இல்லம்

நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது – இது துணைபுரிகிறதென அறிவியல் நிரூபிக்கமுடியுமா?

 

1 அக்டோபர் 2008

 

ஸான் டியேகோ, ஐக்கிய அமெரிக்கா – சமீபத்தில் நடைபெற்ற வட அமெரிக்க பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் 32வது வருடாந்திர மாநாட்டின் பேச்சாளர்களில் ஒருவரான, டாக். தயீத் குட்டுஸி, “நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது நோய் நிவாரணத்திற்கு உதவுகின்றது” என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிப்பது சற்று சிறமமான முன்மொழியாகும் என்கிறார்.

 

பிரார்த்தனையால் நாம் ஏற்படுத்த விரும்பும் விளைவுகள் பற்றி ஏதும் அறியாத நிலையில், இது குறித்த முதல் பிரச்சினை, அது பற்றிய ஒரு பரிசோதனையை வடிவமைப்பதாகும்.

 

"பிரார்த்தனையின் நோக்கம் ஆயுள்காலத்தை நீட்டிப்பது மட்டுமா?" என அவர் மாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற ஒரு நேர்முகத்தின்போது வினவினார்.

 

அவர் பஹாய் போதனைகள் குறித்த தமது அறிவின் அடிப்படையில், அக்கேள்விக்கு பதிலளிக்க முனைந்தார். "இவ்வுலக வாழ்வின் நோக்கம் நீண்ட ஆயுள்காலம் மட்டுமல்ல. நமது வாழ்வின் நோக்கம் கடவுளை அறிந்துகொள்வது, அவரை வழிபடுவது மற்றும் அவருக்குச் சேவைபுரிவதாகும்."

 

ஒருவரின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதன் வாயிலாக அவருக்கு மேலும் அதிகமான கடுந்துன்பங்கள் ஏற்படுமாயின், அச்சூழ்நிலைகள் குறித்து என்ன செய்வது?" என அவர் வினவினார். அப்படியாயின், பிரார்த்தனையால் நாம் விரும்பும் விளைவுகள்தான் என்ன?

 

நாம் பிரார்த்திக்கும் போது அப்பிரார்த்தனையால் நாம் விரும்பக்கூடிய விளைவுகள் யாதென நமக்கே தெரியாத நிலையில், ஓர் அறிவியலாளர் ஒரு பிரார்த்தனை தேவையான விளைவை ஏற்படுத்தியதாவென எவ்வாறு தீர்மானிக்கக்கூடும்?

 

"உண்மையில் நாம் இங்கு எதை அளவிடுகின்றோம் என்பது நமக்கே தெரியாது," என டாக். குட்டுஸி கூறினார்.

 

"நலமடைதல் மற்றும் மறுதேர்ச்சியில் பிரார்த்தனையின் விளைவுகள்: "இதன் தொடர்பான எழுத்துக்களை மீளாய்வு செய்தல்," என்பதே சான் டியேகோவில் 1 செப்டம்பரில் முடிவுற்ற பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் நான்கு நாள் நிகழ்ச்சியில் அவரின் படைப்பாக இருந்தது.

 

கனடாவின் மனிடோபா பல்கலைகழகத்தில் otolaryngology எனப்படும் கண், காது, மூக்கு மற்றும் தலை தொடர்பான நோய்கள் குறித்த மூன்றாவது ஆண்டு ரெசிடன்ட் மருத்துவரான டாக். குட்டுஸி, பிரார்த்தனையின் விளைவுகள் குறித்த தமது ஆய்வு குழப்பமான முடிவுகளையே வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

 

ஆனால் "meta-analysis" எனப்படும் ஆய்வுமுடிவுகளை தொகுதி சேர்க்கும் முயற்சி அளவிடக்கூடிய எவ்வித பயன்விளைவையும் வெளிப்படுத்தவில்லை, என அவர் தெரிவித்தார்.

 

ஆகவே, பிரார்த்தனை எவ்வித விளைவையும் ஏற்படுத்தவில்லை எனப் பொருள்படுமா?

 

இல்லை, என்கிறார் அவர், ஏனெனில், எதை அளவிடுவது என்பதைத் தீர்மானிக்கும் பிரச்சினை போக, இவ்விஷயத்தைக் குழுப்பிவிடும் வேறு பல விஷயங்களும் உள்ளன – இவை அறிவியல் ரீதியான ஆய்வுக்குத் தங்களை உட்படுத்தும் தேவைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும். உதாரணமாக:

 

-- தீவிரமாகப் பிரார்த்திப்பது அவசியமாகின்றதா? அவ்வாறு இருப்பின், அத்தீவிரத்தை நாம் எவ்வாறு அளவிடக்கூடும்?

 

-- எத்தனை பேர்கள் பிரார்த்திக்கின்றனர் என்பது முக்கியமா?

 

-- நாம் யாருக்காகப் பிரார்த்திக்கின்றோமோ அந்நபர் அதற்குப் பாத்திரமானவர்தானா? தெய்வீக மன்னிப்பு இதில் என்ன பங்காற்றுகின்றது?

 

-- நோயின் தீவிரத்தை நாம் கருத்தில்கொள்ள வேண்டுமா?

 

-- இதில் சம்பந்தப்பட்ட மக்களின் சமய நம்பிக்கை, அல்லது அத்தகைய ஈடுபாடில்லாமை, பயன்விளைவைப் பாதிக்கின்றதா?

 

-- மக்கள் சதா யாருக்காவது பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர், மற்றும் கடவுளின் கருணை தொடர்ச்சியானது மற்றும் எல்லையற்றதாக இருக்கும் பொழுதினில், இந்த ஆய்வுக்குச் சீர்நிலையான அல்லது நிலைமாற்றம் உறாத (control) ஆய்வுக் குழுமம் ஒன்றை நாம் உண்மையில் கொண்டிருக்க முடியுமா?

 

தமது அளிக்கை நிகழ்வில், டாக் குட்டுஸ் பஹாய் எழுத்துக்களிலிருந்து பல குறிப்புக்களை எடுத்துக்காட்டினார். அவற்றின் வாயிலாகப் பிரார்த்தனை இன்றியமையாதது ஆனால் அதன் விளைவுகள் எப்போதுமே வெளிப்படையானவையல்ல என்பது எடுத்துக்காட்டப்பட்டது.

 

பிரார்த்தனைகள் குறித்த பஹாய் போதனைகள்

 

அவர் பஹாய் எழுத்தோவியங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன என்றார்: "உனது பிரார்த்தனை உன்னை நெருப்பிற்ககே வழிநடத்திச் சென்றாலும், அதே போன்று உனக்குச் சுவர்க்கமே பிரதிபலனாகக் கிடைத்தாலும் உனது வழிபாட்டில் எவ்வித மாறுபாடுமற்ற முறையில் நீ கடவுளைப் பிரார்த்திப்பாயாக."

 

கடவுளின் ஓர் அவதாரமென பஹாய்களால் கருதப்படும் பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, நோய்கண்ட காலங்களில் "திறமையான மருத்துவர்களை" நாடவேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்துகின்றார், அதே வேளை நோய் நிவாரணத்திற்கான பிராத்தனைகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

 

குணப்படுதலுக்கான சில பிரார்த்தனைகளை பஹாவுல்லாவின் மூத்தத் திருமகனாரும் அவரது போதனைகளுக்கான விளக்கவுரையாளருமான அப்து'ல்-பஹா அவர்கள்: "குணப்படுத்துதலுக்காக வெளியிடப்பட்டுள்ள பிரார்த்தனைகள் பெளதீக, ஆன்மீக நிலைகள் இரண்டிற்குமே பொருந்தும். ஆகவே, ஆன்மா, உடல் இரண்டுமே குணமடைய அவற்றை(பிரார்த்தனைகளை) கூறுங்கள். நோயாளிக்கு உடல்நலனே முறையானதெனும்போது அது நிச்சயமாக வழங்கப்படும்; ஆனால் சில நோயாளிகளுக்கு அந்த நோயிலிருந்து குணப்படுவது வேறு பல நோய்களுக்குத் தோற்றுவாயாக நேரிடும், ஆகவே அப்பிரார்த்தனைக்கான உறுதியான பதிலை விவேகம் அனுமதிக்கவில்லை."

 

டாக். குட்டுஸி அப்து'ல்-பஹாவின் பின்வரும் வாசகக் குறிப்பைப் படித்துக் காட்டுகின்றார்: "நீ வேண்டுவதை அவரிடம் மட்டுமே கேள்... ஒரே பார்வையில் அவர் ஓர் நூறாயிரம் நம்பிக்கைகளை வழங்கிடுவார், ஒரு தலையசைவில் அவர் காயம் ஒவ்வொன்றிற்கும் தைலமிடுவார்."

 

டாக். குட்டுஸி வாசித்த பின்வரும் பகுதியில் அப்து'ல்-பஹா பிரார்த்தனை மற்றும் குணப்படுதலை விசேஷமாகக் குறிப்பிடுகின்றார்: "நோய் என்பது இருவகைப்படும்: ஆன்மீகம் மற்றும் பெளதீகம். வெட்டுக்காயம் பட்ட ஒரு கையை எடுத்துக்கொள்ளுங்கள்; காயம் ஆற வேண்டுமென மட்டும் பிரார்த்தித்துவிட்டு இரத்தப்போக்கை கட்டுப்படுத்தாமல் இருப்பது எவ்வித நன்மையையும் விளைவிக்காது; பெளதீக ரீதியான குணப்பாடு தேவைப்படுகின்றது."

 

மேலும்: "பெளதீக விபத்துக்களால் ஏற்படும் நோய்கள் மருந்துகளால் குணப்படுத்தப்பட வேண்டும்; ஆன்மீகக் காரணங்களால் ஏற்படும் நோய்கள் ஆன்மீக ரீதியில் குணப்பாடு காணும்... இவ்விருவகையான வைத்தியமுறைகளும் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், அவை இரண்டும் ஒன்றுக்கொண்று எதிரானவையல்ல, மற்றும், தமது சேவகர்கள் அத்தகைய வைத்தியத்தாலும் பயனடைய வேண்டுமென மருத்துவ அறிவியலை வெளிப்படுத்தியுள்ளவரான, கடவுளின் கருணை மற்றும் சலுகைகளிலிருந்தே பெளதீக நிவாரணங்கள் தோன்றுகின்றனவென நீர் அவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்ளவேண்டும். நீர் ஆன்மீக வைத்தியமுறைகளுக்கும் சரிசமமான கவனம் செலுத்தவேண்டும், ஏனெனில் அவை வெகுசிறப்பான பயன்விளைவை ஏற்படுத்துகின்றன."

 

டாக். குட்டுஸ் அவர்களால் வாசிக்கப்பட்ட மற்றொரு குறிப்பில், அப்து'ல்-பஹா நோயுற்றோருக்கான பிரார்த்தனை குறிப்பாக எவ்வாறு செயல்படுகின்றது என்பதை விவரிக்கின்றார்:

 

" ஒரு வலுவான மனிதர் ஒரு நோயாளி ஆகியோருக்கிடையே ஓர் இணக்கமான தொடர்பு ஏற்படும் வகையில் தனது முழுநம்பிக்கைக் குவிப்புடன் ஒருவர் ஒரு வலுவான மனிதரின் ஆன்மீக ஆற்றலிலிருந்து குணப்பாடு விளையும் என ஒரு நோயாளி எதிர்ப்பார்க்கும்போது அந்த வலுவான மனதினர் நோயுற்றவரின்பால் செலுத்தும் முற்றான கூர்கவனத்தால் (ஆன்மீக குணப்பாடு) விளைகின்றது. அந்த வலுமிக்க மனிதர் அந்த நோயாளியை குணப்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார், பிறகு அந்த நோயாளி தாம் குணப்படுவோம் என்பதில் உறுதியடைகின்றார்...

 

"ஆனால் இவை யாவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே விளைவுகள் உண்டாக்குகின்றன, அதுவும் எல்லா வேளைகளிலும் அது நடைபெறுவதில்லை. ஏனெனில், ஒருவர் மிகவும் கொடுமையான நோயால் பாதிப்படைந்திருக்கும்போதோ, காயமுற்றிருக்கும்போதோ, இத்தகைய வழிமுறைகள் அந்நோயை அகற்றவோ அக்காயத்தை ஆற்றிடவோ முடியாது.

 

அறிவியல் ஆராய்ச்சி

 

பிரார்த்தனை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த அப்துல் பஹாவின் விளக்கத்தின் அடிப்படையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படுவதை தாம் வெகு ஆர்வத்துடன் காண விரும்புவதாக டாக். குட்டுஸி கூறினார். இருந்தபோதும், சாத்தியமே இல்லாத அச்சூழ்நிலையில் அத்தகைய ஆராய்ச்சி ஒன்றை வடிவமைக்க முடிந்தாலும் (“ஆன்மீக ரீதியில் ‘வெகு வலுவானவர்’ ஒருவரை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது?” என அவர் வினவினார்,) பிரார்த்தனைகள் “ஒரு குறிப்பிட்ட அளவே விளைவுகள் ஏற்படுத்தும், அதுவும் அது எல்லா வேளைகளிலும் நடைபெறப்போவதும் இல்லை,” எனும் அப்துல் பஹாவில் கூற்றின் அடிப்படையில் நாம் எதையுமே நிரூபிப்பது சாத்தியப்படாது.

 

குணப்படுத்தும் பிரார்த்தனைகளின் ஆக்கவிளைவுகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி அப்து'ல்-பஹா விவரித்துள்ள அச்சூழ்நிலைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளிலேயே நடந்துள்ளது.

 

உதாரணமாக, சில ஆய்வுகளில், இருதய சிகிச்சை குறித்த ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இருதய கண்கானிப்புப் பிரிவில் உள்ள நோயாளிகள் ஆபரேஷனுக்குப் பிறகு எவ்வாறு தேறி வருகின்றனர் என்பதை சில ஆய்வுகளின் வாயிலாக ஆராயப்பட்டது. ஒவ்வொரு ஆய்விலும் நோயாளிகள் ரேண்டம் முறையில் பாதி பாதியாக பிரிக்கப்பட்டனர். அவற்றில் பாதி பேர்களுக்கு அந்த நோயாளிகளுக்கே தெரியாத சிலரைக் கொண்டு அவர்கள் குணமடைய பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. தங்களுக்கு ஒருவர் இவ்வாறு பிரார்த்தித்துள்ளார் என்பது அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

 

பொதுவாக, அளவிடப்படக்கூடிய எவ்வித விளைவும் அங்கு காணப்படவில்லை எனவும், வழங்கப்பட்ட சூழ்நிலையை கவனத்தில் கொள்ளும் போது அம்முடிவுகள் தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும் டாக். குட்டுஸி கூறினார்.

 

தமது அளிக்கையின் போது, திடீரென டாக். குட்டுஸி, மனிதர்கள் தங்கள் சொந்த விருப்பங்களை வெளியிடுவதனால் கடவுள் தாம் விரும்பும் குறிக்கோளிலிருந்து அப்பால் விலகுவாறா என வினவினார்.

 

அவர் டாக். எட்வர்ட் சி. ஹால்பெரின் எனும் டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவரின் ஆய்வை எடுத்துக்காட்டினார். ஒரு மருத்துவரீதியான ஆய்வில், முன்பின் அறியாதாரால் பிரார்த்திக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டோரைக் காட்டிலும் எவ்வித பிரார்த்தனைக்கும் உட்படுத்தப்படாதோரை குணப்படுத்தும், தன்விருப்பமாக குணப்படுத்தும் ஒரு கடவுள் குறித்த கருத்தை ஏற்றுக்கொள்வது ஒருவருக்கு சற்ற சிரமாகவே இருக்கும். கடவுள் இவ்வாறாக முறண்பாடானவர் என கருதப்படக்கூடாது.”

 

டாக். குட்டுஸி தமது முடிவுரையில் பிரார்த்தனை குறித்த இவ்விதமான ஆராய்ச்சி சிலர் கூறுவது போல் கடவுள் நிந்தனையென தாம் கருதவில்லையென கூறினார்.

 

ஆனால் அறிவியல் நோய் நிவாரணத்திற்கு ஏதுவாக பிரார்த்தனையின் பயனுறுதியை அதன் அடிப்படையிலான ஆய்வின் போது வெளிப்படுத்தக்கூடுமாவென அவர் சந்தேகம் தெரிவித்தார்.

 

இது முக்கியமா எனும் கேள்விக்கு, அவர் அது முக்கியமல்லவென கூறினார். இருந்த போதும் அதை நிரூபிப்பது ஆர்வமளிப்பதாகவே இருக்கும் என்றார்.