இல்லம்

 

மனித கடமைகளும் உரிமைகளும் பற்றிய பஹாய் பிரகடனம்

 

(மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் கமிஷனின் முதல் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

 

லேக் சக்சஸ், நியு யார்க், ஐக்கிய அமெரிக்கா பிப்ரவரி 1947

 

I

 

இறைவன், மனுக்குலத்தின்பால் ஆண் பெண், இனம், சமயம் அல்லது தேச பாகுபாடின்றி நற்பண்புகள், நன்னெறிகள், ஆற்றல்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். மனித உரிமைகளின் தோற்றுவாயான இத் தெய்வீகக் கொடைகளின் சாத்தியங்களை நிறைவேற்றுவதே மனிதத் தோற்றத்தின் நோக்கமாகும்.

 

சமூகத்தின் உறுப்பினர்கள், மனிதவாழ்வு மற்றும் சுயநினைவு எனும் பரிசுகள் கடவுள், சமூகம் மற்றும் தனக்குத்தானே நிறைவேற்ற வேண்டிய கடமைகளை வலியுறுத்துகின்றன என்பதை உணரவேண்டும். அவ்வாறு உணரும்போது சமூகநிலைகளின் ரீதியில் மனித உரிமைகள் ஸ்தாபிக்கப்படலாம். சமூகத்தின் உறுப்பினர்கள் தங்கள் வாழ்வு, ஒன்றான, பிரபஞ்சத்தின் அதே தோற்றுவாயிடமிருந்துதான் பிறந்துள்ளன எனும் உண்மையை பரஸ்பரம் புரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறான புரிந்துகொள்ளல் ஒரு பொது சமுதாய அமைப்பினுள் முறையான தொடர்புகளை பேணிட வழிவகுக்கின்றது.

 

இந்த சமூதாய அமைப்பு அடிப்படை மனித உரிமைகளை உருவாக்குவதில்லை. உறுப்பினர்களின் ஒழுக்கமுறையான சாதனைகளை மனிதர்களுக்கிடையிலான தொடர்புகள் பிரதிநிதிக்கின்றன. இத்தொடர்புகளை பாதுகாப்பது மற்றும் உறுப்பினர்களின் பரஸ்பர கடமையான ஆன்மீக ஐக்கியத்தை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் சமுதாயத்தின் சார்பில் அறங்காவலாக செயல்படுவதே இச்சமுதாய அமைப்பின் பணித்துறையாகும்.

 

எந்த உருவிலான சமுதாய அமைப்பும் தங்கள் தார்மீக கடமைகளை புறக்கணித்த, மனிதனை மிருகங்களிடமிருந்து பிரித்துக்காட்டும் தெய்வீக இயற்திறனை கைவிட்ட மனிதர்களுக்கான இன்றியமையாத மனித உரிமைகளை நிலைப்படுத்தும் ஆற்றலை பெற்றிருக்கவில்லை. ஒழுக்கமதிப்பும் செல்வாக்கும் இல்லாத அரசியல் பொருளாதார நிலைகளுக்கான பொது வரையறைகள், இன்றியமையாத மனித உரிமைகளுக்கு சமமானவை அல்ல. மாறாக, அவை கட்சிசார்ந்த கொள்கையை வெளிப்படுத்துபவையாகும். ஒழுங்குமுறையான சமுதாயம் ஒழுக்கம் நிறைந்த மனிதர்களால் மட்டுமே பேணப்பட முடியும்.

 

II

 

மனிதனின் தெய்வீக இயற்திறன்கள் தனிமனிதனை மலர்ச்சியுறும் மற்றும் முதிர்வடையும் ஒரு மனிதவர்க்கத்தோடு பிணைக்கின்றன. மனித விருப்ப ஆற்றலுக்கு அப்பாற்பட்ட நிலையில் செயல்படும், படிப்படியான மேம்பாடு சார்ந்த கோட்பாடு ஒன்றுக்கு, மனித இனம் கட்டுப்பட்டுள்ளது. ஒரு காலகட்டம் அதற்கு முற்பட்ட காலகட்டத்தின் நிலைகளை மீண்டும் வெளிப்படுத்துவதில்லை.

 

மனிதப்பண்பாட்டில் காணப்படும் பரிணாம வளர்ச்சி மனுக்குலத்தின் வழி செயல்படும் ஆன்மீக பரிணாம வளர்ச்சியின் பின்விளைவாகும். புதிய பண்புக்கூறுகள் வெளிப்படும்போது மேலும் பரவலான வகையில், சமூக கட்டமைப்பில் மாறுபாடுகளைக் கோரும் பொது உறவுமுறைகள் ஸ்தாபிக்கப்படக் கூடும்.

 

பல்வகைப்பட்ட இனங்களையும் மக்களையும் ஐக்கியப்படுத்துவதற்காக நவீன தேசியநாடுகள் தோன்றின. முன்பு தனிப்பட்டும், சுதந்திரமாகவும், பகைமை பாராட்டியும் வந்த சமூகங்கள் அனுசரிக்கும் அல்லது அவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள ஒரு சமூக உடன்பாடாக தேசியநாடுகள் உள்ளன. வரலாற்று ரீதியாக தேசங்களின் தோற்றம் மனித மேம்பாட்டில் ஒரு மாபெறும் நெறிமுறை சார்ந்த வெற்றியாகும்; உறுதியானதும் முக்கியமானதுமான ஒரு கட்டமும் ஆகும். மக்கள் கூட்டங்களின் நிலைகளை அது உயர்த்தியுள்ளது, அரசியல் சட்டங்களின் வாயிலாக இனக்கூட்டங்களின் தன்னிச்சையான அதிகாரத்தை மாற்றீடு செய்துள்ளது, கல்வி, அறிவு ஆகியவற்றுக்கான வாய்ப்புக்களை விஸ்தரித்துள்ளது, சமயப்பிழவு சார்ந்த சண்டைகளின் விளைவுகளை தணியச்செய்துள்ளது, மற்றும் சராசரி மனிதனின் சமூகவாழ்வு சார்ந்த உலகை விஸ்தாரமாக்கியுள்ளது. இயல் விஞ்ஞானம் மேம்பாடு காணக்கூடியதும், கண்டுபிடிப்புகள் செயல்படுத்தப்படக்கூடியதுமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது, மற்றும் தொழில்மயத்தினால் மனிதன் இயற்கையையே வெல்லும் ஆற்றலும் பெற்றுள்ளான்.

 

தேச அமைப்பினால் வாய்த்த புதிய ஆற்றல்களும் வள ஆதாரங்களும் தேசிய எல்லைகளுக்குள் அடங்கியிருக்கவில்லை. மாறாக, சமூக உறவுகளில் எந்த தேசமுமே கட்டுப்படுத்தமுடியாத அனைத்துலக நிலையிலான “மூலகாரணம் மற்றும் பின்விளைவு” சூழ்நிலையை அவை உருவாக்கியுள்ளன. தேசம், சுதந்திரமாக, தானே வழிநடத்தும் ஒரு சமூக அமைப்பாக அடையக்கூடிய தனது மேம்பாட்டின் எல்லையை நெருங்கிவிட்டது. ஆன்மீக பரிணாம வளர்ச்சி குறித்த ஒரு புதிய சர்வலோக இயக்கத்தின் அலைகளில் சவாரி செய்யும் உலக ரீதியான அறிவியல், பொருளாதாரம் மற்றும் உணர்வுகள், ஒரு புதிய உலக அமைப்பிற்கான அஸ்திவாரத்தை இடுகின்றன. தேசியநாடே இறுதி முடிவு என எண்ணப்பட்டு வந்துள்ளது. ஆனால், மனுக்குல ஒற்றுமையை மறுப்பதாக அத்தேச உணர்வு அமைந்துவிட்டது. இந்த மறுப்பே தேச மக்களின் உண்மையான தேவைகளுக்கு எதிராக இயங்கும் பொது அமைதியின்மையின் தோற்றுவாயாக இருக்கின்றது. மனிதனின் தெய்வீக கொடைகளின் ஆழத்தில் இருந்து இந்த ஒற்றுமையின் வலியுறுத்தலின்பாலான மறுமொழி எழுகின்றது. இந்த உணர்வே இக்காலத்திற்கு அதன் மைய உந்துசக்தியை வழங்குகின்றது மற்றும் திசைகாட்டியாகவும் இருக்கின்றது. முழுமையான மனித உறவுகளின் அடிப்படையில் ஒரு புதிய முறையை ஏற்படுத்திட, சமுதாயம் தன்மைமாற்றம் கண்டுவருகிறது

 

III

 

மாறுபட்ட மக்கள்களினால் வேறுபட்ட சமூக நிலைமைகளில் தொடக்கநிலை மனித உரிமை கருத்துப்படிவங்கள் மேற்கொள்ளப்பட்டன: குடியுரிமை, அரசகுலத்துக்கு மாறாக மக்களே தேசம் எனும் நிலை, சட்டமுறை ஒன்றை பெறும் உரிமை, மரபு சம்பிரதாயம் ஆகியவற்றின் இடத்தில் எழுத்து வடிவமான அரசியல் சட்டம் இடம்பெற்றது, மக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு குறித்த உரிமை, போரிடும் குழுக்களின் மீது அமைதியை வலியுறுத்துவது; பண்ணைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டோர் தொழில் மற்றும் இருப்பிடத்தை தேர்வு செய்யும் உரிமை. நிலையான சமுதாயத்தை அமைப்பதற்கான முடிவற்ற போராட்டத்தில் ஒர் இனம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க நெறிமுறைசார்ந்த வெற்றிகளை உரிமை குறித்த வரலாறு பதிவு செய்திருக்கும்.

 

ஓர் உரிமை என்பது ஒரு சுதந்திர அரசினால் நிலைநிறுத்தப்படும் போது மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் பயன்விளைவு அளிக்கும். பாரம்பரியமாக நாம் பெற்ற உரிமைமுறை தேசியநாடே உண்மையான அதிகாரத்தை இழந்ததன் வாயிலாக அபாயத்திற்குள்ளாகியுள்ளது. கடந்த காலத்தின் தொடக்கநிலை உரிமைகளை மறுமதிப்பீடு செய்யவும், நமது காலமான இக்காலத்தோடு ஒத்துப்போகக்கூடிய இன்றியமையாத புதிய உரிமைகளை ஸ்தாபிப்பதற்கும், ஓர் உலகளாவிய அரசு தேவைப்படுகிறது. உரிமை என்பதின் உட்கருத்து மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. ஓர் உரிமை என்பது முற்காலத்தில் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பாக இருந்தது; ஆனால் இன்றோ உரிமை என்பது மனிதர்கள் சமூக அந்தஸ்தை பகிர்ந்துகொள்வதாக இருக்கின்றது. மனுக்குலம் முழுவதுமாக ஒரே நீதிக்கு அடிபனியும் போது மனித அனுபவத்தில் முதன்முறையாக நெறிமுறையும் சமூக சட்டங்களும் ஒன்றுகலந்து ஐக்கியப்டும் வாய்ப்பேற்பட்டுள்ளது. சர்வலோக ரீதியான அனைத்துமே தெய்வீக உண்மைகளாகும்; வரம்புக்குட்பட்ட ஒருதலைச்சார்புடைய அனைத்துமே மனித கருத்துக்களாகும்.

 

நெறிமுறையான ஒரு சமுதாயத்தில் வாழ்வதற்கான கடமைப்பொறுப்பும் உரிமையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும், மற்றும், தொடர்ந்து வாழ்வதற்கான விருப்ப ஆற்றலுக்கு அது சோதனையாகவும் உள்ளது. தேசங்களை தனது கருவிகளாக பயன்படு்த்தும் தற்கால போராட்டம் மக்கள் தொடர்பான ஒரு போரும் அல்ல அல்லது அரசபரம்பரைகள் சார்ந்ததும் அல்ல: அது கோட்பாடுகள் சார்ந்த போராட்டமாகும். கோட்பாடுகள் சார்ந்த போராட்டம் இருவகையான மனிதர்களிடையே நடக்கும் போராட்டமென தெளிவாக வெளிப்படுகின்றது; ஒரு சாரார் பொதுவான மனுக்குலமாகவும் பொதுவான சமுதாய அமைப்பாகவும் கண்டிப்பாக ஒற்றுமைப்படப் போகின்றவர்கள்; மற்றவர், பிரிந்தும், வேறுபட்டும், சுயாட்சியிலும் பிரிந்தே இருக்கப்போகின்றவர்கள். தேசியநாடு, தனிமனிதர்களின் சுயநினைவுடனான மனப்பான்மையை அடிப்படையாக உள்ளடக்கிய ஒரு போராட்டத்தில் இரண்டுபட்டும், பிரிவுபட்டும் கிடக்கின்றது. ஆனால், தேசியநாடு எந்த அளவுக்கு ஒரு ஐக்கியப்பட்ட அமைப்பாக செயல்பட முடிகின்றதோ, அது அந்த அளவுக்கு தீர்மானம் செய்வதில் பங்கேற்பதை தவிர்க்க இயலால் உள்ளது. எந்த மனிதனும் எந்த சமுதாய அமைப்பும் விதிக்கப்பட்டதிலிருந்து விலக்கு பெற முடியாது.

 

உள்ளூர் சுயாட்சியிலிருந்து உலக ஐக்கியத்திற்கான ஒரு பாலத்தை அமைப்பதே தேசியநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள உண்மையான குறியிலக்காகும். ஓர் உலக அரசை நிலைநிறுத்த செயலாற்றும் போது மட்டுமே அது தனது நெறிமுறை மரபுச்செல்வத்தையும் செய்கடமையையும் தக்க வைத்துக்கொள்ளமுடிகின்றது. ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தில் முழுமையானதும் இறுதியானதுமான மனித உறவுகளின் புறவெளிப்பாட்டை பிரதிபலிக்கும் புதிய ஸ்தாபனங்களுக்கு ஆதரவு நல்கும் வலுமிக்கத் தூண்களாக கடமையாற்ற தேசம் மக்கள் ஆகிய இரண்டுமே அவசியமாகின்றது. ஐக்கியப்பட வேண்டும் என மக்களுக்கும் தேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சரித்திரம் வாய்ந்த உரிமைக் கட்டளையின் நிறைவேற்றத்தை தாமதப்படுத்தும்போது, குழப்பத்தை தனது ஆயுதமாகவும் நிலைகுலைவை தனது நோக்கமாகவும் கொண்டுள்ள நிலைகவிழ்க்கும் சக்திகளுக்கு வாய்ப்பும் உற்சாகமும் நாம் வழங்குகின்றோம்.

 

IV

 

விரும்பத்தக்க ஒவ்வொரு மனித உரிமையையும் பட்டியலிடுவது இந்த அறிக்கையின் நோக்கமல்ல மாறாக, இன்றியமையாத உரிமைகளின் இயல்பை உறுதிசெய்யக்கக்கூடிய ஓர் அனுகுமுறைக்கான கருத்தை தெரிவிப்பதே அதன் நோக்கமாகும். இங்கு குறித்துக்காட்டியுள்ளவாறு, ஒரு நெறிமுறைசார்ந்த மற்றும் தலையாய அமைப்பு ஒன்றினால் சமுதாய அந்தஸ்து வழங்கப்படும் மனிதனின் தெய்வீக ஆற்றல்களின் புறவெளிப்பாடே ஒரு மனித உரிமை என்பதாகும். சமூகத்தின் உறுப்பினர்களால் மனித உறவுகள் குறித்த அவசியமான ஒரு சிறப்புப்பன்பாக வற்புறுத்தவும் தொடர்ந்து ஆதரவு நல்கப்படும் போது மட்டுமே ஓர் உரிமை சமூக அந்தஸ்து பெறுகிறது.

 

புது உலக யுகத்தை தனிச்சிறப்புப்படுத்தி காண்பிக்கும் இன்றியமையாத மனித உரிமைகளுள்: (1) தனிமனிதன்; (2) குடும்பம்; (3) இனம்; (4) தொழில் மற்றும் செல்வம்; (5) கல்வி; (6) வழிபாடு; (7) சமூக ஒழுங்குமுறை ஆகியன குறித்தவை உள்ளன.

 

மனித நிலையுடையவன் ஆன்மீகமானவனும் சமுதாயத்தின் ஒர் உறுப்பினனும் ஆவான். சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஆதரிக்கப்படும் நெறிமுறைசார்ந்த மனித உறவுகளில் அவனது ஆன்மீக இயல்பு வெளிப்பாடு பெறுகிறது, மற்றும் தனக்குள், குடும்பத்திற்குள், இனத்திற்குள், அல்லது வகுப்பினருக்குள் பின்வாங்கும் மற்றும் தனிப்படுத்திக்கொள்ளும் பொழுதினில் அது வாடிவிடுகின்றது. தொடர்ந்து மேம்பாடு காணும் ஒரு சமுதாயத்தின் தேவைகளுக்காக சேவையாற்றுவதே தனிமனிதனின் கடமையாகும். தனிமனிதன், நடப்பலிருக்கும் நெறிமுறைகளுக்கு மாறான ஒரு சூழ்நிலைக்கு சமுதாயத்தினால் உட்படுத்தப்படும் போது, அல்லது, அவ்வித சூழ்நிலைக்கு தனியார் நிறுவனங்களின் உட்படுத்துதலுக்கு ஆளாகும் போது, சமூகம் தகர்வடையும் அபாயத்திற்கு உள்ளாகின்றது; ஏனெனில், நெறிமுறை நீதி என்பது ஸ்தாபனங்களிலும், பெரியதும் சிறியதுமான சமூகங்களிலும் பயன்பாடு உள்ளதாகும்.

 

சமநிலையான மனித உரிமைமுறை ஒன்று நிலைநிறுத்தப்பட வேண்டும், மற்றும் தனிநபர்கள் சமமான வாய்ப்புக்களும் பெறவேண்டும். சீர்நிலை இன்றி பல்வகையே ஓர் உயிர்ப்பொருளான சமுதாயத்தின் கோட்பாடாக உள்ளது. வாய்ப்பற்ற நிலை, அடக்கு முறை, இழிவு நிலை ஆகியவை மக்கள் கூட்டங்களை குடியுரிமை குறித்த கடமைகளை நிறைவேற்ற இயலாமல் செய்துள்ளன. இவ்வித மனிதர்கள் மற்றவர்களின் மனசாட்சியின் மீது வைக்கப்பட்ட நெறிமுறை பொறுப்பாகும். அறியாதார் கல்வியளிக்கப்படவும், முதிர்ச்சியடையாதார் பயிற்சியளிக்கப்படவும், நோயுற்றோர் குணப்படுத்தப்படவுமான பொறுப்பாகும் அது.

 

மனிதநிலையுடையவன் மனுக்குலத்தின் ஆன்மீகப்பொருளாவான், ஆனால் குடும்பம் என்பது சீரழிக்கமுடியாததும் தெய்வீகமாக படைக்கப்பட்டதுமான ஒரு சமுதாயப்பொருளாகும். உடல், உள்ளம், ஆவி ஆகியவற்றுக்கு சாதகமான சூழ்நிலைகளின் கீழ் தன்னை காப்பாற்றிக்கொள்ளும் குடும்பத்தின் உரிமையோடு தனிமனித வாழ்வுரிமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. முதிர்வடைந்த தனிமனிதன் அரசியல் தனிமம் எனும்போது, குடும்பம் பொருளாதார தனிமத்தை உள்ளடக்கியுள்ளது, மற்றும் குடும்ப வாழ்வு மற்றும் பொதுநலத்தின் அடிப்படையில் வருமானம் செயல்படுகிறது.

 

நவீன சமுதாயத்தில் வளர்ச்சிக்கு செயல்படும் ஒழுக்கமுறையான பரிணாமசக்திகளோடு புதியதும் அதிக ஆற்றல்மிக்கதுமான ஒரு தொடர்பை ஆண்பெண் சமத்துவம் குடும்பத்திற்கு வழங்குகிறது.

 

பல நாடுகளில் தேசியசமுதாயத்தின் உறுப்பினர்நிலை மேம்பாட்டின் பல்வேறு கட்டங்களில் உள்ள இன வகுப்புக்களை கலவையாக கொண்டுள்ளது. கடந்த காலங்களில் தனிப்பட்ட இன ஐக்கியத்திற்கும் சிறப்புப் பண்புகளுக்கும் சாதகமாக விளங்கிய சூழ்நிலைகள் வலுவிழந்து வருகின்றன. நிகழ்கால சமுதாயத்தின் உரிமைகளும் தேவைகளும் இனரீதியான உரிமைகளைவிட முக்கியத்துவம் மிகுந்தவை. தனிப்பட்ட உரிமைகள், இன சமத்துவத்திற்கான பரிமாற்றத்தின்போது மட்டுமே தியாகம் செய்யப்படலாம். இந்தப் பரிமாற்றம் ஒரு பல்லின சமுதாயம் பெற்றுள்ள உரிமைகளிலும் சலுகைகளிலும் பங்கேற்பதன் வாயிலாக பரிமாற்றப்படலாம்.

 

வணிகம், கைத்திறத்தொழில், கலை அல்லது வாழ்க்கைத்தொழில் ஆகியவற்றிற்காக தனிமனிதன் உழைப்பது வெறுமனே அவனுடைய வாழ்க்கை ஆதாரத்துக்காக மட்டுமல்ல, அவை அவனுடைய வாழ்க்கைக்கே ஜீவனாகும். இன்று, சேவை உணர்வில் ஆற்றப்படும் தொழில் பக்திசார்ந்த ஒரு செயலாக கணக்கிடப்படலாம். தொழில் செய்யவேண்டிய கடமை அடிப்படையில் நெறி சார்ந்த ஒரு கடமையாகும், செல்வம் படைத்ததினால் மட்டும் நிறைவேறும் ஒன்றல்ல. தொழில் செய்ய முடிந்தும் அவ்வாறு செய்ய மறுப்போருக்கு சமுதாயம் கடமைப்பட்டதல்ல.

 

வாழ்வாதாரம் உழைப்பின் வாயிலாக நிலைநிறுத்தப்படுகின்றது. மேலும், தொழில் முயல்வுகளில் கிடைக்கும் இலாபத்தில் தொழிலாருக்கும் பங்குரிமை உண்டு.

 

உபகரணங்கள் மற்றும் தளவாடங்களின் மீது செலுத்தப்படும் பல்வகைப்பட்ட முயல்வுகளின் ஒருங்கிணப்பில் செல்வம் பிறக்கின்றது. ஒரு செம்மையான பொருளாதாரம் பல்வகையான மனிதத்தொடர்புகளைக் கொண்ட அந்த முழு செயல்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது, மற்றும், உடைமையுரிமை, குறியிலக்கு, தொழில்நுட்ப அறிவு, கைத்திறன் அல்லது பயன்பாடு போன்ற எந்த ஒரு குழும அனுகூலத்தையும் குறியாக வைத்து அது அந்த செயல்பாட்டை மையப்படுத்துவதில்லை. செல்வம், ஒரு பகுதி தனிமனிதனின் உரிமை, வேறொரு பகுதி சமுதாயத்தின் உரிமை. அனைத்துலக போட்டி நிலைகளில், தனியார் மற்றும் பொது பொருள்வளங்களுக்கிடையே நியாயமான வேற்றுமைகள் காணப்படாத வரை கடுமையான நெருக்கடிநிலைகள் உருவாகவே செய்யும். உலகஸ்தாபனங்களின் உருவாக்கம், உலககண்ணோட்டத்தின் மேலாதிக்கம் ஆகியவற்றுக்காக உண்மைநீதியும் சமுதாய சித்தாந்தமும் காத்திருக்கின்றன.

 

போர் தொடுப்பதற்கான தேசிய உரிமை மற்றும் சக்தியை தள்ளுபடி செய்வது, பரஸ்பர பொருள்வளம் உறுதியான பொருளாதாரம் ஆகியவற்றை நோக்கி எடுத்துவைக்கப்படும் முதல் அடியை குறிக்கின்றது. உலகப் பொருளாதாரம் தவிர்த்து நாகரிகத்தின் பலன்களை வேரறெதனாலும் மனுக்குலம் அடையமுடியாது.

 

கல்வியின் வேர்கள் மனிதனின் தெய்வீகத்திறன்களில் அடங்கியுள்ளன, மற்றும் கடவுளின் அவதாரங்களே மனுக்குலத்தில் எல்லாம் தழுவிய ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.

 

தனிமனிதன் தன்னைத்தானே வெற்றி கொள்ள வாய்ப்பளிப்பது, சமுதாயத்தோடு ஒரு படைப்புத்திறன் மிக்க தொடர்புகொள்வது, பிரபஞ்சத்தில் தனது இடமெது என்பதை புரிந்துகொள்வது ஆகியவையே கல்வியின் நோக்கமாகும். கல்வி முழு மனிதன் மீதும் செயல்படுகிறது; அவன் மனம், அவன் உணர்வுகள், அவன் விருப்பாற்றல் ஆகியவற்றின் மீது செயல்படுகிறது. தற்போது கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், குடிமக்கள் கல்வி மற்றும் நம்பிக்கை சார்ந்த கல்விகளுக்கிடையே நிலவும் தனித்தன்மைகள், முழுமையும் சரிசமமும் அற்ற தனிமனிதநிலைகளையே உருவாக்குகின்றன. ஒருதலைச்சார்புடைய அனுகுமுறையை நியாயப்படுத்தும் வெவ்வேறு தனிமங்களால் ஆன முக்கிய சமூக பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் தவறான கல்வி புகட்டப்பட்ட மனிதர்கள் அனுபவிக்க நேருகின்றது.

 

கல்வி வாழ்க்கையோடு தொடர்ந்து வருவதாகும். முதியவர்கள் எதிர்நோக்கும் விஷயங்கள் பற்றிய அறியாமை, குழந்தகைளின் அறியாமையைக்காட்டிலும் அதிகம் உணரப்படாவிடினும், அவை அவற்றைவிட அதிகம் தீங்கு விளைவிக்கக்கூடியவையாகும். கல்விக்கான மனிதஉரிமை என்பது விரிவான நகரிகம் குறித்த மலர்ச்சிசெயற்பாட்டில் பங்கெடுப்பதற்கான உரிமையாகும். நெகிழ்வுக்குட்படாத மனப்பாங்குகளையும் உணர்வு நிலைநிறுத்தங்களையும் உருவாக்கும் முறைகள் இனிமேலும் தங்களை கல்விமுறைகள் என அழைத்துக்கொள்ள முடியாது.

 

இறைவழிபாட்டுக்கான தன்னுரிமை அல்லது மனச்சான்று பற்றிய சுதந்திரத்தை குறிக்கும் மனித உரிமை பல்வகையான சமயங்களைச் சார்ந்த சமூகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சட்டத்துறை சார்ந்த அனுமதியாகவே உள்ளது. மனமுதிர்வு, தன்னிச்சை ஆகியவற்றால் ஆன, சமயநம்பிக்கை குறித்த, சொந்த முடிவுக்கு வரும் வரை தங்களின் விசேஷ நம்பிக்கைமுறைகளை பின்பற்றவும் பிரகடணம் செய்யவும் வழங்கப்பட்டுள்ள உரிமை இது.

 

வழிபடவேண்டும் எனும் உள்ளுணர்வு சர்வவியாபகமானது என்பது எடுத்துக்காட்டப்பட்டும், எண்ணிலடங்கா, ஏறத்தாழ தற்காலிக வழிபாட்டுமுறைகள், நெறிமுறைகள், சமூக அமைப்பு ஆகியவற்றோடு அது தொடர்புபடுத்தப்பட்டும் உள்ளது. ஆகவே, இந்த உள்ளுணர்வு, மனுக்குலத்தின்பால் விசுவாசம், உலக ஐக்கியமெனும் புனித நோக்கத்தின் எல்லா நிலைகளின்பாலும் பக்தி எனும் உணர்வாக மறு உறுதிப்படுத்தப்படக் கூடாததற்கான உள்ளார்ந்த காரணமேதும் இல்லை. மனுக்குலத்தின் கடவுள், இனச்சார்புடைய ஆதிக்கப்பொருளாகவோ, எப்படியாவது உயிர்வாழவேண்டும் எனும் ஒரு தேசத்தின் விருப்பாற்றலாகவோ, ஒரு சமயப்பிரிவின் தனிமனிதநிலை மோட்சபேறு குறித்த வெகுமதியாகவோ இனிமேலும் வெளிப்படுத்தப்பட முடியாது. இறைவனின் தூய வெளிப்பாடு அவரது தீர்க்கதரிசிகள் மற்றும் அவதாரங்களின் வாயிலாக காலத்திற்குக் காலம் மனுக்குலத்திற்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. சமயம் குறித்த இரண்டாந்தர மற்றும் வறையரைக்குட்பட்ட சமய வழிமுறைகள் ஓர் உலக சகாப்தத்திற்கான உறுதிமொழியின்பால் தனிமனிதர்களின் கண்களை மறைக்கும் நெறிமுறைநெருக்கடியை மேலும் நீட்டிக்கவே செய்கின்றன.

 

உலக அமைப்புமுறை என்பது சகோதரத்துவத்தின் நிர்வாக அம்சமே இன்றி வேறில்லை மற்றும், சமுதாய அமைப்புமுறைக்கான மனிதனின் உரிமை ஓர் உலக சமயத்திற்கான அவனது உரிமையிலிருந்து பிரிக்கப்பட முடியாது.

 

ஒவ்வொரு காலகட்டமும் அதற்கென தனிப்பட்ட குறிக்கோளைக் கொண்டுள்ளது. இன்று, உலக அமைப்புமுறையின் உருவாக்கம் மனிதத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒரு கடமையாகும்.

 

உலக அமைப்புமுறை, சட்டரீதியாக சாத்தியமானதாகவும், சமூகரீதியாக தவிர்க்க இயலாததாகவும், தெய்வீகரீதியாக விதிக்கப்பட்டதாகவும் இருக்கின்றது. முன்பு இனத்தால், மொழியால், சமயத்தால், மற்றும் மக்கட்தொகையால் பல்வகைப்பட்டிருந்த சுதந்திரமான சமூகங்கள் கூட்டரசு கோட்பாட்டின் கீழ் ஏற்கனவே ஒற்றுமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்தேசங்கள், தங்களுடைய சட்டபூர்வ உரிமைகள், தேவைகள் ஆகியவற்றுக்கான நியாயக் குரலை ஓர் பேராட்சியமைப்பில் விகிதமுறையான பிரதிநிதித்துவத்தின் வாயிலாக பெறுகின்றனர். உலகக் குடியுரிமை ஒரு சமுதாய அந்தஸ்தாக உறுதிப்படுத்தப்படாத வரைக்கும், கடந்தகாலத்தில் மேம்படுத்தப்பட்ட மனித உரிமைகளும், சலுகைகளும் தற்கால சமுதாயத்தின் சீரழிவினால் கீழறுக்கப்படவே செய்கின்றன.

 

ஒரு பேராட்சி அமைப்புமுறை உருவாக்கப்படும் வரை, கடவுள் மற்றும் அவர்தம் அவதாரங்கள் குறித்த தனிநபர் சமயநம்பிக்கையில் தலையிடுவதற்குக் குறைய, அரசாங்க நடவடிக்கை மற்றும் தீர்மானம் சார்ந்த விஷயங்களில் தங்கள் குடிகளின் விசுவாசம் மற்றும் பணிவைப் பெறும் உரிமை இப்போது இருக்கும் அரசாங்கங்களுக்கு உண்டு.

 

இதனுள் உடன்பட்டுள்ள அமைப்புமுறை, அனைத்து தேசங்கள், இனங்கள், சமயநம்பிக்கைகள், வகுப்பினங்கள் ஆகியவற்றை ஐக்கியப்படுத்தி, அதன் மாநில உறுப்பினர்களின் சுயாட்சி உரிமை, அவற்றின் அமைப்புக்கூறுகளான தனிநபர்களின் சுதந்திரம் மற்றும் தன்முனைப்பு ஆகியவற்றை பாதுகாக்கவும் செய்யும் ஓர் உலக காமன்வெல்த் ஸ்தாபிக்கப்படுவதை குறித்துக்காட்டுகிறது. மனுக்குலம் முழுமைக்கும் அறங்காவலாகவும், எல்லா இனங்கள் மக்கள் ஆகியோரின் வாழ்வை முறைப்படுத்தவும், தேவைகளை ஈடு செய்யவும், உறவுகளை சரிப்படுத்தவும் சட்டமியற்றும், ஓர் உலக சட்டமன்றத்தை இந்த காமன்வெல்த் உள்ளடக்கியிருக்கும். அதன் உலக செயலதிகாரம், ஓர் அனைத்துலக காவல்படையின் ஆதரவோடு, அந்த உலக சட்டமன்றம் ஆணையிடும் சட்டங்களையும் முடிவுகளையும் செயல்படுத்தி, முழு காமன்வெல்த்தின் ஜீவ ஐக்கியத்தை பாதுகாக்கவும் செய்யும். அதன் உலக நியாயமன்றம் நீதிமன்றமாக செயல்பட்டு, சர்வலோக முறையின் பல கூறுகளுக்கிடையில் எழும் பிரச்சனைகள் அனைத்திற்கும் இறுதியானதும், கண்டிப்பானதுமான தீர்ப்பை வழங்கும்.

 

“உலகம் ஒரே நாடு, மனிதர்கள் அதன் பிரஜைகள்.” -- பஹாவுல்லா