மோனா மஹ்முட்நிஸாட்

வாழ்வும் தியாகமும்

 

இல்லம்

மோனா

 

 

ஒல்யாவின் கதை எனும் நூலைத் தழுவி எழுதப்பட்டது

 

தங்கள் ஆன்மீக சுய உரிமைகளின்பால் பெண்கள் விழிப்புணர்வு பெற போராடியும் இறுதியில் தமது சமய நம்பிக்கைக்காக உயிரையே தியாகம் செய்தவருமாக தாஹிரி அம்மையார் விளங்குகிறார். இவரது வழியில் மேலும் பல பெண்கள் தங்களது சமய நம்பிக்கைக்காக உயிர்தியாகம் செய்தும் சமய சேவையில் மின்னும் நட்சத்திரங்களாக இருந்தும் உள்ளதை நமது சமய சரித்திரம் விவரிக்கின்றது. ஆணைப்போல் வேடமிட்டு ஆண்களுக்கு நிகராக நைரிஸ் கொந்தளிப்பின் போது போராடிய ஸைனாப்அப்துல் பஹா காலமான பிறகுஅச்செய்தி கேட்டு தாங்கொன்னா துயரில் துவண்டு போன பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி சுமார் இரண்டு வருட காலம் ஓய்வெடுக்க சுவிட்சர்லாந்து சென்ற போது பஹாய் உலக சமயத்தை வழிநடத்திய அதிப் புனித இலையான பாஹிய்யா காஃனும்முன்னனி போதகர் என பாதுகாவலரால் பெயரிடப்பட்ட மார்த்தா ரூட் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களுக்கு நிகராக களிலும் பெண்குலத்தின் மணிகள் போன்று பலர் தோன்றி மறைந்துள்ளனர். இவர்களில் ஒருவராக பதினாறே வயதில் தமது சமய நம்பிக்கைக்காக சிறை சென்று தமது உயிரையும் தியாகம் செய்த மோனா திகழ்கின்றார். அவரது கதையே இது.

 

மோனாவின் தந்தையான யாடுல்லா மஹ்மூட்நிஸாட் ஈரான் நாட்டில் பிறந்துஏமன் நாட்டிற்கு பஹாய் போதகராக சென்றவர். அங்குதான் மோனாவும் அவரது சகோதரியான தராணிஃயும் பிறந்தார்கள். அரசியல் காரணங்களினால் மஹ்மூட்நிஸாட் குடும்பத்தினர் ஈரான் நாட்டிற்கே மீண்டும் திரும்ப நேர்ந்தது. ஷிராஸ் நகரில் அவர்கள் வாழத்தொடங்கினர். அந்நகரின் உள்ளூர் ஆன்மீக சபை அங்கத்தினராக மட்டும் இன்றி அதன் செயலாளராகவும் மஹ்மூட்நிஸாட் இருந்தார். அதோடு துனைவாரிய உறுப்பினரின் உதவியாளராகவும் அவர் சேவையாற்றினார். சிறு வயதிலிருந்தே மோனா தன் தந்தையோடு பல சமயப் பணிகளில் ஈடுபட்டார். 1980-களில் சமயத்திற்கு எதிர்ப்பு வந்த போதும் இச்சேவை தளரவில்லை. அப்போதேல்லாம் மோனாவின் தந்தைமோனா மேலும் உறுதியுடன் சேவை செய்யவேண்டும் எனும் நோக்கத்துடன்இளம் மோனா ஒரு பஹாய் ஆக இருப்பதன் பொறுப்புகளை உணரவேண்டும்"எனக் கூறுவார்.

 

மோனாவின் தந்தை செல்வம் படைத்தவர் அல்ல. ஷிராஸ் நகரில் ஒரு சிறிய வீட்டிலேயே இவர்கள் வாழ்ந்து வந்தனர். சிறு வயதிலேயே மோனா கல்வியில் மிகுந்த நாட்டமுடையவளாக இருந்தாள். சமயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வமும், சித்திரம் வரைதல், கைவேளைப்பாடு , தையல், பூவேளைப்பாடு போன்றவற்றில் ஈடுபாடு கொண்டும் இருந்தாள். வயதுக்கு மீறிய சமய நம்பிக்கையும் மனமுதிர்ச்சி கொண்டவளாகவும் இருந்தாள். 15 வயதில் மோனாவின் வீட்டில் முதியோருக்கென நடத்தப்பட்ட சமய வகுப்பகளில் பதின்ம வயதினளான மோனாவே அதிக நாட்டம் காட்டினாள். அங்கு படிக்கப்பட்ட புனித வாசகங்கள் அனைத்தையும் மனனம் செய்ததோடு அந்த வகுப்புகளில் ஒவ்வொரு வாரமும் தவறாமல் கலந்துகொள்ள அனுமதியையும் கெஞ்சி வாங்கினாள். 1980-களில் நடந்த கலவரங்களில் பஹாய்கள் அனுபவித்த கொடுமைகளும், புனித பாப் அவர்களின் இல்லம் இடிக்கப்பட்டதும் மோனாவின் சமயநம்பிக்கையை தகர்க்காமல் பலப்படுத்தவே செய்தன.

 

குழந்தைகளின் ஆசிரியராக பாலர் வகுப்புகளை நடத்தவாரம்பித்த மோனா அவ்வகுப்புகளில் மனனம் செய்யப்பட வேண்டிய புனிதவாசகங்களையும் பிரார்த்தனைகளையும் தானாகவே தேர்ந்தெடுத்து தொகுத்து குழந்தைகளை மனனம் செய்யச்செய்தாள். பஹாய் புத்தகங்கள் ஒரு காலத்தில் கைக்கு எட்டாமல் போகும், அப்போது படிக்கவேண்டிய அனைத்தும் குழந்தைகளின் மனதிலேயே இருக்குமல்லவா!

 

1980 கலவரங்களின் உச்சகட்டத்தில் பாப் அவர்களின் புனித இல்லம் இடிக்கப்பட்ட அன்று அந்த இல்லம் இருந்த இடத்திற்கு மோனா ஒரு புனித யாத்திரை மேற்கொண்டாள். வீடு திரும்பிய போது உள்ளே நுழையாமல் வாசலிலேயே நின்று அவள் தன் தாயை கூவி அழைத்து, "அம்மா இன்று நான் என் காலனிகளோடு வீட்டிற்குள் நுழையலாமா?" என வினவினாள். " ஏன் இன்று மட்டும் புதுமையாக காலனிகளோடு வீட்டிற்குள் வரவேண்டும்?" என தன் தாய் கேட்டபோது, "அவை புனித பாப் அவர்களின் இல்ல இடிபாடுகளிற்கிடையே நடந்து வந்துள்ளன." "அந்த புனிதத் தூசு என் காலனிகளில் ஒட்டியுள்ளன," என்றாள். அவளைப் பார்க்கையில் ஒரு வயது முதிர்ந்த மனோபாவமும் மனப்பக்குவமும் கொண்டவளாகவே விளங்கினாள். கவர்ச்சியும், மரியாதையும், அதே வேளயில் ஒரு குழந்தையின் இனிய சுபாவம், வெகுளித்தன்மை மற்றும் தூய்மையும் அவளுடையதாக இருந்தன. உயர்ந்த மெலிந்த தேகமும், நீண்ட செம்மையான கூந்தலும், பசுமை நிறக் கண்களும் கொண்டவள் மோனா. எப்போதும் முகத்தில் ஒரு அழகான புன்னகை மிதந்து கொண்டே இருக்கும். பள்ளியில் மிகவும் பிரபலமானவளாகவே இருந்தாள்.

 

பஹாய்கள் பரவலாக சிறை செய்யப்பட்ட நாட்களில் தானும் சிறை செய்யப்பட்டதை மோனா தன் வாயாலேயே விவரிக்கின்றாள்:

 

1982 அக்டோபர் 23 அன்று சாயங்காலம் 7.30-க்கு நான் என் பள்ளிப்பாடங்களை படித்துக்கொண்டிருந்தேன். அப்போது வாயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. என் தந்தை கதவைத் திறந்தார். அப்போது ஆயுதம் ஏந்திய 4 காவலர்கள் கதவை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களை என் தந்தை தாம் யாரென அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டினார். அதற்கு அவர்கள் "நாங்கள் ஷிராஸ் நகர புரட்சி நீதிமன்றத்தின் காவலர். உங்கள் வீட்டை சோதனையிட வேண்டும், அதற்கு எங்களுக்கு அனுமதியும் உண்டு," என்றனர். அவ்வனுமதியைப் பார்க்கவேண்டும் என என் தந்தை அமைதியாகக் கேண்டுக் கொண்டார். ஒரு காகிதத்தைக் கொடுத்தனர். அதைப் பார்த்துவிட்டு என் தந்தை அவர்களை வீட்டிற்குள் வர அனுமதித்தார். பல மணி நேரங்கள் வீட்டைச் சொதனையிட்ட பின் சில நிழற்படங்களை எடுத்துக் கொண்டனர். அப்படங்கள் உயிரோடும், மரணம் அடைந்தும் இருந்த சில பஹாய் அன்பர்களுடையது. அந்தப்படங்கள் யாருடையது என கேட்டபின், "உங்கள் சமயம் எது," என என்னை கேட்டனர். "பஹாய் சமயம்," என நானும் பதிலுரைத்தேன். என் தந்தையின் பஹாய் கடிதப்போக்குவரத்துகள் சிலவற்றையும், படங்கள் மற்றும் நூல்கள் சிலவற்றையும் கையில் எடுத்துக் கொண்டு, என் தந்தையும் நானும் அவர்களோடு நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவித்தனர். அதற்கு என் தாய், என் கனவரை அழைத்துச் செல்லுங்கள் ஆனால் இந்த இருட்டு வேளையில் இச்சிறுமியை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கொந்தளிப்புடன் கேட்டார். அதற்கு அவர்கள், "சிறுமி அல்ல, பஹாய் ஆசிரியை," என்றனர். "இவள் எழுதியவற்றைப் பார்க்கும் போது இவள் வருங்காலத்தில் மிகவும் ஆக்கம் நிறைந்த ஒரு பஹாய் போதகியாக விளங்குவாள்," எனக் கூறினர். என் தந்தை என் தாயாரைப் பார்த்து, பயப்படவேண்டாம் என ஆறுதல் கூறி, இது நிச்சயமாக இறைவனின் விதி, இச்சகோதரர்கள் மோனாவை தம் சகோதரியைப் போல் நிச்சயமாக நடத்துவர் என்றார்.

 

வேறு வழியின்றி நான் என் தாயாரிடம் விடைபெற்றுக் கொண்டு என் தந்தையோடு காவலர்களின் பின் சென்றேன். சிறையை அடைந்தவுடன் அதன் வாசலில் எங்கள் கண்கள் கட்டப்பட்டன. பிறகு சிறையின் ஓர் அரைக்குக் கொண்டு செல்லப்பட்டோம். அங்கு சில காவலர்கள் உறக்கக் கத்தி என் சமயத்தை இழிவுபடுத்தியதோடு மேலும் வேறு எதற்கோ என்னை நோக்கி கத்தினார்கள். என் தந்தையிடமிருந்து நான் பிரிக்கப்பட்டு ஒரு பெண் காவலரால் உடற் சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன். மறுபடியும் என் கண்கள் கட்டப்பட்டு கைதிகளுக்கான ஒரு பொது அறையில் கண்கட்டு அவிழ்க்கப்பட்டு விடப்பட்டேன்.

 

சிறிது நேரம் என்னால் எதையும் அந்த இருட்டில் பார்க்கமுடியவில்லை. ஒரு கைதி அப்போது என்னை நோக்கி வந்து நான் படுப்பதற்கு ஓர் இடத்தை சுட்டிக் காட்டி, நீ ஏன் இங்கு வந்தாய் என வினவினார். அதற்கு நானும், நான் ஒரு பஹாய், நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றேன். அக்கைதி பிறகு இரு அழுக்கான போர்வைகளைக் கொடுத்தார். சிறிது நேரம் சென்ற பின் என்னால் அந்த இடத்தை நன்கு பார்க்க முடிந்தது. அது ஒரு பெரிய அறை. வயதான பெண்களும் இளம் வயதினருமாக பலர் அங்கு படுத்திருந்தனர். அங்கு வந்த முதல் பஹாய் நானாகையால் வேறு யாரையும் நான் அறிந்திருக்கவில்லை. என் தந்தை எங்கு இருக்கின்றார் எனவும் தெரியவில்லை. அமைதியாக அந்தப் பென்மனி சுட்டிக்காட்டிய மூலையில் படுத்துக்கொண்டு, இறைவனுக்கு நன்றி நவிழும் பிரார்த்தனை ஒன்றை கூறினேன். அப்பொழுது, நான் ஒரு பலகனியில் நின்று கொண்டு நிலவை நோக்கிச் செல்வதைப் போல் உணர்ந்தேன். ஆனால் என் தாயாரின் கவலை தோய்ந்த முகமே அப்போது என் கண்முன் தோன்றியது. என் தாய் தந்தையர் இருவரும் உறுதியுடன் இருக்க பிரார்த்தனை ஒன்றைக் கூறிவிட்டு நாளை என்ன காத்திருக்கிறதோ என நினைத்து படுக்கச் சென்றேன்.

 

படுக்கையில் தூங்காமல் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டிருந்த போது கதவு திறக்கப்பட்டு ஒரு பெண்மனி உள்ளே நுழைந்தார். அவர் ஒரு பஹாய் என்பதை அப்போது நான் உணரவில்லை. அவர் திருமதி ஈரான் அவாரிகான் என பிறகு அறிந்தேன் சிறிது நேரம் கழித்து சிறைக் கதவு மீண்டும் திறந்து மேலும் ஒரு பெண்மனி நுழைந்தார். “அவர் என் ஒற்றைத்தலைவலி மாத்திரைகளைக் கொடுங்கள். அவை இல்லாமல் என்னால் இருக்க முடியாது”, என்று கதறினார். ஆனால் காவலர் யாரும் அவரை சட்டை செய்யவில்லை. அவர் பெயர் திருமதி ஸாயர்ப்பூர். அவர் நாங்கள் படுத்திருந்த மூலைக்கு வந்தார். அங்கு படுத்திருந்து திருமதி ஈரானைப் பார்த்தவுடன் அவர் திருமதி ஈரானை கண்டுகொண்டு உணர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார். குரல்கள் பழக்கமானவையாக இருக்கின்றனவே என நான் அவர்கள் அருகில் சென்றேன். அவர்கள் இருவரும், “மோனா, நீயா? நீ ஏன் இங்கு வந்தாய் உன்னையுமா இவர்கள் கைது செய்துவிட்டனர்?” என அதிர்ச்சியுடன் கேட்டனர்.

 

அவ்வேளை என்னுள் ஒரு சாந்த உணர்வு உண்டாகக் கண்டேன். என் தாயாரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டாலும் சிறையில் எனக்கு பல தாய்மார்களும் சகோதரிகளும் இருப்பதைக் கண்டேன்.

 

அன்று இரவு சுமார் 40 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு, அதில் பெண்கள் அனைவரும் மோனா இருந்த அறைக்கு கொண்டு வரப்படுவர் என அறிந்தவுடன் மோனா வருவோர் அனைவருக்கும் ஒரு சுகமான சூழ்நிலையை உருவாக்க முடிவெடுத்தாள். அங்கிருந்த அனைவரிலும் மோனாவே மிகவும் வயது குறைந்தவள். அந்த அறையில் பிற மதத்தைச்சார்ந்தவர்கள், போதை பித்தர்கள் கொலைகாரர்கள் உட்பட அனைவருக்கும் மோனா செல்லமானவளாக விளங்கினாள். அவர்கள் மோனாவை “குட்டிக் கைதி” என அழைத்தனர்.

 

“சேப்பா” எனப்படும் வேறொரு சிறைச்சாலைக்கே நாங்கள் விசாரனைக்காக பெரும்பாலும் கொண்டுசெல்லப்படுவோம். அப்போது என்னை விராரணை செய்த அரசாங்க வழங்கறிஞர் என்னை இழிவாகப் பேசி, “உன் தாய் தந்தையர் உன்னை வழி தவரச் செய்து உன்னை பஹாய் சமயத்தில் இனைத்துவிட்டனர்,” என்று கூறினார். அதற்கு நான், “என் பெற்றோர் என்னை வழி தவரச் செய்யவில்லை. நான் ஒரு பஹாய் குடும்பத்தில் பிறந்தது உண்மைதான் ஆனால் நான் என் சுய விருப்பத்தின் பேரிலேயே இச்சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளேன். பிறரைப் பற்றி ஒருவர் பஹாய் ஆவதில்லை ஆனால், சுயமாக உண்மையை ஆராய்ந்த பிறகே பஹாய் ஆகிறார். உங்களிடம் பல பஹாய் புத்தகங்கள் உள்ளன. அவற்றைப் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாமே,” என பதிலளித்தேன். “என் பெற்றோர் என்னை பஹாய் ஆகச்சொல்லி எப்போதுமே வற்புறுத்தியதில்லை,” என்றேன். குறுக்குவிசாரனை செய்தவர் பிரமித்துப்போனவராய், “இழம் பெண்ணே, உன் சமயத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்,” என வினவினார். நான், “இந்த சிறையில் இருப்பதே என் சமயம் எனக்குத் தந்துள்ள உறுதியை புலப்படுத்துகிறதல்லாவா,” என்றேன். “பள்ளிச் செல்லும் நான் இந்த பயங்கர சிறையில் அடைக்கப்பட்டு, இப்போது உங்கள் முன் நிறுத்தப்பட்டும் உள்ளேன். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் சக்தியும் மனவுறுதியும் எங்கிருந்து வந்ததென்று நினைக்கிறீர்?” பிறகு அவர் என்னை ஒரு பிரார்த்தனை செய்யுமாறு பணித்தார்.

 

நான் “இறைவா என் ஆன்மாவைப் புத்துணர்வுபெறச் செய்து ...” எனும் பிரார்த்தனையை அமைதியாகவும் மரியாதையுடனும் கூறினேன். இடையிலேயே என்னை நிறுத்தச்சொல்லி அவர் சிறிது நேரம் மௌனமாக நின்றார். அவர் அப்பிரார்த்தனையால் பாதிக்கப்பட்டாலும் அவரது முன்தீர்மானிக்கும் தன்மை அவர் கண்களை மறைத்துவிட்டிருந்தது. பிறகு அவர், “நீ ஏன் பிரார்த்தனையை ஓதவில்லை?” என்றார். “உன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல ஒலிநாடாக்களில் உன் அழகான குரல்வளம் காணக்கிடக்கிறது. ஒலி நாடாக்கள் வழி உன் அழகான குரல் வளத்தினால் நீ பல இளைஞர்களை வழி தவரச்செய்திருக்கின்றாய். இதிலிருந்தே உன் குற்றம் புலப்படுகிறது.” அதற்கு நான், “பிரார்த்னை ஓதுவது ஒரு குற்றமா,” எனக் கேட்டேன். அதற்கு அவர், “தற்போதைய சமயத்தில் நீ என்ன குறை கண்டாய்,” என்றார். அதற்கு நான், “நான் எல்லா சமயங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளேன். ஆனால் காலத்துக்குக் காலம் அவை வேறுபடுகின்றன. இக்காலத்திற்கென்று பஹாவுல்லா வந்துள்ளார்,” என்றேன். அதற்கு அவர் “நீ இந்நாட்டு சமயத்தை பின்பற்றவேண்டும் அல்லது மரணத்தைத் தழுவேண்டும்,” என்றார். அதற்கு நான், “மரண தண்டனை கட்டளையை முத்தமிடுகிறேன்,” என்றேன்.

 

கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் தன் கணவனும் மகளும் என்னவானார்கள் எனத் தெரியாமல் மோனாவின் தாய் தவித்துக்கொண்டிருந்தார். எத்தனை முறை அவர்களைக் காண சேப்பா சிறைக்குச் சென்று அவர்களைக் காணமுடியாமல் வீடு திரும்பினார்! அவர் கூறியது: “அன்று ஒரு நாள் நவம்பர் 19, 1982, வெள்ளிக்கிழமை, வீட்டின் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்துகொண்டு, வருவோர் போவோரையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று கூடத் தெரியாத நிலையில் அவர்கள் தங்கள் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணம் தோன்றிய மறு கனமே என் நெஞ்சம் விம்மத் தொடங்கியது. விம்மலில் ஆரம்பித்து காட்டாற்று வெள்ளமோ என எண்ணும் அளவிற்கு கண்ணீர் பெருகியோடிற்று. இறைவனை உறக்கக் கூவி அழைத்தேன். இறைவா! என் குழந்தை எங்கே? அவளை என்னிடம் சேர்ப்பித்துவிடு. அவளிடம் இருந்து ஒரு செய்தி கூட இல்லையே!” எனக் கதறினேன். வானத்தைப் பார்த்து, “அந்தப் பறவைகள் எல்லாம் சுதந்திரமாக இருக்கின்றனவே, என் சின்னப் பறவை கூண்டில் அடைபட்டுக் கிடக்கின்றதே!” என விம்மினேன்.

 

அதற்கு மறுநாள், சனிக்கிழமை, மோனாவின் தாயார் சேப்பா சிறைக்குச் சென்றார். அன்றுதான் முதன் முறையாகத் தன் மகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். இருந்தும் ஒருவரோடு ஒருவர் பேச அனுமதி கிடையாது. ஒரு மொத்தமான கண்ணாடி கைதிகளையும் என்னையும் பிரித்துவிட்டிருந்தது. பஹாய் பெண் கைதிகள் வரிசையாக நின்றனர். மோனாவைப் பார்த்தவுடன் என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அப்போது மோனா என்னை அழவேண்டாம் என சைகை மூலம் கூறினாள். அன்று அவர்கள் அனைவரும் பிற்பகல் மணி ஒன்று முதல் அடுத்த நாள் காலை மணி மூன்று வரை விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருந்தனர் என்பது எனக்குப் பிறகு தெரிய வந்தது. பிறகு அதே வருடம் டிசம்பர் மாதம் அவளைக் காண நான் சேப்பா சென்றிருந்தபோது, அவள் அங்கு இல்லையென்றும், அடிலபாட் சிறைக்கு மாற்றப் பட்டிருப்பதாகவும் தெரிய வந்தது. உடனடியாக நானும் என்னுடன் வந்திருந்தோரும் அடிலபாட் சிறைக்குச் சென்றோம். அன்று மோனாவுக்கு உடல் நிலை சரியில்லாம்ல் இருந்தது. குளிர் காலமாகையால் அவளுக்கு ஜுரம் கண்டிருந்தது. ஒரே ஒரு பழைய போர்வை மட்டும் கொடுத்திருந்தார்கள். அது பனிக்காலத்தின் கடுங் குளிரிலிருந்து மோனாவை பாதுகாக்கமுடியவில்லை. அந்த நிலையில் மோனாவைக் கண்ட நான் என் வசமிழந்து கதறினேன். தொடர்புக்காக வழங்கப்பட்டிருந்த இருவழி தொலைபேசியில் என் கண்ணீருக்காக நான் மோனாவிடம் மண்ணிப்புக் கோரினேன். “என் நிலையை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை. உன் பிரிவால் ஏங்கித் தவிக்கின்றேன் கண்ணே,” எனக் கூறினேன். அப்போது மோனாவின் கண்களிலும் கண்ணீர் பெருகத் தொடங்கியது. ஆனால் அவள் தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, “அம்மா நாங்கள் இங்கு வசதியாகத்தான் இருக்கின்றோம். யாதொரு குறையுமில்லை. முன்னைய சிறையைக் காட்டிலும், இந்த சிறை ஒரு மாளிகை. எங்களுக்குக் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வரை வழங்குகிறார்கள். மிகவும் வசதி அம்மா,” என்றாள்.

 

மோனா என்னையும் என்னுடன் கூட வந்திருந்தோரையும் தேற்றினாள். அவளுக்கு எப்போதும் பிறரைப் பற்றிய அக்கரை அதிகம். எல்லோர் மேலும் தன் அன்பையும் களிப்பையும் பொழிவாள். “அப்பாவை இங்கு கொண்டுவந்துவிட்டார்கள் என்று தெரிந்தால் அவருக்கு உடனடியாக போர்வைகள் கொண்டுவாருங்கள், இல்லை என்றால் அவருக்கும் ஜுரம் வந்துவிடும்,” என்றாள். பிரியும் நேரம் வரும்போது, நாங்கள் ஒருவரை ஒருவர் தொடமுடியாததால், எங்கள் ஆள்காட்டி விரலை வாய்மேல் வைத்துப் பிறகு எங்களைப் பிரிக்கும் கண்ணாடி மேல் வைத்துப் பிரியாவிடை பெறுவோம். அப்போதெல்லாம் மோனாவின் கண்களில் பற்றின்மையும் ஓர் ஆழ்ந்த விவரிக்க முடியா களிப்பும் தெரிந்தது.

 

மோனாவிற்கு ஓரிரண்டு தடவைகள் சிறையிலிருந்து தற்காலிக விடுதலை கொடுக்கப்பட்டது. அதற்காக 5 லட்சம் டூமான்கள் கேட்கப்பட்டன. அதை எப்படியோ மோனாவின் தாயார் கொண்டுவந்தார். ஆனால் மோனாவின் தாயாரைக் கண்ட புரட்சி நீதிமன்ற காவலர், “நீ 9 வருடங்களுக்கு முன்பு சமூக வளக் குழுவில் இடம் பெற்றிருந்தாய். ஆகவே இந்த வைப்புத் தொகையை உனக்காக வைத்துவிட்டு 24 மணி நேரத்தில் சிறையில் சரணடைய வேண்டும்,” என்றார். மோனாவின் தாயார் அடுத்த நாளே சரணடைந்தார்.

 

மோனாவின் தாயாரும் சிறை செய்யப்பட்டபின், அவர், மோனாவும் தாஹிரி எனும் மற்றொரு பஹாய் பெண்மணியும் தங்கியிருந்து அறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு அறைக்கும் ஒரு படுக்கைதான் இருந்தது. நாங்களோ மூன்று பேர். மோனா என் அருகே தரையிலும், தாஹிரி கதவருகேயும் படுத்துக்கொண்டனர்.

 

மோனா, சிறை வாழ்க்கைக்கும் வெளி வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை விவரித்து, “சிறையில் ஒருவர் நிறைய நேரம் பிரார்த்தனை செய்து, அழாமல், கொடுமைகளை வெளியில் தெரியாமல் சகித்துக் கொள்ளவேண்டும்,” என்றாள். “நான் உங்கள் மகள்தான், ஆனால் நாம் இங்கு அந்த பந்தம் பற்றிய எண்ணம் இல்லாமல் நடந்துகொள்ளவேண்டும்,” என்றாள். “இங்கு பலர் தங்கள் தாய்களையும் பிள்ளைகளையும் பிரிந்து இருக்கின்றார்கள், ஆகவே நீங்கள் மற்றவர்களைப்போலவே என்னையும் நடத்த வேண்டும்,” என்றாள். ஒவ்வொருவரும் தாங்கள் கைது செய்யப்ட்ட காரணத்தை ஒட்டி முடிவெடுக்கும் நேரம் வரும்போது, அவள் என்னைப்பார்த்து, “அம்மா, நீங்கள் நீங்களாக உங்கள் சொந்த முடிவை எடுங்கள். பிறரைப் பார்த்து முடிவு செய்யாதீர்கள்,” என்றாள். “சிறைவாசம் எதை பிடுங்கிக் கொண்டாலும், நம் ஒவ்வொருவருடைய மனசுதந்திரத்தை அது ஒன்றும் செய்ய முடியாது,“ என்றாள்.

 

மோனா எப்போதும் தனியாக இருக்கவே விரும்புவாள். ஒரு சிறை அறை காலியாக இருந்தால் அங்கு அவள் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பாள். நீண்ட நேரம் பிரார்த்தனை செய்வாள். இறைவனுடன் நெருங்கிய தொடர்பு கொள்ள விரும்பினாள். அவள் மிகவும் கலைத் திறமை வாய்ந்த பெண். சித்திரம் மற்றும் கைவேலைப்பாடு செய்வதில் மிகுந்தப் பிரியம் கொண்டவள். சிறையில் இதையெல்லாம் செய்யமுடியாமல் போனது அவளுக்கு பெரும் கஷ்டமாக இருந்தது. பெரும்பாலும் பிரார்த்தனை நிலையில் இருந்தாலும், நேரம் கிடைத்தபோதெல்லாம், சிறையில் இருந்த மற்ற பஹாய் அல்லாத கைதிகளுடன் நிறைய நேரம் செலவளிப்பாள். அவர்களுக்குப் பாடல் கற்றுக் கொடுப்பதுடன் நிறைய நேரம் பேசிக்கொண்டும் இருப்பாள். இந்தக் கைதிகள், மோனாவை எப்போது இழுத்துச் சென்று அவளுடன் நேரத்தைக் களிக்கலாம் என்று காத்திருப்பார்கள். சிறையிலும் கைதிகளின் மத்தியில் அவள் மிகவும் பிரபலமாக இருந்தாள்.

 

ஒரு நாள் பஹாய் அல்லாத சிறைக் கைதி ஒருவர், பதப்படுத்தப்பட்ட பழம் ஒன்றைக தம்மை சிறையில் காணவந்தோரிடமிருந்து பெற்று வந்தார். அந்தப் பழமோ மிகவும் சிறியது. ஒருவருக்கே பற்றாது. யாரிடம் கொடுப்பது என்ற கேள்வி. அப்போது அவ்வழியாக வந்த மோனா, அந்தப் பழத்தை வாங்கிச் சென்று, சிறிது நேரத்தில் ஒரு தட்டுடன் திரும்பி வந்தாள். அந்தத் தட்டில், அச்சிறிய பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, எல்லோரையும் கூப்பிட்டுப் பகிர்ந்தளித்தாள். விளையாட்டாக அந்த செயல் இருந்த போதிலும் மோனாவின் பகிர்ந்துகொள்ளும் சுவபாவத்தையே அது வெளிப்படுத்தியது.

 

சில காலம் சென்று, பஹாய் கைதிகளின் குடும்பத்தினர், கைதிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அன்று மோனாவும் அவள் தாய் மற்றும் தந்தோயோடு ஒன்று கூடும் வாய்ப்பு கிட்டியது. மோனாவின் தந்தை நிச்சயமாக கொல்லப்படுவார் என்று மோனாவிற்கும் அவள் தாய்க்கும் தெளிவாகத் தெரிந்துவிட்டது. “இந்தப் பிரிவு நிரந்தரமானதல்ல,” என்றார் மஹ்மூட்நிஸாட்., “கூடிய விரைவில் நாம் எல்லோரும் ஒன்று கூடுவோம். நாம் ஏமன் நாட்டுக்குச் சென்றது ஞாபகம் இருக்கின்றதா? நான் முதலில் சென்று அங்கு நாம் எல்லோரும் தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடுசெய்யவில்லையா? அது போல்தான் இதுவும்,” என்றார். பிறகு அவர் மோனாவைப் பார்த்து, “சுவர்க்கத்தில் இருக்கின்றாயா, இவ்வுலகில் இருக்கின்றாயா?” என வினவினார். அதற்கு மோனா, “நான் சுவர்க்கத்தில் இருக்கின்றேன்,” என்றாள். பிறகு மோனா தன் தந்தையை முத்தமிட்டு வேறு ஒன்றும் சொல்லவில்லை. அதன் பிறகு இருவருமே ஒன்றும் பேசவில்லை. ஒரு பார்வையிலேயே அவர்கள் இருவரும் ஒருவர் மனதை ஒருவர் புறிந்துகொள்ளக்கூடியவர்கள்.

 

இதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, மோனாவின் தந்தை தூக்கிலிடப்பட்டார். இந்த செய்தி சிறையில் இருந்த மோனாவிற்கோ அவள் தாயாருக்கோ தெரியாது. தரானிஃ, மோனாவின் அக்கா, இதை அறியாது இருந்தார். அவர் இறந்த அடுத்த நாள் மார்ச் 13 அன்று காலை மணி பத்திற்கு, தரானிஃயின் கனவரே இந்த செய்தியை தெரிவித்தார். வீட்டிற்குள் நுழையும்போதே அவர் கதறிக்கொண்டு நுழைந்தார். என் தந்தையின் முடிவு எனக்குத் தெரிந்திருந்த போதிலும், அந்த செய்தியைக் கேட்ட என் உடல் அந்த அதிர்ச்சியினால் அதிர்ந்து போனது. தாங்க முடியாமல் நானும் கதறினேன். தூங்கிக் கொண்டிருந்த தரானிஃயின் மகள் நோராவும் அந்த சத்தத்தில் எழுந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

 

யாடுல்லாவின் உடலைக் கான தரானிஃ மட்டும் அனுமதிக்கப்பட்டாள். ஆனால் உடல் அருகே செல்லவோ அல்லது தொடவோ முடியவில்லை. இந்தச் செய்தியை மோனாவிற்கும் தன் தாய்க்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தரானிஃயின் மேல்தான் விழுந்துது.

 

சிறைக்குச் சென்ற தரானிஃ, தன் தந்தையார் இறந்த செய்தி அதுவரை மோனாவிற்கோ தன் தாய்க்கோ தெரியவில்லை என அறிந்தாள். மூன்று பேர் இறந்தது தெரியும் ஆனால் யார் என்று தெரியாது. தரானிஃ முதலில் தன் தாய் தங்கை இருவருக்கும் வாழ்த்துக் கூறினாள். அவர்கள் இருவரும் அவ்வாரே செய்தனர். பிறகு தரானிஃ, “அப்பா மறுமை எய்திவிட்டார்,” எனக் கூறினாள். அதற்கு மோனா, “தெரியும், நல்லது, கொடுத்து வைத்தவர்,” என்றாள். எல்லோரும் மோனாவிற்கு ஆறுதல் கூற விழைந்தனர். மோனா எல்லோரையும் சமாதானப்படுத்திவிட்டு, “நாம் இறந்தோருக்காக வருந்தி பிரயோஜனமில்லை, இங்கு நாம் நம்முடைய சோதனகளை இன்னமும் கடக்கவில்லை. இறந்தோரை நோக்கிப் பிரார்த்தித்து, அவர்கள் நமக்காக ஆண்டவனிடம் பரிந்துரைக்க வேண்டுவோம். அதன் வாயிலாக நாம் நம்முடைய சோதனைகளை கடக்க முயற்சி செய்வோம்,” என்றாள். பிறகு தன் இனிமையான குரலால் ஒரு பிரார்த்தனையை பாடினாள். அடுத்த சில நாட்கள் துயரத்திலும் இன்பத்திலும் கழிந்தன.

 

இதற்குப் பிறகு ஒரு நாள், பாப் அவர்களின் மறைவு தினத்திற்கு சிறிது முன்பதாக, காலையில் விழித்தெழும்போதே மோனா, “இனி நான் எந்த உணவையும் தொடப்போவதில்லை,” எனக் கூறிக்கொண்டே எழுந்தாள். சுமார் 30 மணி நேரம் இவ்விதமாக பிரார்த்தனையும் நோன்பும் நோற்றவாறு இருந்தாள். அதன் பிறகு ரொட்டியும் பழமும் சாப்பிட்டாள். சாப்பிட்டுவிட்டு, நான் இனைக்கப்பட்டிருந்தேன் என தன் தாயாரிடம் கூறினாள். பாப் அவர்களின் மறைவு தினத்தன்று, மோனா தான் தனியாக இருக்க விரும்புவதாகத் தன் தாயாரிடம் கூறினாள். ஆனால் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பிரார்த்திப்போம் என்று அவள் தாயார் கூறினார். காலியாக இருந்த ஒரு சிறை அறையில் அவர்கள் அத்தினத்தை அனுசரித்தனர். மோனா பிறகு தன் தாயாரை அனுகி, “அம்மா நான் உண்மையில் தனியாக இருந்து பாப் அவர்களின் இந்த இறுதி மறைவு தினத்தை அனுசரிக்கவே விரும்பினேன்,” என்றாள். மோனாவின் தாய்க்கு, அவள் ஏன் இறுதி மறைவு தினம் எனக் கூறுகிறாள் என்று புறியவில்லை. “நீ அதை முன்பே சொல்லியிருக்கலாமே, நான் வற்புறுத்தியிருக்க மாட்டேனே,” என்றார்.

 

அதன் பிறகு மோனா சிறிது நடந்தாள். பிறகு தன் தாயாரிடமே வந்து, வாருங்கள் நாம் சிறிது நடந்து வருவோம் எனக் கூறினாள். சிறையின் நடைபாதை மிகவும் குறுகலாகனது. இருவரும் ஒன்றாகக் கூட நடக்க முடியவில்லை. அப்போது மோனா தன் தாயாரை நோக்கி, “அம்மா என்னைக் கொல்லப் போகிறார்கள் தெரியுமா,” என்றாள். அதைக் கேட்ட மோனாவின் தாய், தன் உடலெல்லாம் ஏதோ தீப் பிடித்து எரிவது போல் ஆகி, அதை நம்பாமல், “என்ன கூறுகிறாய், நீ திருமணம் ஆகி குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கப்போகின்றாய். உன் குழந்தைகளைக் காண நான் மிகவும் ஆவலாக இருக்கின்றேன்,” எனக் கூறினார். அதற்கு மோனா, “அம்மா, எனக்கு அவ்வித ஆசைகள் எதுவும் கிடையாது, நீயும் இந்த ஆசையை விட்டுவிடு. இப்போது நீ என்னைப் பேச விடவில்லையானால், பிறகு நான் சொல்ல நினைக்கும் இந்த விஷயங்களை சொல்லாமலேயே நான் இறக்க நேரிடும்,” என்றாள்.

 

பிறகு மோனா தன் தாயாரின் கையைப் பிடித்தவாறு நடந்து, “அம்மா, என்னைத் தூக்கிலிடப் போகும் இடம் சிறிது உயரமாகவே இருக்கும். அப்பொழுதுதான் கழுத்தில் கயிற்றைப் போட வசதியாக இருக்கும். என் கழுத்தில் கயிற்றைப் போடப் போகும் அந்த கையை, அது யாருடையதாக இருந்தாலும், அதை முத்தமிட அனுமதி கேட்பேன். நிச்சயமாக அதற்கு அனுமதி தருவார்கள் என நான் நினைக்கின்றேன். பிறகு அவரிடம், பஹாய்கள் தன்னைக் கொல்லப் போகிறவரின் கரத்தைத் தவிர வேறு யாருடைய கையையும் முத்தமிடக்கூடாது என்று கூறுவேன். அந்தக் கையை நிச்சயமாக முத்தமிடவேண்டும், ஏனென்றால் அந்தக் கை என்னை என் பஹாவுல்லாவிடம் விரைந்து அனுப்பவிருக்கும் கை. பிறகு என் கழுத்தில் மாட்டப்பட விருக்கும் அந்த கயிற்றை முத்தமிடுவேன். அதற்கு நிச்சயமாக அனுமதி கிடைக்கும் அம்மா. பிறகு இந்த பிரார்த்தனையைக் கூற நான் அனுமதி கேட்பேன்,” எனக் கூறிவிட்டுத் தன் நெஞ்சின் மேல் இரு கைகளையும் கட்டிக் கொண்டு இனிமையான குரலில், தன் அன்புக்கினியவருக்குக் கூறுவதுபோல ஒரு பிரார்த்தனையைக் கூறினாள். பிறகு மனித குலத்தின் உண்மையான மகிழ்ச்சிக்கு ஒரு பிரார்த்தனையைக் கூறிவிட்டு இந்த உலகத்திடமிருந்து நான் விடைபெற்றுக் கொண்டு, என் அன்புக்கினியவரை அடைவேன் அம்மா, என்றாள்.

 

மோனாவின் தாயார், “நான் அவளைப் பார்த்தேன் ஆனால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. அவள் சொல்வதைக் கேட்டேன், ஆனால் புறிந்துகொள்ளமுடியவில்லை. ஒருபுறம் அவள் மேல் நான் வைத்திருந்து பாசம் என்னை பீதியடையச் செய்தது, ஆனால் மறுபுறம் அவள் என்னை ஒரு ரம்மியமான ஆன்மீக உலகத்திற்கு அழைத்துச் சென்றாள். இருந்த போதும் அதை நம்பமுடியாமல், “நல்ல சுவாரஸ்யமான கதை,” என்றார்.

 

மோனா, கண்ணில் நீர் ததும்ப, மெதுவாக, அது கதையல்ல, அம்மா. இதை ஏன் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிறகு என்னை விட்டு நீண்ட நேரம் அந்த நடைபாதையில் நடந்த வண்ணம் இருந்தாள். என் கிளி பறந்து செல்ல போகிறது. அது எப்படிப் பறக்கப் போகிறது என்பதையும் தெரிந்து வைத்திருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை.

 

சிறையில் பஹாய் கைதிகளுக்கு நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அதற்குள் அவர்கள் தாங்கள் பஹாய்கள் அல்ல என்று கூறிவிட்டால் விடுதலை செய்யப்படுவார்கள். இல்லையென்றால் அவர்கள் தூக்கிலிடப் படுவார்கள் என தெரிவிக்கப்பட்டனர். அந்த நேரம் மோனா ஒரு கனவு கண்டாள். அதில் மோனா சிறையில் தன் கட்டாயப் பிரார்த்தனையைக் கூறிக் கொண்டிருந்தபோது,அப்துல் பஹா அந்த அறைக்குள் வந்து மோனாவின் தாயார் படுத்திருந்த படுக்கையில் உட்கார்ந்து, அவர் தலையில் கையை வைத்தார். அப்போது அவர் மோனாவின் பக்கம் தம்முடைய மறு கையை உயர்த்தினார். மோனா, தான் மேற்கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் போய்விடுவார் என்று நினைத்து, ஓடிவந்து அவர் முன் மண்டியிட்டு உட்கார்ந்து அவர் கையை தன் கையால் பிடித்துக் கொண்டாள். அப்துல் பஹா, “மோனா உனக்கு என்ன வேண்டும்,” என கேட்டார். அதற்கு மோனா, “விடா முயற்சியுடன் கூடிய மன உறுதி வேண்டும்,” என்றாள். மறுபடியும் அவர், “என்னிடம் இருந்து உனக்கு என்ன வேண்டும் என்றார்.” அதற்கு மோனா, “எல்லா பஹாய்களுக்கும் விடா முயற்சியுடன் கூடிய மன உறுதி தரப்பட வேண்டும்,” என்றாள். மீண்டும் அப்துல் பஹா, “மோனா, என்னிடம் இருந்து உனக்காகவென்று என்ன வேண்டும்,” என்றார். அதற்கு மோனா, “விடா முயற்சியுடன் கூடிய மன உறுதி வேண்டும்,” என்றாள். அப்துல் பஹா, “அளிக்கப்பட்டது, அளிக்கப்பட்டது,” என்றார்.

 

அடுத்த நாள் மோனா தான் கண்ட கனவை சிறையில் இருந்த எல்லோரிடமும் கூறினாள். அதற்கு பிற கைதிகள், “உனக்கும் உன் தாயாருக்கும் விடுதலை கேட்டிருக்கலாம், ஆனால் எல்லோருக்கும் எவ்வளவு பிரமாதமான வரத்தைக் கேட்டிருக்கின்றாய்,” என்றனர்.

 

மோனாவின் தாயார் தாம் விடுதலையான அன்று, சிறையில் இருந்த அனைவரும் தமக்காக அவர் வெளியே சென்று என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மோனா, “அம்மா, இங்கு நீங்கள் எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு பக்கபலமாக இருந்தீர்கள், அதே போல் வெளியே உள்ளோர்களும் மன உறுதியோடு இருக்க உதவுங்கள், அவர்கள் உறுதியாகவும் தைரியத்துடனும் இருக்க ஊக்குவியுங்கள்,” என கேட்டுக் கொண்டாள்.

 

மோனாவின் தாயார், “நான் அவள் முகத்தை முத்தமிட்டேன், ஆனால் முத்தமிட்டது அதுவே கடைசி முறை அல்ல, மீண்டும் ஒரு முறை அவளை முத்தமிட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவள் சில்லிட்ட உடலை பிணக்கிடங்குல் முத்தமிட்டு, அந்த பொக்கிஷத்தை அதன் சொந்தக்காரரிடமே திருப்பி அனுப்பிவைத்தேன்.” மோனாவை கடைசியாக சிறையில் நான் சென்று கண்டபோது, அவள், “அம்மா நாளை நாங்கள் பஹாவுல்லாவின் விருந்தினர்களாக இருப்போம் என்றாள்.” ஆம், அடுத்த நாள் அவள் தூக்கிலிடப்பட்டாள்.

 

மோனாவின் தமக்கை தரானிஃ, “வாரம் ஒரு முறைதான் மோனாவைக் காண எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுதான் மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்தது. அவளைப் பார்க்கத் துடித்தேன். அன்று அவளை இறுதியாகக் காண்கின்றேன் என எனக்குத் தெரியாது. கைதிகளைக் காண நாங்கள் அனுமதிக்கப் பட்டபோது, தடுப்பிற்குப் பின்னால் மோனா முகத்தில் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள். முதலில் அம்மாவே இருவழி தொலைபேசியை எடுத்துப் பேசினார். அவள் எப்போதும் போல் மனமகிழ்ச்சியோடு பிறர் நலத்தை விசாரித்து, என்னை நோக்கி“, ‘உன்னைக் கட்டிப் பிடித்து நசுக்க ஆசையாக இருக்கின்றது,’ என்றாள். சிரித்துக்கொண்டே அவள், மீண்டும், ‘அம்மா இப்போது உன்னுடன் இருக்கின்றாள், சந்தோஷமாக இரு’,“ என்றாள். நானும் சிறிது நேரம் பேசிவிட்டு, மோனா, நேற்று ஆறு பஹாய்கள் தூக்கிலிடம்பட்டனர்,” என்றேன். ஆம் ஆறு பேர் பஹாய்கள் என்ற காரணத்திற்காக நேற்று தூக்கிலிடப் பட்டிருந்தனர். அவள் அழகிய பசுமை நிறக் கண்கள் நீரால் நிரம்பின. தன் கையை தன் இதயத்தின் மேல் வைத்து, யார் அவர்கள், என்று வினவினாள். நான் ஒவ்வொருவராகப் பெயரிட்டுக் கூற, அவள் தன் கையை மேலும் அழுத்தமாகத் தன் இதயத்தின் மேல் வைத்து, ‘அவர்கள் நன்மையடைந்தனர், அவர்கள் நன்மையடைந்தனர்,’ என கூறிக் கொண்டே வந்தாள். கண்களில் நீர் வழிய, ஓதரானிஃ, இவை சோகக் கண்ணீரோ, துயரக் கண்ணீரோ அல்ல,’ என்றாள். ‘இவை ஆனந்தக் கண்ணீர்,’ என்றாள். நான், ‘மோனா, நீயும் கூடிய சீக்கிரம் எங்களை பிரியப் போகின்றாய்,’ என்றேன். ‘தெரியும், தெரியும்,’ என்றாள். ‘நாங்கள் கொலைக்களத்திற்கு களிப்புடன் பாடிச் செல்ல பிரார்த்தனை செய்,’ என்றாள். நிச்சயம் பிரார்த்திப்பேன்,’ என்றேன். ‘இறைவன் நியமித்தது நிச்சயம் நடந்தேறும்,’ என்றேன்.

 

‘நீ எனக்கு வேறொறு உதவி செய்ய வேண்டும்,’ என மோனா என்னைக் கேட்டுக் கொண்டாள். ‘நான் தூக்கிலிடப்படுவதற்க்கு முன் என் பாவங்கள் மன்னிக்கப்பட நீ இறைவனை பிரார்த்திக்க வேண்டும்,’ என்றாள். நான் அவளைப் பார்த்து, ‘இறைவன் உன்னை மன்னிக்குமளவுக்கு நீ என்ன பாவமடி செய்தாய்,’ எனக் கூறினேன்.

 

நான் அழாமல் இருக்கப் பெரும் முயற்சி செய்து, அவள் அழகிய குரலைக் கேட்பதில் கவனமாக இருந்தேன். அப்போது என் அம்மாவும் அவளுடன் பேசட்டுமே என்று அவரிடமும் தொலைபேசியைக் கொடுத்தேன். சிறிது நேரத்தில் பொறுமை இழந்து, ‘நீங்கள் இருவரும்தான் சிறையில் மாதக் கணக்கில் ஒன்றாய் இருந்தீர்களே, இப்பொழுது நான் பேசவேண்டும்,’ என்று போனைப் பிடுங்கி மோனாவிடம் மறுபடியும் பேச ஆரம்பித்தேன்.

 

அதைக் கண்டு மோனா சிரித்தாள். ‘ஓதரானிஃ, எனக்கு எது சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?’ என்றாள். ‘நாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் பட்டியலில் இருக்கின்றோம் எனும் ஞானம்,’ என்றாள்.

 

நான் ஒன்றும் கூறவில்லை. என்ன கூறுவது! அப்போது மோனா, ‘தரானிஃ நம் உறவினர்கள், நன்பர்கள் அனைவரையும் நான் விசாரித்ததாகக் கூறு. எல்லோரையும் என் சார்பில் முத்தமிடு.’ என் குழந்தை பக்கம் திரும்பி, ‘இவளை நீ நம் அப்பாவைப்போலவே வளர்க்க வேண்டும்,’ என்றாள். நானோ, என் இதயத்தில், ‘இவளை உன்னைப் போலவே வளர்க்கப்போகின்றேன்,’ எனக் கூற நினைத்தும், என் பேச்சு அவள் பேசுவதை நிறுத்திவிடக் கூடாது என்பதால் ஒன்றும் கூறவில்லை.

 

திடீரென்று தொலைபேசி வெட்டப்பட்டு நாங்கள் எல்லோரும் பிரியும் நேரம் வந்தது. இறுதி முறையாக எங்கள் விரல்களால் உதடுகளைத் தொட்டு, கண்ணாடியின் மேல் வைத்து எங்கள் முத்தங்களைப் பரிமாரிக்கொண்டோம். ”

 

ஜூன் 18 அன்று, சாயங்காலப்பொழுது, நாங்கள் சிறைச்சாலையை விட்டு வந்தவுடன், பத்துப் பெண்கள் அடிலபாட் சிறையில் இருந்து கொலைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள், மோனா, ரோயா, ரோயாவின் தாயாரும், இஸ்ஸாட், ஷிரின், ஸார்ரின், மஹ்ஷீட், சீமீன், அஃக்தார், தாஹிரி மற்றும் நுஸ்ராட்.

 

அவர்களை அடிலாபாட்டிலிருந்து ஏற்றிச் சென்ற பஸ் ஓட்டுனர், அவர்களின் மனோபலத்தையும் தைரியத்தையும் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். “முதலில் அவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்படப் போகிறார்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். கொலைக்களம் வந்தபோதுதான் தெரியும் அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்படப் போகிறார்கள் என்று,” என்றார். “வழிமுழுவதும் அவர்கள் பாடியும் மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் இருந்தனர்.” மற்றொருவரான, அந்தப் பென்களின் கழுத்தில் கயிரை மாட்டிய கொலையாளி, ஒரு பெண்ணின் தாயாரிடம், “நாங்கள் இறுதி வரை அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தோம். நாங்கள் பஹாய்கள் அல்ல என்று கூறுங்கள் விட்டுவிடுகிறோம், என்று. ஆனால் அவர்கள் யாருமே அசையவில்லை. முதலில் வயதான பெண்களைத் தூக்கிலிட்டோம். பிறகு வயதுப் பெண்களை ஒருவர் ஒருவராகத் தூக்கிலிட்டோம். ஆக வயதுக் குறைந்தவரே இறுதியாக இறந்தார். நாங்கள் எல்லோருமே, தூக்கைக் கண்டதும் பயந்து நடுங்கி, சமயத்தை துறந்துவிடுவார்கள் என்று நினைத்தோம், ஆனால் யாருமே அசையவில்லை. ஒரே ஒரு முறை நாங்கள் பஹாய்கள் அல்ல என்று கூறுங்கள் விட்டுவிடுகிறோம் என்று கெஞ்சினோம், ஆனால் யாருமே வாயைத் திறக்கவில்லை. அவர்கள் அனைவருமே இறப்பதே மேல் என்று நினைத்தனர்.”

 

மோனாவோடு சேர்ந்து உயிர்த்தியாகம் செய்த மற்ற பெண்கள்

 

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு உடல்கள் பிணக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அன்று, முதல் நாள் தூக்கிலிடப்பட்ட ஆறு ஆண் பஹாய்களின் உடல்களைப் பெறச் சென்ற பஹாய் உறவினர்கள், அன்று புதிதாகப் பத்து பெண்களின் உடல்களைக் கண்டனர். ஷிராஸ் முழுவதும் அந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவியது.

 

தரானி

 

தரானிஃ அந்த செய்தியை பெற்றபோது, தன் தந்தையின் இறப்பைக் கேட்டு அடைந்த அதே கடும் வேதனையை அடைந்தாள். மோனாவை நான் அறிந்தவரை, அவள் நிச்சயமாக தன் நம்பிக்கையை கடைசி வரை இழக்கப் போவதில்லை என்பதை நான் உணர்ந்தேன். நான் பஹாவுல்லாவிடம் அவளை சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள் என்று பிரார்த்திக்கவில்லை. அவளுக்காக விதிக்கப்பட்டது எதுவோ அது நிறைவேறட்டும் என கேட்டுக் கொண்டேன்.

 

ஆனால் பலமுறை, அப்படியே அவள் கொல்லப்பட்டால் நான் அதை எப்படி தாங்கிக் கொள்வேன், அவள் உயிரற்ற உடலை எப்படி என் கண்களால் பார்க்கப்போகின்றேன்? அதை என்னால் தாங்கிக்கொள்ளமுடியுமா, என்றெல்லாம் மனதில் கேள்விகள். பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அந்த பயங்கரத்தை என் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மாறாக அவள் வீட்டுக்கு வரும் வேளையை எதிர்பார்த்திருந்தேன். அவள் சிரிப்பொலி, அவள் நடை ஒலி, அவள் இனிய குரல், என் அழகு தங்கையை அனைத்து முத்தமிடும் காட்சி என் மனதில் தோன்றியது. தந்தை மறைந்த துக்கத்தை அவளுடன் பகிர்ந்து, அவர்கள் எல்லோரும சிறையில் இருந்தபோது நான் பட்ட வேதனைகளை அவளிடம் சொல்லி என் மனோபாரத்தை இறக்கி வைக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன். நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்து, எங்கள் தாயாரை கவனித்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் அப்போது திட்டமிட்டேன்.

 

ஆனால் தெய்வீக திட்டம் வேறாக இருந்தது. அவள் இறந்த செய்தி கேட்டு பலவித எண்ணங்கள் என் மனதை அலைக்களித்தன. யாராவது வந்து அந்த பயங்கரம் உண்மை அல்ல என்று கூற மாட்டார்களா என்று என் மனம் அப்போது ஏங்கியது. இந்த ஏக்கம் பிணக்கிடங்கை அடைந்து அங்கிருந்தோரைக் கண்டபோது மறைந்துவிட்டது. கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது.

 

தரானிஃ மேலும் கூறுவது, “மோனாவின் அருகில் மண்டியிட்டிருந்தேன், எங்களுக்கு இடையில் கண்ணாடி தடுப்பு இல்லாமல் அவளைக் கண்டது மிகவும் துயரமாக இருந்தது. என் மனப்பூர்வமாக, அவள் தன் கண்களைத் திறந்து, ஒரே ஒரு தடவை, அவள் புன்னகையை நான் காண்பதை பார்க்கமாட்டாளா என்று என் மனம் ஏங்கியது. ஆனால் அவள் மேலே இருந்து நிறந்தர புன்னகையுடன் எங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரிந்தது. என் கண்களில் இருந்து ஒரே ஒரு சொட்டுக் கண்ணீர் கூட அவள் மனதை உடைத்துவிடும்.”

 

"ஆகவே, என் இனிய மோனா, நீ பஹாவுல்லாவுக்காவும் மனிதகுலத்திற்காகவும் கொண்டிருந்த அன்பிற்காக நான் முகம் மலர்கின்றேன். உன் இன்னுயிரை எதற்காகத் தியாகம் செய்தாய் என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ளட்டும்."