பிரார்த்தனை மனப்பான்மை

திரு அலி நாக்ஜவானி

 

 

இல்லம்

 

 

என் உரையை ஆரம்பிக்கு முன் மறைமொழிகளிலிருந்து ஒரு சில வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

மனிதனின் புத்திரனே! உன் படைப்பினை விரும்பினோம் ஆகவே உன்னைப் படைத்தோம்.
உன்னைச் செல்வந்தனாகப் படைத்திருந்தும் நீ ஏன் உன்னை ஏழ்மை நிலைக்குத் தாழ்த்திக் கொள்கிறாய்.2
எம்மைத் தவிர மற்றெல்லாவற்றையும் மறந்து எமது ஆவியுடன் தொடர்பு கொள்வாயாக. இதுவே எமது கட்டளையின் சாரம், ஆகவே அதன்பால் திரும்புவாயாக.3

அடுத்து உங்களுடன் ஒரு கதையை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

 

1970-களின் முதல் சில வருடங்களில், ரூஹிய்யா காஃனும் அவர்கள் 4 வருட காலத்தில் ஆப்பிரிக்க கண்டத்தையே சுற்றி வந்தார். அப்போது, மாலி நாட்டில், தம்பதிகளான இருவரைச் சந்தித்தார். அதாவது மாலியைச் சார்ந்த ஆப்பிரிக்கர் ஒருவரையும் அவரது மனைவியையும். அந்த மனிதர் ரஷ்யாவில் மேற்கல்வி பயின்று, அங்கேயே திருமணமும் செய்துகொண்டு, தமது ரஷ்ய மனைவியோடு மாலி திரும்பியிருந்தார். ருஹிய்யா காஃனும் அவர்கள் சந்தித்த முதல் ரஷ்ய பெண்மணி இவரே. அந்த காலத்தில் ரஷ்யர்கள் சுதந்திரமாக வெளிநாடுகளுக்குப் பிரயாணம் செய்யமுடியாது. அதே போல் வெளிநாட்டவரும் ரஷ்ய நாட்டிற்கு செல்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆகவே ரூஹிய்யா காஃனும் அவர்கள் தாம் சந்திக்க நேர்ந்த முதல் ரஷ்ய பெண்ணான அவரை கட்டியனைத்து தமது அன்பை வெளிப்படுத்தினார். அந்தப் பெண்ணும் ரூஹிய்யா காஃனும் அவர்கள்பால் மிகவும் கவரப்பட்டு, தாம் இறைவனைப் பற்றி மேலும் அதிகமாக அறிய விரும்புவதாகவும், தமக்குப் பிரார்த்தனை செய்யத் தெரியாதெனவும், அதனால் மிகுந்த கவலைப்படுவதாகவும் கண்ணீர் மல்கக் கூறினார்.

 

இந்தக் கதையைப் பற்றி நான் சிந்திக்கும் போதெல்லாம், குறிப்பாக பஹாய் குடும்பங்களில், பஹாய்ச் சூழ்நிலையில் வளர்ந்த நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்றும், பிரார்த்தனை நமக்கு இயல்பாகவே அமையக்கூடிய ஒன்றல்லவா எனவும் எண்ணினேன். என் வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவத்தைப்போலவே, குழுந்தைப் பிராயத்திலேயே நாம் எல்லோரும் பிரார்த்தனைகளை கூற ஆரம்பிக்கின்றோம் அல்லது நாம் பஹாய்கள் ஆனவுடன் பிரார்த்தனைகள் கூறப்படுவதை செவிமடுத்தும் அவற்றை புறிந்து கொள்ளவும் ஆரம்பித்துவிடுகின்றோம். பஹாவுல்லாவின் பிரார்த்தனைகளும் தியானங்களும் எனும் ஒரு முழு நூலே நம் கை வசம் உள்ளது. பலவித சூழ்நிலைகளுக்கு ஏற்ற மிகவும் அழகான பிரார்த்தனைகளைக் கொண்ட பிரார்த்தனை புத்தகமும் உண்டு. என்றும் இறைவன்பால் திரும்பி அவருடன் தொடர்பு கொள்வதான இவ்வித ஒரு கலாச்சாரத்திலேயே நாம் வாழ்ந்து வந்துள்ளோம். நமது பஹாய் வாழ்க்கைக்கும், இறைவனை ஆராதனை செய்யும் வாழ்க்கைக்கும், இது ஒரு முக்கியமான அம்சம் என்பதை வாசகங்களில் நாம் காணலாம். இறைவனைத் தேடுவது, அவரை அறிந்துகொள்வது, அவரைப் பிரார்த்திப்பது, அவருடன் தொடர்பு கொள்வது, மற்றும் அவரது வெளிப்படுத்தப்பட்ட வாசகங்களைப் படிப்பது எனும் உயர்ந்த ஸ்தானத்திற்கு இறைவனின் படைப்புக்கள் அனைத்திலுமிருந்து, மனிதன் மட்டுமே தனியே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளான். மிருகங்களினால் இதைச் செய்ய முடியாது. பிரார்த்தனையுடன் பஹாவுல்லாவை நோக்கித் நமது உள்ளங்களைத் திருப்பி, அவரது உதவியையும் வழிகாட்டலையும் யாசிப்பதென்பது எவ்வளவு பெரிய பாக்கியம்.

இந்த சொற்பொழிவை பல பகுதிகளாக நான் பிரித்துள்ளேன்.

 

முதலாவது “பிரார்த்தனையின் முக்கியத்துவமும் இறைவனை நினைவுகூர்வதும்” ஆகும்.

இரண்டாவது, “நாம் ஏன் பிரார்த்திக்கவேண்டும்” என்பதாகும்.

மூன்றாவது “எத்திசையை நோக்கி மற்றும் யாரை நோக்கி நாம் பிரார்த்திப்பது?” என்பதாகும்.

நான்காவது “பிரார்த்தனையின் சக்திக் கூறுகள் பற்றி சில சிந்தனைகள்” (புனித வாசகங்களை அடிப்படையாகக் கொண்ட மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், இப்பகுதி பெரும்பாலும் என் சொந்த கருத்துக்களையே உள்ளடக்கியிருக்கும்.).

ஐந்தாவது பகுதி, “பிரார்த்தனையின் மூலம் தன்மை மாற்றம்” என்பதாகும்.

 

அ. பிரார்த்தனை மற்றும் தியானத்தின் முக்கியத்துவம்

 

சுருக்கமான கட்டாயத் துதியில் முதலில் வருவது, “உம்மை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி” எனும் சொற்களே. இந்த “வழிபடுவது” எனும் வார்த்தைக்கு இங்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன: அதாவது வெளிப்படையான எழுத்தறிவு சார்ந்த அர்த்தம் ஒன்றும், மறைபொருளாய் உள்ள ஆன்மீக அர்த்தம் மற்றொன்றும் ஆகும். அதாவது “வழிபடுவதென்பது” இறைவனை நமது செயல்களாலும், கீழ்படிதலாலும் வழிபடுவதாகும். “சேவை பிரார்த்தனையாகும்”4 என அப்துல் பஹா கூறுகின்றார்.

மறைமொழிகளில், “உன் நோய்கள் அனைத்திற்கும் குணப்படுத்துதலாக இருப்பது எம்மை நினைவுகூர்வதே, அதை மறந்துவிடாதே.”5 இறைவனை நினைவு கூர்வதென்பது, துக்கத்தை களிப்புணர்வாக மாற்றவும், கவனமின்மை எனும் துருவை அகற்றவும் கூடியது.”6 மறுபடியும், “எம்மை நினைவு கூர்வது, ஆன்மாக்களுக்கு நோய்தீர்க்கும் மருந்தாகவும், மனிதர்களின் உள்ளங்களுக்கு ஒளியாகவும் உள்ளது,”7 எனக் கூறுகிறார். “பிரார்த்தனை நிலையே நிலைமைகள் அனைத்திலும் மேலான நிலையாகும். ஏனென்றால், மனிதன் அப்போது இறைவனோடு தொடர்பு கொள்கின்றான். தனிமையில், குறிப்பாக, தினசரி பிரச்சினைகளில் இருந்து விடுபட்டிருக்கும் வேளையான நள்ளிரவு போன்ற நேரங்களில் கூறப்படும் பிரார்த்தனையானது, மெய்யாகவே உயிரளிக்கின்றது.”8

 

பிரார்த்தனை நமக்கு இறக்கைகளை அளிக்கின்றது, பிரார்த்தனை ஆன்மாவுக்கு உணவு போன்று அதற்கு உயிரளிக்கின்றது; மனிதன் தனது லௌகீக வாழ்வில் சுவைக்கக் கிடைக்காத அளவிற்கு இனிமை வாய்ந்தது, போன்ற குறிப்புகளை பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் பிற வாசகப் பகுதிகளில் காணலாம். மறுபடியும், “புஷ்பங்களுக்கும் மலர்சரங்களுக்கும் புத்தம் புது வடிவத்தையும் மென்மையையும் அளித்து, அவை புதுத் தோற்றம், பரிமள மனம் மற்றும் புது வசீகரம் பெறச் செய்யக்கூடிய மழையையும் பனித்துளியையும் போன்றதே இறைவனை நினைவு கூறுவதென்பதாகும்.”9 மீண்டும்:

“வலிமையற்ற ஒருவர் வலிமை படைத்த ஒருவரை மன்றாடிக் கேட்பதே பொருத்தமாகும் என்பதையும், வெகுமதிகளைத் தேடும் ஒருவர் மகிமை பொருந்திய கொடையாளியானவரை இரைஞ்சுவதே தகுந்ததாகும் என்பதையும், மெய்யாகவே அறிவீராக. ஒருவர் தமது தேவரிடம் மன்றாடி, அவர்பால் திரும்பி, அவரது சமுத்திரத்திலிருந்து வெகுமதிகளை வேண்டும் போது, அம்மன்றாடலானது அவரது உள்ளத்திற்கு பிரகாசத்தையும், பார்வைக்கு ஒளியையும், ஆன்மாவுக்கு புத்துயிரையும், அவரது நிலையை மேன்மை பெறச் செய்வதாகவும் உள்ளது... இக்கவர்ச்சிகளின் மூலமாக ஒருவரின் ஆற்றலும் திறனும் அதிகரிக்கின்றன. கொள்கலம் பெரிதாக்கப்படும் போது (அதில்) நீரும் அதிகரிக்கின்றது. தாகம் அதிகரிக்கும் போது மேகங்களின் கொடை மனிதனின் சுவைக்கு ஏற்புடையதாகின்றது. இதுவே மன்றாடலின் மர்மமும் ஒருவரது தேவைகளை வெளியிடுவதில் அடங்கியுள்ள விவேகமும் ஆகும்." 10

ஆ. நாம் ஏன் பிரார்த்திக்கின்றோம்?

 

நாம் பிரார்த்திக்கின்றோம் என்பது தெரிவதற்காகவோ, பிரார்த்திக்க வேண்டும் எனும் கடமையை நிறைவேற்ற புனித வாசகங்களை ஒப்புவித்தோ படிக்கவோ செய்தாலும், அல்லது ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றோம் எனும் திருப்திக்காக பழக்க தோஷத்தினால் பிரார்த்தித்தாலும், புனித வாசகங்களில் கண்டுள்ள அனைவற்றின்படி, பிரார்த்தனையின் நோக்கம் முழுமையாக அடையப்படவில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும். “மேன்மைபடுத்தப்பட்ட மகிமையின் சிகரத்தின்பாலும், ஐக்கியத்தின் மையத்தின்பாலும் உன் உள்ளம் ஈடுபாடற்று இருக்கும் போது உன் நா வெறும் வாய் வார்த்தையால் இறைவனை வாழ்த்தாது இருக்கட்டும்,”11 என பாப் அவர்கள் கூறுகின்றார். “இயன்ற அளவு புனிதத் தன்மையுடனும் பிரகாசத்துடனும் கூறப்படும் பிரார்த்தனையே அதி ஏற்புடையது,”12 மேலும் அப்துல் பஹா கூறுவது:

“எல்லா பொருட்களையும் விட்டு விலகியிருந்து அந்த நிலையை அடைய முயற்சி செய்யவேண்டும்... ஆன்மீக விஷயங்களைப் பற்றி அதிகமாகவும் லௌகீக விஷயங்களைப் பற்றி குறைவாக சிந்தித்தும் பொருட்படுத்தியும் அதை அடையலாம். ஒன்றைவிட்டு எவ்வளவு தூரமாக விலகிச் செல்கின்றோமோ அவ்வளவிற்கு மற்றதை நோக்கி நெருங்கி வருவோம். முடிவு நம் கைகளில்தான் உள்ளது.”13

புனித வாசகங்களில் குறித்துள்ளபடி, இறைவன் எந்த மாதிரியான பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வார்; எவ்விதமான அகத்தூண்டுதல்கள் அவரது பார்வையில் ஏற்புடையவையாகின்றன? இறைவனின் நோக்கத்துடன் எவ்வித உத்தேசங்கள் ஐக்கியப்படக் கூடியவையாகின்றன? என் கருத்து, முதலாவதாக, நமது பலவீனத்தையும் இயலாமையையும் ஒப்புக்கொள்வதாகும். சுறுக்காமான கட்டாயத் துதியில் நாம் இப்போது குறிப்பிட்ட அந்த பத்திக்குப் பின் உடனடியாக வரும் வரிகளில், “இத்தருணம் என் பலவீனத்திற்கும், உந்தன் வல்லமைக்கும்... நான் சாட்சியம் கூறுகின்றேன்” என பஹாவுல்லா நம்மை கூற வைக்கின்றார். ‘பிரார்த்தனைகளும் தியானங்களும்’ நூலில், “என் தேவரே, உமது சமயத்தின் மகிமையை, அவர்கள் முன் மூடுதுனி நீக்கிடுவீறாக... என் தேவரே, உமது சுயநிலையின் வெளிப்பாட்டாளராகிய அவர் முன்பாக அவர்களுடைய வலிமையின்மை பற்றிய ஒரு உணர்வைக் கொண்டு அவர்களுக்கு உற்சாகமூட்டுவீராக...”14 இந்த வலிமையின்மை பற்றி நிறைய வாசகப் பகுதிகள் உள்ளன. அவற்றை எல்லாம் படிப்பதற்கு நேரம் போதாது. “வலிமையின்மை” எனும் தலைப்பின் கீழ் சொற்காட்டிப் பகுதியில் தேடிப்பார்த்தால் அதன் முக்கியத்துவம் தெரிய வரும். நாம் வலிமையற்றவர்கள், அறியாதவர்கள், வறியவர்கள், ஆற்றலற்றவர்கள் என்பதை நாம் நமது தேவராகியவரிடம் கூறுவதே நாம் முதன் முதலில் செய்யக்கூடியது. இந்த வார்த்தைகளின் அர்த்தங்களை நாமே சொந்தமாக தேடி கண்டுபிடித்துக்கொள்ளலாம்.

இறைவன், நாம் நமது பலவீனத்தை ஒப்புக்கொள்வதை பார்க்க ஏன் விரும்புகிறார்? இதன் காரணம், அவர் பலவீனமானவர் அல்ல, வல்லமையில்லாமை என்பது அவருக்கு கிடையாது. அவரிடம் இல்லாத ஒன்று, இந்த ஒரு விஷயமே. ‘பிரார்த்தனைகளும் தியானங்களும்’ நூலில் இந்த பலவீனத்தை ஒப்புக்கொள்ளல், “உம்மால் விரும்பப்பட்டது”15 என அவரே கூறுகின்றார். நாம் இந்த உண்மையை ஒப்புக்கொள்வதை அவர் கேட்க விரும்புகிறார். அவரது நிருபம் ஒன்றில், (மொழிபெயர்க்கப்படாதது) மனிதன் சொல்லக்கூடியதும் செய்யக்கூடியதும் காற்றில் அலைகழிக்கப்படும் காய்ந்துதிர்ந்த ஓர் இலையின் அசைவுகளுக்கும் சலசலப்பிற்கும் சமமென பஹாவுல்லா கூறுகின்றார். தான் உதித்த, மற்றும் ஒட்டியும் கொண்டுள்ள அந்த மரத்தின் உண்மையியலை, அதன் கிளைகளை மற்றும் பழங்களை அது எவ்வாறு புறிந்துகொள்ள முடியும்? வலிமையின்மை என்பது ஆன்மாவிற்கு பறக்கக் கூடிய ஆற்றலை வழங்கும் ஓர் இறக்கை போன்றது அல்லது அந்த இலை பற்றிக்கொள்ளக்கூடிய ஒரு கயிறு போன்றதாகும்.

 

இந்த பலவீனம் மற்றும் வலிமையின்மை ஆகியவற்றின் மற்றொரு அம்சமான, மனித ஆன்மாவின் இன்றியமையாத ஒரு இயல்பு, பஹாவுல்லா நமக்கு போதித்துள்ளவாறு பிரார்த்தனைகளின் போது நாம் கூறக்கூடிய வார்த்தைகளில், விவரிக்கப்பட்டுள்ளது: “என் இறைவா, எனக்கு நன்மை பயப்பதையும் தீமை பயப்பதையும் நான் அறியேன். அதாவது, குறிப்பாக: “...உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும் எனக்கு நன்மையளிக்கக் கூடியதை எனக்கு வழங்குவீராக, ஏனெனில் எனக்கு உதவக்கூடியவற்றையோ தீங்கிழைக்கக்கூடியவற்றையோ நான் அறியேன். உண்மையாகவே, சர்வ-ஞானியும், சர்வ-விவேகியும் நீரே ஆவீர்.”16 வேறொரு பிரார்த்தனையில்: “இறைவா! நான் என்னை அறிந்து வைத்திருப்பதைவிட நீரே என்னை நன்கு அறிந்துவைத்திருக்கின்றீர்,”17 எனக்கூறப்பட்டுள்ளது. நாம் நம்மை நன்கு அறிந்துள்ளோம் என நினைக்கின்றோம். ஆனால் கடவுளோ, உன் உண்மையான நிலை உனக்குத் தெரியாது, அதனை நானே அறிவேன், என கூறுகின்றார்.

 

நமது இயலாமையை நாம் ஒப்புக்கொள்வதோடு, நமது குறைபாடுகளை மன்னித்தருளுமாறு நமது பிரார்த்தனைகளின் போது நாம் வேண்டுவது நமக்கு மதிப்புக்குறியதாகவும், ஏற்புடையதாகவும் உள்ள ஒன்று என்பது என் எண்ணம். “குறைபாடுகளா?” என நீங்கள் கேட்கக் கூடும். நண்பர்களே, நாம் எல்லோருமே பாவிகள். பிரார்த்தனைகளில் இவ்விஷயம் குறிக்கப்பட்டுள்ளதை நீங்கள் கண்டுள்ளீர்கள். அதற்காக, பிரார்த்தனைகளின் போது, அவ்வாசகங்களை வாசிக்கும்போது, அவ்வரிகளை கூறிவிட்டு, அதே வேளையில், “இவை எனக்காக கூறப்பட்டவை அல்ல, பிறருக்காகவே எழுதப்பட்டுள்ளன,” என நான் எனக்கு நானே கூறிக்கொள்ளலாமா? இல்லை! அவ்வாசகங்கள் குறிப்பிடுவது போலவே, நான் ஒரு பாவி, ஏனென்றால் நான் ஒரு மனிதப்பிறவி, ஏனென்றால் பிடிவாத குணமான அகந்தை எனக்கு இருக்கின்றது. நீண்ட கட்டாயப் பிரார்த்தனையை கூறத் தேர்ந்தெடுக்கும் போது, தினசரி இவ்வரிகளை நாம் மீண்டும் மீண்டும் கூறுகின்றோம்: “இப்பிழையோன் தங்கள் மன்னிப்பு எனும் சமுத்திரத்தையும்,... இந்த ஈன சிருஷ்டியானவன் தங்கள் கிருபையெனும் கதவினைத்தட்டுவதையும்... தாங்கள் காண்கின்றீர். கடவுளே, என் கடவுளே! என் பாபச் சுமையினால் எனதுடல் வளைமுதுகாகியது. எனது கவனமின்மை என்னை அழித்துவிட்டது, எனது தீய செயல்களையும், தங்களது தயவு தாட்சண்யங்களையும் நான் ஆழ நினைத்திடும் போதெல்லாம் என் நெஞ்சம் என்னுள் உருகுகின்றது; என் நாளங்களில் என் இரத்தம் கொதிக்கின்றது. தங்களது அழகின் சாட்சியாகக் கூறுகிறேன், உலகின் ஆவலே! தங்கள் முன் என் முகத்தை உயர்த்திட நாணுகின்றேன்; தங்கள் அருட்கொடையெனும் சுவர்க்கத்தை நோக்கி நீண்டிட என் ஏங்குறும் கரங்கள் வெட்கங்கொள்கின்றன.”

 

உண்மையான பிரார்த்தனையானது, கண்ணீருடனும் பெருமூச்சுடனும் ஒன்று சேர்ந்து வரக்கூடிய ஒன்றென, அப்துல் பஹா கூறுகின்றார். நீண்ட கட்டாயப் பிரார்த்தனையிலும் பஹாவுல்லா இதே சிந்தனையை வெளியிடுகின்றார்: “தாங்கள் என் கண்ணீரையும், நான் விடும் பெருமூச்சினையும் உணர்கின்றீர், என் வேதனைக் குரலையும், என் புலம்பலையும், என் இதயத்தின் கதறலையும் கேட்கின்றீர்;” இறைவனிடம் நாம் எப்படி உரையாட வேண்டும் என நமக்கு போதிக்கின்றார். நமது உண்மையான நிலை யாது என்பதை நமக்கு விளக்குகின்கிறார். ஆனால் நமது அகந்தையோ வேறொரு கதையை கூறுகிறது. நாமே முக்கியமானவர்கள், விசேஷமானவர்கள்; நம்மைப் போல் எவரும் இல்லை; நானே இப்பிரபஞ்சத்தின் மையமாக ஒரு வேளை இருக்கக்கூடும், என தொடர்ந்தாற் போல் கூறுகின்றது. இங்கு மறுபடியும் அப்துல் பஹா கூறுவதை கவனிப்போம்: “விடாப்பிடி கொண்ட அகந்தையின் தாக்குதல்களின் காரணத்தால் ஏற்படும் பெருமூச்சும் அழுதலும், உண்மையான நம்பிக்கை கொண்ட மக்களுக்கு, பிரார்த்தனையின் இன்றியமையா அங்கங்கள்.”18

 

இப்போது, சிறிது மகிழ்வைத் தரக்கூடியவையை பார்ப்போம்: அவையாவன, இறைவன்பால் நமது அன்பு, அவரை வாழ்த்த வேண்டும் எனும் நமது வேட்கை, அவரை மகிமைபடுத்துவது ஆகியவை. மீண்டும் நீண்ட கட்டாயப் பிரார்த்தனையிலிருந்து ஒரு குறிப்பு: “என் கடவுளே, தங்களை வழிபடும் தனது ஏக்கத்தில், தங்களை நினைவு கூர்ந்து உயர்த்திப் புகழும் தனது பேராவலில் எங்ஙனம் எனதான்மா எனது அங்கங்களிலும், அவயங்களிலும் கிளர்ச்சியுற்றது என்பதையும்... நீர் காண்கிறீர்.” நீண்ட கட்டாயப் பிரார்த்தனையை எப்போது ஒப்புவிக்க வேண்டும் என்பது பற்றி கருத்துரைக்கும் போது, “பனிவார்ந்த நிலை, பூஜிக்க வேண்டும் எனும் வேட்கை ஆகிய நிலைகளை ஒருவர் அடைந்திடும்போது,”19 என பஹாவுல்லா கூறுகின்றார். இந்த வேட்கை, இந்த அன்பு, அன்பரை பூஜிக்கவேண்டும் எனும் இந்த ஆவல் ஆகிவற்றைப்பற்றி அப்துல் பஹா விளக்குகிறார்:

 

“ஒரு நண்பர் இன்னொருவரிடம் அன்பு கொள்வாரானால் அதை அவ்வாறு கூற விரும்புவது இயற்கையல்லவா? அந்நபர் அவர் மீது தான் வைத்திருக்கும் அன்பை அறிந்துள்ளார் என்பது தெரிந்தாலும் அதனை அவரிடம் கூற விரும்புவார் அல்லவா?... இறைவன் எல்லோருடைய இதயங்களின் ஆவல்களையும் அறிந்திருக்கிறார் என்பது உண்மையே, ஆனால் பிரார்த்திப்பதற்கான தூண்டுதலானது இறைவன்பாலுள்ள மனிதனது அன்பிலிருந்து தோன்றும் இயற்கையான ஒன்றாகும்...”

 

“...அன்பில்லா வார்த்தைகள் அர்த்தம் இல்லாதவை. உம்மை சந்தித்த ஒருவர், அன்பில்லாமலும் களிப்பில்லாமலும், விரும்பத்தகாத ஒரு கடமையாக நினைத்து உம்முடன் பேசினால், அவருடன் நீங்கள் உரையாட விரும்புவீர்களா?”20

 

மறுபடியும்: “மிக உயர்ந்த பிரார்த்தனையில் மனிதர்கள் இறைவனின் அன்பிற்காக மட்டுமே பிரார்த்தனை செய்கிறார்கள். இறைவனின் மீது அல்லது நரகத்தின் மீதுள்ள அச்சத்தாலோ, அருட்கொடை அல்லது சுவர்கத்தை அடையும் நம்பிக்கையுடனோ அல்ல... ஆன்மீக மனிதன் இறைவனை நினைவுபடுத்திக்கொள்வதை தவிர வேறெதிலும் இன்பத்தை காண்பதில்லை”21 இறைவன்பால் அன்பெனும் இந்த விஷயம் மிகவும் பரந்த ஒன்று; நாமெல்லோரும் நன்கு கற்க வேண்டிய கடலளவு விஷயமாகும். நான் புறிந்து கொண்டதை சுருக்கமாக கூறுகின்றேன்: நாமெல்லோரும் இறைவனின் அவதாரத்தை அறிந்துகொள்ள வேண்டுமென இறைவன் விரும்பிய போதிலும், அதுவே போதுமென அவர் நினைக்கவில்லை. அவரது அவதாரத்தை நாம் நம்புவது மட்டுமல்லாமல், அவரை நாம் ஆழ்ந்து நேசிக்கவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். நாம் நம்பிக்கையாளர்களாக மட்டும் இல்லாமல் அவரது அன்பர்களாகவும் இருக்கவேண்டும். இங்கு “மோகம் கொண்ட அன்பர்கள்” எனும் வார்த்தைகளை கூட அவர் பயன்படுத்தியுள்ளார்.

 

நமது தினசரி வாழ்க்கையில், நமக்கு வழிகாட்டுதலும் சக்தியும் அவசியம் என்பதே பிரார்த்திக்க வேண்டும் எனும் உந்துதலுக்கு ஒரு காரணமாகவுள்ளது. உதாரணங்களாக, நமக்கு ஒரு பிரச்சினை உள்ளது, அதற்கு தீர்வு காண வேண்டும்: ஒருவர் நோய்பட்டிருக்கின்றார், அவர் குணமடைய வேண்டும், அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்தால் நன்மை பயக்கும் என்பது தெரியாதிருப்பது போன்றவற்றை குறிப்பிடலாம்.

 

புனித வாசகங்களில், பிரார்த்தனை எனும் வார்த்தை பெரும்பாலும் தியானம் எனும் வார்த்தையோடு இனைந்தே வரும். அதாவது, பிரார்த்தனையும் தியானமும் எனும் சொற்றொடரே அது. ஒரு முறை, ஷோகி எஃபெண்டி அவர்கள், கிழக்கத்திய அன்பர்கள் நிறைய பிரார்த்தனை செய்கிறார்கள் ஆனால் தேவையான அளவு தியானம் செய்வதில்லை எனவும்; மேற்கத்திய அன்பர்கள் நிறைய தியானம் செய்கிறார்கள் ஆனால் குறைவாகவே பிரார்த்தனை செய்கிறார்கள் எனவும் கூறியதாக அறிந்தேன். இவ்விரண்டும் சம அளவில் இனைந்திருக்கவேண்டும். “தியானம்” எனும் வார்த்தை, “பிரார்த்தனையில் அடங்கியுள்ள வார்த்தைகளின் அர்த்தங்களை பிரதிபலிப்பு செய்வது” அல்லது “வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளின் உள்நோக்கத்தையோ அர்த்தத்தையோ அறிந்துகொள்வது எனும் ரீதியிலேயே பயன்படுத்தப்படுகிறது. “தியானம்” எனும் வார்த்தை நமக்கு ஏற்பட்டுள்ள, அல்லது, வழிகாட்டல் தேவைப்படும், ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை பற்றி சிந்திக்கும் போதும் அல்லது பிரதிபலிக்கும் போதும் உபயோகப்படுத்தப்படுகிறது. அப்பிரச்சினையை பற்றி நாம் தியானம் செய்கிறோம். புனித வாசகங்களை தியானம் செய்வதும், ஒரு பிரச்சினை குறித்து தியானம் செய்வதும் வெவ்வேறான விஷயங்கள். புனித வாசகங்களின் பல பகுதிகள் இவ்விரு விஷயங்கள் குறித்து நமது கவனத்தை ஈர்க்கின்றன. உதாரணமாக: “ஆக்கசக்திமிக்க வார்த்தைகள் பற்றி சிந்தனை செய்வது22, “எமது வார்த்தைகள் எனும் சமுத்திரத்தில் உங்களை மூழ்கச் செய்வீராக”23, மற்றும் அவர் வெளிப்படுத்தியுள்ள நிருபங்களின் உள்ளடக்கங்கள் குறித்து தியானம் செய்வது”24 போன்றவை. இது இவ்வாறு இருக்க, மனிதர்களை பிரித்துக் காட்டும் ஒரு விசேஷ சக்தியாக, தனக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு விடிவு கானும் வகையில் மனிதன் அவற்றை பற்றி சிந்திக்க தேவைப்படும் சக்தியாக, தியான சக்தி விளங்குவது பற்றி அப்துல் பஹா கூறுவதில் தியானம் எனும் வார்த்தையின் மற்றொரு அர்த்தம் உள்ளடங்கியுள்ளது.

 

ஆகஸ்ட் 1957-இல் பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்களின் சார்பாக எழுதப்பட்ட ஒரு கடிதப் பகுதியிலிருந்து:

 

வழிகாட்டுதலுக்காக, பெரும் ஊக்கத்துடன் பிரார்த்தனை செய்தால் மட்டும் போதாது, ஆனால் அப்பிரார்த்தனையின் தொடர்ச்சியில் செயலாக்கத்திற்கான சிறந்த வழி வகைகள் குறித்த தியானமும், அதன் பிறகு செயல்படுத்துலும் நடைபெறவேண்டும். அச்செயலாக்கமானது உடனடியான விளைவுகளை உண்டாக்காவிட்டாலும், அல்லது அது முழுவதும் சரியான ஒரு முடிவாக இல்லாவிட்டாலுங்கூட, அது அவ்வளவு முக்கியமானதல்ல, ஏனெனில் செயல்படுத்தல் மூலமாகவே பிரார்த்தனைகளுக்கான பதில்கள் கிடைக்கும், மற்றும் ஒருவர் எடுக்கும் முடிவு தவறானதாக இருப்பினும் கூட, இறைவன் அத்தவற்றினையே பயன்படுத்தி சரியான வழியை காட்டிட முடியும்.25

 

இது, நாம் பிரார்த்தனை செய்தும் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் மீது தியானமும் செய்யவேண்டும் என எனக்கு பொருள்படுகிறது. இதன் வழியாக நம்மிடமிருந்தும் நம்மைச் சுற்றியுள்ளவற்றிலிருந்தும் மற்றும் தினசரித் தேவைகள் பாலும் நாம் பற்று அறுக்கின்றோம். பிறகு பிரச்சினை குறித்தே நாம் தியானம் செய்யவேண்டும். இப்படியோ அல்லது அப்படியோ செய்யவேண்டும் எனும் ஒரு எண்ணம் உதிக்கின்றது: அதாவது இன்ன நடவடிக்கை எடு எனும் எண்ணம். அந்த நடவடிக்கை இறுதியில் தவறானதாகவே இருப்பினும், கடவுள் அத்தவற்றை சரிசெய்துவிடுவார். தியானத்தின் விளைவாக உதித்த, இன்ன நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனும் எண்ணம், ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி நம்மை ஈர்த்தும், நாமும் அந்த நகர்ச்சியின் செயல்பாட்டிற்கினங்க செயல்படும் வேளையில், நாம் செல்லும் அந்த திசை தவறானதாக இருப்பின், இறைவன் நம்மை சரியான திசையை நோக்கி நிச்சயமாக திசை திருப்பிவிடுவார். இப்பகுதியிலிருந்து தனிப்பட்ட வகையில் நான் விளங்கிக் கொண்டது இதுவே.

 

1927-இல், தலை சிறந்த ஆரம்ப கால பஹாய் போதகர்களில் ஒருவரான ரூத் மோஃபெட், புனித யாத்திரை ஒன்று மேற்கொண்டு வந்திருந்தார். அவர் பிரார்த்தனையின்பால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அது குறித்து பாதுகாவலரிடம் சில கேள்விகளையும் கேட்டார். மேற்கண்ட படிகளை ஒட்டிய ஒரு பதிலையே பாதுகாவலர் கொடுத்தார். ரூத் அவர்களும், இறைவன் அவரது உள்ளத்தை ஆசீர்வதிப்பாராக! — அவற்றை எழுதியும் வைத்தார். ரூத் அதை நண்பர்கள் அனவைருடனும் பகிர்ந்தும், பிறகு பிரசுரித்திடவும் செய்தார். பின்னாளில் அன்பர்கள் ஷோகி எஃபெண்டி அவர்களுக்கு எழுதி, அவ்வழிகாட்டியின் நம்பத்தகுந்தமையை உறுதி செய்துகொண்டனர். ஷோகி எஃபெண்டி, அவ்வழிகாட்டி குறித்து ரூத் எழுதிவையெல்லாம் உண்மையே என உறுதிபடுத்தினார். ஆனால், அவ்வழிகாட்டி, நண்பர்களை எவ்வகையிலும் ஈடுபடுத்தவில்லையெனவும், அன்பர்கள் இவ்வித விஷயங்களில் தன்னிச்சையாக செயல்படலாமெனவும் மேற்கொண்டு கூறிவிட்டார்.

 

அவ்வழிகாட்டியில் குறிக்கப்பட்டுள்ள படிகளாவன யாவை? சுறுக்கமாக, முதல் படியாக, பஹாய் பிரார்த்தனைகளை உபயோகப்படுத்தி பிரார்த்தனை செய்தல், பிறகு, ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தியானம் செய்வதும் ஆகும். இரண்டாவதாக, அப்பிரச்சினையை தீர்க்கும் வழியென தோன்றும் ஒரு முடிவிற்கு வருவது. மூன்றாவது படியாக, எடுக்கப்பட்ட முடிவை, மனவுறுதியுடனும், உறுதியான தீர்மானத்துடனும், செயல்படுத்த முயற்சி செய்வது. நான்காவதாக, அதற்கு தேவையான சக்தி வந்தடையும் எனவும், தகுந்த வழி தோன்றும் எனும் நம்பிக்கையும் கொள்வது. ஐந்தாவதாக, ஓய்வில்லாமலும், வற்றாத உழைப்புடனும் பிரச்சினையை தீர்க்கும் வழியில் செயல்படும்போது தன்பால் மேற்கொண்டு ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய ஒரு காந்தக்கல் போன்று ஆவது.

 

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே விஷயம் குறித்தும், ஐந்து படிகளையும் ஓரிரு வரிகளில் சுருக்கியும் பாதுகாவலர் எழுதினார். அதில், ஆறாவது படியென தோன்றும் ஒன்றை மேற்குறிப்பிட்டுள்ள பகுதியில் பாதுகாவலர் சேர்த்துள்ளார் என்பது என்னுடைய அனுமானம். “அச்செயல்படுத்தல் தக்க ஒரு விளைவினை உடனடியாக உண்டாக்காமலும், அல்லது அது முற்றாக ஏற்புடையதான ஒரு முடிவாக இல்லாவிட்டாலும் கூட, அது முக்கியமல்ல... ஒருவரது செயல் தவறாக இருந்திட்டாலும், அந்த வழியையே உபயோகப்படுத்தி சரியான பாதையை இறைவனால் காட்டிட முடியும்.”

 

பாதுகாவலரின் சார்பாக எழுதப்பட்ட மற்றுமொரு கடிதத்தில்: ஒரு காரியத்தை செய்திட வேண்டும் என மனதிற்பட்டும், பிறகு எல்லா முயற்சிகளும் செய்து வழிகள் தோன்றிடும் போதும், அதுவே வழிகாட்டுதல் எனக் கொள்ளப்பட வேண்டும். எல்லா முயற்சிகளும் மேற்கொண்ட போதும், வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தால், அது பொதுவாக, வழிகாட்டுதலாகாது.”26

 

இதுகாறும் மொழிமாற்றம் செய்யப்படாத பஹாவுல்லாவின் நிருபம் ஒன்றில், இறைவனின் தயாளம் முடிவற்றது எனவும், அவரது அருள் எல்லையாற்றது எனவும்; அவரது சலுகைகள் வந்தடைவதில் எந்த ஒரு இடையூறும் இருக்க முடியாது எனவும்; அவர் தேவைகளை ஈடுசெய்வார், மற்றும் அவரது ஊழியர்களின் மன்றாடல்களுக்கு தொடர்ந்து பதிலளிப்பார் எனவும்; ஒருகால் அவரது வழிகாட்டுதல் வந்தடைவதில் தாமதம் ஏற்படுமானால், மான்றாடுபவற்கு அதுவே நன்மை பயப்பது எனவும் கொள்ளவேண்டும். ஏனெனில், ஆரம்பத்தில் இறைஞ்சிக் கேட்டவையைவிட மேலும் உயர்வான தெய்வீக வெகுமதிகளை அவர் அந்த தாமதத்தின் மூலம் பெறக்கூடும்.

  நான் இங்கு, ஹைஃபாவில் சிறுவனாக இருந்த போது, ஒரு பிரஞ்சுப் பள்ளியில், அதாவது, “காலேஜ் டெஸ் பிரெரெஸ்” எனும் பெயர் கொண்ட பள்ளியில் பயிலும் போது பின்வரும் கதையை செவிமடுத்தேன்.

 

சிறுவன் ஒருவன் கத்தோலிக்க பள்ளி ஒன்றில் பயின்று கொண்டிருந்தான். அங்கு அவன் இறைவனைப் பற்றிய அறிவு பெற்றான். ஆனால் அச்சிறுவனின் தந்தை இறைவனை நம்பாதவராகவும், அச்சிறுவனோ சதா இறைவனைப் பற்றி பேசுபவனாகவும் இருந்தனர். அச்சிறுவனுக்கு சைக்கிள் ஒன்று தேவைப்பட்டது. அவனும் ஒரு நாள் தன் தந்தையிடம் சென்று, “அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தாருங்கள்,”எனக் கேட்டான்.

 

தந்தை, “இறைவன் அனைத்தயும் கொடுப்பார், அவர் சர்வ-சக்தி வாய்ந்தவர் என என்னிடம் கூறுகின்றாய். நீ ஏன் அந்த இறைவனிடமே ஒரு சைக்கிள் வ்ேண்டும் என கேட்கக் கூடாது? என்னிடம் அதற்கான பணம் இல்லை.” என மேலும் கூறினார்.

 

அச்சிறுவனும், “சரி அவ்வாறே செய்கிறேன்” என பதிலுரைத்தான்.

 

சில நாட்களுக்குப் பிறகு, “இறைவன் உன் பிரார்த்தனைக்கு பதிலளித்தாரா?” என தந்தை வினவினார்.

 

அதற்கு சிறுவன், “ஆமாம்” என்றான்.

 

“இறைவன் பதில் அளித்தாரா?”

 

“ஆமாம்” என்றான் சிறுவன்.

 

“சைக்கிள் எங்கே” என்றார் தந்தை.

 

சிறுவன், “இந்த தடவை கிடையாதென இறைவன் கூறிவிட்டார்” என்றான்.

 

ஆக, இக்கதை மேலே குறிப்பிட்டுள்ள பஹாவுல்லாவின் கூற்றுடன் ஒத்திருக்கின்றதை நாம் காண்கிறோம். சில வேளைகளில் இறைவன் இல்லை எனும் பதிலையே அளிக்கின்றார். ஆனால் அவர் அதன்மூலம் நமது கோரிக்கைகளுக்கு நிச்சயமாக பதில் தருகின்றார். அல்லது, இப்போது அல்ல; பிறிதொரு முறை, எனவும் கூறலாம். அவ்வாறு, அவர் பின்னாளில் நமது பிரார்த்தனைக்கு கொடுக்கும் பதிலாகப்பட்டது, நாம் முன்பு கேட்டதை விட சிறந்ததாக இருக்கவும் நாம் காணலாம்.

பாதுகாவலரிடமிருந்து மேலும் சில விளக்கவுரைகள்:

 

தாங்கள் தங்களுடைய பிரார்த்தனைகளுக்கு இதுகாறும் பதில்கள் கிடைக்கவில்லை என எண்ணியும், உங்களுடையை பொருளாதார நிலைமை மேற்கொண்டு சீரடையும் எனும் நம்பிக்கையை இழந்துள்ளவராக நீங்கள் இருந்த போதிலும், பிரார்த்தனையின் ஆற்றல்களின்பால் நீங்கள் கொண்டிருக்க வேண்டிய நம்பிக்கையை இவ்வித ஏமாற்றங்கள் கீழறுப்பதை அனுமதிக்கக்கூடாது. ஆனால், தாங்கள் அனுபவிக்கும் இந்த துன்பங்களின் பின்னால் வீற்றிருக்கும் பெரும் விவேகங்களை கண்டுகொள்ள உதவிடும் பொருட்டு எல்லாம் வல்லவரை தொடர்ந்து வேண்டிக்கொள்ளவேண்டும் என்பதே பாதுகாவலரின் அவா.

 

...உண்மையான பக்தர், பிரார்த்திக்கும் போது, தாம் வேண்டுவனவற்றையும், இச்சிப்பனவற்றையும், நிறைவு செய்யவேண்டுமென இறைவனை கேட்பதைவிட, தமது தேவைகளையெல்லாம் சரிப்படுத்தி, தெய்வீக விருப்பத்திற்கு அவை யாவற்றையும் இணங்கிடச் செய்யவேண்டும். இவ்வித மனப்பாங்கினால் மட்டுமே, பிரார்த்தனையின் சக்தி வழங்கக்கூடிய அந்த அக அமைதியையும் திருப்தியையும் பெறலாம்.27

 

“நாம் ஏன் பிரார்த்திக்கின்றோம்?” என்பதின் இறுதிப் பகுதியாக, பாப் மற்றும் பஹாவுல்லா அவர்களின் நினைவாலயங்களில், நேர்வு நிருபங்களிலிருந்து வாசிக்கப்படும் வார்த்தைகளை இங்கு நினைவு கூற விரும்புகிறேன். “என் கடவுளே, என் நேசரே, தங்களது கருணைக் கரங்களிலிருந்தும், அன்புக் கடலிலிருந்தும் தெய்வீகத் தயவை என்மீது வீசச் செய்வீராக. அதனால் என்னை என்னிடமிருந்தும், இவ்வுலகிலிருந்தும் விடுவித்துத் தங்களது முன்னிலை என்னும் அரசவையை அடையச் செய்வீராக”

 

பிரார்த்திக்கும் போது: “உமதருகாமையே எனது நம்பிக்கை”28, “எவரது அருகாமையே எனது ஆவலாக உள்ளவரே”29; உமது அருகாமையே உமது அன்பர்களாக உள்ளவர்களின் உண்மையான வாழ்வு ஆகும்.”30 என பல தடவைகள் படிக்கின்றோம். புறமுகமாக இறைவனின் ஆணைக்குட்பட்டு செய்யும் ஒரு செயலாக இது இருந்த போதும், ஆண்டவனால் ஏற்றுக் கொள்ளப்படும் வரை, நாம் புரிவது உயிரற்ற ஒரு ஜடச் செயலையே. ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அச்செய்கை உயிரற்றதாகிவிடும். தூய்மையான நோக்கத்துடனும், பற்றின்மையுடனும், உண்மையான அன்புடனும், பனிவுடனும் செய்யப்படும் செயல்களையே இறைவன் ஏற்றுக்கொள்வார். பஹாவுல்லாவின் பின்வரும் வார்த்தைகளை கவனிக்கவும்: “ - “எல்லா செயல்களுக்கும் ஜீவனாகத் திகழ்வது எமது நல்விருப்பம்தான், அனைத்தும் எமது ஏற்பினையே சார்ந்து உள்ளது.”31 இது அதி புனித நூலில் காணக் கிடைக்கின்றது. ஒரு காரியத்தைக் கண்டு கரகோஷித்து, “சபாஷ்” என, மக்கள் கூறுவதும் அல்லது நினைப்பது அனைத்தும், அர்த்தம் அற்றவையே. இங்கு உண்மையில் கணக்கில் சேரக்கூடியது, ஆண்டவன் ஒரு செயலை ஏற்றுக் கொண்டுள்ளாரா இல்லையா என்பது மட்டுமே, மனிதர்கள் அச்செயலை கண்டும், பாராட்டவும் செய்கிறார்கள் என்பது மட்டும் அன்று.

 

இ. பிரார்த்தனையின் போது எங்கு, யாரை நோக்கி திரும்ப வேண்டும்?

 

நான் நினைத்ததை கூறுவதைவிட, பாதுகாவலரின் சார்பில் எழுதப்பட்ட கடிதங்களிலிருந்து ஒரு 6 பகுதிகளை இங்கு படிக்க விரும்புகிறேன். இவ்விஷயம் குறித்து 6 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அவர் அனைத்திற்கும் பதிலளித்தார். அவரது பதில்களிலிருந்து கேள்விகள் யாவை என்பது உங்களுக்கு புரிய வரும்:

 

1. ”இறைவனுடனான நமது தொடர்புக்கு, மற்ற உலகங்களில் இருந்தபடி, இறைத்தூதரே நமக்கு வாசலாக தொடர்ந்து இருக்கின்ற காரணத்தினால், பிரார்த்திக்கும் போது அவரை நோக்கித் திரும்புவதே நல்லது. இருந்தபோதும், நேரடியாக ஆண்டவனை நோக்கியும் பிரார்த்திக்கலாம்.”32

 

2. ...செடி, தனக்குத் தேவையான உயிரூட்டத்தையும் வளர்ச்சியையும் பெறக்கூடிய சூரிய ஒளியை நோக்கி வளருவது போல் — பிரார்த்திக்கும் போது நாமும் நமது உள்ளங்களை, இறைவனின் தூதரான பஹாவுல்லாவை நோக்கி திருப்புகிறோம்...33

 

3. பஹாவுல்லாவிற்கும் அப்பால் நமது பிரார்த்தனைகள் போகுமா என நீங்கள் வினவியுள்ளீர்: இது அவரை நோக்கி நாம் நேரடியாக பிரார்த்திக்கின்றோமா அல்லது அவர் மூலமாக இறைவனை நோக்கி பிரார்த்திக்கின்றோமா என்பதை பொறுத்த ஒரு விஷயம். இரண்டையுமே நாம் செய்யலாம் மற்றும் இறைவனை நோக்கி நேரடியாகவும் பிரார்த்திக்கலாம். ஆனால், அவரது தூதாரான பஹாவுல்லாவின் மூலமாக நாம் நமது பிரார்த்தனைகளைசெலுத்தும்போது அவை நிச்சயமாக அதிக ஆக்கமுடையவையாகின்றன.34

 

4. பிரார்த்தனையின் போது நம்பிக்கையாளர்கள் தங்களது பிரக்ஞையை பஹாவுல்லாவின் நினைவாலயத்தின்பால் மையப்படுத்தலாம். அதாவது, அப்படி செய்கையில் பஹாவுல்லா இறைவனின் தூதர் எனும் நிலை குறித்த தெளிவான மற்றும் சரியான புறிந்துகொள்ளல் பெற்றிருக்க வேண்டும்.

 

5. பிரார்த்திக்கும் போது யாரையாவது மனக்கண்னில் நிறுத்த வேண்டும் எனும் தேவை இருப்பின், அப்துல் பஹாவை மனதில் சிந்தியுங்கள். அவர் மூலமாக பஹாவுல்லாவிடம் தொடர்பு கொள்ளலாம். பிறகு சிறிது சிறிதாக இறைத்தூதரின் இயல்புகளைப் பற்றி சிந்திக்க முயலுங்கள், அதன் மூலமாக மனக்காட்சி சிறுக சிறுக மறைந்துவிடும். ஏனெனில், உருவம் விஷயமாகாது. அங்குள்ள அவரது ஆவியே, அவசியமான, என்றும் நிலையான அம்சம்.

 

6. உமது கேள்வி குறித்து: பிரார்த்திக்கும் விதத்தில் நாம் பிடிவாதமாக இருக்கக்கூடாது; அதை உட்படுத்தக்கூடிய விதிமுறைகள் எதுவும் கிடையாது; இறைவன், இறைத்தூதர், அப்துல் பஹா, பாதுகாவலர் ஆகியோர் பற்றிய சரியான அகட்பார்வையுடன் துவங்குவது நமக்கு அனைத்திலும் முக்கியமானது. நாம் பிரார்த்திக்கும் போது, அவர்களில் எவரையும் நோக்கி எண்ணத்தை திருப்பலாம். உதாரணமாக, பஹாவுல்லாவிடம் ஏதேனும் கேட்கலாம், அல்லது, அது குறித்து அவரை நினைத்து இறைவனிடம் யாசிக்கலாம். அப்துல் பஹா மற்றும் பாதுகாவலர் ஆகியோருக்கும் இது பொருந்தும். அவர்களில் ஒருவரை மனதால் நினைத்து, அவரது பரிந்துரைப்பை வேண்டலாம், அல்லது இறைவனை நோக்கி நேரடியாக பிரார்த்திக்கலாம். அவர்களுடைய ஸ்தானங்கள் குறித்து குழப்பம் இல்லாதவரை, அவர்கள் அனைவரையும் சமமாக நினையாதவரை, நீங்கள் உங்கள் சிந்தனைகளை எங்கு மையப்படுத்துகிறீர்கள் என்பது அவ்வளவு முக்கியமானதல்ல.

 

ஈ. பிரார்த்தனையின் சக்திக்கூறுகள் பற்றி ஒரு சில சிந்தனைகள்:

 

இப்போது, நீங்கள் உங்களை சாசுவதப் படுத்திக்கொண்டு மற்ற விஷயங்கள் பற்றிய எண்ணங்களில் மூழ்கலாம். (எனது சொந்த கருத்துக்கள் அடங்கிய) இந்தப் பகுதியை நீங்கள் செமடுக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல.

 

முதலாவதாக, நமது சமயத்தில், பிரார்த்திப்பதற்கும் தியானிப்பதற்கும் உறுதியாக வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் கிடையாது. இறைவனின் வழிமுறைகளின் எண்ணிக்கை அவரது உயிரினங்கள் விடும் மூச்சின் எண்ணிக்கையளவு இருக்கும் என ஏறக்குறைய அறிவிக்கும் இஸ்லாத்திய பழமொழி ஒன்றை தமது நிருபம் ஒன்றில் அப்துல் பஹா, உறுதிபடுத்தியும் குறிப்பிட்டும் உள்ளார்.37

 

ஷோகி எஃபெண்டி:

 

போதனைகளில், தியானம் செய்யும் முறைகளென எதுவும் ஸ்தாபிக்கப் படவில்லை. ஆகையால், அக மேம்பாட்டிற்கென எந்த ஒரு முறையான திட்டமும் கிடையாது. அன்பர்கள் பிரார்த்திக்கத் தூண்டப்படுகிறார்கள் — அல்ல வற்புறுத்தவே படுகிறார்கள், மற்றும் அவர்கள் தியானிக்கவும் வேண்டும், ஆனால் அதை எவ்விதத்தில் செயல் படுத்துவதென்பது தனிநபர்களிடமே விடப்பட்டுள்ளது.38

 

பிறரால் உருவாக்கப்பட்டுள்ள தியான முறைகளை பயன்படுத்துவதை விட பஹாய்கள் பஹாவுல்லா அவர்களால் கொடுக்கப்பட்டுள்ள தியானவாசகங்களை பயன்படுத்துவதே மிகுந்த விவேகமுடையதாகும் என அவர் கருதுகின்றார்; ஆனால் நம்பிக்கையாளர்கள் இது குறித்த விஷயங்களில் தன்னிச்சையுடன் செயல்பட விடப்படவும், இறைவனுடனான தொடர்பை எந்த அளவில் கொள்ள விரும்புகிறார்கள் என்பதில் அவர்களுக்கு சுய சுதந்திரமும் அளிக்கப்படவும் வேண்டும்.39

 

பிரார்த்தனைக்கு தகுந்த ஆயத்தம் செய்வது மிகவும் முக்கியமானது. திடீரென்று ஒரு ஆன்மீக நிலையை நாம் எய்திட முடியாது. இதற்கு தயார் செய்யவேண்டும். உதாரணமாக, பிரார்த்தனைக்கு முன்பு ஏன் உடல் சுத்தி செய்கிறோம்? அது நம்மை தயார்செய்வதற்காக. கித்தாப்-இ-அக்தாசின் கேள்வியும் பதில்களும் பகுதியில், “குளித்திருந்தாலும் உடல் சுத்தி செய்ய வேண்டுமா?” என பஹாவுல்லாவிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர் அதற்கு, ஆமாம், செய்யவேண்டும், எனக் கூறியுள்ளார்.40 ஏன் அப்படி? ஏனென்றால், உடல் சுத்தி செய்வது சுத்தம் சம்பந்தமானது மட்டும் அல்ல.அது ஒரு தயார் நிலையை அடைவதையும் உள்ளடக்கியது. நாம் பிரார்த்தனைக்கான மனோநிலையை அடையவேண்டும். மற்றொரு உதாரணமாக, மாஷ்ருக்குல் அஸ்கார் எனப்படும் பஹாய் கோவிலுக்கு செல்வது குறித்து பஹாவுல்லா என்ன விதிகளை உருவாக்கியுள்ளார்? அவர் கூறுவதாவது: கோவிலை நோக்கி நாம் அடியெடுத்து வைக்கையில், நாம் நமது எண்ணங்களை இறைவன்பால் மையப்படுத்தியும், அவரது ஞாபகமாகவே இருந்தும், அவரது மன்னிப்பை வேண்டிக்கொண்டும் இருக்கவேண்டும்.41 நாம் கோவிலுக்குள் இன்னும் நுழையவில்லை, ஆனால் அதை நோக்கியபடி சென்றுகொண்டிருக்கும் போதே இந்த விதியை பின்பற்ற வேண்டும். நாம் கோவிலை நோக்கி நடந்துகொண்டிருக்கும் போதே இவ்விதமான பக்தி மயமானதும் பிரார்த்தனை மயமானதுமான ஒரு மனோ நிலையை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என பஹாவுல்லா கூறுகிறார். இது கோவிலை நாம் அடைவதற்கு முன்பாக நடை பெற வேண்டும். “அவர் நுழையும் போது, இறைவனின் திருவாசகங்களை செவிமடுத்திட அமைதியுடன் கீழே உட்காரட்டும்...”42 என பஹாவுல்லா மேலும் கூறுகிறார்.

 

மேலும் ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஹைஃபாவிலும் பா‹ஜியிலும் பாதுகாவலர் தோட்டங்களை உருவாக்கியுள்ள விதத்தைப் பார்ப்போம். பா‹ஜி மிகவும் விருவிருப்பான ஒரு தோற்றத்தை தருகிறது. நாம் வடக்கு வாசலில் இருந்து வருகிறோம்; வரும்போது மேலும் ஒரு வாசலை காண்கின்றோம், அதாவது கோல்லின்ஸ் வாசல். நாம் நுழைகின்றோம். நினைவாலயத்திலிருந்து சுமார் 95 மீட்டர் தூரத்தில் உள்ள இந்த இடத்தை, அதி புனித மாளிகையான, ஹராம்-இ-அக்தாசின் நுழைவாயில் என பாதுகாவலர் வருணிக்கின்றார். நாம் இந்த சபையினுள் நுழைகின்றோம்; நாம் மேலும் ஒரு நுழைவாயிலுக்கு வருகின்றோம். நமது காலனிகளை கழற்றுகின்றோம். ஒரு சில படிகளை கடந்து கீழே இறங்குகின்றோம். இப்போதும் நாம் அந்த இடத்தை அடையவில்லை. நாம் நுழைந்து வலது புறம் திரும்பியவுடன் நினைவாலயத்திற்கு ஆக உட்புறமாக உள்ள இடத்தை அடைகிறோம். சரி, ஆன்மாவுக்கு இது நல்ல ஒரு தயார் நிலையாக இருக்கின்றது அல்லவா? வாசல் வரை வாடகை வாகனத்திலோ, ஊர்தியிலோ வந்து கீழே குதித்தவுடன் நுழைந்துவிடக் கூடிய பல தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், மாதாகோவில்கள் போன்றவற்றிற்கு செல்வதை இந்த அனுகுமுறையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பா‹ஜி அவ்விதமாக இல்லவே இல்லை. பஹாய் கோவில்களைச் சுற்றிலும் நமக்கு தகுந்த மனோ நிலையை உருவாக்கக்கூடிய பூங்காக்களும் தோட்டங்களும் வடிவமைக்கப்படவுள்ளன! ஆக, தகுந்த மனோநிலையை உருவாக்கிக்கொள்வது மிகவும் முக்கியம் என நான் நினைக்கின்றேன். பிரார்த்தனை ஒரு ஏணியைப் போன்றது, அதன் மூலம் நாம் சுவர்க்கத்தை அடையலாம் என முகமது நபியவர்கள் கூறியுள்ளார்.43 அது ஒரு ஏணியாக இருக்குமேயானால், அதை நான் முதலில் கையிற் பிடித்து, நிலையில் நிறுத்தி, அதன் மேல் ஏற வேண்டும். இது சிறிது நேரம் பிடிக்கும்; இதுவே தயார் செய்வதென்பது.

 

பிறகு நாம் பஹாய் பிரார்த்தனைகளை உபயோகிக்க வேண்டும். பஹாவுல்லா, அப்துல் பஹா, ஷோகி எஃபெண்டி ஆகியோர் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை நாம் கண்டோம். ஒரு பிரார்த்தனை என்ன மனோநிலையில் வாசிக்கப்படுகிறது என்பது மிகவும் முக்கியமானது. “அதன்மூலம் எழுத்துக்களுக்கும் மேலான, மெல்லிய அசைவுகளையும் ஓசைகளையும் கடந்த பிரார்த்தனையானது எங்களின் ஆன்மாவைப் பேரானந்தம் அடையச் செய்து தங்கள் பேரழகின் வெளிப்பாட்டின் முன் உலகப் பொருட்கள் அனைத்தும் ஒருமுகமாய் தன்மையற்றுப் போகுமாறு செய்திடும்.”44 என அப்துல் பஹா கூறுகின்றார். வார்த்தைகளை மட்டும் உரைப்பது வெறும் முனுமுனுப்பு ஒன்றை மட்டுமே உருவாக்கும். படிக்கப்படும் வார்த்தைகளின் அர்த்தத்தின்பால் நமது கவனம் இருக்கவேண்டும். இது நாம் பற்றின்மையை அடைய உதவும்; அகங்காரத்தையும் தான் எனும் தன்மையையும், நமது தேவைகளையும் கவலைகளையும் விடுத்திட உதவும். இப்படியாக, பஹாவுல்லா கூறுவது போல், நம்மை விட்டும் இவ்வுலகினை விட்டும் நாம் தூர விலகிச் சென்றிடலாம்.45 பிரார்த்தனை செயற்பாட்டின் ஒரு பகுதி இது. இதுவே தியானம் செய்வதின் ஒரு நன்மை.

 

அதற்கு பிறகு, இறைவனோடு தனிப்பட்ட ஒரு உரையாடல் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, தினசரிகளில், இறைவன் இறந்துவிட்டார், என கேள்விப்படுவதும் அல்லது படிப்பதும் சாதரணமாக நடக்கக்கூடிய ஒன்று. டைம்ஸ் சஞ்சிகையிலும், தினசரிகளிலும், இத்தலைப்பில் பல கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன. தெய்வச் சமயத் திருக்கரம் திரு வில்லியம் சியர்ஸ் அவர்கள், நமது சமயத்தை பற்றி ஒரு சொற்பொழிவாற்றினார். கேள்வி நேரத்தின்போது யாரோ ஒருவர் எழுந்து, “கடவுள் இறந்து விட்டார் எனக் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” எனக் கேள்வி கேட்டார். விசேஷமான தமக்கே உரித்தான நகைச்சுவை கலந்து, “எனக்குத் தெரியாது. ஆனால் இன்று காலை நான் அவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவர் நன்றாகத்தான் இருந்தார்,” எனக் கூறினார்.

 

இந்த கதையை நான் ஞாபகத்தில் வைத்திருப்பதன் காரணம், “உரையாடல்” எனும் அந்த வார்த்தையினாலேயே. ஏனெனில், நமது அன்பருடன் நாம் உண்மையிலேயே உரையாடவே செய்கின்றோம். இறைவனோடு உரையாட ஒரே ஒரு நேரம் உள்ளது, அதாவது அவருடன் தனிப்பட்ட, சுயமான, அமைதியான முறையில் உரையாடுவது. நமது ஆற்றாமை குறித்தும் குறைபாடுகள் குறித்தும் நான் ஏற்கனவே கூறியதை நினைவு கூறுங்கள். நாம் இறைவனோடு தனிமையில் உரையாடும்போது அவற்றை அவரிடம் எடுத்துக் கூறலாம். பாப் அவர்கள் கூறியதை ஞாபகப்படுத்திக்கொள்ளவும் இதுவே தகுந்த நேரம்: “நீங்கள் பிரார்த்திக்கும் போது, உங்கள் பெற்றோர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், ஏனென்றால், உங்கள் பெற்றோர்கள் சார்பாக நீங்கள் கேட்பதின் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உரியதாகும்.”46 நமக்காக மட்டும் அல்ல, பிறருக்காக பிரார்த்திப்பதற்கும் இதுவே நேரம். நமக்கு கெட்டது செய்தவர்களை ஆண்டவன் மன்னிப்பதற்காக பிரார்த்திக்க வேண்டியதின் முக்கியத்துவம் குறித்த இயேசு நாதரின் வார்த்தைகள் பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா அவர்களின் வாசகங்களில் மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கப் பட்டுள்ள சிந்தனைகளே. பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா அவர்களின் வாசகங்களில் மறு உறுதிப்படுத்தப் பட்ட ஒரு கிருஸ்தவ போதனையே இது. உதாரணமாக, நண்பர் ஒருவர் ஒரு தப்பு செய்துவிட்டார் எனத் தெரிய வந்தால், மற்றவர்கள் அவரை மன்னித்தும் அவரது குறையை கண்டுகொள்ளாமலும் இருக்கவேண்டும். ஏனெனில், அவர்களது தவறான நடத்தையையும் அவ்வாறே தேவர் அப்போது மன்னிப்பார்.”47 இவ்விதமாக நமது மனக்குறைகளை நாம் கொட்டிவிட்ட பிறகு, மேலும் குறைகள் ஏதும் இருக்குமாயின், அதை மிகுந்த பனிவுடன் அவர் முன் பிரஸ்தாபித்து, “நான் என்ன செய்வது?” எனக் கூறலாம். இங்குதான் பாதுகாவலர் ரூத் மொஃபெட்டுக்கு விளக்கிய அந்த முறையை பயன்படுத்தவேண்டும்.

 

உ. பிரார்த்தனையின் மூலம் தன்மை மாற்றம் பெறுவது.

 

தன்மை மாற்றம் குறித்த முக்கியத்துவம், பஹாவுல்லாவின் திருவாசகங்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயம். மனிதர்களின் தன்மை மாற்றமே இவ்வுலகிற்கு இறைத்தூதர்கள் வரும் காரணமாகவுள்ளது. அதாவது, தனிமனிதர்களின் மற்றும் சமூகத்தின் தன்மை மாற்றம். பாதுகாவலர், இந்த தன்மை மாற்றம் குறித்த விஷயத்தை எடுத்து பிரார்த்தனையோடும், நமது சுயமாகத் தேர்வு செய்யும் சக்தியுடனும் அதை தொடர்புபடுத்தியுள்ளார். அவரது அறிவுரையை பார்ப்போம்:

 

...மனிதனை இறைவனோடு இனைக்கும் அந்த தெய்வீகமான உணர்வே சமய நம்பிக்கையின் நடு மையமாகவுள்ளது. தியானத்தின் மூலமாகவும் பிரார்த்தனையின் மூலமாகவும் உருவாக்கப்படவும் காப்பாற்றப்படுவும் கூடியதாக இவ்வித ஆன்மீக தொடர்பு உள்ளது... மனிதனின் ஆன்மாவே முதலில் ஊட்டம் தரப்படவேண்டியதாக உள்ளது. பிரார்த்தனையே இந்த ஆன்மீக ஊட்டத்தை சிறப்புடன் வழங்கமுடியும்.48

 

உங்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்கு புனித நினைவாலயங்களில் பிரார்த்திப்பதாக அவர் மீண்டும் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகின்றார். நமது நடத்தையை இறைவனின் சக்தி முற்றாக தன்மைமாற்றம் செய்யவல்லது மற்றும் நமது முன்னைய நிலையிலிருந்து முற்றாக வேறுபட்ட படைப்புகளாக நம்மை ஆக்கவும் கூடியது.49

 

நாம் இதை புறிந்துகொள்வது மிகவும் முக்கியம்: “இறைவனின் சக்தி நமது நடத்தையை முற்றாக நிலை மாற்றம் செய்தும், நமது பழைய நிலையை பார்க்கிலும் முற்றிலும் வேறுபட்ட ஜீவன்களாக மாற்றவும் கூடியது.” அந்தோ! எத்துனை முறை, “என்னால் மாற முடியவில்லையே?” என நமக்கு நாமே கூறிக்கொண்டிருப்போம். நாம் ஏன் மாற முடியாது? நாம் நிச்சயமாக மாறமுடியும்! பிரார்த்தனை மற்றும் மன்றாடல்கள் மூலமாகவும், பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ள தெய்வீக விதிகளுக்கு கீழ்படிதலின் மூலமாகவும், அவரது சமயத்திற்கு அதிகரித்துக் கொண்டே போகும் சேவையின் மூலமாகவும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள முடியும். மறுபடியும் ஷோகி எஃபெண்டி கூறுவதை பார்ப்போம்:

 

மனித நடத்தையை மறுமலர்ச்சி பெறச் செய்யக்கூடிய ஒரு சமயமான இதை மற்றவர்கள் தழுவிட உந்துதல் தரக்கூடிய அளவு தங்களது சொந்த வாழ்விலும் நடத்தையிலும் நம்பிக்கையாளர்கள் சிறந்த உதாரணங்களாக இருக்க கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும் என்பதை, நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, அகங்காரத்தின் மீதான வெற்றியை எல்லோருமே சுலபமாகவும் துரிதமாகவும் அடைவதில்லை.நாம் அனுமதித்தோமானால், நம்மை புணருவாக்கம் செய்யக்கூடிய ஆன்மீக சக்தியை சமயம், உள்ளடக்கியுள்ளது என்பதை, புதியவரோ பழையவரோ, எல்லா நம்பிக்கையாளர்களும் அறிய வேண்டும். மற்றும், இந்த முயற்சிக்கு பிரார்த்தனையே பேருதவியாக இருக்கின்றது. நம்மை நாமே வெற்றிகொள்ள நமது தன்னிச்சை சக்திகளை அடக்கிட பஹாவுல்லாவிடம் மன்றாட வேண்டும்.50

 

இதுகாறும் மொழிமாற்றம் செய்யப்படாத அப்துல் பஹாவின் நிருபம் ஒன்றில், பிரார்த்தனையின் சக்தியை மின்சாரத்திற்கு இனையாக அவர் உதாரணப்படுத்தியுள்ளார். நம்பிக்கையாளர் தனது இதயத்திலிருந்து வெளிப்படும் மின்கம்பிபோலுள்ள ஒன்றை விண்ணுலகத் திருக்கூட்டத்தினருடன் தொடர்புபடுத்த முயற்சி செய்திட வேண்டும் என அவர் கூறியுள்ளார். அதன்மூலமாக, “தெய்வீக ஆதரவினை பெறக்கூடிய நிலையில் நீ இருப்பாய்”51 என திடமாகக் கூறுகின்றார். இறைவன்பாலான பக்தர்களின் அன்பும், திருவொப்பந்தத்தின் மீது அவர்களது முழு உறுதியுமே அந்த மின்கம்பியின் வழி பாயும் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. தமது நிருபம் ஒன்றில், “இரவும் பகலும், பெரும்பாலான நேரம், பிரார்த்தனை மனப்பாங்குடனேயே நான் உள்ளேன்,”52 எனக் கூறுகின்றார். அவர் நமக்கெல்லாம் பூரண உதாரண புருஷர். நாம், நாளொரு முறை, அல்லது வாரம் ஒரு முறை, அல்லது பத்தொன்பது நாட்களுக்கு ஒரு முறை — அல்லது வருடம் ஒரு முறை, என பிரார்த்தனை செய்வதில்லை. அவர் கூறுவதாவது, “இரவும் பகலும், பெரும்பாலான நேரம், பிரார்த்தனை மனப்பாங்குடனேயே நான் உள்ளேன்,” என்பதாகும். நாமும் அதுபோலவே இருக்க முயற்சி செய்ய வேண்டும். எல்லா நேரமும் இறைவனுடன் இனைந்திருக்கவே நாம் விரும்ப வேண்டும். அவர் நம் கூடவே இருக்கின்றார் என்பதை நாம் உணர வேண்டும். எல்லா நேரங்களிலும் அவர்பாலான நமது அன்பை அவருக்கு வெளிப்படுத்த வேண்டும். நாம் எவ்வளவு பலவீனமானவர்களாக இருக்கின்றோம், எவ்வளவு வறிய நிலையில் இருக்கின்றோம், அவரை நம்பிய நிலையில் எந்தளவு இருக்கின்றோம் என்பதை நாம் அவருக்கு சதா தெரிவிக்க வேண்டும். யாவற்றையும்-பார்ப்பவரும் யாவற்றையும்-செவிமடுப்பவரான ஒரு இறைவனையே நாம் நம்புகின்றோம். அவரே குறிப்பிடும், “துயிலாத கண்”53 எனும் கண்ணைக் கொண்டுள்ளவர் அவர். புலப்படுவனவற்றையும் புலப்படாதவற்றையும் அக்கண்னை கொண்டே பார்க்கின்றார். மேலும், அவர் பிரார்த்தனைக்கு பதில் தரும் இறைவன். பனிவுடனும் அன்புடனும் சமர்ப்பிக்கப்படும் பிரார்த்தனைகளுக்கு அவர் பதிலளிப்பார். அவர் சர்வ-கொடையாளி, சர்வ-தயாளம் மிக்கவர், அதே சமயம் அவர் சர்வ-ஞானி, சர்வ-விவேகி. நமக்கு நல்லவற்றையும் கெட்டவற்றையும் அவர் அறிவார். நாம் நம்மைப்பற்றி அறிந்திருப்பதை விட அவர் நமது உள்நிலையை நன்கறிவார். நாம் பிறரது குறைகளையும், தவறுகளையும் மன்னிக்கவும் மறக்கவும் தயார் என்றால், நமது தோல்விகளையும் குறைபாடுகளையும் மன்னிக்க அவர் என்றும் தயாராக உள்ளார். எல்லா சக்திகளையும், மேன்மைகளையும், ஆதிபத்யங்களையும் அவர் தமது கைப்பிடியில் வைத்துள்ளார். கண் சிமிட்டும் நேரத்தில் நாம் வேண்டுவனவற்றை அவர் கொடுக்க வல்லவர். உறுதிப்பாடாக வளர்ந்துவிட்டிருக்கும் ஒரு நம்பிக்கையை, அவர் நம்மில் காண விரும்புகின்றார். நாம் நேசர்களாகவும் அதே சமயம் நம்பிக்கையாளர்களாகவும் இருப்பதை அவர் விரும்புகிறார். நமது உத்தேசங்கள் தூய்மையானவையா அல்லவா என்பதை தீர்மாணிக்க வல்லவர் அவர் ஒருவரே. நாம் நம்மை அவருக்கு அர்ப்பணித்திட வேண்டும். எவ்வளவுதான் தகுதியற்றவர்களாக இருப்பினும், நம்மை கருவிகளாக பயன்படுத்திட அவரை வேண்டிக்கொள்ளவேண்டும். நாம் விரும்பினால் அவர் நம்மை நிலைமாற்றம் செய்யக் கூடியவர்; நம்மை புனர் உருவாக்கம் செய்யக்கூடியவர்; நம்மை “புதிய படைப்புகளாக”54 செய்யக்கூடியவர் அவர். நமது சொந்த வாழ்க்கையிலும் அவரது சமயத்தின்பாலான சேவையிலும் நமது அதி உயர்ந்த வேட்கைகளின் முழுமையான மற்றும் முடிவான நிறைவேற்றங்களை கண்ணுற நமக்கு உதவிடுவார். இப்படிப்பட்டவரே நாம் கண்டுணர்ந்துள்ள இறைவன். இப்படிப்பட்டவரே நாம் நம்பிக்கை கொண்டுள்ள இறைவன். அனிதினமும் அவரை சிறிது சிறிதாக நெருங்கியும், அவரது நல்விருப்பத்தை பெற்றிடவும் முயற்சி செய்திடுவோமாக.

 

குறிப்புகள்:

1. மறைமொழிகள், பஹாவுல்லா, #4 அரபு
2. மறைமொழிகள், பஹாவுல்லா, #13 அரபு
3. மறைமொழிகள், பஹாவுல்லா, #16 அரபு
4. பாரீஸ் பேருரைகள், அப்துல் பஹா, 12வது பதிப்பு; ப. 189
5. மறைமொழிகள், பஹாவுல்லா, #32 பாரசீகம்
6. தற்காலிக மொழிபெயர்ப்பு, இந்த உரைக்காக
7. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1732, ப. 228
8. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1737 பக். 230;
9. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1745, பக். 232;
10. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1753, பக். 235;
11. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1734, பக். 229;
12. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1735. பக். 229
13. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1754. பக். 235
14. பிரார்த்தனைகளும் தியானங்களும், பஹாவுல்லா, பக் 47
15. பிரார்த்தனைகளும் தியானங்களும், பஹாவுல்லா, பக் 89
16. பிரார்த்தனைகளும் தியானங்களும், பஹாவுல்லா, பக் 257
17. தற்காலிக மொழிபெயர்ப்பு, இந்த உரைக்காக
18. தற்காலிக மொழிபெயர்ப்பு, இந்த உரைக்காக
19. கித்தாப்-இ-அக்தாஸ், கேள்வியும் பதிலும், பகுதி 82. பக். 142-143 (தமிழ்)
20. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1755, ப. 236
21. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1756 பக். 236
22. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1731, பக் 228
23. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1722, பக். 225
24. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1730, பக். 228
25. பாதுகாவலரின் சார்பாக எழுதப்பட்ட, பிரசுரிக்கப்படாத கடிதம், 22 ஆகஸ்ட் 1957
26. பாதுகாவலரின் சார்பாக எழுதப்பட்ட, பிரசுரிக்கப்படாத கடிதம், 9 பிப்ரவரி 1949
27. திரட்டுகளின் திரட்டு, கோப்பு, பகுதி 1768, ப. 239-240
28. பிரார்த்தனைகளும் தியானங்களும், பஹாவுல்லா, பக். 262
29. பிரார்த்தனைகளும் தியானங்களும், பஹாவுல்லா, பக். 174
30. பிரார்த்தனைகளும் தியானங்களும், பஹாவுல்லா, பக். 78
31. கித்தாப்-இ-அக்தாஸ், பகுதி 36, பக். 36 (தமிழ்)
32. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1764, ப. 239
33. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1780, ப. 243
34. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1765, ப. 239
35. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1760, ப. 237
36. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1779, ப. 242
37. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1776, ப. 242
38. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1771, ப. 240
39. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1782, ப. 243
40. கித்தாப்-இ-அக்தாஸ், பஹாவுல்லா, கேள்வியும் பதிலும், பகுதி 18, பக். 124 (தமிழ்)
41. கித்தாப்-இ-அக்தாஸ், பகுதி 115, பக் 69
42. கித்தாப்-இ-அக்தாஸ், பகுதி 115, பக் 69
43. பஹாவுல்லாவும் புதிய யுகமும், பக் 88
44. பஹாய் பிரார்த்தனைகள், தமிழ், பக். 27-28
45. பஹாய் பிரார்த்தனைகள், தமிழ், பக். 131
46. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1733, ப. 228
47. தற்காலிக மொழிபெயர்ப்பு, இந்த உரைக்காக
48. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1762, ப. 238
49. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1770, ப. 240
50. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1773, ப. 2241
51. தற்காலிக மொழிபெயர்ப்பு, இந்த உரைக்காக
52. தற்காலிக மொழிபெயர்ப்பு, இந்த உரைக்காக
53. பஹாய் பிரார்த்தனைகள், பக். 60. (ஆங்கிலம்)
54. பொறுக்கு மணிகள், பஹாவுல்லா, வில்மட், பக். 29.