சமயத் தலைவர்களுக்கான செய்தி

உலக நீதி மன்றத்தின் அறிக்கை

 

இல்லம்

உலக நீதிமன்றம்

பஹாய் உலக நிலையம்

ஏப்ரல் 2002

 

உலக சமயத் தலைவர்களுக்கு

 

 

உலக மக்கள் தங்களை ஒரே மானிட இனத்தின் உறுப்பினர்களாகவும், இப் பூமியை அம் மானிட இனத்தின் பொதுத் தாயகமாகவும் கண்ணுறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதே இருபதாம் நூற்றாண்டு நமக்கு விட்டுச் சென்றுள்ள நிலையான சொத்தாகும். தொடர்ந்து நிலவி வரும் முரண்பாடுகளும், வன்முறைகளும் தொடுவானத்தை இருளச் செய்திட்டபோதும், ஒரு காலத்தில் மனித இனங்களின் இயற் தன்மையாகத் தோன்றிய தப்பெண்ணங்கள் எங்கும் மறைந்து வருகின்றன. இவற்றோடு சேர்த்து நெடுங்காலமாக மனிதக் குடும்பத்தைப் பிரித்து வந்திருந்த தடைகளான கலாச்சார, இன அல்லது தேசிய பூர்வீகம் எனும் பொருந்தாத தனித்துவங்கள்- பேபல் - சரிந்து வருகின்றன. சரித்திர காலக் கண்ணோட்டத்தில் மிகவும் குறுகிய காலத்திற்குள் மின்னல் வேகத்தில் இவ்வடிப்படை மாற்றம் நிகழ்வதானது, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் குறித்த மகத்தான சாத்தியங்களின் தோற்றம் ஒன்றை வழங்குகிறது.

 

நிறுவப்பட்ட சமயம் தோன்றியதற்கான காரணமே சகோதரத்துவத்திற்கும், அமைதிக்கும் அது பாடுபட வேண்டுமென்பதேயாகும். ஆயினும், அச்சமயமே பெரும்பாலான நேரங்களில் அப்பாதையில் பெருந்தடைகளுள் ஒன்றாக விளங்குவது வருத்தமளிப்பதாயுள்ளது. வருத்தமளிக்கும் ஓர் உண்மையைக் குறிப்பாகச் சுட்ட வேண்டுமெனில், நெடுங் காலமாகச் சமயம் தன் நற்பெயரினை மதவெறிக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளது என்பதுதான். உலகச் சமயங்களில் ஒன்றின் பேரவையினை நிர்வகித்திடும் பொறுப்பினைக் கொண்டுள்ள நாங்கள், சமயத் தலைமைத்துவங்களுக்கு இம் மத வெறி விடுக்கும் சவாலின்பால் அவர்கள் தங்களின் சீரிய கவனத்தைத் திருப்பவேண்டும் என வலியுறுத்துவதே எங்களின் கடமை என நாங்கள் உணர்கின்றோம். இவ் விவகாரமும் அது உருவாக்கும் சூழல்களும் எங்களை ஒளிவு மறைவின்றி நேரடியாகப் பேச நிர்ப்பந்திக்கின்றன. எந்த நல்லெண்ணத்துடன் நாங்கள் கூறுவதை உங்கள் முன்வைக்கின்றோமோ அதே நல்லெண்ணத்துடன் அது ஏற்கப்படும் என்பதை இறை விருப்பத்திற்கு நாம் ஆற்றும் பொதுச் சேவை உறுதிப்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.

 

மற்ற இடங்களில் சாதிக்கப்பட்டவற்றினைக் கருத்தில் கொள்ளும்போது இவ் விஷயம் மிகத் தெளிவாகத் தென்படத் தொடங்குகின்றது. கடந்த காலத்தில், இங்குமங்குமாக ஒரு சில உதாரணங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் பெண்கள் ஒரு தாழ்ந்த குலமாகவே கருதப்பட்டதோடன்றி அவர்களின் இயல்பான குணங்கள் மூட நம்பிக்கைகளின் கைகளில் சிக்குண்டிருந்தன; மனித ஆவியின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அவர்களுக்கு முற்றாக மறுக்கப்பட்டிருந்ததோடு ஆண்களின் தேவைகளுக்குப் பணிபுரிந்திடும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமின்றி பல சமுதாயங்களில் இத்தகைய அவல நிலைகள் இன்னமும் தொடர்ந்து நிலவுகின்றன என்பது உண்மை; போதாதற்கு அவ்விடங்களில் அவை வெறித்தனமாகத் தற்காக்கப்பட்டும் வருகின்றன. எனினும் உலகளாவிய நிலையிலான கருத்துப் பரிமாற்றத்தில் ஆண் பெண் சமத்துவம் எனும் கருத்து அனைத்து நடைமுறை நோக்கங்களின் நிமித்தம் இப்பொழுது பரவலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக விளங்குகின்றது. பெரும்பான்மையான கற்றோர் சமூகங்களிலும், தகவல் துறையிலும் அதே போன்ற அதிகாரத்தை ஆண்பெண் சமத்துவக் கோட்பாடு அனுபவித்து வருகின்றது. அந்தளவுக்கு அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஆண் ஆதிக்கத்தை ஆதரிப்போர் பொறுப்பான அபிப்பிராயங்களுக்கும் அப்பால்தான் தங்களுக்கான ஆதரவினை நாட வேண்டியுள்ளது.

 

மீளவியலா, தேசியவாதத்தில் சிக்குண்டுத் தவிக்கும் பெரும் மக்கள் கூட்டங்கள் அதே போன்றதொரு கதியைத்தான் எதிர்நோக்குகின்றன. உலக விவகாரங்களில் நடந்தேறும் ஒவ்வொரு நெருக்கடிக்குப் பின்னரும், ஒருவரின் வாழ்க்கையை வளப்படுத்தும் நாட்டுப்பற்றுக்கும் மற்றவர்களைப் பற்றிய அச்சத்தையும் வெறுப்பினையும் தூண்டிவிடத் திட்டமிட்டு ஆற்றப்படும் கனல் பறக்கும் வெற்று ஆரவாரப் பேச்சுக்குக் கட்டுப்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காண்பதென்பது ஒரு குடிமகனுக்கு இப்பொழுது இலகுவாக உள்ளது. வழக்கமான தேசியச் சடங்குகளில் பங்கேற்க வேண்டிய இடங்களில்கூட கடந்த காலங்களின்போது இருந்த அசைக்கவியலா நம்பிக்கைகள், உற்சாக மிகுதி ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது பொதுமக்களின் உணர்வு பெரும்பாலும் மனக்குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளது. அனைத்துலக அமைப்பு முறையில் தொடர்ந்தாற்போன்று சீராக ஏற்பட்டுவரும் மறுசீரமைப்பினால் இப் பயன்விளைவு வலுவடைந்துள்ளது. ஐக்கிய நாட்டுச் சபையின் தற்போதைய அமைப்பு முறையில் என்ன குறைபாடுகள் இருப்பினும், ஆக்கிரமிப்புக்கு எதிராக அச் சபை மேற்கொள்கின்ற கூட்டு இராணுவ நடவடிக்கைகளில் எவ்விதத் தடங்கல்கள் ஏற்படினும், முழு தேசிய அரசுரிமையின் மீதான மூடப் பற்று ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மையை எவருமே மறுப்பதற்கில்லை.

 

இனம், வகுப்பு ஆகியவை குறித்த தப்பெண்ணங்கள் அவற்றைப்போன்ற அடிப்படையற்ற நம்பிக்கைகளைச் சிறிதும் சகித்துக் கொள்ள இயலாத வரலாற்றுச் செயல்பாடுகளினால் துரிதத்துடன் அதே போன்ற நிலைக்கு உட்படுத்தப்பட்டன. குறிப்பாக இங்குக் கடந்தகால நடத்தை தீர்க்கமாகவே நிராகரிக்கப்பட்டது. இனவெறிக் கொள்கை இப்பொழுது இருபதாம் நூற்றாண்டின் பயங்கரங்களோடு தொடர்புப்படுத்தப்பட்டு இருப்பதன் காரணமாக அது களங்கமடைந்துள்ளதுடன் ஓர் ஆன்மீக நோயாகக் கருதப்படுமளவுக்குச் சீர்கெட்டும் உள்ளது. உலகின் பல பகுதிகளில் ஒரு சமூக மனப்பாங்காகத் தொடர்ந்து நிலைத்திருக்கும் அதே வேளையில் மனுக்குலத்தின் ஒரு கணிசமான பகுதியினரிடையே நிலவும் பெரும் பிணியாகவும் கருதப்படும் இனத் துவேஷமானது, எந்த மக்கள் அமைப்பும் தாங்கள் அதனுடன் இனியும் அடையாளப்படுத்தப்படுவதை அனுமதிக்க இடம்கொடாத அளவுக்குக் கொள்கையளவில் உலகளாவிய நிலையில் நிந்திக்கப்படுகின்றது.

 

இதன் பொருள் ஓர் இருண்ட கடந்த காலம் துடைத்தொழிக்கப்பட்டு, ஒளிமிகுந்த உலகம் ஒன்று திடீரென உதயமாகி விட்டது என்பதல்ல. இனம், ஆண் பெண் பாகுபாடு, தேசம், ஜாதி, வகுப்பு ஆகிய ஆழ வேரூன்றியுள்ள தப்பெண்ணங்களின் பாதிப்பினைப் பெரும் எண்ணிக்கைக் கொண்ட மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். தொடர்புறவுகளில் ஒரு புதிய ஒழுங்கமைப்பினை நிர்மாணித்து, அடக்குமுறைக்கு ஆளானவர்களுக்கு நிவாரணமளிக்கும் பணியினை மேற்கொண்டுள்ள மனுக்குலம், அதற்கான நிறுவனங்களையும் அளவுகோல்களையும் உருவாக்கிவருகின்றது. இவை மெதுவாகவே இயக்கம் பெற்று வருவதால் அத்தகைய அநீதிகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதைத்தான் ஆதாரங்கள் அனைத்தும் சுட்டுகின்றன. எனினும் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது யாதெனில், நுழைவாயில் ஒன்று கடக்கப்பட்டுவிட்டது என்பதும், இனி அதன்பால் மீண்டும் திரும்புவதற்கான சாத்தியம் ஏதும் இல்லை என்பதும்தான். அடிப்படைக் கொள்கைகள் அடயாளங்காணப்பட்டும் தெளிவுப்படுத்தப்பட்டும் பரந்த அளவில் விளம்பரப் படுத்தப்பட்டும் உள்ளன. பொது மக்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தவல்ல நிறுவனங்களில் இக் கோட்பாடுகள் படிப்படியாகச் செயல்படத் தொடங்கியுள்ளன. போராட்டம் எவ்வளவுதான் நீண்டதாகவும் வேதனை மிக்கதாகவும் இருப்பினும் அதன் பலன் சமுதாயத்தின் அடிமட்டத்திலுள்ள அனைத்து மக்கள் மத்தியில் தொடர்புறவுகளைப் புரட்சிகர மாற்றத்திற்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை.

 

இருபதாம் நூற்றாண்டு தொடங்கியபோது, மற்ற எல்லா தப்பெண்ணங்களை விட மாற்றத்தின் சக்திகளுக்குத் தலைவணங்கத் தயாராகவிருந்தவை சமயம் குறித்த தப்பெண்ணங்களே ஆகும். மேற்கத்திய உலகில், சமயப் பிரிவினரின் தனி உரிமைத் தன்மையின் நடுத் தூண்களாக விளங்கிய சிலவற்றை அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்கனவே முரட்டுத்தனமாகத் தகர்த்து விட்டிருந்தன. மானிடம் தன்னைப் பற்றிக் கொண்டிருந்த கருத்தில் ஏற்பட்டு வந்த தன்மைமாற்றத்தின் தொடர்பில் அதி நம்பிக்கையூட்டுவதாக அமைந்த ஒரு புதிய சமய மேம்பாட்டு இயக்கம் சமயங்களுக்கிடையிலான (இண்டர்ஃபேய்த்) இயக்கமாகும். 1893-இல், உலகக் கொலம்பியா கண்காட்சி என்ற அமைப்பு, புகழ்பெற்ற "சமயங்களின் பாராளுமன்றம்" எனும் அமைப்பைத் தோற்றுவித்ததானது, பேரார்வத்தோடு செயல்பட்ட அதன் அமைப்பாளர்களையே ஆச்சரியத்திற்குட்படுத்தியது. ஆன்மீக, தார்மீகக் கருத்தொருமைப்பாடு குறித்த அம் மாநாட்டின் தொலைநோக்கு எல்லாக் கண்டங்களிலும் பொதுமக்களின் கவனத்தைப் பெரிதளவு ஈர்த்ததுமன்றி அக் கண்காட்சியில் படைக்கப்பட்ட அறிவியல், தொழில் நுட்ப, வாணிப ரீதியிலான அற்புதங்களின் மதிப்பையே மங்கிவிடச் செய்தது.

 

குறிப்பாக, தொன்மைக் காலத்துச் சுவர்கள் சரிந்து வீழ்ந்து விட்டதாகவே தோன்றியது. சமயத் துறையில் செல்வாக்குமிக்கச் சிந்தனையாளர்களுக்கு அம் மாநாடு தனித்தன்மை மிக்கதாகவும் "உலக வரலாற்றில் அதுவரை நடைபெற்றிடாத ஒன்றாகவும்" தோன்றியது. மதிப்புமிக்க அம் மாநாட்டின் தலைமை ஏற்பாட்டாளர், "உலகினை மதவெறியிலிருந்து இம் மாநாடு விடுவித்து விட்டது" எனப் புகழ்ந்துரைத்தார். கற்பனைத் திறன் மிக்கத் தலைமைத்துவம் ஒன்று, சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி, வளமும் முன்னேற்றமும் கொண்ட ஒரு புதிய உலகிற்குத் தேவைப்படும் தார்மீக அடித்தள ஆதரவைத் தரவல்ல சகோதரத்துவ உணர்வை இப் பூமியில் நீண்ட காலமாகப் பிளவுபட்டிருந்த சமய சமூகங்களிடையே ஏற்படுத்தும் என நம்பிக்கையுடன் ஆருடம் கூறப்பட்டது. இவ்வாறாக ஊக்குவிக்கப்பட்டதன் பயனாக, எல்லா வகைகளிலுமான சமயங்களுக்கிடையிலான இயக்கங்கள் வேரூன்றிச் செழித்து வளர்ந்தன. பல மொழிகளில் கிடைக்கப்பெற்ற பெரும் எண்ணிக்கையிலான நூல்கள், நம்பிக்கையாளர்கள், நம்பிக்கையாளர் அல்லாதார் என்ற வேறுபாடின்றி பரந்தளவில் பொதுமக்களுக்கு அனைத்துப் பெரும் சமயங்களின் போதனைகளயும் அறிமுகப்படுத்தின. அதனைத் தொடர்ந்து காலவோட்டத்தில் வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என்று ஆரம்பித்து இறுதியாக இணையம் வரை அது குறித்து ஆர்வம் காட்டத் தொடங்கின; சமயங்கள் தொடர்பான பட்டப் படிப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் வழங்க ஆரம்பித்தன. அந் நூற்றாண்டு முடியுந் தறுவாயில், சில பத்தாண்டுகளுக்கு முன்னர்தாம் நினைத்துக்கூடப் பார்க்கவே முடியாததென விளங்கிய சமயங்களுக்கிடையிலான வழிபாட்டுக் கூட்டங்கள் அன்றாட நிகழ்வுகளாயின.

 

துரதிர்ஷ்டவசமாக இம் முயற்சிகள், அறிவுப்பூர்வ ஒத்திசைவு, ஆன்மீகப் பொறுப்புணர்வு ஆகிய இரண்டையும் இழந்து நிற்கின்றன என்பது வெள்ளிடை மலை. ஒன்றுபடுத்தும் செயல்பாடுகள் மனுக்குலத்தின் பிற சமூக உறவுகளைத் தன்மைமாற்றம் செய்து கொண்டிருக்கும் அதே வேளையில் உலகின் எல்லாப் பெரும் சமயங்களும் தன்மையிலும் பூர்வீகத்திலும் சம அந்தஸ்து உடையவை என்னும் கருத்து சமயப் பிரிவினைவாதிகளுள் ஆழ வேரூன்றியுள்ள சிந்தனைகளினால் பிடிவாதமாக எதிர்க்கப்படுகின்றன. இனங்களை ஒன்றிணைப்பதில் ஏற்படும் முன்னேற்றம் வெறும் ஓர் உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடோ , வியூகமோ மட்டும் அல்ல; மாறாக, இவ்வுலகில் மக்கள் யாவரும் ஓர் இன வகையைச் சார்ந்தவர்கள் எனவும் அவ்வினம் பல்வேறு பிரிவுகளாக வேறுபட்டிருப்பதனால், தனிப்பட்ட எந்தவோர் இனத்தின் உறுப்பினருக்கும் அனுகூலங்கள் வழங்கப்படுவதோ குறைபாடுகள் விதிக்கப்படுவதோ இல்லை எனும் கருத்தின் அங்கீகாரத்திலிருந்து உதிப்பதாகும். அதேபோன்று, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சமத்துவம் வழங்குவதையும் ஆண் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் அதே கல்வி வாய்ப்புகள் பெண் பிள்ளைகளுக்கு வழங்கப்படுவதையும் மறுப்பதற்கு உயிரியல், சமூக அல்லது தார்மீக ரீதியில் எந்தவோர் அடிப்படையும் இல்லை எனும் கோட்பாட்டை சமூக ஸ்தாபனங்கள், பொது அபிப்பிராயம் ஆகிய இரண்டும் தாமே விரும்பி அங்கீகரித்திடும் சூழ்நிலையைப் பெண் விடுதலையானது உருவாக்கியுள்ளது. படிப்படியாக வளர்ந்துவரும் உலக நாகரிக வளர்ச்சிக்குச் சில நாடுகள் உறுதுணை புரிகின்றன. இவற்றைப் பாராட்டுதல் என்பது மற்ற நாடுகள் இம் முயற்சியில் சிறிதே பங்காற்ற இயலும் அல்லது ஒன்றுமே செய்ய இயலாது எனும் தொன்றுதொட்டு இருந்துவரும் போலி நம்பிக்கையை எவ்வகையிலும் ஆதரிக்கவில்லை.

 

சமயத் தலைமைத்துவம், இத்தகைய அடிப்படையான ஒரு மறுசீரமைப்பினை மேற்கொள்ள பெரும்பாலும் இயலாமற் போனதுபோலவே தோன்றுகின்றது. மானிட வர்க்கத்தின் ஒற்றுமையின் பயனாக உண்டாகும் நல்விளைவுகள், நாகரிக மேம்பாட்டின் தவிர்க்கவியலாத அடுத்த கட்டம் மட்டுமன்றி அது நமது கூட்டு வரலாற்றின் இந் நெருக்கடிமிக்க தருணத்தில் நம் இனம் கொணரும் ஒவ்வொரு விதமான உபரிநிலையிலான தனித்துவங்களின் நிறைவும் ஆகும் எனவும் சமுதாயத்தின் மற்ற பகுதியினர் ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறிருந்தும், உண்மையை எய்துவது தங்களின் தனிப்பெரும் சலுகை என உரிமை பாராட்டிக் கொண்டவர்களின் சித்தாந்தங்களும் அது குறித்த குருட்டுப் பிடிவாதக் கோட்பாடுகளும் மண்ணுலக வாசிகளைப் பிரித்துப் படுமோசமான பூசல்களை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்து வந்துள்ளன. இதே சித்தாந்தப் பிடியில் சிக்கிய நிலையில் பெரும்பகுதியான நிறுவப்பட்ட சமயம் எதிர்காலத்தின் வாயிலில் ஸ்தம்பித்து நிற்கின்றது.

 

மனித இனத்தின் சுபிட்சத்தினைப் பொறுத்தவரையில் இந்தப் பாதிப்புகள் பேரழிவு உடையனவாக இருந்து வந்துள்ளன. சமயத்தின் பெயருக்கே தலைகுனிவை உண்டாக்கும் மதவெறியின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் பயனாக விளையும் பயங்கர நிகழ்வுகளை மகிழ்ச்சியற்ற மக்கள் இன்று அனுபவிக்க வேண்டியிருப்பதை இங்கே விளக்கமாக விவரிப்பது அவசியமன்று. இப் பிரச்னை அண்மையில் தோன்றிய ஒன்றுமல்ல. பல உதாரணங்களில் ஒன்றை மட்டுமே சுட்ட வேண்டுமெனில், ஐரோப்பிய கண்டத்தின் பதினாறாம் நூற்றாண்டுச் சமயப் போர்கள் அக் கண்டத்தின் மொத்த ஜனத்தொகையில் முப்பது விழுக்காட்டு மக்களின் உயிர்களைப் பலி கொண்டதை இங்குக் குறிப்பிடலாம். இத்தகைய போர்கள் மூளக் காரணமாயிருந்த சமயப் பிரிவினரின் பிடிவாதக் கொள்கைகளினுடைய கண்மூடித்தனமான சக்திகளின் விதைகள் பொது மக்களின் சிந்தனை உணர்வு நிலைகளில் விதைக்கப்பட்டதன் விளைவாக அவற்றின் நெடுங்கால அறுவடை என்னவாக இருந்திருக்கலாம் என ஒருவர் வியக்கக் கூடும்.

 

உலக விவகாரங்களை வடிவமைப்பதில் தீர்க்கமாக முடிவு செய்திடும் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ள சமயத்தின் சிந்தனை வளர்ச்சிக்கு இழைக்கப்பட்ட துரோகமே மற்றெல்லாக் காரணங்களை விடவும் அவ்வாற்றலை அதனிடமிருந்து பறித்ததற்கு முக்கிய காரணமாக விளங்கியுள்ளது. இக் கணக்கில் இதுவும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். மனித சக்திகளை வீணடிப்பதிலும் சிறுமைப் படுத்துவதிலுமேயான விஷயங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள சமய நிறுவனங்கள், மெய்ம்மையை ஆராய்வதற்கும் மனிதகுலத்தைத் தனிச்சிறப்புற வேறுபடுத்திக்காட்டும் அறிவு நுட்பத் திறன்கள் பயன்படுத்தப்படுவதற்கும் தடைகளாக இருந்த நிறுவனங்களின் முன்னணி முகவர்களாக விளங்கின. சமய நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளத் தவறியதன் காரணமாக லௌகீகம் அல்லது பயங்கரவாதத்தின் தாக்கங்களுக்கு ஆளாகும் அவல நிலைக்குக் கோடானுகோடி நம்பிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இப் பொறுப்பின்மை குறித்து இச் சமய நிறுவனங்கள் ஒளிவு மறைவின்றிப் பேசாத வரையில் லௌகீகம் அல்லது பயங்கரவாதத்தினைக் கண்டிக்கும் நடவடிக்கைகள் சம காலத் தார்மீக நெருக்கடியைச் சமாளிப்பதில் சிறிதளவும் உதவப் போவதில்லை.

 

எவ்வளவுதான் வேதனை மிக்கதாக இருப்பினும், இத்தகைய சிந்தனைகள் நிறுவப்பட்ட சமயங்களைக் குற்றஞ்சாட்டுவதற்கு மேலாக அச் சமயங்கள் பெற்றிருக்கும் தனிப் பெரும் சக்திக்கான ஒரு நினைவூட்டலாகவே கருதப்பட வேண்டும். நாம் அறிந்திருப்பது போன்று, சமயம் தன்முனைப்பின் வேர்களையே சென்றடைகின்றது. பெரும் நம்பிக்கை முறைகளை இவ்வுலகிற்கு வழங்கிவந்துள்ள தெய்வீக ஆத்மாக்களின் உணர்வு, முன்னுதாரணம் ஆகியவற்றுக்குச் சமயம் விசுவாசமாக இருப்பின், அன்பு செலுத்தவும், மன்னிக்கவும், உருவாக்கவும், துணிந்து பெரும் முயற்சிகளை மேற்கொள்ளவும், தப்பெண்ணங்களை வெற்றி கொள்ளவும், பொது நலத்திற்காகத் தியாகம் செய்யவும், மிருக உள்ளுணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் மக்கள் அனைவரிடமும் ஆற்றலைத் தோற்றுவிக்கவல்லதாக அது இருந்துள்ளது. ஐயத்திற்கிடமின்றி மனித இயற் தன்மையினை நாகரிகப்படுத்தும் கருவாற்றலாக விளங்கி வந்திருப்பது, எழுதப்பட்ட வரலாற்றுக் காலம் தொட்டு அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக அவதரித்துள்ள இத் தெய்வீக அவதாரங்களின் தாக்கமேயாகும்.

 

கடந்த காலங்களில் அத்துணை ஆற்றலோடு இயங்கிய அதே சக்தி, இன்றும் மனித சிந்தனை உணர்வு நிலையில் அணைத்திடவியலாத ஓர் அம்சமாக நீடிக்கின்றது. எல்லாத் தடைகளுக்கும் எதிராக ஆகக் குறைந்த அர்த்தமுள்ள ஊக்குவிப்புடன் எண்ணிறந்த கோடானு கோடி மக்களின் வாழ்க்கைப் போராட்டத்திற்கு அது தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் வழங்கி வருவதுடன் எல்லா நாடுகளிலும் வீரர்களையும் புனிதர்களையும் உருவாக்கியுமுள்ளது. அவரவர் சமயத்தின் புனித நூல்களில் காணப்படும் கோட்பாடுகளின் சிறப்பார்ந்த நிரூபணமாக இவ் வீரர்களும் புனிதர்களும் திகழ்கின்றனர். நாகரிகத்தின் வரலாறு சித்திரிப்பதுபோன்று, சமூக தொடர்புறவு அமைப்பு முறைகளின் அமைப்பின் மீது கூட சமயம் தன் செல்வாக்கினை வெகுவாகச் செலுத்திடும் ஆற்றலைப் பெற்றுள்ளது. உண்மையில், முடிவில்லாத இம் மூலாதாரத்திலிருந்து தனது தார்மீக உந்துசக்தியைப் பெற்றிராத நாகரிகம் ஒன்றில் எந்தவோர் அடிப்படை முன்னேற்றம் குறித்தும் சிந்திப்பதற்குச் சிரமமாகவே இருக்கும். ஆதலின், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் இக் கிரகத்தினை ஒழுங்கமைப்புச் செய்யும் செயலின் உச்சநிலைக் கட்டம் ஆன்மீக வெறுமையில் நடைபெறுவதை நினைத்துப் பார்க்கத்தான் முடியுமா? அண்மையில்தான் கடந்து சென்ற நூற்றாண்டின்போது நம் உலகில் தோன்றிய நெறிபிறழ்வுச் சித்தாந்தங்கள் நமக்கு வேறு எந் நன்மையினையும் அளிக்கவில்லையெனினும் மனிதக் கண்டுபிடிப்பு ஆற்றலுள் வீற்றிருக்கும் மாற்று வழிகளினால் அத்தேவை நிறைவேற்றப்படமாட்டாது என்பதைத் தீர்க்கமாகவே உணர்த்தியுள்ளன.

 

ஒரு நூற்றாண்டுக்கு முன்பதாகவே இக்காலம் குறித்த பல விஷயங்களை மறைபொருளாக பஹாவுல்லாவின் வார்த்தைகள் ஒட்டுமொத்தமாக விவரித்துள்ளன; அதன் பின் வந்த இடைப்பட்ட பல பத்தாண்டுகளில் அவை பரவலாகப் பரப்பப்பட்டன:

 

உலகின் மக்கள், எவ்வினத்தோராயினும், எச்சமயத்தோராயினும் தெய்வீக மூலத்திலிருந்தே தங்களின் அருட்தூண்டலைப் பெறுகின்றனர் என்பதுடன், அவர்கள் யாவரும் ஒரே கடவுளின் மக்களும் ஆவர். அவர்கள் கீழ்ப்படியும் கட்டளைகளுக்கிடையே உள்ள வேறுபாட்டுக்கு அவை வெளிப்படுத்தப்பட்ட காலத்தின் மாறுபட்ட தேவைகளும் அவசியங்களுமே காரணமாகின்றன. மனித நெறிபிறழ்ச்சியின் விளைவாக உருவாகிய சிலவற்றைத் தவிர்த்து, அக் கட்டளைகள் யாவும் இறைவனால் விதிக்கப்பட்டவையே; அவரது விருப்பம், நோக்கம் ஆகியவற்றின் பிரதிபலிப்புகளுமாகும். வீறுடன் எழுந்து நம்பிக்கை என்னும் ஆயுதத்தைக் கைகளிலேந்தி, உங்களிடையே பிளவுகளுக்கு வித்திடுபவையான உங்களுடைய வீண் கற்பனைகள் எனும் தெய்வங்களைச் சுக்கு நூறாக உடைத்தெறிவீர்களாக. உங்களை ஒன்றுசேர்த்து ஒற்றுமைப்படுத்தக்கூடியவற்றை இறுகப் பற்றிக்கொள்வீர்களாக.

 

இத்தகையதானதோர் அறைகூவல், உலகின் பெரும் சமயங்களின் நம்பிக்கை முறைகள் எதனிலும் காணப்படும் அடிப்படை உண்மைகள் கைவிடப்பட வேண்டும் எனக் கோரவில்லை. அது அதற்கு நேர்மாறான ஒன்றையே கோருகிறது. சமய நம்பிக்கை தன் சொந்தக் கட்டளைகளையும், தன் சொந்த நியாயப்படுத்தல்களையும் கொண்டுள்ளது. மற்றவர்கள் என்ன நம்புகின்றனர் அல்லது நம்பாமலிருக்கின்றனர் என்பது அந் நாமத்துக்குத் தகுதி வாய்ந்த தனி மனித மனச்சான்றின் மீது அதிகாரம் கொண்டிருக்கவில்லை. மேற்கூறப்பட்டுள்ள வார்த்தைகள் துளியும் சந்தேகத்திற்கிடமின்றி வற்புறுத்துவது என்னவெனில் சமயத் தனித்தன்மை, அல்லது சமயம் முடிந்த முடிவானது போன்ற எல்லாக் கூற்றுகளுக்கும் உரிமை கோருதலைக் கைவிட வேண்டும் என்பதேயாகும். அவற்றின் வேர்கள் ஆன்மாவின் வாழ்வைச் சுற்றி இறுக வளர்ந்து, ஒற்றுமைக்கான உந்துதல்களை மூச்சடைத்துப் போகவும், வெறுப்புணர்ச்சி, வன்செயல் ஆகியவற்றைத் தூண்டவும் செய்யும் அதிபெரும் தனி அம்சமாக விளங்கியுள்ளன.

 

இருபதாம் நூற்றாண்டின் தன்மைமாற்ற அனுபவங்களிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கும் ஓர் உலக சமுதாயத்தில் சமயத் தலைமைத்துவம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமெனில், இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சவாலுக்கு மறுமொழி கூறிட சமயத் தலைவர்கள் முனைய வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. எல்லாச் சமயங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ள உண்மையானது சாராம்சத்தில் ஒன்றே என மேன்மேலும் அதிகரித்த எண்ணிக்கைக் கொண்ட மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர் என்பது வெள்ளிடை மலை. இவ்வங்கீகாரம், சமய விவாதங்களின் பயனாக விளைந்த தீர்மானத்தின் மூலம் ஏற்பட்ட ஒன்றல்ல. மாறாக, என்றும் அதிகரித்து வரும் மற்றவர்களுடைய அனுபவத்தின் வழி வந்த உள்ளுணர்வு விழிப்பு நிலையின்வழி தோன்றிய ஒன்றிலிருந்தும் மனித குடும்பத்தின் ஒருமைப்பாட்டினை ஏற்கத் தொடங்கியதிலிருந்தும் உருவாகியதாகும். மங்கி மறைந்து போன உலகங்களிலிருந்து வாரிசாகப் பெறப்பட்ட சமயக் கோட்பாடுகள், சடங்குகள், சட்டங்கள் ஆகியவற்றின் குழப்பங்களிலிருந்து மேலெழும் ஓர் உணர்வு என்னவெனில், ஆன்மீக வாழ்வானது பல்வேறு நாட்டினர், இனங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றில் தெளிவாகத் துலங்கும் ஒருமைப்பாடு போன்று அனைவரும் சமமாக அடைந்திடக்கூடிய எல்லையற்ற ஒரே மெய்ம்மையை தானும் உள்ளடக்கியுள்ளது என்பதாகும். பரவலானதும், இன்னமும் பரீட்சார்த்தமாகவுமுள்ள இக் கருத்து தன்னை வலுப்படுத்திக்கொண்டு ஓர் அமைதிமிகு உலகினை நிர்மாணிப்பதில் ஆக்கபூர்வமாகப் பங்காற்றிடுவதற்கு, காலந்தாழ்ந்த இந் நேரத்திலும்கூட, மண்ணுலகின் கோடானு கோடி மக்கள் வழிகாட்டலுக்காக யாரை எதிர்பார்த்து நிற்கின்றார்களோ, அவர்களின் முழுமனதான ஆதரவும் அங்கீகாரமும் அதற்குத் தேவை.

 

உலகின் பெரும் சமய மரபு வழக்குகளுக்கிடையே சமூகச் சட்டங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் பெருத்த வேறுபாடுகள் உண்டு என்பது நிச்சயம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி கண்டு வந்துள்ள ஒரு நாகரிகத்தின் மாறி வரும் தேவைகளுக்கேற்ப அடுத்தடுத்து வந்துள்ள தெய்வீக வெளிப்பாடுகள் தீர்வுகளைக் கொடுக்க முற்பட்டுள்ளன. அது அவ்வாறின்றி வேறு எவ்வாறும் இருந்திருக்க இயலாது. உண்மையில், ஏதாவது ஒரு வகையில், உலகின் பெரும் சமயங்களின் புனித நூல்களின் ஓர் உள்ளார்ந்த அம்சமாகத் திகழ்ந்திடும் சமயம் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை வெளிப்படுத்துவதாகவே இருக்கக் காணலாம். ஆன்மீக அனுபவத்தினை வளப்படுத்தும் நோக்கத்திற்காகத் தோன்றிய கலாச்சார மரபுரிமைகளை, தப்பெண்ணம், பிரிவினை ஆகியவற்றைத் தூண்டுவதற்குத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தார்மீக ரீதியில் நியாயப்படுத்தமுடியாது. ஓர் ஆன்மாவின் பிரதான பணி, மெய்ம்மையை ஆராய்வதும், தான் ஏற்றுக்கொண்ட உண்மைகளினால் உந்தப்பட்டு அவ்வுண்மைகளின் வழி வாழ்வதும், அதே போன்ற முயற்சிகளை மற்றவர்கள் மேற்கொள்வதைப் பெரிதும் மதிப்பதுவுமாகவே எப்பொழும் இருந்து வரும்.

 

பெரும் சமயங்கள் அனைத்தும் வேறுபாடின்றி ஒரே இறைவனிடமிருந்து வந்தவையென ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அதன் விளைவு ஒரு சமயத்திலிருந்து இன்னொரு சமயத்திற்குப் பெருமளவிலான மக்களை மதமாறச் செய்வதை அது ஊக்குவிக்கும் அல்லது குறைந்தபட்சம் அதற்கு வழிவகுத்திடும் என்பதாகும். இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படலாம். இது உண்மையாகவோ உண்மை அல்லாததாகவோ இருப்பினும் இறுதியில், வரலாறு, பிரதேசங் கடந்த ஓர் உலகம் பற்றிய விழிப்புணர்வு பெற்றுள்ளவர்களுக்கு வழங்கியிருக்கும் வாய்ப்புகளோடும், இவ் விழிப்புணர்வு சுமத்தும் பொறுப்பினோடும் ஒப்பிடுகையில் இது முக்கியமான ஒன்றல்ல. ஒழுக்க நெறி சார்ந்த நடத்தையினைப் பேணி வளர்ப்பதில் மனதைத் தொடக் கூடியதும் நம்பகமானதுமான அத்தாட்சியினைப் பெரும் சமயங்கள் ஒவ்வொன்றும் சான்றுகளோடு நிரூபிக்க முடியும். அதேபோன்று, ஒரு குறிப்பிட்ட சமய நம்பிக்கை மற்ற சமய நம்பிக்கைகளைவிட அதிகமான அளவிலோ குறைவான அளவிலோ சமயக் கொள்கை வெறியும் கண்மூடிப்பழக்கங்களும் பெருகிட வழிவகுத்து விட்டது என எவரும் உறுதியுடன் வாதித்து விடவும் இயலாது. ஒன்றுபட்டு வரும் உலகில், நிகழ்வுகளுக்கு மறுமொழி கூறும் முறை மற்றும் கலந்துரையாடல் முறைகள் யாவும் தொடர்ந்தாற்போன்று மாற்றம் காண்பது இயல்பு என்பதுடன், எவ்வித ஸ்தாபனங்களாக இருப்பினும், ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் அவை எப்படி நிர்வகிக்கப்படலாம் என்பதைக் கருத்தில் கொள்வதுதான் அவற்றின் பங்காக இருக்கும். அதன் முடிவு ஆன்மீக, தார்மீக மற்றும் சமூக ரீதியில் நலம் தரும் ஒன்றாக இருந்திடுவதற்கான உத்தரவாதம், பிரபஞ்சமானது பொறுப்பற்ற மனித நடத்தையின் மூலமாக ஆளப்படுவதில்லை, ஆனால், ஓர் அன்பான, கைவிடாத இறைவனால் ஆளப்படுகின்றது என கணக்கற்ற மக்கள் கொண்டுள்ள இறை நம்பிக்கையில்தான் உள்ளது.

 

விண்ணுலக வாழ்வினை மண்ணுலக வாழ்விலிருந்து என்றென்றும் பிரித்தே வைத்திருக்கும் என கடந்தகாலம் கருதி வந்த கடக்கவியலாத சுவர், மக்களைப் பிரித்திடும் தடையரண்களோடு சேர்ந்து இடிந்து வீழ்வதை நமது காலம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கின்றது. மற்றவர்களுக்குச் சேவை செய்வதை ஒரு தார்மீகக் கடமையாக மட்டுமே கருதாமல் ஆன்மா சுயமாக இறைவனை அணுகுவதற்கான ஒரு வழியாகக் காண எல்லாச் சமயங்களின் திருநூல்களும் அவற்றின் நம்பிக்கையாளர்களுக்கு எப்பொழுதுமே போதித்து வந்துள்ளன. இன்று, சமுதாயத்தின் முற்போக்குடைய மறுசீரமைப்புப் பணி இப் போதனைக்குப் புதிய பரிமாணங்கள் கொண்ட அர்த்தத்தினை வழங்குகின்றது. நீதிக் கோட்பாடுகளினால் உலகம் மறுமலர்ச்சி பெறும் எனும் பண்டைய வாக்குறுதி நிதர்சன இலக்காக மெதுவாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஆன்மா, சமுதாயம் ஆகியவற்றின் தேவைகளை நிறைவேற்றுவதானது முதிர்ச்சியடைந்த ஆன்மீக வாழ்வின் பரஸ்பர அம்சங்களாக அதிகரித்த நிலையில் காணப்படும்.

 

இப் பிந்தியக் கருத்து பிரதிநிதித்திடும் சவாலை ஏற்பதற்குச் சமயத் தலைமைத்துவம் முன்னெழுவதாயிருப்பின், சிந்தனை உணர்வு நிலையின் ஆற்றல்களை மேம்பாடு காணச் செய்திடும் இரு இன்றியமையா அறிவுகளான சமயத்தையும், விஞ்ஞானத்தையும் அது அங்கீகரிக்க ஆரம்பிக்க வேண்டும். மெய்ம்மையை ஆய்வு செய்திடும், மனதின் இந்த அடிப்படை முறைகள் ஒன்று மற்றொன்றோடு முரண்படுவதற்குப் பதிலாகப் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன; மற்றும் வரலாற்றில் அவற்றின் ஒன்றுக்கொன்று துணைபோகும் தன்மை, அங்கீகரிக்கப்பட்ட மிக அரிதான, அதே வேளையில் மகிழ்ச்சியான காலங்களின்போதும், அவையிரண்டும் சுமுகமாக ஒன்றிணைந்து பணியாற்றியுள்ள வேளைகளின் போதும், அதிகபட்சமான பயன்களை விளைவித்துள்ளன. அறிவியல் முன்னேற்றங்களினால் அடையப்பட்ட ஆழ் சிந்தனைகளும், திறன்களும் அவற்றின் பொருத்தமான பயனீடுகளை உறுதிசெய்யும் பொருட்டு, ஆன்மீக, தார்மீக பொறுப்புகளின் வழிகாட்டலை எப்பொழுதும் நாட வேண்டும்; சமய நம்பிக்கைகள் எந்தளவுக்குப் போற்றப்படுபவையாக இருப்பினும், அறிவியல் முறையில் நடுநிலையிலான சோதிப்புகளுக்குச் சுயவிருப்பத்தின் பேரிலும், நன்றியுடனும் உடன்பட வேண்டும்.

 

இறுதியாக, சிறிது தயக்கத்துடனேயே ஒரு விஷயத்தினை நாங்கள் அணுகுகின்றோம். ஏனெனில், இது மனசாட்சியை மிகவும் நேரடியாகத் தொடும் ஒரு விஷயமாகும். இவ்வுலகம் தரும் மயக்கங்களுள், நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அதிகாரத்தைச் செலுத்துவதே, ஆச்சரியமின்றி, சமயத் தலைவர்களின் மனங்களைப் பெரும்பாலும் ஆட்கொண்டிட்ட ஒரு சோதனையாகும். பல்லாண்டுகளாகத் தியானத்தில் ஈடுபட்டும் பெரும் சமயங்கள் ஒன்றின் புனித நூல்களையோ மற்றொன்றின் புனித நூல்களையோ ஆழக் கற்று வரும் ஒருவருக்கு, அதிகாரத்தின் உள்ளார்ந்த தன்மை தொடர்பாக அடிக்கடி கூறப்படும் மூதுரையான, அதிகாரம் கெடுக்கும் அதிக அதிகாரம் அதிகமாகக் கெடுக்கும், என்பதனை மேலும் நினைவுறுத்துவது அவசியமன்று. இது தொடர்பாக, எண்ணிறந்த மத குருக்களால் கடந்த காலங்களில், ஐயத்திற்கிடமின்றி, இதற்கு முன் எவரும் அடைந்திடாத அக வெற்றிகள், நிறுவப்பட்ட சமயத்தினுடைய ஆக்கச் சக்திமிக்க ஆற்றலின் தலையாய மூலாதாரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வந்துள்ளன என்பதுடன், அதன் மிக உயரிய சிறப்புகளில் ஒன்றாகவும் மிளிர்கின்றது. அதே அளவில், மற்ற சமயத் தலைவர்கள் உலகியல் அதிகாரம், உலகியல் சலுகைகள் ஆகிய கவர்ச்சிகளுக்கு அடிமையானதானது, அதனை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருப்போரிடையே வெறுப்பு, ஊழல், ஏமாற்றம் ஆகியவை உருவாவதற்குச் சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றின் இக் கட்டத்தில், சமயத் தலைமைத்துவத்தின் ஆற்றலானது, தன் சமூகப் பொறுப்பினை நிறைவேற்ற வேண்டியதற்கான அவசியம் குறித்து மேலும் விவரிக்கத் தேவையில்லை.

 

பண்புகளை உன்னதப்படுத்துவதிலும் உறவுகளைச் சுமுகமாக்குவதிலும் அக்கறை கொண்டுள்ளதன் காரணமாக, வரலாறு முழுவதிலுமே சமயமானது, வாழ்வுக்கு அர்த்தத்தைக் கொடுக்கும் முடிவான அதிகாரமாகச் செயலாற்றி வந்துள்ளது. ஒவ்வொரு சகாப்தத்திலும் சமயமானது நல்லதைப் பேணி வளர்த்து, தவற்றைக் கண்டித்து, இன்னும் அடையப்படாத உள்ளார்ந்த ஆற்றல்களின் அகக்காட்சியினைக் காண விரும்புவோர் அனைவரின் பார்வைக்கும் காண்பித்தும் வந்துள்ளது. அதன் அறிவுரைகளிலிருந்து பகுத்தறியும் ஆன்மா, உலகம் தன் மீது விதித்துள்ள வரம்புகளை வெல்வதற்கான ஊக்கத்தையும், தன்னை நிறைவாக்கிக் கொள்வதற்கான தூண்டுதலையும் பெற்றுள்ளது. தன் பெயருக்கேற்ப, சமயம் அதே நேரத்தில் பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைப்பதன்வழி என்றும் பெரிதாக வளர்ந்து வரும் பல்கூறுகள் மிகுந்த சமுதாயங்களை உருவாக்கும் பிரதான சக்தியாக விளங்கி வந்துள்ளது. இச் சமுதாயங்களின்வழியே தனிப்பட்ட மனித ஆற்றல்கள் வெளிப்பட்டு வடிவம் காண்கின்றன. மனித இனத்தினை நாகரிகப்படுத்தும் செயல்பாட்டினை ஒரே தனி இயல் நிகழ்வாக - அதாவது நமது உலகத்துடன் கடவுள் உலகம் மீண்டும் மீண்டும் நேருக்கு நேர் சந்தித்திடும் சந்திப்புகளாக - காணச் சாத்தியப்படுத்தும் கண்ணோட்டமே இச் சகாப்தத்தின் தனிப்பெரும் அனுகூலமாகும்.

 

இக் கண்ணோட்டத்தினால் உத்வேகமடைந்துள்ள பஹாய் சமூகம், சமயங்களுக்கிடையிலான அமைப்பின் நடவடிக்கைகளுக்கு அவை தோற்றம் பெற்ற நாள் முதல் தனது வற்றாத பேராதரவினை நல்கி வந்துள்ளது. இந் நடவடிக்கைகள் உருவாக்கும் போற்றத்தகுந்த தொடர்புறவுகளுக்கும் மேலாக, பல்வேறு சமயங்கள் ஒன்றுடன் ஒன்று மேன்மேலும் நெருக்கமாக அணுகுவதற்கு மேற்கொள்ளும் பெரும் முயற்சிகளை, தனது ஒட்டுமொத்தமான முதிர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மனித குலம், தெய்வீக விருப்பத்திற்கு இணங்க மேற்கொள்ளும் செயலாகவே பஹாய்கள் காண்கின்றனர். இயன்ற எல்லா வழிகளிலும் எங்கள் சமூகத்தின் உறுப்பினர்கள் தொடர்ந்து உதவ முற்படுவர். எனினும், இப் பொது முயற்சியில் எங்களோடு பங்காற்றும் சக ஊழியர்களுக்கு எங்களின் உறுதியான நம்பிக்கையை நாங்கள் தெளிவாகத் தெரிவித்திடக் கடமைப்பட்டுள்ளோம். அதாவது, சமயங்களுக்கிடையிலான கலந்துரையாடலானது, பிணிகளால் பீடிக்கப்பட்டுச் செய்வதறியாது, நம்பிக்கையிழந்து அவதியுறும் மானிடத்தைக் குணப்படுத்த அர்த்தமுள்ள வகையில் பங்காற்ற வேண்டுமெனில், இப்பொழுதே நேர்மையாகவும் தட்டிக் கழிக்காமலும் இவ்வியக்கம் தோன்றக் காரணமாகவிருந்த அந்த அனைத்தையும் தாங்கிநிற்கும் உண்மையின் தாக்கத்தினை- அதாவது இறைவன் ஒருவரே என்பதையும் எல்லாக் கலாச்சார வேறுபாடுகளுக்கும் மனித புரிந்து கொள்ளுதலுக்கும் மேலாக சமயம் ஒன்றேதான் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

 

கடந்து சென்றிடும் ஒவ்வொரு நாளிலும் பெருகிக் கொண்டே வரும் சமயத் துவேஷ நெருப்புகள் ஓர் உலகளாவிய நிலையில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பின்விளைவுகளைக் கொண்ட பெரும் கலகத்தைத் தூண்டக் கூடிய அபாயம் அதிகரித்து வருகின்றது. அத்தகைய ஆபத்தினை உதவியின்றி சமுதாய அரசுகள் வெற்றிகொள்ள இயலாது. தெய்வீக அங்கீகாரம் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் இக் கடும் பகைமையுணர்வுகளைப் பரஸ்பரம் சகிப்புத் தன்மை வேண்டும் எனும் வெறும் அறைகூவலின் மூலமே அணைத்திட இயலும் என்ற எதிர்ப்பார்ப்பால் நாம் ஏமாறவும் கூடாது. சம நிலையில் புரையோடிய இனம், பால், நாடு ஆகியன குறித்த வேஷங்களைக் களைவதற்குச் சமுதாயம் கடந்த காலப் பிடியிலிருந்து விடுபட எவ்வாறு தீர்க்கமாக முடிவெடுத்து விலகியதோ அதே போன்று இந் நெருக்கடி, கடந்த காலப் பிடியிலிருந்து விடுபட, சமயத் தலைமைத்துவத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. மனசாட்சி சம்பந்தப்பட்ட விஷயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு என்னதான் நியாயம் கற்பித்தாலும் முடிவில் மனுக்குல நலனுக்குச் சேவை புரிதலே நியாயப்படுத்தப்படுகின்றது. நாகரிகத்தின் வரலாற்றின் இம் மாபெரும் திருப்புமுனையில், இத்தகைய சேவைக்கான தேவை இது போன்று மிகத் தெளிவாக இருந்ததில்லை. பஹாவுல்லா வலியுறுத்துவதாவது: மனித குலத்தின் ஒற்றுமை உறுதியாக நிலைநாட்டப்படும் வரை, அதன் பொது நலன், அதன் அமைதி, பாதுகாப்பு ஆகியவை அடையப்படாமலேயே இருந்து வரும்.

 

உலக நீதி மன்றம்