இல்லம்

 

மக்கள் கடவுளின் அன்மையை உணர்கின்றனர்.

 

இஸ்லாமியர்களுக்கு மெக்கா, யூதர்களுக்கு ஜெருசலம், கிருத்தவர்களுக்கு பெத்லெஹெம், பௌத்தர்களுக்கு லும்பினி -- பஹாய்களுக்கு இஸ்ரேல் நாட்டின் ஆக்கோ நகர் புனித நிலங்களாகும்.

 

பஹாவுல்லா மற்றும் பாப் அவர்கள், பஹாய் சமயத்தின் ஸ்தாபகர்களாவர் மற்றும் கடவுளின் அவதாரபுருஷர்களாகக் கருதப்படுகின்றனர். பஹாய்களின் மிகப் புனிதமான இடங்களாக இவ்விருவரின் நினைவாலயங்களும் விளங்குகின்றன. மற்றும் இவ்விரு இடங்களும் ஆயிரக்கணக்கான புனிதப்பயணிகளை ஈர்க்கின்றன.

 

வட இஸ்ரேலில் உள்ள இத்தலங்களும், அவற்றின் "அனைத்துலக தனிச்சிறப்புமிக்க மதிப்பின்" காரணமாக ஐக்கிய நாட்டுச் சபையின் யுனெஸ்கோவின் உலக மரபுடைமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

 

எவ்வகையில் மதிப்பிட்டாலும், இவ்விடங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இருக்கின்றன. ஹைஃபா நகரின் வடக்கில் கிராமப்புறத்தில் உள்ள பஹாவுல்லா அவர்களின் நினைவாலயம், மற்றும் ஹாஃபா நகரின் மையத்திலேயே உள்ள கார்மல் மலையின் சரிவில் கட்டப்பட்டுள்ள, பொண்நிற கோபுரத்தைக் கொண்ட கட்டடமான பாப் அவர்களின் நினைவாலயம் இரண்டையும் சுற்றிலும் ஸ்தம்பிக்க வைக்கும் அழகுடைய பூந்தோட்டங்கள் உள்ளன.

 

அந்த இடங்களின் வெளி அழது என்பது ஓர் அடையாளக்குறியே ஆகும் மற்றும் அவை அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கடவுளின் அவதாரப்புருஷர்ளுக்கான அன்பின் வெளிப்பாடும் மனிதகுலத்தின் வருங்காலத்திற்கான தீப ஒளியும் ஆகும்.

 

மிச்சிகன், ஐக்கிய அமெரிக்காவிலிருந்து புனிதப்பயணியாக வந்திருக்கும் கேரி மார்க்ஸ், "வார்த்தைகளில் கூறுவது கடினம்," என்கிறார். "சில விஷயங்களை நாம் பௌதீக ரீதியில் விவரிக்கலாம், ஆனால் இது அதைப் பற்றிய விஷயம் அல்ல. புனிதப்பயணம் என்பது மனிதகுலத்தின் வைகறை வரை பின்னோக்கிச் செல்லும் ஓர் அனுபவமாகும். அது ஆன்மீக மெய்ம்மையோடு அணுக்கம் பெறவும் ஒருவர் தமது ஆன்மாவோடு தொடர்புகொள்ளவும் துடிக்கும் ஒரு பேராவலாகும்.

 

அவ்விரு நினைவாலயங்களும் பஹாய்களுக்கென பிரத்தியேக உள் அர்த்தம் கொண்டிருந்தாலும், அவற்றின் ஆன்மீக இயல்பு மற்றவர்களையும் கவர்கின்றது.

 

பஹாய்கள் அல்லாதவர்கள் அங்கு வந்து அவ்விடம் வானந்திலிருந்து பூமியில் வீழ்ந்த சுவர்கத்தின் ஒரு பகுதியென கூறுவர் என பஹாய் புனித இடங்களுக்கான புனிதப்பயணிகள் வழிகாட்டி யாக கடந்த 10 ஆண்டுகளாக சேவை செய்து வந்துள்ள தாரானி ரஃபாட்டி கூறுகிறார்.

 

ஒருவர் இஸ்லாமியர், யூதர், கிருத்துவர்அல்லது பௌத்தர் என்ற போதிலும் அவரவர் புனித நூல்களில் சுவர்க்கத்தின் வர்ணனையுண்டு. அங்கு நிலவும் அமைதி, அழகு ஆகியவற்றைக் குறிப்பிட்டு "அது இதுதான்," என்கிறார் அவர். "நீங்கள் இங்கு வந்து உங்கள் தேவரோடு அணுக்க உணர்வு பெறுகிறீர்கள். இதற்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை, இதை எவருமே அனுபவிக்கலாம்.

 

சுற்றுப்பயணிகள், வருகையாளர்கள், மற்றும் புனிதப்பயணிகள்

 

கடந்த வருடம் சுமார் 5 லட்சம் மக்கள் நினைவாலயங்கள் சார்ந்த இடங்களுக்கு வருகை தந்தனர். இவர்களுள் பல சுற்றுப்பயணிகள் ஹைஃபா நகரையும் ஹைஃபா வலைகுடாவையும், அதற்கும் அப்பால் மத்திய தரைக் கடைலையும் கார்மல் மலையின் மீதிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் பாப் அவர்களின் நினைவாலயத்தை அருகில் இருந்து காணும் ஆவலில் வருகை தந்தவர்கள் ஆவர்.

 

இவர்களுள் 80,000 பேர்கள் பாப் அவர்களின் நினைவாலயத்தினுள் பிரவேசித்தும் அப்படி நுழைவதற்கு முன்பாக அவர்கள் தங்கள் காலனிகளைக் கழற்றிவிட்டு பாப் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் அறைக்கு அடுத்த அறைக்குள் அமைதியாக நுழைந்தனர். சிலர் அங்கு என்னதான் இருக்கின்றது எனப் பார்ப்பதற்கும் மற்றவர்கள் அங்கு சற்று தாமதித்து அங்கு சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருக்கும் பஹாவுல்லா அவர்களின் பிரார்த்தனைகளை வாசிக்கவும், அல்லது தியானத்திலும் தங்கள் சொந்த பிரார்த்தனைகளில் மூழ்கவும் செய்தனர். சிலர் வெளிப்படையாக உணர்ச்சிவசப்படவும் செய்தனர்.

 

"கத்தோலிக்கக் குழு ஒன்று நினைவாலயத்தினுள் நுழைந்ததும் மண்டியிட்டனர்," என வழிகாட்டி ஒருவர் நினைவுகூர்ந்தார்.

 

பஹாய் புனிதப்பயணிகள் இரு நினைவாலயங்களையும் உள்ளடக்கிய ஒரு விசேஷ 9 நாள் நிகழ்ச்சியில் பங்குபெறுவர். அங்கு வரும் வெவ்வேறு மக்கள் வெவ்வேறான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர் என வழிகாட்டிகள் தெரிவித்தனர்.

 

கடந்த 5 ஆண்டுகளாக பயணிகளின் வழிகாட்டியாகச் சேவை புரிந்து வரும் மார்சியா லேம்ப்பில், "இங்கு எத்தனை வகை மக்கள் வருகின்றனரோ அத்தனை வகை உணர்வுகளையும் காணலாம்," என்கிறார்.

 

சிலர் இங்கு வந்தவுடன் உடனடியாக நினைவாலயத்தினுள் செல்ல முடிவதில்லை. "அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் அல்லர் எனும் உணர்வே அதற்குக் காரணம்," என அவர் விளக்கினார். மற்றவர்களுக்கு அந்த நினைவாலயம் காந்தத்தைப் போன்று அவர்களை ஈர்க்கின்றது.

 

"சிலர் மணிக்கணக்கில் நினைவாலயத்தினுள் உட்கார்ந்திருப்பார்கள். சிலர் சில நிமிடங்களே இருப்பார்கள். எவ்வளவு நேரம் என்பது முக்கியமல்ல, அவரவர் தேவைக்கு ஏற்ப அங்கே இருப்பார்கள்.

 

பஹாவுல்லாவின் நினைவாலயம்

 

பஹாவுல்லா அவர்களின் நினைவாலயம் பஹாய்களுக்கு உலகிலேயே அதி புனிதமான இடமாகும் -- இது இருக்கும் திசையை நோக்கித்தான் அவர்கள் அன்றாடமும் பிரார்த்தனைக்காக திரும்புகிறார்கள்.

 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்துப் புனிதப்பயணியாக வந்திருந்த பாஃர்சின் ரசூலி-செய்சான், "உட்புறம் அற்புதம் மிக்கதாய் இருக்கின்றது," என்றார். உள்ளே சென்றால், அங்கு ஒரு சிறு தோட்டம் உள்ளது, அங்கு பூக்களும் இரு மரங்களும் உள்ளன. எல்லாம் கூரையிலிருந்து வரும் வெளிச்சத்தின் கீழ் உள்ளன. இதனுள் பல அறைகள் உள்ளன, அதில் ஒன்று பஹாவுல்லா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள அறை. அதனுள் செல்லமுடியாது, ஆனால் அதன் வாசல்படியில் நாம் நெற்றியால் தொட்டு பிரார்திக்கலாம்."

 

திருமதி ரஃபாட்டி, "நாம் இங்கு வஸ்துவையோ ஒரு சுவற்றையோ வணங்கவில்லை -- இந்த இடம் நமது அன்பரோடு தொடர்பு கொண்டுள்ள இடமாகும். நாம் இதனுள் உள்ள பூக்களை பூஜிக்கவில்லை. இங்கு நாம் நமது இதயத்தில் உள்ளவற்றை இறக்கி வைத்திட செல்கின்றோம்."

 

இந்த நினைவாலயத்தின் மற்றொரு விசேஷம் யாதெனில் அது பஹாவுல்லா தமது வாழ்வின் இறுதிப்பகுதியைக் கழித்த வீட்டிற்கு பக்கத்தில் உள்ளதுவே. பயணிகள் அங்கு சென்று அவர் வாழ்ந்த அறைக்குள் செல்லலாம். அந்த அறையில்தான் அவர் 1892ல் விண்ணேற்றமடைந்தார். இப்போது அந்த அறை அவரது வாழ்நாளில் எப்படியிருந்ததோ அதே போன்று இன்று மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய சில பொருட்களையும் அந்த அறையில் காணலாம்.

 

தமது தாய்நாடான இரான் நாட்டிலிருந்து அவர் நாடுகடத்தப்பட்டார். பிறகு அரசாங்கம் பஹவுல்லாவின் பல வருடகால ஆக்கோ நகர சிறைவாசம் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு பாஹ்ஜி எனப்படும் இந்த இடத்தில் பஹாவுல்ல தமது இறுதி வாழ்நாட்களைக் கழித்தார்.

 

ஹைஃபா நகரின் பொன்நிற குவிமாடம்.

 

பஹாவுல்லா அவர்கள் விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாகப் பல முறை ஹைஃபா சென்று வந்துள்ளார். அங்கு கார்மல் மலையின் மீது பாப் அவர்களின் நினைவாலயத்தை எழுப்புவதற்கு வெளிப்படையான கட்டளைகளை பிறப்பித்தார்.

 

1844ல் இரான் நாட்டில் தாம் கடவுளின் அவதாரப்புருஷர் எனவும், தாம் தமக்குப் பின் வரவிருக்கும் தம்மைவிட அதி உயர்ந்த மற்றொரு அவதாரப்புருஷரான, பஹவுல்லா அவர்களைப் பற்றி அறிவிப்பதே தமது நோக்கம் என பாப் அவர்கள் அறிவித்தார். இவர் 1850ல் இரான் நாட்டின் தப்ரிஸ் என்படும் ஊரின் பொது சதுக்கத்தில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருடைய விசுவாசிகள் அவருடைய திருவுடலை, தகுந்த முறையில் அடக்கம் செய்யக்கூடிய வரை பல வருடகாலம் ஒளித்து வைத்திருந்தனர்.

 

சுமார் அரை நூற்றாண்டுக்குப் பிறகு அவரது உடல் ஹைஃபா நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு, பைபிளில் "கடவுளின் மலை" என வர்ணிக்கப்படும் கார்மல் மலைமீது இறுதியாக அடக்கம் செய்யப்பட்டது.

 

பாப் அவர்களின் நினைவாலயத்தை அலங்கரிக்கும் பொன் நிற குவிமாடம் 1953ல் கட்டிமுடிக்கப்பட்டது. அதோடு அதைச் சுற்றியிருந்த தோட்டங்களும் அகலமாக்கப்பட்டன. 2001ல், இங்கு நினைவாலயத்திற்கு மேலும் கீழும் பூந்தோட்ட படித்தள வரிசைகள் அமைக்கப்பட்டன. கார்மல் மலையின் சரிவில் இப்படிகள் கீழிருந்து மேல் வரை ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமாக நீண்டிருக்கின்றன.

 

புனிதப்பயனிகளின் அனுபவங்கள்

 

"இங்கு வருவதற்காக பஹாய்கள் திட்டமிட்டுப் பலவருடங்களாக பணம் சேமித்து ஹைஃபா நகருக்கும் ஆக்கோ நகருக்கும் வருகின்றனர்," என்றார் திருமதி லேம்ப்பிள்

 

"தங்கள் சமய ஸ்தாபகர் நடக்கவும், கடவுளின் வார்த்தைகளை வெளிப்படுத்தவும், அவர்களுக்காகவும் உலக ஒற்றுமைக்காகவும் கொடுங்கோன்மைகளை அனுபவித்த அதே இடத்தில் விசுவாசிகள் பிரார்த்தனை செய்திட ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. மற்றும் அவர்கள் பெரும்பாலும் தங்களின் சமயத்தின் முப்பெரும் திருத்தகைகளான பாப் அவர்கள், பஹாவுல்லா அவர்கள் மற்றும் அப்து'ல்-பஹா அவர்களின் திருவுடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பிரார்த்தனை செய்திட வருகின்றனர்." என அவர் மேலும் கூறினார்.

 

ஐக்கிய அமெரிக்காவின் வட கேரொலினா நகரில் வாழும் ரோஜர் மற்றும் கேத்தி ஹார்மிக் தங்களின் முதல் புனிதப்பயணத்தை 2008ம் வருடம் ஜூன் மாதம் மேற்கொண்டனர்.

 

"நாங்கள் 30 வருடங்களுக்கும் அதிகமாக தம்பதிகளாக இருக்கின்றோம். அப்போதிருந்தே வரவேண்டும் என விரும்பியதுண்டு. நினைவாலயங்களுக்கு வருவது ஆன்மீக வாழ்க்கைப்பயணத்தின் உச்சக்கட்டமாகும். புனிதவாசற்படியில் நமது நெற்றியால் தொட்டு வணங்குவதற்கு வேறு எதுவும் ஈடாகுமா?" என திருமதி ஹார்மிக் கேட்டார்.

 

"புனிதப்பயணம் பஹாய்கள் தங்கள் சமயநம்பிக்கையை நடைமுறையில் காண உதவுகின்றது," என திரு ஹார்மிக் கூறினார். பஹாய் சமயத்தின் முக்கிய கோட்பாடு ஒரே கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் உலக ஒற்றுமையை உண்டாக்குவதாகும், மற்றும் இங்கு வரும் விசுவாசிகள் உலகம் முழுவதுமிருந்தும் வரும் மற்ற பஹாய்களை இப்புனித பூமியில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

 

"மனிதகுலத்தின் ஒருமைத்தன்மையை நேரில் அனுபவிப்பது பெரும் களிப்பூட்டுவதாக இருக்கின்றது. நான் இதுவரை செய்தது எதுவுமே அதற்கு ஈடாகாது," என்றார் அவர்.

 

புனிதப்பயணிகள் உலகம் முழுவதும் நடைபெறும் பஹாய் சமய மேம்பாடு குறித்த சொற்பொழிவுகளிலும் நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக்கொள்கின்றனர். இது அவர்களின் சொந்த சமூகங்கள் இப்பெருங்கண்ணோட்டத்திற்குள் எவ்வாறு பொருந்துகின்றன என்பது குறித்த அகக்காட்சியை வழங்கிட உதவுகின்றது என்றார் திருமதி லேம்ப்பிள்.

 

இருந்தபோதும், புனிதப்பயனத்தின் முக்கிய நோக்கம் நினைவாலயங்களி்ல் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்வதுமே ஆகும், மற்றும் அது எப்போதுமே ஒரு விசேஷ அனுபவமாகவே இருக்கும்.

 

"இந்த இடங்களில் ஒரு விசேஷ ஆன்மீகஆற்றல் சூழ்ந்துள்ளது. அது உணரக்கூடியது. மக்கள் இங்கு கடவுளின் அருகாமையை உணருகின்றனர்."

 

 

 

 

 

 

 

 

ஆக்காவின் முதன்முதல் புனிதப்பயணிகள்

 

பஹாவல்லா ஒட்டமான் அரசின் கைதியாக அந்த புராதன கோட்டை நகரான ஆக்கோவிற்கு 1868ல் வந்தவுடனேயே புனிதப்பயணிகள் அங்கு வர ஆரம்பித்துவிட்டனர்.

 

அவர் தமது தாய்நாடான இரானிலிருந்து சுமார் 15 வருடங்களுக்கு முன்பாக நாடுகடத்தப்பட்டிருந்தார். அவர் பாக்தாத், இஸ்தான்புல், எடிர்னே ஆகிய நகரங்களில் வசித்துப் பின் ஆக்கோ நகரத்திற்கு அனுப்பப்பட்டார். அப்போது ஆக்கோ ஒட்டமான் அரசின் எல்லையில் ஒரு புறக்காவல் தலமாக இருந்தும், கைதிகளை நாடு கடத்தவும் அது பயன்பட்டு வந்தது.

 

விசுவாசமிக்க நம்பிக்கையாளர்கள் அவர் எங்கே இருக்கின்றார் எனத் தீர்மானித்து பல மாதங்கள் கால்நடையாகவே அவரது ஒரு கண நேர காட்சிக்காக பிராயாணம் செய்வார்கள். கோட்டையின் உள்ளே அனுமதிக்கப்படாததால், அவர்கள் கோட்டைக்கு வெளியே நின்று கோட்டையை நோக்கி, பஹாவுல்லா அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டாவது மாடியிலுல்ல அவரது அறையின் ஜன்னலுக்கு வந்து ஒரு நொடியாவது காட்சி கொடுக்க மாட்டாரா, அப்போது அவரது கையையாவது காணமாட்டோமா என பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

 

பின்னாளில் அதிகாரிகள் பஹாவுல்லாவை கோட்டைக்கு வெளியே வசிக்க அனுமதித்த போது, புனிதப்பயணிகள் சில வேளைகளில் அவரது அன்மையை அடைந்து தங்கள் பக்தியை வெளிப்படுத்தவும், புதிய திருவெளிப்பாடு குறித்த விளக்கங்களைக் கேட்கவும் முடிந்தது.

 

இக்காலத்திற்கான கடவுளின் திருவாய்மொழியாளர் எனத் தாங்கள் கருதிய தங்கள் தலைவருடனான தொடர்புக்கு ஏங்கிக்கிடக்கும் இரான் அல்லது வேறு இடங்களில் உள்ள பஹாய்களுக்கு புனிதப்பயணிகள் கொண்டு செல்ல ஒரு நிருபம் அல்லது ஒரு பிரார்த்தனையை சில வேளைகளில் பஹாவுல்லா வரைவது உண்டு

 

அவரது மறைவிற்குப் பின்னரும் பயணிகள் வந்துகொண்டுதான் இருந்தார்கள் -- அவர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பிரார்த்தித்தும் அவருடைய மகனான அப்து'ல்-பஹாவிற்கு மரியாதை செலுத்தவும் வந்தார்கள். அப்து'ல்-பஹாவை பஹாவல்லா தமது வாரிசாக பஹாய் சமூகத்தை வழிநடத்த நியமித்திருந்தார், மற்றும் அவருக்குப் பிறகு ஷோகி எஃபெண்டியை பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டார்.

 

சமயம் மேலும் மேலும் விரிவடைய மேல்நாடுகளிலிருந்தும் விசுவாசிகள் வர ஆரம்பித்தனர். அவர்களுள் பெரும்பாலும் அமெரிக்கர்களான முதல் புனிதப்பயணிகள் 1898ல் வந்தனர். அவர்கள் பஹாவுல்லாவின் கல்லறைக்கு ஒரு விசேஷ விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதைப் பற்றி குழு அங்கத்தினர் ஒருவரான மே போல்ஸ் பின்வருமாறு எழுதினார்:

 

"திரையி்டப்பட்ட கதவை நாங்கள் நோக்கிய போது எங்கள் ஆன்மாக்கள் எங்களுள் கிளர்ச்சியுற ஆரம்பித்தன. அவ்வேளை இறைவனின் கருணை எங்களை ஆட்கொள்ளாமல் இருந்திருந்தால் அப்போது எங்கள் ஆன்மாக்களின் அடித்தலங்களையே அதிரச்செய்திட்ட களிப்பு, சோகம், அன்பு மற்றும் பேராவலின் அழுத்தத்தைத் நாங்கள் தாங்கிக்கொண்டிருக்கவே இயலாமல் போயிருக்கும்.".