கடவுளின் உடன்பாடு

விளக்கவுரை

இல்லம்

 

மனிதன் நாகரிகப்படுதலில் கடவுளின் அவதாரங்கள் முக்கிய பங்காற்றி வந்துள்ளனர், இவர்களே உலகில் சமயங்கள் தோன்ற மூலகாரணங்களாவர். அவர்கள் இக்காரியத்தை திட்டமிட்டோ இலட்சியத்தினாலோ செயல்படுத்தவில்லை. மாறாக, தங்களுக்கும் தாங்கள் ஈடுபட்டுள்ள அக்காரியத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என்றே அவர்கள் கூறியுள்ளனர். தங்களையும் மீறிய ஏதோ ஒரு சக்தி, ஓர் ஆன்மீக சக்தி தங்களை இயக்கி தங்கள் மூலமாக உலகில் மறுமலர்ச்சி ஏற்படும்படி தூண்டியதாகவே அவர்கள் தங்கள் எழுத்துக்களில் கூறியுள்ளனர். ஆகக்கடைசியாக உலகில் தோன்றிய கடவுளின் திருத்தூதரான பஹாவுல்லா பின்வருமாறு கூறியுள்ளார்:

 

"மன்னனே! நானும் பிறரைப்போல் ஒரு மனிதனாக, என் மஞ்சத்தில் துயில்கொண்டிருந்த வேளை, சர்வ-மகிமைமிக்கவரின் தென்றல்கள் என்மீது தவழச்செய்யப்பட்டு, இருந்துவந்துள்ள அனைத்தும் குறித்த அறிவை எனக்குப் புகட்டின. இது என்னிடமிருந்து தோன்றியதல்ல, மாறாக சர்வ-வல்லவரும் சர்வ-ஞானியுமான அவ்வொருவரிடமிருந்தே தோன்றியதாகும்."

 

கடவுள் அருள் பெற்ற சிலர் உலகில் ஆன்மீக நகாரிகம் உருவாகிடச் செய்கின்றனர் என்பது தெளிவு. ஆனால், இந்த நிகழ்வுகள் திட்டமிட்ட செயல்களா அல்லது யதேச்சையாக நிகழ்கின்றனவா எனும் கேள்வியை கருத்தில்கொள்ளும்போது, இதற்கான பதில் பஹாய் போதனைகளிலேயே கிடைக்கின்றது.

 

பஹாவுல்லாவின் மறை மொழிகள் எனும் நூலில் பின்வருமாறு காணக்கூடும்:

 

மனிதனின் புத்திரனே!

 

நினைவுக்கெட்டாத எனது நிலையிலும், எனது சாராம்சம் எனும் புராதன நித்தியத்திலும் மறைந்திருக்கும் யான், உன்பால் எனக்குள்ள அன்பினை உணர்ந்தேன், ஆகவே உன்னைப் படைத்தேன்; எனது உருவத்தை உன்னில் செதுக்கியுள்ளேன்; எனது அழகையும் உனக்கு வெளிப்படுத்தினேன்.

 

மனிதனின் புத்திரனே!

 

யான் உன் படைப்பினை விரும்பினேன்; ஆகவே உன்னைப் படைத்தேன். ஆகையால் நீ என்னை நேசிப்பாயாக; அதனால் யான் உனக்குப் பெயரையும் சூட்டி, உனது ஆன்மாவையும் உயிர் ஆவியினால் நிரப்பக்கூடும்.

 

உயிருருவின் புத்திரனே!

 

என்னை நேசிப்பாயாக, அதனால் யான் உன்னை நேசிக்க இயலும். நீ என்னை நேசிக்காவிடில் எனதன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது. ஊழியனே, இதனை நீ அறிவாயாக.

 

மேற்கூறிப்பிட்ட மறை மொழிகளிலிருந்து கடவுள் மனிதனுக்கு வழிகாட்டுவதற்கு சில முன்நியதிகளை விதித்துள்ளார் என்பது தெளிவு. என்னை நேசி அதன் வாயிலாக நான் உன்னை நேசிக்கக்கூடும் மற்றும் உனக்குத் தேவையானவற்றையும் நான் அளிக்கக்கூடும் என கடவுள் கூறுகின்றார். மனிதனுக்கு கடவுள் வழங்கியுள்ள ஆற்றல்களில் சுயசிந்தனை மற்றும் எதையும் தேர்வு செய்யும் ஆற்றல்கள் முக்கியமானவை. இ்நத தேர்வு செய்யும் ஆற்றலின் வாயிலாக மனிதன் கடவுளின் அன்பிற்கு தன்னைப் பாத்திரமாக்கிக்கொண்டு கடவுளின் ஆசிகளைப் பெறுகின்றான்.

 

இறைவன் மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் விதம்

 

இறைவன் என்பவர் யார்? அவரை நாம் எப்படி அறிந்து வழிபடுவது அன்பு செலுத்துவது? அவர் ஆவியின் சாரமா அல்லது வஸ்துவினால் ஆனவரா? எத்தனை கடவுள்கள் இருக்கின்றனர்? ஏன் உலகில் இத்தனை மதங்கள்? ஆயிரம் ஆயிரம் வருடங்களாக மக்கள் இவற்றையும் இவை போன்ற பல கேள்விகளையும் கேட்டு வந்துள்ளனர். இதற்கு தகுந்த பதிலை பஹாய் சமயம் இவ்வாறு வழங்குகின்றது:

 

இறைவன் ஒருவரே உள்ளார். ஆனால் அவர் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒரு மர்மமாக இருப்பதால் மனிதர்கள் அவரை வருணிக்க இயலாமல் இருக்கின்றனர். நாம் எல்லோரும் அவருடைய படைப்புகள். ஆனால் நம்மைப்போல் இறைவன் படைக்கப்பட்டவர் அல்ல. அவரைப்பற்றிய நம்முடைய எந்த சிந்தனையும் அவரது மெய்மையின் அன்மையை எட்ட முடியாது. அவர் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட பரம்பொருளாக வீற்றிருக்கின்றார்.

 

அப்படியானால் நாம் அவரை எவ்வாறு அறிந்துகொள்வது?

 

இறைவன் மனிதர்களோடு தொடர்புகொள்ள தாமே நேரில் வருவதில்லை. சூரியன் என்னதான் பூமிக்கு வேண்டிய வெப்பம் ஒளி ஆகியவற்றை வழங்கினாலும் அது பூமி வரை கீழிரங்கி அதை செய்வதில்லை. அவ்வாறு அது செய்வது உயிரினங்களை அழித்துவிடும். அதுபோலவே இறைவனும் தமது படைப்புக்களுக்குத் தேவையானவற்றை தாமே நேரே வந்து வழங்குவதில்லை. மனிதனுக்குத் தேவைப்படும் வழிகாட்டலை அவர் தமது அவதாரங்கள் மூலமாக வழங்குகிறார். இந்த அவதாரங்கள் அனைவரும் பௌதீக ரீதியில் சாதாரன மனிதர்களே. ஆனால், ஆன்மீக ரீதியில் அவர்கள் அனைவரும் பரம்பொருளான இறைவனின் அம்சங்களாவர். பலராக இருந்த போதிலும் அவர்கள் அனைவரும் மூல நிலையில் ஒருவரே ஆவர். அதவாது காலை, மதியம், மாலை ஆகிய வேளைகளில் காணப்படும் சூரியன் வெவ்வேறு நிலையிலும் வெவ்வேறு விதமான தோற்றத்தையும்அளித்த போதிலும், காணப்படுவது ஒரே சூரியனே. அது போன்றே தெய்வீக அவதாரங்கள் ஒவ்வொருவரும் காலம், மக்கள், இடம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தங்களுடைய போதனையை, ஒளியை அளிக்கின்றனர்.

 

கடவுளின் அவதாரங்கள்

 

இறைவன் தேவையைப் பொருத்து சமார் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மனிதனுக்கு தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றார். தமது அவதாரமாக ஒரு மனிதரை சிருஷ்டித்து பூமிக்கு அனுப்புகின்றார். அவதாரங்கள் தோன்றி மனிதனுக்கு புதிய போதனைகளை அளிக்கின்றனர், புதிய சமயம் ஒன்றை தோற்றுவிக்கின்றனர். ஆனாலும் இவர்கள் அனைவரும் பூமிக்கு கொணர்வது ஒரே சமயமாகிய இறைவனின் சமயத்தையே. உருவத்தில் சமயங்கள் வேறுபட்டாலும் சாரத்தில் அவையாவும் ஒன்றே. ஆயிரமாயிரம் கண்ணாடிகளை சூரியனின் முன் வைத்தாலும் அவையனைத்திலும் காணப்படுவது அந்த ஒரே சூரியனின் ஒளியே. சமயங்கள் அனைத்திலும் வெளிப்படுவது இறைவனின் உண்மையே.

பஹாய் புனித வாசகத்திலிருந்து:

 

"இந்த புனிதமான "கண்ணாடிகள்," இந்த பூர்வீக மகிமைகொண்ட ஒளி ஊற்றுகள் ஒவ்வொருவரும், இந்த விஸ்வம் முழுமைக்கும் கதிரவனாக விளங்குபவரை வெளிப்படுத்துபவர்கள், அவரது சாரம் மற்றும் இறுதி நோக்கமும் ஆவர். அவரிடம் இருந்தே இவர்கள் அறிவும் சக்தியும் அடைகின்றனர், அவரிடம் இருந்தே தமது செங்கோலைப் பெறுகின்றனர். அவர்கள் திவ்விய அறிவின் பொக்கிஷங்கள், தெய்வீக விவேகத்தின் வைப்பிடங்கள். அந்தமில்லாத ஓர் அருள் அவர்கள் வாயிலாகப் பாய்கின்றது மற்றும் மங்காத ஒளி அவர்கள் மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றது.
இந்த வரிசையயில் அவதரித்தவர்களே பின்வரும் கடவுளின் அவதாரங்கள் (வருடங்கள் அவர்கள் பிறந்த வருடங்களாகும்):

 

 

இவர்கள் அனைவரும் பூமியில் கடவுளின் அன்பினாலேயே தோன்றுகின்றனர் மற்றும் மனிதர்களை கடவுளின் அன்மைக்கு வழிகாட்டுவதே இவர்களின் நோக்கமாகவும் இருக்கின்றது. கடவுள் படைத்தவை யாவும் மனிதனின் ஆன்மீக பயிற்சிக்காவே படைக்கப்பட்டுளளன என பஹாய் புனித எழுத்துக்கள் அறிவிக்கின்றன ஆனால், கடவுள் மனிதனிடமிருந்து ஒன்றே ஒன்றை தவிர வேறு எதையுமே எதிர்ப்பார்க்கவில்லை. அந்த ஒன்று மனிதனின் உள்ளமாகும். மறை மொழிகள் நூலில் பின்வருமாறு காணலாம்:

 

உயிருருவின் புத்திரனே!

 

உனது உள்ளமே எனது இல்லம்; எனது வருகைக்காக அதனைப் புனிதப்படுத்துவாயாக. உனது ஆன்மாவே எனது வெளிப்படுத்துதலின் இடம்; எனது அவதரிப்புக்காக அதனைத் தூய்மைப்படுத்துவாயாக.

 

இந்த ஒன்றைத்தான் கடவுள் மனிதனிடமிருந்து எதிர்ப்பார்க்கின்றார். மனிதன் தன் உள்ளத்தை இறைவன்பால் திருப்பும்போது அவன் கடவுளின் பன்புகளைப் பிரதிபலிக்கின்றான். கடவுளின் பன்புகளைப் பிரதிபலிக்கும்போது அவன் தன் படைப்பின் குறிக்கோளை நிறைவேற்றுகின்றான்.
relsymbols