பஹாய் ஆன்மீக சபைகளுக்கான ஓர் அறிமுகம்

மார்ஸியே கேய்ல்

 

 

இல்லம்

பஹாய் ஆன்மீகச் சபைகளுக்கான ஒர் அறிமுகம் - மார்ஸியே கேய்ல்


ஒரு நூலாகப்பட்டது அறிமுகமில்லாத நண்பர்களுக்கு எழுதப்பட்ட ஒரு கடிதமென அடிக்கடி மேற்கோளிடப்படும் அன்பர் ஒருவர் கருத்துரைத்துள்ளார். குறிப்பிட்ட அந்த வாக்கியத்தில் "அறிமுகமில்லாத" எனும் வார்தைகளே எனக்கு மிகவும் பிடித்தமான வார்த்தைகள். எதனாலோ தெரியவில்லை, நம்மைச் சந்தித்து நம்மோடு உரையாடும் நமது நண்பர்கள் நம் உள்ளத்தில் இருப்பதை தெரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் ஏதும் கூறும் முன்பே நாம் முந்திக்கொண்டு விடுகின்றோம். அதன் விளைவாக நாம் உண்மையில் (சிந்தித்து) கூற வேண்டியதற்கு நாமே இடையூறாகிவிடுகிறோம்.


மிகவும் பொருத்தமான வாசகர் என்பவராக இருப்பவர் நமக்கு அறிமுகமில்லாத வாசகராகவே இருப்பார், ஏனெனில், வேறு யாராவது எழுதியதைத் தேர்ந்தெடுக்காமல் நீங்கள் எழுத்தில் வடித்தவற்றுடன் ஓரிரண்டு மணி நேரம் அவர் செலவிடுகின்றார். நீங்கள் எழுதியதே அந்த நேரத்தில் அவருக்கு ஏற்றதாக இருக்கின்றது.


சரி, இப்போது இந்தக் கட்டுரையைப் பொறுத்த மட்டிலும், என் நண்பர்கள் பலர் அதை நிச்சயம் படிப்பர். என் நண்பர்கள் மட்டுமல்ல, அவர்களுடைய நண்பர்களும்தான். இதில் பெரும்பான்மை வாசகர்களாக பஹாய்களே இருப்பார்கள், அல்லது பஹாய் சமயத்துடன் நெருக்கமாக உள்ளவர்களாகவும் இருக்கலாம்.
ஒரு வேளை உங்களுக்கு குழந்தைகள் இருக்கலாம், நீங்கள் அவர்களுடன் சேர்ந்து சிந்திக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள விரும்பலாம். அல்லது, நீங்கள் ஒரு பொழுதுபோக்கு மன்றத்தின் அங்கத்தினராகவோ, அல்லது ஏதோ ஒரு செயற்குழுவின் உறுப்பினராகவோ, அல்லது, ஏதோ ஒரு வழியில் எதை எதையோ பிறருடன் கலந்தாலோசிக்க வேண்டிய நிலையில் உள்ளவராகவோ இருக்கலாம். அப்படியாயின், பஹாய்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் கலந்தாலோசனைக்கான முறைகள் உங்களுக்கு நிச்சயம் பயன் தருவனவாக இருக்கும். குழுவாக சிந்திப்பது குறித்து நிச்சயமாக உங்கள் நூல் நிலையத்தில் உங்களுக்குத் தேவையான நூல்கள் கிடைக்கலாம். ஆனால் பஹாய்களாகிய நாம் அவற்றைவிட நன்மை பயக்கக் கூடிய ஒன்றை அளிக்கும் நிலையில் இருக்கின்றோம். ஏனெனில், நாம் ஈடுபட்டிருப்பது மிகவும் மாறுபட்ட ஒன்றாகும்: குறிப்பிடுவதற்கும் தொடர்பு கொள்வதற்கும், அனைவருக்கும் பொதுவான, "தொடர்பு மையம்," ஒன்று நம்மிடம் உள்ளது. இந்த பொதுவான "தொடர்பு மையம் நமக்கு இருப்பதால்தான், முன் பின் தெரியாத, ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட மக்களாகிய நாம் ஒன்றுகூடியும், ஒன்றாக சிந்தித்தும் செயலாற்றவும் முடிகிறது.


தாங்கள் இட்டதே சட்டம் என இயங்கும் குடும்பத் தலைவிகள், குடும்பத் தலைவர்கள், மேல் மட்டங்களில் தன்னிச்சையாக செயல்படுவோர் -- யாவரும் நீர்த்தேக்கத்தைப் போன்றவர்கள். புதிய வாழ்வு முறையாகப்பட்டது, எல்லோரும் ஒன்றாக வாழ்ந்தும், வாழ்க்கைகளைப் பகிர்ந்துகொண்டும், நம்முடைய பிரகாசங்களைப் பிறருடைய பிரகாசங்களோடு ஒன்றுகலந்து, பல்வேறு நிலையில் இருக்கின்ற உண்மையை ஒன்றாகக் குவித்துக் கொண்டும் இருக்கின்றோம். நாமெல்லோருமே இதில் பங்காளிகள். ஒரு புதிய உலகை உருவாக்கும் செயலில் நாம் ஈடுபட்டுள்ளோம். "அன்பு கலந்த கலந்தாலோசனையே" நாம் இதில் பயன்படுத்தும் முறை ஆகும்.
இது ஒரு வேளை எனது மென்மை உணர்வில் பிறந்த ஆவலாக இருக்கக்கூடும், ஆனாலும், எங்கோ ஓரிடத்தில் ஓர் அறிமுகமில்லாத அன்பர் இக்கட்டுரையை நிச்சயமாக வாசிக்க விருப்பப்படலாம் எனவே நான் நினைக்க விரும்புகிறேன்.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு, நான் அங்கம் வகித்திருந்த செயற்குழு ஒன்றில் என்னைத் தங்களது தலைவராக, தவறாக, நியமித்திருந்த சக அங்கத்தினர்களை, கூட்டங்களுக்குக் கையில் ஒரு மணியைக் கொண்டு வருவதன் மூலம் திடுக்கிட வைத்தேன். அது உலோகத்தால் ஆன மேஜைமணி. அதை இயக்குவதன் மூலம் அதை ஒலிக்கச் செய்யலாம். அது ஒலிக்கும் போது, அடுத்த அங்கத்தினர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என, பெரும்பாலும் மூத்த வயதினராக இருந்த எனது மதிப்பிற்குரிய சக செயற்குழு அங்கத்தினர்களுக்கு விளக்கம் அளித்தேன். என் கருத்துப்படி, உரையாடல்களை ஒருங்கிணைத்து, எல்லா அங்கத்தினர்களும் தாங்கள் கூற வேண்டியதைச் சுதந்திரத்துடன் கூறுவதை முறைப்படுத்துவதே ஒரு செயற்குழுத் தலைவரின் கடமை ஆகும், என விளக்கமளித்தேன். ஆனாலும், பாரசீகத்தின் பல ஆயிர வருட சரித்திரத்தில் எவருமே ஒரு மணியை அடித்து ஒருவரது பேச்சை நிறுத்தியது கிடையாது. ஆக, அந்த கிழக்கு-மேற்கு செயற்குழுவின் அங்கத்தினர்கள் இப்போது அந்த விஷயத்தை முற்றாக மறந்தும் மன்னித்தும் இருப்பார்கள் என்பதே என் அவா.


ஒரு செயற்குழு அல்லது சபைத் தலைவரின் முதல் பொறுப்பு எல்லோருடைய அபிப்ராயங்களையும் சேகரிப்பதே ஆகும் என்பது என் கருத்து. இதை அவர் மறக்காது செய்வாரேயானால், சபையில் கூறப்பட வேண்டியவைகளை ஒருவரே, முக்கியமாக ஒன்பது பேர் அடங்கிய நமது சபைகளில், கூறிக்கொண்டிருக்க மாட்டார். ஒரிருவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒரு சபையின் தலைவரின் செயல்முறைகள் குறைபாடுகள் நிறைந்தே இருக்கின்றன. புதிய சபைகளின் அங்கத்தினராகியவர்கள், எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ஒருவரை ஒருவரும், தங்கள் சபைத் தலைவரையும், கட்டுப்படுத்தலாம். ஏனெனில், சபையின் ஒன்பது அங்கத்தினர்களும் தங்கள் அபிப்ராயங்களைத் தெளிவாக்கும் வரையில், அந்த கலந்தாலோசனை ஆன்மீக வழிகாட்டுதலைப் பிரதிநிதிப்பதாக எடுத்துக்கொள்ளப்பட முடியாது.


தனது எட்டு சக அங்கத்தினர்கள் மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்த முயலுவதே ஒரு சபைத் தலைவரின் முதல் பொறுப்பாக இருக்கின்றது. இதைச் செய்து முடிப்பதற்கும், அந்தக் கூட்ட விவகாரங்களை நன்கு முடித்துக் கொள்வதற்கும் அந்த தலைவருக்கு நேர ஒதுக்கீடும் மற்றும் ஒருவர் பின் ஒருவராகப் பேச வாய்ப்பு அளிப்பதற்குத் தேவையான மன உணர்வும் வேண்டும். அத்தலைவர், தான் கூற வேண்டியவைகளை இறுதியில் கூறுவதே சாலச் சிறந்ததாகவும் இருக்கின்றது. தலைவர் எனும் முறையில் தமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சபையில் தாமே பேசிக்கொண்டிருப்பது அவருக்கு முறையாகாது. எனக்குத் தெரிந்த ஒரு சிறந்த தலைவர், சபையில் தாம் பேசுவற்கு அனுமதி கேட்ட பிறகே தமது கருத்தைக் கூறுவார். ஒரு தலைவரின் பிற கடமைகளாக, வெளியுலகிற்கு அச்சபையின் பேச்சாளராகவும், பிரதிநிதியாகவும் செயல்படுவது; பண்டிகைகளில் தலைமைத்துவ பொறுப்பேற்பது; சபையின் விருந்தினர்களை உபசரிப்பது, வேறு சில வேளைகளில் பஹாய்த் திருமண விழாக்களில் ஆஜராகுவது எனக் கூறிக்கொண்டே போகலாம். யாரோ ஒருவர் கூறியது போல, சபைத் தலைவர் என்பவர் அச்சபைக்கு 'முகப்பாக' விளங்குபவர் ஆவார்.


தகவல்தொடர்பு காரியதரிசிக்குத்தான் மிகவும் கடினமான கடமை உள்ளது. ஒரு பெரிய பஹாய் சமூகத்தில் அவரது தொலைபேசி எல்லா நேரங்களிலும் அடித்த வண்ணமாகவே இருக்கும். எல்லோருமே, எல்லாவற்றுக்கும் அவரையே கூப்பிடுவர், எல்லாவற்றிற்கும் அவரையே குறையும் கூறுவர். ஒரு காரியதரிசியைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் போது, அவருக்கு மதியூகம் இருக்கிறதா? அவர் கடிதங்கள் எழுதக்கூடியவரா? அவருக்குச் சீரான மனப்பான்மை இருக்கின்றதா? போன்ற கேள்விகளை ஒருவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளலாம். ஒரு தலைவர் தமது உடை மடிப்புக் களையாமல் செயலாற்றிச் செல்வார். ஆனால் செயலாளரோ நாள் முழுதும் உழைக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் சபையின் அதிதூதர் எனும் நிலையில் அவர் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் பிராணத்தியாகி என்பது நிச்சயமே!


குறிப்புகள் எடுக்கும் செயலாளரைப் பொருத்த வரையில், சபையின் இயக்கத்திற்கு அவர் உயிர்க்கூறாக விளங்குபவர். ஏனெனில், சட்ட ரீதியான மற்றும் பிற விஷயங்களின் அடிப்படையில் எழக்கூடிய பிரச்சினைகள், இந்தக் குறிப்புகள் எடுக்கும் செயலாளர் எழுதிவைத்துள்ள கூட்டக் குறிப்புகளையே வலம் வரும். கூட்டக் குறிப்புகள் படிக்கப்படும் போது தூங்கி விழுவது பெரும் தவறாகும்; உங்கள் சபையின் சரித்திரத்தை அவை தாங்கியுள்ளன--ஆகவே, உங்கள் சபை செயல்படுத்தும் அனைத்து விஷயங்கள் பற்றியக் குறிப்புகளையும் உள்ளது உள்ளவாறு இந்தக் கூட்டக்குறிப்புகள் உள்ளடக்கியுள்ளனவா என்பதை நீங்கள் நிச்சயித்துக்கொள்ள வேண்டும். இப்போது பொருளாருக்கு வருவோம். சபையின் பிற அங்கத்தினர்களையும் பார்க்கையில், பஹாய் சமூகங்கள்பால் இவரே அதிக அன்பு காட்டுபவராக இருக்க வேண்டும். இது வேடிக்கைக்காகக் கூறப்படவில்லை. பஹாய் நிதியைப் பொருத்த வரையில் ஆன்மீக ரீதியில் நாம் முதிர்ச்சியடையாத பருவத்தினராகவே இருக்கின்றோம், ஏனெனில் பணம் கிடைப்பதற்கு அரிதான ஒரு லௌகீகம் நிறைந்த உலகத்தில் பிறந்தும், அப்படி பணம் கிடைத்துவிட்டால் அதைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியவர்களாகவும் நாம் இருக்கின்றோம். பஹாய் நிதி குறித்த போதனைகள், நாம் நமது மூடிய கைகளைத் திறந்து, இலகுநிலையில் வழங்கிட வேண்டும் என அறிவிக்கின்றன. "தன்னிடம் உள்ள யாவற்றையும் தொடர்ச்சியாக அளித்தும், கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலத்திலிருந்து தொடர்ச்சியாக நிறைவு செய்யப்படும் ஒரு சுனை அல்லது ஊற்றைப்போல் நாம் இருக்கவும் வேண்டும்." நிதியைப் பொருத்த வரையில் குழந்தைகளாக உள்ள நமக்கு அன்பு தேவைப்படுகிறது. எனக்குத் தெரிந்த ஒரு நல்ல பொருளாளர், எவ்வளவு சிறிய நன்கொடையாயினும் அதற்கு நன்றி செலுத்த தவறவே மாட்டார்.
கலந்தாலோசனையின் போது ஒரு மனிதர் கொடுக்கும் நிதியைப் பொருத்து அந்த மனிதரது கருத்துக்களை அந்தப் பொருளாளர் அளவிட மாட்டார். பத்தொன்பதாம் நாள் பண்டிகையின்போது அவர் அன்பர்களை நிதிக்காகக் குடைந்து கொண்டிருக்க மாட்டார். ஆனால் அவர் அன்பர்களைத் தமது நம்பிக்கைக்குப் பாத்திரமாக்கி, தமது பிரச்சினைகளை விளக்கி, அவர்கள் அளிக்கும் நிதியாகப்பட்டது சமயத்தை எவ்வாறு முன்னேற்றம் காணச் செய்கின்றது, மற்றும், நிதிகள் இல்லாத நிலையில் சமயக் காரியங்கள் எவ்வாறு நிலைகுத்திப் போகும் என்பதை விளக்குகின்றார். எப்போதாவது, தமது கவனத்தை ஈர்த்துள்ள, நிதி சம்பந்தமான தியாகம் நிறைந்த ஒரு நிகழ்வை, எவரது பெயரையும் குறிப்பிடாமல், சபையில் கூறுவார். தம்மைத் தேர்வு செய்துள்ள ஒவ்வொரு மெய்யன்பர்களின் குரலாக ஒவ்வொரு ஆன்மீக சபையின் அங்கத்தினரும் இருக்கின்றார். இதற்காக வாக்காளர்கள் தாம் தேர்ந்தெடுத்துள்ள அந்த அங்கத்தினரை நெருக்கி தமக்காகப் பரிந்து பேச வற்புறுத்தலாம் என ஆகாது--அப்படி விவகாரமான வழிகளில் அல்ல. வேறுபட்ட வாக்காளர்கள் வெவ்வேறானவர்களை இயல்பாகவே தேர்வு செய்கின்றனர். ஒரு சமூகத்தின், இன்ன இயல்போ, அல்லது வேறொரு இயல்போ, அதன் வாக்குச்சீட்டில்தான் பதிக்கப்படுகின்றது என இவ்விஷயம் குறித்து மேலும் விவரமாகக் கூறலாம்.
இங்கு நாம் சுதாகரித்துக் கொண்டு ஒரு வாக்காளராக விளங்குபவரைச் சிறிது ஆராய வேண்டும். அவர் தமது கையில் ஒரு வலிமை மிக்க ஆயுதத்தை வைத்திருக்கின்றார். ஒரு வருட காலத்திற்கான அவரது சமூகத்தின் தலைவிதி அவரது கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பஹாய் சமூக வாழ்வில் ஒரு விஷயம் தெளிவாக உள்ளது--ஒருவரோடு நாம் ஒரு செயற்குழுவில் பங்காற்றியிருந்தால் ஒழிய அவரைப் பற்றி நாம் முழுமையாகத் தெரிந்துவைத்திருக்க முடியாது; இதன் காரணமாக, ஒரு சமூகத்தின் எல்லா அங்கத்தினர்களையும் செயற்குழுக்களில் இடம் பெறச்செய்வது நன்மை பயக்கும் என்றே நான் நினைக்கின்றேன்! ஒருவரோடு ஒரு மேஜையில் உட்கார்ந்து தேநீர் அருந்தும் போதோ அல்லது ஒருவர் மேடையில் பிரசங்கம் செய்யும் போதோ அவர் மிகவும் நயமானவராகவே காணப்படுவார்; ஆனால் ஒரு செயற்குழுவில் சேவை செய்வதில் படும் உண்மையான துன்பத்திற்குப் பிறகே அவரது ஆற்றல்கள் பகிரங்கப்படுகின்றன. ஆன்மீக சபை அங்கத்தினர்கள் போலவே செயற்குழு அங்கத்தினர்களும் பஹாய் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அச்செயற்குழுவின் அங்கத்தினர்கள் வற்புறுத்துவதன் மூலம் தங்களை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்--மற்றும் வருங்காலங்களில் ஆன்மீக சபையில் அங்கத்துவம் பெறக்கூடிய வாய்ப்பிருந்தால் இதன் வழி நல்ல அனுபவமும் பெறலாம்.
வாக்களிப்பதற்குத் தேவையான மனமுதிர்ச்சியை அடைவதற்கு நெடுங்காலம் பிடிக்கலாம். ஆன்மீக சபையில் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்வார் என்பது தெரியாத வரையில் அவரை அச்சபைக்குத் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஒருவர் பெரும் துன்பத்திற்கு உட்பட்டிருப்பதால் அவரைக் களிப்படையச் செய்யவேண்டும் என்பதாலோ, அல்லது ஒருவருடைய கொள்ளுப்பாட்டி ஆரம்கால நம்பிக்கையாளர் என்பதாலோ, அல்லது அந்த ஒருவருடைய பெயரைத்தான் நன்றாக எழுத வரும் என்பதாலோ அவருக்கு வாக்களிக்கக்கூடாது. வாக்களிக்கும் போது நமக்காக ஒரு வருட காலம் சேவை செய்யக்கூடிய ஒரு சபையைத் தேர்ந்தெடுக்கிறோம். அந்த ஒரு வருட காலத்தின் விதி நாம் வாக்குச் சீட்டில் எழுதக்கூடிய பெயர்களின் கைகளில்தான் இருக்கின்றது.


ஒரு புதிய வாக்காளர், வாக்களிக்க அமரும் போது, பெரும்பாலும் லௌகீக விஷயங்களைச் சார்ந்தே வாக்களிப்பார். ஆனால் பண்பட்ட ஒரு நம்பிக்கையாளர், உடல் ஊனமுற்றோர் நிலையத்தில் வசிக்கும் அங்கஹீனர் ஒருவரைக் குறித்து, பிரார்த்தனைக்கும் தியானத்திற்கும் பிறகு பாதுகாவலர் வரையறுத்திருக்கும் பண்புகளான: "கேள்விக்கிடமில்லாத விசுவாசம்... தன்னலமில்லாத பக்தி... நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மனம்... அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட ஆற்றலும் முதிர்ந்த அனுபவமும்," ஆகிய பண்புகள் அவருக்கு இருப்பதாக உணர்வாரேயானால் அவருக்குக்கூட அவர் வாக்களிக்க முடியும் என்பதை உணர்ந்திருப்பார். நம் நாட்டில் தோல்வியில் முடியும் திட்டங்களுக்கெல்லாம் பல வேளைகளில் தேர்வு செய்யப்பட்ட ஸ்தாபனங்களையே குறை கூறுவதை நாம் காணுகின்றோம்; மனக்குறை உடையோருக்கெனவே இந்த ஸ்தாபனங்கள் தோற்றுவிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன; இந்த அங்கத்தினர்கள் ஒரு சிலர் மட்டும் வெளியேற்றப்பட்டு வேறு சிலர் அச்சபைக்கு தேர்ந்தெடுக்கப்படக் கூடுமானால், அங்கு உடனடியாக சுவர்க்கலோகமே தோன்றிவிடும் என நம்மிடம் கூறப்படுகிறது. ஆனால், பஹாய் நிர்வாக முறையில் "அவர்கள்" மற்றும் "நாம்" என்பது கிடையாது. செயல்படும் ஒரு சமூகம் அதன் சபையெனவும், அந்தச் சபையே அந்தச் சமூகத்தின் பிரதிபலிப்பு எனவும் நாம் கூறலாம்.


ஒரு சில வேளைகளில் பின்வரும் கருத்துரைகளைச் செவிமடுக்கலாம்: நமது சபை கூடாதிருப்பதன் காரணம், அதற்குச் செய்வதற்கு அதிக காரியங்கள் இல்லை. இதற்கான பதில்: சபை அதிகமாக ஒன்றுகூடினால் செய்வதற்கு அதிக வேலைகளும் இருக்கும் என்பதாகும். ஒரு சமூகத்தில் ஆற்றப்பட வேண்டிய வேலைகள் எங்கிருந்துதான் வரும் என பஹாய்கள் எதிர்ப்பார்க்கின்றனர்? என் நினைவாற்றல் சரியாக இருக்குமானால், தெஹரானின் உள்ளூர் ஆன்மீக சபை ஒவ்வோர் இரவும் கூடுகின்றது. ஒரு நல்ல சமூகம் அதன் உள்ளூர் ஆன்மீக சபைக்கு நிறைய வேலைகளைக் கொடுத்து அதற்கு ஓய்வே இல்லாமல் செய்யும்; ஒரு நல்ல சபை அதன் சமூகத்தினரைத் தொல்லைப்படுத்தி, அவர்களை முன்னோக்கிச் செல்ல தூண்டிக் கொண்டே இருக்கும். இவை இரண்டும் சேர்ந்த ஒரு செயற்பாடு சுழலும் ஒரு சக்கரத்தைப் போன்றது.


ஒரு வேளை, ஒரு பஹாய் சபையின் கடமைகள் குறித்து உங்களுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், பஹாய் நிர்வாக முறை, பக். 33-ஐப் படியுங்கள்.
உண்மையான பஹாய் கலந்தாலோசனை என்பது நினைவில் நிற்கக்கூடிய ஒன்று. (கலந்தாலோசனையின் போது) வருங்காலத்திற்குத் தேவைப்படும் நுட்பங்களைத் தேடித் துளாவிக்கொண்டிருக்கும் நேரங்களில், ஒன்றிணைந்த இணக்கத்தை அனுபவிக்கும் போது--கணநேரத்திற்கு, ஆன்மீக ஒளியின் ஒட்டுமொத்தமான பிரதிபிம்பங்களாக (அதன் அங்கத்தினர்கள்) மாறிடும் போது--இந்த உலகம் வாழ்வதற்கு ஓர் அழகான இடமாகின்றது. செயற்குழுவின் அங்கத்தினர்கள் ஒருவரைப் போலவே மற்றவரும் சிந்தித்து ஓர் இணக்கத்திற்கு வருவது அனுபவமற்ற ஒருவருக்கு இன்பமாகின்றது. ஆனால் ஓர் அனுபவசாலிக்கோ, வேறுபாடுகளின் செயற்பாட்டின் மூலமும்--எதிர்மாறானவை ஒன்றினைந்திடுவதன் மூலமும்--(கூட்டத்தின்) உலைச்சல் சமப்படுத்தப்பட்டும், சமநிலைபடுத்தப்பட்டும், அதைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும் இணக்கத்தின் உண்மையான பேரின்பம் உண்டாகிறது.


ஒரு சமூகம் எந்த அளவிற்கு உண்மையான பஹாய் வாழ்க்கை முறையை கடைபிடிக்கின்றதோ, அந்த அளவிற்கு அதுவும் அதன் ஆன்மீக சபையின் அங்கத்துவமும் வேறுபாடுகள் கொண்டிருப்பதைக் காணலாம். இளைஞர்கள் அவர்களின் வயது கோளாறுடனும், முதியோர்கள் அவர்களது வயதிற்கேற்ற பிரச்சினைகளுடனும் இருப்பர். சிறகடித்துத் திரியும் இளம் பெண்களும், நீதிபதிகளும், குப்பைக் கூட்டுவோரும்; தமது 12 வயதில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட வணிகரின் கருத்தைக் கவனத்துடன் ஆராயும் பகுத்தவறிவாளரும், அதில் இருப்பர். ஒருவர் மற்றவரின் குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு, ஒரு பிரச்சினையினை மற்றவர் காண முடியாத வேறு ஒரு கோணத்தில் ஒவ்வொருவரும் கண்டு, தனித் தனியாகத் தங்கள் சமூகத்தின் பண்புக்கூறுகளில் ஒன்றை ஒவ்வொருவரும் பிரதிநிதித்து, அதனால் தங்களுக்கே உரிய விசேஷ கருத்துக்களை வெளியிட வேண்டியக் கடமையைக் கொண்டும் இருப்பர். ஒரு மனிதன் தக்க வயதை அடைந்துவிட்டார் என்பது கிடையாது. ஒன்று இளம் வயதினராகவோ, அதிக முதியவராகவோ அல்லது தேவைக்கதிகமான நடுத்தர வயதினராகவோ இருப்பார்; ஒரு நாட் பொழுதின் வேலை அலுப்புடனோ அல்லது அதிக ஓய்வு எடுத்ததின் பயனாக சோம்பல் பட்டோ, குடும்பச் சுமையால் வளைமுதுகுடனோ, அல்லது துக்கம் அனுபவிக்காததால் தயவற்றவராகவோ, அறிவு ஆழம் அற்றவராகவோ அல்லது சில்லறைகளின் மதிப்பறியாத பெரும் செல்வந்தராகவோ; புனித விதிகளை மீறுமளவிற்குத் துணிவு கொண்டவராகவோ, அல்லது மனதில் ஒரு தேவையற்ற எண்ணம் உதித்ததற்கா மன்னிப்பு கேட்பவராகவோ, காதல் வயப்பட்டவராகவோ, அதன் வயப்படாதவராகவோ, அல்லது ஆபத்தான பருவம் எனக் கூறப்படும் ஒரு தெளிவற்ற 50 வருடக் காலத்தை உள்ளடக்கிய வயது கொண்டவராகவோ அவர்கள் இருப்பர். மனித சுபாவத்தின் இந்த அனைத்து குணங்களும் ஒரு சபைக்குள் ஒன்று திரண்டும், ஒன்று மற்றதை ஈடும் செய்கின்றன.


உங்கள் சக சபை அங்கத்தினராக யார் வரப்போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியப் போவதில்லை. நீங்கள் ஒரு வாரமே ஆன மெய்யன்பராக இருந்த போதிலும், சமயப் போதனைகளுக்கு ஏற்ப ஒவ்வோர் அங்கத்தினரும் தங்கள் அபிப்ராயங்களைத் தொடுத்தால், உங்கள் கருத்தாகப்பட்டது மற்ற எவருடைய கருத்துக்கும் இணையானதே.


நண்பர் ஒருவர் ஒரு பிரச்சினைக்கு உட்பட்டிருந்தார். அவர் அப்பிரச்சினையை ஏன் சபைக்கு எடுத்துச் செல்லவில்லை என வினவப்பட்டபோது, "நான் சபையின் ஒவ்வொரு அங்கத்தினரிடமும் அதைப்பற்றி பிரஸ்தாபித்துவிட்டேன்" எனக் கூறினார். சபையின் அங்கத்தினரான வேறொருவர், ஒரு பிரச்சினை குறித்து வினவப்பட்டபோது, சபை கூறப்போவது இன்ன இன்னதாகவே இருக்கும் எனக் கூறினார். நான் இந்த இரண்டு சூழ்நிலைகளையும் இங்கு குறிப்பிடுவதன் காரணம் இவை இரண்டுமே பொதுவாக நிலவும் மனப்பான்மைகளைப் பிரதிநிதிப்பவையே. முதலாமவர், அவர் ஒன்பது பேர்களையும், ஆனால் தனித்தனியே, சந்தித்திருந்தாலும், அவர்கள் தனித்தனியே சமூகத்தின் அங்கத்தினர்களே என்றும் ஒரு சபையின் முடிவை அவர்களால் எடுக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. இரண்டாமவர், தம்மைத் தவிர்த்து பிற எட்டு பேர்களின் சார்பாக இவரே யோசித்து விட்டார்.


கீத் ரேன்சம்-கெல்லர், மிகவும் எளிமையான ஆனால் மறக்க முடியாத வகையில் பஹாய் கலந்தாலோசனையை விளக்குவார். அவர், அது ஒரு சூப் செய்வதைப் போன்றது என்பார். ஒருவர் உப்பிடுவார், மற்றவர் இறைச்சி, வேறொருவர் காய்கறிகள், இத்யாதி இத்யாதி. இறுதியில் உங்களுக்கு கிடைப்பது, உப்போ, இறைச்சியோ, காய்கறிகளோ தனித் தனியே அல்ல, ஆனால் எல்லாவற்றின் கலப்பால் உண்டாகியுள்ள புதிதான வேறொன்று.


வெற்றிகரமான பஹாய்க் கலந்தாலோசனையில், ஒவ்வோர் அங்கத்தினரும் சபையின் முடிவில் திருப்தி கொள்வார், அல்லது குறைந்த பட்சம் கலந்தாலோசனை நடத்தப்பட்ட விதத்திலாவது மனநிறைவு கொள்வார். உலகாச்சார ரீதியில் பார்த்தோமென்றால், அது பெரும்பான்மையினரைக் கவர செயலாற்றி, அவர்களை உங்கள் கட்சிக்கு வென்று, பிறகு உங்கள் வாக்கைச் செலுத்துவது: பிறகு தோற்றவர்களைப் பார்த்து மரியாதையாக எள்ளி நகையாடி, வீட்டிற்குச் சென்று உங்கள் மனைவியிடம் நீங்கள் எப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான் என தம்பட்டம் அடித்துக் கொள்வது. ஆனால், இது பஹாய் கலந்தாலோசனை அல்ல.எல்லா 9 சபை அங்கத்தினர்களும் ஒரே கட்சியினராகையால், தனி அங்கத்தினர் என்பவர் சேருவதற்கு எந்த கட்சியும் கிடையாது: அனைவருமே சமயத்தின் அதி பெரும் நன்மையைத்தான் விரும்புகின்றனர். ஒரு சபை அங்கத்தினர் தான் நினைப்பதைப் பலவந்தமாகத் திணிப்பதற்காகச் சபையின் கூட்டங்களுக்குச் செல்வதில்லை. அவர், மற்ற எட்டு பேர்களின் கருத்துக்களைச் செவிமடுத்த பிறகு தனது கருத்து எவ்வாறு இருக்கும் என்பதை அறியவே கூட்டத்திற்கு செல்கிறார். அவர் ஒரு பிரச்சினையைத் தன் கோணத்தில் இருந்து மட்டுமே காண்பதால், அவர், பஹாய் நிர்வாகக் கோட்பாடுகளுக்கு ஒத்த ஒரு முடிவை அடைவதற்கு அதே பிரச்சினையின் வேறு எட்டுக் கோணங்களைத் தான் அதே பிரச்சினையை நோக்கும் அதே கோணத்தோடு ஒன்று சேர்த்திட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளார். ஒரு மிகவும் சிறந்த முடிவென்பது எல்லா ஒன்பது கருத்துக்களையும் ஒன்றாக உள்ளடக்கியதாகவே இருக்கும். இந்த ரீதியில், ஒரு ஆன்மீக சபையானது, அமைப்பில் ஒரு பஹாய்த் தொழுகை இல்லத்திற்குச் சமமாகும். எந்தவொரு அங்கத்தினரும் கூட்டத்தை விட்டு அகலும்போது, அவர் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவோ, தன் கருத்துக்களைக் கூறமுடியாமல் போனதாகோ, சிறுமைப் படுத்தப் பட்டதாகவோ அல்லது கண்டுகொள்ளப்படாமல் போனதாகவோ நினைக்காமலிருப்பதை மற்ற அங்கத்தினர்கள் உறுதி செய்ய வேண்டும். அதே வேளையில், ஒர் அங்கத்தினர் தான் சிறுபான்மையினனாக இருக்கின்றோம் எனவும், சபை தவறுகள் செய்கின்றதெனவும் நினைக்கலாம். இது பரவாயில்லை.எல்லாக் காலங்களிலும் பெரும்பான்மை முடிவுகளையே நமது சமயப் போதனைகள் வேண்டுகின்றன. அப்படி தவறுகள் ஏதும் நடந்துவிட்டால், ஒற்றுமை குலையாத வரை இத்தவறுகள் நிவர்த்தி செய்யப்படலாம் எனவும் அவை உறுதியளிக்கின்றன. சிறிது அறிவாளியான ஓர் அங்கத்தினர் சில வேளைகளில் தமது அறிவின் காரணமாக கூட்டத்தில் தாம் சிறுபான்மையினராக இருக்கக் காணலாம். இது போன்ற நிலைகளில் அவர் பொறுமையையும் அன்பையும் கடைபிடித்தே வரவேண்டும். ஏனெனில் அவர் சொல்வது சரியென காலம் நிரூபிக்கும், அதே வேளை பிற அங்கத்தினர்களும் அவரது கருத்துக்களைப் புரிந்துகொள்ளவும் அவர் வெளிப்படுத்த முயலும் உண்மையின் குறிப்பிட்ட அம்சத்தை மதிக்கவும் செய்வர். ஒரு புதிய அங்கத்தினர் இது போன்ற நேரங்களில் கண்டன அடிப்படையில் ராஜிநாமா செய்வதே இயல்பாக இருக்கக் காணலாம்.இப்படி ராஜிநாமா செய்வது, அவரைத் தேர்வு செய்தோரை ஒதுக்கச் செய்வதோடு அவரது நடத்தையின்பால் தீய விளைவுகளையும் உண்டாக்கும். தனது ராஜிநாமாவிற்குப் பிறகு என்ன செய்வதென அவருக்குத் தெரியாது. நடப்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதே வேளை சூழ்நிலையைச் சரி செய்வதற்கு உதவக்கூடிய நல்ல வாய்ப்பையும் அவர் தவறவிட்டுவிட்டதோடு, சமூகத்தில் அவரது கருத்துக்கள் கொண்டிருந்து அழுத்தமும் அவரது செயலால் குறையத் தொடங்கிவிட்டது. அதனால் அவர் கூறும் கருத்துக்களைச் செவிமடுப்போர் குறைவாகவே உள்ளனர். பஹாய் வழியாகப்பட்டது, ஈட்டி முனையை நேருக்கு நேர் சந்திப்பதும், துன்பத்தைக் கண்டு மறைந்திடாமல் அதை தேடிச் செல்லவும் வேண்டும் என்பதே ஆகும். அதே வேளை ஒருவர் நல்ல நம்பிக்கையாளராக இருப்பதோடு சகல நிர்வாகம் சார்ந்த கடமைகளிலிருந்தும் தம்மை விலக்கிக் கொள்ளலாம். ஆனால் இதன் பின் விளைவு அவருடைய நற்குணங்களும் அவரது ஆற்றல்களும் பாதிப்படைகின்றன.ஒரு முழுமையான இணக்கநயப் பண்பு இல்லாமல் சபைக் கலந்தாலோசனை நடைபெற முடியாது. இதன் காரணமாகவே பஹாவுல்லா இந்த இணக்கநயம் பற்றி வெகுவாகவே குறிப்பிட்டுள்ளார். குறுக்கிடுவது, உரக்கப் பேசுவது, முகத்தை சுழிப்பது போன்ற--நாம் வெளி உலகில் காணக் கூடியவை--உண்மையை விஞ்ஞான ஆய்வு ரீதியில் ஆராய்ந்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்திற்குத் தேவையில்லை. தமது கடமையாகச் சபைத் தலைவர், பல முறைகள் பேசுவதற்கு--தேவைப்பட்டால் நல்லதொரு முடிவேற்படும் வரையில்--உங்குளுக்கு வாய்ப்பளிக்கிறார்--ஆகவே நீங்கள் இடையூறு செய்யத் தேவையில்லை. பஹாய்க் கோட்பாடுகளுக்கு இணங்க ஒரு முடிவிற்கு வருவதற்காக நீங்கள் கூறுவதை உன்னிப்பாகச் செவிமடுக்க வேண்டும் எனும் கடமையை உங்கள் சக அங்கத்தினர்கள் நிறைவேற்றினார்கள் என்றால்--நீங்கள் உங்கள் குரலை உயர்த்த வேண்டிய அவசியமில்லை.


பஹாய் கலந்தாலோசனையைச் சுலபமான ஒன்றாகச் செய்யக் கூடிய இரகசியம் ஒன்று இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அப்துல் பஹா அவர்களின் நினைவாலயத்தில் நாம் ஓதக் கூடிய அவரது நேர்வு நிருபத்தில் இது காணக் கிடைக்கிறது. நான் குறிப்பிடும் அந்த வார்த்தைகளாவன: "உமது அன்பர்களின் பாதையில் என்னைத் தூசாக்குவீராக..." இந்தக் குறிக்கோளை அடையும் ஒரே நோக்கம் கொண்டுள்ள ஒன்பது பேர் குறைந்த அளவு நிர்வாகச் சிரமங்களையே எதிர்நோக்குவர். இவையெல்லாம் என்ன கூறுகின்றன என்றால், சபை அங்கத்தினர்கள் ஒருவர் ஒருவர் மேல் அன்பு செலுத்த வேண்டும். அப்படி அவர்கள் செய்யாது போனால், அவர்கள் தங்கள் சமூகங்களைப் பாழ்படுத்திடுவார்கள், அவை அதனால் புதிய அங்கத்தினர்களை ஈர்க்கவோ அல்லது பழைய அங்கத்தினர்களைத் தக்க வைத்துக் கொள்ளவோ இயலாமல் போய்விடும்.


ஆரம்பக் காலங்களில் ஒரு பஹாய் ஆக்கா நகரம் சென்று அப்துல் பஹாவின் முகாரவிந்தத்தைக் கண்ணுற்றார். அவர், " நான் உங்கள் முகத்தை அப்படியே அமெரிக்காவில் உள்ள அன்பர்களிடம் என்னுடன் கூட எடுத்துச் செல்ல முடியுமானால்.." எனக் கூறினார். அதற்கு மாஸ்டர் அவர்கள், என் அன்பே என் முகம். அதை அவர்களிடம் எடுத்துச் செல்லவும். அவர்கள் ஒருவர்கொருவர் கொள்ளும் அன்பில் என்னைக் காணலாம், எனக் கூறினார்.