சா'ஆடியின் ரோஜாவனத்திலிருந்து...

சில தத்துவக் கதைகள்

 

 

இல்லம்

சா'ஆடியின்ரோஜாவனத்திலிருந்து

 

ஒர் அரசன் தனது பார்சி அடிமையோடு ஒரு கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தான். அந்த அடிமை கடலில் அதுகாறும் பிரயாணம் செய்தது கிடையாது; அவன் புலம்பவாரம்பித்தும் சப்தமாக ஒலமிட்டும் பயத்தால் நடுங்கவும் செய்து, அவர்கள் எவ்வளவுதான் அவனை அமைதி படுத்த முயன்ற போதும் அவன் அமைதியாகவில்லை. அரசனின் பிரயாணம் கெட்டு விடும் ஒரு சூழ்நிலை உருவாகி என்ன செய்வதென எவருக்கும் தெரியாமல் இருந்தது. அப்போது கப்பலில் ஒன்றாக இருந்த ஞானி ஒருவர், ‘நீங்கள் விரும்பினால் நான் அவனை அமைதிப்படுத்துகிறேன்,’ என அரசரிடம் கூறினார். அதற்கு அரசர், ‘மெய்யாகவே இது ஒரு கருணை மிகு செயலாகும்,’ என பதிலளித்தார்.ஞானி அந்த அடிமையை தூக்கி கடலில் வீசிடுமாறு அவர்களை பணித்தார். அந்த அடிமை திக்கு முக்காடி கடல் நீரை சிறிது குடித்த பின்பு அவனது தலை முடியைப் பற்றி கப்பலை நோக்கி இழுத்தனர். அவன் கப்பலை தன் இரு கைகளாலும் இருகப் பற்றி, கப்பலுக்குள் வந்தவுடன் ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திடவும் செய்தான். அரசன் ஆச்சர்யமுற்று, ‘இதில் என்ன விவேகம் அடங்கியுள்ளது?’ என வினவினான். அதற்கு அந்த ஞானி: ‘இந்த அடிமைக்கு நீரில் மூழ்கிப் போவது என்றால் என்னவென்று தெரியவில்லை, ஆகவே கப்பல் தரும் பாதுகாப்பை அவன் உணரவில்லை. அவ்வாறே, ஆபத்தை அனுபவித்தவனே, பாதுகாப்பின் மதிப்பறிவான்.

 

 

திருடன் ஒருவன் சாது ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்தான், ஆனால் எங்கு தேடியும் திருடுவதற்கு ஒன்றுமே அகப்படவில்லை. சாது விழித்தெழுந்தார். எங்கே அத்திருடனின் மனம் சோகமுற்றிடுமோ என, அவர் தான்படுத்திருந்த பாயிலிருந்து எழுந்து, அதையே அத்திருடன்பால் எடுத்தெறிந்தார்.

 

 

ஒர் இரவு என் அன்பர் என் வீட்டிற்கு வந்தார், நானும் படுக்கையிலிருந்து அவரசரமாக குதித்தெழுந்தேன், அதே வேளை என் மேற்சட்டையின் கை விளக்கில் பட்டு அதை அனைத்து விட்டது.அன்பரும் அமர்ந்து, ‘நான் வருவது கண்டு விளக்கை ஏன் அனைத்தாய்,’ என கோபித்தார். ‘சூரியன்தான் தோன்றிவிட்டதோ என நான் எண்ணியதன் விளைவாக,’ என நானும் பகன்றேன்.

 

 

கால்களில் செருப்பில்லாமலும் அவற்றை வாங்க கையில் பணமில்லாமலும் இருந்த வரை இவ்வுலக ஆசாரங்கள்பால் நான் குறைபட்டுக் கொண்டதும் கிடையாது, வாழ்க்கையில் சந்திக்கும் இடையூறுகளின்பால் நான் என் நெற்றியை சுறுக்கிக் கொண்டதும் கிடையாது. என் வறிய நிலையை எண்ணி துக்கித்தபடி, கூஃபேயில் உள்ள பள்ளிவாசலுக்குள் சென்றேன். அங்கு பாதங்களே இல்லாத ஒரு மனிதனைக் கண்ணுற நேர்ந்தது. அவ்வேளை என் ஆசீர்வாதங்களை எண்ணி இறைவனை வாழ்த்திவிட்டு, மகிழ்ச்சியுடன் வெறுங் கால்களோடு என் வழி சென்றேன்.

 

பாஸ்ரா நகரத்து பொற்கொல்லரிடையே ஒரு அராபியனைச் சந்த்தித்தேன். அவன்: ‘நான் ஒரு சமயம் பலைவனத்தில் வழி தவறி, என் உணவுப் பொருட்கள் யாவும் தீர்ந்த நிலையில், இறப்பின்பால் மனம் குத்திட்டிருந்தேன்.’ ‘அப்போது ஒரு பை நிறைய முத்துக்களை கண்டேன். அந்த பை நிறைய சோளப்பொறியோவென நான் எண்ணி களிப்பெய்தியதையும், அவை முத்துக்கள் எனக் கண்டபோது நான் அடைந்த ஏமாற்றத்தையும் என்னால் மறக்கவே முடியாது.’ என அவன் கூறிக்கொண்டிருக்கக் கேட்டேன்.

 

 

ஹாத்திம்-இ-தாயிடம், ‘உம்மைவிட உயர்ந்த மனிதர் ஒருவரைப்பற்றி நீர் கேள்விப்பட்டோ அல்லது கண்டதும் உண்டோ ?’ என அவர்கள் வினவினர். அவர் அதற்கு, ‘ஆமாம். ஒரு நாள் நான் நாற்பது ஒட்டகங்களை பலியிட்டு அராபியர்களில் முக்கியமானவர்களை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தேன். அப்போது நான் பாலைவனத்தின் ஓரமாக செல்ல நேர்ந்து, அங்கு விறகு பொறுக்கி ஒருவன் விறகு கட்டு ஒன்றை சுமந்து வருவதை கண்டேன். ‘நீ ஏன் ஹாத்திமின் விருந்துக்கு போகவில்லை, அங்கு பலர் அவரது விருந்து உபசரிப்பில் கூடியுள்ளனரே?’ எனக் கூறினேன். அதற்கு அந்த விறகு பொருக்கி, ‘எவனொருவன் தன் கைகளாலேயே தன் உணவை ஈட்டிக்கொள்கின்றானோ அவனுக்கு ஹாத்திம்-இ-தாயின் தயவு தேவையில்லை,’ என செப்பிச் சென்றான்.

 

 

தனது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அரசன் ஒருவன், தன் அடிமையிடம் ஒரு பை நிறைய டிர்ஹாம்களை கொடுத்து, சாதுக்கள் அனைவருக்கும் அவற்றை பகிர்ந்தளித்திடுமாறு பணித்தான் ஒவ்வொரு நாளும் பையுடன் அடிமை வெளியேறுவான், அதேபோல் பையுடனேயே ஒவ்வொரு இரவும் திரும்பி பையை முத்தமிட்டு (பை நிறைய பொன் நாணயங்களோடு) அரசன் முன் வைத்துவிட்டு; பின்வருமாறு கூறுவான்: ‘எங்குதான் தேடியும், சாதுக்களை நான் கண்டிலேன்,’ இறுதியில் அரசன்: இது எப்படி ஆகும்? என் அறிவிற்கு எட்டியவரை இந்த நகரில் நானூறு சாதுக்கள் இருக்கின்றனரே,’ எனக் கூறினான். அதற்கு அடிமை: ‘உலகாதிபதியே, சாதுக்களாக உள்ளவர்கள் டிர்ஹாம்களை தொட மறுக்கின்றனர், டிர்ஹாம்களை வேண்டுவோர் சாதுக்கள் அல்லாதவர்களாகவும் உள்ளனரே,’ என பதிலளித்தான்.

 

 

நீதிமானாகிய நௌஷிரவானிடம் ஒரு மனிதன் வந்தான். அவன் நற்செய்தி ஒன்று ஏந்தி வந்து: ‘சர்வ வல்லவரான இறைவன், உலகத்திலிருந்து உமது எதிரியை அகற்றிவிட்டார்,’ எனக் கூறினான். அதற்கு அரசன்: ‘அவர் என்னை மட்டும் இந்த உலகத்தில் விட்டுவைக்கக்கூடும் என வதந்தி எதனையும் நீ செவிமடுத்தனையோ?’ எனக் கேட்டான்.

 

 

தனது குருவிடம் சிஷ்யன் ஒருவன் பின்வருமாறு வினவினான்’ ‘என் வாசஸ்தலத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து எனக்கு அமைதியே இல்லாமற் செய்துவிடுகின்றனர். நான் யாது செய்வது?’ அதற்கு அவனது குரு: ‘ஏழைகள் வந்தால், ஏதாவது பொருளை இரவல் கொடு; செல்வந்தர் வந்தால், அவர்களிடம் ஏதாவது பொருளை இரவல் கேள். உன்னை அதன்பின் இருவருமே எப்போதும் தொல்லைபடுத்த மாட்டார்கள் என்றார்.