வருங்காலத்தை எழுதுவது யார்

உலக நீதி மன்ற அறிக்கை

 

இல்லம்

வருங்காலத்தை எழுதுபவர் யார்?

 

இருபதாம் நூற்றாண்டின் மீதான சிந்தனைப் பிரதிபலிப்புகள்

 

1992-ஆம் ஆண்டு மே மாதம் இருபத்தெட்டாம் தேதி, பஹாவுல்லா மறைந்த நூற்றாண்டை அனுசரிக்கும் பொருட்டு பிரேஸில் நாட்டின் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் பிரத்தியேகக் கூட்டம் ஒன்றில் கூடினர். பஹாவுல்லாவின் செல்வாக்கு உலகின் சமூக, அறிவு நிலையிலான அரங்கில் நன்கு அறிமுகமானதும் மேன்மேலும் அதிகரித்து வரும் ஒன்றாகவும் இருந்து வருகின்றது. அவரது செய்தியின் கருப்பொருளான ஒற்றுமை பிரேஸில் நாட்டு நாடாளு மன்றத்தின் அங்கத்தினர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது என்பது தெளிவான ஒன்று. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளின் போது எல்லா அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களைப் பெரிதும் பாராட்டிப் பேசினர். ஒரு பிரதிநிதி அவற்றினை "ஒரு தனி மனிதனின் எழுதுகோலினால் எழுதப்பட்ட அதி பிரம்மாண்டமான சமயப் போதனைகளாகும்" என்றும் நமது உலகின் வருங்காலம் குறித்த பஹாவுல்லாவின் சிந்தனையை வேறொருவர், "லௌீக எல்லைகளைக் கடந்து தேசியத்துவம், இனம், எல்லைகள், நம்பிக்கைகள் போன்ற அற்ப வேறுபாடுகளின்றி மனித இனத்தை முழுமையாகச் சென்றடைந்த ஒன்றாக," வருணித்தார்.

 

பஹாவுல்லா பிறந்த நாட்டில் அவரது பணி ஈரான் நாட்டை ஆண்டு வரும் முஸ்லீம் மதகுருக்களால் தொடர்ந்து கடுங் கண்டனத்திற்குள்ளாகி வரும் வேளையில் மேற்கூறப்பட்ட புகழாரம் உண்மையில் கவனத்தையும் கருத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இவர்களின் முன்னோர்கள் அவரை நாடு கடத்தி சிறைவாசத்திற் குள்ளாகுமாறு செய்ததுடனன்றி, மனித வாழ்க்கையையும் சமூகத்தையும் மாற்றியமைப்பதற்கான அவரது இலட்சியங்களைப் பகிர்ந்து கொண்ட ஆயிரமாயிரமானோரைக் கொன்று குவிப்பதற்குக் காரணமாக விளங்கியிருந்தனர். பிரேஸிலியாவில் மேற்கூறிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில் உலகின் மற்றப் பகுதிகளில் பெரிதும் புகழப்பட்ட இந் நம்பிக்கைகளைத் துறப்பதற்கு மறுத்த ஈரானின் 300,000 பஹாய்கள் அடக்குமுறை அட்டூழியங்களுக்கும் இழப்பிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். பலர் சிறையிலடைக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருகின்றனர்.

 

கடந்த நூற்றாண்டின் போது பல்வேறு சர்வாதிகார ஆட்சிகள், அவற்றின் எதிர்ப்பில் இதே போன்ற கொடுங்கோன்மை மனப்பான்மைகளைக் கொண்டிருந்தன.

 

முற்றிலும் வேறுபட்ட இத்தகைய எதிர்வினைகளைத் தூண்டுவதற்குக் காரணமாக அமைந்த சிந்தனைப் போக்கின் தன்மை என்னவாக இருக்கவியலும்?

 

பஹாவுல்லாவினுடைய செய்தியின் முக்கிய கருவாக விளங்குவது, மெய்ம்மையும் அம் மெய்ம்மையின் செயலாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதிகளும் அடிப்படையில் ஆன்மீகத் தன்மை வாய்ந்தவை என்பதைப் பறைசாற்றுகின்றதாகும். தனிப்பட்ட ஒருவரை அது, ஆன்மீகப் பிறவி, "பகுத்தறிவான்மா," என்று நோக்குவதுடனன்றி, நாகரிகம் என்று நாம் அழைக்கும் அந்தத் துணிகர முயற்சி முழுவதையுமே ஓர் ஆன்மீக வளர்ச்சிச் செயல்பாடாகும் என அறுதியிட்டுக் கூறுகின்றது. இந் நாகரிகச் செயல்பாட்டில் மனித மனமும் இதயமும் அவற்றின் உள்ளார்ந்த தார்மீக, அறிவுசார் திறன்களை வெளிப்படுத்துவதற்கென வளர்முறையில் மேன்மேலும் பல்கூட்டுத் தொகுதிகளைக் கொண்ட திறன்மிகு வழிவகைகளை உருவாக்கியுள்ளன.

 

லௌகீகம் குறித்த நடப்புச் சித்தாந்தங்களை மறுக்கும் பஹாவுல்லா, வரலாற்றுச் செயல்பாடு குறித்த நேர்மாறான விளக்கங்களை முன்வைக்கின்றார். சிந்தனை உணர்வு நிலைப் பரிணாம வளர்ச்சியின் முன்னணியாக விளங்கும் மனித இனம் அதன் தனிப்பட்ட உறுப்பினர்களின் வாழ்க்கைகளில் பால்யப் பருவம், குழந்தைப் பருவம், பதின்மப் பருவம் என்றிருப்பது போன்று அதுவும் இக் கட்டங்களைக் கடந்து செல்கின்றது. நீண்ட நாள் காத்திருந்த ஒன்றுபட்ட மனித இனம் எனும் அந்த முதிர்ச்சி நிலையின் தலைவாயிலுக்கு இப் பயணம் நம்மைக் கொண்டு வந்துள்ளது. இப் பயணத்தினூடே போர்கள், சுரண்டல்கள், தப்பெண்ணம் போன்ற முதிர்ச்சி பெறா கட்டங்கள் இருந்திடினும் கவலை கொள்வதற்கு இவற்றை ஒரு காரணமாக நாம் கருதிடலாகாது. மாறாக ஒட்டுமொத்தமான முதிர்ச்சிக்கான பொறுப்புகளை நாம் ஏற்பதற்குரிய ஒரு தூண்டு கோலாக அவற்றைக் கருதிட வேண்டும்.

 

தமது காலத்தின் அரசியல் மற்றும் சமயத் தலைவர்களுக்குப் பஹாவுல்லா எழுதுகையில், அப்பொழுது வாழ்ந்துவந்த தலைமுறையின் கருத்துப் பரிமாணத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்ட, அளவிடவியலா சக்தியின் புதிய ஆற்றல்கள் இம் மண்ணின் மக்களிடையே எழத் தலைப்பட்டுள்ளன எனவும் இவை இக் கிரகத்தின் லௌகீக வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்திட வல்லவை எனவும் ஆருடம் கூறினார். வரப்போகும் இந்த லௌகீக முன்னேற்றங்களைத் தார்மீக, சமூக வளர்ர்ச்சிக்கான கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்வது அத்தியாவசியமானது எனவும் அவர் கூறினார். மாறாக தேசியவாத மற்றும் இனவாதப் பூசல்கள் இதனைத் தடை செய்திடுமாகில் லௌகீக முன்னேற்றம் நன்மைகளைக் கொண்டுவரும் அதே வேளையில் கற்பனை செய்திட வியலா தீமைகளையும் விளைவித்திடும். பஹாவுல்லாவின் எச்சரிக்கைகளில் சில, அச்சுறுத்தும் எதிரொலிகளை நமது காலத்திலும் எழுப்புகின்றன: "விநோதமானதும் வியப்பு மிக்கதுமான பொருள்கள் இவ்வுலகில் இருந்து வருகின்றன. இவை, இப் பூவுலகின் காற்று மண்டலம் முழுவதையுமே மாற்ற வல்ல சக்தி வாய்ந்தவை. அவற்றின் தூய்மைக்கேடு மரணத்தை விளைவித்திட வல்லவை," என பஹாவுல்லா எச்சரித்தார்.

 

எந் நாடு, எச் சமயம், எவ்வினம் என்ற கேள்வியின்றி, உலக மக்கள் அனைவரையும் எதிர் நோக்கும் தலையாய ஆன்மீகப் பிரச்சினை, மனித இயல்பின் ஒருமைத் தன்மையைப் பிரதிபலிக்கும் உலக சமூகத்திற்கான அடித்தளங்களை அமைப்பதுவேயாகும் என பஹாவுல்லா கூறுகின்றார். இம் மண்ணுலகவாழ் மக்களை ஒன்றுபடுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு தூர அகக் காட்சியோ இறுதி முடிவில் தேர்வு செய்திடக் கூடிய விவகாரமோ அல்ல. சமூக பரிணாம வளர்ச்சிச் செயல்பாட்டில் அடுத்துவரும் தவிர்க்கவொண்ணாத கட்டத்தினை அது கொண்டுள்ளது. இக் கட்டத்தினை நோக்கிச் செல்ல நமது கடந்த கால, தற்கால அனுபவங்கள் அனைத்தும் நம்மைக் கட்டாயப் படுத்துகின்றன. இவ்வுண்மை ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்வு காணப்படும் வரை நம் கிரகத்தினைப் பீடித்துள்ள பிணிகள் எதுவுமே நிவாரணம் பெறவியலாது. ஏனெனில் நாம் காலடியெடுத்து வைத்துள்ள இக் காலத்தின் அத்தியாவசியமான எல்லா சவால்களும் ஒன்றைக் குறிப்பிடுவதாகவோ, வட்டார ரீதியானதாகவோ அல்லாமல் உலகளாவியும் அனைத்துலக ரீதியாகவும் உள்ளன.

 

பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களில் மனித இனம் முதிர்ச்சியடைவது தொடர்பாக உள்ள பல வாசகங்களில் ஒற்றுமையின் மாற்றச் சக்தியின் ஆற்றலை விவரிப்பதற்கு ஒளி ஓர் உருவகமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது நிறைந்து காணப்படுகின்றது. அவை வலியுறுத்துவதாவது: "இவ்வுலகையே ஒளிர்ந்திடச் செய்யுமளவு ஆற்றல் பெற்றது ஒற்றுமையின் ஒளி." இவ்வாறு கூறுவது நடப்பு வரலாற்றை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இருக்கும் வரலாற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகக் காட்சியளிக்கச் செய்கின்றது. இவ்வொற்றுமைக் கோட்பாடு நமது காலத்தில் நிலவி வரும் துன்பங்களுக்கும் நிலைகுலைவுகளுக்குமுள்ளாக அதன் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தினை அடைந்திடும் பொருட்டு மனித சிந்தனை உணர்வினை அதன் பரிணாம வளர்ச்சியின் புதியதொரு படிநிலைக்கு விடுவித்திடச் செய்திடும் சக்திகளின் இயக்கத்தினைத் தேடிடுமாறு நம்மை உந்துகின்றது. கடந்த நூறு ஆண்டுகளாக நடந்து வந்திருப்பனவற்றையும் இவற்றின் பயனாக பல்வேறு மக்கள் கூட்டங்கள், இனங்கள், நாடுகள், சமூகங்கள் ஆகியவை அனுபவித்த விளைவுகளையும் மறுபரிசீலனை செய்யுமாறு அது நம்மை அழைக்கின்றது.

 

உலக அமைப்பு தோன்றுவதற்கான காரணம் இருந்தது போன்றே, உலக மக்களின் உரிமைகள் தோன்றுவதற்கும் காரணங்கள் உள்ளன. போரின்போது மனித முறைகேடிற்குப் பலியான அப்பாவி மக்களின் சொல்லொணா துயரங்கள் அம்பலமானபோது, உலகளாவிய நிலையில் இது மக்களிடையே ஒரு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இவை மனித இனத்திற்கு ஏற்பட்ட மோசமான அவமானத்தைக் கொணர்ந்த ஒரு நிகழ்வாகக் கருதப்பட்டது. இவ்வதிர்ச்சியின் விளைவாக புதுமாதிரியானதொரு தார்மீகக் கடப்பாடு உருவாகியது. இக் கடப்பாடு மனித உரிமைகள் மீதான ஐக்கிய நாட்டுச் சபையின் குழு மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரபூர்வமான பணியாக ஆக்கப்பட்டது. பஹாவுல்லா பிரகடனம் செய்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆட்சியாளர்களால் சிந்தித்துக்கூடப் பார்த்திடவியலாத நிகழ் வாகும் இது. இவ்வாறு அதிகாரமளிக்கப்பட்ட மேலும் அதிகரித்துவரும் அரசாங்க சார்பற்ற அமைப்புகள், அனைத்துலக மனித உரிமைகளின் பிரகடனம் பொது சர்வதேச வரையறைகளின் அடிப்படைகளாக நிறுவப்படுவதனையும் அதற்கேற்ப அவை அமலாக்கம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்திட முற்பட்டுள்ளன.

 

பொருளாதார வாழ்க்கையைப் பொறுத்த வரையில் இதற்கு இணைப் போக்கானதொரு செயல்பாடு நடந்தேறியது. இந் நூற்றாண்டின் முதற் பாதியில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார வீழ்ச்சி பேரழிவினை உண்டு பண்ணிற்று. இதன் பயனாக பல அரசாங்கங்கள் சமூக நலத் திட்டங்களோடு நிதிக் கட்டுப்பாட்டு முறைகள், பிரத்தியேக கையிருப்பு நிதிகள், வர்த்தக விதிமுறைகள் ஆகியவற்றை உருவாக்குவதற்குரிய சட்டங்களை இயற்ற முற்பட்டன. இத்தகைய தொரு பேரழிவு மீண்டும் நிகழ்வதிலிருந்து தங்களின் சமூகங்களைப் பாதுகாக்கும் நோக்கத் துடனேயே இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து உலகளாவிய நிலையில் செயல்படும் பல நிறுவனங்கள் அமைக்கப்பட்டன: அனைத்துலக நிதி நிறுவனம், உலக வங்கி, ஏற்றுமதி இறக்குமதி வரி மற்றும் வர்த்தகம் மீதான பொது உடன்படிக்கை மற்றும் இக் கிரகத்தின் பொருள் வளத்தை நியாய ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கான பல மேம்பாட்டு நிறுவனங்கள், இந் நூற்றாண்டின் இறுதியில், நோக்கங்கள் என்னவாக இருப்பினும், தற்போதுள்ள கருவிகள் எவ்வளவுதான் கரடுமுரடானவையாக இருந்திடினும் ஗ அடிப்படையில் இக் கிரக பொருள்வளத்தின் உபயோகம் முற்றிலும் புதிய சிந்தனைகளுக்கேற்ப மறுசீரமைக்கப் படவியலும் என்பது பெரும்பான்மைப் பொது மக்களுக்குப் புலப்படுத்தப்பட்டுள்ளது.

 

இவ் வளர்ச்சிகளின் பயன், மனித இனத்தின் பெரும்பான்மை மக்களுக்கு மேன்மேலும் அதிகரித்த வண்ணமாக வழங்கப்பட்ட கல்வியின் வழி பன்மடங்கு பெருகியது. இத் துறைக்கு மேலும் அதிகப்படியான வளங்களை ஒதுக்கீடு செய்வதற்குத் தயாராகவிருந்த தேசிய, உள்ளூர் அரசாங்கங்களும் மற்றும் பெரும் எண்ணிக்கையில் ஆசிரியர் தொழிலுக்காகத் தகுதி பெற்றவர்களை ஒன்று திரட்டிப் பயிற்றுவிக்க இயன்ற சமூகத்தின் ஆற்றல் ஆகிய இவற்றிற்கும் மேலாக அனைத்துலக நிலையில் இருபதாம் நூற்றாண்டின் இரு முன்னேற்றங்கள் மிக முக்கியமான செல்வாக்கினைக் கொண்டிருந்தன. முதலாவதானது கல்வித் தேவைகள் மீது குறிப்பாகக் கவனம் செலுத்திய பல மேம்பாட்டுத் திட்டங்களும் அவற்றிற்குப் பெருமளவில் நிதி உதவி நல்கிய உலக வங்கி, அரசாங்க நிறுவனங்கள், முக்கிய ஸ்தாபனங்கள், ஐக்கிய நாட்டுச் சபையின் பல கிளைகளும் ஆகும். இரண்டாவதானது, இம் மண்ணுலக வாழ் மக்கள் அனைவரையும் மனித இனக் கற்றலின் முழுமைக்கும் தகுதி பெற்ற வாரிசுகளாகச் செய்திடும் தகவல் தொழில் நுட்பத்தின் அதி துரித வளர்ச்சியாகும்.

 

உலக அளவில் அமைப்பு முறையினை மறு ஒழுங்குபடுத்தும் இச் செயல்பாடு, சிந்தனை உணர்வு நிலையில் மகத்தான மாற்றத்தினால் உயிரூட்டப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டது. பூசல்களை உண்டுபண்ணும் ஆழ வேரூன்றிய பழக்க வழக்கங்களின் விளைவுகளை அனுபவிக்குமாறு பெரும் மக்கள் தொகுதிகள் திடீரென நிர்ப்பந்திக்கப்பட்டன. ஒரு காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பழக்கங்களும் மனப்பான்மைகளும் இப்பொழுது உலகளாவிய கண்டனத்தின் வெறுப்புப் பார்வைக்கு இலக்காகின. மக்கள் ஒருவரையொருவர் கருதிடும் முறையில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்க இது தூண்டுகோலாக அமைந்தது.

 

உதாரணத்திற்கு வரலாறு நெடுகிலுமாக, அடிப்படையில் பெண்கள் இயல்பில் ஆண் களுக்குக் கீழானவர்கள் என்பதை அனுபவம் நிரூபித்துக் காட்டுவதாகவும் சமயப் போதனைகள் அதனை உறுதிப்படுத்துவதாகவும் இருந்து வந்துள்ளது. வரலாற்றுத் திட்ட ஏற்பாட்டில் நிலவி வந்த இக் கருத்து திடீரென எங்கும் பின்வாங்கத் தொடங்கியது. எல்லா விதத்திலும் ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் என்ற பஹாவுல்லாவின் கூற்று முழுமையான அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு காலம் பிடித்திடினும் எவ்வளவு வேதனை மிக்கதாக அது இருந்திடினும் இதற்கு எதிர்மாறான எந்தக் கருத்திற்குமான அறிவுபூர்வ, தார்மீக ஆதரவு தொடர்ந்து ஆதரவு இழந்து வருகின்றது.

 

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இன உயர்வுக் கொள்கையைப் போற்றும் தன்னைப் பற்றிய மனித இனத்தின் பிறிதொரு முடிவான கண்ணோட்டமானது அண்மைய நூற்றாண்டுகளில் பல்வேறு இனவாதக் கற்பனைகளாக இறுக்கம் பெற்றுள்ளது. வரலாற்று நோக்கில் திகைத்திட வைக்கும் வேகத்தில், மனித இன ஒருமைப்பாட்டுக் கோட்பாடு அனைத்துலக அமைப்பு முறைக்கு ஒரு வழிகாட்டிக் கொள்கையாகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டதை இருபதாம் நூற்றாண்டு கண்டது. இன்று, உலகின் பல பகுதிகளில், தொடர்ந்தாற்போன்று, பேரழிவினை உண்டுபண்ணும் இனப் பூசல்கள் பல்லின மக்களின் மத்தியில் நிலவிடும் இயல்பான அம்சங்களாகப் பார்க்கப் படவில்லை. மாறாக ஆற்றல் வாய்ந்த சர்வதேச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டிய, வேண்டுமென்றே மீறப்பட்ட செயல்களாகவே கருதப்படுகின்றன.

 

மானிடத்தின் நீண்ட பால்யப் பருவம் நெடுகிலும், முறைப்படுத்தப்பட்ட சமயத்தின் முழு அங்கீகாரத்துடன் வறுமை, சமூக அமைப்பின் சாஸ்வதமான, தவிர்க்கவியலா ஓர் அம்சமாக என்றும் இருந்துவரும் என்று அனுமானிக்கப்பட்டது. எனினும், தற்போது இதுவரையிலுமாக உலகம் அறிந்துள்ள எல்லா பொருளாதார முறைகளின் முன்னுரிமைகளையும் வடிவமைத்துள்ள இம் மன நிலை, இவ்வனுமானம், அனைவராலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் கொள்கையள விலாவது அரசாங்கம், அடிப்படையில் அதன் சமூக அங்கத்தினர்களின் நலனைப் பேணிப் பாதுகாத்திடும் பொறுப்புடைய ஓர் அறங்காப்பாளராக எங்கும் கருதப்பட்டு வருகின்றது.

 

மனித உந்து சக்தியின் மூலத்தோடு அணுக்கமான தொடர்புடையதாக இருப்பதால் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்றதாக விளங்குவது ஗ சமயத் துவேஷப் பிடியிறுக்கம் தளர்த்தப்பட்ட நிகழ்வாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில் பெரிதும் கவனத்தை ஈர்த்ததும் "சமயங்களின் நாடாளுமன்றத்தில்" முன்பே சிந்திக்கப்பட்டிருந்த சமயங்களுக் கிடையிலான உரையாடலும் ஒத்துழைப்புமாகச் சேர்ந்து, ஒரு காலத்தில் தகர்த்திடவியலாது விளங்கிய குருக்குல அதிகாரத்தின் கோட்டைச் சுவர்களை இடித்து வீழ்த்துவதில் சமயஞ்சாராச் சக்திகளை வலுப்பெறச் செய்திட உதவின. கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட சமயச் சிந்தனை மாற்றங்களின் பின்னணியில் தற்போதுள்ள அடிப்படை மதவாதிகளின் செயல்களின் குமுறல்கள் பின்னோக்கிப் பார்க்கப்படுகையில் வேறெதுவுமின்றி சமயச் சார்புக் கட்டுப்பாட்டின் தவிர்த்திட வியலா முடிவுக்காலத்திற்கெதிராக மேற்கொள்ளப்படும் இறுதிக் கட்ட பின் வாங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளாகவே தென்படுகின்றன. பஹாவுல்லாவின் திருமொழிகளில் "உலக மக்கள், அவர்கள் எவ்வினத்தவராயினும், எம் மதத்தவராயினும் ஒரே தெய்வீக மூலத்திலிருந்து அருட் தூண்டலைப் பெறுவதோடு ஒரே கடவுளின் பிரஜைகளுமாவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை."

 

இந் நெருக்கடி மிகுந்த ஆண்டுகளின்போது தூலப் பிரபஞ்சத்தினைப் புரிந்துகொண்ட விதத்தில் மனித மனமும் பல அடிப்படை மாற்றங்களுக்கு உள்ளாகியது. இந் நூற்றாண்டின் முதற் பாதி, புதிய சார்புக் கொள்கைகளும் அளவு இயக்கவியலும் ஒளியின் தன்மை, செயல்பாடு ஆகிய வற்றுடன் அணுக்கமாகத் தொடர்புப்பட்டிருந்த இவ்விரண்டும் -- பௌதிகத் துறையினை புரட்சி கரமான மாற்றத்திற்குள்ளாகுமாறு செய்ததுடன் அறிவியல் மேம்பாட்டின் முழுப் போக்கினையே திசைதிருப்பியதைக் கண்டது. பண்டைய பௌதிகம், இயல் நிகழ்ச்சிகளை ஒரு குறுகிய வரம்புக்குள் மட்டுமே விளக்க முடிந்தது என்பது தெரிய வந்தது. பிரபஞ்சத்தின் நுண்ணிய பொருள்கள் மற்றும் அதன் பெரும் அண்ட அமைப்புகள் ஆகிய இரண்டையும் குறித்த ஆய்வுக்கான புது வாயில் திடீரெனத் திறக்கப்பட்டது. இம் மாற்றத்தின் விளைவுகள் பௌதிக இயலுக்கு அப்பால் வெகுதூரம் சென்றதுமன்றி, பல நூற்றாண்டுகளாக அறிவியல் சிந்தனைகளை ஆதிக்கம் செலுத்தி வந்திருந்த உலகக் கண்ணோட்டத்தின் அடித் தளங்களையே ஆட்டங்காணச் செய்தது. கடிகாரம் போன்று இயங்கிடும் பிரபஞ்சம் குறித்தான காட்சிகளும் கவனிப்பாளர் கவனிக்கப்படுபவை, மனம் பருப்பொருள் இவற்றிற்கிடையே இருப்பதாக அனுமானிக்கப்பட்ட பிரிவும் முற்றாக மறைந் தொழிந்தன. இவ்வாறாக, விரிவான ஆய்வுகளின் பின்னணியில் சாத்தியமாக்கப்பட்ட கோட்பாட்டு அறிவியல், பிரபஞ்சத்தின் செயல்பாட்டிலும் அதன் இயற்றன்மையிலும் நோக்கமும் அறிவு நுட்பமும் உள்ளார்ந்த கூறுகளாக இருக்கும் சாத்தியத்தினை எடுத்துரைக்கின்றது.

 

இக் கருத்து மாற்றங்களின் பிரவேசங்களுடன், மனித இனம், லௌகீக அறிவியல்களான பௌதிகம், இரசாயனம், உயிரியல் இவற்றுடன் அரும்பத் தொடங்கியிருக்கும் அறிவியலான உயிரின சுற்றுச் சூழல் இயல் ஆகியனவற்றிற்கிடையே ஒன்றுக்கொன்று தொடர்புப்பட்ட செயலாற்றலின் விளைவாக முன்னேற்றத்திற்கான திகைத்திடவைக்கும் வாய்ப்புகளை வழங்கும் புதியதொரு சகாப்தத்தில் காலடியெடுத்து வைத்தது. புதிய சக்தி வளங்களைப் பெறுவதில் வெற்றி பெற்றதைப் போன்று விவசாயம், மருத்துவம் போன்ற துறைகளிலும் அடையப்பெற்ற நன்மைகள் பிரம்மிக்கத்தக்க அளவு தெளிவாகத் துலங்கின. அதே வேளையில் பொருள்கள்சார் புதிய அறிவியல் துறை, இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் இதுகாறும் தெரிந்திடாத பிரத்தியேகமான பொருள் வளங்களான பிளாஸ்டிக், கண்ணாடி நார் இழைகள், கரியமில நார் இழைகள் போன்றவற்றை மிகுதியான அளவில் வழங்க ஆரம்பித்தது.

 

அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் இத்தகைய முன்னேற்றங்கள் ஒன்றுக்கொன்று துணை புரிந்திடும் விளைவுகளைக் கொண்டிருந்தன. மணல் -- பொருள்களிலேயே அதி தாழ்ந்ததும் வெளித்தோற்றத்திற்குப் பயனற்றதாகவும் தென்பட்ட ஒன்று - முற்றாக உருமாற்றப்பெற்று ஸிலிக்கன் தகடுகள், தெளிவான ஒளி ஊடுருவிக் கண்ணாடி ஆகியனவாக ஆக்கப்பட்டது. இதன்வழி உலகளாவிய தொடர்பு துறை இணைப்பு முறைகளின் உருவாக்கம் சாத்தியமானது. இது, தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் அதி நவீன துணைக் கோள முறைகளுடன் சேர்ந்து மனித இனத்தின் முழுமையின் ஒன்றுதிரட்டப்பட்ட அறிவினை எத்தகைய பாகுபாடின்றியும் எங்குமுள்ள மக்கள் பெறுவதற்கு வழிகோலத் தொடங்கியுள்ளன. அடுத்தடுத்து வரவிருக்கும் பப்பத்தாண்டுகளானது, தொலைபேசி, தொலைகாட்சி, கணினி ஆகியவற்றின் தொழில் நுட்பங்கள் ஒன்றுபடுத்தப்பட்ட ஒரே தொடர்பு, தகவல் முறையாக ஒன்றிணைவதைக் காணும். தவிரவும், இவற்றின் மலிவான பயனீட்டுச் சாதனங்கள் பெருமளவில் கிடைக்கப்பெறும் என்பதும் தெளிவு. பலருக்குத் தேச விசுவாசப் பெருமிதத்தின் இறுதி அரணாக விளங்கிவரும் தற்போதைய நாணய முறைகள் பலவாறாகக் குழம்பிக் கிடக்கின்றன. இவற்றிற்குப் பதிலாக பெரும்பாலும் மின்னியல் உந்துதலினால் செயல்படும் ஒரேயொரு, தனி, உலக நாணய முறையின் எதிர்பார்ப்பினால் ஏற்படவல்ல உளவியல், சமூக ரீதியிலான விளைவுகளை மிகைப்படுத்திக் கூறிடவியலாது.

 

உண்மையில், இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட புரட்சியின் ஒற்றுமைப்படுத்தும் விளைவு, வேறெங்குமின்றி அறிவியல், தொழில் நுட்ப வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களில் மிகத் தெளிவாகத் தென்படுகின்றது. ஆகத் தெளிவாய்த் துலங்கிடும் நிலையில், தொடர்ந்து முதிர்ச்சியடைந்துவரும் சிந்தனை உணர்வு நிலை கோரிடும் அக நோக்கு இலட்சியங்களை நனவாக்குதற்குரிய வழி வகைகள் தற்போது மானிடத்தின்பால் பெருமளவில் உள்ளன. மேலும் ஆழமாகக் கண்ணோட்டமிடுகையில், எவ்வினம், எக் கலாச்சாரம், எத் தேசம் என்ற பாகுபாடின்றி, மண்ணுலக வாசிகள் அனைவருக்கும் இவ்வாற்றல் கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது. பஹாவுல்லாவின் தீர்க்கதரிசனப் பார்வையில், "ஒரு புதிய ஜீவ சக்தியானது இச் சகாப்தத்தில், மண்ணுலக மக்கள் அனைவருள்ளும் துடிக்கின்றது. ஆயினும் எவருமே அதன் மூலத்தைக் கண்டுபிடித்திடவோ, அதன் நோக்கத்தினை உணர்ந்திடவோ இல்லை." இன்று, இவ் வார்த்தைகள் எழுதப்பட்ட நூறாண்டுகளுக்கும் கூடுதலான காலத்தில், இதுகாறும் நடந்துள்ள நிகழ்வுகள் உணர்த்திய உண்மைகள் எங்குமிருக்கும் சிந்தனையாளர்ளுக்கு தெளிவாய்த் தோன்றத் தொடங்கியுள்ளன.

 

வரலாற்றில் தற்போது ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கும் காலத்தினால் கொண்டு வரப்பட்ட மாற்றங்களைச் சரியென்று போற்றுவது அதனுடன் வந்த இருள், இச் சாதனைகளை மங்கிடச் செய்தது என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. இலட்சக்கணக்கான ஆதரவற்ற மக்களைத் திட்டமிட்டு அழித்தல், மக்கள் தொகையினையே முழுமையாக துடைத்தொழித்திடவல்ல பேரழிவினை உண்டாக்கிடும் நவீன ஆயுதங்களின் கண்டுபிடிப்பும் அவற்றின் உபயோகமும், நாடுகளின் அனைத்து மக்களின் ஆன்மீக, அறிவார்ந்த வாழ்வினை வளரவிடாமல் மூச்சுத்திணறச் செய்த சித்தாந்தங்களின் தோற்றம், மீண்டும் சரிசெய்திட பல நூற்றாண்டுகள் ஆகும் அளவிற்கு இக் கிரகத்தின் சுற்றுச் சூழல் மீது இழைக்கப்பட்ட பெருந் தீங்கு, எல்லாவற்றிற்கும் மேலாக கணித்திடவியலா அளவிற்குப் பாதகத்தை உண்டுபண்ணிய ஒன்று -- வன்மை, கண்ணியமின்மை, தன்னலம் ஆகியவற்றைச் சுயசெயல் சுதந்திரத்தின் வெற்றிகளென பல தலைமுறைகளின் குழந்தைகளை நம்பச் செய்ததாகும். வரலாற்றில் ஒப்பிடப்படவியலா மிகத் தெளிவாய்த் தெரிந்திடும் தீமைகளின் பட்டியல் மட்டுமே இவை. இத் தீமைகளின் படிப்பினைகள், நம்மைத் தொடர்ந்துவரும் தூய்மைப்படுத்தப்பட்டத் தலைமுறைகளின் கற்றலுக்காக நமது சகாப்தம் விட்டுச் செல்லும்.

 

இருள், தன்னகத்தே உள்ளமை கொண்டிராத ஓர் இயல் நிகழ்ச்சி மட்டுமன்று, தானாக இயங்கவும் இயலாதது. அதனால் ஒளியை அணைத்திடவோ, மங்கிடச் செய்திடவோ இயலாது. ஆயினும் அது ஒளி சென்றடைந்திடாத இடங்களையும் போதுமான அளவு ஒளிர்ந்திடாத இடங்களையும் சுட்டிக் காட்டும். இவ்வண்ணமாக இருபதாம் நூற்றாண்டு நாகரிகம் மேலும் முதிர்ச்சியடைந்த, உணர்ச்சிகளுக்கு இடங்கொடாத சகாப்தத்தின் வரலாற்று ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்படும். இந் நெருக்கடி மிக்க ஆண்டுகளின் போது கட்டுப்பாடற்று நர்த்தனமாடிய மிருக குணத்தின் கொடூரங்கள், சில வேளைகளில் சமூகத்தின் உயிர் வாழ்தலுக்கே மருட்டலாக அமைவதாகத் தோன்றிடினும் மனித சிந்தனை உணர்வு நிலை தன்னகத்தே கொண்டிருந்த ஆக்கச் சக்திகளின் தொடர்ச்சியான மலர்ச்சியினை உண்மையில் எவ்விதத்திலும் தடுத்திடவில்லை. மாறாக இந் நூற்றாண்டு வளர வளர மேலும் அதிகரித்த எண்ணிக்கையிலான மக்கள் தாங்கள் கொண்டுள்ள விசுவாசங்கள் எவ்வளவு பொருளற்றவை என்பதையும், சிறிது காலத்திற்கு முன்புதான் தங்களைக் கைதிகளாக ஆக்கியிருந்த அச்ச உணர்வுகள் எவ்வளவு ஆதாரமற்றவை என்பதையும் உணர்ந்து கொள்ளத் தொடங்கினர்.

 

பஹாவுல்லா வலியுறுத்துவதாவது: "இந் நாள் ஒப்பற்ற நாளாகும். ஏனெனில் கடந்த காலங்களுக்கும் நூற்றாண்டுகளுக்கும் இது கண்போன்றதும் காலங்களின் இருளுக்கு ஒளி போன்றதுமாகும்." இக் கோணத்தில் நோக்குமிடத்து நாம் சிந்திக்க வேண்டிய விஷயம், இப்பொழுது முடிவுறும் அசாதாரண நூற்றாண்டின்போது அடைந்திடப்பட்ட முன்னேற்றத்தின் வேகத்தை இருள் குறைக்கவோ, தடுக்கவோ செய்தது என்பதல்ல. மாறாக, நம்மை ஒரே இனமாக ஒன்றுபடுத்திடவல்ல ஆன்மீக இயல்பினை மனப்பூர்வமாக ஏற்று, மிக்க வேதனையுடன் கற்றுக் கொண்டதன் பின்னணியின் அடிப்படையில் துணிவுடன் நமது வருங்காலத்தைத் திட்டமிடுதற்கு முன்பாக, இன்னும் எவ்வளவுதான் துன்பங்களையும் அழிவுகளையும் நம் இனம் அனுபவிக்க வேண்டி யுள்ளது என்பதேயாகும்.

 

நாகரிகத்தின் எதிர்காலப் போக்குக் குறித்த, பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களில் காணப்படும் சிந்தனை, இன்று நம் உலகின் மீது வழக்கியல்பானதும் மாற்றவியலாததுமென தன்னை வலிந்து ஏற்குமாறு செய்திருக்கும் பெரும்பாலானவற்றிற்குச் சவால் விடுக்கின்றது. இவ்வொளி மயமான நூற்றாண்டின்போது ஏற்பட்ட மகத்தான முன்னேற்றங்கள் ஒரு புது மாதிரி உலகிற்கு வழி காட்டியுள்ளன. சமூக, அறிவார்ந்த பரிணாம வளர்ச்சி உள்ளமையில் உள்ளார்ந்திருக்கும் தார்மீக, அறிவு நுட்பத்திற்கு ஏற்பவே நிகழ்ந்து கொண்டிருப்பது உண்மையாகில், சம கால அணுகு முறைகளை நிர்ணயித்திடும் அனேகக் கோட்பாடுகள் கடுமையாகத் தகர்க்கப்பட்டுவிட்டன வென்று பொருள்படும். பெரும்பான்மைச் சாதாரண மக்கள் உள்ளுணர்வாக அறிந்திருப்பது போன்று சிந்தனை உணர்வுநிலை அடிப்படையில் ஆன்மீக இயல்புடையதாயின், அச் சிந்தனை உணர்வு நிலையினைப் பிடிவாதமாகவும் நேர்மாறானதாகவும் வியாக்கியானம் செய்வதன் மூலம் அதன் வளர்ச்சித் தேவைகளைப் புரிந்து கொள்ளவோ அவற்றிற்குச் சேவை செய்திடவோ இயலாது.

 

வருங்காலம் குறித்த பஹாவுல்லாவின் சிந்தனை, உலகின் பெரும்பாலான பகுதிகளுக்குப் பரவி, எவ்விடத்திலும் நிலவிடும் சம கால நாகரிகத்தின் ஓர் அம்சமான தனித்துவக் கோட்பாட்டைப் போன்று வேறெந்தக் கோட்பாட்டிற்கும் அந்தளவு நேர்முகமான சவாலை விடுத்ததில்லை. கலாச்சார அம்சங்களால் வளர்க்கப்பட்ட அரசியல் சித்தாந்தம், கல்வி மேதைத்துவம், பயனீட்டுப் பொருளாதாரம், "இன்பம் நாடுதல்" போன்றவை மூர்க்கத்தனமான, வரம்பற்ற, தனக்கே சொந்தம் எனும் சுய உரிமை உணர்வுக்கு வழி வகுத்துள்ளன. இவற்றின் தார்மீக விளைவுகள் ஒருசேர தனி மனிதனையும் சமூகத்தையும் புரையோடச் செய்துவிட்டன. அது மட்டுமன்று. நோய்கள், போதைப் பொருள் பித்தம் இவற்றுடன் இந் நூற்றாண்டு இறுதியில் எங்கும் பரவலாகக் காணப்படும் வேறு பல தீமைகளும் முற்றிலும் அழிவுத்தன்மைத்தாய விளைவுகளைத் தோற்றுவித்தன. இந்தளவு அடிப்படையானதும் எங்கும் வியாபித்துள்ளதுமான தவற்றிலிருந்து மனித இனத்தை விடுவித்திடும் பணி, எது சரி, எது பிழை குறித்தான இருபதாம் நூற்றாண்டின் மிக்க ஆழ வேரூன்றியுள்ள சில அனுமானங்களின் மீது கேள்வி எழுப்பும்.

 

ஆய்வு செய்திடப்படாத சில அனுமானங்கள்தாம் யாவை? அவற்றில் மிக வெளிப்படையாக நம்பப்பட்டு வரும் அனுமானம், ஒற்றுமை வெகு தூரத்திலிருக்கும் ஒன்று, அறவே அடைய முடியாத இலட்சியம், பலவாறான அரசியல் பூசல்கள் ஒருவாறு தீர்க்கப்பட்டு, லௌகீகத் தேவைகள் ஒருவாறு சரி செய்யப்பட்டப் பின்னரே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதாகும். பஹாவுல்லாவின் கொள்கை இதற்கு நேர்மாறானதாகும். சமூகத்தைப் பீடித்து அதனை முடக்கிடும் பிணிகளைத் தோற்றுவித்திடும் பிரதான நோய் மனித இனத்தின் ஒற்றுமையின்மை என பஹாவுல்லா மொழி கின்றார். மனித இனத்தின் சிறப்பு அம்சமாக விளங்குவது, அவனிடமுள்ள ஒத்துழைக்கும் திறனும் இதுகாறும் மனித இனத்தின் வளர்ச்சி பல்வேறு காலங்களில், பல்வேறு சமூகங்களில் அவனது ஒருமித்த செயல்கள் எந்தளவுக்குச் சாதனை எய்தினவோ அந்தளவினைப் பொறுத்தே இருந்து வந்துள்ளது என்பதுமாகும். கற்ற பழக்கங்கள், மனப்பான்மைகள் ஆகியவற்றின் சேர்க்கையே பூசல்களுக்கான காரணம் என்பதனை விடுத்து, அது மனித இயல்பின் உள்ளார்ந்த கூறு எனும் கருத்தினை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பது மனித இனத்தின் கடந்த காலத்தினை வேதனைக்குரிய வகையில் முடமாக்கிய அதே தவற்றினைப் புதிய நூற்றாண்டின் மீது சுமத்துவதாகும். இம் முடமாக்குதலுக்கு இத் தவறே மற்ற எந்தவொரு காரணத்தை விடவும் தனிப்பெரும் காரணமாக அமைந்தது. தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவர்களுக்குப் பஹாவுல்லா உபதேசிக்கின்றார்: "உலகினை, படைப்பின்போது முழுமையாகவும் பூரணமாகவும் இருந்திட்ட போதினும் பல காரணங்களின் வழி கடும் சீர்குலைவுகளாலும் நோய்களாலும் பீடிக்கப்பட்ட மனித உடலாகக் கருதிடுவீர்".

 

கடந்த நூற்றாண்டு எழுப்பியதும் மேன்மேலும் அதிகரித்து வரும் அவசர முக்கியத்துவம் வாய்ந்ததும் ஒற்றுமையுடன் அணுக்கமான தொடர்புடைய ஒன்றாகத் திகழ்வதுமானது ஓர் இரண்டாம் தார்மீக சவாலாகும். இறைவனின் பார்வையில் "யாவற்றையும்விட அதி நேசிக்கப்படுவது நீதியே" என பஹாவுல்லா வலியுறுத்துகின்றார். இது தனி மனிதர் ஒருவரை மற்றவர்கள் கண்கள் மூலமல்லாது ஒருவர் அல்லது ஒருத்தி தன் சொந்தக் கண்களாலேயே மெய்ம்மையினைப் பார்த்திட இயலச் செய்வதோடு அதிகாரத்துடன் கூட்டு முடிவெடுத்தலுக்கு வழிவகுக்கின்றது. இதுவே சிந்தனையிலும் செயலிலும் ஒருமைப்பாட்டினை உறுதி செய்கின்றது. இருபதாம் நூற்றாண்டின் துன்பமிக்க அனுபவங்களிலிருந்து எழும்பிய அனைத்துலக அமைப்பு முறை என்னதான் திருப்தியளிப்பதாய் இருந்திடினும் அதன் நீடித்த செல்வாக்கு அதனுள் உள்ளார்ந்துள்ள தார்மீகக் கொள்கையினை ஏற்றுக் கொள்வதனைப் பொறுத்தே உள்ளது. மனித இன அங்கம் உண்மையிலேயே ஒன்றானதாகவும் பிரித்திடவியலாததாகவும் இருப்பின் அதனைப் பரிபாலித்து வரும் நிறுவனங்கள் செலுத்திடும் அதிகாரமும் ஓர் அறங்காப்பகமாகத் திகழ்கின்றது. இவ்வுலகில் பிறந்திடும் ஒவ்வொரு மனிதனும் முழுமையின் பொறுப்பாண்மையாகவே தோன்றுகின்றான். சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளின் உண்மையான அடித்தளமாக விளங்கிடும் மனித வாழ்வின் இக் கூற்றையே ஐக்கிய நாடுகளின் சாசனமும் அதன் தொடர்புடைய ஆவணங்களும் வலியுறுத்துகின்றன. நீதியும் ஒற்றுமையும் விளைவில் ஒன்றுக்கொன்று பரஸ்பர பதில் வினையை உண்டாக்கவல்லவை. "மனிதர் மத்தியில் ஒற்றுமையைத் தோற்றுவிப்பதே நீதியின் நோக்கமாகும். இம் மேன்மைப்படுத்தப்பட்ட திருவாக்கினில் தெய்வீக விவேகம் என்னும் சமுத்திரமே ஆர்ப்பரிக் கின்றது, மேலும் உலக நூல்கள் அதன் உட்பொருளினை உள்ளடக்கவியலா."

 

இவற்றையும், இவற்றுடன் தொடர்புப்பட்ட தார்மீகக் கொள்கைகளையும் எவ்வளவுதான் தயக்கத்துடனும் அச்சத்துடனும் சமூகம் கடைப்பிடிக்க முற்பட்டப் போதினும், சேவையே தனி மனிதன் ஒருவனுக்கு அது வழங்கிடும் அதிபொருள்புதைந்த பங்காகும். மனித வாழ்வின் புரியாப் புதிர்களில் ஒன்று, ஒருவனின் சுய வளர்ச்சி குறிப்பாக, பெரும் முயற்சிகளில் அவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் வழி நிகழ்கின்றது. அங்கு தானென்ற தன்மை தற்காலிகமாகவாவது மறக்கப்படுகின்றது. எல்லா நிலைகளிலுமுள்ள மக்களுக்கும் சமூக அமைப்பினையே வடிவமைப்பதில் ஆக்கபூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்வதற்கானதொரு வாய்ப்பினை அளித்திடும் சகாப்தத்தில் மற்றவர்களுக்குச் சேவை செய்தல் என்னும் இலட்சியம், முற்றிலும் புதியதொரு பொருளினைப் பெறுகின்றது. பொருள் சேர்த்தல், தன்னுரிமை பாராட்டுதல் போன்ற இலக்குகளை வாழ்க்கையின் நோக்கமாக உயர்த்துவது பெரும்பாலும் மனித இயல்பின் மிருக அம்சத்தை வளர்ப்பதாகும். அன்றியும் சுய விமோசனம் பெறுதலுக்கான எளிய செய்திகள் போன்றவை மக்களின் அவாக்களை இனியும் தீர்த்திடவியலாது. வாழ்வின் உண்மை நிறைவேற்றம் என்பது மறுவுலக விவகாரம் மட்டுமன்று, இவ்வுலக விவகாரமும் கூட என மக்கள் ஐயத்திற்கிடமற்ற நிச்சயத்துடன் அறிய வந்துள்ளனர். பஹாவுல்லா உபதேசிக்கின்றார்: "நீ வாழ்ந்திடும் காலத்தின் தேவைகளின்பால் ஆர்வத்துடன் அக்கறை கொண்டு அதன் நெருக்கடி நிலைகள் மீதும் தேவைகள் மீதும் உனது ஆழ்ந்த சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவாயாக."

 

மனித விவகாரங்களை வழிநடத்திடுவதில் இத்தகைய சிந்தனைகள் மிக ஆழமான தாக்கத் தினைக் கொண்டுள்ளன. உதாரணமாக நாடுகள் என்ற நிலையில் கடந்த காலத்தில் அவை என்னதான் நன்மை பல ஆற்றியிருந்த போதிலும், மனித இனத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதில் முக்கிய செல்வாக்குமிக்கவையாக இருந்து வந்துள்ளன. நாடுகளாக இயங்கும் நிலை நீடித்திடும் காலம் வரை உலக அமைதி அடையப்படுவது தாமதப்படுத்தப்படுவதோடு மண்ணுலக மக்களின் மீது இழைக்கப்படும் துன்பங்களும் அந்தளவுக்கு அதிகரிக்கும். மனித இனப் பொருளாதார வாழ்வில் உலகமயப்படுத்துதலினால் கொண்டுவரப்பட்ட நன்மைகள் எவ்வளவு மகத்தானவையாக இருந்திட்ட போதும், இச் செயல்பாடு இதுகாறும் காணாத அளவு ஏகாதிபத்திய அதிகாரக் குவிப்புகள் தலைவிரித்தாடும் நிலைகளை உருவாக்கியுள்ளது. எண்ணிறந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு இவை வறுமையையும் விரக்தியையும் உண்டாக்குவது தடுக்கப்படவேண்டுமெனில், இவை சர்வதேச ஜனனாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இதைப் போன்றே தகவல் தொடர்புத் துறை தொழில் நுட்பத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான முன்னேற்றம் சமூக மேம்பாட்டினை வளர்ச்சியுறச் செய்வதற்கும் மக்களிடையே மனித இனம் ஒன்று என்ற பொதுச் சிந்தனையை வேரூன்றச் செய்வதற்கும் ஆற்றல்மிகு கருவிகளாக விளங்கிட இயலும் என்ற போதினும் அவை அதே சம ஆற்றலுடன் இவ்வுலகமயப்படுத்துதல் செயல்பாட்டுச் சேவைக்கு உயிரோட்டமாகத் திகழ்ந்திடும் உந்துதல்களைத் திசை மாறச் செய்திடவும், கரடு முரடானதாகச் செய்திடவும் இயலும்.

 

இறைவனுக்கும் மனித இனத்திற்கும் இடையிலான புதிய உறவினைப் பற்றி பஹாவுல்லா பேசுகின்றார். அது ஆரம்பமாகி வரும் மனித இன முதிர்ச்சி நிலையுடன் இயைபுடையதாகும். இப் பிரபஞ்சத்தைப் படைத்து அதனை நிலைபெறச் செய்த இறுதி மெய்ம்மை என்றென்றும் மனித அறிவுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்து வரும். அதனுடனான மனித இனத்தின் சிந்தனை உணர்வு பூர்வமான தொடர்புறவு, பெரும் சமயங்களின் ஸ்தாபகர்களான மோஸஸ், ஸோராஸ்தர், புத்தர், இயேசு, முஹம்மது ஆகியவர்களுடன் நினைவிறந்து போன மேலும் பல ஆரம்பகால ஸ்தாபகர்களின் செல்வாக்கினால் விளைந்தவையே. இச் சமயங்கள் எந்தளவுக்கு ஸ்தாபிதம் பெற்று விளங்கிற்றோ அந்த அளவுக்கே அவற்றின் செல்வாக்கு இருந்து வந்துள்ளது. இத் தெய்வீக உந்துதல்களுக்குத் துலங்கியதன் வழி மண்ணுலக மக்கள் ஆன்மீக, அறிவார்ந்த, தார்மீக திறனாற்றல்களைப் படிப் படியாக வளர்த்துக் கொண்டுள்ளனர். இவையனைத்தும் ஒன்று சேர்ந்து மனிதப் பண்பினை நாகரிகப்படுத்தியுள்ளன. இவ்வாயிரம் ஆண்டுக் காலத்தின் நாகரிகப்படுத்தும் இச் செயல்பாடு தற்போது பரிணாம வளர்ச்சி இயக்கத்தின் எல்லா தீர்க்கமான திருப்புமுனைகளுக்கும் இயல்பான, குறிப்பிட்ட அந்தக் கட்டத்தை அடைந்துள்ளது. முன்பு உணர்ந்திடாத சாத்தியங்கள் திடீரெனத் தோன்றுகின்றன. பஹாவுல்லா கூறுகின்றார்: "இறைவனின் அதி உன்னத அருட்கொடைகள் மனிதர்மீது பொழியப்பட்டுள்ள நாள் இதுவே, அவரது அதிபெரும் கிருபை படைப்பினம் யாவற்றுள்ளும் புகுத்தப்பட்ட நாள் இதுவே."

 

பஹாவுல்லாவின் கண்களைக் கொண்டு பார்க்குமிடத்து, இனக் குழுக்கள், மக்கள், நாடுகள் ஆகியவற்றின் வரலாறு வெற்றிகரமாக அதன் இறுதி நிலைக்கு வந்துவிட்டது. இப்பொழுது நாம் காண்பது மனித இன வரலாற்றின் ஆரம்பம், தனது சொந்த ஒருமைத்தன்மையை உணர்ந்த மனித இனத்தின் வரலாறு. நாகரிக வளர்ச்சிப் பாதையிலுள்ள இத் திருப்புமுனைக்கு அவரது எழுத்தோவியங்கள் நாகரிகத்தின் தன்மைகள், செயல்பாடுகள் குறித்து புதியதொரு விளக்கத்தைத் தருவதோடு அதன் முன்னுரிமைகளை மறுசீர்ப்படுத்தவும் செய்கின்றன. அவற்றின் நோக்கம் நம்மை ஆன்மீக விழிப்பு நிலைக்கும் பொறுப்பிற்கும் திரும்ப அழைப்பதேயாகும்.

 

பஹாவுல்லலாவின் அகக் காட்சிகளில் காணப்பட்ட மாற்றங்கள் எளிதில் நடந்தேறிடும் என்ற பொய்ம்மையை ஊக்குவித்திடக் கூடியவை அவரது எழுத்தோவியங்களில் எதுவுமே இல்லை. உண்மை முற்றிலும் மாறுபட்டதாகும். இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் சுட்டியுள்ளது போன்று, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வேரூன்றி வந்துள்ள பழக்கங்களும் மனப்பான்மைக் கோலங்களும் இயல்பாகவோ கல்வி அல்லது சட்ட நடவடிக்கைகளின் பயனாகவோ கைவிடப்படப்போவதில்லை. தனி மனித வாழ்க்கையிலோ சமூகத்தின் வாழ்க்கையிலோ வழக்கமாக வேறெந்த வகையிலும் தீர்வு காண இயலாத கடுந் துயர்கள், சகிக்கவொண்ணா இடர்பாடுகளின் பயனாகவே மகத்தான மனமாற்றம் ஏற்படுவதுண்டு. உலகின் பல்லின மக்களை ஒரே மக்களாக ஒன்றுபடுத்திட அந்தள வுக்குக் கடுஞ்சோதனை அனுபவம் ஒன்று தேவைப்படுகின்றது என பஹாவுல்லா எச்சரிக்கின்றார்.

 

கொந்தளிப்புகள் எவ்வளவு பெரியனவாக இருந்த போதிலும் மனித இனம் காலடியெடுத்து வைக்கவுள்ள அக் காலமானது, இம் மண்ணுலகின் ஒவ்வொரு தனி மனிதனுக்கும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இக் கிரகத்தின் வருங்காலத்தை எழுதுவதில் பங்கெடுத்துக் கொள்ள இதற்கு முன் இல்லாத அளவிலான சந்தர்ப்பங்களை வழங்கிடும். பஹாவுல்லாவின் உறுதியான வாக்குறுதி யின்படி, "விரைவில் இக் கால அமைப்பு முறை சுருட்டப்பட்டு அதற்குப் பதிலாக புதியதொன்று விரிக்கப்படும்."