செய்தி - 647
பஹாய்களை சமயச்சார்புடைய ஒரு சமூகமாக வியட்நாம் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
ஹோ சீ மின், வியட்நாம் -- வியட்நாமிய பஹாய் சமூகத்தை ஒரு சமயரீதியான இயக்கமாக வியட்நாமிய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
வியட்நாம் பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் பிரதிநிதிகளுக்கு 25 ஜூலை அன்று ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இது வரிசையான பல நடவடிக்கைளுள் இறுதியாக நடைபெற்ற ஒரு நிகழ்வாகும். இவற்றுள் நான்கு மாதங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்ட பஹாய் சபையும் அடங்கும். இந்த நிகழ்வு பல வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக நிர்வாக சபையின் தேர்தல் எனும் முறையில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகத் திகழ்ந்தது. இத் தேர்தலைப் பார்வையிட அரசாங்கப் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.
நடுவண் அரசின் சமய விவகாரங்களுக்கான செயற்குழுவின் தலைவர், திரு ஙூயென் தக் துரொங் அவர்கள் சென்ற வாரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக கலந்துகொண்டார்.
அரசாங்கத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் இந்த நிகழ்வை அறிவித்து அவருடைய கருத்துக்களையும் குறிப்பிட்டது: "(திரு ஙூயென்) அரசாங்கம் பஹாய் சமயத்தை அங்கீகரித்திருப்பதானது பஹாய் சமூகம் முழுவதற்கும் மேம்பாட்டிற்கான ஒரு புதிய பாதைக்கு வழிவகுத்தும், சமூக மற்றும் மனிதநேய நடவடிக்கைகளுக்கு மேலும் அதிகமாகப் பங்காற்றியும் பாரம்பரிய ஆன்மீகப் பன்பாட்டைப் பாதுகாப்பதற்கான உந்துதலையும் அதன் விசுவாசிகளுக்கு வழங்கிடும்," என குறிப்பிட்டார்.
பஹாய் சமயம் முதன் முதலில் 1954ல் இந்த நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டது, மற்றும் வியட்நாம் பஹாய்களின் முதல் தேசிய ஆன்மீக சபை 10 வருடங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டது. 1970ல் அச்சமூகத்தின் முறையான நடவடிக்கைள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன.
வியட்நாமிய செய்தி நிறுவனம் சென்ற வாரம் நடைபெற்ற இந்த விழா "பிற சமயங்களுக்கு இணையாக பஹாய் சமயமும் சம அளவில் இயங்கக்கூடியதாகும் எனும் அங்கீகாரத்தை அரசாங்கத்தின் சமயவிவகார செயற்குழு வழங்கியுள்ளது என்பது அர்த்தமாகும்," என்றார். தங்கள் சமூகத்தை வலுப்படுத்துவது, துல்லிதமான புள்ளிவிபரங்களைச் சேகரிப்பது, மற்றும் வியட்நாம் மக்களுக்கு, குறிப்பாக கல்வி சார்ந்த துறையில் உதவக்கூடிய சமூகத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கையில் வியட்நாம் பஹாய்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.