செய்தி - 665
41 மாநாடுகள் வரிசையில் ஸாம்பியா ஒன்றுகூடலே முதலாவதாகும்.
4 நவம்பர் 2008 (BWNS)
லுசாக்கா, ஸாம்பியா — ஸாம்பியா, மலாவி மற்றும் ஸிம்பாப்வே நாடுகளிலிருந்து சுமார் 750 பஹாய்கள் உலகம் முழுவதும் அடுத்த நான்கு மாதங்களில் நடத்தப்படவிருக்கும் 41 வட்டார பஹாய் மாநாடுகளில் முதலாவது மாநாடான லுசாக்கா மாநாட்டில் கலந்துகொள்ள கடந்த வாரம் லுசாக்காவில் ஒன்றுகூடினர்.
இதுவரை கண்டிராத இத்தகைய ஒன்றுகூடல்கள் பஹாய்கள் தங்களது நடவடிக்கைகள் பலவற்றை பன்முகப்படுத்துவது மற்றும் பயில்வட்டங்கள், வழிபாட்டுக் கூட்டங்கள், அண்டைச் சமூக குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்குமான வகுப்புகளை ஏற்பாடு செய்வது போன்றவற்றை உள்ளடக்கிய பஹாய்களின் ஐந்தாண்டு முயல்வு ஒன்றின் மத்திய காலத்தில் நடைபெறுகின்றன.
லுசாக்கா நகரின் முசுண்டா காப்பூஸா, "எங்களின் உணர்வுகளை உற்சாகப்படுத்தவும் ஊக்குவிப்பதற்கும் இத்தகைய மாநாடே மிகவும் குறிப்பிடத்தக்க தேவையென்பது என் எண்ணம்....," என்றார்
ஸாம்பியாவின் ஒன்பது மாநிலங்கள், மலாவி மற்றும் ஸிம்பாப்வேயிலிருந்து பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். அனைவருமே பஹாய்களான, தங்கள் வட்டாரங்களில் நடைபெறும் பஹாய் நடவடிக்கைகளுக்கான ஆதரவாளர்களுமான ஐந்து ஆப்பிரிக்கக் குடித் தலைவர்கள் இதில் பங்குபெற்றோரில் அடங்குவர்.
அபிட்ஜானிலிருந்து யாவொண்டே போன்ற நகரங்களிலும், வான்கூவரிலிருந்து சாவோ பாவுலோ, லண்டனிலிருந்து ஜோஹான்னஸ்பர்க், உலான் பத்தாரிலிருந்து ஆக்லண்ட் வரை பரந்துள்ள -- இந்த 41 மாநாடுகளும் பஹாய் சமயத்தின் தலைமைத்துவ நிலையில் உள்ள தேர்தலின் மூலம் ஐந்தாண்டுக்கொரு முறை தேர்வு செய்யப்படும் உலக அமைப்பான உலக நீதி மன்றத்தின் வேண்டுகோளிற்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாடுகள் குறித்து உலக பஹாய்களுக்கான ஒரு கடிதத்தில், அடித்தள சமூகங்கள் சமூக மேம்பாட்டில் அடைந்துள்ள வெற்றிகளைக் கொண்டாடவும், கற்றுக்கொண்டவற்றை கலந்தாலோசிக்கவும் மற்றும் தாங்கள் வாழும் சமூகங்களை எவ்வாறு மேம்படுத்தவது என்பது பற்றிய -- சமூக சேவையோடு ஆன்மீக மேம்பாட்டை ஒன்றிணைக்கும் ஒரு குறிப்பான அனுகுமுறையில் மேலும் அதிகமான மக்களை எவ்வாறு ஈடுபடுத்துவது என்பதை கலந்தாலோசிப்பதே இந்த மாநாடுகளின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
தனது அக்கடிதத்தில், "தங்களைச் சுற்றியுள்ள உலகின் பிரச்சினைகள் எவ்வளவுதான் தீவிரமடைந்த போதும், அண்டைச் சமூக அளவில் பஹாய்கள் மேற்கொண்டுள்ள முயல்வுகள் தொடரவேண்டும்," என உலக நீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது.
"தகர்க்கப்படவே முடியாதென ஒரு காலத்தில் கருதப்பட்ட பொருளாதார கட்டமைப்புக்கள் ஆட்டங்கண்டும், உலகத் தலைவர்கள் தற்காலிக தீர்வுகளைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாத தங்கள் இயலாமையை அதிகரித்த அளவில் வெளிப்படுத்தி வருகின்றனர்," என அக்கடிதம் குறிப்பிட்டது. "எவ்வளவு உகந்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்ட போதும், நம்பிக்கை தகர்க்கப்பட்டுவிட்டது மற்றும் பாதுகாப்பு உணர்வு இழக்கப்பட்டுவிட்டது."
ஆன்மீக நாகரிகமும் லௌகீக நாகரிகமும் ஒன்றகவே மேம்பாடு காணவேண்டும் என பஹாய்கள் நெடுங் காலமாகவே கொண்டுள்ள நம்பிக்கை, இந்த உலக சூழ்நிலையால் மறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, என அக்கடிதம் மேலும் கூறுகின்றது.
ஸாம்பியாவிலிருந்து 550, ஸிம்பாப்வேயிலிருந்து 80, மலாவியிலிருந்து 120 பங்கேற்பாளர்கள் வருகை தந்திருந்த அந்த லுசாக்க மாநாடு உலக நீதி மன்றத்திலிருந்து கிடைக்கப்பட்ட ஒரு சிறப்புச் செய்தியை செவிமடுத்தது மற்றும் அதற்கு முன்னதான 20 அக்டோபர் என திகதியிடப்பட்ட கடிதத்தை கலந்தாலோசித்தது. அக்கடிதம் பங்கேற்பாளர்களின் தாய்மொழிகள் அனைத்திலுமே மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அம்மொழிகளாவன, தொங்கா, லுண்டா, பெம்பா, செவா, மற்றும் ஷோனா.
பிறகு அம்மாநாட்டின் கவனம் வருங்கால நடவடிக்கைகளை திட்டமிடுவதன்பால் திரும்பியது. அதில், "ஆண்கள், பெண்கள், மற்றும் குழுந்தைகளும்கூட சிந்தனை செய்து தங்கள் அண்டையர்களுக்கும் நண்பர்களுக்கும் சேவை செய்வது, கடவுளின் அன்பிற்காக மட்டுமே தங்கள் சமூகங்களின் மேம்பாட்டிற்கு எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பனவற்றிற்கு இதயபூர்வமான வாக்குறுதிகளை வழங்கினர்," என ஸாம்பிய நாட்டு பஹாய்களின் செய்தி அறிக்கை ஒன்று கூறியது.
"உலகம் மேலும் மேலும் சீரழிந்து வருவதால் எல்லோருமே என்ன செய்வதெனத் தெரியாமல் கவலையுற்றிருக்கின்றனர், ஆனால், இதற்கான பதில் கடவுளின் போதனைகளில் உள்ளது மற்றும் தீர்வுகள் அப்போதனைகளை நாம் நமது தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிப்பதைப் பொருத்தே உள்ளது," என ஒரு பங்கேற்பாளர் கூறினார்.
பஹாய் சமூகத்தில் சிறப்பு பொறுப்புடைய, கண்ட ஆலோசகர்கள் நால்வர் அந்த லுசாக்க மாநாட்டில் கலந்துகொண்டோரில் அடங்குவர்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து இருவர், மாலிவியின் மைனா ம்கண்டாவிரே, மற்றும் ஸாம்பியாவின் கார்த் பொல்லோக், உலக நீதி மன்றத்தின் பிரதிநிதிகளான உலக மையத்திலேயே சேவையாற்றும் மொங்கோலியாவின் உரன்சைக்கான் பாத்தார் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ஸ்டீபன் பெர்க்லண்ட் ஆகியோர்.
ஸாம்பியா, மலாவி, மற்றும் ஸிம்பாப்வேயிலிருந்து வந்திருந்த சுமார் 12 பாடலிசைக் குழுவினர் இசை வழங்கி மாநாட்டின் உற்சாக உணர்வை அதிகரித்தனர்.
ஸாம்பியாவின் ஹைட்டன் இங்காங்குலா, "மாநாடு மிகப்பெரியது மற்றும் அற்புதமாக இருந்தது. நான் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டதிலிருந்து இத்தகைய மாநாடு எதிலுமே கலந்துகொண்டதில்லை," என்றார்.
முழுக் கட்டுரையையும் படங்களையும் காண இங்கு செல்லவும்: http://news.bahai.org/story/665
இ்ந்த 41 மாநாடுகள் குறித்த சிறப்பு இணையப்பக்கத்தைக் காண:
http://news.bahai.org/community-news/regional-conferences
மாநாட்டில் பங்குபெற்ற 750 பேர்கள். அடுத்த மாநாடு கென்யாவிலும் பிறகு தென் ஆப்பிரிக்காவிலும் விரைவில் நடபெறவிருக்கின்றன.