பஹாய் பிரார்த்தனைகள்

பாப், பஹாவுல்லா மற்றும் அப்து'ல்-பஹா அவர்களால் வெளிப்படுத்தப்பட்டவை

 

இல்லம்

சில பஹாய் பிரார்த்தனைகள்

 

 

separator

 

 

 

பிரார்த்தனையைப் பற்றி...

 

உயிர்வாழ் இவ்வுலகில் பிரார்த்தனையைவிட இனிமையான ஒன்று வேறெதுவும் இல்லை. மனிதன் பிரார்த்தனை நிலையில் வாழ வேண்டும். பிரார்த்தனை மற்றும் இறைஞ்சுகின்ற நலைதான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையாகும். பிரார்த்னை என்பது இறைவனுடன் உரையாடல் செய்வதாகும். மிக உயர்ந்த நிலையை அடையவது அல்லது மிக இனிமையான நிலை, இறைவனுடன் உரையாடுவதுதான். அது ஆன்மீகத்தை தோற்றுவிக்கிறது. தெய்வீக உணர்வுகளையும் விழிப்புணர்ச்சியையும் தோற்றுவிக்கிறது. மேலுலக இராஜ்யத்தின் புதிய கவர்ச்சியை பெற்றுத்தருகிறது. சிறந்த மதிநுட்பத்தை நமக்கு மிகவும் எளிதில் ஏற்படுத்துகிறது.

-அப்துல் பஹா-

 

 

கடவுளின் நாமம் மொழியப்பட்டு அவரது புகழ் பாடப்படும் ஸ்தலமும், இல்லமும் இடமும், நகரமும், நகரமும், இதயமும், மலையும் புகலிடமும், குகையும், பள்ளத்தாக்கும், தேசமும், கடலும், தீவும், புள்வெளியும் ஆசிபெற்றதாகும்.

-பஹாவுல்லா-

 

 

 

சுருக்கமான கட்டாயப்பிரார்த்தனை

 

(இப்பிரார்த்தனையை பஹாய்கள் தினசரி ஒரு முறை, மதியத்திலிருந்து சாயங்காலத்திற்குள் கூற வேண்டும்)

என் கடவுளே, தங்களை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி. இத்தருணம் என் பலவீனத்திற்கும் உந்தன் வல்லமைக்கும், என் வறுமைக்கும் உந்தன் செல்வாக்கிற்கம் சாட்சியம் கூறுகிறேன். ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்க வல்லவரும் தாங்களன்றி வேறெவருமிலர்.

-பஹாவுல்லா-

 

 

உதவி

 

இன்னல் தீர்ப்போன் இறைவனன்றி யாருளர்; சொல்: இறைவனே போற்றி, அவரே தெய்வம், யாவரும் அவர் ஊழியர், யாவரும் அவர் சொற்பணிபவர்.

-பாப்-

 

தேவரே, நாங்கள் இரக்கத்துரியவர்கள், பரிவு காட்டுவீராக; நாங்கள் ஏழைகள், உமது செல்வக்கடலிலிருந்து ஒரு பகுதியை அளிப்பீராக; நாங்கள் வறியவர்கள், எங்களின் தேவையைப் பூர்த்தி செய்வீராக; நாங்கள் தாழ்ந்தவர்கள், தங்களின் மேன்மை அளிப்பீராக; வானத்தில் உலவும் பறவைகளும், பரந்த வெளியில் வாழும் பிராணிகளும் தங்களிடமிருந்து அன்றாட உணவைப் பெறுகின்றன. எல்லா உயிர்களும் தங்களின் பாதுகாப்பிலும், அன்புக் கருனையிலும் பங்கு பெறுகின்றன. இந்தப் பலவீனமானவன் தங்களின் திவ்விய அருளைப் பெறாமல் தடுத்துவிடாதீர். உமது சக்தியால் ஆதரவற்ற இந்த ஆத்மாவுக்கு அருள் புரிவீராக. என்றென்றும் எங்களுக்கு உணவளித்து, எங்களின் வாழ்க்கைத் தேவைகளை அதிகரிப்பீராக; அதனால் நாங்கள் தங்களைத் தவிர வேறெவரிடத்திலும் நம்பிக்கை வைக்காதிருப்போம்; தங்களிடமே முழுமையாகத் தொடர்பு கொள்வோம்; தங்களின் வழியில் நடந்து தங்களின் மறைபொருளை எடுத்தியம்புவோம். எல்லாம் வல்லவரும், மனித இனத்தின் தேவைகளை அளிப்பவரும் நீரே ஆவீர்.

-அப்துல் பஹா-

 

 

குணப்படுத்துதல்

 

உந்தம் நாமமே என்னைக் குணப்படுத்தும். உம்மை நினைத்தலே எனக்குச் சிகிச்சை; உமதருகாமையே எனது நம்பிக்கை, நின்றன்பால் அன்பே எனது தோழன். என்மீதுள்ள உமது இரக்கமே இம்மையிலும், மறுமையிலும் எனக்குச் சிகிச்சையும், உதவியுமாகும். மெய்யாகவே எல்லாம் அறிந்தவரும் சர்வஞானியும், கொடைவள்ளலும் நீரே ஆவீர்.

-பஹாவுல்லா-

 

 

குழந்தைகள்

 

அன்பான தேவரே! இவ்வழகிய குழந்தைகள் தங்களது வலிமையெனும் விரல்களின் கைவண்ணமும், தங்களது மகத்துவத்தின் அற்புத அடையாளங்களுமாகும். கடவுளே! இக்குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்கள் கல்வியளிக்கப்பட கிருபையுடன் உதவி, மானிட உலகிற்கு அவர்கள் சேவை செய்திட அருள்வீராக! கடவுளே! இக்குழந்தைகள் யாவும் முத்துக்கள். அவர்கள் தங்களது அன்புப் பரிவு எனும் கூட்டினுள் பேணி வளர்க்கப்படச் செய்வீராக. தாங்களே கொடைவள்ளலும், அதிபெரும் அன்பு செலுத்துபவரும் ஆவீர்.

-அப்துல் பஹா-

 

 

 

ஆன்மீக வளர்ச்சி

 

இறைவா, என் ஆன்மாவைப் புத்துணர்வு பெறச் செய்து எனக்குக் களிப்பூட்டுவீராக. என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவீராக. என் சக்திகளை ஒளிபெறச் செய்வீராக. எல்லாக் காரியங்களையும் அடியேன் உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன். நீரே எனது வழிகாட்டியும் அடைக்கலமுமாய் இருக்ககன்றீர். இனிமேலும் நான் துக்கமும் துயரமும் கொண்டிடேன். நான் மகிழ்ச்சியும் பூரிப்பும் கொண்ட பிறவியாக இருப்பேன். இறைவா, இனிமேல் ஒருபோதும் நான் கலக்கம் மிகுந்த பிறவியாக இருந்திடேன். துன்பங்கள் என்னை கவலைக்குள்ளாக்கவும் அனுமதித்திடேன். வாழ்க்கையின் வெறுக்கத் தக்க காரியங்களில் எண்ணத்தை இலயிக்க விடேன். இறைவா, நான் என்னிடம் காட்டிடும் நட்பைவிட, நீர் என்னிடம் காட்டிடும் நட்பே அதிகம். என் பிரபுவே, உமக்கு என்னையே அர்ப்பணிக்கின்றேன்.

-அப்துல் பஹா-