மார்ஜரி மோர்ட்டன்
அவர் பஹாவுல்லா மற்றும் ஆசிய்யா ஃகானும் தம்பதியரின் புதல்வியும், அப்துல் பஹாவின் சகோதரியும் ஆவார். பஹாவுல்லாவின் சமய நம்பிக்கையாளர்களிடையே ‘அதிப்புனித இலை’ என வழங்கவும் போற்றவும் பெற்றிருந்தவர். அவரைச் சுற்றியிருந்தோருக்கு அவர் ‘ஃகானும்’, அதாவது ‘பெருமாட்டி’. இந்தப் பெண்மணி, ‘ஃகானும்’ அவர்கள், தம்மை அறிந்து அன்பு கொண்ட எல்லோருடைய மனதிலும் ஊடுருவும் புத்துணர்ச்சியளிக்கவல்ல வகையில் வாழ்கிறார் - நாள் முழுவதும் ஃகானும் கடப்பாட்டுடனும், இங்கிதம் மிக்க மனதுடனும், சிறப்பை பிரதிபலிக்கும் வகையில் அன்றாட அத்தியாவசியங்களை எளிமையாகப் பகிர்ந்து, தமது தினசரி ஜீவ உணவாக விளங்கிய அவற்றை நாமும் நமது பங்கிற்கு எடுத்துச் சென்று பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் வழிவகுப்பார்.
தனிப்பாங்கு மற்றும் வழிவகைகளை உள்ளடக்கிய அவருடைய இனிய சுபாவத்தைப் பற்றி சிந்திக்கையில்: தமது விருந்தினர்களோடு உங்களை அவர் வரவேற்கும் விதம், வசீகரம் கலந்த திடகாத்திரம், எச்சரிக்கையுடனும், கட்டுப்பாட்டுடனும், அதே வேளையில் இலகுவாகவும், அன்னியோன்னியம் இல்லாமலேயே எல்லோரையும் மகிழ்வடையச் செய்வதில், - மென்மை கலந்த பெருந்தன்மை மற்றும் சுயநலம் பாராத ஒரு மேன்மை மிகு பெண்மனியாகத் திகழ்வார். அரச குல மாதர்களின் மனோபாவத்தை அவர் பிரதிபலித்ததானது, முன்னாள் பாரசீக நாட்டின் ராஜசபையை நினைவூட்டியது. தமது குடும்பத்தினருடன் அந்நாளைய சில சம்பிரதாயங்களை அவர் கடைபிடித்தே வந்தார். அவை, அவருக்கு உயிரற்ற செயல்களாக இல்லாமல், ஜீவனுள்ள நடைமுறைகளாகவே விளங்கின; வெளித்தோற்றம் மற்றும் நடப்பு நாகரீகம் இரண்டையும் கடந்த, சக மனிதர் ஒவ்வொருக்கும் உள்ளுறைந்த மரியாதை மற்றும் அக்கரையை வெளிப்படுத்தும் மென்மையான மனித உறவுக் கோட்பாடுகளாக அவை ஃகானும் அவர்களுக்கு விளங்கின.
உயர்குடி மற்றும் மேல்வர்க்கத்தைச் சார்ந்த ஃகானும் போன்ற பெண்மணிகளை முடக்கிவைக்கும் கிழக்கத்திய கட்டுப்பாடுகளை, ஒருவர் அடைமழையின் காரணமாக வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பது போல் ஏற்றுக்கொண்டுள்ளதையும், வாழ்க்கையை அந்தக் கட்டுப்பாட்டிற்குள் வார்த்து, தமது ஆன்ம சக்திகளை அங்கு வெளிப்படுத்தி, தமது உயர் பண்புகள் பிரதிபலிக்கப்படும் அரங்கமாகவும் அதை ஆக்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். வீட்டிற்குள் அமைதிச் சூழ்நிலை மற்றும் உயர்கடப்பாடுகளை உருவாக்க வெளிப்படுத்திய அவருடைய கவனம், மென்மைத்தன்மை கலந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்க்கைக்காண கூறுகள் யாவற்றையும் அவர் சுமுகத்துடன் ஐக்கியப்படுத்தினார். அவர் உறுதிமனப்பான்மை எவரையும் அடக்க முயன்றதில்லை, அவர் முடிவான எண்ணங்கள் யார் மேலும் சுமத்தப்பட்டதில்லை. அவர் வழி மென்மையான வழி. ஓட்டை பிறர் ஒரே அடியில் நொறுக்கும்போது, ஃகானும் அவர்கள் அளவுகடந்த கவனத்துடனும் திறனுடனும் ஓட்டின் உள்ளிருப்பதை வெளிக்கொணருவார். அவர் போக்கில் வற்புறுத்தலையோ சாதிக்க நினைக்கும் மனோபாவத்தையோ காணமுடியாது: எவர் மனதிலும் சுமையை ஏற்றமாட்டார், தமது விருப்பத்தையும் பிறர் மேல் நிச்சயமாக சுமத்த நினைக்கமாட்டார். மெல்லிய புன்னகையுடனேயே அழைப்பு வரும். ஃகானும் அவர்களின் ஆதிக்கம் யாருமே உணராத நிலையில் செயல்படும். ஆக்கம் நிறைந்த அவரது அனுதாபம் தம்மைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கை அங்கங்களில், மிருதுவான அக்கரையாக வெளிப்பட்டு, கவலை தோய்ந்த நேரங்களில் அவர்களை இன்பத்தால் நிரப்பும். அந்த நேரத்தில், இந்த அனுதாபத்தை அனுதாபமாகக் காணாமல், களிப்புடனேயே யாவரும் அதை அனுபவிப்பார்கள். பரிசுகள் வழங்கும்போது அவற்றை ஒரு மெல்லிய பட்டுத்துணியில் சுற்றி வழங்குவது பாரசீக வழக்கம். அதாவது, உள்ளிருக்கும் பண்பட்ட பரிசை குறிக்க வெளியே மென்பட்டுத் துணி போர்த்தப்பட்டு இருக்கும். இதைப்போலவே ஃகானும் அவர்களும் பரிசுக்குள் பரிசு வழங்குவார். அவர் அருகாமையில் இருக்கும் போது அடையும் இதமான மனநிறைவை, அவரைப் பிரியும் போது கூடவே ஈர்த்துச் செல்வோம். ஆனால் இந்த மனநிறைவு ஒரு மிகுந்த களிப்பை, ஆழ்ந்த மனோநிலையை அடக்கியிருக்கும் ஒரு பரிசுப் பொட்டலம் என்பது பிறகே தெரிய வரும். குறையாமல் வெளிப்பட்ட இந்த இரட்டை ஆசியினைக் கண்ணுற, ஃகாணும் அவர்களோடு நாங்கள் ஆக்கோ நகரில் இருந்தபோது வாய்ப்பு கிட்டியது. பிற குடும்ப அங்கத்தினர்கள் ஒரு திருமண வைபவத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, ஃகானும் அவர்கள் ஜுரத்தால் பீடிக்கப்பட்டிருந்தார். திருமண சடங்கிற்குச் சற்று முன்பாக ஃகானும் அவர்கள், அப்பொழுதுதான் குழந்தைப் பருவத்தைத் தாண்டிய வயதினளோ என்று நினைக்கப்படக்கூடிய மணப்பெண்னை, வரச்சொல்லியனுப்பினார். நீர் தோய்ந்த கண்களுடனும் நடுங்கிய தேகமுமாக அந்தப் பெண் வந்தாள். சிறிய புன்னகையை உதிர்த்து, வெள்ளை நிறத்திலான திருமண உடை, முகத்திரை, தலையில் மேல்நாட்டு முறையில் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு நிற பூக்கள் ஆகியவற்றை ஃகானும் அவர்கள் மெல்லத் தொட்டு, மென்மையான குரலில், “எவ்வளவு அழகாக உள்ளன,” என கூறினார். அந்த ஒரு அங்கீகார வார்த்தையில் மணப்பெண் தனது பயம் அனைத்தையும் மறந்து, திருமண வைபவத்திற்குத் தன்னால் புரிந்துகொள்ளப்பட முடியாத ஓர் ஆசீர்வாதத்துடன் சென்றாள்.
பாரசீகரிடையே, ஒரு தாய் தன் குழந்தையை கண்டிக்கும்போதோ அல்லது ஆறுதல் கூறும் போதோ ‘அம்மா’ என்று அழைப்பது வழக்கம். இந்த வாஞ்சை நிறைந்த சொல்லை ஃகானும் அவர்கள் தமக்கு நெருங்கியவர்கள் மற்றும் தம்மைச் சுற்றியுள்ள அனைவர்பாலும் உபயோகிப்பார். ‘மாடர் அய்ப் நடாரட்,’ ‘பரவாயில்லை அம்மா பரவாயில்லை’ எனும் மெல்லிய தொனியிலான வார்த்தைகளின் ஆறுதல் அளிக்கும் எதிரொலி சதா கேட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர் ஆறுதலளிப்பவராய் விளங்கினார். ஆனால் அவரைத் தாய் போன்றவர் என்று சொல்லுவதில் மனம் நிறைவு பெறாது. தாயைப் போன்றவர் என்பது ஒரு வரம்பிற்குட்பட்ட வார்த்தை. தாயன்பு மெல்ல அரவனைத்து தான் அன்பு செலுத்துவோரை தனது பிடியிற் கொள்ளும்; ஆதிக்கம் அதில் அடங்கியிருக்கின்றது. பிரதி அன்பையும் அது எதிர்பார்க்கின்றது. ஃகானும் அவர்களின் வாஞ்சை இதையெல்லாம் கடந்தது. ஃகானும் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர்களின் இதயம் மற்றும் உடல் இரண்டும் பெரும் சுதந்திரத்துடன் இருக்கும். அன்புக்கடன் பட்டுள்ளோமே, என்ற எண்ணம் எவருக்குமே இல்லாமல் செய்துவிடுவார். ஃகானும் இவ்வளவு அன்பாக இருக்கின்றாரே, என்ற எண்ணம்கூட அவர்கள் மனதில் தோன்றா வண்ணம் ஃகானும் அவர்களின் அன்பு அவ்வளவு இயற்கையானதாக இருக்கும். அவர் தொடுவது தெரியாமல் தொட்டு நன்றிக்கடன் மற்றும் பொறுப்புணர்வுகள் எதுவும் எழாமல் செய்துவிடுவார். அவர் ஆறுதலில் பஞ்சின் மென்மை இருக்கும்: காரணம், மனம் பெரிதும் புண்பட்டிருக்கும் வேலையில் தயையின் அழுத்தம்கூட மனதை மேலும் காயப்படுத்திவிடும் என்பதே. தைலம் தடவிவிடுவார் ஆனால் அவரது விரல்களின் கணம் தெரியாது; அதனால் நிவாரணமும் ஆறுதலும் மாயப் பரிசுகளாக கிடைக்கும். அந்த நேரத்தில் அது எங்கிருந்து வந்தது என்றும் தெரியாது தெரிந்துகொள்ளவும் முயற்சி இருக்காது. அந்தப் பரிசினை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்ளுவதில் நன்றியுணர்ச்சி கரைபுரண்டோடும்.
அவர் நம்மை அளந்துபார்த்து அதற்கேற்றவாறு வழங்கமாட்டார்; அல்லது வலி தானாக ஏற்படுத்திக்கொண்டதா அல்லவா, என்றெல்லாம் பார்க்கமாட்டார். துன்பத்திற்கு இயற்கையாகவே ஒரு புனிதத்தன்மை உள்ளது என்பதை அவர் தெரிந்துவைத்திருந்தார். அவர் எப்போதும் நீதிபதியாக வீற்றிருந்தது இல்லை, ஆடுகளையும் ஓநாய்களையும் பிரித்துப்பார்க்க நினைத்ததும் இல்லை. மந்தையில் உள்ள ஆடுகளை வெள்ளை என்றோ கருப்பு என்றோ அவர் பார்த்ததில்லை, ஒருவர் உள்ளத்தில் இருந்து கிளம்பும் நல்ல எண்ணங்களை நல்ல எண்ணங்கள் என்றோ கெட்டவைகளை துர்எண்ணங்கள் என்றோ அவர் கூறியதில்லை. குறைகளை சுட்டிக்காட்டும் பழக்கமோ கண்டிப்போ அவரிடம் கிடையாது. இருள் சூழ்ந்த மனதுடன் சென்றால் அதில் அவர் விளக்கேற்றிவைப்பார்; தவறிழைத்துவிட்டாலோ அல்லது முயலாமல் இருந்துவிட்டாலோ அல்லது முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டோலோ, அந்த தோல்வியினால் நாம் அடைந்த ஏமாற்றத்தை அறிந்து நம்மேல் அதிக அன்பே நல்குவார்; நமது பலவீனம் மற்றும் தோல்விகளின்பால் பரிவும், அப்படியே முயற்சியின்போது துன்பம் ஏதும் அனுபவிக்காதவர்பாலும், தோல்வியில் அவமானப்படாதவர்பாலும் தயையே கொள்வார்.
யாராவது ஒருவர் அவரை துன்புறுத்த நினைத்தால், அப்படிச் செய்ய நினைப்பவரின் மனதில் அவ்வித கொடுமை உணர்ச்சி தோன்றியதற்காக அந்த மனிதருக்கே ஆறுதல் வார்த்தைகள் ஃகானும் கூற நினைப்பார் என நிச்சயமாக நம்பலாம். அவர் அன்பு விதிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. அது முகத்திரையைக் கிழித்து அந்தச் சினத் திரையின் பின்னால் கிடக்கும் ஆன்மீகப் பசியை உணர்ந்து கொள்ளும். மிகக் கொடுமைக்கார உள்ளமே ஆனாலும் அது பிறரிடம் மென்மையைத்தான் எதிர்பார்க்கின்றது என்பதை அவர் உணர்ந்து வைத்திருந்தார். அவரிடம் அந்த அபூர்வமான மனோசக்தி, எந்தச் சூழ்நிலையிலும் வாஞ்சையையே வெளிப்படுத்தும் இயல்பு இருந்தது. அவர் புறிந்துணர்வின் ஆழம், மனித இதயங்களின் துயரங்கள் அனைத்தையும் ஊடுருவி அவற்றின் காரணங்களை கண்டறிந்து, அதன்மூலமாக அந்தத் துன்பமும், துன்பம் கொண்டோரும் ஆசி பெறவும் செய்தது.
எல்லா தயைகளுக்கும் தோற்றுவாயை நன்கு அறிந்துவைத்திருந்த அவர், தம்பாலான தயைகளை தெரிந்துகொள்ளவில்லை. அவர் ஒருவருக்கு ஒரு பரிசு கொடுக்கும் போது, அந்தப் பரிசுக்காக பரிசு வழங்கப்பட இருப்போரிடம் நன்றி தெரிவிப்பதைப்போல் இருக்கும். கொடுக்கவேண்டும் என்ற உணர்ச்சி நன்றி உணர்வுடனேயே அவரிடம் பிறக்கும். நமக்கு அன்பை வழங்கும்போதும் அந்த வாய்ப்பிற்காக நன்றி செலுத்துவார். கொடுப்பதற்கும் பெறுவதற்கும் அவர் வேறுபாடு காணவில்லை போலும். இது பின்வரும் சம்பவம் மூலம் தெரியவரும். தம்முடைய உலக வாழ்வின் கடைசி வருடத்தின் போது ஒரு நாள், தமது குடும்பத்தாரின் குழந்தைகளுடன் மலைக்கு சென்றிருந்தபோது, அங்கு உட்கார்ந்து குழந்தைகளையும் நிகழ்ச்சியையும் கவனித்துக்கொண்டிருந்தார். அன்று ஃகானும் அவர்கள் தங்களுடன் இருந்தது, குழந்தைகளுக்கு ஒரு திருவிழா போல் மகிழ்ச்சியாக இருந்தது. தாம் சதா வெளிப்படுத்தும் களிப்பை அங்கும் அன்று அவர் பகிர்ந்துகொண்டார்... ஆனால் அன்று மாலை வீடு திரும்பிய பிறகு, அன்று கேளிக்கைகளில் தாம் பெற்ற இன்பத்திற்காகவும், குழந்தைகளின் மகிழ்சியினால் தாம் பெற்ற மகிழ்ச்சிக்காகவும் எல்லோருக்கும் அவர் நன்றி செலுத்தினார்!
தமக்குள் பிரகாசித்த பாசத்துடனான அன்புணர்வை அவர் உணர்ந்திருக்கவில்லை, ஆனால் இதே உணர்வை பிறரிடம் காணும்போது மிகுந்த நெகிழ்ச்சி கொள்வார். அவருக்குச் சேவை செய்வதை கடமையாகக் கொள்ளமுடியாது: அது ஒரு கிடைத்தற்கறிய பாக்கியம். இருந்தபோதிலும் அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை, தம்முடைய கடைசி மூச்சு உள்ளவரையிலும் தமக்காக பிறர் செய்யும் எந்த சிறு உதவிக்கும் சேவைக்கும் ஒரு புன்னகை மூலமாகவோ ஒரு வார்த்தை மூலமாகவோ நன்றி தெரிவிக்கத் தவறியதில்லை. பரோபகாரம் என்பது அவர் சிந்தித்து செயல்படுத்தும் ஒன்று அல்ல, அது அவரது இயற்கை. ஒரு காரியத்திற்கான தூண்டுதலுக்கும் அதனை அவர் செயல்படுத்துவதற்கும் இடையே எந்த சிறு தாமதமும் அவரிடம் காணமுடியாது. அவரது வெளிப்படையான போக்கு, அவருக்குள் பாயும், என்றும் தவறாத, தொடர்ச்சியான அன்பின் உந்துதலே என்பதை உணரலாம். குழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்கள், தின்பண்டங்கள், மற்றும் பணம் வழங்குவதிலும் மற்றவர்களுக்கு மலர்கள், கைப்பொருள்கள், ரோஜா அத்தர், ஒரு ஜபமாலை, அல்லது தாம் மிகவும் விரும்பி வைத்திருந்த பொருள் எதையாவது பரிசாக வழங்குவதில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். தாம் பெற்றவற்றை என்றாவது ஒரு நாள் அது தேவைப்படும் பிறருக்கு, ஒரு விசேஷ சலுகை தேவைப்படும் ஒருவருக்கு வழங்கிவிடுவார். அவர் ஒரு கொள்கலன் அல்ல, வாய்க்கால்; மூடிய இருப்புப் பெட்டியல்ல, .திறந்து கிடக்கும் போக்கிஷம்.
அதே சமயம் தம்முடைய சிறு சிறு பொக்கிஷங்களை அவர் பூட்டிவைத்துக்கொள்ளவில்லை, அதே போல் தம்முடைய விவேகம் மற்றும் வாழ்க்கையின் பெரும் அனுபவங்களையும் மறைத்ததில்லை. அவரது வாழ்வில், கடந்தகால அனுபவங்கள் எந்த ஒரு வெறுப்புணர்ச்சியையும் விட்டுச் சென்றதில்லை. அவர் வெளிப்படுத்தியக் கனல், வாழ்வின் அனைத்தையும் சுவர்ணமாக மாற்றியது. இந்தச் சுவர்ணத்தையே அவர் பகிர்ந்துகொண்டார். அவர் விவேகம் இதயத்தோண்றலாய் விளங்கியது. அவர் இந்த விவேகத்தை ஒரு கோட்பாடாகவோ அடிக்கோளாகவோ மட்டப்படுத்திக் கொண்டதில்லை. சுவற்றில் தொங்கவிடக்கூடிய அளவிற்கு அவர் எந்த விவேக வார்த்தைகளையும் கூறியதில்லை. ஆனால் அவர் அவராக இருந்தபடி தமக்குத் தெரிந்த அனைத்தையும் வழங்கினார். மனித நாவால் கூற முடியாத ஆயிரம் விஷயங்களை அவர் ஒரு புன்னகையாலும், ஒரு பார்வையாலும், அல்லது மென்மையான மௌனத்தின் மூலமுமாகவும் வெளிப்படுத்தினார்.
பலர் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தில் அவர் மௌனமாக இருப்பதுண்டு, மௌனமாக இருந்த போதிலும் அங்கு அவர் ஒதுங்கியிருப்பதில்லை. வாய்தான் மூடியிருக்குமே ஒழிய ஆவி அங்கு அலவலாவிக்கொண்டிருக்கும். அவர் மௌனம், அப்படி இருந்திடவேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டதும் அல்ல, சூன்யமானதும் அல்ல. அது அவரைப்போல் மற்றவரையும் மௌனமுறச் செய்யக்கூடிய ஒன்றும் அல்ல, மாறாக, மற்றவர் குரல் ஒலியோடு தானும் கலந்து இசை சேர்க்கும் அவரது ஆன்ம ஒலி அது. எவ்வளவு ஆழ்ந்த சாந்தம் கொண்டவராக இருந்தாரோ அந்த அளவுக்கு யாவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். களிப்புணர்ச்சி மிகுந்தவர், தம்மைச் சூழ்ந்திருக்கும் இளையவர் கேளிக்கைகளில் தாமும் மகிழ்வார். இந்த களிப்புணர்வுகள் அவரது ஆழ்ந்த சாந்தக் கடலின் சந்தோஷ அலைகள்.
அபூர்வமாகவே தனித்திருப்பார். தனிமையில் ஒருமையும் சாந்தியும் காண்பர் பிறர், ஆனால் ஃகானும் அவர்களோ பிறர் சகவாசத்தில் அவற்றைக் கண்டும் பேணியும் வளர்த்தார். வாழ்வின்பால் அவர் போக்கு பிரார்த்தனை உணர்வாய் வெளிப்பட்டது. அவரது எண்ணங்கள் பனிந்த எண்ணங்கள். பிறருடன் தொடர்பை அவர்களுடன் ஒன்றுகலந்த அமைதியில் பெற்றார், குழந்தைகள் நிறைந்த, ஒளி சூழ்ந்த அறையில் தனிமையும் கண்டார். அவரது பிரத்தியேக அறை அவ்வீட்டின் இதயமாய் விளங்கியது. குளிர் காலத்தில் அவருடைய குளிர் போக்கும் சூட்டடுப்பின் ஜுவாலையின் அருகிலோ அல்லது சூரிய ஒளியில் சன்னல் அருகே மஞ்சத்தில் அவர் அமர்ந்திருக்கும் போதோ, சிறியோரும் பெரியோருமாக ஒருவர் ஒருவராக அவரைச் சூழ்ந்தும் பிறகு ஒருவர் ஒருவராக தத்தம் வேளைகளுக்கோ விளையாடவோ செல்வர் அல்லது ஃகானுமை அவரது அறை வாசலில் நின்று ஒரிரு வினாடிகள் தரிசித்தோ செல்வர். அவர் அறைக்கு வெளியே நாமும், காலனிகளை கலற்றி வைப்பதோடு பொருளற்ற வெளியுலகக் கலாச்சாரம் அனைத்தையும் கலற்றிவைத்தே அவர் முன்னிலை செல்வோம். அவரது உலகத்தில், அந்த அறையில், நடிப்பிற்கும் சம்பிரதாயங்களுக்கும் இடமில்லை: அவர் ஒளிமிகுந்த எளிமையின் முன் நாமும் எளிமை பெறுவோம். அங்கு சகல பீதி, கூச்சம், பயசுபாவம் அனைத்தும் மறைந்துவிடும். நாம் உணராமலேயே நமது உணர்ச்சியின்மையை குறைப்பார், சிரத்தையின்மையை அகற்றுவார். இவர் எவ்வளவு நல்லவர், நான் அப்படி அல்லவே என்றெல்லாம் நினைக்க மாட்டோம். அங்கு ‘நான்’ எனும் எண்ணம் தற்காலிகமாக மறந்து போய், அந்த மறதியில் பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் காணமற் போய்விடும். அகந்தையின் உயிர் ஓட்டம் வெட்டுண்டுபோகும். நாம் பற்றற்ற பறவைகளாவோம்.
பரந்த அந்த வீட்டின் தலைவியாகவும், அதன் தனி விவகாரங்கள் ஒவ்வொன்றையும் நிர்வகிப்பவராகவும் பல வருஷங்கள் அவர் இருந்த போதிலும், தலைவி என்ற முறையில் எதையும் மேலோட்டமாக செய்தாரில்லை. ஏதாவது செய்யப்பட வேண்டுமானால், அதை உடனடியாகவும், முழுமையாகவும் செய்து முடிப்பார். கைகட்டி உட்கார்திருந்தாலும், அவர் அங்கு முழுமையாக வீற்றிருப்பார். அவர் மனது அடுத்து வேறு என்ன செய்வோம் எனும் எண்ணத்தில் மூழ்கியிருக்காது. வாழ்வுடனான ஐக்கியத்திற்கென்று, பிறருடன் இருக்கும் நேரத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, அந்த விநாடிகளை முழுமைப்படுத்தவும் செய்தார். அந்த விநாடிகள், காலத் தீவுகள்.
அவர் வாழ்வுடனும் அதை தமக்காக நிர்வகிப்போருடனும் மட்டுமே ஐக்கியப்பட்டிருக்கவில்லை, தமக்குள்ளும் அவர் சொல் வேறு செயல் வேறு என்றோ, வேறுபட்டோ இருக்கவில்லை. அவர் ஒரு செயலில் இறங்கும் முன்பாக, தொடர்ந்து இதைச் செய்யலாமா வேண்டாமா என்பதை குறிக்கும் மனமாற்றத்தை அறிவிக்கும் தாமதமோ, அல்லது அச்செயலின் தூய்மையை அபகரிக்கும் தயக்கத்தின் முனுமுனுப்போ இருக்காது. அவரது சுபாவம் அவர்தம் ஆவியுடன் இரண்டறக் கலந்து, தூய்மையும் நேர்மையும் அவரது இயற்கை குனங்களாக விளங்கி, யாவற்றிலும் தூய்மையைக் கண்டுணர்ந்து தேர்வு செய்யும் பழக்கம், ஒரு தூண்டுதலும் தேவைப்படாத இயற்கை குணமாகவும் விளங்கியது. அப்பாவி என்பதைவிட, பாவங்கள் தம்மை அனுகவிடாமல் தடுக்கும் ஒருவரவர், ஏனென்றால் அவர் பாவத்தின் பல்வேறு உருவங்களை நன்கு கண்டுகொண்டு, பயமின்றி அவற்றை எதிர்நோக்குவார். வாழ்க்கையின் எல்லா அங்கங்களையும் பரந்த உள்ளத்துடனேயே ஏற்றார், அவற்றை என்றுமே சுமையாகக் கொண்டது கிடையாது, அவரது போக்கில் தப்பெண்ணங்களின் நிழல்கூட பட்டது கிடையாது. அவரிடம் குற்றம் காணப் புறப்பட்டால், அங்கு அபூர்வ பன்புகளின் மனிதப் பிரதிபலிப்பையே கண்டும், இந்த சுபாவங்கள் அவரை நம்மோடு புறிந்துணர்வின் அடிப்படையில் இனைத்தும், ஆச்சர்யம் விலகி ஒரு சேவித உணர்வே மிஞ்சவும் செய்யும்.
உலக ரீதியில், அவர் கற்றுணர்ந்தவர் என்றோ அல்லது கற்பிக்கப்பட்டவர் என்றோ கூற இயலாது: அவர் தமது விவேகத்தை மறைந்துள்ள அறிவூற்றுகளிலிருந்து ஈர்த்தார். அவரது பகுத்தறிவு அவருடைய இதய உதயமாக விளங்கினாலும், அந்த இதயம், மனித ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மூல விஷயங்களைக் கொண்டு நிறைந்திருந்தது. அவர் அதிகமாக படித்தாரில்லை, எழுதினாருமில்லை, ஆனால் உயிர்களுடனான தொடர்பை சர்வ காலமும் கொண்டிருந்தார். ஒவ்வொரு பொருளும் அவருக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்தாகவே இருக்கக் காண்போம்; இயற்கையின் எல்லா அங்கங்களும் எல்லா பொருள்களும், ஜீவனுடனோ அல்லது ஜீவனற்றோ, செய்தி ஒன்றை படிப்பதற்கு அட்சரங்களாகவும், உயிர் மற்றும் மெய் எழுத்துக்களாவும் அவருக்கு விளங்கின என மனம் எண்ணவே செய்யும். அதிலிருந்து அவர் பெற்றவைகளை வாழ்க்கை முறைகளாக அவர் செயல் படுத்தினார். அவர் விளக்கம் சொல்லியதுமில்லை, போதித்ததுமில்லை: நம்மை வாக்கு வண்மையினாலோ அல்லது புத்திசாதுர்யத்தினாலோ அவர் வென்றதில்லை: வற்புருத்தலுக்கோ, கவரும் முயற்சிக்கோ அவர் தம்மை ஈடுபடுத்தியது கிடையாது. நமது உடனடித் தேவையை நிவர்த்தி செய்யும் ஆவியின் ரசாயனக் கலப்பினால் உருவான ஒரு ரகசியத்தை, ஆழத்திற்கு ஆழம், அவர் நம்மோடு பகிர்ந்துகொள்வார்.
மனம் கலக்கமடைந்திருக்க நம்மைக் கண்டால், நமது இன்னல்களை கேட்டறியவோ அல்லது அவற்றை தீர்க்கவோ முனையமாட்டார். அவற்றை அவருடன் இருக்கும் போது நாம் மறந்துவிடுவோம். அவருடைய நிர்மலமான அன்பில் குழப்பங்களும் சிக்கல்களும் மறைந்துபோம். அவரோடு நாம், கொந்தளிப்பு, சந்தேகங்கள், மற்றும் கேள்விகளுக்கும் அப்பால் உள்ள ஒரு விழிப்புணர்ச்சி நிலையை அடைவோம். நாம் மறு உறுதிப்படுத்தப்படுவோம். ஒரே வார்த்தையில் நிச்சயநிலையையும் உறுதிப்பாட்டின் மெய்மையையும் அவர் அளிப்பார்.
சூரியனின் கதிர்கள் பட்டு வெப்பம் அடைவதற்கு முன்னால் அதிகாலையில் அத்திப்பழத்தை பறிக்கும் போது, அதன் அடியில் தெளிந்த தேன் கலந்த ஒரு சொட்டு நீர் இருக்கும். அத்தியின் ஆவியோ எனும் அதன் இனிமை, இரவில் காய்ச்சப்பெற்று, அதிகாலையில் ஒரு சிறு துளியாகச் சுண்டி, அந்த குளிர்ந்த பழத்தின் அடியில் வீற்றிருக்கும்.... அவ்வாரே, மெய்மையின் திட உடலோடு கூடி அதன் சாரத்தையும் ஃகானும் வழங்கினார்.
அன்பை அதன் பலவகைகளிலான வழிகாட்டும் சக்திகளுடன் கூடி, பல வர்ணங்களில் பிரதிபலிக்கப்பட்ட அதன் மகிமையோடு, நமக்குக் காட்டினார், அதன்(அன்பின்) மூச்சின்பால் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, காற்றிற்கு தன்னை ஒப்படைத்த மரம், உருவம்பெற்ற தென்றலாக எப்படி அசைகின்றதோ, அதே போன்று நாம் தற்போது முழுமையாக, புறிந்துகொள்ள, சுமக்கமுடியாத நிலையில், அன்பின் பிண்ணனியில், ஒரு மாபெரும் சக்தி, அதன் சாரம், உள்ளதென்பதை விளக்கினார்.
நாம் திருப்தியற்றும், நிலையில்லாமலும் அவரிடம் சென்றபோது, அந்த திருப்தியின்மையும் போதாமையும் ஆன்மாவின் நிலையற்ற தன்மையே என்பதைக் கண்டுகொள்வோம். இந்தச் சோதனைக்கு அப்பால் என்றும் அடுத்த சோதனைக்கும் அப்பால் என்றும் ஆசிரமத்தையும் அமைதியையும் தேடி நாம் போய்க் கொண்டிருந்தோம். ஆனால் இதோ அவரது வெள்ளை அறையில் அவற்றைக் கண்டோம். சிறு சிறு விஷயங்களில் சுவர்க்கத்தையே கொண்டுவரவும், முடிவற்ற அதை நான்கு சுவர்களுக்குள் கவரவும் இங்கு வழிகள் கண்டோம். இதோ இங்குதான் நிவாசம்.
இவ்வுலகையும் அவ்வுலகையும் அவர் வேறுபடுத்திப் பார்த்ததில்லை, அல்லது தமது ஆயுளில் தாம் கண்ட கொடுமைகளின் பயனாக, ஒளிமிக்க அற்புதங்களைக் கொண்ட அடுத்த உலகத்திற்கு தப்பிச் செல்லவும் அவர் ஏங்கியதில்லை. தமது தினசரி வாழ்க்கையில், அன்றாட நிகழ்வுகளை கனவின்பங்களின் விளிம்பிற்கே கொண்டுசென்றார், அற்பமான நிலையற்ற விஷயங்களிலும் அவர் அற்புதங்களைக் காண்பித்தார். சிறு சிறு விஷயங்கள் அவருக்கு சிறு விஷயங்கள் என்றில்லாமல், அவையெல்லாம் அகன்ற ஏதோ ஒன்றின் வெவ்வேறு கூறுகளாகவே விளங்கின. துன்பமுற்றோர் வருங்காலத்தில் இன்பம் பெற ஆறுதல் கூறாமல், நிகழ்காலத்திலேயே சூழ்ந்துள்ள இன்பத்தை அவர் உணரச் செய்வார். அவருடன் இருக்கையில், வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சிறிய கூறுகளிலும் அற்புதங்களைக் காண்போம்,ஒரு பூ, சுவற்றில் படரும் ஒரு நிழல், அவரது முகத்திரையின் ஒரு மடிப்பு, அல்லது கீழே தோட்டத்தில் கேட்கும் ஒரு குரல்; எல்லாமே மாயாஜாலங்களுடன் இனைக்கப்பட்டன. அனைத்தையும் இயக்கும் ஆவியின் மர்மங்களை, ஒவ்வொரு கண நேரத்தின் விலைமதிப்பற்றத் தன்மைகளை, உணர்ந்துகொள்வோம். இந்தத் தருணம், இந்தப் பொழுது, அந்த அந்தமில்லாத ஒன்றின் அழகு படர்ந்து, நிரந்தர மற்றும் நிலையான மகிழ்ச்சித் துளி ஒன்றையும் கொண்டுள்ளது.
ஆடம்பரங்கள் இல்லாமலும், பொருட் செல்வங்கள் குறைவாக, அதுவும் எந்த ஒரு பிரத்தியேக மதிப்பும் இல்லாதவையாக வைத்திருந்தாலும், உலகைத் துறந்தோர் போல் தமது வாழ்க்கையில் அவர் எதையும் துறக்கவில்லை. எதிலும் அழகை மிகவும் விரும்புவார். தம்மைச் சுற்றியுள்ளவற்றிக்கு அவருக்குள் விளங்கும் ஒழுங்கின் ஒளியையும், சுகந்தத்தையும், நேர்த்தியையும் அளித்தார். ஆனால் வெளித் தடயமாக விளங்கிய இந்த ஒளிக்கான உள் விவேகத்தை விவரிக்கக் கிளம்பினால், கிடைக்காத வார்ந்தைகளுக்காக வீனே தேடி அலையவேண்டியதுதான். அவரை அறிந்தோருக்கு எந்த ஒரு அழகிய பொருளும், பூரண பண்பட்டமையும், ஃகானுமையே நினைவு படுத்துபவையாகவே இருக்கும். பூரண அழகில் அவர் அமரராய் விளங்குகின்றார். அவருடைய சுகந்த மனம் மற்றும் மென்மையை இளம் பச்சையும் வெள்ளியும் சூழ்ந்த இளவேனிற் காலத்தில் காண்போம்: தோட்டத்தின் நீரூற்றில் அவருடைய குரல் ஒளி கேட்கும். குழந்தைகளின் சிரிப்பொலி, கடலின் அலையோசை அவரையே நினைவுபடுத்தும். எங்கெங்கு மகிழ்ச்சியும் தோழமையும் உண்டோ , அங்கெல்லாம் அவரும் இருப்பார்.
மேற்கு நாடுகளில் உள்ள நாம் அவரை அவரது இறுதி நாட்களிலேயே கண்டோம். ஆனால், ‘இவரை வாழ்வின் சாயுங்காலத்தில் காணாமல், அவருடைய வாலிபப் பருவத்தில் அல்லது இளம் வயதிலேயே அறியாமற் போனோமே,’என்ற எண்ணம் அப்பொழுது மனதில் எழக் காரணமே இல்லாமற் போனது. முதிய வயதினரோடு நாம் ஒப்பிடும் சில மனப் பழக்க வழக்கங்களின் அறிகுறிகள் அவரிடம் இல்லை. கடந்த காலத்தைப் எண்ணிப்பார்த்து, வருடத்திற்குப் பின் வருடம் திருப்பப்படும் நினைவேடுகளுக்கிடையே நசுங்கிக் கிடக்கும் பழைய நினைவுகளில் பெருமூச்சு, முதிய வயதில் அவர் மனதில் ஓடுவது தெரிகின்றது, அந்த நினைவுகள் தெளிவாக மனதில் நின்றாலும், உயிருள்ள உணர்வுகளின் வர்ணம் மற்றும் முழுமை அற்றுப்போனவை அவை. ஃகானும் அவர்கள் பழைய ஏடுகளைத் திருப்பி, உருண்டோடிய வாழ்வின் காணாமற்போன விநாடிகளை மறுபடியும் எட்டிப் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. கடந்து போன வாழ்வின் முக்கிய இழைகள் நடப்பு வாழ்வு முறையின் இழைகளோடு பின்னப்பட்டுவிட்டன. அவருடைய நிகழ்காலம் எல்லா கடந்தகாலத்தையும் உள்ளடக்கியது.
அவர் இப்போதும் அழகாக இருக்கின்றார் என்று கூறமாட்டோம், ஏனென்றால் அது கடந்தகால தருணங்களை பாடம் பன்னும் ஒரு செயல். அவரது தற்போதைய அழகு சிறு வயதில் இருந்த உடல் அழகின் தொடர்ச்சி என்றில்லாது, முழுமை பெற்ற வாழ்வே அவரது அழகாக விளங்கியது. தமது சக்தியையும் வடிவமைக்கும் மேன்மையையும் ஒன்று திரட்டி, ஒரு காந்தி நிறைந்த மென்மை அவர் முகத்தில் இழையோடுவதைக் காணலாம். தெளிந்த நீலமாக இருக்கும் அவர் கண்களைத் தவிர பிற கவர்ச்சிகள் இன்று மங்கிவிட்டிருந்தாலும், அவரது மிருதுவான தேகத்தின் அமைப்பு காலச் சிற்பியினால் மாற்றப்பட்டிருந்தாலும், மிகுந்த மெலிவு மற்றும் மென்மையாலும், ஸ்பரிசத்தில் மிருதுவாகவும், அமைப்பிலும், உயர்ந்த சிந்தனை, செயல்கள் ஆகியவற்றின் இனைப்பால் உண்டான உயர்ந்தபோக்கு ஆகியவற்றால் அவர் புற அழகைவிட உயர்ந்தே இருந்தார். அவர் அங்க அசைவுகள் அர்த்தங்களை உள்ளடிக்கியிருந்தன: நீண்டு வரும் அவரது கைகள் நம்மைத் தொடும் முன்னரே நம்மை ஆசீர்வதித்திருக்கும். பேசும் மொழிக்குத் தமது சுவபாவத்தின் கவர்ச்சியை கலப்பதில் இளமையின் வேகமும் முதுமையடையாத சக்தியும் அவருக்கு இருந்தன. ஒரு சிறிய கதை சொல்கையிலோ அல்லது ஒரு சிறிய விஷயத்தை விவரிக்கும் போதோ, அவர் நிதானித்தும் புன்னகைத்தும், அந்தக் கதாபாத்திரத்தை முன் நிறுத்தி; ஒளியேற்றிய பிறகே நமக்குக் கொடுப்பார். அமளியும் கலவரங்களும் நிறைந்த அவருடைய இளமை பருவத்தில் அல்லது தேசப்பிரஷ்டத்திலும் சிறைவாசத்தின்போதிலும் நடந்த சம்பவங்களை விவரிக்க நாங்கள் வேண்டிய போது, விவரிப்புக்கு அடங்காத காட்சிகளை மறு விமர்சனம் செய்யவோ அல்லது தமது துன்பம் நிறைந்து வாழ்வின் ஒரு பகுதியை வெளிப்படுத்த முயற்சிக்கவோ மாட்டார். தம்முடைய அமைதி நிறைந்த உள்மனதிலிருந்து ஜீவனுள்ள காட்சிகள் மற்றும் விசனமான அம்சங்கள் சிலவற்றை வெளிவர அனுமதித்து, நம் எல்லோரையும் இந்தச் சிறு காட்சிகளைக் கொண்டு மனம் நெகிழச் செய்து, அதனால் எல்லா காலங்களிலும் அவர் அனுபவித்த கொடுந் துயரம் மற்றும் அவர் மனம் அடைந்த துக்கத்தின் முழு அளவையும் உணரச் செய்வார்: இந்தத் துயரம், இந்த வலி யாவும் அவர் தமக்கென்று அனுபவிக்கவில்லை என்பதையும் நாம் உணர்வோம். ஒரு பார்வையில் மனவேதனையை அப்படியே வெளிப்படுத்துவார். இந்தத் தாக்கம் நிறைந்த பார்வையில், முதலில் மனிதத் துன்பங்களைக் காண்போம், பிறகு அதன் பின்னனியில் இந்த கொடுமைகளுக்குக் காரணமானவர்கள், தமது இருளடைந்த புறிந்துணர்வினால் அறிய முடியாத அக்கொடுமைகளின் தடயங்களைக் காண்போம்.
அவருடைய சுமைகள் பார்வைக்கு எளியவையாகத் தோன்றின, காரணம் அவர் அந்த சுமைகளின் பாரத்தால் கூனிப்போகவில்லை, பெரும் காரியங்களை கடும் முயற்சிகள் ஏதும் இன்றி நிறைவேற்றுவதாகத் தோன்றும். அவர் ஏதோ ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருப்பதாகவோ அல்லது வேறு ஓன்றிற்காக முயற்சித்துக் கொண்டிருப்பதாகவோ தெரியவேயில்லை, காரணம் அவர் முகத்தில் களைப்பு மற்றும் பிரயாசைக்கான அறிகுறிகள் கிடையா. அவர் வாழ்நாள் முழுவதும், மனிதப் போராட்டத்தின் தூசிப் படலம் சூழ்ந்த தகிக்கும் நேரங்களையோ, மூச்சு வாங்கச் செய்யும் சிறிய சாதனைகளையோ அறியவில்லை, ஆனால் இதயம் சாந்தத்தால் உயர்ந்து, அடுத்தடுத்து வரக்கூடிய சிறமம் மிக்க நாட்களை எதிர்நோக்கி, கால் இடறாமல், முன்நோக்கிச் சென்றார்.
அவர் வாழ்வை ஒரு தியாகமரணத்திற்கு ஈடான வாழ்வு என்று கூறமுடியாது, ஏனென்றால் அவர் அதை அவ்விதமாக நினைக்கவேயில்லை. அவர் உயிர்த்தியாகிகளின் புளகாங்கிதத்தில் மெய்மறந்துப் போகவில்லை மற்றும் அதன் கொடியை உயர்த்தி, எதிர்கொள்ளப் பாய்ந்து முன்நோக்கிச் சென்று வீர தீரத்துடன் அர்ப்பணம் செய்யவில்லை. அவர் ஆர்வம் ஒரே சீராக ஜுவாலை விட்டுக்கொண்டிருந்தது. சோதனைகள் மற்றும் ஆபத்துகளை எதிர்நோக்கும் வேளைகளில் அவசரப்படவுமில்லை அல்லது பின்தங்கவுமில்லை, மாறாக அபாயம் நிறைந்த பாதையில் மூச்சு விடுவதுகூடத் தெரியாமல் அமைதியாகச் சென்றார். அவர் மனோதைரியம் அவருடைய புறிந்துகொள்ளும் நம்பிக்கையிலிருந்து பிறந்தது மற்றும் இந்த நம்பிக்கையே, இந்த விளக்கமே வருடா வருடங்கள் முடிவில்லா உழைப்பிற்கும், நுனுக்கமான சேவைக்கும், மற்றும் கை வசம் ஒன்றும் இல்லாமல் காத்திருந்த நேரங்களில்,ஈடுசெய்யமுடியாத துக்கம் மற்றும் இழப்புகள் தோறும் அவரை சாந்தத்துடன் வழிநடத்திச் சென்றது.
அவர் தம்முடைய சொந்த வாழ்வில் சந்தித்த கொடுமைகள்பாலும், கண்டனங்கல்பாலும், மன்னிப்பு என்பதைவிட உயர்ந்த வேறு ஏதோ ஒன்றையே வழங்கினார். புண்பட்டுப் பின் மன்னிப்பது மிக உயர்ந்த செயல் ஆனால் புறிந்துகொண்டு பின் புண்படாமல் இருப்பது அதற்கும் மேலானது. இந்த சக்தியை அவர் பெற்றிருந்தார். புகார் கூறாமல் ஏற்றுக்கொள்வது எனப் பொருள்படும் ‘மாஸ்லூம்’ எனும் வார்த்தை ஃகானும் அவர்களின் பெயரோடு தொடர்புப் படுத்தப்பட்டுள்ளது. அவர் குறைபட்டார் என்றோ புலம்பினார் என்றோ தெரிந்ததே இல்லை. அவர் இருப்பதைக் கொண்டு எல்லாவற்றையும் நிறைவுபடுத்திக்கொண்டார் என்றில்லை, ஆனால் ஒவ்வொன்றிலும், கொடுமைகளிலும் கூட, விவேகத்தின் சிதைக்கப்படாத விதைகளைக் கண்டார். அவர் வாழ்வின் அதிர்ச்சிகளையும் கிளர்ச்சிகளையும் எதிர்க்கவில்லை மற்றும் இடையூறுகளை விட்டு ஓடவுமில்லை. அவர் எதற்கும் பொறுமையற்றுப் போகவில்லை. அப்படி பொறுமையற்றுப் போகவோ அதே சமயம் கிளர்ச்சி செய்யும் தன்மையோ அவருக்கு இல்லை. ஆனாலும் இது தொடர்-துன்பம் பொறுத்தல் என்பதைவிட நாம் காத்திருக்கும் மற்றும் செயல்படாத காலங்களில், தாம் செயல்படும் சக்திகளைப் புறிந்துகொண்டதே ஆகும்.
இறுதி இலக்கை அடைய படைப்பை இயக்கும் சக்தி மற்றும் பரந்த செயற்பாடுகளோடு அவரும் இயங்கினார். நம்பிக்கையின் அடித்தலமாய் இருக்கின்ற முழுமையான அர்ப்பணம், குறைகளற்ற இணக்கம் ஆகியவற்றோடு நிச்சயத்துடனும், மனோதிடத்துடனும், அவர் தமது வாழ்வின் ‘திருச்சூரியரின்’ சுற்றுப்பாதை வட்டத்தை வலம் வந்தார்.
ஆக, இவ்விதமாகவே அவர் வாழ்ந்தார். அவரது இறுதி நாட்களில், நழுவும் சிந்தனா சக்திகள் அவருடைய இதயம் ஆவி இரண்டையும் மேலும் கூர்மைபடுத்தவும் தீவிரப்படுத்தவுமே செய்தன. உடல் ஹீனம் மற்றும் வலி ஆகியவை அவரை மேகம் போல் மூடாமல், மனக் கருவிகளையும், நிறந்தரமற்ற இந்திரியங்களையும் துறந்தனரோ என எண்ணும்படியாக, தமது வாழ்வின் சாரங்களாக விளங்கிய அம்சங்களை மட்டுமே அவர் இறுதி வரை இருகப் பற்றியிருந்தார். அந்த நிலையிலும் அவர் புண்ணகையானது, சக்தியை, சாந்தத்தை, மென்மையை மற்றும் புறிந்துகொண்டமை அருள் ஆகிய இரண்டுமான அன்பை நினைவூட்டியது. இவ்விதமாகவே தமது இறுதித் தெளிவான குறிப்புகளாக தமது வாழ்க்கை முறையை ஞாபகார்த்தமாக விட்டுச் சென்றார்.