இரான் நாட்டின் கலாச்சார துடைத்தொழிப்பு
-பஹாய்கள் கண்டனம்
நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா, 12 செப்டம்பர் 2004 (BWNS) – இரானில் மேலுமொரு பஹாய் புனிதஸ்தலம் அழிக்கப்பட்டுவிட்டது. உலகம் முழுவம் உள்ள பஹாய்கள் கண்டன கூக்குரல் எழுப்பியுள்ளனர். அவர்கள் இரான் அரசாங்கம் தனது துன்புறுத்தல் திட்டத்தில் மேலும் ஈடுபட்டுவருவதை உணர்ந்துள்ளனர். மதவெறி அடிப்படையிலான இந்த நடவடிக்கை அந்த நாட்டில் புராதனமான சொத்துக்களுக்கும் அபாயம் விளைவித்துள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் பாபுல் நகரில் ஒரு பஹாய் புனிதஸ்தலம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் தெஹரான் நகரில் உள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வீடு அழிக்கப்பட்டுவிட்டது. பல நாடுகளில் உள்ள பஹாய் சமூகங்கள் முக்கிய தினசரிகளில் இது குறித்து அறிக்கைகள் விடுத்துள்ளனர். நியூ யார்க் டைம்ஸில் அந்த அறிக்கை வெளிவந்துள்ளதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிஃரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரசு ஆகிய நாடுகளில் உள்ள பல தினசரிகளில் இச்செய்தி வெளியிடப்படவுள்ளது. சுமார் 3 லட்சம் அங்கத்தினர்களைக் கொண்ட இரான் பஹாய் சமூகம், அந்த நாட்டின் சிறுபான்மை சமயச் சமூகங்களிலேயே மிகப் பெரிய சமூகமாகும்.
உலகம் முழுவது 180 நாடுகளில் சுமார் 50 லட்சம் பஹாய்கள் இருக்கின்றனர். பஹாய் சமயம் ஒரு சுதந்திரமான சமயமாகும். அது மனுக்குலத்தின் ஐக்கியம், சமயங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை, ஆண் பெண் சமத்துவம், தப்பெண்ணங்கள் அகற்றப்பட வேண்டும் என்பன போன்ற கொள்கைகளை போதிக்கின்றது. பஹாய்கள் அமைதியானவர்கள் எனும் குணப்பன்பைப் பெற்றுள்ளவர்கள். இருந்தபோதிலும் 200க்கும் அதிகமான பஹாய்கள் கொல்லப்பட்டுள்ளனர், நூற்றுக்கணக்கானவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர், சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வேலைகளை, பென்ஷன்களை, கல்வி வாய்ப்புக்களை இழந்துள்ளனர். இதன் காரணம் இரான் நாட்டில் பஹாய் சமயம் முரன்பாட்டுச் சமயம் என அங்குள்ள சமயத்தலைவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
“இரான் நாட்டின் வெறி கொண்ட முல்லாக்கள் பஹாய்களின்பால் கொண்டுள்ள வெறுப்புணர்வு, பாமியானில் பிரமான்டமான புத்தர் சிலையை வெடிவைத்துத் தகர்த்த ஆப்ஃகானிஸ்தான் நாட்டின் தாலிபானுக்கு ஈடானது. இந்த முல்லாக்கள் பஹாய் சமயத்தை அழிப்பது மட்டுமல்ல, அந்த சமயத்தை அது பிறந்த நாட்டிலிருந்து அறவே ஒழித்துவிடவேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளது,” என அந்த செய்தியறிக்கை கூறியுள்ளது. இந்த அறிவிப்பு நியூ யார்க் டைம்ஸில் விளம்பர அறிவிப்பாக வெளிவந்தது.
ஜூன் மாதம் அழிக்கப்பட்ட அந்த வீடு பஹாய் சமயத்தின் அவதார ஸ்தாபகரான பஹாவுல்லாவின் தந்தையின் வீடாகும். மிர்ஸா அப்பாஸ் நூரி இரான் நாட்டு மாகானம் ஒன்றின் பிரபலமான ஆளுனராக பணியாற்றியவர். அவர் இரான் நாட்டின் அதிசிறந்த கையெழுத்துக் கலை வல்லுனர்களில் ஒருவர் என பரவலாக அறியப்பட்டவர்.
மிர்ஸா அப்பாஸ் நூரியின் இல்லம், “வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச்சின்னம், இஸ்லாமிய-இரானிய கட்டடக்கலைக்கான விலைமதிப்பற்ற ஓர் உதாரணம், கலை, ஆன்மீகம், கட்டடக்கலை ஆகியவற்றின் ஒப்பீடு இல்லாத முன்மாதிரி,” என டைம்ஸில் வெளிவந்த அந்த அறிக்கை கூறியது.
இரானிலிருந்த பஹாய் சமூகத்தை அறவே அழித்து அது குறித்த ஞாபங்களே இல்லாமல் செய்திட சமயஅடிப்படைவாதிகள் முடிவெடுத்துள்ளனர். அதனையொட்டி தங்கள் நாட்டின் மரபுச்செல்வங்களைக் கூட அழித்திட தயாராகிவிட்டனர். இவ்வித செல்வங்கள் இரான் நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல, அவை உலகுக்கே சொந்தமாகும், மனுக்குலத்திற்காக அவற்றின் காப்பாளர்கள் தாங்கள் என்பதை அவர்கள் உணரவில்லை.
“உலகம் முழுவதும் உள்ள இரானியர்கள் இவ்வித திட்டமிட்ட புனிதக்கேடுகளுக்கு எதிராக தங்கள் குரல்களை எழுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது,” என அந்த செய்தியறிக்கை குறிப்பிட்டது.
“இவ்வித செய்தியறிக்கைகளை பத்திரிக்கைகளில் வெளியிடுவது இரானுக்க வெளியே உள்ள பஹாயகளின் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாகும். உலகத்திற்கே சொந்தமான மரபுரிமை சொத்துக்கள் அழிக்கப்படுவதை உலகுக்கு எடுத்துக்காட்டுவதே இதன் நோக்கமாகும்,” என ஐக்கிய அமெரிக்க பஹாய் சமூகத்தின் தகவல் தொடர்பு நிர்வாகியான திரு கிலென் புஃல்மர் கூறினார்.
“அழிக்கப்படும் இடங்கள் யாவும் உலகம் முழுமைக்கும் முக்கியமானவையாகும்,” என்றார் திரு புஃல்மர். “அவை இரானிய கலாச்சார வரலாற்றின் தனிச்சிறப்புமிக்க கூறுகளை பிரதிபலிக்கின்றன. ஆகவே, உலகம் முழுவதும் உள்ள இரானிய வம்சாவளியினர் அனைவரும் தங்கள் கலாச்சாரம் இவ்விதமாக அழிக்கப்படுவதற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” பிரான்ஸ் நாட்டில் உள்ள பஹாய் சமூகத்தின் பேச்சாளரான பிரென்டா அப்ரர், இச் செய்தியறிக்கை பிரான்ஸ் நாட்டில் உள்ள பத்திரிக்கை ஒன்றிலும் பிரசுரிக்கப்படும் என கூறினார்.
“பிரான்ஸ் நாட்டில் தலைசிறந்த இரானியர்கள் பலர் உள்ளனர்,” என திருமதி அப்ரர் கூறினார். “அவர்களுடைய மரபுரிமை சொத்துக்களுக்கு அபாயம் ஏற்படவுள்ளன என்பது குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறோம். ஜூன் மாதம் அழிக்கப்பட்ட அந்த வீடு உண்மையில் இஸ்லாமிய கட்டடக்கலை குறித்த ஒரு சிறந்த படைப்பாகும்.” ஜூலை மாதத்தில், ஹம்ஷாஹ்ரி எனும் இரானிய தினசரி மிர்ஸா அப்பாஸ் நூரி குறித்தும் அவருடைய வீட்டின் கட்டடக்கலை குறித்தும் நீண்ட கட்டுறை ஒன்றை வெளியிட்டிருந்தது.
“அவருக்கு கலையுணர்வும் அழகுணர்வும் இருந்தமையால், அவர் தமது வீட்டைத் தாமே வடிவமைத்திருந்தார். அந்த வடிவமைப்பின் காரணமாக அவ்வீடு அக்காலத்தில் பெரும் கலையழகு மிக்க வீடுகளில் ஒன்றென கருதப்பட்டது,” என இமான் மிஹ்டிஸாடே, ஹம்ஷாஹ்ரி பத்திரிக்கையில் 13 ஜூலையில் கூறியிருந்தார். “பூச்சுக்களும் தரை ஓடுகள் வேலைப்பாடும், வீட்டைச் சுற்றிய பசுமை மிகுந்த வராந்தாக்களும், மையத்தில் குளத்தோடு இருந்த முற்றமும், பாத்திகளில் நடப்பட்ட மரங்களுமாக சேர்ந்து வீட்டில் ரம்யாமான சூழ்நிலையை ஏறபடுத்தியிருந்தன.”
ஜூன் மாதத்தில் ஒரு வார காலத்தில் அந்த வீடு அழிக்கப்பட்டது. அந்த இடத்தில் இடுகாடு ஒன்று நிறவப்படவேண்டும் என்பதற்காக அந்த வீடு இடிக்கப்படுவதற்கான ஆணை ஏப்ரல் மாதத்தில், மார்வி பள்ளி மற்றும் அறவாரிய நிர்வாகி ஆயத்துல்லா கானியால் பிறப்பி்க்கப்பட்டது.
“மிர்ஸா அப்பாஸ் நூரியின் வீடு இடிக்கப்பட்டது பஹாய் புனிதஸ்தலங்களை படிப்படியாக அழிக்கவேண்டும் எனும் திட்டத்தில் ஆகக் கடைசியாக நிறைவேற்றப்பட்ட படியாகும்” என பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதான பிரதிநிதியான பானி டுகால் கூறினார்.
ஏப்ரல் மாதத்தில், அனைத்துலக ரீதியிலான எதிர்ப்புகளையும் மீறி, பாபுல் நகரில் பஹாய் சமயத்தின் ஆரம்பகால சீடர்களில் ஒருவரின் கல்லறை நிர்மூலமாக்கப்பட்டது. வீடு போன்ற அந்த கட்டடம் குஃத்துஸ் என் அழைக்கப்பட்ட முல்லா முகம்மது அலியின் கல்லறையாகும்.
குத்துஸ் பஹாய் சமயத்தின் முன்னோடி அவதாரமான பாப் அவர்களின் பிரதான சீடராவார். 1993ல், ஒழுங்குடன் நிர்வகிக்கப்பட்டு வந்த தெஹரான் பஹாய் மயானத்தில் 15,000க்கும் மேற்பட்ட புதைகுழிகள் ஒரு நகராட்சி மையம் கட்டப்பட வேண்டும் எனும் சாக்கில் அழிக்கப்பட்டது.
1979ல், இஸ்லாமிய புரட்சி நடந்த சில காலத்தில், பஹாய் உலகின் மிக முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கிய, பாப் அவர்களின் வீடு இடித்துத் தள்ளப்பட்டது. தமது பால்ய பருவத்தில் வாழ்ந்த, தாக்கூரில் உள்ள பஹாவுல்லாவின் வீடும் புரட்சிக்குப் பிறகு நிர்மூலம் செய்யப்பட்டு அந்த இடம் பொது மக்களிடம் விற்கவும் பட்டது.
“ஒரு கலாச்சார சக்தியாகவும், ஐக்கியப்பொருளாகவும் விளங்கிய பஹாய் சமயத்தை படிப்படியாக அழித்திட வேண்டுமெனும் இரானிய அரசாங்கத்தின் ஒருமுகமான திட்டத்தின் ஒரு அங்கமிது என நாங்கள் எண்ணகின்றோம்.” “இப்போதெல்லாம் நேரடியாக பஹாய்களைக் கொல்வது போன்ற திட்டங்களில் ஈடுபடுவதை மாற்றி, உலக கவனத்தை அவ்வளவாக ஈர்க்காத புனிதஸ்தலங்களை அழிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.”
“ஆனால் அதன் முடிவு ஒன்றே: இரானிய பஹாய் சமூகத்தை அதன் சரித்திரம் மற்றும் மரபுசொத்துகளோடு அழித்திட வேண்டும் என்பதே,” என்றார் திருமதி டுகால்.
இடிச்கப்பட்ட நிலையில் பஹாவுல்லாவின் தந்தையின் வீடு
'பா'ப் அவர்களின் சீடர்களில் ஒருவரான குட்டுஸின் கல்லறை இடிக்கப்பட்ட நிலையில்