பஹாய் திருவாக்குக் குறிப்புகள்

சில பொறுக்கு மணிகள்

 

இல்லம்

பஹாவுல்லாவின் மறைமொழிகள்

 

separator

 

 

ஆவியின் மைந்தனே!

எமது முதல் அறிவுரை இதுவே: தூய்மையும், அன்பும், பிரகாசமும் நிறைந்த உள்ளத்தினைக் கொண்டிருப்பாயாக, அதனால் தொன்மையும், அழியாத்தன்மையும் கூடிய என்றும் நிலைத்திருக்கக்கூடியதுமான அரசு உனதாகும்.

 

நண்பனே!

உனது உள்ளமெனும் பூங்காவில் அன்பெனும் ரோஜாவைத் தவிர வேறெதனையும் பயிரிடாதே, நேசம் ஆசை எனும் இராப்பாடிப் பறவையின்பால் உனது பிடியைத் தளரவிடாதே. நேர்மையாளர் நட்பை பாதுகாத்து இறைநம்பிக்கையற்றோர்பால் நட்பு வைக்காதே!

 

அதீதரின் மைந்தனே!

மரணத்தை உனக்கு மகிழ்ச்சியின் தூதனாக ஆக்கியுள்ளோம். நீ ஏன் வருந்துகிறாய்? ஓளியின் பிரகாசத்தினை உன் மீது விழுமாறு செய்துள்ளோம். நீ ஏன் அதிலிருந்து உன்னை மறைத்துக்கொள்கின்றாய்?

 

மனிதனின் புத்திரனே!

நீயே ஒரு பாவியாயிருக்கும் பொழுது மற்றவர்களின் பாபங்களைப் பற்றி மூச்சு விடாதே. இக்கட்டளையை மீறினால் நீ பழிப்பிற்கு ஆளாவாய், அதற்கு யாமே சாட்சியம் கூறுகின்றோம்.

 

மனிதனின் புத்திரனே!

செல்வம் உன்னை வந்தடையுமாயின் களிப்படையாதே; தாழ்வின் தாக்குதலுக்கு ஆளாகும்பொழுதும் துயரங்கொள்ளாதே; ஏனெனில் இவ்விரண்டுமே மறைந்து இல்லாதொழிந்துவிடும்.

 

 

separator

 

 

பஹாவுல்லாவின் புனித வாசகங்கலிருந்து சில பொருக்குமணிகள்

 

பிரபுவே, எனதாண்டவரே, நீர் போற்றவும் மகிமைப்படுத்தவும் படுவீராக! எந்த ஒரு நாவுமே, அதன் விவேகம் எத்துணை ஆழமானதாயினும், உம்மைப் பொருத்தமுற புகழ்ந்திட இயலாதென எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தும் எவ்வாறு யான் உம்மைக் குறித்துரைக்க இயலும்; அல்லது, மனித மனம் என்னும் பறவையின் பேராவல், எவ்வளவு மிகுதியாயிருப்பினும், எங்ஙனம் அது உமது மாட்சிமை, அறிவு என்னும் விண்ணுலகத்திற்கு உயர்ந்திடுவோம் என நம்பிக்கைக் கொண்டிட இயலும்.

 

உலகத்தின் மக்களுக்கும் இனங்களுக்கும் விதிக்கப் பட்ட அந் நேரம் இப்பொழுது வந்துவிட்டது. வேத நூல்களில் குறிக்கப் பட்டுள்ளவற்றிற்கிணங்க, இறைவனின் வாக்குறுதிகள் அனைத்தும், நிறைவேற்றப்பட்டுவிட்டன. சையோனிலிருந்து இறைவனின் சட்டம் அறிவிக்கப் பட்டுவிட்டது. ஜெருசலமும் அதனைச் சூழ்ந்துள்ள மலைகளும் அவரது வெளிப்பாட்டின் ஒளியினால் நிரப்பப்பட்டுள்ளன. ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியுமான ஆண்டவனின் திருநூல்களில் வெளிப்படுத்தப் பட்டுள்ளவற்றைத், தனது உள்ளத்தினில் வைத்து ஆழச் சிந்திக்கும் மனிதன் மகிழ்வெய்துவான். இறைவனின் அன்புக்குப் பாத்திரமானோரே, இதனைக் குறித்துத் தியானித்து, அவரது திருவாக்கின்பால் கவனங் கொள்வீராக. அதனால் நீங்கள், அவரது கிருபை, கருணை ஆகியவையின் காரணமாக திடப்பற்று என்னும் தெளிவான நீரூற்றிலிருந்து நிரம்பப் பருகி அவரது சமயத்தில் நிலையான, அசைக்கவியலாத பருவதத்தைப் போல் ஆவீராக.

 

ஐசாயாவின் திருநூலில் எழுதப்பட்டடுள்ளது: "பிரபுவின்பாலுள்ள அச்சத்தினாலும், அவரது மாட்சிமையின் புகழொளியின்பொருட்டும் பாறையினுள் நுழைந்து, புழுதியினுள் உங்களை மறைத்துக் கொள்ளுங்கள்." இத் திருவாசகப் பகுதியினைத் தியானிக்கும் எந்தவொரு மனிதனும் இச் சமயத்தின் உன்னத நிலைதனை அங்கீகரிக்கத் தவறவோ, இறைவனுக்கே சொந்தமான இந் நாளின் மேன்மைமிக்க தன்மையின்பால் சந்தேகங் கொள்ளவோ இயலாது. அத் திருவாசகத்தைத் தொடர்ந்து இவ்வார்த்தைகள் வருகின்றன: "பிரபுவாகிய அவர் ஒருவர் மட்டுமே அந் நாளில் மேன்மைப்படுத்தப்படுவார்." இதுவே, அதி உயரிய எழுதுகோல் எல்லாத் தெய்வீகத் திருநூல்களிலும் மேன்மைப்படுத்தியுள்ள நாள். அவற்றுள் அவரது தெய்வீகத் திருநாமத்தின் மகிமையினைப் பிரகடனஞ் செய்யாத வாசகமே கிடையாது. மேன்மைமிக்க இக் கருப்பொருளின் உயர்வுக்குச் சாட்சியமளிக்காத நூலே கிடையாது. இத் தெய்வீக நூல்களிலும், திருவாசகங்களிலும் இவ் வெளிப்பாடு குறித்து கூறப்படுள்ள அனைத்தையும் யாம் எடுத்துரைக்க முயல்வோமாயின், இந்நிருபம் அளவுக்கு மீறி நீண்டுவிடும். இந்நாளில், ஒவ்வொரு மனிதனும், இறைவனின் எண்ணிறந்த வள்ளன்மைகளில் தனது முழு நம்பிக்கையையும் வைத்து, மிகுந்த விவேகத்துடன் எழுந்து, இச் சமயத்தின் மெய்க்கூற்றுகளைப் பரப்ப வேண்டியது கடமையாகின்றது. அப்பொழுதுதான் அவரது வெளிப்பாடு எனும் காலை ஒளி, இவ்வுலகம் முழுவதையும் சூழ்ந்திடும்.

 

எவரது நாமத்தின் உச்சரிப்பின் போது மண்ணுலகின் அணுக்கள் எல்லாம் நடுக்கமுறச் செய்யப் பட்டனவோ, எவரது அறிவினுள் உறையிடப்பட்டும், வல்லமை என்னும் கருவூலத்தினில் மறைத்தும் வைக்கப்பட்டுள்ள அதனை வெளிப்படுத்திட உன்னதத்தின் நா உந்துதல் பெற்றதோ, அவர், மனித இனம் அனைத்தின் பிரபுவான அவர், புனிதப்படுத்தப் படுவாராக. வல்லமைமிக்கவர், எல்லாம் வல்லவர், அதி உயர்வானவர் என்னும் தனது பெயரின் வலிமையின் வாயிலாக, மெய்யாகவே, அவர் விண்ணுலகங்களின் மீதும் மண்ணுலகத்தின் மீதும் உள்ள அனைத்திற்கும் ஆட்சியாளராவார்.

 

மனிதர்களே, தெய்வீக நீதியின் நாள்களின் வருகையினை எதிர்பார்க்கும் பொருட்டு நீங்கள் உங்களை எழுச்சிபெறச் செய்து கொள்வீராக; ஏனெனில், வாக்களிக்கப்பட்ட நேரம் வந்துவிட்டது. கவனமாயிருங்கள், இல்லையெனில், அதன் முக்கியத்துவத்தினை உணரத் தவறி, தவறிழைப்போரின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டிடப் போகின்றீர்.

கடந்த காலத்தை எண்ணிப்பாருங்கள். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித உருவில் இறைவனுடைய அவதாரங்களின் வருகைக்காக உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் உட்பட, எல்லாக் காலங்களிலும், எத்தனைப் பேர் ஏக்கத்தோடு காத்திருந்துள்ளனர். எத்துணை முறை அவரது வருகையை எதிர்பார்த்திருந்தனர். இறைவனின் கருணை என்னும் தெய்வீகத் தென்றல் வீசி, வாக்குறுதியளிக்கப்பட்ட திருவழகு, தமது மறைவுநிலை என்னும் திரைக்குப் பின்புறத்திலிருந்து வெளிவந்து உலகத்திற்கெல்லாம் காட்சியளிக்க வேண்டும் என்று எவ்வாறு அவர்கள் அடிக்கடி பிரார்த்தித்து வந்துள்ளனர். ஆனால், அருட்கதவு திறந்து, தெய்வீக வள்ளன்மை எனும் மேகம் மனித இனத்தின்பால் பொழிந்து, பார்வைக்கப்பாற்பட்டவரின் ஒளி விண்ணுலகச் சக்தியெனும் அடிவானத்தில் ஒளிர்ந்த உடனேயே, அவர்களெல்லாரும் அவரை மறுத்து, அவரது திருமுகத்திலிருந்து, அதாவது இறைவனின் திருமுகத்திலிருந்தே, அப்பால் திரும்பிக்கொண்டனர்.........

 

சிந்திப்பீராக; அத்தகைய செயல்களுக்குரிய நோக்கம் எதுவாக இருந்திருக்கக் கூடும்? சர்வ மகிமையாளருடைய அழகின் வெளிப்பாட்டாளர்களின் மீது அத்தகைய நடத்தையை மேற்கொள்வதற்கு அவர்களைத் தூண்டியது எதுவாக இருந்திருக்கக் கூடும்? கடந்த காலங்களில் அம் மக்களது மறுப்புக்கும், எதிர்ப்புக்கும் எதுவெல்லாம் காரணமாயிருந்ததுவோ, அதுவே, இப்பொழுது இக் காலத்திய மக்களின் நெறிபிறழ்வுக்கும் காரணமாக அமைந்துள்ளது. கடவுளுக்கான சாட்சியம் பூரணமற்றது, எனவே மக்களது மறுப்புக்கு அதுவே காரணமாக அமைந்தது என வாதிடுவது வெளிப்படையான தெய்வ நிந்தனையாகும். அவர், தனது படைப்பினங்களின் வழிகாட்டலுக்காக அனைத்து மனிதர்களின் மத்தியிலிருந்து ஓர் ஆன்மாவைத் தனித்துத் தேர்வுசெய்து, ஒரு புறத்தில், அவரது தெய்வீக சாட்சியத்தினைப் பூரணமாக அவருக்கு வழங்காது தடுத்துவிட்டு, மறுபுறத்தில் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவரிடமிருந்து அப்பால் திரும்பியதற்காக அவரது மக்களைக் கடுமையாகத் தண்டிப்பதானது சகல வள்ளன்மையாளரின் கிருபையிலிருந்தும் அவரது அன்பான தெய்வீகம், மென்மைமிகு கிருபை ஆகியவற்றிலிருந்து எந்தளவு தூரமான ஒன்று! இல்லை, அனைத்து உயிரினங்களின் பிரபுவரின் அளவிறந்த கொடைகள் எல்லாக் காலங்களிலும் அவரது தெய்வீக சாராம்சத்தின் அவதாரங்களின் வழி மண்ணுலகையும், அதில் வாழும் அனைத்தையும் சூழ்ந்து வந்துள்ளன. அவரது கிருபை மனிதகுலத்தின் மீது பொழிவதிலிருந்து ஒரு கணங்கூட நிறுத்தி வைக்கப்படாததும் அன்றி, அவரது அன்புப் பரிவு என்னும் மழை அதன் மீது பொழிவதிலிருந்து தடுக்கப்படவுமில்லை. முடிவாக, ஆணவம், செருக்கு என்னும் பாதையில் பயணம் செய்து, தொலைவு என்னும் வனாந்தரத்தில் அலைந்து, தங்களது வீண் கற்பனையில் மூழ்கி, தங்களது சமயத் தலைவர்களின் அதிகாரத்திற்கிணங்க, நடந்திடும் அற்ப சிந்தனை கொண்ட ஆன்மாக்களைத் தவிர வேறெவருக்கும் அத்தகைய நடத்தை உரியதாகாது. வெறும் எதிர்ப்பே அவர்களது தலையாய நோக்கமாகும்; அவர்களின் ஒரே ஆவல் உண்மையை அலட்சியப்படுத்துவதே. மெய்ம்மைச் சூரியனின் அவதாரங்கள் ஒவ்வொருவரின் நாள்களிலும் இம் மனிதர்கள், தாங்கள் பார்த்து, கேட்டு, உணர்ந்திருந்த சகலவற்றிலிருந்தும் தங்களின் கண்களையும், செவிகளையும் தூய்மைப்படுத்தியிருப்பின், உண்மையாகவே அவர்கள் இறைவனது பேரழகைக் கண்ணுறும் பாக்கியத்தை இழந்திருக்கவும் மாட்டார்கள் என்பதுவும், மகிமை என்னும் மாளிகையிலிருந்து வெகுதூரம் சென்றிருக்கவும் மாட்டார்கள் என்பது பகுத்துணரக் கூடிய ஒவ்வொரு பார்வையாளருக்கும் தெளிவாய்த் தெரிவதுடன் நன்கு புலப்படவும் செய்யும். ஆனால், இறைவனுடைய சாட்சியத்தைத் தங்களது சமயத் தலைவர்களின் போதனைகளிலிருந்து பெற்றுள்ள அறிவின் துணைகொண்டு ஒப்பிட்டுப் பார்த்து, அது தங்களது குறுகிய புரிந்துகொள்ளலுக்கு மாறுபட்டிருந்ததன் காரணமாக அத்தகைய கேடுநிறைந்த செயல்களைப் புரிந்திட முன்னெழுந்தனர்.

 

நாமங்கள் அனைத்திற்கும் பிரபுவும், விண்ணுலகங்களைப் படைப்போனும் ஆகியவரே, உமது நாளின் - உலகம் முழுமைக்கும் வழிகாட்டுதல் எனும் விளக்கும், அதனில் வாழும் யாவருக்கும் பண்டைய நாள்களின் அடையாளமும் ஆகிய, அந்நாளின் - மகிமைகளை அறிந்து கொள்வதிலிருந்து எந்தத் திரையும் என்னைத் தடுத்திட நான் அனுமதித்ததில்லை. உம்மிடமிருந்து உமது உயிரினங்களின் கண்களை மறைத்திட்டுள்ள திரைகள்தாம் என் மெளனத்திற்குக் காரணம்; உமது மக்களை உமது மெய்ம்மையைக் கண்டுகொள்வதிலிருந்து தடுத்திட்டுள்ள இடையூறுகளே எனது ஊமைநிலைக்குக் காரணம். என்னுள் இருப்பது யாதென நீர் அறிவீர், ஆனால் உம்முள் இருப்பது யாதென யான் அறியேன். நீரே சகலமும் அறிந்தவர், அனைத்தும் அறிவிக்கப் பட்டவர். நாமங்கள் அனைத்தையும் விஞ்சிடும் உமது நாமம் சாட்சியாக! உமது மேலதிகார, சகலத்தையும் நிர்ப்பந்திக்கவல்ல கட்டளை என்னை வந்து சேருமாயின், உமது பேரொளி என்னும் இராஜ்யத்தில், உமது சக்தியெனும் நாவினால் கூறக் கேட்கப் பட்ட அது உமது மேன்மைப் படுத்தப் பட்ட திருச்சொல்லின் மூலம், எனக்கு, மனிதர்களின் ஆன்மாக்களை மீண்டும் உயிர் பெறச் செய்திட அதிகாரமளித்திடும். மனிதர்களின் கண்களிலிருந்து மறைக்கப் பட்டுக் கிடக்கும் அது, துலங்கிடும், ஒப்புயர்வற்ற பாதுகாவலரான, சுயஜீவியான உமது நாமத்தின் பெயரால் வெளிப்படுத்தப் பட்டுள்ள அதன் மூலமாக, எனக்கு, உமது சுடரொளி வீசும் வதனத்தின் வெளிப்பாட்டினை அறிவித்திட உதவிடும்.

 

 

separator

 

 

இத் தெளிவு மிகு செய்யுட்கள்

 

இந்நாளில் விண்ணுலகத்தில் ஒரு மாபெரும் விழா நடைபெறுகின்றது; ஏனெனில் புனித நூல்களில் வாக்களிக்கப்பட்டவை யாவும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது பரமானந்தம் அடைய வேண்டிய நாள். தொலைதூரமெனும் நெருப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, விஞ்சிய மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும், பேருவகையுடனும், களிப்புடனும் அவரது அருகாமையெனும் அரணுக்கு விரைந்திட வேண்டியது ஒவ்வொருவருக்கும் ஏற்புடையதாகும்.

-பஹாவுல்லா-

 

பின்வரும் நிருபம் பஹாவுல்லாவின் எழுத்துக்களான, பஹாவுல்லாவின் நிருபங்கள், மற்றும், ஒநாயின் மைந்தனுக்கான திருமுகம் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்றது. இரண்டிலும், இந்த நிருபம் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட ஒரு நிருபம் என பஹாவுல்லா கூறுகின்றார். ஆக, மூன்று முறை பல்வேறு சூழ்நிலைகளில் இந்நிருபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிருபத்தின் முக்கியத்துவம் அதன் இறுதிப் பத்தியிலேயே விவரிக்கப்பட்டுள்ளது.

 

 

மற்றவைகளுக்கிடையே, இத்தெளிவு மிகு செய்யுட்கள், குறிப்பிட்ட சில நபர்களுக்கு மறுமொழியாக, தெய்வீக அறிவெனும் இராஜ்ஜியத்திலிருந்து கீழே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன: “எமது வதனமெனும் சுடரொளிகளின்பால் தனது முகத்தைத் திருப்பியுள்ளவரே! உலகவாசிகளை வீன் ஆசைகள் சூழ்ந்து, உறுதிப்பாடெனும் தொடுவானத்தையும், அதன் பிரகாசத்தையும், அதன் வெளிப்பாடுகளையும் அதன் ஒளிகளையும் நோக்கித் திரும்புவதிலிருந்து அவர்களை தடுத்துவிட்டிருக்கின்றன. தனித்தியங்க வல்லவரான அவரை அனுகுவதிலிருந்து வீன் கற்பனைகள் அவர்களை தடுத்துள்ளன. புறிந்து கொள்ளாமல், அவர்கள் தங்கள் சபலங்கள் தூண்டிய வண்ணம் மொழிகின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் இவ்வாறு கூறியவர்கள் ஆவர்: ‘செய்யுட்கள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனவா?’கூறுங்கள்: ‘ஆம், விண்ணுலகங்களின் பிரபுவான அவரது பெயரால்!’ ‘நேரம் சம்பவித்து விட்டதா?’ ‘அல்ல, அதனினும் மேலாக; தெளிவான அடையாளங்களை வெளிப்படுத்தும் அவரது பெயரால், அது கடந்தே சென்றுவிட்டது! மெய்யாகவே, தவிர்க்கவியலாதது வந்துவிட்டது, ஆதாரங்களுடனும் சான்றுகளுடனும் உண்மையானவரான, அவர் தோன்றிவிட்டார். ‘சமவெளி வெளிப்படுத்தப்பட்டுள்ளது, மனிதகுலம் கடுந்துன்பமும் பீதியும் கொண்டுவிட்டது. பூகம்பங்களும் வெடித்துவிட்டன, சர்வ உந்துதல் அளிக்கும், வலிமையின் பிரபுவான இறைவன்பால் உள்ள பயத்தால் இனங்கள் யாவும் புலம்பவும் செய்கின்றன’ கூறுங்கள்: ‘ஸ்தம்பிக்கவைக்கும் தாரை ஒளி உரக்க எழுப்பப்பட்டுவிட்டது, ஒன்றானவரான, கட்டுப்படுத்தப்படாதவரான இறைவனுடையது இந்நாள்.’ ‘திடீர்ப் பேரழிவு கடந்து சென்றுவிட்டதா?’ கூறுங்கள்: ‘ஆம், பிரபுக்களுக்கெல்லாம் பிரபுவின் பெயரால்!’ ‘மறுஉயிர்த்தெழல் வந்துவிட்டதா?’ ‘அல்ல,அதனினும் மேலாக; தனித்தியங்குபவரான அவர் தமது அடையாளங்கள் எனும் இராஜ்ஜியத்துடன் தோனறிவிட்டார்.’ ‘மனிதர்கள் தாழ்வுற்றுக் கிடப்பதை காண்கின்றீரா?’ ‘ஆம், மேன்மைபடுத்தப்பட்டவரான, அதி உயர்ந்தவரான எனது பிரபுவின் பெயரால்.’ ‘அடிமரங்கள் வேருடன் பிடுங்கியெறியப்பட்டுவிட்டனவா?’ ‘ஆம், அதனினும் மேலாக; நற்பண்புகளின் பிரபுவானவர் பெயரால், மலைகளே தூசிப்படலங்களாக சிதறடிக்கப்பட்டுவிட்டன.’ அவர்கள் கூறுவதாவது: ‘சுவர்க்கம் எங்கே, நரகம் எங்கே?’ கூறுங்கள் ‘இறைவனோடு பங்காளியாக இனைந்து சந்தேகங்கொள்பவனே, ஒன்று எம்முடன் மறுபடியும் இனைதலாகும்; மற்றது உனது சுயநிலையே ஆகும்.’ அவர்கள் கூறுவதாவது: ‘துலாபாரத்தை காண்கின்றோமில்லை.’ கூறுங்கள்: நிச்சயமாகவே, கருணைத் தேவரான என் பிரபுவின் பெயரால்! உட்பார்வை பெற்றுள்ளோர்களைத் தவிர வேறு எவரும் அதைக் காண இயலாது.’ ‘விண்மீன்கள் வீழ்ந்துவிட்டனவா?’ கூறுங்கள்: ஆம், தனித்தியங்க வல்லவரான அவர் மர்ம பூமியில் (ஆட்ரியாநோப்பில்) வாசம் செய்திட்டபோதே.’ பகுத்தறியும் தன்மை பெற்றுள்ளவர்களே, கவனங் கொள்ளுங்கள்! யாம் எமது வல்லமையெனும் கரத்தை மாட்சிமை மற்றும் வலிமை எனும் நெஞ்சிலிருந்து அகற்றியபோதே எல்லா அடையாளங்களும் தோன்றிவிட்டன. மெய்யாகவே, வாக்களிக்கப்பட்ட நேரம் தோன்றிய கனமே கூவுபவர் கூவிட, சைனாயின் மகிமைகளை கண்டுணர்ந்தோர் படைப்பின் பிரபுவான உன் பிரபுவின் பிரமிக்க வைக்கும் மாட்சிமையின் முன்னிலையில் தாமதிப்பு எனும் வனாந்திரத்தில் மூர்ச்சையாகிவிட்டனர். ‘தாரை’ வினவுவதாவது: ‘ஊது குழல் ஒலிக்கப்பட்டுவிட்டதா?’ கூறுங்கள்: ‘ஆம், வெளிப்பாட்டின் அரசரின் பெயரால்!, சர்வ-தயாளமுடையவரெனும் அவரது நாமமெனும் சிம்மாசனத்தில், அமர்ந்தவுடன்.’ பிரகாசங்கள் யாவற்றுக்கும் தோற்றுவாயானவரான உன் பிரபுவின் கருணையின் உதய ஒளியினால் இருள் விரட்டப்பட்டுவிட்டது. சர்வ-தயாளமுடையவரின் தென்றல் வீசிட, அவர்களின் உடல் எனும் கல்லறையினுள் ஆன்மாக்கள் புத்துணர்வுபெறச் செய்யப்பட்னர். இவ்விதமாகவே, வலிமைமிக்கவரும் கொடையணளியுமாகிய இறைவனால் ஆணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வழிதவறியோர் கூறியுள்ளனர்: ‘விண்ணுலகங்கள் எப்போது பிளக்கப்பட்டன?‘ கூறுங்கள்: ‘வழிதவறுதல் மற்றும் தவறுகள் எனும் புதைகுழிகளில் நீங்கள் உரங்கிக்கொண்டிருந்த போது.’ தன் கண்களைத் தேய்த்துக்கொண்டு, வலதுபுறமும் இடதுபுறமும் பார்ப்பவன் கவனமற்றவர்களில் ஒருவனாக உள்ளான். கூறுங்கள்: ‘நீ கண்ணிழந்தவனாக ஆகிவிட்டாய். ஓடி ஒளிந்திட உனக்குப் புகலிடம் கிடையாது.’ அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: ‘மனிதர்கள் ஒன்று திரட்டப்பட்டுள்ளனரா?’. கூறுங்கள்: ‘ஆம், என் தேவரின் வாயிலாக! நீங்கள் உங்கள் வீண் ஆசைகள் எனும் தொட்டிலில் சாய்ந்திருந்தபோதே.’ அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: ‘உண்மையான சமயத்தின் சக்தியின் மூலமாக திருநூல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா?’ கூறுங்கள்: ‘உண்மையான சமயம் தானே திகைப்படைந்துள்ளது. புறிந்துகொள்ளும் உள்ளம் கொண்ட மனிதர்களே, அச்சங்கொள்ளுங்கள்!’ அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: ‘குருடனாக நானும் மற்றவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளேனா?’. கூறுங்கள்: ‘ஆம், மேகங்களின் மீது அமர்ந்து வருபவரின் பெயரால்!’ சுவர்க்கம் மர்ம ரோஜாக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டும், நரகம் பக்தியற்றோரின் தீயினால் எரிந்திடச் செய்யப்பட்டும் உள்ளது. கூறுங்கள்: ‘வெளிப்பாடெனும் தொடுவானத்திலிருந்து ஒளி உதயமாகிவிட்டது, திருவொப்பந்த நாளின் பிரபுவின் வருகையினால் உலகம் முழுவதுமே ஒளிபெறச் செய்யப்பட்டுவிட்டது!’ நம்பிக்கையற்றோர் அழிந்துவிட்டனர். அதே வேளையில், உறுதியெனும் ஒளியினால் வழிகாட்டப்பட்டு, மெய்யுறுதியெனும் பகலூற்றின்பால் திரும்பியவன், செழிப்படைந்தான். எம்மீது உன் பார்வையை குத்திடச் செய்துள்ளோனே, உனக்காக அனுப்பப்பட்டுள்ள, மனிதர்களின் ஆன்மாக்களை வானோங்கச் செய்யும் ஒரு நிருபமான இந்த நிருபத்திற்காக நீ ஆசீர்வதிக்கப்பட்டுள்ளாய். அதை மனனம் செய்து ஒப்புவிப்பாயாக. என் உயிரின் மீது ஆணை! உன் பிரபுவின் தயைக்கு அது ஒரு நுழைவாயிலாகும். மாலை வேளைகளிலும் காலை வேளைகளிலும் அதை வாசிப்பவன் நலமடைவானாக. அறிவெனும் மலை நொறுக்கப்பட்டும், மனிதர்களின் கால்களை வழுக்கிட செய்திடும் இந்த சமயத்தின் புகழை நீர் பாடியதை யாம், மெய்யாகவே, செவிமடுக்கின்றோம். உன்மீதும், சர்வ-வல்லவரும், சர்வ-கொடையாளியுமானவர்பால் திரும்பியுள்ள எவர்மீதும், எமது மகிமை சாரட்டுமாக. இந்நிருபம் முடிவுற்றது, ஆனால் அதன் பொருள் வற்றாமல் உள்ளது. பொறுமை கொள், ஏனெனில் உன் தேவர் பொறுமையானவர். -பஹாவுல்லா-,

 

பஹா வுல்லாவின் நிருபங்கள்

 

 

 

 

பஹாவுல்லா மற்றும் பாப் அவர்களும் கடவுளின் அவதாரங்கள் எனும் வகையில் பல திருவாக்குகளை மனிதர்களுக்காக வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகைய வார்த்தைகள் படைப்பாற்றல் மிக்க வார்த்தைகளாகும். தனிமனித மேம்பாட்டிலிருந்து சமுதாய மேம்பாடு மற்றும் பெரும் நாகரிகங்களின் உருவாக்கம் அனைத்துமே இப்புனித எழுத்துக்களின் வெளிப்பாடே ஆகும்.

 

பஹாய்கள் தினமும் காலையும் மாலையும் இத்திருவாசகங்களை வாசித்தும் தியானித்தும் பின் அவற்றை கடைபிடிக்கவும் வேண்டும் என்பது பஹாவுல்லாவின் அறிவுரையாகும்.