இல்லம்

இரான் நாட்டு பஹாய்களுக்கான உலக நீதி மன்ற செய்தி

 

23 ஜூன் 2009

 

இரான் நாட்டு பஹாய்களுக்கு

 

அன்புமிகு நண்பர்களே,

 

இரான் நாட்டில் தற்போது வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளால் சோகவயப்பட்ட இதயங்களுடன், அந்த நாட்டில் வசிக்கும் பஹாவுல்லாவின் உறுதிமிகு விசுவாசிகளான உங்களுக்கு நாங்கள் இக்கடிதத்தை எழுதுகின்றோம். நீண்டகாலமாகவே எங்களுக்கு பழுமிகு விஷயமாக இருந்த உங்களின் பாதுகாப்பு குறித்த எங்கள் கவலையோடு, தங்களின் இளமையின் உச்சத்திலுள்ளவர்களும், கண்டுகொள்ளப்படவேண்டுமென பேராவலுறும் பரந்தநிலை ஆற்றல்கள் கொண்ட, பல இலட்சக்கணக்கான இரான் நாட்டு ஆண்களும் பெண்களுமான பலரின் பாதுகாப்பு குறித்த அதிகரித்து வரும் அச்சமும் இப்பொழுது சேர்ந்துகொண்டுள்ளது. எத்துனை விரைவாகத்தான் மூடுதிரைகள் இரண்டாக கிழித்தெரியப்பட்டுள்ளன! வருடங்களாக நன்கு திட்டமிடப்பட்டு உங்கள்பாலும் பிறர்பாலும் விடுக்கப்பட்ட கொடுமைகள் இன்று உலகமே கண்ணுற இரான்நாட்டின் வீதிகளில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளின் முடிவு எதுவாக இருந்தபோதிலும், தனிநபர்கள் அல்லது பஹாய் ஸ்தாபனங்கள் கட்சிசார்ந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டிப்பாக அனுமதிக்காத நமது சமயத்தின் அடிப்படை கோட்பாடுகளை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்பீர்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கின்றோம். இருந்தபோதிலும், உங்கள் மக்களின் துன்பங்கள்பால் நீங்கள் விலகிநின்றும் உணர்வற்றும் இருக்கமுடியாது. உங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்கள், உங்கள் அண்டையர் மற்றும் பழக்கமானோர் வட்டங்களில், நம்பிக்கை மற்றும் பரிவு எனும் ஒளிகளை தேவைப்படுவோர் அனைவருக்கும் பிரகாசிக்கும் ஒளிக்கம்பங்களாக நீங்கள் வீற்றிருக்க பல பத்தாண்டுகளான துன்பங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் தயார் செய்துள்ளன. இரான் நாட்டின் எதிர்காலம் உறுதியான ஒளிமிகு வருங்காலத்தை உள்ளடக்கியது. அறிவொளி அறியாமை எனும் மேகங்களை உறுதியாகவே அகற்றிவிடும்; நீதி குறித்த மனவுறுதி நாடு தாழ்மைக்கு பலியாகமல் பாதுகாத்திடும்; இறுதியில் அன்பு வெறுப்பையும் பகைமையையும் வெண்றிடும்; எனும் உறுதியான மன உணர்வுகள் உங்கள் உள்ளங்களில் அழிந்துவிடாமல் பாதுகாத்து வாருங்கள். உங்கள் உதாரண வாழ்வின் மூலமாக கொடுங்கோன்மைக்கான சரியான மறுமொழி விதியே என அடங்கிப்போவதோ கொடுங்கோன்மையாளர்களின் வழியையே நீங்களும் பின்பற்றுவதோ அல்ல என்பதை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். கொடுங்கோன்மைக்குப் பலியானவர் தமது ஆன்மாவைக் கசப்புணர்வு மற்றும் வெறுப்புணர்வுகளிலிருந்து பாதுகாத்தும், சீரான, கோட்பாடுசார்ந்த நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தவும் கூடிய அகசக்தி ஒன்றின் மூலமாக அத்தகைய கொடுங்ககோன்மைகளிலிருந்து மீண்டுவரக்கூடும். அப்து’ல்-பஹாவின் பின்வரும் வார்த்தைகள் எதிரொலிக்கட்டுமாக: “இரான் நாடு தெய்வீகப் பிரகாசங்களின் குவிமையமாக மாறும். அதன் இருள்சூழ்ந்த மண் ஒளிமயமாகி அதன் நிலம் சுடரொளிவீசும்.” நீங்களும் உங்கள் சகநாட்டவர்களும் எங்கள் பிரார்த்தனைகளில் தொடர்ந்து நினைவுகூறப்படுகிறீர்கள்.

 

[கையொப்பம்: உலக நீதி மன்றம்]