'பா'ப்

ஒரு சுருக்க வரலாறு

இல்லம்

பத்தொன்பதாம் நூற்றாண்டு உலக வரலாற்றிலேயே மிகவும் தனிச்சிறப்பு மிக்க நூற்றாண்டாகும். சமய, சமூக, தொழில்துறை மற்றும் அறிவியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய காலம் அது. இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் சமய ரீதியில் ஆங்காங்கே ஏற்பட்ட எழுச்சியின் சிகரங்களாக சில தனிமனிதர்கள் இருந்தனர். அவ்வாறான ஒருவராக சையிட் காசிம் என்பார் பாரசீகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். விரைவில் கடவுளின் அவதாரமாக ஒருவர் எழுந்தருளுவார் எனவும் அதற்காக மக்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்வது அவசியம் எனவும் அவர் போதித்தார். அதே பத்தொன்பதாம் நூற்றாண்டில், குறிப்பாக 1844ல் மே மாதம் 23ம் தேதி உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அவதாரம் தாமே என சைய்யிட் அலி முகமது என்பவர் அறிவித்தார். 'பா'ப் அல்லது சைய்யிட் அலி முகம்மது அவர்கள் தமக்குப் பின் வரப்போகும் ஒரு மாபெரும் கடவுள் அவதாரத்திற்கான "வாசலாக" இருப்பதே தமது வருகையின் நோக்கம் என்றார்.

 

'பா'ப் அவர்கள் 1819ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே தமது தந்தையை இழந்த அவர் தமது மாமாவின் பாதுகாப்பில் வளர்ந்தார். சுமார் ஐந்து வயதில் பள்ளிக்கு அனுப்பப்பட்ட அவர் இவ்வுலகக் கல்விகளுக்கு அப்பாற்பட்டவராகத் திகழ்ந்தார். வயதுக்கு மீறிய அறிவாற்றல் பொருந்திய அவர் மேற்கொண்டு பள்ளி செல்லவும் விரும்பவில்லை.

சுமார் 18 வயதிருக்கும் போது அவர் தமது மாமன்களுடைய வியாபாரத்திற்குத் துணை செய்ய புஷீர் என்ப்படும் துறைமுக பட்டனத்திற்குச் சென்றார். வியாபாரத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நேர்மைத்தன்மை மிக்க வணிகராக செயல்பட்டார்.. காலம் செல்லச் செல்ல வியாபாரத்திலும் நாட்டம் குறைந்து கர்பிலா எனும் புனித நகருக்குத் தாம் பயணம் மேற்கொள்ள விரும்புவதாக தமது மாமன்களிடம் தெரிவித்தார். அதே போன்று தமக்கு சுமார் 22 வயதிருக்கும் போது அவர் தமது வணிக காரியங்களை ஒழுங்குபடுத்திவிட்டு கர்பிலாவுக்குப் புனிதப்பயணம் மேற்கொண்டார்.

 

கர்பிலாவில் வதியும் காலத்தில் 'பா'ப் அவர்களின் தாயார் தமது மகனை நீண்ட காலம் காணாத வருத்தத்தில் அவரை ஷிராஸ் நகருக்கு திரும்பிவரும்படி அழைத்தார். அவ்வாறே 'பா'ப் அவர்களும் தமது இல்லம் திரும்பி சில காலம் தமது தாயாரோடு வசித்தார். அக்காலத்தில் அவரது தாயார் அவருக்கும் அவருடைய உறவுப் பெண் ஒருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இத்திருமணத்தின் வாயிலாக அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். ஆனால் அக்குழந்தை நீண்ட காலம் உயிர் வாழவில்லை.

 

1844ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி சையிட் காசிமின் சீடர்களில் ஒருவரான முல்லா உசேன் என்பவர் வாக்களிக்கப்பட்ட அவதாரத்தைத் தேடும் பணியில் ஷிராஸ் நகர் வந்தடைந்தார். ஷிராஸ் நகரத்தின் தலைவாசலை நெருங்கிய போது தன்னை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவர்போல் ஓர் இளைஞர் அவ்வாசலருகே நிற்கக் கண்டார். அவ்விளைஞர் முல்லா உசேனை தம்மோடு வருமாறு பணித்து தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். விருந்தோம்பல்களுக்குப் பிறகு அவ்விளைஞர் முல்லா உசேனைப் பார்த்து, சையிட் காசிமுக்குப்பிறகு நீங்கள் உங்கள் தலைவராக யாரை நினைத்திருக்கிறீர்கள் என வினவினார். அதற்கு முல்லா உசேன், சையிட் காசிம் அவர்கள் இவ்வுலகில் விரைவில் தோன்றவிருக்கும் அவதாரத்தை தேடிச் செல்லும்படி எங்களைப் பணித்திருக்கின்றார் என்றார். பிறகு, நீங்கள் தேடும் அந்த அவதாரத்தின் தனிச்சிறப்புக்களை எடுத்துரைத்திருக்கின்றாரா என அந்த இளைஞர் வினவினார். அதற்கு முல்லா உசேன் தோன்றவிருக்கும் அவதாரத்தின் தனிச் சிறப்புக்கள் மற்றும் அங்க அடையாளங்கள் போன்றவற்றை கூறினார். அதைச் செவிமடுத்த அந்த இளைஞர், சற்று தாமதித்த பிறகு, "இந்த அடையாளங்கள் யாவும் எம்மில் வெளிப்படக் காண்பீர்," என அதிர வைக்கும் குரலில் பிரகடணஞ் செய்தார். தாமே 'பா'ப் எனப்படும் கடவுளின் வாசல் எனவும், முல்லா உசேனுடன் சேர்த்து பதினெட்டு பேர்கள் தம்மை தன்னிச்சையாக கண்டுகொள்ளவேண்டும் எனவும் கூறினார்.

 

இவ் வெளிப்பாடு 1844ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி மாலை சூரியன் அஸ்தமித்து சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு நடந்தது. இதன் பிறகு 'பா'ப் அவர்கள் தமது வெளிப்பாட்டைப் பிரகடணம் செய்யும் நோக்கில் மெக்கா மற்றும் மதினாவுக்குப் பயனமானார். 'பா'ப் அவர்களுடைய முதல் பதினெட்டு சீடர்களில் இறுதியாக வந்தடைந்தவரும் அவரது சீடர்களிலேயே தலையாய சீடராகவும் விளங்கிய குட்டுஸ் என்பவர் ஷிராஸ் நகரில் 'பா'ப் அவர்களின் போதனைகளைப் பிரகடணப்படுத்தத் துவங்கினார். ஆனால் விரைவில் எதிர்ப்பும் கிளம்பியது. ஷிராஸ் மாநில ஆளுனராக விளங்கியவர் 'பா'ப்'யிக்களை துன்புறுத்த ஆரம்பித்தார். ஆயிரக்கணக்கானோர் 'பா'ப் அவர்களைச் சாரவாரம்பித்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க 'பா'ப் அவர்களை கைது செய்யும்படி அந்த ஆளுனர் ஆணை பிறப்பித்தார்.

 

மெக்கா நகரிலிருந்து தாயகம் திரும்பிக்கொண்டிருந்த 'பா'ப் அவர்களை புஷீருக்கும் ஷிராஸ் நகருக்கும் இடையில் கைது செய்து வீட்டுச் சிறையில் அந்த ஆளுனர் வைத்தார். ஆனால் 'பா'ப் அவர்களின் புகழ் வெகுவாகப் பரவியிருந்தது. இதன் விளைவாக 'பா'ப் அவர்கள் ஷிராஸ் நகரைவிட்டு வெளியேற்றப்பட்டு இஸ்பஃஹான் எனும் மாநிலத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார். அந்த மாநில ஆளுனர் சிறிது நாட்களில் 'பா'ப் அவர்களை கடவுளின் அவதாரம் எனக் கண்டுகொண்டு ஏற்றும் கொண்டார். ஆனால், இங்கும் 'பா'ப் அவர்கள் நெடுங்காலம் இருக்கமுடியவில்லை.

 

இஸ்பாஃஹானிலிருந்து 'பா'ப் அவர்களை தெஹரானுக்கு இரான் நாட்டு மன்னரின் முன்னிலைக்கு அழைத்து வரும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 'பா'ப் அவர்கள் மன்னரைச் சந்தித்தால் தனது நிலைக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்த இரான் நாட்டு பிரதம மந்திரி அச் சந்திப்பைத் தடுத்து பாப் அவர்களை மாஹ்-கு எனப்படும் மலைச்சிறைக்கும் பிறகு சிஃரிக் எனப்படும் சிறைக்கும் கொண்டுசெல்லப்பட்டார். இறுதியில் 'பா'ப் அவர்களால் தங்கள் நிலைக்கு என்றுமே பேராபத்து என நினைத்த பிரதம மந்திரியும் மதத் தலைவர்களும் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரே வழி 'பா'ப் அவர்களை ஒழிப்பதே ஆகும் என முடிவெடுத்தனர். சிறையிலிருந்து 'பா'ப் அவர்கள் தப்ரீஸ் எனப்படும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டும் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டும் பிறகு மரண தண்டனையும் விதிக்கப்பட்டார்.

 

1850ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி நடுப்பகல் வேளை பாப் அவர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அன்று காலை 'பா'ப் அவர்கள் தமது செயலாளருடன் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்த போது சிப்பாய்கள் அங்கு வந்து தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு கொண்டு செல்ல முனைந்தனர். ஆனால் 'பா'ப் அவர்கள் தாம் தமது வேலையை முடிக்கும் வரை உலக சக்திகள் எதுவுமே தம்மைத் தடுக்க முடியாது எனக் கூறினார். இருந்தும் சிப்பாய்கள் கொலைசெய்யப்படும் இடத்துக்கு அவரை அழைத்துசென்றனர். மூன்று பிரிவுகளான 750 சிப்பாய்கள் அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அச்சிப்பாய்களின் தலைவன் 'பா'ப் அவர்களின் நன்நடத்தையினால் மிகவும் மனம் குழும்பியவராய் அவரிடம் சென்று மிகவும் பயபக்தியுடன் தான் கிருஸ்துவ சமயத்தைச் சார்ந்தவர் எனவும் 'பா'ப் அவர்களை கொல்லும் நோக்கம் தனக்கில்லை, அவரது சமயம் உண்மையானால் தம்மை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என அவர் முறையிட்டார். அதற்கு 'பா'ப் அவர்கள் அத் தலைவனின் நோக்கம் உண்மையானால் இறைவனே அவரை அந்த இக்கட்டிலிருந்து விடுவிப்பார் எனக் கூறியனுப்பினார். பிறகு 'பா'ப் அவர்களும் அவருடைய சீடர் ஒருவரும் கயிற்றால் பிணைக்கப்பட்டு ஒரு மதில் சுவற்றில் தொங்கவிடப்பட்டனர். படைப் பிரிவுகள் மூன்றும் ஒன்று மாற்றி ஒன்று சுட்டன. ஆனால் புகை மூட்டம் மறைந்த பிறகு அங்கு 'பா'ப் அவர்களைக் காணவில்லை. கயிறு துளைக்கப்பட்டிருந்தது ஆனால் அங்கு யாரும் இறந்ததற்கான அடையாளமில்லை. சிப்பாய்கள் உடனடியாக 'பா'ப் அவர்களைத் தேடினர். அவரோ தமது அறையில் தமது செயலாளரிடம் தாம் கூற நினைத்தவற்றை கூறி முடித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். இம்முறை சேம் கான் எனப்படும் அந்த படைத்தலைவன் தன் படையை கூட்டிக்கொண்டு இப்பாவ காரியத்தில் தான் ஈடுபடப்போவதில்லை என அறிவித்துவிட்டு அவ்விடத்தை விட்டகன்றார். பிறகு வேறொரு படை கொண்டு வரப்பட்டு 'பா'ப் அவர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 

அவருடைய உடல் நகரத்திற்கு வெளியே இருந்து ஒரு மதகில் எறியப்பட்டது. 'பா'ப் அவர்களின் சீடர்கள் சிலரால் இரவில் உடல் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பல இடங்களில் சுமார் 60 வருட காலம் மறைத்துவைக்கப்பட்டு இறுதியில் இஸ்ரேலில் கார்மல் மலைமீது இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கார்மல் மலை மீது அமைக்கப்பட்டுள்ள 'பா'ப் அவர்களின் நினைவாலயம்

 

இரவில் பாப் அவர்களின் நினைவாலயம்

 

நினைவாலயத்தின் சிற்ப வேலைப்பாடு

 

இரவில் நினைவாலயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள தலப்படிகள் ஒளியூட்டப்பட்டுள்ள காட்சி

'பா'ப் அவர்கள் முல்லா உசேனுக்கு தம்மை கடவுளின் அவதாரம் என அறிவித்த அறையின் ஒரு பகுதி

'பா'ப் அவர்களின் வீட்டின் வெளிப்புறம்

 

மாஹ்-கூ சிறைச்சாலை (அன்று)