சோதனைகளின் இயல்பும் சவால்களும்
டாக். பீட்டர் ஃகான்
சோதனைகளின் இயல்பும் சவால்களும்
டாக். பீட்டர் ஃகான்
சோதனைகளின் இயல்பும் அவற்றின் சவாலும்
டாக்டர் பீட்டர் கான் அவர்கள் வில்மட் பஹாய் கோவிலில் ஆற்றிய உரையின் மொழியாக்கம்
(இச்சொற்பொழிவு, அமெரிக்க பஹாய்களைக் குறித்து ஆற்றப்பட்டிருந்தாலும், இதில் அடங்கியுள்ள விஷயங்கள் யாவும் அனைத்து பஹாய்களுக்கும் பொருந்தும் என்பதை வாசகர்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறோம்.)
அன்பார்ந்த நண்பர்களே,
அமெரிக்க பஹாய் சமூகத்தின் மையமாக விளங்கும் இவ்விடத்தில் மீண்டும் ஒன்று கூடியிருப்பதில் ஏற்பட்டிருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை என் சார்பாகவும் என் மனைவியின் சார்பாகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மிச்சிகன் மாகாணத்தில் நாங்கள் 12 வருடங்கள் வாழ்ந்திருக்கின்றோம். அவை, நாங்கள் சமயத்தைப் பற்றியும் பஹாய் சமூகத்தைப் பற்றியும் கற்றுணர்ந்த உருவாக்கம் மிக்கவையும் களிப்பு மிகுந்தவையுமான12 வருடங்கள்.
இந்த நிகழ்வின் போது நாங்கள் அமெரிக்கா திரும்பியிருக்கும் இவ்வேளையில், அந்த வருடங்களின் நினைவுகளும், அவ்வேளையில் எங்களுக்கு அறிமுகப்பட்டிருந்த அமெரிக்க பஹாய்களின் ஊக்கமும் அர்ப்பண உணர்வும் அற்புதங்களும் எங்கள் இதயங்களில் நிறைந்துள்ளன. இன்றிரவு நான் உங்களில் ஒருவன் என்ற நிலையிலேயே உங்கள் முன் உரை நிகழ்த்துகின்றேன். உலக நீதி மன்றத்தின் சார்பாக நான் இங்கு உரை நிகழ்த்தவில்லை. நிகழ்காலத்தில் அந்த மேன்மை மிக்க சபையின் அங்கத்தினராகும் வாய்ப்பு பெற்ற ஒருவர் என்ற முறையிலேயே, ஒரு தனி பஹாய் என்ற முறையிலேயே, சொற்பொழிவாற்றுகின்றேன். ஆக, இங்கு உங்களுக்கு முன் நான் சமர்ப்பிக்கவிருக்கும் எண்ணங்கள் என்னுடைய சொந்த எண்ணங்களே ஆகும்.
பாதுகாவலர் ஷோகி எ*பெண்டி அவர்கள், பாதுகாவலர் என்ற முறையில் தமது பணிக்காலத்தின் ஆரம்ப வருடங்களிலிருந்து முக்கியத்துவம் கொடுத்து வந்த ஒரு விஷயத்தின்பால் என்னுடைய மற்றும் உங்களுடைய கவனத்தைத் திருப்ப விழைகின்றேன். பார்க்கப் போனால், ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்குத் தாம் அனுப்பிய ஜனவரி 21, 1922 எனத் திகதியிடப்பட்ட முதன் முதற் கடிதத்தில் பாதுகாவலர் இவ்விஷயம் குறித்துக் கவனத்தை ஈர்த்தும், அடுத்தடுத்து வந்த கடிதங்களில் அதைப் பற்றி மறுபடியும் மறுபடியும் குறிப்பிடவும் செய்துள்ளார். அவ்விஷயம் யாது?
பாதுகாலர் அவர்கள், அமெரிக்க நம்பிக்கையாளர்கள், வரப்போகும் காலங்களில் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என 73 வருடங்களுக்கு முன்பு கூறினார். அவர்கள், உடல் சித்திரவதைக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவு சார்ந்த மனச்சோதனைகளை எதிர்நோக்குவர், எனக் கூறினார். அவை அமெரிக்க பஹாய்களைத் தூய்மை பெறச் செய்யவும் அவர்களை மேலும் அறிவுடையோர் ஆக்கவும் சம்பவிக்கக் கூடியவை எனக் கூறினார். சில வருடங்களுக்குப் பிறகு அவர் அதே விஷயத்தைப் பற்றி மறுபடியும் குறிப்பிட்டார். "மேற்கு நாடுகளைச் சார்ந்த தமது அன்பிற்கினியவர்களை நிச்சயமாக தாக்கக் கூடிய கடுமையான சிந்தனா சோதனைகளைப் பற்றி, இவ்வுலகத்தில் தமது பணிக்காலத்தின் இறுதி சில வருடங்களில் நமது அன்பிற்குகந்த மாஸ்டர் அவர்கள் நமக்குக் குறிப்புடன் விடுத்த எச்சரிக்கைகளைத்தான் நாம் எத்துணை விரைவில் மறந்துவிடுகிறோம்," எனக் கூறினார். "அவர்களின் உயர்வுமிக்க பணிகளுக்காக அவர்களை மாசகற்றி தூய்மைப்படுத்தி தயார் செய்யக்கூடிய சோதனைகள் அவை."
தவிர்க்க இயலாத சிந்தனா சோதனைகள்
அமெரிக்க பஹாய்களைத் தயார்படுத்தக்கூடிய, இனி வரவிருக்கும் தவிர்க்க இயலாத சிந்தனை சார்ந்த சோதனைகள் என பாதுகாவலரால் வர்ணிக்கப்படும் இவ்விஷயம், அவரது எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் தோன்றியும், உலக நீதி மன்றத்தால், அதன் மே 19, 1994 என திகதியிடப்பட்ட நீண்ட கடிதத்தில், "அவர்களைத் தூய்மைப்படுத்த தாம் அனுப்ப வாக்குறுதியளித்திருக்கும் அப்துல் பஹாவின் அந்தச் சிந்தனா சோதனைகளில் அவர்கள் மறுபடியும் மறுபடியும் வெற்றிபெற அமெரிக்க பஹாய்களுக்குத் தெய்வீக வலிமை அருளப்படுவதாக," என அவர்கள் தங்களது எதிர்பார்ப்புகளையும் பிரார்த்தனையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பாதுகாவலர் எழுதியவற்றில் பல பகுதிகள் இந்த சிந்தனை சார்ந்த சோதனைகளைக் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, அமெரிக்க பஹாய்களுக்குப் பாதுகாவலரால் எழுதப்பட்டு பிரசுரமான கடைசி செய்தி ஒன்றில், வருங்காலங்களில் எதிர்ப்பார்க்கக் கூடியவற்றை அவர் முன்குறிப்பிட்டுள்ளார். அவர், வருங்காலங்களில் பஹாய் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய வெளிச்சோதனைகள் சிந்தனை ரீதியில் அமைந்திருக்குமே அன்றி உடலை வருத்துவனவாக இருக்காது எனக் கூறியுள்ளார். நமது சமயத்தை வெளியிலிருந்தே அழித்திட குறிவைக்கக்கூடிய பலம் வாய்ந்த வைதீக மத ஆச்சாரங்களை ஆதரிக்கும் மதத்தலைவர்களான எதிரிகளின் தாக்குதலுக்கு அது ஆளாகும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 1957 எனத் திகதியிடப்பட்ட அந்த இறுதிச் செய்தியில், மேலும், அமெரிக்க பஹாய்களுக்குச் சிந்தனா சோதனைகள் சமயத்திற்கு உள்ளளிருந்தே வரும் என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க சமுதாயத்திற்குள் இயங்கும் பல சக்திகளை அவர் வரிசைப்படுத்தி, அந்தச் சக்திகளின் தாக்கத்தினால் சமயத்தின் நிர்வாக மையங்கள் உள்ளிருந்தே கடுமையான ஆன்மீகச் சவால்களுக்கு உட்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டு, "உள்ளிருந்தே அதற்குக் குழிபறித்திட முயலும் துரோகச் சக்திகளை," எதிர்த்திடும் முயற்சிக்கு ஏதுவாக பஹாய் சமூகத்தைப் பலப்படுத்த வேண்டும் எனவும் நண்பர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வசனங்கள் அமெரிக்க பஹாய் சமூகத்தின் சீதனங்களாக உள்ளவற்றின் ஒரு பகுதி எனக் கொள்ளப்படவேண்டும். சவால்கள் மிக்க காலங்கள், சிரமங்கள் மிக்க காலங்கள், சோதனைகள் மிக்க காலங்கள் மற்றும் அவற்றோடு சேர்ந்து பெரும் வெற்றிகள் நிறைந்த காலங்கள் ஆகியவற்றை முன்குறிப்பிடும் வசனங்கள் இவை.
நான் ஏற்கனவே வாசித்த ஒரு வசனம் குறிப்பிடுவது போல், இச்சோதனைகள், அன்பர்களை "மேலும் அதிக ஒளிவிட்டு பிரகாசிக்க செய்யவும்," "மேலும் அதிக காந்தியுடன் ஒளிரவும்," "பாப், பஹாவுல்லா, மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் வாசகங்களில் வழிவகுக்கப்பட்டிருக்கும் தமது மகிமை நிறைந்த எதிர்காலத்தை அடைந்திட அமெரிக்க பஹாய் சமூகத்திற்கு உதவவும்," நோக்கம் கொண்டுள்ளன" என பாதுகாவலர் வருணிக்கின்றார்.
இங்கு நான் குறிப்பிட விரும்பும் விஷயம் என்னவெனில், நாம் அத்தகைய சிந்தனா சோதனைகள் மிகுந்த காலத்தில் வாழ்கின்றோம் என நானும் காலப்போக்கில் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன் என்பதே ஆகும். சிந்தனா சோதனைகள் வரப்போவது வரக்கூடிய காலங்களில்தான் என்றில்லாமல், அவை இப்போதே தோன்றிவிட்டன.
நான் இதை ஏன் சொல்கிறேன்? சிந்தனா சோதனைகளின் இயல்புதான் நான் இதைச் சொல்வதற்குக் காரணமாக உள்ளது. உடல் சார்ந்த சோதனைகளைப் பற்றி நாம் அனுபவப்பட்டும் அறிந்துகொண்டும் இருக்கின்றோம். இங்கு குழுமியுள்ள கூட்டத்தினரிடையே உள்ள நமது சமயத்தின் தொட்டிலாகிய இரானைச் சேர்ந்த பல அன்பர்கள் இவ்வித உடல் வதை சார்ந்த சோதனைகள் குறித்த அனுபவம் நன்கு பெற்றுள்ளர். 150 வருடங்களாகப் பால்ய சமயமான இது பல நாடுகளில் உடல் பொருள் சார்ந்த சோதனைகளைச் சந்தித்துள்ளது -- சித்திரவதைகள், சிறையிலிடுதல், தியாகமரணம், குடும்பங்களும் இல்லங்களும் சிதரிப்போகுதல் ஆகியவை. ஆனால் நாம் சிந்தனா சோதனைகளில் இன்னும் அனுபவப்படவில்லை.
உலக நீதி மன்றம், ஜனவரி 1986 எனத் திகதியிடப்பட்ட ஒரு கடிதத்தில், இறைவனின் சமயம் அறியப்படாத நிலையிலிருந்து வெளிப்படுகின்றது எனும் உண்மையைக் குறிப்பிட்டுள்ளது. அதாவது, அதன் பரிணாமம் குறித்துப் பாதுகாவலர் குறிப்பிட்டுள்ள ஏழு படிகளின் முதல் படியை விட்டு இரண்டாவது படியான, சித்திரவதை அல்லது ஒடுக்கப்படும் கட்டத்திற்கு அது வந்துவிட்டது. சிந்தனா சோதனைகளைப் பற்றி, ஒரே உலகளாவிய பஹாய் சமூகமாக மேலும் மேலும் அதிகமாக அறிந்துகொள்ளக்கூடிய ஒரு கட்டத்தை நாம் அடைந்தும் அடைந்துகொண்டும் இருக்கின்றோம். இங்கு, இந்த இரவில் நாம் இங்கு கூடியிருக்கும் இந்த வேளையில், எனது உணர்வாகவும் எனக்குத் தோன்றுவதாகவும் உள்ளது நாம் இந்தச் சிந்தனா சோதனைகளைத் தற்போது அனுபவித்து வருகிறோம் என்பதே ஆகும். சிந்தனா சோதனைகள் என நான் குறிப்பிடும் அதற்கு அர்த்தம் என்ன? அவையாவன, நம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் அரித்தும் தகர்த்தும் பஹாய் சமூகத்தில் ஒழுங்கீனத்தை உருவாக்கவும் கூடிய சோதனைகள் ஆகியவை. சிந்தனா சோதனைகளின் ஓர் இயல்புக்கூறாக பஹாய் அல்லாத சமுதாயத்தில் நிலவக்கூடிய வாழ்க்கை முறைகள் மற்றும் மதிப்பீடுகளால் பார்வை மங்கியும், அவ்விதம் பார்வை மங்கிப்போவதனால் இந்தச் சிந்தனா சோதனைகளை நாம் கடக்க முடியாமல் போவதும் ஆகும்.
இவ்விதச் சோதனைகளின் அபாயங்களைக் குறைத்து மதிப்பிட்டும், ஏனோ தானோ என்றிருந்தும், காலம் தாழ்ந்து இச்சோதனைகளைப் பற்றி உணர்ந்து கொள்ளக்கூடிய ஓர் ஆபத்தான நிலையிலும் நாம் இருக்கின்றோம். இது, போர் வீரன் ஒருவன் கத்தி கேடயங்களுடன் போருடை தரித்து போருக்காக அதிக நேரம் காத்துக் கொண்டிருக்க, ஆனால் போரோ அவனைச் சுற்றிலும் நெடு நேரமாக நடந்து, அவன் அங்கு நின்று கொண்டிருக்கும் போதே ஒரு முடிவிற்கும் வந்தவிட்ட ஓர் ஆபத்தான நிலையை அடையக்கூடிய நிலையில் நாமும் இருக்கின்றோம். அமெரிக்க சமூகத்தின் அங்கத்தினர்கள் என்ற முறையில் -- நானும் என் மனைவியும் பல வகைகளில் நாங்களும் அமெரிக்கர்கள் என்றே எங்களை எண்ணிக் கொள்கின்றோம் -- இச் சொற்பொழிவின் ஒலிப்பதிவு ஆஸ்திரேலியா போகாமல் இருந்தால் சரி! -- இன்றைய சூழ்நிலையில் சிந்தனா சோதனைகளுக்கு மூன்று கூறுகள் உள்ளன என்பது என் எண்ணம். நான் அவற்றை குறிப்பிட்டும் பிறகு அவை ஒவ்வொன்றைப் பற்றியும் ஆழமாக உரையாற்றவும் விரும்புகிறேன்.
முதலாவதாக: லௌகீகங்கள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் ஆன்மீகத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய காட்டாயத்தினால் நாம் சோதனகளுக்கு உட்படுத்தப் படுகிறோம் என்பது என் எண்ணம். இது நம் ஒவ்வொருவருடைய சோதனையும் ஆகும். இரண்டாவதாக: அக்கறையின்மை மற்றும் ஊக்கமின்மை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள ஒரு சுற்றுச்சூழலில் மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான நமது ஈடுபாட்டில் நாம் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றோம். மூன்றாவதாக: சமூக நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள்பால் ஒரு மாற்று மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவேண்டிய தேவையால் நாம் சோதிக்கப்படுகின்றோம்.
இந்த மகோன்னத நாட்டில் வாழும் நாம், இந்த விருவிருப்பு மிக்க சமூகத்தில் வாழும் நாம், இந்த மூன்று நிலைகளிலேயே சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பது என் எண்ணம். இச்சோதனைகளில் நாம் வெற்றி அடையப்போகின்றோமா அல்லவா? பஹாய் சமூகம் இதில் தேர்ச்சி பெறும். அமெரிக்க சமூகம் பெரும் அற்புதமிக்க விஷயங்களைக் கடந்து செல்ல விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனிநபர்களாகிய நாம், சோதனைகளுக்கு உட்பட்டவர்கள்.
இவற்றில் முதலாவதாக உள்ளதை நான் முதலில் தொட்டுப் பேச விரும்புகிறேன். மனித வாழ்வின் லௌகீக கூறுகளில் அதிகரித்த அளவில் ஆழ்ந்தும், பார்க்கப்போனால் மூழ்கிப் போயும் உள்ள ஒரு சுற்றுச் சூழலில் ஒர் ஆன்மீக உணர்வை மேம்படுத்துவதானது அளிக்கும் சவாலே இப்போது நம்மை தாக்கக் கூடிய முதல் சிந்தனா சோதனையாக உள்ளது. பாதுகாவலரின் எழுத்துக்களும், சமீப காலங்களில் உலக நீதி மன்றத்தின் செய்திகளும், நண்பர்கள் தங்கள் வாழ்க்கைகளை ஆன்மீக மயமாக்கிக் கொள்ளும்படியும், அதன் லௌகீக நிலையை விட முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட, சர்வ -முக்கியத்துவம் வாய்ந்த, இன்றியமையாத ஆன்மீக நிலையிலான வாழ்வை உள்ளடக்கிய ஒர் உலக கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொள்ளும்படியும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றன.
இதைச் செய்யும்படி நாம் அழுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். நமது போதனைகளில் பஹாவுல்லாவின் மெய்யன்பர்கள் என்ற முறையில் நமது கடமையாக நமது வாழ்க்கைகளை ஆன்மீக மயமாக்கிக் கொள்வது இருக்கின்றது என நமக்குக் கூறப்பட்டுள்ளது. நாம் இதை நிறைவேற்றுவோமானால், அதன்மூலம் நாம் நமது வலிமைகளையும் ஆற்றல்களையும் அதிகப்படுத்திக்கொள்வதோடு, அதன் மூலமாக மட்டுமே இன்பமும் நிறைவேற்றமும் காணமுடியும் எனும் வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்து.
இது நடைபெறாமல் போனால் -- இச் சோதனையில் நாம் கண்டிப்பாக தேர்ச்சி பெறப் போகின்றோம் என யாருமே கூறிட முடியாது -- சமயமாகப்பட்டது வெறும் கோட்பாடாகவும், சடங்குச் சம்பிரதாயங்களாகவும் உயிரற்ற அநுஷ்டானங்களாகவும் தரம் குறைந்துவிடும். உலக நிகழ்வுகளும் உலக சரித்திரம் செல்லும் திசையையும் குறித்த லௌகீக வியாக்கியானங்கள்பால் நாமும் தவிர்க்க முடியாமல் ஈர்க்கவும் படுவோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் கலக்கங்கள்பாலும், பதட்டங்கள்பாலும், ஈடுபாடுகள்பாலும், தயக்கங்கள்பாலும் மற்றும் சந்தேகங்கள்பாலும் நாமும் ஆழ்ந்து போய், மனிதகுலத்தின் ஆன்மீக வளர்ச்சி குறித்த நமது உலகளாவிய கண்ணோட்டமும் மறைந்து போகும். இத்தகைய ஆன்மீக செயற்பாட்டை நாம் ஆரம்பிக்காமலும் ஆக்கத்துடன் பின்தொடராமலும் இருந்தால் நமது சமூக வாழ்வானது சடங்குச் சம்பிரதாய முறைகளாகி சீரழிந்துவிடும்.
இது ஏன் நமக்குச் சிரமமாக இருக்கின்றது? இதன் காரணம், ஒரு சமூகத்தில் எத்துனை பஹாய்கள்தான் இருந்தபோதிலும், பஹாவுல்லாவை அறிந்திராதவர்களுடன் ஒப்பிடுகையில் அங்கு நமது எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது. நமது வாழ்வின் அதிக பட்சமான நேரங்களை பஹாவுல்லாவை அறியாதவர்களுடனேயே கழிக்கின்றோம். அவர்களில் பலர் சிறந்தவர்களாகவும் தெளிவான மற்றும் உயர்ந்த கோட்பாடுகள் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர், மற்றவர்கள அதற்கு எதிரிடையாக இருக்கின்றனர். அடிப்படையில் லௌகீக ரீதியில் அமைந்துள்ள சக்திகள், தாக்கங்கள், சார்புகள், ஆலோசனைகள், மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றுக்கு நாம் உட்படுத்தப்படுகிறோம். நாம் அறியாமலேயே இது நமது உலக கண்ணோட்டத்திற்கான மாதிரி ஆகின்றது.
பல தசாப்தங்களாகவும், நூற்றாண்டுகளாகவும், வாழ்க்கையை ஆன்மீக மயப்படுத்துவதற்கு உலக வாழ்க்கையை துறக்க வேண்டும் எனும் எண்ணம் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. பொருட் செல்வங்களைத் துறந்திட வேண்டும் எனவும், நமது ஆன்மீக மேம்பாட்டிற்குச் சன்னியாசம் வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் நம்பப்பட்டு வந்துள்ளது. பஹாவுல்லா ஹுக்குக்குல்லா சட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த தவறான நம்பிக்கை அடக்கம் செய்யப்பட்டு விட்டது.
ஹுக்குக்குல்லா சட்டத்தின் மூலம் பஹாவுல்லா நமக்கு வழங்கியுள்ள தயவு மற்றும் சலுகைகளின் மூலம், நாம் சேர்த்து வைத்துள்ள செல்வத்தில் செலவு போக மிஞ்சியவற்றில் 19 விழுக்காடு இறைவனுக்குச் சொந்தம் எனவும், மீதமுள்ள 81 சதவிகிதம் நமக்குச் சொந்தம் என்பது பஹாவுல்லாவின் அடிப்படைக் கூற்று. மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக அதை அர்ப்பண உணர்வோடு நாம் கொடுக்க விரும்பலாம். அப்படி செய்ய விரும்பாமலும் இருக்கலாம். அது நம்முடைய பிரச்சினை. அதில் ஒரு பகுதி இறைவனுக்குச் சொந்தம். மனசாட்சி குறித்த ஒரு விஷயமாக ஹுக்குக் செலுத்த நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். ஹுக்குக்குல்லாவிற்கு நாம் காணிக்கை செலுத்துகிறோம் எனக் கூறுவது கிடையாது. தேசிய, உள்ளூர் மற்றும் அனைத்துலக நிதிகளுக்கு நாம் நிதி வழங்குகிறோம், ஆனால் ஹுக்குக்குல்லாவிற்கு நாம் பணம் கட்டவேண்டுமே அன்றி காணிக்கை கொடுப்பதென்பது கிடையாது.
ஒருவர் ஆன்மீக மயப்படுவதற்குச் சகல பொருட் சுகங்களை, நாட்டங்களை மற்றும் நன்மைகளை முழுக்கத் துறக்க வேண்டும் எனும் கோட்பாடு, ஹுக்குக்குல்லா சட்டம் அளிக்கும் அகப்பார்வை மற்றும் விவேகத்தினால் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. நான் இங்கு கண்டுணர்ந்த வகையில், ஆன்மீகவியல் பற்றியும், அதை நாம் எப்படி அடைவது என்பது பற்றியும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் இதுவே நமது சவால். நம் ஒவ்வொருவருக்கும் இது ஒரு சவால் -- ஆன்மீக ரீதியிலான ஒரு மேம்பாட்டை நாம் எப்படிப் பெறுவது என்பது பற்றியது.
ஆன்மீக மேம்பாடு குறித்த செயற்பாடு மூன்று கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது என் கருத்து. முதலாவதாக: இறைவனின் அவதாரம் நமக்கு வழங்கியுள்ள குறிப்பிட்ட ஒரு சில விதிமுறைகளை இவ்வுலகில் அனுசரிக்கும் போது அவை மர்மான, ஆனால் இன்றியமையாத ஆன்ம சக்திகளை ஈர்க்கின்றன.
நமது சமயத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள, குறிப்பிட்ட ஒரு சில விதிமுறைகளை நாம் அனுசரிக்கும் போது, மர்மமான, புரிந்துகொள்ள முடியாத வகையில் ஒரு மாபெரும் ஆன்மீகச் சக்தியை நாம் ஈர்க்கின்றோம். இது நமது புரிந்துகொள்ளலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிக்கலான சிரமமான விஷயம். ஆனால் அதிர்ஷ்ட வசமாக பாப் அவர்கள் மற்றும் பஹாவுல்லாவின் வருகைக்கு முன்பான சமயக் காலக்கட்டத்தில் காந்தச் சக்தியைப் பற்றி விஞ்ஞானிகள் முறையான ஆய்வு மேற்கொண்டார்கள். இதனால், மனிதகுலம் காந்தம் பற்றியும், காந்தச் சக்தி குறித்த கோட்பாடு பற்றியும், காந்தத்தின் இயல்புப் பற்றியும் ஒரளவு அறிந்து கொள்ளமுடிந்தது. சிறிய அமைப்புமுறைகளோடு கூடிய, ஒரே திசையை நோக்கித் திரும்பியுள்ள அணுக்களால் அமைக்கப்பட்ட "டைப்போல்கள்" எனப்படுபவை காந்தவிசை இயல்பைத் தோற்றுவிக்கின்றன என்பது நமக்குத் தெரியும். இதனோடு தொடர்புடையதே, வெகுதூரத்திலிருந்தே இயங்கக்கூடிய கண்ணுக்குப் புலப்படாத ஆனால் மிகவும் வலிமை வாய்ந்த காந்தச் சக்தி.
இதன் பயனாக, நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஆன்மீக மேம்பாடு தொட்ட செயற்பாட்டை அடிக்கோலி்டும் அந்த மூன்று கோட்பாடுகளில் முதல் கோட்பாடு, பஹாவுல்லா, அப்துல் பஹா மற்றும் பாதுகாவலரால் இந்தக் காந்தத்தின் உவமானத்தின் உதவியோடு சித்தரிக்கப்படுவதைக் காணலாம். காந்தத்தின் உவமை, இறைவனின் விதிகளுக்கு ஏற்ப செயல்படுத்தப்படும் சில விஷயங்கள் கண்ணுக்குப் புலப்படாத ஒரு வலிமை வாய்ந்த சக்தியை ஈர்க்கக்கூடியவை என்பதை நமது சமயத்தின் நடுநாயகர்கள் மிகவும் விருவிருப்புடன் எடுத்துக்காட்ட உதவியுள்ளன.
சில உதாரணங்களை நான் உங்களுக்குப் படித்துக் காட்ட விரும்புகிறேன். ஓரிடத்தில், "தயவு மிக்கவரின் உறுதிப்பாடுகளைப் பற்றுறுதி எனும் காந்தமே ஈர்க்கின்றது." அப்துல் பஹா கூறுவது, "இறைவனை நினைவு கூறுவதென்பது உறுத்திப்பாட்டையும் உதவியையும் காந்தத்தைப் போல் ஈர்க்கக்கூடியது." மறுபடியும், "ஒற்றுமையும் நல்லிணக்கமுமே இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கக்கூடிய காந்தக்கல் ஆகும்," என மேலும் கூறப்படுகின்றது. "மனிதகுலத்தைச் சரியான பாதையில் வழிகாட்டுவதே இறைவனின் உதவியை ஈர்க்கக்கூடிய காந்தக்கல் ஆகும்."
"என்றும் இல்லாத வகையில், இன்று, இறைவனின் சமயத்தைப் போதிப்பதே விண்ணுலகிலிருந்து ஆசீர்வாதங்களை ஈர்க்கக்கூடிய காந்தக்கல் ஆகும்," என பாதுகாவலர் கூறுகின்றார். வேறோர் இடத்தில், "சமயத்தைப் பரவச்செய்வது எனும் மகிமை பொருந்திய காரியத்தின்பாலும், பாஹாய் வாழ்வு வாழ்வது என்பதின்பாலும் கொள்ளக்கூடிய அர்ப்பண உணர்வு புனித ஆவியை ஈர்க்கக்கூடிய காந்தக்கல்லை உருவாக்குகின்றது. இவ்வாறாகவே மேலும் பல வாசகங்கள் உள்ளன...
ஆகவே, என் அபிப்ராயத்தில் ஆன்மீக மேம்பாட்டைக் குறிக்கக்கூடிய அந்த மூன்று கோட்பாடுகளில் முதல் கோட்பாடு காந்தக்கல் குறித்த கோட்பாடாகும் -- லௌகீக ரீதியில் அணுக்களின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறை காந்தச் சக்தியை ஈர்ப்பது போல் பக்தி மனப்பான்மையுடனும் அர்ப்பண உணர்வுடனும் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட ஒரு சில காரியங்கள் ஒரு மாபெரும் ஆன்மீகச் சக்தியை ஈர்க்கக்கூடியவை, எனும் கோட்பாடு. இந்தக் காந்தக்கல் குறிந்த கோட்பாடு பஹாய் வாசகங்களினூடே ஒருங்கே உருகியோடிடக் காணலாம். உதாரணமாக, தமது வெளிப்பாட்டினைக் குறிப்பிட்டு, அதைக் "காந்தம்" அல்லது "காந்தக்கல்" என பஹாவுல்லா வர்ணிக்கக் காணலாம்.
தமது வெளிப்பாடு, "உலகின் அனைத்து தேசங்களுக்கும் இனங்களுக்கும் காந்தக் கல்லாக," விளங்கும் என அவர் கூறியுள்ளார். வேறோர் இடத்தில், பஹாவுல்லா இறைவனின் வெளிப்பாட்டாளர் என்பதை பின்வரும் வார்த்தைகள் மூலம் அப்துல் பஹா குறிப்பிடுகின்றார்: "படைப்புலகின் துருவத்தில் ஆன்மாக்கள் மற்றும் இதயங்களை ஈர்க்கும் 'காந்தக் கல்லை' இறைவன் வெளிப்படுத்தியுள்ளார்."
வலிமை வாய்ந்த ஆன்மீகச் சக்திகளைக், குறிப்பிட்ட ஒரு சில விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஈர்ப்பதாகிய இதுவே ஆன்மீக மயப்படுத்தும் செயற்பாட்டினை அடிக்கோலிடும் முதல் கோட்பாடு என்பது என் நம்பிக்கை.
ஆன்மீக மேம்பாடு அடைவற்கான செயற்பாட்டில், நான் காணும் இரண்டாவது நிலை கோட்பாடாக இருப்பது, "நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு" என்பதாகும். முதலாவதில், நாம் பிரார்த்தனை, நோன்பு, போதித்தல், ஒற்றுமையைக் கடைபிடித்தல், ஆன்மீகக் கூட்டங்கள் நடத்துதல் போன்றவற்றைக் கடைபிடித்தால் ஆன்மீகச் சக்திகளையும் வலிமைகளையும் ஈர்க்கலாம் என்பதாகும்.
இரண்டாவது கோட்பாடாகிய ""நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு"" என்பது பின்வரும் உதாரணத்தின் மூலம் சித்தரிக்கப்படுகிறது.
நமது புனித வாசகங்களின் மூலம், நாம் பிரார்த்தனை செய்தால் ஆன்மீகச் சக்திகளை ஈர்க்கலாம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. நான் சிறிதளவுப் பிரார்த்தனை செய்து அதன்மூலம் அதே அளவு ஆன்மீக சக்திகளை ஈர்க்கின்றேன் என வைத்துக்கொள்வோம். இது எனது முயற்சிகளை மறுபலப்படுத்தும். இது என்னைப் பலவந்தனாக்கும். அதனால் நான் மேலும் அதிகமாகப் பிரார்த்தனை செய்வேன். இந்த உதாரணம் ஓர் எளிமையான மாதிரி என்றாலும், என்னுடைய நோக்கத்திற்கு அது போதுமானதே ஆகும். ஆக, நான் அதிகமாகப் பிரார்த்தனை செய்வேன். இது மேலும் அதிக அளவிலான ஆன்மீக வலிமைகளை ஈர்க்கும். நான் அதற்கும் மேலும் அதிகமாகப் பிரார்த்திப்பேன், அது அதற்கும் மேலும் அதிகமாக ஆன்மீக வலிமைகளை என்பால் ஈர்க்கும். நான் மேலும் பிரார்த்தனை செய்வேன், அதன்மூலம் என் வலிமைகள் குவிந்து கொண்டே போகும்.
இரண்டாவது கோட்பாடு குறித்து, ""நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு"" எனும் அடிப்படையிலேயே நான் பேசப்போகிறேன். நாம் சிறிதளவுடன் ஆரம்பிக்கின்றோம். அது மேலும் அதிகமான வலிமைகளை ஈர்க்கின்றது, உங்களைப் பலவந்தனாக்குகின்றது. நீங்கள் மேலும் அதிகமாகச் செயலாற்றுகின்றீர்கள், அது மேலும் அதிகமான வலிமைகளை ஈர்த்துக் கொண்டே போகிறது. இந்த அடிப்படையிலேயே, ஆன்மீகக் குணங்களைப் பின்பற்றவும், பக்தியை அடிப்படையாகக் கொண்ட -- போதித்தல், காணிக்கை வழங்குதல், சமயக் காரியங்களில் ஈடுபடல் போன்ற செயல்களில் -- அவை நமது முயற்சிகளைப் பலப்படுத்தும், நாம் மேலும் மேலும் அதிகமாகச் செய்திட ஊக்கம் தரும் -- எனும் நம்பிக்கையில் ஈடுபடக் கேட்டுக் கொள்ளப்படுகிறோம்.
;
இந்த விளக்கத்துடனேயே--இந்த ""நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு"" எனும் கோட்பாட்டுடனேயே -- இந்த ஒரே வழியிலேயே, 1912-இல் இதே இடத்தில் அப்துல் பஹா உச்சரித்ததாகக் கூறப்படும், நமது புனித வாசகங்களில் தோன்றும் வினோதமானதும் மர்மமானதுமான ஒரு கூற்றை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அன்று நடந்த நிகழ்ச்சியில், நாம் இங்கு கூடியிருக்கும் இந்த மகோன்னதமான கட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியபோது, அவர் வினோதமான ஒன்றைக் கூறினார். அடிக்கல் நாட்டி முடிந்த பிறகு, அங்கு கூடியிருந்த நண்பர்களைப் பார்த்து, "கோவில் எழுப்பப்பட்டுவிட்டது" எனக் கூறினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
"கோவில் எழுப்பப்பட்டுவிட்டது." 1912-இல் இப்போது நாம் காணும் இந்த கட்டிடம் எதுவும் இங்கு இல்லை. அப்போது ஒரு குறிப்பிட்ட கல்லையே இங்கு மண்ணில் பதித்தனர். அதன் பிறகு, "கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது," என அப்துல் பஹா கூறினார். இவ்வித ஒரு கூற்றை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? என்னுடைய நம்பிக்கை, "நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு" எனும் இந்தக் கோட்பாட்டின் வெளிப்பாடே அது என்பதாகும். அப்போது அப்துல் பஹா விளக்கியது, "நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், மற்ற அனைத்தும் சரியாகிவிடும்," என்பதே ஆகும்.
"ஆரம்பியுங்கள், முதல் அடி எடுத்து வையுங்கள், நீங்கள் ஆத்யாத்மீகச் சக்திகளை ஈர்க்கக்கூடும். அது உங்களது முயற்சிகளை மறுபலப்படுத்தும். நீங்கள் மேலும் அதிகமாகக் காரியங்கள் ஆற்றக்கூடும், மேலும் அதிகச் சக்திகளை ஈர்க்கக்கூடும், பிறகு கோவிலும் தோற்றம் பெறும், 1912-இல் நீங்கள் எடுத்துள்ள இந்த முயற்சிகளால் அது கட்டி முடிக்கப்பட்டுள்ளது," என1912-இல் அவர் கூறினார். இதன் அடிப்படையிலேயே, ஆன்மீக மயப்படுதலின் செயற்பாட்டிற்கு இன்றியமையாத இந்த "நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு" எனும் கோட்பாட்டை நான் காண்கின்றேன்.
நான் ஏற்கனவே கூறியது போல், ஆன்மீக மயப்படுதலுக்கான செயற்பாட்டை ஒட்டி மூன்று கோட்பாடுகள் இயங்குகின்றன. அதாவது, முதலாவதாக காந்தம் போல் இயங்கி ஆன்மீகச் சக்திகளை ஈர்ப்பது. அடுத்தது, "நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு" எனும் கோட்பாட்டிற்கிணங்க செயற்பட்டு மேலும் அதிகமான சக்திகளை ஈர்த்தும், அதன்மூலம் அச் சக்திகள் அத் தருணந் தொட்டு மேலும் அதிகமாகக் குவியத் தொடங்குவதும் ஆகும். இவ்விரண்டு கோட்பாடுகள் மட்டுமே வாழ்க்கையில் இருந்திருந்தால் அது எவ்வளவு சுலபமாக இருந்திருக்கும். ஆனால், இவ்விரண்டுக் கோட்பாடுகளோடு சேர்ந்து மூன்றாவதாகவும் ஒரு கோட்பாடு உள்ளது என மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்த மூன்றாவது கோட்பாடு சோதனைகள் பற்றியதாக உள்ளது.
சோதனை தவிர்க்க முடியாத ஒன்று. சோதனை நாடகப் பாணியை உட்படுத்துவது. நமது தனி மற்றும் கூட்டு வாழ்க்கையில் அது வெற்றிக்கும் தோல்விக்குமான தோற்றுவாய் ஆகும். ஆனால் நாம் முயற்சிகள் எடுத்திடும் போது, ஆன்மீகச் சக்திகளை ஈர்த்திடும் போது, நமது சக்திகளை மேம்படுத்திக்கொள்ளும் போது, நாம் சோதனைக்கு உட்படுத்தப் படுகிறோம்.
நாம் மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றோம். சோதனைகள் ஆன்மீக மேம்பாட்டுடன் இணைந்தே வருவன என நாம் அறிவிக்கப்ப்டடுள்ளோம். இரண்டுக் கோட்பாடுகள் அல்ல ஆனால் மூன்று உள்ளன. மூன்றாவது கோட்பாடு சோதனைகள் பற்றியது.
துன்பங்கள், குழப்பங்கள், இழிநிலை, ஆகியவற்றின் போது அவற்றிற்குத் தேவையான மனவலிமை, சக்திகள் மற்றும் உறுதி, இருக்கின்றதா, அல்லது அவற்றால் ஏற்படக் கூடியச் சிரமங்களிலிருந்தும், எடுக்கப்பட வேண்டிய முயற்சிகளிலினால் ஆயாசப்பட்டு ஒதுங்கியும் போகின்றோமா என்பது குறித்தே நாம் சோதிக்கப்படுகிறோம்.
அதை விவரிக்கும் போது, சோதனைகளை உட்படுத்தும் இந்தச் செயற்பாடு மிகவும் அவசியமான ஒன்றெனவும், ஆக ஆன்மீக சக்திகள் தூண்டப்படவும், நாம் வளரவும், மேம்பாடடையவும், மேலும் சோதனைகள் இறைவனின் வெகுமதிகள் எனவும் பாதுகாவலர் அவர்கள் கூறுகின்றார். அதே வேளையில், சோதனைகள் தாமாகவே கடக்கப்படுவதில்லை என்பது குறித்தும் நாம் உஷாராக இருக்க வேண்டும். நாம் சோதிக்கப்படும் போது, நாம் மெய்யன்பர்கள் என்ற நிலை அந்த சோதனைகளை நாம் வெற்றிகொள்வோம் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை. நமது சமயச் சரித்திரத்திலிருந்து பலர் சோதனைகளை வெற்றி கொண்டுள்ளனர் வேறு பலர் அவற்றில் தோல்வியுற்றும் உள்ளனர் என்பதை நாம் அடுத்தடுத்துக் காண்கின்றோம். அதே சமயம் இறைவனின் சமயம் அதன் ஒளிமிக்க இலக்கை நோக்கி பீடு நடை போட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
"சிந்தனா சோதனைகள்" என்பதே இன்றிரவு நான் பேசவிருப்பதின் கருப்பொருள். முதலாவது சிந்தான சோதனை என்பது லௌகீகங்கள் மிகுந்த சூழ்நிலையில் ஆன்மீக மேம்பாடடைய முயற்சி செய்வது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். இதைச் செய்வதற்கு முன்பாக நம்மைத் தாக்கக் கூடிய அபாயங்களை நாம் ஆராய வேண்டும்.
பக்தியோடு செய்யக்கூடியக் காரியங்கள், மற்றும் நமது சமயத்தின் அதி உயரிய நெறிமுறைகள் மற்றும் நீதிமுறைகள் குறித்த செயல்களில் மிகுந்த உறுதியுடன் ஈடுபட நம்மை அர்ப்பணிக்க வேண்டியது மிகவும் அவசியம். நாம் தெளிவாகவும் உறுதியாகவும் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில், நம்மைச் சுற்றிலும் உள்ள அமெரிக்க சமூகத்தால் முன்மாதிரிகள் என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விஷயங்கள், பஹாய்கள் எனும் முறையில் நாம் ஏற்றுக் கொண்டுள்ளவற்றிற்குப் பல வகைககளில் முற்றிலும் எதிர்மாறானவை.
சிறுமைப்படுத்தும் நோக்கத்துடன் நாம் இங்கு கூடியிருக்கவில்லை. இறைவனை நோக்கிய நமது பாதையைக் கண்டுகொள்ள, மனிதகுலம் அனைத்தும் பெரும் குழப்பங்கள், சோதனைகள், சிரமங்கள் மற்றும் துன்பங்களால் சூழப்பட்டுள்ள இந்த நேரத்தில் நாம் முன் நோக்கிச் செல்லத் தேவைப்படும் நமது பாதையை அறிந்து கொள்ளும் நோக்கத்துடனேயே நாம் கூடியுள்ளோம். அதை, பஹாவுல்லாவின் பாதையை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம் எனும் முழுமையான அறிவுடனேயே செய்யப்போகின்றோம் -- பஹாவுல்லாவின் பாதையானது நம்மைச் சூழ்ந்துள்ள சமூகத்தினின்றும் பல வழிகளில் மிகத் தெளிவாக மாறுபட்ட ஒன்றாக உள்ளது.
ஒரே உதாரணத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்: பஹாய்களின் நெறி தவறா வாழ்விற்குரிய இன்றியமையாத, 'கற்புடைமை' குறித்த நமது கோட்பாடாகப்பட்டது, உடலுறவு என்பது, ஒரு திருமணமான ஆண் பெண் இருபாலருக்கிடையில் மட்டுமே நிகழ அனுமதிக்கின்றது. இதுவே நமது முன்மாதிரி. நாம் வாழும் இந்தச் சமூகத்தின் முன்மாதிரி அல்ல அது. ஒரு சில இடங்களில் இதை "ஓரினக் காதல் எதிர்ப்பு" என வர்ணிப்பர். இது பல வகைகளாகவும் வர்ணிக்கப்படுகின்றது. எது எப்படியாகிலும் இதுவே நமது முன்மாதிரியாக உள்ளது. இதைத்தான் நமது சமயம் நமக்கு அறிவுறுத்துகின்றது. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் அதற்குத் தக வாழ்கின்றதோ இல்லையோ, பஹாவுல்லாவின் விதிகளைப் பின்பற்றிச் செல்லக்கூடிய ஒரு பாதையில் நடப்பதற்கு நாம் நம்மை உட்படுத்திக் கொண்டுள்ளோம்.
குறிப்பிட்ட சில கோட்பாடுகளின் வாயிலாக நம்மைச் சுற்றியுள்ளவர்களிலிருந்து நாம் வேறுபட்டவர்களாக இருக்கின்றோம். உதாரணமாக, கடமை எனும் கோட்பாட்டில் நாம் வேறுபட்டவர்கள். இந்த "கடமை" எனும் வார்த்தை, மக்கள் நடுவில் மிகவும் பிரபலம் குறைந்துள்ள ஒரு வார்த்தை. ஆனாலும் நாம் கடமை மிகுந்த மக்கள். செய்யவேண்டும் எனும் இச்சை கொண்டிராத காரியங்களையும் நாம் கடமையுணர்வால் ஆற்றுகின்றோம். நாம் சிரமமான செயல்களில், ஆயாசமிக்கச் செயல்களில், கவனம் செலுத்த முடியாத செயல்களில் ஈடுபடும் மக்களாவோம். ஏன்? உயிர்த்தியாகத்தை இச்சித்து அல்ல, ஆனால் ஒரு கடமை உணர்வுடனேயே இவற்றைச் செய்கின்றோம்.
பஹாய்களாகிய நாம் கடமை உணர்வு மிக்க மக்கள். நாம் கட்டுப்பாடுள்ள மனிதர்கள். நாம் பொறுப்பு மிக்க மனிதர்கள். நாம் நேர்மை மற்றும் நம்பத்தகுந்தமை போன்ற குணங்களை மதித்து வணங்கும் மக்களாவோம். லௌகீகமான ஒரு சுற்றுச் சூழ்நிலையில் ஆன்மீகப் பயிற்சியில் வெற்றி பெற வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.
யாவற்றுக்கும் மேலாக, நமக்குத் துணிவு தேவைப்படுகின்றது -- விடாமுயற்சி கொண்டவர்களாக, நம்மை ஆன்மீக மயப்படுத்திக் கொள்வதில் விடாப்பிடியாக இருப்பவர்களாக, வேறு சிந்தனைகள் இல்லாமல், நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களின் சக்திகள் மற்றும் செல்வாக்கில் கவனம் இன்றி வித்தியாசமானவர்களாக இருக்கத் தேவைப்படும் துணிவு மற்றும் மன இசைவு நமக்குத் தேவைப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்காவில் இந்த இரண்டாவது சோதனை நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கின்றது என்பது என் எண்ணம். இது மனிதகுலத்தின் வருங்காலம் மற்றும் மாறிக்கொண்டு வரும் ஒர் உலகம் குறித்த விசார சிந்தனை உள்ள, கடமையுணர்வு மிக்க மனிதர்களாக நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வதற்காக நமக்கு ஏற்படும் சோதனைகள். இறைவனின் சமயம் இவ்விதமான கடமையுணர்வு மிக்க மனிதர்களை மேலும் மேலும் வேண்டுகின்றது.
தமது விண்ணேற்றத்திற்கு அருகாமயை்ல் பாதுகாவலரால் எழுதப்பட்ட ஒரு வாசகப் பகுதியில், அமெரிக்காவின் வருங்காலம் பற்றி அவர் குறிப்பிடுகின்றார். அமெரிக்காவின் வருங்காலத்தின் ஒரு பகுதியாக இருக்கக் கூடிய ஒன்றைப் பற்றி அங்கு அவர் குறிப்பிட்டுள்ளது சமீப காலங்களில் என் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்போது அவர், அமெரிக்க பஹாய்கள் வருங்காலத்தில் ஒரு சவாலை எதிர்நோக்குவர் என கூறினார். அது எத்தகைய சவால்? "பற்றுறுதிக்கான அரண்" எனும் நூலில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், அமெரிக்க அன்பர்கள் எதிர்கொள்ள வேண்டிய பல சவால்களைப் பற்றிப் பாதுகாவலர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ஒன்று, "வருங்காலத்தில் அவர்களது ஆன்மீக மனோசக்திகளை அக்கறையின்மையும் ஊக்கமின்மையும் நிலைகுத்திடச் செய்துவிடும்" என்பதாகும்.
இன்று நாம் அந்தச் சோதனையை எதிர்நோக்குகின்றோம் -- அதாவது, அக்கறையின்மையையும் ஊக்கமின்மையையும் வெற்றி கொள்ள வேண்டியதற்கான ஒரு சோதனை. நம்மைச் சுற்றியுள்ளவர்கள், அதிகரித்த அளவில் உலகினை மாற்றிடுவதற்கு ஆர்வமும், கொள்கைகளும், உணர்வெழுச்சியும் இன்றி உள்ளது நமக்குச் சோதனையாக உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் தனதுத் தூரநோக்கை இழந்து விட்டது. அது வீரர்களும் வீராங்கனைகளும் இன்றி இருக்கின்றது. அவர்கள் மதிப்பிழந்துள்ளனர். அவர்களுடைய இரகசியங்கள் எழுத்து பூர்வமாக அம்பலமாகிவிட்டன. அவர்கள் பயங்கொள்ளிகள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. வீர நாயகர்கள் கிடையா. வீர நாயகிகள் கிடையா. தூர நோக்கும் கிடையாது.
வேறெவரும் தன் மீது அக்கறை கொள்ளாத நிலையில் தன் மீது தானே முழு அக்கறை கொண்டு அன்றாடங் காய்ச்சி என்ற நிலையில் காலம் போய்க்கொண்டுள்ளது. வாழ வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும். வெளியே இருப்பது இரக்கமற்ற கொடூரமான உலகம்.
நாம் வெளியே காண்பது பஹாய் முறை அல்லவே! நாம் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் கண்டுண்டு உள்ளவர்களாயிற்றே! நாம் வைரியச் செயல்கள் புரிந்திட ஆணையிடப் பட்டுள்ளோம். நாம் தியாகங்கள் புரிந்திட ஆணையிடப்பட்டுள்ளோம். நாம் சித்தாந்தக் கொள்கைகளும் பொதுநல உணர்வும் கொண்டிட ஆனையிடப்பட்டுள்ளோம். நாம் ஒரு புதிய சமுதாயத்தை, ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கும் மக்கள். இன்னும் பிறந்திடாத பல தலைமுறையினரைப் பற்றி அன்புக் கொண்டும் அக்கறைக் கொண்டும் உள்ள மக்கள் நாம். வரக்கூடிய தசாப்தங்களில், நூற்றாண்டுகளில் தோன்றிடக்கூடிய அத்தலைமுறையினருக்கு இதை விட நல்ல வாழ்வு அமைந்திட, அமைதியும், ஒற்றுமையும், இணக்கமும், அவர்களது முழு இயற்சக்திகளும் மேம்பாடு கண்டிடுவதற்கான வாய்ப்பும் பெற்றிட, நமது வாழ்க்கையை நாம் அர்ப்பணிக்கக் காத்திருக்கின்றோம்.
இச் சித்தாந்தத்தின்பாலே நாம் பஹாய்கள் என்ற முறையில் ஆணையிடப்பட்டுள்ளோம். சமுதாயத்தின் இந்த அக்கறையின்மை மற்றும் ஊக்கமின்மையை அகற்றி ஒரு புதிய உலகத்தை ஸ்தாபிப்பதில் அர்ப்பண உணர்வுடன் செயல்படுபவர்களெனும் தனிச் சிறப்புடன் நாம் திகழ வேண்டும்.
இது எதைக் குறிக்கின்றது? இதை நாம் எப்படி அடைவது? இது எப்படி ஏற்படப் போகின்றது? நம்பிக்கையாளர்கள் என்ற முறையில், நமக்கு, மனிதகுலத்தின் விமோசனத்தில் சமயத்தின் பங்கு பற்றி ஓர் ஆழமான புரிந்து கொள்ளல் தேவைப்படுகிறது என்பது என் அபிப்ராயம்.
பலவிதமான மதங்கள் நிறைந்து கிடக்கின்ற உலகத்தில் நாம் மேலும் ஒரு புதிய சமயத்தைப் பரப்பி நிலைமையை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கவில்லை. மனிதகுலத்தின் பலசமய சமூகத்தினரிடையே நாம் பலத்தைப் பிரயோகித்துப் பிரவேசித்திட முயற்சிக்கவில்லை. உலகம் முழுவதும் பரவியுள்ள சமயம் எனும் பெயருடன் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தில் இடம் பிடித்திட்டதோடு நாம் மனத்திருப்தி கொள்ளவில்லை. தேசியச் சபைகள், உள்ளூர் சபைகள், மதிப்புமிக்க நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களை கண்ணுக்குக் குளிர்ச்சியாக வரிசைப்படுத்துவதில் மட்டும் நாம் திருப்தியடையவில்லை. நமது சமயம் "எல்லாக் காலங்களிலும் வாக்களிக்கப்பட்டவரது" சமயம். ஏட்டில் உள்ள, ஆயிரம் ஆயிரம் வருடங்களான சரித்திரக் காலம் முழுதும் காணப்படும், சிரமங்கள் மற்றும் குழப்பங்கள், துன்பங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு தோன்றியுள்ள, உலகத்தை இரட்சிக்க வந்தவரது சமயமே நமது சமயம்.
மனித நாகரிக வரலாற்றில் ஒரு திருப்பு முனையில், பஹாய்கள் என்ற முறையில், பெரும் சிரமத்துடனும் துன்பத்துடனும் இப்போது ஒரே ஐக்கியப்படுத்தப்பட்ட பொருளாக அச்சில் வார்க்கப்படும் மனிதகுலத்தின் சரீரத்தில் புத்துணர்வை ஊட்டிவிடக்கூடியக் கருவிகளாக, நாம் நிற்கின்றோம்.
தற்போதைய உலக நீதி மன்ற அங்கக்தினர் எனும் எனது நிலையில், எவ்வித விதிகளின் கட்டுப்பாடும் இன்றி, பாதுகாவலரின் எழுத்துக்களில் தோன்றும் ஒரு குறிப்பைப் பற்றிச் சில நேரங்களில் நான் சிந்தித்தது உண்டு. இப்படியும் அல்லது அப்படியும் இருக்கலாம் எனும் சந்தேக மொழி இன்றி திண்மையாகத் தோன்றும் வாசகம் அது.
அந்த வாக்கியத்தில், பாதுகாவலர், நான் அங்கத்தினராக இருக்கும் அந்த உலக நீதி மன்றத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். "இந்த மன்றமாகப் பட்டது, தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் கடைசிப் புகலிடமாக வருங்காலச் சந்ததியினர் கருதப்போகும் ஒன்று," எனக் கூறுகின்றார். அப்பகுதியை நான் படிக்கும்போது, "மனிதகுலத்தின் வருங்காலத்தைப் பற்றி இது எதைக் குறிக்கின்றது?" என நான் என்னையே கேட்டுக் கொண்டேன். உலக நீதி மன்றத்தின் இருக்கையின் வாரியக் கூடத்தில் அமர்ந்தவாறு, மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எனது சக அங்கத்தினர்களைப் பார்க்கும் போது, நாங்கள் ஒன்பது பேரும் இந்த நீதி மன்றம் அல்ல என்பதைப் புரிந்து கொள்வேன். இந்த அதிவுயர்ந்தச் சிறப்பு வாய்ந்த ஆன்மீகத் திருவுருவின் அகத் தோற்றமாக விளங்கும் வலுக்குறைந்தச் சக்தியற்ற மனிதர்களே நாங்கள் என்பதை உணர்வேன்.
ஆனால் பல வருடங்களாக நான் ஓரளவுக்குப் பரீட்சயப்பட்டுள்ள, இந்த ஸ்தாபனம், இந்த உலக நீதி மன்றம், பாதுகாவலரின் நிச்சயமான, ஆணித்தரமான, சந்தேகத்திற்கு இடமற்ற வார்த்தைகளில் "தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் கடைசிப் புகலிடமாக வருங்காலச் சந்ததியினர் கருதப்போகும் ஒன்று." என நான் எனக்கே கூறிக் கொள்வேன். மனிதகுலம் எதிர்நோக்கக்கூடிய, வரப் போகும் மாபெரும் மாற்றங்களைக் குறிக்கும் ஒரு பகுதியாக இந்தப் பகுதியை நான் உங்களுக்கு அளிக்கின்றேன்.
எப்போது வருவார்கள் -- எந்தத் தசாப்தத்தில், எந்த நூற்றாண்டில் -- என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவ்ரகள் கண்டிப்பாக வருவார்கள் என்பது நமக்குத் தெரியும் -- நாமெல்லோரும் அங்கத்தினர்களாக இருக்கும் இந்த சமயம் இந்த உலகத்தில் மனிதகுலத்தின் சரித்திரத்தில் புரட்சிகரமான நிலையில் ஒரு பெரும் தன்மை மாற்றச் சக்தியாக செயல்படப் போகின்றது.
மனித அறிவிற்கு அப்பாற்பட்ட நோக்கங்களான, நாம் நம்பிக்கை கொண்டுள்ள, பஹாவுல்லாவுக்கும் அவரது வெளிப்பாட்டிற்கும் ஜீவனளிக்கும் அந்த இறைவனின் சக்தியின் மூலமே தோன்றிட்ட நோக்கங்களான சமயத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் ஆகியவற்றின் பரிமாணம் குறித்த ஒரு அகக்காட்சியை நாம் நமது மனதில் மறு உருவகப்படுத்த முடியுமானால் -- நாம் அதைச் செய்யக் கூடுமானால் -- நாம் அந்த அகக்காட்சியை மறு உருவகப்படுத்தக் கூடும் -- இந்த தலைமுறையிலும், இன்னும் பிறந்திடாத வரக்கூடிய எண்ணிக்கையற்றத் தலைமுறையினரின் நல்வாழ்வுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மனிதர்களும் ஆவோம் நாம்.
இறுதியாக, நான் இன்றிரவு உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பிய அந்த மூன்றாவது சிந்தனா சோதனையைத் தொட்டுப் பேசவிருக்கிறேன். உலகின் பல பாகங்களில் பஹாய் சகோதரர்கள் அனுபவிக்கும் ஒரு சவாலும் சோதனையும் ஆகும் அது. நான் இங்கு அமெரிக்க பஹாய்கள் என்ற முறையிலேயே எனது கருத்துக்களை உங்களுக்கு வெளியிடுகின்றேன், ஆனால் நான் சமீபத்தில் விஜயம் செய்திருந்த மற்ற பல நாடுகளிலும் இதே விதமான குறிப்புகளைத்தான் நான் வெளியிட்டுள்ளேன்.
என் கவலையெல்லாம் -- மேற்கு நாடுகளையும், உலகின் பிற பகுதிகளைச் சார்ந்த நாடுகளையும் தாக்கும் ஆபத்தானதும் நெருக்கடியானதுமென நான் கருதும் -- சமூக அமைப்புகள் மற்றும் ஸ்தாபனங்கள் பற்றி சில மனப்பான்மைகளை உருவாக்கிக் கொண்டுள்ள இந்த நாடுகளைச் சார்ந்த நம்பிக்கையாளர்கள் தொட்ட சிந்தனா சோதனையே.
முதலாவதாக, மக்கள் தங்களது அரசாங்கம் மற்றும் அரசியலாட்சி முறை குறித்து சந்தேக மனப்பான்மையும் நம்பிக்கையின்மையும் கொண்டுள்ளனர். தங்களது அரசியல் தலைவர்கள் ஊழல் மிக்கவர்கள் என்பதையும் அவர்களது சமூக அமைப்பின் அரசியல் முறை அவர்களைத் திக்கு முக்காடச் செய்தும், அவர்களது சுதந்திரத்தை வெகுவாகக் குறைத்தும், பல வழிகளில் அவர்களது துன்பங்களுக்குக் காரணமாக அது விளங்குவதையும், கொடுமையான அனுபவங்களினூடே இவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
இன்றைய மக்கள் தாங்கள் ஒரே சமூகத்தினர் எனும் உணர்வைக் கொண்டிருக்கவில்லை. நேர்மையானவர்களாகவும், உயர் பண்புகளை உடையவர்களாகவும், நன்னடத்தையுடையவர்களாகவும் தோன்றுபவர்களை நம்பக்கூடாது என்பதைக் கசப்பான அனுபவங்கள் மூலம் கண்டு கொண்டுள்ளனர், ஏனெனில் அத்தகையத் தோற்றம் தந்தவர்கள் பிறகு அதற்கு நேர்மாறாக விளங்கியதே இதற்கு காரணம் ஆகும். ஆகவே, இவர்கள் மாற்ற இயலா தன்னிச்சைத் தன்மையை வளர்த்தும், கட்டுப்பாடற்ற தனி மனித சுதந்திரத்தைப் பூஜிப்பவர்களாகவும் ஆகிவிட்டனர்.
நமது சமூகத்திலுள்ள மக்கள் தங்களை ஆள்பவர்களைப் பொறுத்த மட்டில் தாங்கள் ஒரு சக்தியற்ற நிலையில் இருப்பதையே அதிகரித்த அளவில் உணர்ந்து வருகின்றனர். தாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கப் படாதவர்களாகவும், நடப்பு ஆட்சி முறையை மாற்ற முடியாத நிலையில் இருப்பவர்களாகவும், அதன் கொடுமையான எதிர்மாறான விளைவுகளை உருவாக்கும் சூழ்நிலைகளையும் பின்விளைவுகளையும் அனுபவிக்க வேண்டியத் தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளவர்களாகவும் தங்களைக் காண்கின்றனர். ஆகவே, அவர்கள் நடப்பு ஆட்சி முறைக்கு எதிராகச் செயல்பட ஆரம்பிக்கின்றனர்; அவர்கள் பயங்கரவாதிகளாகின்றனர்; அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டுச் செயல்பட ஆரம்பிக்கின்றனர்; ஆட்சி முறையைக் கவிழ்க்க முயல்கின்றனர்; அதன் அழிவை நாடுகின்றனர்; தற்போது இருப்பதை விட வேறெதுவுமே நல்லதாகத்தான் இருக்க வேண்டும் என, ஒரு விதத்தில் உண்மையாகவே உள்ளதை, கூறுகின்றனர்
இவையே நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் அதிகரித்து வரும் மனப்பான்மைகள். பஹாவுல்லா அரசர்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும் அனுப்பிய தமது நிருபங்களில் இவற்றைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். "நெருக்கடியான மாற்றங்கள் நிகழும் காலம்" என பாதுகாவலரால் அழைக்கப்பட்ட இக்காலத்தின் சமூகத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி அவர் விரிவாகவே விவரித்துள்ளார். அது இப்போது நம்மைச் சமீபித்துவிட்டது. நம் சமூகத்தில் உள்ள மக்கள் அதற்கான மனப்பான்மைகளை வளர்த்துக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி அவர்களை நாம் கேட்டால் அதற்கு அவர்கள் நிறையவே நியாயங்கள் கூறுவர். நம்பிக்கையாளர்களாகிய நாம் எதிர்நோக்கக் கூடிய பெரும் சிந்தனா சோதனை, நமக்கே தெரியாமலும், அறியாமலும், கண்கூடாகவே தேய்ந்துக் கொண்டிருக்கும் சமூகத்தின் அத்தகைய மனப்பான்மைகளைப் பஹாய் நிர்வாக முறையினுள் புகுத்தி விடக் கூடியதே ஆகும்.
இது நமக்கான சோதனை. ஏனென்றால், நமக்குத் தெரியாத நிலையிலும் கூட அவற்றை நம்மோடு நாம் கொண்டு வந்தோமேயானால், பஹாவுல்லாவால் விதிக்கப்பட்டுள்ள நிர்வாக முறையை அது தகர்த்தும் சேதப்படுத்தியும் விடும்.
பாதுகாவலர் இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார். "நமது தற்போதைய தலைமுறையினர், பெரும்பாலும் நிர்வாக அமைப்புகளோடு ஒப்பிடப்பட்டுள்ள ஊழல்களினால், எந்த ஒரு ஸ்தாபனத்திற்கும் எதிர்ப்பு அளிப்பதாகவே தோன்றுகிறது. ஒரு ஸ்தாபனமெனும் நிலையில் சமயமும் இடித்துரைக்கப்படுகிறது. ஒரு ஸ்தாபனமெனும் நிலையில் அரசாங்கமும் இடித்துரைக்கப் படுகிறது. ஒரு ஸ்தாபனமெனும் நிலையில் திருமணமும் கூட இடித்துரைக்கப்படுகிறது."
பஹாய்களாகிய நாம் நடப்பில் உள்ள இத்தகையச் சிந்தனைகளினால் பாதை தவறி விடக்கூடாது. அவை அவ்வாறாக இருந்திருக்குமாயின், இறை அவதாரங்கள் தங்களுக்குப் பின் தமது பணியினைத் தொடர வேறு ஒருவரை நியமித்திருக்க மாட்டார்கள். அந்த ஸ்தாபனங்களை ஊழல்கள் ஊடுருவியது உண்மையாகவே இருந்திருந்தாலும், அத்தகைய சீர்கேடுகள் அந்த அந்த ஸ்தாபனங்களின் அமைப்பினால் ஏற்படவில்லை, மாறாக, அவற்றுக்கு உள்ள அதிகாரம் மற்றும் தொடர்ந்து அவை செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து அவற்றை மேற்கொண்டு வழிநடத்தும் வழிமுறைகள் இல்லாத காரணத்தினால் அவை சீர்குலைந்து போயின. பாதுகாவலர் கூறுவது: "பஹாவுல்லா எல்லா ஸ்தாபனங்களையும் சமயத்தில் இருந்து நீக்கிவிட வில்லை, மாறாக கடந்தக் கால ஸ்தாபனங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கிய சீர்கேடுகளைத் துடைத்தொழிக்கக்கூடிய பாதுகாப்புக் கவசங்களை அளித்துள்ளார்." என்பதாகும். அத்தகையக் கவசங்கள் யாவை என்பதைக் கண்டு கொள்வதும் கற்பதும் மிகவும் ஆர்வமளிக்கக்கூடியதாகவும், அவற்றை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகவும் உள்ளது.
வேறு வார்த்தைகளில் கூறப்போனால், நம்மைப் பற்றறுத்து, இக்காலத்தில் ஸ்தாபனங்கள்பால் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கைளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே நமக்களிக்கப்பட்டுள்ள சவாலாகும். பார்க்கப் போனால் இந்த அவநம்பிக்கையாகப்பட்டது, வழக்கில் இருப்பதோடு, துரிதமாக வளர்ந்தும் வருகின்றது. அதோடு, தங்களது நிர்வாக ஸ்தாபனங்கள்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துரிதமாக வளர்ந்து வரும் அந்த நம்பிக்கையின்மை மற்றும் ஆதரவின்மை ஆகியவற்றிலிருந்தும் பஹாய்கள் தங்களை விடுவித்துக் கொண்டு, தங்களது பஹாய் ஸ்தாபனங்களோடு தங்களுக்கு உள்ள உறவை பாதிக்கக் கூடிய அளவிற்கு அத்தகைய மனப்பான்மைகளை வளரவிடவும் கூடாது.
அவை இரண்டும் ஒன்றல்ல. அவை முற்றாக மாறுபட்டவை. நமது ஸ்தாபனங்கள் இறைவனால் உருவாக்கப்பட்டவை, அவரது அவதாரத்தால் உருவாக்கப்பட்டவை. அவற்றுக்குப் பண்புக்கூறுகள் உள்ளன. சீரழிக்கக்கூடிய மனப்பான்மைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றிலிருந்து தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ள அதற்கு உதவக்கூடிய, அதனோடு இணைந்து வந்துள்ள ஒரு வழிமுறை அதற்கு உண்டு. உலக வழிகளிலிருந்து அது முற்றாக மாறுபட்டு உள்ளது. நமது பஹாய் நிர்வாக முறைக்குள் கறைபடிந்த உலக முறைகளைப் புகுத்துவோமேயானால், அதிகபட்சம் அதைத் தற்காலிகமாக ஸ்தம்பிக்கச் செய்வோம். அவ்வளவுதான். ஆனால், நம்முடைய சுய ஆன்மீக வளச்சியினைப் பொறுத்தமட்டில், அதை ஈடுசெய்ய முடியாத அளவிற்குக் கெடுத்துக் கொள்வோம்.
நாம் புதிய மனப்பான்மைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் ஒப்பந்தத்தின்பால் ஓர் ஆழமான புரிந்துகொள்ளலை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். "நான் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்கிறேன்" என விண்ணப்ப அட்டையில் கையொப்பம் இட்டால் மட்டும் போதாது. பலவித விருதுகளைத் தாங்கிய மக்கள் பலர் நம்மைச் சுற்றி உள்ளனர். அவர்கள் யாராயினும் நான் அவர்களை ஏற்றுக் கொள்கிறேன். நல்லது, அவ்வளவுதான். அப்படியா? இல்லை! அது போதாது நண்பர்களே!
நமது சமூகத்தில் அடங்கியுள்ள பல ஆபத்தான சக்திகளினால் நாம் அடித்துச் செல்லப்படுவோம். விஷம் போல் சமூகத்தை ஊடுருவக்கூடிய சக்திகள் உள்ளன. நாம் நம்மை இப்போது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நமது அத்தகைய பாதுகாப்புக் கவசம், ஒப்பந்தத்தில் ஓர் ஆழ்நிலை புரிந்துகொள்ளலை உருவாக்கிக் கொள்வதே ஆகும்.
பாதுகாவலரால் எழுதப்பட்ட ஒரு மிக மிகக் கடினமான, சவால் மிக்க வாசகப் பகுதியை உங்களுக்கு வாசித்துக் காட்ட விரும்புகிறேன். நான் உச்சரிக்கவே பயப்படும் சில விஷயங்களை பாதுகாவலர் அதில் குறிப்பிடுகிறார். நான் அவற்றைப் படிப்பதன் காரணம் அவை பாதுகாவலரால் எழுதப்பட்டுள்ளன. நான் பாதுகாப்பாக உள்ளேன். நான் அவற்றைப் படிப்பதற்காக நீங்கள் என்னைக் குற்றம் கூற முடியாது. பாதுகாவலரே எழுதியுள்ளார். உங்கள் முன் நின்று, நான் இப்போது வாசிக்கப் போகும் வாசகங்களில் அடங்கியுள்ள அதே விஷயங்களை எனது சொந்த வார்த்தைகளாக உச்சரிப்பதற்கு எனக்குத் தைரியம் கிடையாது. பாதுகாவலர் கூறுவதாவது: பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகிய இருவரின் ஒப்பந்தங்களைப் பற்றிய அறிவும் மெச்சுதலும் பெறுவதில் அன்பர்கள் ஆழ்படுத்தப் பட வேண்டும். ஒவ்வொரு பஹாயினுடைய மெய்நம்பிக்கையின் அரணும், சமயத்தின் புற எதிரிகளின் சோதனையையும் தாக்குதல்களையும் அவர் தாங்கிக் கொள்ள உதவுவதும் இதுவே." இதுவரை நான் வாசித்தது சிறிது சுலபமாகவே இருக்கின்றது. நானே அதைத் தைரியமாகக் கூறியிருப்பேன். சரி, இப்போது மிகக் கடினமான பகுதிக்கு வருவோம்.
"சமயத்தின் புற எதிரிகளின், மற்றும், அதனினும் மிகவும் ஆபத்தான, விஷமிகளான, அரைமனதுடனான, ஒப்பந்தத்தின்பால் உண்மையான பற்றுதல் இல்லாமல் அதனால் சமயத்தின் பகுத்தறிவிற்கு உட்பட்ட விஷயங்களை மட்டும் ஆதரித்து அதே சமயம் இறைவனின் சமயம் முழுமையும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஆன்மீக அஸ்திவாரத்திற்குச் சமயத்திற்கு உள்ளிருந்தவாறே குழிபறிப்போரின், சோதனையையும் தாக்குதல்களையும் தாங்கிக் கொள்ள உதவுவக்கூடிய ஒவ்வொரு பஹாயினுடைய மெய்நம்பிக்கையின் அரண் இதுவே."
இப்போது தெரிகிறதா, நான் இவ்விஷயங்களை உச்சரிப்பதற்கு ஏன் இவ்வளவு பயந்தேன் என்று? இவை யாவும் பாதுகாவலரின் வார்த்தைகள். ஒப்பந்தத்தில் ஆழ்படுவதன் மூலமாக மட்டுமே, புற எதிரிகளை மட்டும் அல்ல, ஆனால் அவர் குறிப்பிடும், அதிக அபாயகரமான தாக்குதல்களான, விஷமத்தனமாகத் தாக்குதல்களைத் தொடுக்கக்கூடிய, சமயத்தின்பால் ஓர் உண்மையான பற்றுதல் இல்லாமல், சமயத்தின் பகுத்தறிவிற்கு உட்பட்ட விஷயங்களை மட்டும் ஆதரித்து அதன் ஆன்மீக அஸ்திவாரத்திற்குக் குழிபறிக்கும், சமயத்திற்குள் இருக்கும் அரைமனம் கொண்டோரின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியும்.
நண்பர்களே, ஒருவரைக் குறித்து நீதி வழங்கிட நமக்கு உரிமை கிடையாது. தனி நபர்கள் என்ற முறையில் நாம் நீதிபதிகளாக இருக்க முடியாது. இதோ இவர் இருக்கின்றாரே, இவர்தான் அந்த அரைமனம் கொண்ட, பகுத்தறிவு சார்ந்த நம்பிக்கைகளை மட்டும் கொண்டு, ஆன்மீகமானதைக் குழிபறிப்பவருமான நம்பிக்கையாளர்களில் ஒருவர், என நாம் கூறிட முடியாது. அத்தகைய ஒரு சொல்லை உச்சரிப்பதற்கு எனக்கு உரிமை கிடையாது. இந்த அறையிலோ அல்லது இந்த நாட்டிலோ உள்ள ஒருவரைப் பற்றியோ அல்லது நீங்கள் என்னைப் பற்றி அவ்வாறு கூறிடவோ உரிமை கிடையாது.
மனிதர்களைத் தரம் பிரிப்பதற்கோ அல்லது அவர்களது குற்றம் குறித்து நியாயம் வழங்கிடவோ நாம் இங்கு கூடவில்லை. ஆனால் பாதுகாவலர் கூறுவது என்னவென்றால், நமது பஹாய் சமூகம் அத்தகைய மனிதர்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதே ஆகும்! நாம் தரம் பிரித்திருக்கும் அத்தகைய மனிதர்களுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட இங்கு குழுமியிருக்கவில்லை. நாம் இங்கு கூடியிருப்பதன் காரணம் என்னவெனில், நாம் நம்மை ஆன்மீக ரீதியில், ஆரோக்கியப்படுத்திக் கொண்டும், பலப்படுத்திக் கொண்டும், அதன் மூலம் நாம் குறிப்பிட்ட அந்த மனிதர்கள் யாராக இருப்பினும், அவர்கள் எங்கே இருப்பினும், அவர்களைப் பற்றி நியாயம் வழங்காதும், ஆனால் அவர்களுடைய அபாயகரமான, விஷமமான தாக்கங்கள்பால் பாதுகாப்புடன் இருப்பதற்காகவே.
ஆக, நமது வேலை குறைக் கண்டுபிடித்து அதைக் களைவது அல்ல. மனிதர்களைத் தரம் பிரித்து இவர் நல்லவர், அவர் கெட்டவர் எனும் குறிப்புச் சீட்டுகளை அவர்கள் மேல் ஒட்டி விடுவதற்காவும் அல்ல. நமது வேலை, ஆன்மீக ரீதியில் உறுதியடைந்தும், ஆரோக்யமடைந்தும், நமது ஸ்தாபனங்கள் பால் உண்டாகியுள்ள இந்த எதிர்படையான மனப்பான்மைகளைச் சமாளிக்கவும், ஒப்பந்தத்தில் நம்மை ஆழ்படுத்திக் கொண்டும் -- பாதுகாவலர் கூறியுள்ளதை உள்ளது உள்ளபடி கடைபிடிப்பதுமே ஆகும்.
இச்சோதனைகளைச் சந்தித்திடும் வேளை, நமது சமூக அமைப்புக்கள் மற்றும் ஸ்தாபனங்கள்பால் ஒரு புதிய மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளும் அதே வேளை, எதையும் யோசிக்காமல் விமர்சனம் செய்வது குறித்து ஒரு மறு ஆய்வும் நாம் செய்ய வேண்டும். ஆங்காங்கே இந்த விமர்சனங்கள் நடக்கின்றன. நமது பஹாய் புனித வாசகங்களும், இவ்வித விமர்சனமானது, பஹாய் கலந்தாலோசனை மற்றும் சமூகச் செயற்பாடுகள் சார்ந்த அம்சங்களுக்கு உகந்த ஒன்றாகும் என கூறுகின்றன மற்றும் அது குறித்து யாரும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதே வேளை நமது புனித வாசகங்களில், பாதுகாவலர் குறிப்பிட்ட அந்த "குரூரமான மற்றும் எதிர்படையான" விமர்சனங்களின் மிகவும் அபாயகரமான பண்புக்கூறுகள் பற்றியக் குறிப்புகளும் உள்ளன.
"ஒரு சரீரம்(body) என்ற முறையில் ஒரு (பஹாய்) ஸ்தாபனம் குறித்த எதிர்படையான விமர்சனங்களும் விவாதங்களும், திண்ணமாகத் தவிர்க்கப்பட வேண்டும்." பெரும்பாலான மக்கள் இதில் அடங்கியுள்ள வித்தியாசத்தைக் கண்டு கொள்ளும் அளவிற்குப் புத்திசாலிகள் என்றே நான் நினைக்கின்றேன். அதே சமயம் நாம் விதித்துள்ள ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்காமல் எப்படி தவிர்த்துச் செல்வது என்பதிலும் அவர்கள் சாமர்த்தியசாலிகளே. ஏனென்றால், இது வெறும் ஓர் உரையில் அடங்கியுள்ள வார்த்தைகள் குறித்த கேள்வி அல்ல ஆனால் தகுந்த மனப்பான்மை குறித்தக் கேள்வி ஆகும்.
தனது காரியங்கள் மற்றும் நடத்தைக் குறித்து மேம்பாடும் கூர்மையும் அடையத் தேவையில்லை என பாசாங்கு செய்யாத, ஆனால் பாதுகாவலர் கூறுவது போல், ஆன்மீகச் சபையின் அதிகாரத்தைக் குழிபறிக்கும் விளைவினைக் கொண்டிராத எதிர்மாறான விமர்சனங்களிலிருந்து விடுபட்டிருக்கும், உருபெரும், மேம்பாடு காணும் ஒரு பஹாய் சமூகத்தையே நாம் காண விரும்புகிறோம்
நமது பஹாய் சமூகங்கத்தில் ஒரு சில இடங்களில் நடக்கும், விரயம் மிகுந்த, அழிவை ஏற்படுத்தும், எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடக்கூடியச் செயலாக, வரக்கூடிய "பேராபத்து" பற்றிய யூகவாதங்களே உள்ளன. எவ்விதம் நமது நகரங்களின் பலமாடிக் கட்டிடங்கள் அப்படியே பொசுங்கிப் போகப் போகின்றன, மற்றும், இந்த அமெரிக்க நாட்டின் கரையோரங்களில் எப்படி எதிரி நீர்மூழ்கிகள் சூழ்ந்து நிற்கப் போகின்றன எனும் மிகவும் பிரமிப்பு ஏற்படுத்தும் விஷயங்களை நீங்கள் முன்பு பல வேளைகளில் செவிமடுத்திருப்பீர்கள். இந்தப் "பேராபத்து" எவ்விதமாக நிகழப் போகின்றது என்பது நமக்குத் தெரியாது என பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி -- ஒரு வாசகப் பகுதியில் -- இவ்விதமான பகுதிகள் பல உள்ளன -- கூறியுள்ளார். இப்போது இங்கு நிகழ்வதும் அந்தப் "பேராபத்துதானே!" இப்போது நிகழ்வதே பேராபத்து என பாதுகாவலர் கூறும் ஒரு பகுதி உள்ளது, நானும் அதை இப்போது உங்களுக்கு வாசித்துக் காட்டப் போகின்றேன். இறுதியில் அந்தப் பகுதியை நாம் கண்டுபிடித்து விட்டோம். சரி. பாதுகாவலர் சார்பாக எழுதப்பட்ட, டிசம்பர் 18, 1949 என திகதியிடப்பட்ட, ஜூலை 1950 அமெரிக்க பஹாய் செய்தியில் பிரசுரிக்கப்பட்ட கடிதம் அது. அதில் பாதுகாவலர் என்ன கூறுகிறார்? அதில் அவர் இந்த "பேராபத்தை" வரையறுக்கின்றார்.
அவர் கூறுவது: "குரூரமான விமர்சனம் நிச்சயமாக ஒரு "பேராபத்தே" ஆகும், ஆனால், பஹாவுல்லாவின் அமைப்பு முறையில் (அதாவது நிர்வாக அமைப்பு முறை) நம்பிக்கையின்மையும் அவருக்குக் கீழ்படியாதிருப்பதிலும் -- அவர் அதை தடுத்துள்ளார் -- அதன் (குரூரமான விமர்சனத்தின்) ஆணி வேர் அமைந்து உள்ளது. வாக்களிப்புச் (பஹாய் தேர்தல்) சம்பந்தமான, தேர்ந்தெடுப்பதில், சபையின் முடிவுகளுக்குக் கீழ்படிவது, போன்றவற்றில் பஹாய் விதிமுறைகளைப் பஹாய்கள் கடைபிடிப்பார்களேயானால், பிறரை விமர்சித்துக் கொண்டிருப்பதில் வீணாக்கப்படும் சக்திகள் கூட்டுறவுச் செயல்களின்பால் திருப்பி விடப்படலாம்."
ஆக, சமூக அமைப்புகளின்பால் ஒரு புதிய மனப்பான்மையை உண்டாக்கிக் கொள்ளப்பட வேண்டியதின் ஒரு கூறாக திருவொப்பந்தத்தில் ஆழ்படுதல் உள்ளது. இரண்டாவதாக, விமர்சனங்கள் செய்வது குறித்து மாற்று சிந்தனை செய்ய வேண்டி உள்ளது, ஏனென்றால், தகுந்த முறைகளில் விமர்சனம் செய்வது பஹாய் கலந்தாலோசிப்பின் ஒரு கட்டுமானக் கூறாக உள்ளது. மூன்றாவது கூறும், இறுதியானதுமான, நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது மிகவும் புரட்சிகரமான ஒன்று. அது, பெரும் எண்ணிக்கையிலான நம்பிக்கையாளர்களைச் சமயத்திற்குள் கொண்டுவரத் தேவைப் படும் வரைமுறைகளை வரையறுக்குமாறு பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டது தொட்ட ஒரு வாக்குமூலம். அவர் நான்கு வரையறைகளை முன்வைத்தார்: அந்த நான்கில் மூன்று வெளிப்படையானவை, ஆனால் நான்காவது மிகவும் அசாதாரணமானது. இந்த நான்கு வரையறைகளும் இன்றி சமயத்திற்குப் பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்த்திடவே முடியாது என அவர் கூறியுள்ளார்.
பஹாவுல்லாவின்பாலும் அவரது சமயத்தின்பாலும், அதன் ஸ்தாபனங்களின்பாலும், மற்றும் நம்பிக்கையாளர்கள் ஒருவர்பால் ஒருவர் கொள்ளும், அந்த உண்மையான அன்பில் விளையும் அந்த உற்சாகமின்றி." முதல் மூன்றும் தெளிவாக உள்ள வரையறைகள் ஆகும் ஆனால் நான்காவது அப்படி இல்லை.
பஹாவுல்லாவின்பால் நம்பிக்கையாளர்கள் உண்மையான அன்பு வைத்திருப்பார்கள் என்பது இயற்கையான எதிர்பார்ப்பு. அவரது சமயத்தையும் அவ்வாறே நேசிப்பார்கள் எனவும் எதிர்ப்பார்ப்போம். அதுபோன்றே, அன்பர்கள் ஒருவர்பால் ஒருவர் இயற்கையிலேயே அன்பு கொள்வார்கள், எனவும் எதிர்பார்ப்போம்.
ஆனால், பெரும் எண்ணிக்கையிலான மக்களைச் சமயத்தின்பால் ஈர்த்திட சமய நிர்வாக ஸ்தாபனங்கள்பால் ஓர் அன்புணர்வை, உண்மையான அன்புணர்வை நாம் உருவாக்கிக் கொள்வதைப் பாதுகாவலர் அந்த நான்கு வரைமுறைகளில் ஒன்றாக வரையறுத்துள்ளார். இது பஹாய்த் திருவெளிப்பாட்டின் ஒரு திடுக்கிட வைக்கும் புதுமை. சரி, நாம் இப்போது இந்த 'இல்லினோய்' மாகாணத்தில் இருக்கின்றோம். இங்கு உங்களிடம் வந்து, "நான் இல்லினோய் மாகாணத்தின் சட்டமன்றத்தை நேசிக்கின்றேன்" எனக் கூறப் போகும் ஒருவரை எங்கு தேடுவது. அல்லது "நான் பிரதிநிதிகள் சபையை நேசிக்கின்றேன்," அல்லது செனட் சபையை நேசிப்பதாக கூறும் ஒருவரை நாம் எங்கு தேடுவது. ஒருவேளை, "நான் சுப்ரீம் கோர்ட்டை நேசிக்கின்றேன்" எனக் கூறும் ஒருவரை, குறிப்பாக தனக்குச் சாதகமாகக் கிடைத்த நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக அப்படி கூறும் ஒருவரை நாம் காணலாம். "நான் மந்திரிசபையை நேசிக்கின்றேன், நான் நகரசபையை நேசிக்கிறேன், நமது உள்ளூர் நிர்வாகசபையை நேசிக்கிறேன்," எனக் கூறக் கூடியவரை எங்கு தேடுவது. இது அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளின் சிந்தனைகளுக்கு அன்னியமானது. இது இயற்கைக்கு விரோதமானது. இது புரட்சிகரமானது.
குறைந்த அளவு அரசாங்கமே நல்லது என்பது தற்போது பரவலாக இருக்கும் எண்ணம். அரசாட்சி மிகும்போது, இந்த ஏமாற்றுக்கார அரசியல்வாதிகளை எப்படி வெளியாக்குவது எனும் எண்ணம் தோன்றும். ஆனால் இங்கு இதற்கு முற்றிலும் நேர் எதிரான ஒரு திசையில் நமது சிந்தனை செல்கிறது.
நாம் நடப்பு உணர்வுகளிலிருந்து சிறிது அப்பாற்பட்டோ, அல்லது அதற்கும் சிறிது அப்பாற்பட்டோ இருக்கவில்லை. நாம் அதிலிருந்து நேர் எதிரான ஒரு சிந்தனையைக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் நமது சமயம் அவ்வாறு கூறுகின்றது. நமது ஸ்தாபனங்கள்பால் நாம் உண்மையான அன்புணர்வைக் கொண்டிருக்க வில்லையென்றால் நாம் பெரும் பெரும் எண்ணிக்கையிலான நம்பிக்கையாளர்களை ஈர்க்கமுடியாது என நமது சமயம் கூறுகின்றது. நான் என்னுடைய உரையை முடிக்கும் தருவாயில் இருக்கின்றேன். ஆனால் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. நன்றாக இயங்குகின்றன எனத் தோன்றும் நமது சமய ஸ்தாபனங்களை நேசிப்பது மிகவும் சுலபம். மிகவும் சிறப்பாக இயங்குகின்ற ஸ்தாபனங்களை நேசிப்பது சுலபம். ஒரு சமூகத்தில் இருந்துகொண்டு, அங்கு நன்றாக இயங்கி வரும், அற்புதமான காரியங்களை இயற்றி வரும் ஒரு சபையின்பால் நிச்சயமாக அன்பு உண்டாகும். நானும் அத்தகைய சபைகளை நேசிக்கத்தான் செய்கின்றேன்.
மேம்பாடு பொறுத்த வரை குறைபாட்டுடன் இயங்கியும், தவறுகள் செய்தும், தனது சமூகத்தினரின் ஒற்றுமையில் பிரச்சினைகளை எதிர்நோக்கியும், தனது செயல்களில் குறைகள் நிறைந்தும், அதன் பிரதம செயலாக்கங்களில் பிரச்சினைகள் இருந்தும், சமூகத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளை உங்களுக்குத் தெரிவிக்காமலும் இருக்கும் ஒரு சபையை நேசிப்பது எப்படி? இதுதான் நமது சவால். கபடமில்லாமல் அதை எப்படி செய்வது?
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி நேசிக்கிறார்களோ அப்படித்தான் இத்தகைய சபைகளையும் நாம் நேசிக்க வேண்டும். ஒரு குழந்தை தடுமாறியும், மோசமாக நடந்து கொண்டும், நோய்வாய்ப் பட்டும், அல்லது பொது இடங்களில் எப்படி நடந்துகொள்வது எனத் தெரியாமலும் இருந்தால், அதன் பெற்றோர் அதனை நேசிக்கவே செய்கின்றனர். ஏனெனில், அப்பெற்றோர் அக்குழந்தை இயல்பாகவே மேம்பாட்டிற்கான இயற்திறனைப் பெற்று இருப்பதை உணர்ந்துள்ளனர். அன்புடனும் அரவணைப்புடனும், அக்குழந்தை மேம்பாடடைந்து தனது இயற்திறன்களின் நிறைவேற்றத்தைக் காணும். எதிர்படையான விமர்சனங்களாலும், அன்பில்லாமலும் அக்குழந்தையின் வளர்ச்சி குன்றிப்போகும்; அதன் மேம்பாடு நிறைவேற்றம் அடையாது போகும்.
இப்படியாகவே நமது சமய ஸ்தாபனங்களை நேசிக்கும்படி நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். செயற்கையாகவோ, கபடமாகவோ அல்ல, ஆனால் மகிமை மிக்க, அற்புதமான எதிர்காலத்தைக் கொண்டுள்ள பஹாவுல்லாவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்தாபனங்கள் எனும் முறையிலேயே இவற்றை நாம் நேசிக்க வேண்டும். நமது அன்பினாலும், நமது அரவணைப்பாலும், தோள்கொடுப்பதன் மூலமாகவும், நமது தயவுணர்ச்சியின் மூலமாகவும், புரிந்துகொள்ளல் மூலமாகவும், அவை வளரும். அவை பரிணாமம் பெறும். இத்தகைய அன்பினையே நாம் கோருகின்றோம். தாழ்ந்து கொண்டும் மறைந்துகொண்டும் உள்ள தங்களது ஸ்தாபனங்கள்பால் நம்மைச் சூழ்ந்துள்ள (பஹாய் அல்லாத) சமூகத்தின் மக்களின் விமர்சிக்கும் போக்கு, சந்தேகம், ஒழுங்கின்மை, மற்றும் ஊழல் மனப்பான்மைகளி்லிருந்து அடியோடு மாறுபட்ட அன்பினையே நாம் வேண்டுகின்றோம்.
இப்போது முடியும் தருவாயிலிருக்கும் மூன்றாண்டுத் திட்டம், மூன்று மையக் குறிக்கோள்களை வலம் வருகின்றது. அவையாவன, தனி நம்பிக்கையாளர்களின் பற்றுறுதியின் உயிரூட்டத்தை மேம்படுத்துவது, சமயத்தின் மனித வளங்களைப் பெரிதும் அதிகரிப்பது, மற்றும் உள்ளூர் மற்றும் தேசிய ஸ்தாபனங்கள் முறையாக இயங்குவதைப் போஷிப்பதும் ஆகும். பஹாய்கள் எனும் முறையில் நமது பங்கிற்கு இந்த மூன்றாண்டுத் திட்டத்தின் நிறைவேற்றத்தை நான் குறிப்பிட்டுள்ள அந்த மூன்று சிந்தனா சோதனைகளை வெற்றிகொள்ள முயற்சிப்பதன் மூலமாகவே காணமுடியும் எனும் அடிப்படையில்தான் உங்கள் கவனத்தை நான் கோரியுள்ளேன்.
நான் எனது உரையை ஒரு முடிவிற்குக் கொண்டுவந்துவிட்டேன். இந்த அமெரிக்க பஹாய் சமூகம் பெரும் ஆற்றல்களைப் பெற்றுள்ள ஒரு சமூகம் என்பது பரவலாக அறியப்பட்டதே. அப்துல் பஹா தமது திருப்பாதங்களை இங்கு பதித்து இந்தப் பூமியைப் புனிதப் படுத்தியுள்ளார். அவர் தமது அன்பையும் ஆதரவையும் இந்நாட்டிற்குப் பொழிந்துள்ளார். பாதுகாவலர் தமது முக்கியமான செய்திகளையெல்லாம் இந்த நாட்டின் மெய்யன்பர்களுக்கே எழுதியுள்ளார். அமெரிக்க பஹாய்கள் தெய்வீகத் திட்டத்தின் நிருபங்களை அமலாக்கம் செய்யக்கூடியவர்களில் தலையாய நிலையில் உள்ளவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலக நீதி மன்றமும், அமெரிக்க பஹாய் சமூகத்தையும் அதன் ஸ்தாபனங்களையும் அப்துல் பஹாவும் பாதுகாவலரும் தங்களுடைய அன்பைப் பொழிந்த வண்ணத்திற்குச் சிறிதும் குறையாது நேசிக்கின்றனர் என்பதை இங்கு நான் அறுதியிட விரும்புகிறேன். உங்கள் அனுமதியோடு, நாங்கள் அதிக நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அமெரிக்க பஹாய்கள்பாலும் இச்சமூகம் ஆற்றக் கூடிய பெரும் பங்கின்பால் பெருமையுடனும் எங்கள் முகங்களைத் திருப்பியுள்ளோம் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
அமெரிக்க பஹாய்கள் குறித்த வருங்கால மகிமை மற்றும் இறுதி இலக்கு பற்றி சமயத் திருவாசகங்களில் வாக்களிக்கப்பட்டுள்ளவை யாவும் முற்றாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்படும் என்பதில் என் மனதில் சிறிதும் சந்தேகமே இல்லை. இச் சமூகத்தைப் பற்றி அப்துல் பஹா கூறியது யாவும் மெய்ப்பிக்கப்படும். அது நடக்கும். அது தவிர்க்கப்பட முடியாதது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஐயப்பாடு உண்டு. அதாவது, இதில் நீங்களும் நானும் எங்கிருப்போம்? இம்மாபெரும் காட்டுமானத்தில் நாமும் நமது பங்கினை ஆற்றுவோமா? இந்த வெற்றிகளில் நமக்கும் பங்கிருக்குமா? நாம் இப்போது உட்படுத்தப் பட்டுள்ள இந்த அபாயமிக்க, சவால்கள்மிக்கதுமான சிந்தனா சோதனைகளை நாம் வெற்றிகொள்வோமா? வெற்றி அலைகளின் மீது வலம் வருவது நமது விதியா அல்லது தோல்வி அலைகளால் கரைக்கு அடித்துத் தள்ளப்படும் சருகுகள் நாம் எனும் கதியா? பஹாய்ச் சரித்திரத்தில் காணப்படும், தாங்கள் சந்தித்த சோதனைகளை வெல்ல முடியாமல் வீழ்ந்துபட்டவர்களின் பட்டியலில் நாமும் சேர்க்கப்படுவோமா? நண்பர்களே, முடிவு நம் கைகளில்தான் உள்ளது. முடிவு நம் கைகளில்தான் உள்ளது.