செய்தி - 660
பஹாய்களுக்கெதிரான இரான் நாட்டு அரசாங்கத்தின் அத்துமீறல்களை ஐ.நா.வின் அறிக்கைச் சுட்டுகிறது.
ஐக்கிய நாடுகள், 22 அக்டோபர் 2008 (BWNS) -- ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்கள் இரான் நாட்டில் பஹாய்களுக்கும் பிற சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் இளையோருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்ற டிசம்பர் மாதத்தில் இரான் நாட்டின் மனித உரிமை சூழ்நிலை குறித்த " தெளிவறிக்கை ஒன்றை வழங்கும்படி பொதுச் சபையால் கேட்டுக்கொள்ளப்பட்ட திரு பான் சென்ற திங்கட்கிழமை 20 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சில ஊக்கமளிக்கும் மேம்பாடுகள் காணப்படும் அதே வேளை, இரான் நாட்டு அரசியலமைப்பு பல விரிவான அடிப்படை சுதந்திரங்களுக்கு வாக்குறுதியளித்தபோதும், நடைமுறையாக "மனித உரிமைகள் குறித்த முழு பாதுகாப்புக்குப் பல தீவிரத் தடைகள் உள்ளன," என திரு பான் மேலும் குறிப்பிட்டார்.
அவரது அறிக்கை, சித்திரவதைமுறையின் பயன்பாடு, "மரணதண்டனைகளின் அதிகரிப்பு", "பெண்களை, பல்கலைக்கழக மாணவர்களை, ஆசிரியர்களை, தொழிலாளர்களை மற்றும் பிற தீவிரவியக்கக் குழுக்களை குறிவைக்கும் உரிமை மீறல்களின் அதிகரிப்பு ஆகியவை குறித்து கவலை தெவரிவித்துள்ளது.
அவ்வறிக்கை இரான் நாட்டின், மிகப் பெரும் சிறுபான்மை சமூகமான 3 லட்ச உறுப்பினர்களைக் கொண்ட பஹாய் சமூகத்தின் சூழ்நிலை குறித்து ஒரு முழு பக்கத்தை அர்ப்பணித்திருந்தது. அவ்வறிக்கை மேலும், இரானின் இஸ்லாமிய குடியரசின் அரசியலமைப்பின் 14வது பிரிவு "முஸ்லிம் அல்லாதாருக்கு பாதுகாப்பை" வலியுறுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டியது.
இருந்தபோதும், "பஹாய் சமூகத்தின் உறுப்பினர்கள் தன்னிச்சையான தடுத்துவைப்பு, அடிப்படையற்ற சிறைபடுத்தல், சொத்துக்களை பறிமுதல் செய்வது மற்றும் அழிப்பது, வேலை வாய்ப்பு மற்றும் அரசாங்க சலுகைகள் மறுக்கப்படுதல் மற்றும் உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் மறுக்கப்படுதல்" போன்ற புகார்கள் தொடர்ந்து கிடைத்துவருகின்றனவென திரு பான் அவர்களின் அறிக்கை கூறியது.
"நாடு முழுவதிலும் பஹாய்களையும் அவர்களின் இல்லங்களையும், கடைகளையும், பண்ணைகளையும் மற்றும் இடுகாடுகளையும் குறிவைக்கும் வன்முறைகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரவதை அல்லது தடுப்புக்காவலின்போது துன்புறுத்தப்படுவது போன்ற பல செயல்களும் நடந்துள்ளன."
பஹாய் பள்ளிச்சிறார்கள் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவது மற்றும் ஏழு முக்கிய பஹாய்கள் கைதுசெய்யப்பட்டது போன்றவை குறித்து திரு பான் கவலை தெரிவித்தார்.
"இரான் நாட்டில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளதைக் கண்டபோதிலும், பஹாய்களுக்கும் பிறருக்கும் எதிராக தெளிவான மற்றும் வெறுக்கத்தக்க மனித உரிமை அத்துமீறல்களை அந்த நாட்டின் அரசாங்கம் கடைப்பிடித்தே வந்துள்ளது என்பதை பொதுச் செயலாளரின் அறிக்கை குறிப்பிடுகின்றது," என ஐக்கிய நாட்டின் பஹாய் அனைத்துலக சமூகத்தின் தலைமைப் பிரதிநிதியான திருமதி பானி டுகால் கூறினார்.
அந்த அறிக்கை இரான் குறித்த ஐநாவின் தீர்மானத்தின் விளைவாக சென்ற ஆண்டின் பொதுச் சபையின் வேண்டுகோளின்பேரில் நேரடியாக கிடைக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமானதாகும்," என திருமதி பானி டுகால் கூறினார். இது மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் அனைத்துலக சமூகத்தின் இன்றியமையா பங்கை தெளிவுபடுத்துகின்றது."
"அனைத்துலக வரைமுறைகளின்பாலான தனது கடப்பாட்டை இரான் நாடு செயல்படுத்திட அதனை வற்புறுத்தும் விதத்தில் ஐநா பொதுச் சபை மீண்டும் இவ்வருடம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் என நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம்," என அவர் கூறினார்.
இது குறித்த ஐ.நா.வின் முழு அறிக்கையை இங்கே காணலாம்: http://www.un.org/Docs/journal/asp/ws.asp?m=a/63/459