பஹாவுல்லா

சுருக்க வரலாறு

இல்லம்

இக்கால தூதரான பஹாவுல்லா பற்றிய சுருக்கமான வரலாறு

 

கடவுளின் அவதாரங்கள் எவரையுமே நாம் நேரில் கண்டதில்லை. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையெல்லாம் சிரமத்துடனேயே தெரிந்துகொள்ள முடியும் மற்றும் சில வேளைகளில் அதுவும் முடியாது. ஆனால், நவயுக அவதாரம் ஒருவர் உண்டென்றால் அவர் பஹாவுல்லா ஆவார். அவரை நேரில் காணும், அவருடன் உரையாடும், அவரது குரலைக் கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் கிமு 1970 வரையிலும் வாழ்ந்திருந்தனர். பஹாவுல்லா வாழ்ந்த இடங்களை அவர் வாழ்ந்தபோது இருந்த அதே நிலையில் நாம் நேரில் காணலாம், அவர் பயன்படுத்திய பொருள்கள் உள்ளன மற்றும் அவர் கைப்பட எழுதிய நிருபங்களும் ஆயிரக்கணக்கில் உண்டு.

 

பாலப்பருவம்

 

பஹாவுல்லா 1817ல், பாரசீகத்தின் தெஹரான் நகரில், நவம்பர் 12ல் ஓர் உயர் குடும்பத்தில் பிறந்தார். அவர் குழந்தையாக இருந்த போது எப்போதும் அமைதியாகவும் அழாமலும் இருந்து தமது பெற்றோரை வியப்பில் ஆழ்த்தினார். அவருக்கு 5 வயதானபோது அவரது தந்தை கனவு ஒன்று கண்டார். அதில் பஹாவுல்லா உலகம் முழுவதும், எல்லா மக்களுக்கும் போதகராக விளங்குவதாக கனவு ஒன்று கண்டார்.

 

இறைவனின் அவதாரங்கள் பள்ளி சென்று பயின்று அறிவு பெறுவதில்லை. அதே போன்று பஹாவுல்லாவும் முறையாக பள்ளி சென்று கல்வி பயின்றதில்லை. ஆனால், அவர் இளைஞராக இருந்த போதே மத குருக்களுக்கும் கல்விமான்களுக்கும் இறைவனின் இரகசியங்களைப் பற்றி போதித்தார். தமது அன்பு, பகுத்தறிவு மற்றும் விவேகத்தினால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

 

ஒரு நிரூபத்தில் பஹாவுல்லா தாமே தமது குழந்தைப் பருவத்தில் தெஹ்ரானில் தம்முடைய சகோதரர்கள் ஒருவரின் திருமண கொண்டாட்டத்திற்கு தாம் சென்றிருந்தபோது அங்கு நிகழ்ந்த சம்பவம் பற்றிய ஓர் கதையினைக் கூறுகிறார்:

 

அந்த காலத்தில், தெஹ்ரானில் பழக்கமாக இருந்ததுபோல், ஏழு நாட்களூம் இரவுகளூம் ஓர் மாபெரும் விருந்து அளிக்கப்பட்டது. கடைசி நாளின் போது விருந்தினரின் பொழுது போக்கிற்காக புகழ்பெற்ற ஓர் அரசர் பற்றிய ஓர் பொம்மலாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக கூடாரம் ஒன்று அமைக்கப்ட்டிருந்த முற்றத்தை நோக்கியிருந்த ஓர் மேல் அறையில் பஹாவுல்லா அமர்ந்திருந்தார். அரசரின் வருகையை அறிவிக்கும் மனித வடிவம் கொண்ட ஒரு சில உருவங்களின் வருகையுடன் பொம்மலாட்டம் துவங்கியது என்று அவர் கூறுகிறார். பிறகு மேலும் பல உருவங்கள் தோன்றின. அரசரின் வருகையை முன்னிட்டு சிலர் சுத்தம் செய்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் தண்ணீரை தெளித்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு நகர முரசறைவோர் காட்சியில் தோன்றி அரசரை சந்திப்பதற்காக ஒன்றுகூடும்படி மக்களைக் கேட்டுக் கொண்டார். பிறகு பல உருவங்கள் குழுக்களாக தோன்றி, சரியான இடங்களில் அமர்ந்தனர். இறுதியாக, அரசர் கம்பீரமாக வருகை தந்தார். தமது சிரசின் மீது கிரீடம் அணிந்து, அவர் மெதுவாகவும் கம்பீரமாகவும் நடந்து ஓர் சிம்மாசனத்தின் மீது அமர்ந்தார். துப்பாக்கிகள் சுடப்பட்டன; எக்காளங்கள் ஒலித்தன. கூடாரம் புகையால் நிரம்பியது. புகை கலைந்த பின், அரசர் தமது சிம்மாசனத்தின் மீதே அமர்ந்துக் கொண்டு, அவரது முன்னிலையில் கவனத்துடன் நிமிர்ந்துக் கொண்டிருந்த மந்திரிகள், இளவரசர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரால் சூழ்ந்திருந்தார். அந்த வேளையில், ஒரு திருடன் அரசனின் முன் கொண்டு வரப்பட்டான். அரசர் திருடனுடைய தலை சிரச்சேதம் செய்யப்பட ஆணையிட்டார். எவ்வித தாமதமுமின்றி, தலைமை சிரச்சேதம் செய்பவர் அரசரின் ஆணையை நிறைவேற்றினார். சிரச்சேதத்திற்குப் பிறகு அரசர் தம்முடைய மந்திரிகளுடனும், அதிகாரிகளூடனும் உரையாடலில் ஈடுபட்டார். திடீரென்று எல்லைப்புறங்கள் ஒன்றில் எதிரெழுச்சி ஏற்பட்டதாக செய்தி வந்தது. இந்த எழுச்சியை முறியடிப்பதற்காக படைகள் அனுப்பப்பட்டன. சில நிமிடங்களூக்குப் பிறகு, பின்னணியில் பீரங்கியின் ஒலி கேட்டது. அரசரின் படைகள் எதிர்ப்பாளர்களூக்கு எதிராக போரில் ஈடுபட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

இவ்வாறு அந்த பொம்மலாட்டம் தொடர்ந்தது.

 

பஹாவுல்லா இந்த காட்சியின் தன்மையால் மிகவும் குழப்பமடைந்தார். அது முடிந்தவுடன் திரைச்சீலை போட்டுவிட்ட பிறகு, கூடாரத்தின் பின்புறத்திலிருந்து, ஒரு மனிதன் தனது தோளின் கீழ் ஒரு பெட்டியை ஏந்திக் கொண்டு வருவதை அவர் பார்த்தார். "இந்த பெட்டி என்ன?" "இந்த காட்சியின் தன்மை என்னவாக இருந்தது?" என்று பஹாவுல்லா வினவினார். "நீங்கள் கண்ட அனைத்தும், அரசர், இளவரசர்கள் மற்றும் மந்திரிகள், அவர்களூடைய ஆடம்பரம் மற்றும் புகழ், அவர்களூடைய வலிமை மற்றும் சக்தி ஆகிய இந்த ஊதாரியான அலங்கார ஆபரணங்கள் அனைத்துமே இப்போது இந்த பெட்டியில் அடங்கியுள்ளது" என்று அம்மனிதன் பதில் அளித்தான். இந்தக் கூற்று பஹாவுல்லாவின் மனதில் ஓர் பெரிய எண்ணப்பதிவினை ஏற்படுத்தி அவர் இவ்வாறு கூறியுள்ளார் :

 

". . அந்த நாளிலிருந்து, உலகின் அலங்கார ஆபரணங்கள் அனைத்தும் இந்த இளைஞரின் பார்வையில், அதே பொதுக் காட்சியைப் போல் இருந்துள்ளன. அது ஓர் கடுகளவிற்கே என்றாலும், அவை எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருந்ததில்லை, கொண்டிருக்கவும் முடியாது . . . . விரைவிலேயே இந்த வெளிப்புற அலங்கார ஆபரணங்கள், குவிக்கப்பட்டுள்ள இந்த பொக்கிஷங்கள், இந்த உலக ஆடம்பரங்கள், பெருந்திரளாக குவிக்கப்பட்ட இந்த போர் அணிப்பிரிவுகள், இந்த பகட்டாரவாரம், இந்த பெருமைமிக்க மற்றும் திணர வைக்கும் ஆன்மாக்கள் _ அனைத்துமே, அந்த பெட்டிக்குள்ளே செல்வது போல், புதைகுழியின் எல்லைக்குள் சென்றுவிடும். உள்நோக்கினைக் கொண்டுள்ளவர்களின் பார்வையில், இந்த முரண்பாடு, கருத்து வேறுபாடு மற்றும் வீண் தற்பெருமை அனைத்துமே, குழந்தைகளின் விளையாட்டு போலவே இருந்துள்ளது, என்றென்றும் அவ்வாறே இருக்கும்."

 

பஹாவுல்லாவின் குழந்தைப் பருவத்துடன் சம்பந்தப்பட்ட மற்றொரு கதையானது, அவரது தந்தையார் கண்ட ஓர் கனவுடன் தொடர்புடையது. அந்தக் கனவில் பஹாவுல்லா:

 

". . . ஓர் பரந்த எல்லையற்ற சமுத்திரத்தில் நீந்திக் கொண்டிருந்தார். சமுத்திரத்தை ஒளிபெறச் செய்த ஓர் பிரகாசத்துடன் அவரது உடலானது தண்ணீர் மீது ஒளி வீசியது. தண்ணீருக்கு மேல் தெளிவாகக் காணப்பட்ட அவருடைய தலையினைச் சுற்றி, அவருடைய நீண்ட கருங்கூந்தல், அவைகளின் மீது தாராளத்துடன் மிதந்துக் கொண்டு எல்லாத் திசைகளிலும் விரிந்து பரவிய வண்ணமாக இருந்தது. திரளான மீன்கள் அவரைச் சுற்றி வந்திருந்து, ஒவ்வொன்றும் ஒரு முடியின் இறுதி முனையை இறுகப் பற்றிக் கொண்டிருந்தது. அவருடைய திருமுகத்தின் ஒளிர்வினால் கவரப்பட்ட அவை, அவர் நீந்திய எத்திசையிலும் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். அவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும், அவருடைய தலைமுடியினை அவை எவ்வளவு உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தபோதும், ஒரு முடிகூட அவருடைய தலையிலிருந்து பிரிக்கப்படாதது போல் இருந்தது. எந்த ஒரு சிறிய காயமும் அவரை பாதிக்கவில்லை. சுதந்திரமாகவும், கட்டுப்படுத்தப்படாமலும், அவர் தண்ணீரின் மேல் சென்றுக் கொண்டிருந்தார், அவையெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து சென்றன."

 

பஹாவுல்லாவின் விவேகசிந்தனையை விளக்கும் மற்றொரு கதையும் உள்ளது:

 

பஹாவுல்லா சிறு வயது முதலே தெய்வ அவதாரங்கள் மீது பற்றும் பெரும் மரியாதையும் உடையவராக இருந்தார். அவர்களில் யாரையும் பிறர் குறைவாகப் பேசினால் அவர் உடனடியாக எதிர்த்துவிடுவார். பஹாவுல்லாவுக்கு ஏற்க்குறைய பதினான்கு வயது இருக்கும் போது அவர் ஓர் சமய விளக்கவுரை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள நேரிட்டது. விளக்கவுரை வழங்கிய மதகுரு தமது அறிவு ஆன்மீக நிலை குறித்து சற்று பெருமிதம் கொண்டவர் போல் உரையாற்றினார். பற்றின்மை பற்றி அவர் விளக்கமளித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர், "என்னுடைய பற்றின்மை எத்தகையது என்றால் இப்போது யாராவது என்னிடம் வந்து இயேசு நாதர் உங்கள் வீட்டின் வாசலில் நிற்கின்றார் எனக் கூறினால் நான் சற்றும் அசரவே மாட்டேன்", என்றார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த பஹாவுல்லா, "சரி, அரசர் உங்கள் நண்பர் என்பது எல்லாருக்கும் தெரியும். அரசரின் தலைமை தலைவெட்டியும் அவருடன் பத்து வீரர்களும் உங்கள் வீட்டின் வாசலில் நிற்கிறார்கள் என யாராவது கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என பஹாவுல்லா வினவினார். அதற்கு அந்த மதகுரு "அவ்வாறு ஏற்பட்டால் நான் சற்று பதற்றமுறவே செய்வேன்," என்றார். அவ்வாறாக இருப்பின் நீங்கள் உங்கள் பற்றின்மை குறித்து இவ்வாறாக கூறக்கூடாது," என கூறினார்.

 

திருமணம்

 

பஹாவுல்லாவுக்கு 18 வயதானபோது அவருக்கு திருமணம் நடந்தது. இத்திருமணத்தின் வாயிலாக அவருக்கு பல குழந்தைகள் பிறந்தன. பிற்காலத்தில் பஹாவுல்லாவின் குடும்பத்தினர்கள், அவரது சகோதரர்கள் மற்றும் பலரும் அவரோடு சேர்ந்து நாடுகடத்தல்களையும் சிறைவாசத்தையும் அனுபவிக்க நேர்ந்தது.

 

பாப் அவர்களை ஏற்றுக்கொண்டது

 

1844ல் ஷிராஸ் நகரில் சையிட் அலி முகமட் அல்லது "பாப்" எனப்படும் இளைஞர் ஒருவர், தம்மை ஓர் கடவுளின் அவதாரம் எனப் பிரகடணப்படுத்திக் கொண்டார். தம்முடைய நோக்கம் தமக்குப் பின்னால் வரவிருக்கும் மற்றொரு மாபெரும் இறைத்தூதரின் வருகையை அறிவிப்பதே என தெரிவித்தார். இந்த பாப் என்பாரை பஹாவுல்லா தாமே முதலில் அறிந்து ஏற்றுக்கொண்டார்.

 

சிறைவாசம்

 

இதன் பிறகு நடந்த சில முக்கிய சமய ரீதியிலான சம்பவங்கள், பாரசீக நாட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கின. இதன் விளைவாக பாப் அவர்கள் மரணதண்டனைக்கு ஆளாகி 750 இராணுவ வீரர்களின் தோட்டாகளுக்கு இறையாக்கப்பட்டார். பஹாவுல்லாவும் பாப் அவர்களின் மற்ற சீடர்களும், பெரும் கொடுமைகளுக்கு உள்ளாகி, அதில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களையும் இழக்க நேர்ந்து. பஹாவுல்லாவும் கைது செய்யப்பட்டு, கல்லால் அடிக்கப்பட்டு, "பாஸ்டினாடோ " எனும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். பிறகு தெஹரான் நகரிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற "சிய்யாச்சால் எனும் பாதாளச் சிறைக்குள் தள்ளப்பட்டு கொடும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டார். சுமார் 4 மாதங்கள் இந்தச் சிறையில் அவர் இருந்தார். இருள் சூழ்ந்த இந்தப் பாதாளத்தில்தான் பாப் அவர்களால் வாக்களிக்கப்பட்ட அவதாரம் தாமே என்பதை அவருக்கு புனித ஆவி அசரீரியான ஒரு புனித மங்கையின் உருவத்தில் தோன்றி உணர்த்தியது.

 

இந்த நிகழ்வைப் பற்றி நாம் பின்வருமாறு தெரிந்துகொள்கின்றோம்

 

சியாச்சாலில், இறைவன் பஹாவுல்லாவிற்கு அவருடைய உயர்ந்த ததானத்தை அறிவித்தார். இருளில் ஆழ்ந்திருந்து, மிகவும் அருவருக்கத்தக்க காற்றினை சுவாசித்திருந்து, தமது திருப்பாதங்கள், இரு பிளவான தொளை மரச்சட்டங்களில் செருகி வைத்துப் பொருத்தப்பட்டிருந்து, அவருடைய கழுத்தானது மாபெரும் சங்கிலி ஒன்றால் அழுத்தப்பட்டிருந்து, பஹாவுல்லா தம்முடைய ஆன்மாவினுள் இறைவனுடைய திருவெளிப்பாட்டின் முதல் தூண்டுதல்களை பெற்றார். இந்த பயங்கரமான சூழ்நிலைகளில் "மாபெரும் ஆவியானது" தன்னை அவருக்கு வெளிப்படுத்தி, இறைவனுடைய திருமொழியினை தெரிவித்திட எழுந்திடும்படி அவருக்கு ஆணையிட்டது. ஓர் உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து மண்ணின் மீது வீழ்ந்திடும் ஒரு பேரருவியைப் போல், தம்முடைய தலையின் உச்சியிலிருந்து தமது மார்பின் மீது ஏதோ வழிந்தோடுவதாக அவர் சில வேளைகளில் உணர்வார். விண்ணுலகின் மங்கை தம்முன் தொங்கிய நிலையிலிருந்து, தம்மை உள்ளூர மற்றும் வெளிப்புற உருவுடன் பேசிக் கொண்டு, உலகங்களின் பேரன்பிற்குரியவர், இறைவனின் அழகானவர், இறைவனுடைய மாட்சிமையின் சக்தி என்றெல்லாம் குறிப்பிடுவதை அவர் கண்டார். தம்மாலும், தமது எழுதுகோலினாலும், இறைவன் எழச்செய்யவிருப்பவர்களின் துணையாலும், தாம் வெற்றியடையச் செய்யப்படுவார் என்று அவர் உறுதியளிக்கப்பட்டார்.

 

நாடுகடத்தப்படுதல்

 

இதன் பிறகு பாரசீகத்தின் இரஷ்ய நாட்டுப் பிரதிநியின் தலையீட்டினால், பஹாவுல்லா குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு, விடுவிக்கவும் பட்டார். விரும்பினால் அவருக்கு இரஷ்யாவில் அடைக்கலம் தருவதாகவும் இந்தத் தூதர் கூறினார் ஆனால் பஹாவுல்லா எல்லாம் இறைவன் சித்தம், எனக் கூறி பாக்தாத் நகருக்கு நாடு கடத்தப்பட பஹாவுல்லா சம்மதித்தார். இந்தச் சிறைச்சாலை வாசம் பஹாவுல்லாவின் திருமேனியில் ஏற்படுத்திய வடுக்கள் அவர் விண்ணேற்றம் அடையும் வரை நிலைத்திருந்தன. சிறைச்சாலையில் பட்ட துன்பங்கள் போதாதென, காடு மலைகளையெல்லாம் கடும் பனியிலும் குளிரிலும் கடந்து பாக்தாத் நகர் சென்று சேர்ந்தார். அதன் பிறகும் அவரது எதிரிகள் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை, பாக்தாத்திற்குப் பிறகு துருக்கி எனவும் அதன் பின் பாலஸ்தீனம் எனவும் அவர் நாடு கடத்தப்பட்டார். அப்போது பாலஸ்தீனமாகவும் இப்போது இஸ்ரேல் எனவும் பெயர் கொண்ட நாட்டிலேயே அவர் தமது மீதமிருந்த வாழ்நாட்களை கழித்தார்.

 

பஹாவுல்லா தாம் ஆண்டவனின் அவதாரம் என அறிவித்தது

 

1863-இல் பஹாவுல்லா பாக்தாத் நகரை விட்டு துருக்கி நாட்டிற்கு பிரயாணம் செய்யும் வழியில் டைகிரிஸ் நதிக் கரையில் 'ரித்வான்' எனப்படும் பூங்காவில் 12 நாட்கள் தங்கினார். இங்கு அவர் நுழைந்த முதல் நாள் அன்று அவர் தம்முடைய இறைத் தூதர் எனும் ஸ்தானத்தை பகிரங்கமாக உலகிற்கு அறிவித்தார். உலகில் ஒரு புதிய சமயம் தோன்றிவிட்டது, புதிய கோட்பாடுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. பஹாவுல்லாவின் ஆன்மீக போதனைகள் மனிதனை இறைவனின் அன்மைக்கு வழிநடத்திச் செல்ல சக்தி வாய்ந்தவை மற்றும் அவர்தம் சமுதாய போதனைகள் மக்களை ஒற்றுமை படுத்தக்கூடியவை. பஹாவுல்லா, உலகில் இனி கடவுளின் ஆட்சியே நடக்கும் என அறிவித்தார்.

 

உலகின் அரசர்களுக்கும் ஆளுனர்களுக்கும் அறிவித்தது

 

அடுத்த சில வருடங்களில் பஹாவுல்லாவின் புகழ் எங்கெங்கும் பரவத் தொடங்கியது. அவர் உலகின் அரசர் மற்றும் ஆளுனர்களுக்கு தமது இறைத்தூதர் நிலையைப் பிரகடனப்படுத்தி, உலகில் ஒற்றுமை நிலவ உழைக்கும்படி அவர்களை அழைத்தார். இறைவனின் போதனைகளுக்கு அவர்கள் செவிசாய்க்காமல் தங்கள் மனம் போல் நடந்தார்கள் என்றால் உலகில் அழிவும் அராஜகமுமே மிஞ்சும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் யாருமே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. சில எளிய தூய உள்ளம் கொண்ட சாதாரன மக்களே அவரை ஏற்று உலகம் முழுவதும் அவர் செய்தியை பரவச் செய்தனர்.

 

பஹாவுல்லா பட்ட துன்பங்களும் கொடுமைகளும்

 

பஹாவுல்லா செல்வச் சீமானாகப் பிறந்தாலும், இறுதியில் தமது செல்வம் அனைத்தையும் இழந்து தமது குடும்பத்தாரோடு நாடு கடத்தவும் பட்டார். அவர் முதன் முதலில் அடைபட்ட 'சியாச் சால்' சிறை ஒரு சிறையே அல்ல. நீர் தேக்கி வைக்க பயன்படுத்தப் பட்ட ஒரு பாதாள அறை, அல்லது குழி அது. உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஒரே வழிதான் இருந்தது. இருள் சூழ்ந்த அந்த அறையில் சேறு நிறைந்து, வருணிக்கமுடியாத துர்நாற்றம் மிகுந்தும் இருந்தன. அங்கு பலவித கைதிகள் அடைபட்டிருந்தனர். பலர் உடுக்கத் துணி கூட இல்லாமல் இருந்தனர். பஹாவுல்லாவின் கழுத்தில் 20 மற்றும் 50 கிலோகிராம் எடையுள்ள இரண்டு சங்கிலிகள் ஒன்று மாற்றி ஒன்று போடப்பட்டன. இதன் விளைவாக அவர் கழுத்துக் கூன் விழுந்து போனார். சங்கிலிகள் அவர் தோள் பட்டையை அழுத்தி வெட்டி எழும்பைத் தொட்டன. இளைய வயதினாரக இருந்த பஹாவுல்லா அந்த அறையில் 4 மாதங்கள் அடைபட்டு, தலை முடியெல்லாம் நரைத்த நிலையில் முதிய தோற்றத்துடன் வெளிய வந்தார்.

 

பஹாவுல்லாவின் திருவாக்குகள்

 

பஹாவுல்லா தமது வாழ்நாளில் எழுதிய அனைத்தையும் ஒன்று சேர்த்தால் சுமார் 100 நூல்களை தொகுக்கலாம். அவற்றில் பெரும்பாலான படைப்புக்கள் இன்னமும் மொழிபெயர்க்கப்படாமலேயே உள்ளன. அவர் மனிதர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களைப் பற்றியும் எழுதினார். மனிதர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமான எல்லாக் கேள்விகளுக்கும் அவர் வாசகங்களில் பதில் காணலாம். பஹாய் சமயத்தின் அதி புனித நூலான 'கித்தாப்-இ-அக்தாஸ்' எனும் நூலை வெளியிட்டார்.

 

பஹாவுல்லாவின் மறைவு

 

பஹாவுல்லா தமது குடும்பத்தினரோடு துருக்கிக்கும் பிறகு தற்போதைய இஸ்ரேலைச் சேர்ந்ததும் அக்காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு துறைமுகப் பட்டினமாக இருந்த 'ஆக்கோ'வுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த 'ஆக்கோ' அன்றைய ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் குற்றவாளிகளுக்குச் சிறை நகராக விளங்கியது. 'சியாச் சால்' சிறையைவிட இந்த 'ஆக்கோ' நகரும், சிறையும் படுமோசமானவை. சுருங்கச் சொன்னால், ஒரு பறவை 'ஆக்கோ' நகரின் மேல் பறந்தால், அது அடுத்த கனமே சுருண்டு மடியும் என்பது அன்றைய வழக்காகும் ! இந்தச் சிறையில் பஹாவுல்லா அடைபட்ட முதல் மூன்று நாள் உண்ண உணவின்றி தமது குடும்பத்தாரோடு அல்லற்பட்டார். காலப்போக்கில் அரசாங்கத்தின் பிடி சிறிது தளர்ந்து அவர் நகருக்கு வெளியே சிறிய வீடு ஒன்றில் தங்க அனுமதிக்கப்பட்டார்.

 

சிறிது காலத்திற்கு பிறகு அவர் ஆக்கோ நகருக்கு வெளியே "மாஸ்ராயே" எனும் இடத்தில் ஒரு வீட்டில் வசித்தார். பிறகு அப்து'ல்-பஹா பாஹ்ஜி எனப்படும் இடத்தில் ஒரு மாளிகையை வாங்கி அதை சீர்செய்து பஹாவுல்லாவை அங்கு தங்கவைத்தார். பஹாவுல்லா தமது இறுதிகாலம் வரை இந்த மாளிகையிலேயே வசித்தார்.

 

1892ம் வருடம், மே மாதம் 29ம் தேதி அதிகாலை 3.00 க்கு பஹாவுல்லா இந்த உலக வாழ்வை நீத்து இறைவனடி சேர்ந்தார். அவர் மறைவை அவர் மூத்த மகனாகிய அப்துல் பஹா, "பஹா சூரியன் அஸ்தமித்துவிட்டது" எனத் தந்தி மூலம் துருக்கி சுல்தானுக்குத் தெரியப்படுத்தினார். பஹாவுல்லா பாஹ்ஜி மாளிகையின் அருகில் இருந்த வீட்டின் அறை ஒன்றில் அடக்கம் செய்யபட்டார். பஹாய்களின் புனித இடங்களில் பஹாவு்லலா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இந்த பாஹ்ஜி மாளிகையும் ஒன்றாகும்.

 

பஹாவுல்லா, தமக்குப் பிறகு தமது மகனான அப்துல் பஹாவை உலக பஹாய் சமூகத்திற்கு தலைமை ஏற்க நியமித்தார். அப்துல் பஹா மூலம் பஹாய் சமய போதனைகள் அமெரிக்க நாடுவரை பரவி, தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளன.

 

accaபஹாவுல்லா அவர்கள் இறுதியாக வாழ்ந்த பாஹ்ஜி மாளிகை

 

 

accaபாஹ்ஜி மாளிகையின் மற்றொரு தோற்றம்

 

 

accaபஹாவுல்லாவின் நினைவாலய நுழைவாசல்

 

 

accaபஹாவுல்லாவின் நினைவாலயத்திற்குச் செல்லும் முக்கிய வெளி வாசல்களில் ஒன்று

 

 

accaபாஹ்ஜி மாளிகையின் பழந்தோற்றங்களில் ஒன்று

 

 

accaபஹாவுல்லாவின் நினைவாலயத்தின் வெளித்தோற்றம்

 

 

acca0பஹாவுல்லா இரண்டு ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட ஆக்கா சிறைச்சாலை (இன்று பழம்பொருள் காட்சியகம்)

 

 

accaபஹாவுல்லா சிறைவாசம் பெற்ற அறையின் உள்தோற்றம்

 

 

accaபஹாவுல்லா விண்ணேற்றமடைந்த அறையின் ஜன்னலுக்கு வேளியே தெரியும் காட்சி

 

 

accaஇன்று எடிர்னே என வழங்கப்படும் அன்றைய ஏட்ரியாநோப்பிளில் பஹாவுல்ல வாழ்ந்து ஒரு வீட்டின் வெளித்தோற்றம்

 

siyah chal

பல பஹாய்கள் தங்கள் சமய நம்பிக்கைக்காக கொல்லப்பட்ட இடம். (x) குறியிடப்பட்டுள்ள இடமே சியாச்சால் எனப்படும் கருங்குழி இருக்கும் இடம்.

 

siyah-chal

கருங்குழியின் உள்தோற்றம்