சேவை

திரு அலி நாக்ஜவானி

 

 

இல்லம்

சேவை (Service)

 

“சேவை”- பஹாய் புனிதத் திருவாசகங்களில் நாம் அடிக்கடிக் காணக்கூடிய ஒரு சொல் இந்த ‘சேவை’ அல்லது ‘தொண்டு’ எனப்படுவது. இறைவனுடனான உறவை, எல்லா தெய்வ அவதாரங்ளும் சேவகத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொண்டுள்ளனர் என பஹாவுல்லா, கித்தாப்-இ-இகான் நூலில் குறிப்பிட்டுள்ளார். சேவைக்குப் பல வழிகள் உண்டு. அதற்குப் பல அம்சங்களும் உண்டு. சேவைக்கு ‘(உற்சாக)ஆவியும்’ உண்டு. உணர்வாக இருந்து, பின் செயல் பெறும் போது, சேவை, உருவம் அடைகின்றது. தொடரும் நமது உரையாடலினூடே (உற்சாக)ஆவி செயலைவிட முக்கியமா அல்லது (உற்சாக)ஆவியைவிட செயல் முக்கியமா என்பது பற்றி நாம் ஒரு முடிவிற்கு வரலாம்.


சேவை பல ரீதிகளில் வெளிப்படுத்தப்படலாம்: இறை சேவை, இறைச்சமய சேவை, இறையன்பர்களுக்குச் சேவை, பெற்றோர்களுக்குச் சேவை, சொந்தக் குடும்பத்திற்குச் சேவை, தன்னைச் சுற்றியுள்ளவருக்குச் சேவை, தேசத்திற்குச் சேவை, சமூகத்திற்குச் சேவை, நற்பணிகள் அல்லது சொந்த உத்தியோகம் மற்றும் தொழில் மூலம் சேவை செய்தல் எனக் கூறிக்கொண்டே போகலாம்.


இந்த சொற்பொழிவு ஐந்து தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலில், அப்துல் பஹா அவர்கள், அதாவது ‘பஹாவின் சேவகர்’. அவரைப் பற்றி சுறுக்கமாக உரையாடுவோம். அதன் பின் எல்லோருமாக அப்துல் பஹா அவர்களின் உதாரணத்தை உண்மையில் பின்பற்ற வேண்டுகின்றோமா அல்லவா என பரிசீலனை செய்யலாம். அதன் பின் நம் உள் வீற்றிருக்கும் இயல் திறன்களைப் பற்றி ஆலோசிக்கலாம். இது பஹாய் சேவையின் பிற அங்கங்களுக்கு இட்டுச் செல்லும். அதன் பிறகு நாம் அப்துல் பஹா அவர்களின் நேர்வு நிருபங்களின் பல பகுதிகளைப் படித்து, அவற்றைப் பற்றி கலந்துரையாடலாம்.


“அப்துல் பஹா” இப்பெயரை தமக்குத் தாமே சூட்டிக் கொண்டார். பஹாவுல்லா இப்பெயரை அவருக்கு வழங்கவில்லை. இதன் காரணம், அப்துல் பஹாவின் சேவை அடிப்படையிலான, உன்னத ஸ்தானத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இருந்திருக்கலாம். அப்துல் பஹா தமது சேவகத்தைப் பற்றி கூறுகையில், அது ‘முழுமைபெற்றது, ‘பவித்திரமானது’, ‘மெய்யானது’, ‘உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது’, ‘என்றும் நிலைத்திருக்கக்கூடியது’ மற்றும் ‘வெளிப்படையானது’ என்று அவரே தமது திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார். ‘மெய்யானது’ மற்றும் ‘வெளிப்படையானது’ எனும் வார்த்தைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கவும். அதாவது, இச்சேவகம் அகமும் புறமும் கொண்டது என பொருள்படக் காணலாம். அதாவது அப்துல் பஹா அவர்களின் அக மற்றும் புற மெய்நிலைகள், சேவகத்தையே வெளிப்படுத்தின. ஆனால், பஹாவுல்லா, அப்துல் பஹாவைப் பற்றி குறிப்பிடுகையில், அவரை, “இறைவனின் திருமர்மம்”, “மனிதகுல முழுமைக்குமான அடைக்கலம்...” “மனிதர்கள் யாவருக்கும் அருள் வழங்கும் சமுத்திரம்”, “மானிடர்களுக்கு தயை சுரக்கும் ஒளி ஊற்று”, “இறைவனை நம்பியோர் பற்றிக் கொள்ள ஒரு கொம்பு......” என்றும், “அவர் குரலுக்கு (அப்துல் பஹாவின்) செவிசாய்க்கும் பாக்கியம் பெற்ற காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஒரு மடங்கு அல்ல இரு மடங்கு ஆசீர்வதிக்கப் பெற்றவை,” என்றும் பஹாவுல்லா கூறுகின்றார். பாதுகாவலர் ஷோகி எ•பெண்டி தமது நூல்களில், “...பஹாவுல்லாவின் ஒளியைப் பிரதிபலிக்கும் கறைகளற்ற கண்ணாடி” எனவும், அவர் போதனைகளை பிரதிபலிக்கும் குறைகளற்ற உதாரண புருஷர் எனவும் குறிப்பிடுகின்றார். பயங்கர மிரட்டல்கள், ஓழிவில்லா கொடுமைப் புயல்கள் மற்றும் அவமானத்தின் கொடூரங்களினூடே, ஒரு நூழிழை அளவு கூட பஹாவுல்லா திருவெளிப்படுத்திய கோட்பாடுகளில் இருந்து பிரழாமல் இருந்த நமது நேசத்திற்குறிய அப்துல் பஹா அவர்களின் உதாரணத்தை, நமது தனிப்பட்ட நடத்தை மற்றும் பொது வாழ்க்கையில், விடாமுயற்சியுடன் பிரதிபலித்தால் மட்டுமே, நாம் நமது திருச்சமயத்திற்கு உகந்தவர்கள் என்பதை நிரூபிக்க முடியும். இங்கு ‘மட்டுமே’ எனும் வார்த்தையை கவனிக்கவும். அவர் தமது வாழ்க்கையின் இறுதி வரை கடைபிடிக்கவெனத் தேர்ந்தெடுத்த சேவை மற்றும் பவித்திரத்தின் பாதை இவ்வாறே அமைந்திருந்தது. விண்ணிலிருந்து, அவர் நம்மை எப்பொழுதும் பார்த்த வண்ணம், “என்னைப் பார், என்னைப் பின்தொடர், என்னைப் போலவே இரு” எனும் ஐக்கிய அமரிக்காவில் முன்பு உச்சரித்த, அதே வார்த்தைகளை மறுபடியும் மறுபடியும் கூறுவது போன்று உணரமுடிகிறதல்லவா?


இவ்விதப் பிண்ணனியில், இந்த வார்த்தைகளை சிரமேற்கொள்ளும் பொருட்டு நாம் சிந்திக்காமல் இருக்கமுடியுமா? நிச்சயமாக நாம் சிந்திக்கவேண்டும். அப்துல் பஹா அவர்களைப் பின்பற்றி நடக்க நாம் பெரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்பதே எதிர்பார்ப்பு. இது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த இலக்கை ஒரு வேலை நாம் அடைய முடியாது போகலாம், ஏனெனில் அவர், குறைகளற்ற உதாரண புருஷர், நாம் அவ்விதமில்லை. உங்களைப்போலும் என்னைப்போலும் அவர் குறைகள் அற்றவர், எனக் கூற இடமில்லை. இது இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயம். அப்துல் பஹா அவர்களிடம் மட்டுமே ‘குறைகளற்ற’ நிலை இருந்தது. நாம் என்றுமே அந்த நிலையை அடையமுடியாது. இருந்தபோதும் அந்நிலையை அடைய, அந்த உதாரணத்துவத்தின் அருகாமையை நாள்தோரும் நெருங்கியவாறு இருக்க, முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். இக்கடமையை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இது, ஒரு அவா அல்ல. இதை ஒரு சிறந்த கோட்பாடாகவோ, ஒரு தத்துவமாகவோ மட்டும் கொள்ளக்கூடாது. நம்மை நாமே வளைத்துக் கேட்க வேண்டிய கேள்வி, “தினமும் அப்துல் பஹா அவர்களின் உதாரணத்தை பின்பற்ற நான் முயற்சிகள் மேற்கொள்கின்றேனா?” என்பதே.


இவ்வுலகில் இரு விதமான பஹாய்கள் உள்ளனர் என பாதுகாவலர் அவர்கள் கூறுகின்றார். ஒரு சாரார், தங்கள் மதம் பஹாய் மதம் எனக் கூறிக்கொள்வோரும், மறு சாரார் தங்கள் வாழ்வு பஹாய் மதத்திற்கே அர்ப்பணம் என்போரும் ஆவர். தம்முடைய ஒரு கடிதத்தில், “சில பஹாய்கள், இச்சமயத்தின் சம்பந்தப்படாத ரசிகர்கள்” எனவும், “வேறு சிலர் இச்சமயத்தின் மும்முறமான ஊழியர்கள்” எனவும், அவர் குறிப்பிடுகின்றார். ஒரு பஹாய் எனும் முறையில், பஹாவுல்லா அறிவுறுத்துவது போல், நான் தனிமையில் இது பற்றி கண்டிப்பாக சிந்தனை செய்தும் தியானம் செய்யவும் வேண்டும். “நான் எப்படி இருக்க விரும்புகிறேன், என் வாழ்க்கையை எப்படி செலவிட விரும்புகின்றேன்”, என்று என்னையே நான் கேட்டுக் கொள்ளவேண்டும். கித்தாப்-இ-இகான் நூலில், பஹாவுல்லா, “ஒரு மணி நேர சிந்தனைப் பிரதிபலிப்புகள், எழுபது வருட பக்திமயமான வழிபாட்டிற்குச் சமம்,” எனக் கூறுகின்றார். ஒரு மணி நேரம்தான், ஆனால் தனிமையில் இருக்கவேண்டும். சிந்தனை செய்து மேற்குறிப்பிட்டுள்ளவை பற்றிய கேள்விகளை, அடிப்படைக் கேள்விகளை நான் என்னையே கேட்டுக் கொள்ளவேண்டும். “இவ்வுலகம் ஒரு நாடக அரங்கம்; அல்பமானதும் சூன்யமானதும், இல்லாத மெய்மையை பரைசாற்றும் எதுவும் அற்ற ஒன்றாகவும் உள்ளது.” “அதனில் பிரியம் வைக்காதீர்கள்.” மறைமொழிகளில், பஹாவுல்லா, இறைவன் இந்த விரைந்தோடும், கண்ணைப் பறிக்கும், பளபளப்பு மிகுந்ததும் கவர்ச்சி நிறைந்ததுமான உலகைப் படைத்து, மெய்யுலகான உண்மை உலகினை, ஆத்யாத்மீகத்தின் இருப்பிடத்தினை ஏன் மறைத்தான் என்பதை சிந்திக்கச் சொல்கிறார். முன்னதை (இவ்வுலகை) தினமும் கண்முன் வைத்து, பின்னதை (அவ்வுலகை) கண்களுக்கு அப்பால் வைத்தும் ஏன் விளையாடுகிறார்? இதைப்பற்றி நம்மைச் சிந்திக்கச் சொல்கின்றார். இறைவன் ஏன் இவ்விதம் செய்துள்ளார் என்று?
மறுபடியும், மறைமொழிகளை படிக்குங்கால், இறைவனிடமிருந்தோ அல்லது நம் சக மனிதப்பிரவிகளிடமிருந்தோ நாம் மறைப்பனவற்றை, உண்மையில் இறைவன் காண்கின்றாரா இல்லையா என்பதுபற்றி தம்முடைய நம்பிக்கையாளர்களை சிந்திக்கச் சொல்கின்றார். இறைவன் கவணிக்கின்றாரா? பதில் மிகவும் தெளிவானது. நிச்சயமாக கவனிக்கின்றார். அவர் கவனமிக்க, சதா பார்த்துக்கொண்டிருக்கும் இறைவன். அவர் பார்ப்பது மட்டும் அல்ல, யாவற்றையும் அவர் பதிவு செய்கின்றார் என பஹாவுல்லா கூறுகின்றார். மறைமொழிகளில், நம் செய்கைகள் யாவும் பதிவு செய்யப்படுகின்றன என குறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமா, இறைவன் சந்நிதியில், அவர் திருமுன் நிற்கும் போது, நம் மொத்தச் செய்கைகளுக்கும் காரணம் தெரிவிக்க வேண்டும். இதுவும் மறைமொழிகளில் காணக் கிடைக்கிறது. “தினசரி உன் செய்கைகளை கணக்கிட்டுக் கொள்க”வென, அவர் பகர்கின்றார்.

 

பஹாய் உலகத்தின் அங்கத்தினர்களாகிய நம் ஒவ்வொருவருக்குள்ளும், மறைமுகமான இயற் திறன்கள் மற்றும் சக்திகள் உள்ளன என்பதை நிச்சயித்துக் கொள்ளவேண்டும். நம் வாழ்வின் நோக்கமே, நன்பர்களே, இவ்வியற் திறன்கள் வெளிப்படுத்தப்பட்டு, அபிவிருத்தியாக வேண்டும் என்பதே. அதுவே நம் வாழ்வின் நோக்கம். மனிதர்களாகிய நமக்கு, நம் உள் உறையும் இவ்வியற் திறன்கள் வெளிப்படுத்தப்பட்டு, அபிவிருத்தியாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, உதவ, இறைத் தூதர்கள், வந்துள்ளனர். நம் ஒவ்வொருவர் உள்ளும் இருக்கும் இயற் திறன்கள் ஒறே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொன்றும், வேறுபட்டது. ஆனால், நோக்கம் எல்லாம் ஒன்றே. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட வலிமைகளின் அடிப்படையிலேயே, நம் உள் வீற்றிருக்கும் திறமைகளை, ஒரு விதை எப்படி சிரமப்பட்டு, தன்னுள் இருக்கும் மரத்தை வெளிக்கொணருகிறதோ, அதேபோல் நாமும் வெளிக்கொணர வேண்டும்.


“ஒவ்வொரு மனிதனும், இயல்திற முறையில் தன்னுடை உள்மெய்நிலைக்கு அளிக்கப்பட்டுள்ள சக்திகள் எல்லாவற்றையும் அவன் வெளிப்படுத்தக்கூடிய அந்த நிலையை அடையும்வரை, தொடர்ந்து முன்னேறியும், வளர்ந்தும் வருவான்” என பஹாவுல்லா கூறுகிறார். (இதில் ‘யாவற்றையும்’ எனும் வார்த்தையை கவனியுங்கள், ஒன்றோ இரண்டோ அல்ல.) இது பஹாவுல்லாவின் திருவாசகத் தொகுப்பான “சில பொறுக்குமணிகள்” எனும் நூலில் காணப்படுவது. அப்துல் பஹா அவர்களும், “...நம்மைப் படைத்த தயை மிகுந்த ஆண்டவர், எப்படி ஒரு முளையும் விதையில் இருந்து மரம் வெளிப்படுகின்றதோ, அதேபோல்... மனித மெய்நிலையினுள் சில உள்ளுரைந்த, வெளிப்பட உள்ளவையான இயல்திறமுறையிலான பன்புகளை வைத்துள்ளார்.” மறுபடியும் ‘முளையும் விதை’ உவமானத்தை நாம் காண்கின்றோம்.” கடவுள் தமது அன்பை மனிதன் பால் வெளிக்காட்டவே அவனை படைத்துள்ளார்” என நாம் புனித வாசகங்களின் மூலம் அறிகின்றோம். “உன் படைப்பினை யாம் விரும்பினோம், ஆகவே உன்னைப் படைத்தோம்”. மனிதனைத் தாம் படைத்ததன் காரணம், அவன் மேல் தாம் கொண்ட அன்பே என பஹாவுல்லா கூறுகின்றார். சரி, அவர் நம்மைப் படைத்தார், நம்மிடம் என்ன எதிர்ப்பார்கின்றார்? ஆம், அவர் எதிர்பார்ப்பதும் அன்பைத்தான். இதுவே எழுத்தால் வடிக்கப்பட்டுள்ள திருவொப்பந்தம். “எம்மிடம் அன்பு கொள்வாயாக அதனால் யாம் உன்னிடத்தில் அன்பு காட்ட இயலும்.” இது ஒரு ஒப்பந்தம். இது இரு சாரருக்கும் பொருந்தும். “நீ எம்மிடம் அன்பு காட்டாவிடில் எமது அன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது.” “உன் படைப்பினை விரும்பினோம், உன்னைப் படைத்தோம், நீ எம்மை நேசிப்பாயாக, அதனால் யாம் உன் நாமத்தை உணக்குச் சூட்டி உனது ஆன்மாவையும் எமது உயிர் ஆவியினால் நிரப்பக்கூடும்.” ஏன்? “அதனால் யாம் உன் நாமத்தை உனக்குச் சூட்டி, உன் ஆன்மாவை எமது உயிர் ஆவியினால் நிரப்பக்கூடும்” இதனால்தான்! நான் இறைவனை விரும்பாவிட்டால், அவர் அன்பு என்னை வந்தடைவது மட்டும் இல்லாமல், நான் என்னுடைய பிறவி நோக்கத்தையே நிறைவேற்றியவன் ஆகமாட்டேன். மேலும் நான் பிறவி எடுத்ததன் நோக்கம், வளர்வதற்கே! நான் ஒரு விதையைப்போன்றவன். நான் வளரவேண்டும். நான் வளர்வதற்கென்றே பிறந்தவன். விதை உண்டானதின் நோக்கமே, வளர்வதற்குத்தானே! ஒரு விதை படைக்கப்பட்டது, என்றென்றும் ஒரு தானியக் கிடங்கில் கிடப்பதற்கோ அல்லது ஏதோ ஒரு பழம் பொருள் நிறைந்த புதையலில் கிடப்பதற்கோ அல்லவே! அது படைக்கப்பட்டது, ஒரு பெரிய மரமாக வளர்ந்து, நிறைய பழங்களைத் தரவேண்டும் என்பதற்காகவே. அதனால் தான் அந்த விதை இறைவனால் படைக்கப்பட்டது.


நாம் செய்வதனைத்தும் அன்புடனேயே செய்யப்படல் வேண்டும்; அதாவது, இறைவன் மேலுள்ள அன்பினாலும், அவர்தம் வெளிப்பாட்டாளர் மீதுள்ள அன்பினாலும். பின் வரும் பிரார்த்தனை நமக்குப் பரீட்சயமானதுதான், இருந்தாலும், மேலே நாம் புறிந்துகொண்டவற்றை வைத்து, இப்பிரார்த்தைனையில் அடங்கிக் கிடக்கும் வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்ப்போம். பஹாவுல்லாவின் பிரார்த்தனைகளிலிருந்து:
“என் இறைவா, நான் உங்கள் அன்பெனும் நிலத்தில், உங்களால் ஊன்றப்பெற்றும், உங்கள் தயை எனும் கரங்களால் வெளி வரச் செய்யப்பட்டதுமான ஒரு சிறு விதை. ஆகவே, இந்த விதை “(அதாவது நாம் ஒவ்வொருவரும்) தன்னுள் ஏங்குவது, தங்கள் தயை எனும் நீர் மற்றும் தங்களது திருவருள் எனும் மெய் ஊற்றுக்கே. உங்கள் நிழலிலும், உங்கள் சபையின் எல்லைக்குள்ளும், அதை மலரச் செய்விக்கக்கூடியவற்றை, உங்கள் அன்பு-நேசமெனும் சுவர்க்கத்தில் இருந்து அனுப்பிவைப்பீராக.”


ஆகவே நாம் எல்லோரும் விதைகள், நாம் எல்லோரும் வளரவேண்டும். இந்த வளர்ச்சி சுயவிருப்பத்தால் வரவேண்டும். தானியக் கிடங்கில் கிடக்கும் ஒரு விதைக்கு தன்னிச்சை கிடையாது. ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. நம்மை நாம் இடம் பெயரச் செய்வித்துக்கொள்ள முடியும். நம் வேர்களை, நமது திருச்சமயம் எனும் நிலத்தில் பதியவைக்கின்றோம். நமது சிறு கிளைகளை வெளிக்கொணர்கின்றோம். ஒரு சிறு கன்றாகின்றோம். பிறகு மரமாகின்றோம். பழம் கொடுக்கின்றோம். நிழல் தருகின்றோம். இதுவே பிறவியின் நோக்கம். இது நம் கைகளில் இருக்கின்றது. நாம் பிறவிப் பயன் அடைவது, நம் கைகளிலேயே உண்டு, பிறர் கைகளில் இல்லை. “ உங்கள் முழு இதய ஆர்வத்துடனும், உங்கள் ஆன்மாக்களின் முழு ஆவலுடனும், உங்கள் சுயவிருப்பத்தால் ஆன முழு வேட்கையுடனும் மற்றும் உங்கள் சக்தி முழுமையையும் செலுத்தி, எழுங்கள்.” (இந்த ஆவலை, இந்த வேட்கையை, இந்த சுயஇச்சையை நடப்பில் காட்டவென, பஹாவுல்லா தேர்ந்தெடுத்துள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள்.) இவ்விதத்திலேயே இறைவனின் அருளுடனும், தயையுடனும், நாம் வளருவோம்.


அடுத்து நாம் மேலோட்டமாகத் தெரிந்துகொள்ளப்போவது, நம்பிக்கை மற்றும் அடிபனிதல் ஆகியவற்றின் பிரிக்கமுடியாமை. ‘பொறுக்குமணிகள்’ நூலிலிருந்து இரண்டு பத்திகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். உங்கள் எல்லாருக்கும் அவை பரீட்சயமானவையாக இருக்கலாம், ஆனால் மேலும் அழுத்தம் கொடுக்கவென அவற்றை உபயோகப்படுத்துகிறேன். நமது முதல் பாரா, பாதுகவலர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, ‘பொறுக்குமணிகள்’ நூலில் சேர்க்கப்பட்டதுமான, ‘கித்தாப்-இ-அக்தாஸ்’ நூலின் முதல் பாராவே. ‘கித்தாப்-இ-அக்தாஸ்’ நூலின் ஆரம்ப உரையும் இதுவே.


“இறைவனால் தமது ஊழியர்களுக்கு அறிவுருத்தப்பட்டிருக்கும் முதல் கடமை, தமது திருவெளிப்பாட்டின் திவ்விய ஊற்றையும், தமது ஆனைகளின் தோற்றுவாயையும் கண்டுகொள்வதேயாகும்.... இக்கடமையை நிறைவேற்றிய எவரும், எல்லா நன்மைகளையும் பெற்றரவராவார்.... இந்த மிக உன்னத நிலையை, மகிமையின் உயர்வான சிகரத்தை அடைந்திட்ட எவரும், இவ்வுலகின் ஆவலாகியவரின் ஒவ்வொரு விதியையும் அநுஷ்டிக்கக் கடமைப்பட்டவராவார்.”


இதற்கு பிறகு பஹாவுல்லா அவர்களிடமிருந்து இந்த சாஸ்வதமான திருக்குறிப்பு, “ இவ்விரட்டைக் கடமைகள் ஒன்றுக்கொண்று பிரிக்க இயலாதவை.” அதாவது, இறைத் தூதரை அடையாளம் கண்டுகொள்ளலும், அவரது திருவடி பணிதலும், இனைபிரிக்க முடியாதவை. “ஒன்றில்லாமல் மற்றது ஏற்புடையதாகாது.” ‘பொறுக்குமணிகள்’ லின் மற்றொரு பகுதியிலிருந்து, “இறை ஐக்கியத்தின் திவ்விய ஊற்றினைக் கண்டுகொண்டவர்க்கு, இனைகடமைகள் இரண்டு உள்ளன.... முதலாவதாக, அவர் அன்பில் தவறா உறுதி... அடுத்தது, மெய்யானவற்றிலிருந்து பொய்யானவைகளை பேதம் கண்டும் பிரிவுபடுத்திக்கொள்ளவுமென, அவர் நிர்ணயித்திருக்கும் சட்டவிதிகளைக் கண்டிப்புடன் கடைபிடித்தல்.... ‘என பஹாவுல்லா ‘பொறுக்குமணிகள்’ இல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.” ‘பொய்யானவைகள்’ எனும் கடிய வார்த்தையை, பஹாவுல்லா, வேண்டுமென்றே இங்கு பயன்படுத்தியுள்ளார். இப்பகுதிகளை மேலும் ஆழமாக பரிசீலனை செய்வதற்கு மிகுந்த நேரம் தேவையாகையால், கிடைக்கும் நேரத்தில், நீங்களாகவே அதை செய்துகொள்ளவும்.
இப்பொழுது நான், பாதுகாவலர் அவர்களின் வாசகங்களிலிருந்து சில பகுதிகளைப் படிக்கப்போகின்றேன். அப்பொழுது நீங்கள், பஹாய் சேவைக்குத் தேவையான, இன்றியமையாத அங்கங்களை அதிலிருந்து கண்டுகொண்டு, மனதிலேயே அவற்றை நீங்கள் குறிப்பும் செய்துகொண்டு, பின் நீங்களாகவே ஒரு அபிப்ராயத்திற்கு வருவீர்கள். பெரும்பாலான பகுதிகள் மேலோட்டமானவையே. நான், ஐந்து அங்கங்களை இனம் கண்டுகொண்டுள்ளேன், ஆகவே, முடிவில் நாம் எல்லோரும், குறிப்பெடுத்துக்கொண்டவைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


நமது சமயம் உட்பட, சகல மதங்களின் அடிப்படை நோக்கமும், மனிதனை இறைவனின் அருகாமைக்கு இட்டுச்செல்லவும், அதிமுக்கியமானதாக விளங்கும் அவன் நடத்தைமாற்றத்தைக் கொண்டுவருதற்கும் ஆகும். நமது சமயபோதனைகளில், சமூகப் பொருளாதார அம்சங்களுக்கு பெரும்பாலும் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகின்றது, ஆனால், அதன் ஒழுக்க சம்பந்தப்பட்ட அம்சங்களை இவற்றிலிருந்து குறைத்து மதிப்பிடமுடியாது.


மற்றுமொரு பகுதி :


திருச்சமயத்தில் சேவையைப்போல் வெற்றிகள் அளிக்கக்கூடிய ஒன்று வேறில்லை. சேவையே தெய்வீகத் திருவுறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தக்கல். ஆகவே, ஒரு அன்பர் செயல்பட்டுக்கொண்டிருந்தால், பவித்திராத்மாவின் ஆசீர்வாதம் அவருக்கு உண்டு. செயலாற்றாமல் இருக்கின்ற போது, பவித்திராத்மாவின் நோய்தீர்க்கும் மற்றும் வேகப்படுத்தும் ஒளிக்கதிர்கள், அந்த மனிதனுள் வைப்பிடம் இல்லாமற் போய், அவனுக்குக் கிடைக்காமற் போகும்.


மற்றுமொரு பகுதி :


ஒவ்வொரு நம்பிக்கையாளரும், புதியவரோ பழையவரோ, அறியவேண்டியது என்னவெனில், திருச்சமயத்திற்கு, நம்மை புணர் உருவாக்கம் செய்யக்கூடிய அத்யான்மீக சக்தி உண்டு...


இதையே மறுபடியும் பார்ப்போம் :


ஒவ்வொரு நம்பிக்கையாளரும், புதியவரோ பழையவரோ, அறியவேண்டியது என்னவெனில், திருச்சமயத்திற்கு, நம்மை புணர் உருவாக்கம் செய்யக்கூடிய அத்யான்மீக சக்தி உண்டு..., அதாவது, நாம், அந்த சக்தி தனது செல்வாக்கை நம் மீது செலுத்த அனுமதிக்கவேண்டும். மற்றும், இந்த ரீதியில், மிகவும் உதவுவது, பிரார்த்தனை. நாம் நம் சுவபாவங்களின் பிழைகளிலிருந்து மீழவும், நம் சுயத்தேர்வுச் சக்தியை, நம்மை நாமே அடக்கியாள, நம்மீதே செலுத்திக்கொள்ளும்படி பஹாவுல்லா நமக்கு உதவ, அவரை இறைஞ்ச வேண்டும்.


மற்றுமொரு பகுதி :


நம் பழைய தன்மைகளோடு ஒப்பிடும்போது, முன்காணா ஜீவன்களாக, நம் சுவபாவங்களை முற்றாக நிலைமாற்றம் செய்யக்கூடியது, இறைவனின் திருச்சக்தி.
பின்வரும் வார்த்தைகள் பொண்ணால் பொறிக்கப்பட வேண்டும் :


பிரார்த்தனகைள் மற்றும் மண்றாடல்கள் மூலமாகவும், பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ள தெய்வீக விதிகளுக்கு அடிபனிந்தும், அதிகரித்துக்கொண்டே போகும் (பஹாவுல்லா) அவர்களுடைய சமய சேவை மூலமாகவும், நம்மை நாம் மாற்றிக்கொள்ள முடியும்.


இதில் கவனிக்கப்பட வேண்டியது, “அதிகரித்துக்கொண்டே போகும் சமயசேவை”, ஒரே சீராகப் போய்க்கொண்டிருக்கும் சமய சேவை அல்ல, அதிகரித்துக்கொண்டே போவது.


மற்றுமொரு பகுதி :


.ஒரு “உதாரணமாக விளங்கும் நம்பிக்கையாளர்” இறுதியில், சமயச்சேவையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டும், அதன் போதனைகளில் தன்னை ஆழப்படுத்திக்கொண்டும் புறிந்துணர்வை வளர்த்தும், தனது நம்பிக்கையை பஹாவுல்லாவின்பால் வைத்தும், தன் சிறப்பான சேவையை அவருக்கு வழங்கவென எழுந்தும் உள்ள ஒரு சாதாரண நம்பிக்கையாளரைவிட வேறுபட்டவர் அல்லர். தீர்மானமும், ஆவலும், தகுந்த அளவுடன் இருந்தால், வழிகள் நிச்சயமாகப் பிறக்கும்.


மற்றுமொரு பகுதி :


இறைத்தூதர் மேல் ஆத்யான்மீக பிரக்ஞையை மையப்படுத்தினால், மன அமைதி பெறலாம். ஆகவே நீங்கள் புனிதத் திருவாசகங்களைப் படித்து அப்புனித வாக்குகளிலிருந்து ஜீவநீரைப் பெறுங்கள். பிறகு இவ்வுயர்ந்த சித்தாந்தங்களை நீங்கள் செயல் வடிவெடுக்கச் செய்வதனால், உங்கள் போக்கு முழுவதும் மாறி உங்கள் மனது அமைதி பெறுவது மட்டும் அல்லாது, உங்கள் ஜீவிதமே களிப்பும் ஆர்வ உணர்வும் அடையப் பெறும்.


மற்றுமொரு பகுதி :


பாதுகாவலர் ஷோகி எ•பெண்டி அவர்கள், சமயத்தை நீங்கள் முடிந்த அளவு தீவிரமாகக் கற்றும் போதிக்கவும் வேண்டும் என பெறிதும் உணர்த்த விரும்புகிறார். திருபோதனைகள் பற்றிய உங்களுடைய கல்வி, பஹாய் இலக்கியங்களை படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், உங்கள் உள்ளூர் பஹாய் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்பதன் மூலம் அக்கல்வியை பரந்ததும் நடைமுறைக்கு உகந்ததுமாகச் செய்யவேண்டும். உங்கள் சமய உற்சாகத்தை பரிபாலிக்க, உங்கள் பஹாய்ச் சகோதரர்களுடன் ஒன்றுகூடி வேலை செய்வது அத்யாவசியமானது.
மற்றுமொரு பகுதியில் கூறப்படுவது :


சமயப் போதனைகளில் நாம் கிரகித்துக் கொண்டவைகளை வாழ்ந்துப் பார்க்கவும் மற்றும் உபயோகமான செயல்களாக்கிப் பார்க்கவும், இன்றியமையாத ஒரு ஆய்வு மனையை, பஹாய் சமூக வாழ்வு நமக்கு வழங்குகிறது. அந்த உயிரோட்டமுள்ள ஜீவனின்(பஹாய் சமூகம்) ஒரு அங்கமாக ஆவதன் மூலம், நாம் போதனைகளின் ஊடே ஓடும் மெய் ஆவியை அடையலாம்.


இன்னும் ஒரு பகுதியில் :


நிர்வாகத்தின் தரமும் மற்றும் ஓழுங்கு முறைகளும், சம அளவிலான நேசம், விசுவாசம் மற்றும் அத்யான்மீக வளர்ச்சியோடு இனைந்திருக்க வேண்டும்.
அடுத்தது இங்கு சம்பந்தப்படாவிட்டலும், அதனைப் பார்ப்போம் :


நிச்சயமாக, போதனையே சகல பஹாய் சேவைகளுக்கும் அடிக்கல் ஆகும். ...தேடுவோர்களுக்கு புது வாழ்வு தரும்பொருட்டு, புனிதத் திருஆவி பாயக்கூடிய ஒரு நானற் குழலைப் போல் தனிமனிதர் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும்.
இறுதியாக :


தோல்விகள், சோதனைகள், மற்றும் இடுக்கண்கள் ஆகியவற்றை முறையோடு பயன்படுத்திக்கொண்டால், நமது அத்யான்மீக நிலையை தூய்மைப்படுத்திக்கொள்ளவும், சுவபாவங்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும், மற்றும் சேவையில் உயர்ந்த நிலையை அடையவுமான வழிகளாக அவை விளங்கும்.
ஆகவே, எனதருமை நன்பர்களே, நீங்கள் ஒப்புக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். நான் அடையாளம் கண்ட அந்த ஐந்து அங்கங்களாவன : பிரார்த்தனை, போதனைகளை கற்றல், போதனை செய்தல், பஹாய் ஸ்தாபனங்களின் காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளல், சோதனைகள் மற்றும் இடுக்கண்களின் போது இறைவன் மேல் உறுதியும் நம்பிக்கையும் கொள்ளல். இந்த ஐந்து அங்கங்களுக்கிடையில் ஒரு பொது அம்சம் உள்ளது. அதாவது; பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டின்ஆதிக்கத்தின்பால் மனித ஆன்மாவை உட்படுத்துவது. இந்த ஐந்து கட்டங்களிலும் கண்டிப்பாக இந்த அம்சம் இருக்கும். அடையாளம் கண்டுகொள்வது : நீங்கள் பஹாவுல்லாவை கண்டுகொண்டும் அவர்பால் நெருங்கியும் வருகின்றீர்கள். அடிபனிதல் : அவர்தம் விதிமுறைகளுக்கும் ஆனைகளுக்கும் அடிபனிந்து, ‘(பஹாய்)வாழ்வை’ வாழ்கின்றீர்கள். பிரார்த்தனை : நீங்கள் அவரோடு நெருக்கம் வைத்துள்ளீர்கள்; இது பஹாவுல்லா அவர்களுடன் தொடர்புகொள்வது. இது உங்கள் ஆன்மாவை பாதிக்காமல் எப்படி இருக்கும்? போதனைகளைக் கற்றல் : நீங்கள் (புனித)வார்த்தைகளை உங்கள் ஆன்மாவில் புகச் செய்து, உங்கள் ஆன்மாவுக்கு புத்துயிர் அளிக்கின்றீர்கள்; இந்த ஜீவ உணவை உண்கின்றீர்கள். பஹாய் ஸ்தாபனங்களின் காரியங்களில் ஈடுபாடு: பாதுகாவலர் ஷோகி எ•பெண்டி அவர்கள், பஹாய் நிர்வாக முறை, நமது சமயத்தின் ஆன்மாவின் மறுபிறவியாகும் என்று கூறுகிறார். ஆம் ‘மறுபிறவி’ எனும் வார்த்தையைத்தான் அவர் உபயோகப்படுத்துகின்றார். அவர் கூறுவது, நமது சமயத்தின் ஆவி , அந்த இறவா ஆவி, பஹாய் ஸ்தாபனங்களின், இந்த தெய்வீக ஸ்தாபனங்களின் மறுபிறவியாகும். இங்கு உலக மையத்தில், நாங்கள் எல்லா ஸ்தாபனங்களுக்குமான மையமெனும் ‘இதயத்தில்’ இருக்கின்றோம். இறுதியாக, நான் சோதனைகளை சந்திப்பேன், என்பதை உணருவது. நான் இச்சோதனைகளில் தோல்வியுற்றால் பரவாயில்லை, ஏனெனில் நான் மீண்டும் முயற்சி செய்வேன். என்னுடைய நம்பிக்கையையும் உறுதியையும் அவர்மேல் வைப்பேன். அவர் எனக்கு உதவுவார். என் கையை அவர் பிடித்துக்கொள்வார். என்னை வழிநடத்திச் செல்வார். இந்த நம்பிக்கை நிச்சயமாகத் தேவைப்படுகிறது.


பாதுகாவலர் ஷோகி எ•பெண்டி அவர்கள், நிர்வாக அமைப்பின் உலக மையத்தைப் பற்றிக் கூறியதை நினைவுகூர்வோம். அவர் அதை “...தன் இருதயம் துடித்துக்கொண்டிருக்கும், இந்த (நிர்வாக)முறையின் உலக இருக்கை...” நீங்கள் நம்பவேண்டும் அன்பர்களே, சில நேரங்களில் நாங்கள் உலக மையத்தின் இந்த துடிப்பை உணரமுடிகின்றது. நாம் எல்லோருமே இதை நிச்சயமாக உணருகின்றோம். “...அதன் இதயம் துடித்துக் கொண்டிருக்கும், அதன் திருஸ்தாபகர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டும், அதன் நோக்கங்களை வெளிப்படுத்தியும், அதன் ஜீவனுக்கு புத்துயிர் அளித்தும், அதன் இலக்கை உருவகப்படுத்துவதுமான யாவற்றுக்கும் தோற்றுவாயாகவும்...” இந்த புனிதத் தலத்தில் உரையும் அனைவரும் பாக்கியம் செய்தவர்கள். இங்கு சேவை செய்யும் அனைவரையும் இறைவனின் அருள் இங்கு கொண்டு சேர்த்திருக்கின்றது. அது எப்படி என்று நமக்குத் தெரியாது, ஆனால் நாம் எல்லோரும் இங்கு இருக்கின்றோம். நமக்குக் கிட்டிய இந்த ஆசீர்வாதத்தை உணர்ந்து நன்றி செலுத்த வேண்டும். நாம் எங்கிருக்கின்றோம் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.


பாதுகாவலர் அவர்கள், ஏசு நாதர் அவர்களின் வார்த்தைகள் சிலவற்றை விவிலியத்தின் புதிய ஏற்பாடு ‘செய்ன்ட் லியூக்கி’ல் அடங்கியவாறு, குறிப்பிடுகின்றார்: எவருக்கு அதிகமாக அளிக்கப்பட்டுள்ளதோ, (அவரிடமிருந்த) அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.” இங்கு நமது ஆசீர்வாதங்கள் அதிகமாக இருக்குமானால், இறைவனின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கும்.
இப்பொழுது, அப்துல் பஹா அவர்களின் நேர்வு நிருபத்தைக் காண்போம். இந்நிருபம், பாதுகாவலர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இது நமக்கெல்லாம் தெரியும். இதன் மூல ஏட்டில், பாராக்களாக இந்த நிருபம் பிரிக்கப்படவில்லை. பாதுகாவலர் அவர்கள், ஆங்கில மூலத்தை ஆறு பாராக்களாகப் பிரித்துள்ளார். முதல் இரண்டு பாராக்களும் முகவுரைகள் போல் விளங்குகின்றன. அடுத்த இரண்டும், உங்கள் அனுமதியோடு, இந்நிருபத்தின் இதயமெனக் கூறுவேன். இறுதி இரண்டு பாராக்களும், இந்த அரங்கேற்றத்தின் முடிவுறைகள் ஆவன.


முதல் இரண்டு பாராக்களும், வழிபடுவோர்கள், இறைவனின் திருவருளின் வாசலில் நின்றுகொண்டு, பனிவுடனும், தாழ்மையுடனும், அவரை இறைஞ்சியும், அவர் கைகளில் கைதி போன்றும், அவர் மீது நம்பிக்கை வைத்தும், அவர் முன் நீர் மழ்கிய கண்களுடனும் இருப்பதாக விவரிக்கின்றன. இந்த விவரிப்பைத்தைதான் அவர்(அப்துல் பஹா அவர்கள்) தருகின்றார். தழுதழுத்த நெஞ்சோடு அடுத்த இரு பாராக்களைக் கூறுவதற்கு, வழிபடுவோர்களை தயாராக்கும் பொருட்டு, அப்துல் பஹா அவர்கள், இந்த விவரிப்பைத் தருகின்றார் என நான் நினைக்கின்றேன். இந்த இரண்டு பாராக்களும் பின்வருமாறு:


தேவரே, எனதாண்டவரே! தங்களின் அன்பர்களுக்குச் ஊழியம் செய்ய எனக்கருள்புரிவீராக, தங்களது சேவையில் என்னைப் பலப்படுத்துவீராக, தங்களது திருச்சபையை போற்றிப் புகழும், தங்களின் திவ்விய இராச்சியத்தின்பால் பிரார்த்தனை செய்யும் எனது புருவங்களை ஒளிவிட்டுப் பிரகாசிக்கச் செய்வீராக.
இங்கு ‘ஊழியம்’ எனும் வார்த்தையில் அழுத்தம் கொடுத்திருப்பதைக் காணுங்கள். குறைந்த பட்சத்திற்கும், அதிகபட்சத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசம் உண்டு. குறைந்த பட்சமாக ஒரு பஹாய், அனிதினமும், கட்டாயப் பிரார்த்தனைகளில் ஒன்றைக் கூறி, பத்தொன்பது நாட்களுக்கு விரதம் இருந்தும், அரசியலில் பங்கெடுக்காமலும், அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், முடிந்தால் பத்தொன்பதாம் நாள் பண்டிகைக்குச் சென்றும், நேரிட்டபோது பஹாய் நிதிக்கு வழங்கியும், தன் கைகளை பஹாவுல்லா அவர்களைப் புகழ உயர்த்தி, “இறைவா நான் ஒரு நம்பிக்கையாளனாக இருப்பதற்கு நன்றி” எனக் கூறியும் வாழலாம். இதுவே அடிமட்டம். இதுபோல் வாழ்ந்தால் போதும் என்றும் இருக்கலாம், நல்லது. இது ஒவ்வொருவருடைய வாழ்க்கை, எல்லோருடைய வாழ்க்கையும்தான். தேர்வு செய்வது நம் கையில். ஆனால் அவர் நமக்காக விரும்புவது இந்த மிதமான, மறையப் போகும் குறைந்த பட்ச வாழ்க்கை அல்ல. நாம் ஒரு உயரிய நிலையை குறி வைக்கவேண்டுமென அவர் விரும்புகிறார். நம் செல்வங்கள் யாவற்றையும் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டுமாய் விரும்புகிறார். சமயத்திற்கு, மனிதகுலத்திற்கு, மற்றும் நம்பிக்கையாளர்களுக்கும் சேவை செய்து, தாம் பஹாவின் சேவகராக இருந்ததைப் போன்று நாமும் இருப்பதை அவர் விரும்புகிறார். இதுவே நம் ஒவ்வொருவருக்காகவும் அவர் வேண்டுவது.


“எனது புருவங்களை ஒளிவிட்டுப் பிரகாசிக்கச் செய்வீராக...” என் புருவத்தைக் காணமுடியும், அதாவது புருவம் வெளிப்படையாகக் காணக்கூடிய ஒன்று. மேலும் ஒரு “ஒளிவிட்டுப் பிரகாசிக்கச் செய்வீராக,” எனும் வசனம் பிறகு வருகின்றது, இங்கு அவர் “என் உள்ளத்தை ஒளிபெறச் செய்வீராக” எனக் கூறுகின்றார். உள்ளம் உள்ளே இருக்கின்றது, புருவம் வெளியிற் தெரிவது. இந்த சேவாமார்க்கத்தில், அவர் நம்மைப் படிப்படியாக வெளியில் இருந்து உள்ளே உள்ளவற்றுக்கு வழிநடத்திச் செல்கின்றார். “...திவ்விய இராச்சியத்தின்பால் பிரார்த்தனை செய்யும்.” “ யான் தங்களின் தெய்வீக நுழைவாயிலில் தன்னநலமற்றவனாய்த் திகழ்வதற்கு உதவி புரிந்து,” நாம் இப்போதும் அந்த வாசலில் காத்துக்கொண்டும், தாழ்மையுடனும், பனிவுடனும் நின்றுகொண்டிருக்கின்றோம். ஆனால் அவர் வழிபடுவோர் அனைவரையும் தன்னலமற்று இருக்குமாறு கூறுகிறார். இந்த ‘தன்னலமின்மை’ எனும் வார்த்தைக்கு ஆழமான பிற சம்பந்தங்கள் உண்டு. அப்துல் பஹா அவர்கள், பின்னால், இதே வார்த்தையை அழுத்தத்திற்காக மேலும் உபயோகிப்பதால், அதை நான் பிறகு தொட்டுப் பேசுவேன். “யான் தங்களின் தெய்வீக நுழைவாயிலில் தன்னநலமற்றவனாய்த் திகழ்வதற்கு உதவி புரிந்து, தங்களது தெய்வீக அருகாமையில் எனது பற்றுகள் யாவற்றையும் துறக்கத் துணை புரிவீராக.” ஒரு பஹாய்க்கு லௌகீகப் பொருட்களில் பற்றற்று இருப்பது சுலபம். லௌகீகப் பொருட்கள், தெய்வீக அருகாமைக்கு வெளியே இருப்பன: பணம், கேளிக்கைகள், சுகந் தருபவை, பதவி, புகழ் என்று கூறிக் கொண்டே போகலாம். ஒருவர் இவற்றின் பற்றிலிருந்து விடுபட முடிவெடுப்பது ஏறக்குறைய சுலபம். இப்பொழுது நாம் சமயத்துக்குள் வந்துவிட்டோம். ஆனால், அவர் என்ன சொல்கின்றார்? “தங்களது தெய்வீக அருகாமையில் எனது பற்றுகள் யாவற்றையும் துறக்கத் துணை புரிவீராக” எனக் கூறுகின்றார், ‘அருகாமை’ என்பது அவரைச் சுற்றியுள்ள இடம். நாம் அதற்குள்தான் இருக்கின்றோம். இந்த இடத்தில் நாம் எல்லா பற்றுக்களையும் துறக்க வேண்டும். வெளியே உள்ள இடங்களுடையதை அல்ல! அவர் கூறுவது, அவரது அருகாமை சோதனைகள் நிறைந்தது. அதாவது பாதுகாவலர் அவர்கள் கூறுவது போல், நமது சமயத்துள் நாம் நிறைய சோதனைகளையும் சோதிப்புகளையும் சந்திக்கவேண்டியிருக்கும். ஆகவே, சமயத்திற்குள் நாம் யாவற்றிலிருந்தும் பற்றற்று இருக்கவேண்டும். (திரு. அலி அவர்கள் தம்மைப்பற்றி குறிப்பிடுவது) மையக் கட்டிடத்தில் எனக்கு பிரத்தியேக அறை, அதில் என் பெயர் அட்டை, ஒரு தனி மேஜை மற்றும் ஆலோசனை மன்ற அறைக்கும் நான் செல்கின்றேன், இத்யாதி இத்யாதி. இவை யாவும் என் தலைக்கேறிவிட்டால் நான் எனதாண்டவருடன் பிரச்னை கொண்டுவிடுவேன் என நிச்சயமாக நம்புங்கள். இது சமயத்திற்கு உட்பட்டது. வெளிப்படையாகத் தெரியும் எனது புறச் சேவையே எனக்கு புதைகுழியாகிவிடும். எனக்கு வாழ்வளிப்பதற்கு பதிலாக, இது என் ஆத்யாத்மீக உயிரைப் பறித்து, நான் மறைந்துபோகும்படி செய்துவிடும். இதுதான் நடக்கும். பற்றற்று இருப்பதென்பது, உள்ளிருக்கும், வெளியிருக்கும், யாவற்றிலிருந்தும் உண்மையாகவே பற்றில்லா நிலையை கடைபிடிப்பதாகும். இது தன்னைத் தானே அழித்துக்கொள்வது அல்ல. இது அகங்கார நிலையை அடக்கிவைப்பது, அகங்கார நிலையை கட்டுப்பாட்டில் வைப்பது. இதுதான் அதன் அர்த்தம். அகங்கார நிலையிலிருந்து முழுமையாக விடுபட்டிருப்பதானது, அவதாரங்களுக்கும் அப்துல் பஹா அவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்ற ஒன்று என நமது திருவாசகங்கள் கூறுகின்றன. நீங்களும் நானும் ஆகக்கூடி அகங்காரத்தினை கட்டுப்பாட்டில் வைத்து, அதன் தாக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கலாம்.


அடுத்த வாக்கியம்:


தேவரே! தன்னலமின்மையெனும் கிண்ணத்திலிருந்து என்னை பருகச்செய்வீராக; அம்மேலாடையைக் கொண்டு எது உடலைப் போர்த்துவீராக, அதன் கடலில் என்னை மூழ்க்கச் செய்வீராக.


அன்பர்களே, இதில் எங்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனித்தீர்களா? அப்துல் பஹா அவர்கள், தன்னலமின்மையைப் பருகவும், போர்த்திக்கொள்ளவும், நமது அகம் முழுவதும் அதனால் சூழப்பட்டும் அதில் மூழ்கிப் போகவும், வேண்டும் என விரும்புகிறார் —


இதுவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழுத்தம். பாதுகாவலரின் சார்பில் எழுதப்பட்ட பின்வரும் வார்த்தைகளை பரிசீலிக்கவும்: “...தெளிவடைந்த மனித ஆன்மாவிற்கு, நாளுக்கு நாள் அதிகரித்த அளவில், அகம்பாவம் அடங்கியதாகவே இருக்கவேண்டும், அப்படி இருக்கவும் முடியும்... . இங்கு: “நாளுக்கு நாள் அதிகரித்த அளவில்” எனும் வார்த்தையை கவனிக்கவும். உணர்ச்சிவசப்படாமலும், ஆழமாகவும் இதை ஆராய்வோமானால், இந்த துன்பங்களுக்கும், கருத்துவேறுபாடுகளுக்கும், மூல காரணமாக அகம்பாவ உணர்ச்சிகளும், சுயநல உணர்ச்சிகளுமே இருக்கக் காணலாம்.... ஒவ்வொரு மெய்நம்பிக்கையாளருக்கும், தூயபற்றின்மையும், தன்னலமற்ற சேவையுமே ஒரே குறிக்கோளாக இருக்கவேண்டும்.”
பாப் பெருமானார் அவர்கள் கூறுவதையும் பார்ப்போம்:


அப்பழுக்கில்லா தூய்மையின் துனையுடனான, பவித்திரமான உத்தேசத்தைத் தவிர, வேறு எதுவுமே அதிஉயர்ந்தவரின் சிம்மாசனத்தின்பால் ஏற்றம் அடையவோ, அவருக்கு ஏற்புடையதாகவோ, இருப்பதற்கு தகுதி இல்லை என்பதற்கு காலம் வந்துவிட்டது.


ஆக இந்த அளவு பற்றின்மையை நாம் அடையவேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
அப்துல் பஹா அவர்கள் மேற்கொண்டு கூறுகிறார்:


“தங்களது அன்பர்களின் பாதையில் என்னை தூசாக்கி....”நம்மில் எத்தனை பேர் புழுதியைப் போலாக விரும்புகிறோம்? நன்பர்களே, அப்துல் பஹா அவர்களின் உத்தேசம், நம்மை நாமே கீழ்த்தரப்படுத்திக்கொள்வது அல்ல. இது, ஒருவர் தன்னைத்தானே மட்டப்படுத்திகொள்ளும் ஒரு அப்பியாசமும் அல்ல. இல்லை, நமது கௌரவத்தை (உயர் பிறவிகள் எனும் நிலையை செயல்களால் கடைபிடிப்பது) நாம் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றுதான் அவர் வேண்டுகிறார். ஆண்டவனால் நாம் உயர்பிறவிகளாக படைக்கப்பட்டுள்ளோம் என்றே பஹாவுல்லா கூறுகின்றார். நாம் கௌரவத்துடனும், உயர்பிறவிகளாகவும் இருக்கவேண்டும். ஆனால் பிற அன்பர்களின் பாதையில் பாறையைப் போல் நாம் இருந்தால் அவர்கள் தடுமாறி கீழே விழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்திலேயே இருந்தால் பிற மனிதர்கள் நம்மேல் கால்தடுமாறி விழும் நிலையே ஏற்படும். யாரோ ஒருவர் உங்கள் மேல் இடரி விழுவாரேயானால், நீங்கள் “என் உடல் அடிபட்டுவிட்டது” எனக் கூறலாம். ஆனால் அப்துல் பஹா நம்மை தாழ்மையோடு இருக்கச் சொல்கிறார். அடிபட்டுவிட்டால் பரவாயில்லை. அன்பர்கள் உங்கள் மேல் ஏறி நடந்து செல்லட்டும், நம் சமயம் முன்னேறட்டும். “என்னைப்போல் இரு, என்னைப் பின்பற்று.”
“உயர்வுமிக்க ஒளியின் அதிபரே, தங்களது அன்பர்களின் பாதையில் என்னை ஒரு தூசாக்கி, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தங்களது வழியில் நடப்போர்களின் பாதங்கள் பட்டு அதனால் உயர்வடைந்துள்ள நிலத்திற்கு, எனதான்மாவை அர்ப்பணிக்க அருள்புரிவீராக.”


அவர் நமக்கென சித்தரிக்கும் காட்சியை பார்க்கின்றோம். அவர் கூறுவது: “இதோ மண். இந்த மண்ணின் மேல் கடவுள் தேர்வுபெற்றோர் காலடி பட்டுள்ளதால் இந்த மண் மேன்மையடைந்துள்ளது. இறைபக்கதர்களுக்கு அவர் கூறுவது, “ நான் இருந்ததைப்போல் நீங்களும் கடவுள் சம்பந்தம் பெற்ற இந்த மண்ணுக்காக, இறைவனுடனான அதன் உறவுக்காக, உயிரைவிடவும் சித்தமாக இருக்கவேண்டும்.” பஹாவுல்லாவின் ‘பிரார்த்தனைகளும் தியானங்களும்’ நூலில் அவர் இதே தொனியில் கூறுவது: “என் இறைவா, ஒரு கைப்பிடி மண் உங்களுடன் தொடர்புற்றிருந்தால், உங்கள் உறவு பெற்ற அதை ஆராதிக்க நான் எதைச் செய்தாலும் போதாது. இந்த பிணைப்பால், இந்த உறவால், அந்த மண்ணுக்காக நான் எது செய்தாலும் போதுமானதாகாது.” இந்த பிரார்த்தனையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சிந்தனை, அப்துல் பஹா அவர்களின் நேர்வு நிருபத்திலும் அடங்கியுள்ளது. அவர் அடியார்கள் காலடி பட்ட மண்ணுக்காக நாம் உயிரைவிடவும் சித்தமாக இருக்கவேண்டும் என்றிருக்கும் போது, அவர் சமயத்திற்காக நாம் இன்னும் என்ன என்ன செய்ய வேண்டும்? அந்த மண்ணைவிட இறைவனின் சமயம் நிச்சயமாக விலைமதிப்பற்ற ஒன்று அல்லவா? நாம் இங்கே விவரிப்பது நமது சமயத்தின் நன்மையை. அந்த மண் அவ்வளவு சிறப்பானதென்றால், புனிதத் தலத்தில் வீற்றிருக்கும் நினைவாலயங்கள், அந்த இரு கட்டிடங்கள், பா‹ஜி நகர், எவ்வளவு சிறப்பானவைகளாக இருக்கவேண்டும். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது இந்த அளவிலான சுயநலமின்மையையே. அவர் அந்தவிதமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார்.
கடைசி இரு பத்திகளும் முடிவுறையாகும். இருந்தபோதிலும் அவற்றிலிருந்து இரு விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “ தேவரே! அவனது ஆவலைப் பூர்த்தி செய்வீராக; அவனது உள்ளத்தை ஒளிபெறச் செய்வீராக; அவனது மனதுக்கு மகிழ்ச்சியூட்டுவீராக; அவனது ஒளியைப் பிரகாசிக்கச் செய்வீராக... இந்த வரியே இந்த பிரார்த்தனையின் முடிவு. “அவனது உள்ளத்தை ஒளி பெறச் செய்வீராக...” ஒளி பெறுவதற்கும் பிரகாசிப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு. அவை இரு வெவ்வேறு விஷயங்கள். பாப் பெருமானார் அவர்களின் நினைவாலயத்துக்குப் போகும்போது, அதன் உள்ளிருந்து பாதுகாவலரால் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளின் ஒளி, அதன் சன்னல்கள் வழியாக வீசக் காணலாம். அங்கு ஒளியைக் காண்கின்றோம். ஒளிவெள்ள விளக்குகளின் பிரகாசத்தையும் காணலாம். வெளியே தெரிவது ஓளிவீச்சு, உள்ளே தெரிவது ஒளித்தூண்டல். ஆக அப்துல் பஹா அவர்கள், நாம் இரு விதத்தில் ஒளி பெற வேண்டும் எனக் கூறுகிறார். சமய ஒளியில் நாம் எப்போதும் காய்ந்துகொண்டு இருக்க வேண்டும். திருச்சமயத்தின் ஒளி நம்மீது வீச அனுமதிக்கப்படல் வேண்டும். அதிலிருந்து உங்களைத் தடுத்துக்கொள்ளாதீர்கள். சதா அதன் ஒளியை நாடுங்கள். ஆனால் இது மட்டும் போதாது. அதே சமயம் உங்கள் ஆன்மாவும் தீப்பற்றி, எரிய வேண்டும். வெளியிலிருந்து கிடைக்கும் சமய ஒளி ஒருவேலை இல்லாது போகும்போது, உங்கள் உள்ளிருந்து பிறக்கும் ஒளியானது, நீங்கள் பிற அன்பர்கள் மற்றும் சமய நடவடிக்கைகளிலிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டுத் தனிமையில் இருக்கும் அந்த நேரத்தில், உங்கள் உள்ளிருந்து பிறக்கும் பிறகாசம் உங்களுக்கு ஒளி தரும். தங்கள் உயிர் பறிக்கப்படப்போகும் நாளை எதிர்பார்த்து, தனிமையில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நமது பாரசீக உயிர்த்தியாகிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று நினைக்கின்றீர்கள்? வெளிப்படையாக என்ன வைத்திருந்தார்கள்? தங்களைத் தவிர, வேறு ஒன்றுமே இல்லை. மற்றும் அவர்கள் மனனம் செய்துவைத்திருந்த பிரார்த்தனைகளும் திருவாசகப் பகுதிகளும், மற்றும் தங்கள் ஆண்டவரைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனால் அவர்கள் ஒளி பெற்றிருந்தனர், உள்ளொளி தூண்டப்பெற்றிருந்தது. இதைத்தான் அப்துல் பஹா எடுத்தியம்புகின்றார். புற ஒளி அடையப் பெற்றால் மட்டும் போதாது, நமது அக நிலையில், நமது ஆன்மா இறை அன்பு எனும் தீ பற்றி எரிய வேண்டும்.
இப்போது, முடிக்குமுன் நான் மிகவும் விரும்பும், அன்புப் பாதுகாவலர் எழுதிய சில வரிகைள இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


காண்பது எவ்வளவு காரிருளாயிருப்பினும், காரியம் எவ்வளவுதான் சிறமமாக இருப்பினும், சுற்றுச் சூழ்நிலை என்னதான் அன்னியமானதாகவும் வசதியற்று இருப்பினும்... இடைஞ்சல்களும் கட்டுப்பாடுகளும் எவ்வளவுதான் நிறைந்திருப்பினும்... அனுபவித்தாக வேண்டியத் தற்காலிகத் தோல்விகள் எவ்வளவுதான் சோதிப்பனவாயிருப்பினும், எந்தச் சூழ்நிலையிலும், நாம் கண்டிப்பாக, தடுமாறாதும் பின்வாங்காமலும் இருக்கவேண்டும். சர்வ-நேசரும், சர்வ-போஷகரும், சதா-ரட்சிப்பவரும், சதா-பாதுகாப்பவருமாகிய, ஆண்டவரின் குறைவுபடாத அருளின் மேல் நாம் வைத்துள்ள நம்பிக்கை, எவ்வளவுதான் சூழ்நிலையால் இடிபட்டாலும், இறுதி வரை உறுதியாக இருக்கவேண்டும்..... உடலின் கடைசிச் சொட்டு பலமும் போன நிலையில், கலைத்து ஆனால் புலகாங்கிதம் நிறைந்து, நம்மால் வாக்களிக்கப்பட்ட அறுவடை கொண்டுவரப்படும் வரையில், நமது அன்பருக்கு நாம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரையில், ஒருவர் தவறாமல், எல்லோரும், எல்லா ரீதியிலான நடவடிக்கைகளிலும்... சிரத்தையுடனும், தொடர்ந்தாற்போலும், பங்கேற்று உழைக்கவேண்டும்.