லௌகீக கண்ணோட்டம்
ஸ்ரீ கிருஷ்னர்
ஓர் அவதாரத்தின் பூலோக வாழ்வைப் பற்றி ஆராயும் போது, மனிதக் கண்களால் பார்க்கமுடியாத பரம்பொருளான புனித ஆவியின் பிரதிபலிப்பாகிய அவரது மேலான நிலை சார்ந்த செயல்கள் தவிர்த்து, அவரது மற்ற நடவடிக்கைகள் யாவும் சாதாரண மனிதர்களின் உலக வாழ்வியல் முறைகளைச் சார்ந்திருக்கவே காணலாம்.
பார்ப்பதற்கு சாதாரண மனிதரைப்போல்தான் அவரும் காட்சியளிக்கின்றார். எல்லா மனிதர்களைப் போலவே அவரும் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கின்றார், வளர்கிறார், திருமணம் செய்துகொள்கிறார், அவரது மனைவியின் மூலமாக குழந்தைகள் பெறுகின்றார், இறுதியில் எல்லா மனிதர்களைப் போலவே இறந்தும் போகின்றார். அதாவது, மனிதர்களாகிய நாம் அவரை அடையாளங் கண்டுகொள்ள ஏதுவான முறையில் அவரை இறைவன் நம்மிடம் அனுப்பியும் நம்மிடையே வாழவும் வைக்கின்றார்.
ஓர் அவதாரத்தின் லௌகீக வாழ்க்கையுடன் நமது லௌகீக வாழ்க்கையை நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அதை நம்மால் புறிந்து கொள்ளவும் முடியும். அவர்களும் மனித உணர்வுகளுக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்கின்றனர். அவர்களுக்கும் நம்மைப் போன்றே லௌகீக மற்றும் பௌதீகத் தேவைகள் உள்ளன. அவர்களுடைய போதனைகளையும் வாழ்க்கையையும் நாம் அறிந்தும் புறிந்தும் கொள்ள வேண்டும் என்று தானே இறைவன் அவர்களை நம்மிடம் அனுப்பி வைக்கின்றார். எல்லா வேளைகளிலும் நமது அறிவிற்கு அப்பாற்பட்டு அவர்களுடைய வாழ்க்கையும் போதனைகளும் இருக்குமாயின் அதனால் நமக்கு என்ன பயன்!
இக்கால இறைத்தூதர்களான பாப் அவர்கள், பஹாவுல்லா, மற்றும் அவர்களுக்கு முன்பாகத் தோன்றிய இயேசு, முகம்மது போன்றோரின் வாழ்க்கையும் இதே ரீதியில்தான் அமைந்துள்ளது. அவர்களுடைய வாழ்க்கைகளில் நடந்த சம்பவங்களை நம்மால் ஆராய முடியும். அவர்களது வாழ்க்கையில் நடந்த லௌகீக நிகழ்ச்சிகள் நமது வாழ்க்கைச் சம்பவங்களுடன் ஒத்திருக்கின்றன. இதன் காரணமாகவே ஆன்மீகக் கண்களற்ற மனிதர்கள் அவர்களை இறைத் தூதர்களென கண்டுகொள்ளாமல் அவர்களும் தங்களைப்போல சாதாரண மனிதர்களே என உதாசீனப்படுத்தியும், அவர்களது கோரிக்கைகளைக் கேட்டு எள்ளி நகையாடியும், இறுதியில், ஒரு சில வேளைகளில் அவர்களைக் கொன்றும் உள்ளனர்.
கிருஷ்ணாவதாரம்
சரி, இப்போது இறைத்தூதர்களைக் கண்டுகொள்ள பஹாவுல்லா நமக்கு வழங்கியுள்ள அளவையை வைத்து வைதீக சமயமாகிய ஹிந்து சமயத்தை நாம் ஆராயுமிடத்து, பௌத்த, கிருஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமயத் தூதர்களைப் போல் ஹிந்து சமயத்தில் நாம் அறிந்து கொள்ளும் வண்ணம் இறைத்தூதர்கள் சித்தரிக்கப்படவில்லை என்பதைக் காணலாம். புராண இதிகாசங்களில் இறைத்தூதர்களின் லௌகீக வாழ்க்கைப் பற்றி நாம் அறிந்துகொள்வது சிறிது சிறமமே. பொதுவாக அவர்களுடைய வாழ்க்கை சாதாரண மனித வாழ்விற்கு அப்பாற்பட்டும், மாயாஜாலங்கள் நிறைந்தும், எளிதில் நாம் புறிந்து கொள்ள முடியாத வகையிலும் உள்ளது.
வேத சமயங்களில் வெகு சமீபத்தில் தோன்றிய அவதாரங்களென, இராமரையும் கிருஷ்னரையும் கூறலாம். சுமார் 7550 வருடங்களுக்கு முன்பு இராமர் தோன்றியதாக பஞ்சாங்கக் கணிதங்கள் காட்டுகின்றன. அவர் மூலமாக 'சம்பூர்ண இராமாயனம்' எனும் இராமகாதை பிறந்து, பாரதத்தை மட்டும் அல்லாது தென் கிழக்கு ஆசியா முழுவதையுமே கவர்ந்து, இன்றளவும் அதன் தாக்கங்களை அந்தப் பிரதேசங்களில் காணவும் முடிகிறன்றது. அதே பஞ்சாங்கக் கணக்குப்படி கிருஷ்ணர் பிறந்தது கிமு 3078-இல். இந்த வைதீக சமயங்களில், அவதாரங்கள் "துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்" செய்வதற்காக பூமியில் பிறக்கின்றார்கள் என்பது ஐதீகம். அதாவது துஷ்டத்தனத்தைக் கட்டுப்படுத்தி, ஒற்றுமையைப் பரிபாலிப்பதற்காக அவர்கள் பூமியில் தோன்றுகின்றனர். தேவாசுர யுத்தங்கள் இதற்காகவே நடத்தப்பட்டன. 'பூபாரத்தைக்' குறைக்க அசுரர்களையும் அதர்மக்காரர்களையும் அக்காலத்து அவதாரமாகியவர் அழித்து சிஷ்ட பரிபாலனம் செய்வதைப் புராணங்களில் நாம் காணலாம். பூமியில் அதர்மமும் பாவங்களும் ஓங்கி நிற்பதே இங்கு 'பூபாரம்' என அழைக்கப்படுகிறது. சரி, சாதாரன மனித வாழ்க்கைச் சம்பங்களுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் வைதீக அவதாரங்களின் வாழ்க்கையை, நாம் அறிந்துள்ள வகையில் பிற அவதாரங்களின் வாழ்க்கையோடு எந்த கோணத்தில் ஒப்பிடுவது? ஒன்று நிச்சயம், இந்த நோக்கம் நிறைவேற புராணங்களை நாம் ஆராய்ந்தே ஆகவேண்டும்! இப்புராணங்களையும் இதிகாசங்களையும் நாம் ஆராய்வோமானால் அவற்றின் அசாதாரண சம்பவங்களின் வர்ணனைகளுக்கிடையே சாதாரண மனித வாழ்வைப் பிரதிபலிக்கும் சம்பவங்கள் பலவற்றை ஆங்காங்கு நாம் காணமுடியும்.
கிருஷ்ன பரமாத்மாவின் வாழ்க்கையும் இத்தகையதாகவே இருந்துள்ளது. அவரது வாழ்க்கையின் அசாதாரண சம்பவங்களுக்கிடையே ஆங்காங்கு சாதாரண மனித வாழ்க்கை சம்பவங்களும் நிறைந்திருப்பதைப் பகுத்துணரலாம். புராணங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் மாயா ஜாலங்கள் சாதாரணமாக மனிதவாழ்க்கையில் நடப்பவை அல்ல. அவை ஆன்மீக அழுத்தம் நிறைந்த பௌதீக நிகழ்ச்சிகள். அவற்றைப் புறிந்து கொள்ள ஆன்மீகக் கண்கள் வேண்டும். எல்லா இறை அவதாரங்களின் வாழ்க்கைகளும் இத்தகைய சம்பவங்களை வெவ்வேறு அளவில் வெளிப்படுத்தியுள்ளன. நமக்குச் சமீபமாக உள்ள அவதாரங்களில் இத்தகைய மாயாஜாலங்கள் குறைந்தும் புராண காலத்தில் இவை மிகுந்தும் உள்ளது ஆராய்ச்சிக் குரிய ஒரு விஷயமாகும். புராண காலத்தில், அப்போதைய நிலையில், மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இறைவன் சம்பந்தப்பட்ட உயர்வான விஷயங்களை, அவற்றின் உயர்வு குன்றாமல் விளக்குவதற்கு மாயாஜாலம் கலந்த வர்ணனைகளைத் தவிர வேறு வழிகள் இல்லையோ என்னவோ, அல்லது அக்கால மனிதர்களின் மனவளர்ச்சிக் குறைவு அத்கைய விஷயங்களை நேரடியாக புரிந்துகொள்ள முடியாமல் செய்திருக்கலாம். குழுந்தைகளைப்போல் அவர்களும் இவ்வித அற்புதங்களின் கவர்ச்சியின் மூலமாகத்தான் ஓர் அறிவுநிலைக்கு வரவேண்டிய நிலையில் இருந்திருக்கலாம்..
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பல கோடி மக்களின் மனதில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தி, இன்றும் ஏற்படுத்திக் கொண்டும் உள்ள, கண்ணன், முகுந்தன், நந்தகோபாலன், முரளீதரன், கேசவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வரும் கிருஷ்ணாவதாரத்தின் வரலாற்றைப் பற்றி புராணங்களில் நாம் படிக்கும் போது, லௌகீக ரீதியிலான பல விஷயங்களும் அதே சமயம் நமது அளவிற்கு உட்பட்ட அறிவிற்குப் பொருந்தாத பல சம்பவங்களும் அங்கு நிறைந்திருக்கின்றன. இங்கு, நாம் அறிந்துள்ள மற்ற அவதாரங்களைப் போல் கிருஷ்ணரையும் இவ்வுலகுக்கு இறைவனின் வெளிப்பாட்டைக் கொணர்ந்த ஓர் அவதாரமாக பார்க்க முயல்வதோடு, அவரது வாழ்க்கையில் நடந்த ஓரிரு சம்பவங்களைக் கண்ணோட்டமிடுவதுமே நமது நோக்கமாகும். எதுவாயினும், கிருஷ்ன பரமாத்மாவின் கதை ஒரு நித்தியமான கதை, இறைவனின் அருள் மிகுந்த கதை, தீராத விளையாட்டுப் பிள்ளை என வழங்கப்பட்ட கண்ணனின் கதை, இறைவன் மனிதன் மேல் கொண்ட தமது அன்பினால் அவனை எப்போது படைத்தாரோ அப்போதிருந்தே நடந்துகொண்டிருக்கும் அவதாரங்களின் கதை என்பதை நாம் க்ஷன நேரமும் மறந்துவிடக்கூடாது.
பழங்காலங்களில் பாரதம் என வழங்கப்பட்டு வந்துள்ள தற்போதைய இந்தியாவில் புத்தர் தோன்றுவதற்கு முன் கிமு 3078-இல், இன்று கிருஷ்ண ஜெயந்தி என்று வழங்கப் பெறும் அதே நாளில், வட இந்தியாவின் யமுனா நதிக் கரையிலுள்ள மதுரா நகரிலோ அல்லது அதற்கு அருகிலோ, கண்ண பரமாத்மா பிறந்திருக்கக் கூடும் என யூகிப்பது சிரமமான காரியமல்ல. அதாவது ஒரு சதுர்யுகத்தில் அடங்கியுள்ள நான்கு யுகங்களில் மூண்றாவது யுகமான துவாபர யுகத்தின் கடைப்பகுதியான சந்தியாம்ச காலத்தில்தான் அவர் பிறந்தார். அவரது 122-வது வயதில் அவர் மோட்சம் அடைந்த மறு கனமே கலி யுகம் பிறந்தது. அந்தக் கலி யுகத்தின் முடிவில்தான் கல்கி அவதாரம் தோன்ற வேண்டும். கலி யுகத்தின் கால அளவு, தலா 365 நாட்களைக் கொண்ட, 4800 சூரிய வருடங்கள். பஞ்சாங்கக் கணக்குப்படி (இந்திய அரசாங்கத்தின் நாட்குறிப்பு புத்தகத்தில் கிருஷ்ண சம்வத்சரம் எனும் கிருஷ்ணர் ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது). கிபி 1844க்கு ஈடான இந்த கிருஷ்ணர் ஆண்டு கிச 5064 ஆகும். இது சந்திர ஆண்டு, வருடத்திற்கு 355 நாட்களை மட்டுமே கொண்டது. இந்தக் கிருஷ்ணர் ஆண்டுக் கணக்கின்படி கிருஷ்ணர் மறைந்ததிலிருந்து 4800 சூரிய வருடங்கள் சரியாக 1844-இல் முடிவடைந்துள்ளன. கலி யுகத்திற்குப் பிறகு தோன்றக் கூடிய சத்திய யுகம், பாப் அவர்கள் பிரகடணம் செய்த வருடமாகிய 1844-இல் இருந்து ஆரம்பமாகியுள்ளது. இந்தக் குறிப்புகளை டாக்டர் முஞ்சே அவர்களின் "எல்லா சமயங்களின் மையக் குறியான 1844-ஆம் ஆண்டு" எனும் கையேட்டிலிருந்து பெறலாம்.
கருநெய்தல் பூவைப் போன்ற நிருமேனி
வெளியே கடும் மழை பெய்ய, அருகிலிருந்த யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோட, காரிருள் சூழ்ந்த ஒரு சிறைச்சாலைக்குள், கருநெய்தல் பூவைப்போன்ற திருமேனியுடனான குழந்தை ஒன்று பிறந்தது. அந்நாட்டு அரசனுக்குத் தங்கை மகன் எனும் உறவோடு தங்கத் தொட்டிலில் பிறந்திருக்க வேண்டிய அக்குழந்தை, வௌவால்கள் வாசம் செய்திருக்கக் கூடிய, சில்லிட்ட சிறைச் சாலையின் சுவர்களுக்கிடையில் பிறக்க நேர்ந்தது. குழந்தை பிறந்த பேரின்பத்தில் திளைத்திருக்க வேண்டிய தாய் தந்தையர், குழந்தை பிறந்துவிட்டதே இப்போது என்ன செய்வது என பதைபதைத்தனர். சிறை அதிகாரிகள் அறியா வண்ணம், இரவோடு இரவாக, குழந்தையின் தந்தையாகிய வாசுதேவர் அக்குழந்தையை ஒரு கூடையில் வைத்து, அதைத் தமது தலை மேல் சுமந்து கழுத்தளவு நீர் ஓடி வெள்ளக்காடாக தோற்றமளித்த யமுனை ஆற்றைக் கடந்து, அக்கரை சென்றார். அங்கு அந்த நாட்டின் அரசனுக்குக் கப்பங்கட்ட வந்திருந்த பலர் கூடியிருந்தனர். அவர்களில் தமது நண்பர் ஒருவரைச் சந்தித்தார். அந்த நண்பருடைய மனைவியும் அதே வேளையில் பிரசவித்து ஒரு பெண் குழந்தையை ஈன்றிருந்தாள். என்ன செய்வதென யோசித்த நண்பர்கள் இருவரும் தத்தம் குழந்தைகளை பரிமாற்றிக் கொண்டனர். ஆண் குழந்தை இருந்த இடத்தில் பெண் குழந்தையும் பெண் குழந்தை இருந்த இடத்தில் ஆண் குழந்தையுமாக திரும்பிச் சென்றனர்.
அந்நாட்டு அரசனின் சிறையில் பிறந்த அக்குழந்தை தன் தந்தைக்கு எட்டாவது குழந்தை. அதற்கு முன் ஆறு குழந்தைகள் பிறந்து அனைத்தும் அவற்றின் தாய்மாமனான அரசனால் கொல்லப்பட்டன. ஏழாவதாக ஒரு குழந்தை கம்சனுக்குத் தெரியாமல் அதன் தந்தையின் மற்றொரு மனைவியான ரோகினி என்பவளிடம் எப்படியோ ஒப்படைக்கப்பட்டிருந்தது.
சம்பவம் நடந்த நாட்டின் அரசனாகிய கம்சனின் ஒன்று விட்ட தங்கையே அக்குழந்தையின் தாயாகிய தேவகி. அரசன் தன் தங்கையையும் அவளது கனவனையும் சிறையிலிட்டிருந்தான். இந்தக் குழந்தையே அந்த எட்டாவது குழந்தை. ஆனால் ஏழாவது குழந்தை பிறந்தது தெரியாத அரசன் இதுவே ஏழாவது குழந்தை என நம்பினான். எப்படியாவது தமது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பது அக்குழந்தைகளின் தகப்பனின் ஆசை.
சரி, அரசனுக்கு ஒரு பச்சிளம் சிசுவிடம் அப்படி என்ன பயம்? பாராளும் மன்னனை பாலுண்ணும் குழந்தை என்ன செய்து விட முடியும்? சாதரணக் குழந்தையாக இருந்திருந்தால் ஒன்றும் செய்ய முடியாது தான். ஆனால் பிறந்தது சாதாரணக் குழுந்தையல்லவே! பாராளும் மன்னரையெல்லாம் வேரோடு தரையில் வீழ்த்தக்ககூடிய சக்தி படைத்த தெய்வீகக் குழந்தையாயிற்றே அது! பூமியில் அன்பெனும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடவும், தர்மம் ஓங்கிடவும் இறைவனின் தடுக்கவியலா விருப்பத்திற்கினங்க பிறந்த தெய்வீகக் குழந்தையாயிற்றே அது!
தேவகி கல்யாணம்
மதுரா நகரத்தின் அரசனான கம்சன் தன் தங்கையான தேவகிக்கு வயது வந்தவுடன் யதுகுலத்தவரான வசுதேவருக்கு அவளை மணமுடித்தான். திருமணம் முடிந்து தானே மணமக்கள் இருவரையும் தேரில் வைத்து மதுரா நகரின் சாலைகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றான். அப்போது திடீரென கம்சனின் செவிகளில், எந்தத் தங்கையை அரசன் ஊர்வலமாகக் கொண்டு செல்கின்றானோ, அதே தங்கையின் வயிற்றில் பிறக்கக்கூடிய எட்டாவது குழந்தை அரக்க சுபாவம் கொண்ட அந்த அரசனை கொல்லப் போகின்றது எனும் வார்த்தைகள் ஒலித்தன. அதைக் கேட்ட அரசன், தங்கை என்றும் பாராமல் உடனே தேவகியைக் கொல்ல முற்பட்டான். வசுதேவர், பிறக்கும் குழந்தைகளை உனக்கே தந்துவிடுகிறேன் ஆனால் என் மனைவியை ஒன்றும் செய்துவிடாதே, எனக் கம்சனிடம், கெஞ்சினார். அதற்கு மனம் இளகிய கம்சன், அவர்கள் இருவரையும் கொல்லவில்லை ஆனால் அதற்கு பதிலாக அவர்களைச் சிறையில் அடைத்து வைத்தான். குழந்தைகள் பிறக்கப் பிறக்க அவற்றை ஒவ்வொன்றாக கொல்லவும் செய்தான். எட்டாவதாக கிருஷ்ணர் அவதரித்த போதே மேற்குறிப்பிட்ட சம்பவம் நடந்தது.
இடையில், கம்சனுக்கு சந்தேகம் ஏற்பட்டதோ என்னவோ, தன்னை அழிக்கக் கூடிய குழந்தை எங்கோ வளர்ந்து வருகிறான் என்பதைப் புறிந்துகொண்டான். தன் காவலர்களை அழைத்து, தனது நாட்டிலுள்ள விசேஷ பலமும் சாமர்த்தியமும் நிறைந்த ஆண் குழந்தைகள் அனைவரையும் கொண்றுவிடுமாறு கட்டளையிட்டான். முன்பொரு காலத்தில் எகிப்திலும், பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நாதர் பிறந்த போதும், இதே காரணத்திற்காக ஆயிரக் கணக்கில் குழுந்தைகள் மடிந்தது நினைவுக்கு வருகின்றது.
எட்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருப்பது கண்டு, கம்சன் சஞ்சலமுற்று, வசுதேவரையும் அவரது மனைவியான தேவகியையும் அதற்கு மேல் சிறையில் வைத்திருப்பதால் எவ்விதப் பயனும் இல்லையென அவர்களை அப்போதே விடுதலை செய்துவிட்டான். விடுதலையான வசுதேவர், நாட்டிலுள்ள குழந்தைகளைக் கொல்லும் கம்சனின் உத்தேசத்தை உணர்ந்து உடனடியாக யமுனை ஆற்றைக் கடந்து, நந்தகோபரிடம் சென்று அதற்கு மேல் அவர் அங்கிருப்பது நல்லதல்ல எனவும், உடனடியாக கோகுலம் எனும் தமது ஊருக்குச் சென்றுவிடுவது நன்மை எனவும் உபதேசித்தார். கோகுலத்தில் வசுதேவருடைய மற்றொரு மனைவியான ரோஹினியிடம் இருந்த பலராமர் எனும் குழந்தையையும் தம் குழந்தையைப்போலவே நந்தகோபர் வளர்த்து வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பாலகிருஷ்ணன்.
கோகுலத்தில் கம்சனின் ஏவலாளிகளினால் குழந்தையாக இருந்த, ஆனால் விசேஷ பலமும் சாமர்த்தியமும் மிக்க கிருஷ்ணரைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. பாப் அவர்களும் பஹாவுல்லாவும் தங்கள் பால பருவத்தில் இருந்தது போல் கிருஷ்ணர் தமது பால பருவத்தில் ஓர் அமைதியான குழந்தையாக இருக்கவில்லை என்பது மிகவும் தெளிவு. குழந்தையாக இருக்கும் போதே அசாதாரண பலம் கொண்டவராக விளங்கினார். ஒரு முறை குழந்தையாகிய கிருஷ்ணரைக் கட்டுப்படுத்த முடியாமல், அவரது தாயான யசோதை, ஓர் உரலில் கயிற்றைக் கட்டி மறு முனையை குழந்தையின் காலில் கட்டி வைத்தார். தவழும்போது அந்த உரலையே தம்மோடு சேர்த்து இழுத்துச் சென்றாராம் கிருஷ்ணர். ஏறக்குறைய இது நடந்த போது கிருஷ்ணருக்கு ஒன்றிலிருந்து மூன்று வயதிற்குள் இருந்திருக்கலாம். கிருஷ்ணரும் பலராமரும் விளையாட்டு பருவத்தில் படுக்கச் செல்லுமுன் இடைச் சிறுவர்களோடும் மாடுகளோடும் சிறிது நேரம் விளையாடிவிட்டே படுக்கச் செல்வராம். இதன் பிறகு கிருஷ்ணருக்கு சுமார் மூன்று வயதாகிய போது, ஒரு சில காரணங்களினால் ஆயர்பாடிகளான இடையர்கள் வேறொரு இடத்திற்குப் பெயர்ந்து சென்றனர். பிருஹத் வனமாக இருந்த புதிய இடம், கிருஷ்ணரின் வருகைக்கு பிறகு பிருந்தாவணமாகியது. அதன் பிறகு நந்தகிராமம் எனப்படும் இடத்திற்கு இடம் பெயர்ந்தனர். கிருஷ்ணருக்குச் சுமார் ஏழிலிருந்து பத்து வயதிற்குள் பலராமருடன் சேர்ந்து ஒரு மல்யுத்தப் போட்டியில் கலந்துகொள்ள மதுரா நகர் சென்றார். போட்டிகளில் வென்றதோடில்லாமல் அங்கு கம்சனையும் அழித்தார். அவரது பத்தாவது வயதிலிருந்து மதுரா நகருக்கே இடம் பெயர்ந்து சென்றார். பிறகு தமது இருபத்தொன்பதாவது வயதில் துவாரகாபுரியில் தமது இராஜ்யத்தை ஸ்தாபித்து தமது இறுதி நாட்கள் வரை அங்கேயே வாழ்ந்திருந்தார்.
குழலூதும் கண்ணன்
ஆயர்பாடிகளின் வாழ்க்கை முறைக்கு ஒப்ப கிருஷ்ணரும் பலராமரும் தக்க வயது வந்தவுடன் மாடுகள் மேய்த்திட அனுப்பப்பட்டனர். கைகளில் புல்லாங்குழல் கொண்டு காட்சி அளிப்பதும் இந்தக் காலத்தில்தான். பஹாவுல்லாவுக்கு அவரது எழுகோலும், கிருஷ்ணருக்கு புல்லாங்குழலும் சின்னங்கள். இந்த இரண்டும் ஒரே மூல விஷயத்தின் சின்னங்கள். முன்பு புல்லாங்குழலின் இசை, இப்போது நானல் எழுதுகோலின் கிரீச்சுக் குரல். இரண்டுமே இறை அவதாரத்தின் மெய்யன்பர்களைத் தம்பால் கூவி அழைக்கும் சின்னங்கள்.
பகவத் கீதை தவிர்த்து கிருஷ்னர் வேறு பல போதனைகளையும் வழங்கியுள்ளார். உதாரணமாக, பிருந்தாவன வாசத்தின் போது ஓரு முறை, கிருஷ்ணர், "பரதர்மம் பயாவஹ," எனும் போதனையை, அதாவது ஒருவர் தனது கடமைகளைச் செய்யாது சம்பந்தமில்லா பிற காரியங்களில் ஈடுபடக் கூடாது என்பதைக் குறிக்கும் போதனையை வெளிப்பாடுத்தியிருப்பதை புராணத்தில் காணலாம்.. இறைவனை, தான் சிறப்புடன் செய்யக்கூடிய தொழிலின் மூலம் பூஜிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இடையர்களான ஆயர்கள் சரத்காலத்தில் விவசாயிகள் கொண்டாடி மகிழும் இந்திர விழா எனப்படும் ஒரு விழாவில் ஈடுபட்டிருந்த போது கிருஷ்ணர் இதை உபதேசித்தார்.
ராசக் கிரீடை
நந்தகிராமத்தில்தான் கண்ணபரமாத்மா கோபிகாஸ்திரிகளுடன் விளையாடி மகிழ்ந்தார் எனக் கூறுவர். இதை ராசக் கிரீடை என புராணங்கள் கூறுகின்றன. அன்பர்களும் அன்புக்கினியவரும் ஒன்று சேரும் நேரங்கள் அவை. வெண்ணெய் திருடுவதும், பால் திருடுவதும், கிருஷ்ணருக்கு பால பருவத்து விளையாட்டுகள். ஓர் இறைத்தூதர் இவ்வாறெல்லாம் செய்வாரா என கேட்கப்படலாம். ஏன், இறைத் தூதரான மோசஸ் கொலை செய்யவில்லையா? அதனால் அவர் இறைத்தூதர் இல்லை என்றுதான் ஆகிவிட்டதா? "தாம் விரும்பியதை அவர் செய்வார்," எனும் பஹாவுல்லாவின் வாசகத்தை இவ்வேளைகளில் நாம் நினைவு கூறுவது நலமாயிருக்கும்.
கிருஷ்ணர் தமது 28-வது வயதில் மதுராபுரியை விட்டு துவாரகாபுரியில் தமது சொந்த இராஜ்யத்தை ஸ்தாபித்தார். இக்காலத்தில்தான் ருக்மினியைத் திருமணம் புரிந்தார். ருக்மினியின் சகோதரன் கிருஷ்னரின் எதிரியாகையால் தன் தங்கையைக் கிருஷ்னருக்கு மணம் முடிக்க மறுத்தான். ஆனால் கிருஷ்னரோ இதைப் பொருட்படுத்தாமல், தம்மை விரும்பிய ருக்மினியை அவருக்கு விருப்பமில்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவாகத்தின்போது தமது படையுடன் வந்து கடத்திச் சென்று மணம் புரிந்தார். இதற்கு ருக்மிணி கிருஷ்ணருக்கு எழுதிய ஒரு கடிதமே காரணமாக இருந்துள்ளது:
"ஹே பக்தானுக்கிரகதேவ, தங்கள் பாதங்களில் அனேக தண்டங்களிட்டு இக்கடிதம் எழுதுகிறேன். ஹே பரந்தாமா, பீஷ்மகனுடைய புத்திரியான அடியாள் ருக்மணி தங்கள் கல்யாண குணங்களைக் கேட்டதிலிருந்து தங்கள் திவ்விய மங்கள ரூபத்தை என் இதயத்திலே பிரதிஷ்டை செய்து பூஜித்து வருகிறேன். அடியாளைத் தங்களுக்கே அர்ப்பணித்து விட்டேன். இப்போது என் சகோதரன் ருக்குமி தன் நண்பனான சேதி நாட்டு மன்னனுக்கு என்னைத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறான். பிரபோ, அடியாள் ஆதரவற்று தங்களையே ரட்சகராக எண்ணிக் காத்திருக்கின்றேன். கோவிந்தா, தாங்கள் என்னைக் கைவிட்டு விடமாட்டீர்கள் என நம்புகிறேன். தங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த உடல் மாற்றானுக்குச் சொந்தமாக்க ஒரு போதும் அனுமதியேன். தாங்கள் என்னைக் கைவிட்டு விட்டால் என் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை, ஹே கோகுலபால, திருமணத்துக்கு முன்னர் கௌரி பூஜை செய்வதற்காக ஆலயம் வருவேன். அந்தச் சமயம் தாங்கள் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்படி வேண்டுகிறேன்.
தங்களையே எண்ணியிருக்கும்
"ருக்மிணி"
ருக்மினி, மித்திரவிந்தை, சத்தியை, ஜாம்பவதி, ரோகிணி, சுசீலா, சத்தியபாமா, லக்ஷ்மனை என எட்டு மனைவியர் கிருஷ்னருக்கு இருந்தனர். இவர்களில் ருக்மினியின் வாயிலாக பிரத்தியும்னன் எனும் மகனும் அவன் வாயிலாக அநிருத்தன் எனும் பேரன் முதலியோர் பிறந்தனர்.
நரகாசுரன்
பிராக்ஜோதிஷம் எனும் ஒரு நகரை நரகாசுரன் ஆண்டு வந்தான். இவன் அசுர குணம் கொண்டவன். அவனது கொடிய, கொடூர செயல்களால் நாட்டில் பெரும் கஷ்டங்கள் மிகுந்திருந்தன. இந்திரனின் (இந்த இந்திரன் உண்மையில் பாரதத்தின் வடமேற்கை ஆண்டு வந்த ஒரு அரசனே என சில சரித்திர ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்) வேண்டுகோளுக்கு இனங்க கிருஷ்னபரமாத்மா தமது மனைவியான சத்தியபாமாவுடன் நரகன் எனும் நரகாசுரனின் நாட்டிற்குச் சென்று அவனைப் போரில் வென்று பூபாரம் குறைத்தார். இங்கு கூர்ந்து கவனிக்கும் போது, புராணங்களில் பெரும்பாலும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் என இரு பிரிவினர்களைக் காணலாம். அசுரர்கள் கெட்ட குணங்கள் படைத்தவர்களாகவும் தேவர்கள் கல்யான குணங்கள் கொண்டவர்களாவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். மனிதர்கள் அனைவரும் மிருக இயல்பான அசுர சுபாவத்திற்கும் ஆன்மீக இயல்பான தேவ சுபாவத்திற்கும் இடையில் பல நிலைகளில் வாழ்பவர்களாக இருக்கின்றனர். அசுர குணம் மிகும்போது தர்மம் அழிந்துவிட்டது எனக் கூறுகின்றோம். தர்மம் பெரிதும் அழிந்திட்ட நிலையில் இறைவனின் அவதாரம் உண்டாகி, தர்மம் மீண்டும் தலைத்தோங்கச் செய்கின்றது.
குசேலர்
கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் சுதாமரெனும் குசேலரும் ஒருவர் ஆவார். இருவரும் ஒன்றாக குருகுல வாசம் செய்தவர்கள். குருகுல வாசம் முடிந்தவுடன் அவரவர் தத்தம் இல்லம் திரும்பினர். சுதாமரும் திருமணம் செய்துகொண்டு நிறையக் குழந்தைகளையும் பெற்றார். வறிய நிலையிலேயே சுதாமரின் வாழ்க்கை கழிந்தது. குழுந்தைகளுக்கு நல்ல உடையோ உணவோ கிடையாது. நிலைமை இவ்வாறாக இருக்க, அதைத் தாங்க முடியாத அவரது மனைவி மிகவும் மனம் வருந்தினாள். இவர்களுடைய வறுமையைக் கண்டே சுதாமரை எல்லோரும் குசேலர் என அழைக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் அவள் குசேலரைப்பார்த்து, கிருஷ்ணர் அவரது பால்ய சிநேகிதராகையால் அவரைச் சென்று கண்டு கஷ்டம் நீங்க ஏதாவது உதவி பெற்று வருமாறு கூறி, கிருஷ்ணருக்குக் கொடுக்க ஒரு கந்தல் மூட்டையில் வேறொன்றும் இல்லாததால் சிறிது அவலை கட்டிக் கொடுத்தாள். குசேலரும் சரியெனக் கூறி கிருஷ்ணரைச் சந்திக்க கிளம்பினார். கிளம்பிவிட்டாரே தவிர, எப்போதோ பால்ய வயதில் ஒன்றாகப் பழகியிருந்தாலும், அவர் பரந்தாமன் அல்லவா அவர், தன்னை ஞாபகத்தில் வைத்திருப்பாரா? என்றெல்லாம் அவர் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டன. துவாரகையும் சென்று சேர்ந்தார். கந்தல் மூட்டையுடன் நின்ற அவரைக் கிருஷ்ணரும் வந்து வரவேற்றார், அவரை உள்ளே அழைத்துச் சென்று மஞ்சத்தில் உட்கார வைத்தார். ருக்மிணியை அழைத்து அறிமுகமும் செய்து வைத்தார். தங்கத் தாம்பளத்தில் அவரது பாதகங்களுக்கு ருக்மிணி நீர் வார்க்க, கிருஷ்ணர் அவற்றை அலம்பி சந்தனம் பூசி மலர்களால் அர்ச்சித்தார். அதன் பிறகு இருவரும் தாங்கள் ஒன்றாக அத்தியாயனம் செய்திருந்த காலத்தைப் பற்றிய பழைய நினைவுகளில் மூழ்கினர். உணவு முடிந்ததும் குசேலரைத் தமது மஞ்சத்திலேயே நித்திரை கொள்ள வைத்து கிருஷ்ணர் தமது கைகளாலேயே சாமரம் வீசினார். உபசாரங்கள் எல்லாம் முடிந்த பின் குசேலர் தமது ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார். அப்போதும் தாம் வந்த காரணத்தை குசேலரால் சொல்லமுடியவில்லை, அந்த பரந்தாமனுக்காக அவல் கொண்டுவந்திருப்பதையும் தெரிவிக்க முடியவில்லை. தம்மை இவ்வளவு உயர்வாக உபசரித்த கிருஷ்ணருக்கு கேவலம் இந்த அவலையா கொடுப்பது. சர்வாந்தர்யாமியான கிருஷ்ணனோ ஒன்றும் தெரியாதவர்போல, குசேலரைப் பார்த்து நீங்கள் வரும்போது அண்ணியார் எனக்கு ஒன்றும் கொடுத்தனுப்பவில்லையா? அவர் சௌக்கியம் தானே? என்றெல்லாம் வினவினார். குசேலர் தமது அக்குளில் வைத்திருந்த மூட்டையப் பார்த்து, இது என்ன என்று வினவியவாறே அதை வெடுக்கென்று பிடுங்கிப் பார்த்தார். அவலைக் கண்டதும், சுதாமரே, எனக்குப் பிடித்தமான அவலைக் கொண்டு வந்துள்ளீரே என அதில் ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டார். அடுத்து ஒரு பிடி அவலை எடுக்கும் போது ருக்மிணி அதைப் பிடுங்கி தமது வாயில் போட்டுக் கொண்டார். கேவலம் இந்த அவலையா இவர்களுக்குக் கொடுத்தோம் என வெட்கியவாறு குசேலரும் தமது கிராமம் நோக்கிப் புறப்பட்டார். தாம் கேட்க வந்ததை விட பெரும் பாக்கியமான அந்த பரந்தாமனின் அருகாமையில் சிறிது நேரம் கழிக்க முடிந்ததே போதும் என தம்மைச் சமாதானப்படுத்திக் கொண்டார். வீடு திரும்பிய குசேலர் தாம் கேட்காமலேயே வறுமை என்பதே அதன் பிறகு தமது வாழ்க்கையில் இல்லாது மறைந்து பகவானின் அனுக்கிரகத்தால் தமது மனைவியோடும் குழந்தைகளோடும் களிப்புடன் வாழ்ந்தார்..
கிருஷணர் தமது 122-வது வயதில் இறந்தாலும், அவர் வயோதிகம் வயப்பட்டு இறக்கவில்லை. யாதவர்கள் அனைவரும் ஒரு முறை கடற்கரைக்குச் சென்றிருந்த போது, ஏதோ சில காரணங்களினால் தமக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டு அழிந்து போனதாக புராணங்கள் கூறுகின்றன. அப்போது அருகிலிருந்த ஓர் அரசமரத்தடியில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணரை மான் என நினைத்த உலபதன் எனும் வேடன் அம்பெய்தினான். விஷங் கலந்திருந்த அந்த அம்பு அவரது காலில் தைத்தது. கிருஷ்ணபரமாத்மாவும் அதன் பயனாக விண்ணேற்றம் அடைந்தார். இதன் பிறகு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் துவாரகா பட்டணம் முழுவதுமே மூழ்கி இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
மேற்கண்ட இந்த ஒரு சில நிகழ்ச்சிகள் கிருஷ்ணருடைய வாழ்க்கையில் நடந்த, ஆனால் நாம் புரிந்துகொள்ளக்கூடிய நிகழ்ச்சிகள். இவை தவிர்த்து அசுரர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் புராணங்களில் நிறையவே உள்ளன. உதாரணமாக காளிங்கன், கேசி, நரகாசுரன் போன்றவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைக் கூறலாம். சம்பந்தப்பட்ட அசுரர்களில் ஒரு சிலர் அரசர்களாக இருந்துள்ளனர். காளிங்கன் ஒரு பாம்பாகத் தோன்றினான், பெண் அரக்கிகள் மற்றும் கரடி ரூபத்திலும் அசுரர் தோன்றியுள்ளனர். ஏற்கனவே எச்சரித்துள்ளபடி ஞானக் கண் கொண்டு பார்த்து அந்தந்த சம்பவங்களில் அடங்கியுள்ள தத்துவங்களைக் கிரகித்துக் கொள்ளவேண்டும். கிருஷ்ணத் துவைபாயனர் எனும் வியாசர் எழுதிய புராணங்கள் முழவதும் இத்தகைய நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கின்றன. அவற்றின் பின்னனியில் மேற்குறிப்பிட்ட தத்துவங்களும் நிறையவே அடங்கியுள்ளன. அதுவே நோக்கம். ஆம், தத்துவங்களை மனதிற் பதியும் வகையில் வித்தியாசமாக மக்களுக்கு விளக்கிட வேண்டும் என்பதே புராண கதைகளின் நோக்கம்.
இந்தச் சம்பவங்கள் கிருஷ்ணரது வாழ்க்கையில் நடந்த பொதுவான சம்பவங்கள். ஆனால் அவர் ஓர் கடவுள் அவதாரம் எனும் முறையில் வெளிப்படுத்திய போதனையான "பகவத் கீதை" எனும் இறைவனின் கீதம் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டது எனும் வரலாற்றைக் காண வேண்டுமானால் மாஹாபரதம் எனும் இதிகாசத்தைச் சிறிது ஆராய வேண்டியிருக்கும். புராணங்களில் பகவத் கீதையின் வெளிப்பாட்டின் சூழ்நிலைகள் விவரிக்கப் படவில்லை. ஆனால் மஹாபாரதம் எனும் இதிகாசத்தில் இதை மிகவும் விரிவாகவே காணலாம்.
மகாபாரதமும் இராமாயணமும் இதிகாசங்கள், அதாவது "இவ்வாறு நடந்தது/இருந்தது" எனும் பொருளிலான சரித்திரக்காலத்திற்கு முந்திய சம்பவங்களை அவை உள்ளடக்கியுள்ளன. ஆங்கிலத்தில் அவற்றை "லெஜன்ட்" என அழைப்பார்கள். மஹாபாரத யுத்தமாகப்பட்டது ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கிடையில் நடந்த ஒரு போராகும். இதுவும் ஒரு வகையில் தேவாசுர யுத்தமாக, ஒரு புறம் தர்மமும் மறுபுறம் அதர்மமுமாக, நடந்தது. ஒரு பறம் கிரிஷ்ணரின் மைத்துனர்களான பாண்டவர்களும் மறுபுறம் அவர்களின் எதிரிகளான பாண்டவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்களான கௌரவர்களும் இருந்தனர். சூதாட்டத்தில் பாண்டவர்களை வஞ்சகத்தால் வென்று அவர்களுடைய இராஜ்ஜியங்களை எல்லாம் கௌரவர்கள் அபகரித்தனர். பாண்டவர்கள் தமது இராஜ்ஜியத்தைத் திரும்பப் பெறும் முயற்சின் பலனாகவே இம்மகாபாரத யுத்தம் மூண்டது. இப்போரின் சூத்திரதாரியாக வீற்றிருந்தவர் கிருஷ்ணரே. போரில் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகப் பங்கெடுத்து அவன் மூலமாக போர் சென்ற திசையையே அவர் மாற்றியமைத்தார். தன் மகனாகிய அபிமன்யுவை வஞ்சகத்திற்குப் பலிகொடுத்து, அதன் பலனாக துக்கத்திற்குத் தன் அறிவைப் பறிகொடுத்திருந்த அர்ஜுனனுக்கு உபதேசித்த வார்த்தைகளே பிறகு கீதோபதேசமாயின. உதாரணமாக, பகவத்கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் துக்கித்திருந்த அர்ஜுனனுக்கு ஆன்மாவின் இயல்புகள் குறித்து கிருஷ்ணர் அளித்த விளக்கங்கள் அவனுக்கு வாழ்வின் உண்மைகளை எடுத்துக்கூறி தன் மகனின் மரணத்தை மறந்து மேற்கொண்டு போரில் அவன் தன் கடமைகளை ஆற்றவேண்டியதின் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றன.
புராண இதிகாசங்கள், குடும்ப உறவுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுப்பதை புராணங்களிலும் இதிகாசங்களிலும் காணலாம். உதாரனமாக, தேவகி கம்சனின் தங்கை என கூறப்பட்டாலும், அவள் கம்சனுக்கு ஒன்று விட்ட தங்கையே. இருந்தும் அவளை கம்சனின் தங்கை எனவே புராணங்கள் சித்தரிக்கின்றன. கிருஷ்ணரும் பாண்டவரும் மைத்துனர்கள் ஆவார்கள். அதாவது கிருஷ்னருக்கு பாண்டவரின் அன்னையாகிய குந்திதேவி அத்தை உறவு கொண்டவள். அப்போது நிலவிய இந்த நெருக்கமான உறவு முறைகள் இப்போதும் இந்தியரிடையே நிலவுவதைக் காணலாம்.
ஆக, ஸ்ரீ கிருஷ்னர் உண்மையில் கடவுளுக்கு அடுத்த நிலையில் உள்ள கடவுளின் அவதாரம் என்பதைக் கண்டுகொள்வது சிறமமல்ல. அவர் தோன்றிய காலத்திற்கு ஏற்றவாறு அவருடைய வரலாறு சித்தரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிவு பெருக்கம் நிறைந்த இன்று அவருடைய மெய்ம்மையை அறிவுபூர்வமாகவும், அறிவியல் ரீதியாகவும், தத்துவார்த்தமாகவும் கண்டுகொள்ளலாம் என்பது திண்ணம்.