தேசிய ஆன்மீக சபையின் தேர்வோடு வியட்நாமிய பஹாய்கள் ஒரு திருப்புமுனையை அடைந்துவிட்டனர்.
ஹோ சி மின் நகர், வியட்நாம்
பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அந்த நாட்டில் ஒரு தேசிய பஹாய் நிர்வாக அமைப்பை தேர்ந்தெடுத்ததன் வாயிலாக வியட்நாமிய பஹாய்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தினுள் அடியெடுத்து வைத்துள்ளனர்.
உலகின் அனைத்து நாடுகளிலும் பஹாய் சமயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் பெரும்பாலான நாடுகளில் வருடந்தோரும் பஹாய்கள் ஒரு தேசிய ஆன்மீகச் சபையைத் தேர்வு செய்கின்றனர். இச் சபைகள் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டும் பஹாய் சமூகங்களை இவை வழிநடத்தவும் செய்கின்றன.
வியட்நாமைப் பொருத்தவரையில், வட மற்றும் தென் வியட்நாம்கள் ஒன்றினைந்த பிறகு முதன் முறையாக மார்ச் 20 - 21ல் இப் பேராளர் மாநாடும் தேர்தலும் நடைபெறுகின்றன.
“33 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அரசாங்கம் இத்தகைய ஒன்றுகூடல் நடைபெறுவதற்கு அனுமதி வழங்கியிருப்பதனானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்,” என பஹாய் சமயத்தின் அனைத்துலக நிர்வாக அமைப்பான, உலக நீதி மன்றத்தின் விசேஷப் பிரதிநிதியான ஜோன் லிங்கன் கூறினார். திருமதி லிங்கன் இந்நிகழ்ச்சிக்காக ஹைப்ஃபாவில் உள்ள பஹாய் உலக மையத்திலிருந்து ஹோ சி மின் நகருக்குப் பயணம் செய்தார்.
“அத் தேர்தல் நிகழ்ச்சி மிகவும் மனதைத் தொடும் ஒரு நிகழ்ச்சியாகும் என திருமதி ஜோன் வருணித்தார். பல வருடங்களாகப் பல பஹாய்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாமல் இருந்தனர் என எனக்கு அறிவிக்கப்பட்டது,” என அவர் மேலும் கூறினார்.
வியட்நாமின் நிர்வாக அமைப்புமுறை சாசனத்தை உருவாக்குதல் உட்பட இத்தேர்தலுக்கான ஆயத்தங்கள், அரசாங்கத்துடனான கலந்தாலோசனையின் வாயிலாகவே செயல்படுத்தப்பட்டன. இதற்கு வியட்நாம் அரசாங்கம் தனது சார்பிற்கு மூன்று பிரதிநிதிகளை அனுப்பிவைத்திருந்தது.
தேர்தல் ஹோ சி மின் நகர் பஹாய் மையத்தில் மாநாட்டின் முதல் நாளன்றே நடைபெற்றது. இரண்டாவது நாளன்று கலந்தாலோசனை அரங்கம் முதல் நாளைவிட பெரிதும் அகன்ற மண்டபத்தில் நடந்தது. இந்த மண்டபம் அரசாங்க மற்றும் காவல்துறையினால் அனுப்பிவைக்கப்பட்ட பூக்செண்டுகளோடு கூடிய வாழ்த்துச்செய்திகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மத்திய, மாநில மற்றும் வட்டாரங்கள் சார்ந்த அரசாங்க அதிகாரிகள் அந்நிகழ்ச்சியில் பெங்கெடுத்துக்கொண்டனர். இதன்போது பஹாய்கள் புதிய அமைப்புச்சாசனத்திற்கு ஒப்புதல் அளித்து ஏற்றுக்கொண்டனர்.
வியட்நாமில் பஹாய் சமயத்தின் அதிகாரபூர்வ அங்கீகாரம் குறித்த அடுத்தக் கட்ட நடவடிக்கையாக அரசாங்கத்திற்கு மேற்கொண்டு ஆவணங்கள் வழங்கப்படும்.
உலக நீதி மன்றத்தின் பிரிதிநிதியான திருமதி ஜோன், ஹோ சி மின் நகரின் அரச காரியாலயத்தில் மக்கள் செயற்குழுவின் உதவித் தலைவருடன் சந்திப்பு நடத்தினார்.