்பட வேண்டும், அல்லது கூடாது என்பதும், ஒரு பயணம் எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும், ஒரு பெண்ணின் திருமணம் எப்போது நிகழ வேண்டும் என்பதெல்லாம் தெரியும். மற்ற மனிதர்களுக்குத் தெரியாததெல்லாம் முல்லாக்களுக்குத் தெரியும். ஆனால், அவரது மூதாதையரான முகம்மது நபி அவர்கள் அக்காலத்து அராபிய சிறுதெய்வங்களைக் குறை கூறியது போல் பாப் அவர்களும் முல்லாக்களை குறைகூறினார். முகம்மது அவர்கள்: ‘நீங்கள் அவற்றின்(சிலைகள்) மீது எண்ணெய், மெழுகு ஆகியவற்றைக் கொண்டு பூசுகின்றீர்கள், அவற்றின் மீது ஈக்கள் ஒட்டிக்கொள்கின்றன, - இவை வெறும் மரக்கட்டைகளே என நான் கூறுகின்றேன்!’ என்றார். இயேசு நாதர் தமது காலத்து மனிதர்களை, வேஷதாரிகள் - நாய்கள் - விஷப்பாம்புக் கூட்டம் - சோரம்போனவர்கள் என அதே போன்று கூறினார்.
பாரசீகம் முழுவதும் இப்போது அவரைப் பற்றியே பேச்சாக இருந்தது. அவரை ஒரு மலைக்கோட்டையில் வைத்து அடைத்தார்கள். அங்கு அவர்: ‘இரவு நேரத்தில் எமக்கு ஒரு விளக்கு கொண்டு வருபவரும் கிடையாது. இஸ்லாத்தின் பலன் பாப் அவர்களை ஏற்றுக்கொள்வதே, இருந்தும் அவர்கள் அவரை சிறைப்படுத்தியுள்ளனர்.’ அவர் மேலும் எழுதினார்: ‘இவ்விடத்தின் அனுக்கள் அனைத்தும், “இறைவனைத் தவிற வேறு இறைவன் கிடையாது!” என கூக்குரலிடுகின்றன. பிறகு அவர் பஹாவுல்லாவின் வருகையை முன்னறிவிக்கும், தமது படைப்புக்களிலேயே மாபெரும் படைப்பை தமது செயலாளருக்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஓதும் போது அவருடைய குரல் ஒலி மலைக்குக் கீழும், மலைப்பள்ளத்தாக்கின் மீதும் எதிரொலித்தது. பனிக்காலத்தின் குளிரினால் அவர் பெரும் இன்னலுக்குள்ளானார். தமது தேகசுத்திக்காக அவர் பயன்படுத்திய நீர், அவருடைய முகத்திலேயே உரைந்து போனது.
மக்கள் அவரை நேசித்தனர், அவரைத் தேடி வந்தனர். அவர்கள் இந்தியாவிலிருந்தும் கால் நடையாக வந்தனர். அவர் வேறொரு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடைய விசுவாசிகள் தெருக்களில் கொலை செய்யப்பட்டனர்.
பிறகு தாப்ரீசில் ஒன்றுகூடியிருந்த இளவரசர், மதகுருக்கள் ஆகியோரின் முன்னிலைக்கு அவர் ஆணையிட்டு அழைக்கப்பட்டார். சபையில் ஒரு நாற்காலி மட்டுமே மீதமிருந்தது; அஃது இளவரசனுடையதாகும். பாப் அவர்கள் இந்த நாற்காலியில் அமர்ந்தார். அவருடைய முகத்தில் பெரும் சக்தி பிரகாசித்தது; அதனால் சபை நிசப்தமானது. பிறகு, ஒரு மதகுரு கேள்வி கேட்டார்: ‘நீர் யாரென உம்மைப் பிரகடனப்படுத்துகின்றீர்?’ அதற்கு அவர்: ‘நீங்கள் ஆயிரம் வருடங்களாக எவருடைய நாமத்தை உச்சரித்தீர்களோ, எவருடைய வருகையைக் கண்ணுறுவதற்காக ஏங்கினீர்களோ... எவருடைய வெளிப்பாட்டின் நேரத்தைத் துரிதப்படுத்துமாறு இறைவனை வேண்டினீர்களோ, அந்த ஒருவரே யானாவேன். மெய்யாகவே யான் கூறுகின்றேன், எமது வார்த்தைக்குக் கீழ்படிய வேண்டியது கிழக்கிலும் மேற்கிலுமுள்ள எல்லா மனிதர்களுக்கும் விதிக்கப்பட்டதாகும்...
பிறகு நடந்தது அனைத்தும் நமக்குத் தெரியும். ஆனால், இந்நாள்கள் அவரது வெற்றிக்கான நாள்கள். தாப்ரீசில் அந்தக் காலை வேளையில் அவர் எவ்வாறு ஒரு சுவற்றில் தொங்கவிடப்பட்டு சுடப்பட்டார் என்பதை நாம் நினைவு கூற வேண்டியதில்லை. மாறாக, அவர் இன்று உலகம் முழுவதும் வாழ்வதை நாம் பார்க்கின்றோம்.
பஹாய் புனித ஸ்தலங்களில் ஒன்றாகிய பாப் அவர்கள் வாழ்ந்த வீடு உடைக்கப்படுகிறது