போதனை

திரு அடிப் தாஹெர்ஸாடே

 

 

இல்லம்

 

பஹாவுல்லாவின் திருவெளிப்பாடு பல அற்புதமான கோட்பாடுகளை நமக்குக் வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்றாக இறைவனின் சமயத்தை போதிக்கவேண்டும் எனும் கட்டளை விளங்குகிறது. மற்றவர்கள் அங்கத்துவ எண்ணிக்கையினை அதிகரிப்பதற்காக சமய போதனை செய்கின்றனர், ஆனால் பஹாவுல்லாவின் சமயத்தில், நம்பிக்கையாளர்கள், இறைவன் மீதான தமது பக்தியை வெளிப்படுத்தும் மிகவும் போற்றுதற்குறிய ஒரு செயலாக சமய போதனை கருதப்படுகிறது. கீழ்க்காணும் வார்த்தைகளால் பஹாவுல்லா தமது நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கின்றார்: “பஹாவின் மக்களே! இறைவனின் சமயத்தை போதியுங்கள், ஏனெனில், மிகவும் போற்றுதற்குறியதொரு நற்செயலென அவர் கருதும், தமது செய்தியை போதிக்கும் கடமையை இறைவன் ஒவ்வொருவருக்கும் விதித்துள்ளார்.” மேலும் அப்துல் பஹா அவர்கள் கூறுவது: “சமய போதனை மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில், அஸ்திவாரத்திற்கே அது அடிக்கல் போன்றது.”

 

போதனையின் முடிவில் அங்கத்தினர் எண்ணிக்கை அதிகரித்தபோதும், போதனையின் முக்கிய நோக்கம் அங்கத்தினர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது மட்டும் அல்ல. அதன் அடிப்படை நோக்கம் பஹாவுல்லாவை தனிமனிதர் ஒவ்வொருவரும் அறிந்து, அவர்பால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதே ஆகும். ஒர் ஆத்மா தனது ஆண்டவர்பால் ஈர்க்கப்படுவதைவிட சர்வ சிருஷ்டியிலும் முக்கியமானது வேறெதுவுமில்லை. லௌகீக உலகில், பூமிக்கும் அதன் ஆகர்ஷண சக்தியின் சூழலில் சிக்குறும் ஒவ்வொரு வஸ்துவிற்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு சக்தியை பார்க்கின்றோம். யாவற்றையும் பூமி தன்பால் ஈர்த்துக்கொள்கின்றது. சகல வஸ்துக்களின் நோக்கமும் பூமியை அடைந்து அதனோடு ஒன்றித்து இருப்பதுமே ஆகும். இதே போன்றதொரு விதி படைப்பினங்களை அவற்றின் படைப்பாளரின்பால் பிணைக்கின்றது. ஆன்மா இறைவனின் உலகங்களின்பால் ஈர்க்கப்படுகின்றது. ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் இடையே உள்ள தடைகள் அகற்றப்பட்டால், தனிமனிதன் தன் இறுதி இலக்கை அடைந்துவிடுகின்றான். உண்மையாகவே, சமய போதனை என்பது இது போன்ற தடைகளை அகற்றும் ஒரு அரிய செயலாகும். ஓர் ஆன்மா பஹாவுல்லாவை கண்டுக்கொள்ளும்போது ஆன்மீக நிலையில் அது தனது ‘வாசஸ்தலத்தை’ அடைகிறது. தமது ஊழியர்கள் தம்பால் முழுமையாக ஈர்க்கப்படுவதன்றி இறைவன் முன்னிலையில் மெச்சப்படக் கூடியது வேறெதுவும் இல்லை. ஒரு பஹாய் போதகரின் நோக்கம், இறைவனின் சமயம் மகிமைப்படுத்தப்பட்டு, அனைவரும் அவரது சமயத்தை ஏற்று, அவரது மேன்மையை வாழ்த்தி, அவர் அருகைமையை அடைவதுமே ஆகும். மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமாக, போதனை என்பது, இறைவனின் நல் அகமகிழ்வைத் தூண்டும் ஒன்றாக உள்ளது.

 

போதனையின் ஆன்மீக சிறப்பு

 

இறைவனுக்கு இரு விஷயங்கள் மகிழ்வைத் தரக்கூடியவை என பஹாவுல்லா தமது நிருபம் ஒன்றில் குறிப்பிடுகின்றார்:- ஒன்று இறைவன்பால் உள்ள பயத்தால் சிந்தப்படும் கண்ணீர், மற்றது சமய உயிர்த்தியாகிகள் ஆண்டவரின் பாதையில் சிந்தும் இரத்தம். ஆனாலும், தியாகமரணம் என்பது எப்போதுமே சாத்தியப்படாத ஒன்றாக இருப்பதாலும், தமது நம்பிக்கையாளர்கள் சுயமாகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய முன்வருதல் கூடாதென்று பஹாவுல்லா அறிவுறுத்தியிருப்பதாலும், அவர் தியாகமரணத்திற்கு இனையான ஒன்றாக போதனையைத் தேர்வு செய்திருக்கின்றார். இறைவன் வகுத்த வழியில் உயிரைத் தியாகம் செய்துள்ளோரின் உயர்ந்த ஸ்தானத்தை நாம் அறிவோம். பஹாவுல்லா தமது மறைமொழிகளில் இவ்வுயர் ஸ்தானத்தை இவ்வாறு பிரகடணஞ் செய்கின்றார்: “ மனிதனின் புத்திரனே! எமது அழகின் மேல் ஆனை! எமது பார்வையில் உன் இரத்தத்தைக் கொண்டு உன் கேசம் தொய்ந்து இருப்பது அண்ட சராசரங்களின் படைப்பையும் இரு உலகங்களின் ஒளியையும் விட உயர்வானது”. மேலும், போதகரது ஸ்தானம் இறைவனின் பார்வையில் மிகவும் உயர்வானதாக இருப்பதால், மற்றொரு நிருபத்தில் பஹாவுல்லா, “இச்சமயம் விளங்குகின்ற காலத்தில், உயிரை காணிக்கையாக்குவதைவிட, விவேகத்துடன் போதிப்பதே சாலச் சிறந்ததாகும்” என குறிப்பிடுகின்றார். ஆகவே, இவ்வருட் செய்தியை வழங்கும் செய்கைக்கு, புறத்தே தென்படுவதைவிட அதன் அகத்தே மிகவும் ஆழமான ஆன்மீகப் பொருள் பொதிந்துகிடக்கக் காணலாம். இறைவனின் பாதையில் தம்முயிரைத் தாரைவார்ப்பதற்கு இனையான, சிறந்த, பக்திபூர்வமான இந்த காரியத்தைச் சாதிப்பதற்கு சில ஆத்மீக முன்தேவைகள் உள்ளன. இவை இல்லாதுபோனால், சமய போதனையானது உயிரற்ற ஜடச் செயலாகி, அதனைச் செவிமடுப்போர் எவரையும் எவ்விதத்திலும் ஈர்க்காது.

 

இம் முன்தேவைகள், பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் வாசகங்களில் காணக்கிடக்கின்றன. பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்கள், வட அமெரிக்க பஹாய்களுக்கான மிக முக்கியமான ஏழாண்டுத் திட்டத்தை வழங்கிய ஒராண்டுக்குப் பிறகு எழுதிய கடிதமான “தெய்வீக நீதியின் வெளிப்பாடு” (ப. 18 - 34), எனப்படும் செய்தியில் இவ்விதமான முன் தேவைகள் சிலவற்றை வரிசைப் படுத்தியுள்ளார். அவற்றை ஒரே வரியில் சுருங்கக் கூறுவோமேயானால்: “பஹாய் போதனைகளுக்கினங்க வாழ்க்கை வாழ்வது,” என்பதே ஆகும்.

 

பஹாய் சமயத்தை போதனை செய்வதற்கான முன் தேவைகள்

 

இந்த முன் தேவைகளை அடையாமல், சமயத்தை போதிப்பதில் எவருமே வெற்றி காண இயாலாது என்பது புனித வாசகங்களை படிப்பதன் மூலம் தெரியவரும். தமது நிருபம் ஒன்றில் பஹாவுல்லா

 

: “தமது சமயத்தை போதிப்பதை ஒவ்வொருவருக்கும் கடமையாக இறைவன் விதித்துள்ளார். எவரொருவர் இக்கடமை நிமித்தம் எழுகின்றாரோ, அவர் இறைவனின் செய்தியை பிரகடனம் செய்வதற்கு முன், தன்னுடைய வார்த்தைகள் அவர் (இறைவன்) கூக்குரல்பால் விழைகின்றோரின் இதயங்களை ஈர்க்கும்பொருட்டு, மேன்மையானதும், வாழ்த்துக்குரியதுமான ஒரு நடத்தையெனும் ஆபரணத்தைக் கொண்டு தம்மை அலங்கரித்துக்கொள்ளட்டும். இது நடைபெறாத நிலையில், அவர் தம்மை செவிமடுப்போரை எவ்விதத்திலும் ஈர்க்க முடியாது.”

 

பஹாவுல்லாவின் இக்கூற்று மாற்றப்படக் கூடியது அல்ல, ஏனெனில்: “இது நடைபெறாத நிலையில், அவர் தம்மை செவிமடுப்போரை எவ்விதத்திலும் ஈர்க்க முடியாது”. “எவ்விதத்திலும் ஈர்க்க முடியாது” எனும் சொற்கள் மிகவும் அழுத்தந் திருத்தமானவையாக இருப்பதால், மாற்று வழி எதனையும் அவை அடைத்துவிடுகின்றன. தம்முடைய நிருபங்கள் பலவற்றில் அப்துல் பஹா அவர்கள்: “இதுவே நோக்கமாகும்: போதகரின் உத்தேசம் தூய்மையாகவும், இதயம் தன்னிச்சையாகவும், ஆன்மா ஈர்க்கப்பட்டும், சிந்தனை நிலையாகவும், தீர்மாணம் உறுதியாகவும், பெருந்தன்மை மேன்மையாகவும், இறைவனின் அன்பில் பிரகாசிக்கும் விளக்காகவும் அவர் இருக்கவேண்டும்,” எனக் கூறுகின்றார். இதுபோன்று அவர் ஆவாராயின், அவருடைய புனித மூச்சானது பாறையைக் கூட பாதிக்கும்; இல்லையேல் எவ்விதமான ஒரு விளைவும் இருக்காது”.

 

இறுதி வாக்கியம் எவ்வளவு ஆணித்தரமாக உள்ளது என்பதை நாம் மீண்டும் கவனிப்போம்: “இல்லையேல் எவ்விதமான ஒரு விளைவும் இருக்காது”. இங்கு, இதே பானியிலான கருத்தமைந்த அப்துல் பஹா அவர்களின் நிருபங்கள் பல உள்ளன. பல கடிதங்களிலும் பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி நம் கவனத்தை இவ்வுண்மையின்பால் ஈர்க்கின்றார். பாதுகாவலர் எழுதிய, நாமெல்லாம் போற்றும் ஒரு கடிதப் பகுதியில் :

 

நாம் முடிவில், சந்தேகக் கண்ணோட்டத்துடனும் குறை கானும் போக்குடனும் உள்ள இன்றைய உலகின் பார்வையில், பெரும் எண்ணிக்கையாலோ, புதிய பல மேன்மைமிகு கோட்பாடுகளின் வியாக்கியானத்தினாலோ அல்லது ஒருங்கினைந்த போதனை நடவடிக்கைகளால் மட்டுமோ - (அதாவது) எவ்வளவுதான் உலகார்ந்தும் விரிவாகவும் அதன் (போதனை நடவடிக்கை) தோற்றம் இருந்த போதிலும் - ஆழ்ந்த நமது சமய நம்பிக்கையினாலோ அல்லது நம்முடயை ஆர்வத்தின் எழுச்சியினால் மட்டுமே என்றில்லாமல், ஒன்றே ஒன்று மட்டும் தானே தனித்து, தவறாமல் இப்புனித சமயத்தின் சந்தேகமற்ற வெற்றியை ஈட்டித் தர இயலும். அஃது, குறிப்பாக எந்த அளவுக்கு பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ள அநாதியான கோட்பாடுகளின் பல கோணங்களிலான மகிமையை நமது அகவாழ்க்கையிலும் பிரத்தியேக நடத்தையிலும் பிரதிபலிக்கின்றோம் என்பதே.

 

இக்குறிப்பில் போதனைக்கான இம்முக்கிய முன் தேவைகளுக்கு, அதாவது “(பஹாய்) வாழ்கையை வாழ்வதற்கு”, பாதுகாவலர், மாற்றுவழிகள் காணப்படவோ அல்லது குறுக்கு வழிகள் ஏற்படுத்தப்படவோ இடம் இல்லாமல் செய்துவிட்டார் (இந்தப் பத்தியில் அவர் குறிப்பாக அழுத்தம் கொடுக்கும் அந்த வரியை மீண்டும் பார்ப்போம்).

 

“ஒன்றே ஒன்று மட்டும் தானே தனித்து, தவறாமல் இப்புனித சமயத்தின் சந்தேகமற்ற வெற்றியை ஈட்டித்தர இயலும், அஃது, குறிப்பாக எந்த அளவுக்கு பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ள அநாதியான கோட்பாடுகளின் பல கோணங்களிலான மகிமையை நமது அகவாழ்க்கையிலும் பிரத்தியேக நடத்தையிலும் பிரதிபலிக்கின்றோம் என்பதே”

 

பஹாய் போதனைகள் சம்பந்தமாக பஹாவுல்லா, அப்துல் பஹா, ஷோகி எஃபெண்டி ஆகியோரின் எழுத்து வடிவங்கள் அடங்கிய குறிப்புகளை உலக நீதி மன்றம் வெளிப்படுத்தியுள்ளது. இவற்றை ஆராயும் போது, ஒரு போதகர், சமயத்துக்கு தம்மை முழுவதுமாக அர்ப்பணித்து, நன்னடத்தை எனும் ஆபரணம் பூண்டு, பஹாவுல்லாவின் போதனைகளுக்கு ஏற்ப வாழும் போது மட்டுமே சமய போதனை வெற்றி காண்கிறது என்பது தெளிவாக விளங்கும்.

 

இவ்வுலகத்தில் பஹாய் நெறியைச் சாராத, ஆனால் தங்கள் கலாச்சார விதிப்படி ஒழுக்கமான வாழ்க்கை வாழும் நல்ல மனிதர்கள் பலர் உள்ளனர். குழந்தைப் பருவத்திலிருந்தே பனிவு, அன்பு மற்றும் பரிவு ஆகியவற்றை வெளிப்படுத்தப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். குழந்தை பருவத்திலிருந்தே உள்ளுரைந்த பல நற்பன்புகள் இவர்களுக்கு இயற்கையாவே அமைந்துள்ளது. பல நல்ல காரியங்களைத் தெரிந்தோ அல்லது பழக்க தோஷத்தினாலோ இவர்கள் செய்கின்றனர். இவர்கள் நிச்சயமாக போற்றப்படவேண்டியவரே. ஆனால், பஹாவுல்லா கொண்டுவந்த ‘நம்பிக்கை அருள் ஆவி’ அற்ற இவர்கள், குறைகள் அற்ற, ஆனால் ஏற்றப்படாத விளக்குகளே. இந்த ரீதியில், பஹாய் வாழ்க்கை வாழ்வதென்பது பஹாவுல்லாவின் அன்பினால் நிறைந்த இதயம் பெற்றிருப்பது என்பதால், அஃது மிகவும் வேறுபட்ட ஒரு விஷயமாகின்றது. பஹாவுல்லாவின் மீதான இந்த அன்பே இவ்விரண்டு வகையான வாழ்க்கைகளையும் வேறுபடுத்துகின்றது, அந்த அன்பே பிறருக்கு பஹாவுல்லாவின் போதனைகளை பிரதிபலிக்கவுஞ் செய்கின்றது.

 

ஆகவே, வாழ்க்கையை பஹாய்களாக வாழ்வதெப்படி?: என்பதே நிரந்தரக் கேள்வி.

 

பஹாவுல்லாவின் மீது அன்பு

 

பஹாய் வாழ்க்கை வாழ்வதற்கு முதல் படி, பஹாவுல்லாவின் மேல் ‘காதல்’ கொள்வது. இது இல்லையேல் இச்சமயத்தில் எதையுமே சாதிக்க முடியாது. மெய்யாகவே, எல்லா சமயங்களின் சரிதமும் அன்பெனும் மொழியினாலேயே எழுதப்பட்டுள்ளன. பஹாவுல்லாவை பலர் அறிவு பூர்வமாக உணர்ந்துகொள்கின்றனர். இது போதாது. அவர்கள் பஹாவுல்லாவின் நேசராக மாறாமல் சமயத்திற்குச் சேவை செய்வதற்கு வேண்டிய ஆத்மீகத் திறன்களை அடையமுடியாது. பஹாய் சமய போதனைக்கு, நம்பிக்கையாளர்களின் இதயங்களில், பஹாவுல்லாவின் மேல் கொண்டுள்ள அன்பினால் பிறக்கும் ‘உத்தேசத் தூய்மை’ வேண்டும்.

 

ஒருவரின் இதயத்தில் வாழ்க்கையில், வளரக்கூடிய பிற விஷயங்கள் போல் பஹாவுல்லாவின் மீதான அன்பும் வளரும். இந்த அன்புக்கு ஓர் ஆரம்பம் உண்டு. ஒருவர் பஹாவுல்லாவின் சமயத்தைத் தழுவும்போது அவர் இதயத்தில் நம்பிக்கை எனும் தீப்பொறி பிறக்கின்றது. பிறகு அவர் பஹாவுல்லாவை நோக்கி அன்பெனும் பயணத்தின் முதல் அடி எடுத்து வைக்கின்றார். இதயமெனும் தீபம் அப்பொழுது ஏற்றப்பெறுகின்றது. ஆனால் இந்த அன்பு வளர அனுமதிக்கப்பட வேண்டும்; இந்த ஒளி ஒரு பெரும் நெருப்பாக மாற வழி விட வேண்டும்.

 

இங்கு, அவர் பஹாவுல்லாவின் மீதான தம்முடைய அன்பில் தொடர்ந்து பயணஞ் செய்ய வேண்டும். பஹாவுல்லாவின் வாசகச் சமுத்திரத்தில் மூழ்கி, அவர்தம் வெளிப்பாட்டின் ஆதிக்கத்திற்கு தம்முடைய உள்ளத்தைத் திறந்து, இச்சமயத்தால் தீ பற்றியவர்கள் போலுள்ள பஹாய்களின் சகவாசங் கொண்டு, இறை நம்பிக்கையற்றோர் நட்பைத் துறந்து, சமயத்திற்காகச் சேவை செய்ய முன்னெழுவாரானால், பஹாவுல்லாவின் மீதான அவருடைய அன்பு நாளுக்கு நாள் வளர்ந்தும், பஹாய் நெறியில் அவர் ஆழ்ந்தும் உள்ளவராவார்.

 

நம் சமயத்தில் ஆழ்போதனை என்பது பெரும்பாலும் தவறாகப் புறிந்து கொள்ளப்பட்டுள்ள ஒன்று. அது போதனைப் பாடங்கள், சில பாடமுறைகள் மற்றும் அறிவாற்றல் பெருக்க நடவடிக்கைகள் எனக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆழ்போதனை நடவடிக்கைகளிலெல்லாம் பஹாவுல்லாவின் போதனைகளில், நம்முடைய சொந்த எண்ணங்களையும், நவீன செய்முறைகளையும் புகுத்தி, இச்சமயத்தை பெரிதும் உலகார்ந்த, சிறமமான ஒரு விஞ்ஞானக் கோட்பாடாக்குகின்றனர். ஆனால் நம் சமயக் கல்வி மிகவும் எளிமையானது. கல்வி அறிவு அற்றவராக இருந்தபோதிலும், பொது அறிவும், இதயத் தூய்மையும் பெற்றவர் யாராயினும், அவர் முழுமையாக இதன் உண்மையை உணர்ந்துக்கொள்ள முடியும். அப்துல் பஹா அவர்கள் மேற்கத்திய நாடுகளில் நிகழ்த்திய சொற்பொழிவுகளை ஆராய்ந்தோமானால், எவ்வளவு எளிமையான நடையில் சிறமமான விஷயங்களை விளக்கியுள்ளார் என்பதைக் காணலாம். நம்முடைய போதனை முனைவுகள் அவருடைய சொற்பொழிவுகளின் ரீதியிலேயே அமைய வேண்டும்.

  பிரமாண்ட உட்சக்தி அடங்கிய இறைவனின் திருச்சொற்களை, நம்பிக்கை எனும் அகப்பார்வையினைக் கொண்டு வாசிக்கின்றோம். அவை வெறும் மானிட வார்த்தைகள் அல்ல, என உணரும்போது மெய்க்கல்வி பிறக்கின்றது. பஹாவுல்லாவின்பால் அன்பெனும் தீ பற்றிய ஒருவரை நெருங்கும்போதும் இந்த மெய்க் கல்வி உண்டாகின்றது. இவ்வித மனிதனின் அருகாமையே ஒருவருக்கு இறை விசுவாசத்தை அதிகரிக்கச் செய்யும்.

 

மறைமொழிகளில் பஹாவுல்லா:

“...இறைவனோடு தொடர்பு கொள்ள விரும்பும் ஒருவர், விறைந்து அவரது அன்பிற்கு பாத்திரமானவரின் உறவை நாடட்டும்; இறைவனின் வார்த்தையை செவியுற விரும்பும் அவர், அவரால் தேர்தெடுக்கப் பட்டவர்களின் வார்த்தைகளை செவிமடுக்கட்டும்.”

நம்பிக்கையாளர்கள் ஒற்றுமையுடனும், பஹாவுல்லாவின்பாலான அன்புடனும் கூடியுள்ள கூட்டத்தில் பங்கு பெறும் பஹாய் அல்லாதார் பலர் கூட இதனாலேயே தங்களில் ஆத்யான்மீக உணர்வுகள் ஒங்கிடக் காண்பார்கள். மற்றும், இதனால்தான் பஹாவுல்லாவின் ஓர் உண்மையான சேவகரைக் காணும் எவரும் தங்களில் ஒரு புதிய ஆன்மீக உணர்வு நிரம்பிடவுங் காண்பார்கள்.

 

இக்காலத்தில் நாம் பெற்றிருப்பதைப் போல், பாப் பெருமானார் மற்றும் பஹாவுல்லா அவர்களின் காலத்தில், புணித வாசகங்கள் அடங்கிய எல்லா ஏடுகளையும் நம்பிக்கையாளர்கள் பெற்றிருக்கவில்லை, அதோடு பஹாவுல்லாவின் போதனைகளைப் பற்றி நிறைய அறிந்தும் வைத்திருக்கவில்லை. இவர்கள் தெளிவு பெற, பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி மற்றும் உலக நீதி மன்றத்தின் வெளிப்படையான வழிகாட்டலும் அப்போது கிடையாது. இருந்தபோதும் இவர்களின் உள்ளம் பஹாவுல்லாவின் அன்பினால் நிறைந்திருந்ததால் இவர்களில் பலர் பெருவாரியாக அவருடைய பாதையில் உயிர்த்தியாகம் புறிந்தனர்.

 

அந்நாட்களில் ஒரு சிறந்த ஆழ்போதனா முறை என்னவென்றால், நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் தாங்கள் தெரிந்து வைத்திருப்பதையும், பஹாவுல்லாவின்பாலான தங்கள் அன்பையும் பகிர்ந்துகொள்வதே ஆகும். உதாரணமாக பஹாவுல்லாவைச் சந்திக்கும் பாக்கியம் பெற்ற ஒரு விசுவாசியான பஹாய், தன் இதயம் அவர் நேசத்தால் நிறைந்தோ அல்லது அவரிடம் இருந்து சில நிருபங்கள் பெற்றோ இருந்தால், அவர் தன்னுள் நிறைந்திருக்கும், ஆத்யான்மீகத் தீயையும், நம்பிக்கையையும் மற்றும் அறிவையும் புறிந்துகொண்டவற்றையும் தான் நெருங்க நேரிட்டோருடன் பகிர்ந்துகொள்வார்.

 

இன்றைய சூழ்நிலையில் பாடத் திட்டங்களாலும், கல்வியல் முறைகளாலும் சூழப்பட்டு ஆழ்போதனையை ஒரு ஜடச் செயலாகவும் கிட்டத்தட்ட நடைமுறையிலுள்ள பொதுக் கல்விமுறைகளைப் போன்றும் ஆக்கிவிட்டிருக்கின்றோம். அறிவுபூர்வ அனுகுமுறைகள், மனித இதயங்களை மேகத்திறையைப் போல் மறைத்துள்ளதால் மெய்மைக் கதிரவன் மனதுள் பிரகாசிக்க சக்தியற்றுப் போய்விற்றிருக்கின்றன.

 

சமய மெய்யறிவு உட்பட நமக்கு இன்று தேவைப்படுவது நம் உள்ளங்களை பஹாவுல்லாவின் வெளிப்பாட்டின் ஆதிக்கத்திற்குத் திறந்தும், அவர்தம் திருஆவியுடன் தொடர்பு கொண்டும், அவரது நாமத்தால் ஆனந்தம் அடைந்தும், குறிப்பாக, அவரது மெய்யன்பர்களின் நட்புறவை நாடுவதுமே ஆகும். நம் வாழ்வில் நம்பிக்கை ஆவியின் ஊடுருவல் ஏற்படாமல், முழுப் பனிவுடன் நம் உள்ளத்தை பஹாவுல்லாவின்பால் திருப்பாமால், நாம் நம் சமயத்தில் ஆழ்நிலை அடையவே முடியாது. இதன் காரணம், இறைவனைப் பற்றிய அறிவு உள்ளத்தில் முதலில் பிரதிபலித்தப் பிறகே அறிவு அதனைப் பற்றிக்கொள்கின்றது. புனித வாசகங்களில் இது மிகத் தெளிவாகக் காணக்கிடக்கின்றது.

 

குறிக்கோள் தூய்மை

 

இதுவரையில் பஹாய் வாழ்வு வாழ முதல் படியாக நம் உள்ளங்களை பஹாவுல்லாவின்பால் திருப்பி அவர் மேல் நேசங் கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளோம்.

 

அடுத்ததாக தொடரப்படவேண்டியது, அவர் மீது கொண்டுள்ள அன்புக்குட்பட்டு அவர்தம் விதிகளையும் கட்டளைகளையும் அனுஷ்ட்டித்து வருதல் ஆகும். அதிப்புனித நூலான கித்தாப்-இ-அக்தாசில் பஹாவுல்லா: “எம்முடைய ஆனைகளை எமது அழகின்பாலான நேசத்தால் அநுஷ்டியுங்கள்” எனத் திருவாய்மொழிகின்றார்

 

ஆனால் நாம் எல்லோரும் ஒரே ஒரு கட்டளையை மட்டும் கடைபிடிக்கும் போது, மற்ற கட்டளைகள் அனைத்தையும் கடைபிடிப்பதற்கான சூழ்நிலையை அது உருவாக்கி, சிறுகச் சிறுக சமயத்தில் ஆழ்நிலையடையச் செய்து, நம் எல்லோரையும் அது உண்மையான வாழ்வை வாழவும் செய்யும். “சமய போதனையே” அக்கட்டளை ஆகும். ஏனென்றால், சமயத்தை போதிப்பது ஆண்டவர் மீதான மெய்பக்தியை வெளிப்படுத்தும் ஒரு செயலாகியும், அவர் திருப்பார்வையில் அதிமேன்மைமிகு ஒரு செயலாக இது விளங்குவதுமேயாகும்.

 

அப்துல் பஹா அவர்கள் கூறுவது: “சமயச் செய்திதனை வழங்கும் காரியம் நின்றுபோனால், `திருவுதவி’ முற்றாகத் தடைப்படும் என்பதாகும். இதன் காரணம் என்னவெனில் ஆண்டவனின் செய்தி போதிக்கப்படாமல் அவரது உதவி நிச்சயமாக அடையப்பெறாது. ஆகவே நாம் நம் பஹாய் வாழ்க்கைதனில் கீழ்படியவேண்டிய ஒரு இன்றியமையாத கட்டளையாக, சமயத்தை போதிக்கவேண்டும் எனும் கட்டளை விளங்குகின்றது, அது இல்லாது போனால், இறைவனின் திருவுதவி நம்மை வந்தடையாமல் போவதோடு பஹாய் வாழ்வு வாழவும் கூடாமல், ஒன்றுமே செய்ய இயலாத ஒரு ஸ்தம்பித நிலையே ஏற்படும்.

 

திருவாசகங்களின் மூலம், சமய போதனை என்பது நம்மால் எடுக்கப்பட வேண்டிய அதிமுக்கியமானதொரு முதல் படியாக அமைந்தாலும், பஹாவுல்லாவின் மற்ற ஆணைகளை பின்பற்ற முயற்சியேதும் மேற்கொள்ளாத நிலையில் இது(சமய போதனை) எந்தவொரு பயனையும் அளிக்காது. இருந்தாலும் பஹாவுல்லா அவர்கள்பால் தனது இதயத்தில் நேசங் கொண்டுள்ள நம்பிகையாளர் ஒருவர், உத்தேசத் தூய்மையுடன் சமய போதனை செய்ய முன்னெழும் நேரத்தில், அந்தச் செயலாகப்பட்டது நமது சமயத்தின் போதனைகளையும் கோட்பாடுகளையும் மக்கள் முன் அந்த நம்பிக்கையாளர் பிரதிபலிக்க சந்தேகமற உதவுகின்றது.

 

மெய்யாகவே, பஹாய்கள் தமது வாழ்க்கைகளிலே தீர்க்கப்பட முடியாத சிரமங்களையும் இன்னல்களையும் எதிர்நோக்கும் பல வேளைகளில், தங்கள் இன்னல்களை நீக்கும் ஒரு இன்றியமையாத அருமருந்தாக உத்தேசத் தூய்மையுடன் முன்னெழுந்து செய்யப்படும் சமய போதனை விளங்கியுள்ளது. தங்களுடைய குறைகள் நீங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் போதனை செய்தால் அது உத்தேசத் தூய்மையாகாது; அது தன்னலத் தேவையும், சுயநலமுமாகும். இவ்விதமான ஒரு செயல் ஆண்டவர் முன் எவ்வகையான நற்தேர்வும் பெறாது. பஹாவுல்லா தமது சமய சேவைக்கான அளவையை பின்வரும் திருவாசகத்தின் மூலம் ஸ்தாபித்துள்ளார்:

 
“எனது அன்பிறக்காக எமது கட்டளையின்படி நடப்பாயாக”

தனிநபர் போதனை

 

இதுவரை, போதனை செய்யவேண்டியதற்கான முன் தேவைகளைப் பற்றி பேசினோம். இப்பொழுது, போதனையைப் பற்றி பேசுவோம். பஹாய் அன்பர் ஒருவர், பஹாவுல்லா அவர்களின் செய்தியையும் அவரது திருவருகையை பற்றியும் பஹாவுல்லாவைப் பற்றி கேள்விப்படாத ஒருவருக்கு எடுத்துச் சொன்னால் அங்கு போதனை நடைபெறுகின்றது எனப் பொருள்படும். போதனை செய்வதற்கென பிரத்தியேக வழிமுறைகள் கிடையாது. நமது சமயத் திருத்தூதர் பஹாவுல்லா, மற்றும் உதாரண புருஷர் அப்துல் பஹா அவர்களும், பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்களும் இது விஷயமாக சில அடிக்கோட்களையும் வழிமுறைகளையும் வழங்கியுள்ளனர். இவை யாவும், நிகழ் காலத்தில் பலவித சுய மனத் தோன்றல்களை போதித்து, எவ்வகையிலாவது மக்களை வயப்படுத்தி மத மாற்றம் செய்யும் பஹாய் அல்லாத வட்டங்களில் நிலவும் அளவைகள் மற்றும் அனுகுமுறைகளிலிருந்து எதிர்மாறானவை.

 

பஹாவுல்லாவின் திருச்சமயம் இறைவெளிபாட்டின் உண்மைகளை வைத்து ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. உண்மை என்பது பொய் அளவைகளாலும், நிகழ்கால அவசிய அவசரத் தேவைகளைக் கொண்டும், போர்த்தப்பட முடியாத ஒன்று. இம்மெய்நெறியானது வியாபார நுணுக்கங்கள் மற்றும் பிரச்சார முறைகள், அவசிய அவசரத்தேவைகள் மற்றும் ஒத்திணங்கும் போக்கு போன்றவற்றை அனுமதிக்காது.

 

போதனையின் போது, பஹாவுல்லாவின் நற்செய்தியை மக்களுக்கு வழங்கும்போது, ஒரு அரசராகப்பட்டவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதைகளுடன் எப்படி ஒரு பரிசை வழங்குவோமோ அதேபோல் வழங்கவேண்டும். இங்கு மனதில் நிற்க வேண்டியது என்னவென்றால், பஹாய் நம்பிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க நாம் போதனை செய்யவில்லை, ஆனால் ஒர் ஆன்மாவை அதன் படைப்பாளரிண் அருகாமைக்கு இட்டுச் செல்கின்றோம் என்பதே ஆகும். மனிதர்களை நேயத்துடனும் பனிவுடனும் அனுகினாலும், இவற்றுக்கெல்லாம் மேலாக, பஹாவுல்லாவின் தன்மை மாற்ற சக்தியினை எந்த சுயநல சேர்க்கையும் இல்லாமல் அவர்களுக்கு எடுத்துச் செல்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். போதனையின் போது போதகர் தமது மேன்மையையும், அறிவாற்றலையும், சாதனைகளையும் விளம்பரம் செய்ய எத்தனித்தால், பஹாவுல்லா அவருக்கு அருளக்கூடிய சக்தி வந்து அடையக்கூடாது போகும். இங்கு, ‘தான்’ எனும் நிலை மறைந்து யாவும் ‘அவர்’ எனும் நிலைதனை எய்திட பிரார்த்தனயைச் சார்ந்திருத்தல் மிகவும் அவசியம்.

 

பாரசீகத்தில், சமயத்தின் ஆரம்பகாலங்களில், சமய நம்பிக்கையாளர் அனைவரும் செல்லும் இடமெல்லாம் பஹாவுல்லாவின் அன்பெனும் ஜோதியை பிரகாசித்தனர். இவர்களை அனுகியோரெல்லாம், உள்ளத் தூய்மை பெற்றிருந்தாராயின், இந்த நெறியின்பால் ஈர்க்கப்பட்டு, பெருமளவில் அதைச் சார்ந்தனர். பலர் அருளொளியானவரான பஹாவுல்லாவின் பாதையில் உயிரையும் தியாகம் செய்தனர். நமது சமயத்தின் வைரியக் காலங்களில், பாரசீகரில் தூய உள்ளம் கொண்டோர் அதன் நிழலைச் சார்ந்தனர் எனக் கூறுவது உண்மையே. அந்த நேரத்தில் அந்நாட்டின் மணிகள் போன்ற பல இன்னுயிர்கள் சமயத்தைத் தழுவினர். பெரும்பான்மையான நம் சமயபோதகர்கள் அப்பொழுது பெரும் அறிவு படைத்தோரும் அல்லர். அதிகமான நம்பிக்கையாளர்கள் கல்வி உணர்ந்தாரும் இல்லை. ஆனால் பாப் பெருமானார் மற்றும் பஹாவுல்லாவின்பால் அசைக்க முடியாத நம்பிக்கையும், எழுச்சிதரும் அன்பும் கொண்டிருந்தனர். இவ்வைரியம் மிக்க ஆன்மாக்கள், தான் எனும் நிலையையும் அகங்காரத்தையும் முழுமையாக வென்றதால், மக்களை அனுகும் போது பஹாவுல்லாவின் ஆக்கசக்தி தங்கள் மூலம் செயலாற்றக்கூடிய குறைகளற்ற வாய்க்கால்கள் போல் விளங்கினர்.

 

நம்பிக்கை அருள் ஆவி’

 

ஐயர்லாந்தில் நம் சமயத்தைச் சார்ந்த பூர்வகுடிகளிடையே இதே தொனியிலான நம்பிக்கை சிறிது காணக் கிடைத்தது. சில வருடங்களுக்கு முன்பு ‘லிமரிக்’ எனும் இடத்தில் குறிப்பிட்ட ஆன்மாக்கள் சிலர் நமது சமயத்துடன் தொடர்புற்றனர். பஹாவுல்லா அவர்களின் பிரமிக்கத்தக்க வார்த்தைகளை செவிமடுத்து, தாக்கம் அடைந்து, ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும், பஹாவுல்லாவின் புனித ஸ்தானத்தை உணரும்வரை அவ்விஷயத்தை ஆராய்ந்து, அவர்கள் உள்ளங்கள் பஹாவுல்லாவின் அன்பால் நிரப்பப்பெற்று, அவரது சமயத்தையும் சார்ந்தனர். அவர்களில் எவரும் கல்விமான்களோ அறிவிற் சிறந்தோரோ அல்லர். அவர்கள் பெரும்பான்மையாக ஆரம்பக்கல்வி பெற்றவரே. இருந்தபோதும், தம் நம்பிக்கையாலும், அன்பினாலும், சமய ஞானம் அடைந்தனர். அவர்கள் தோற்றத்தாலும், செயல்களாலும், பஹாவுல்லாவினால் தன்மைமாற்றம் செய்யப்பெற்ற புதிய சிருஷ்டிகளாகத் தென்பட்டனர். முன்சார்ந்த பழக்கவழக்கங்களைத் துண்டித்துக்கொண்டு, பஹாவுல்லாவின் சட்டங்களையும் போதனைகளையும் தினசரி ஒழுகவாரம்பித்தனர். இம்மாபெரும் மாற்றத்தை முதலில் கண்ணுற்றவர்கள், இவர்களின் நன்பர்களும் சக பிரஜைகளும் ஆவர். இவர்களில் சிலர் சமயத்தைப் பற்றி மேலும் அறிய பேராவலும் கொண்டிருந்தனர். எந்த விளம்பரங்களும் கிடையாது, வீதிகளில் எந்த அறிக்கைகளும் இல்லை, பொதுக் கூட்டங்களும் இல்லை. ஆனாலும் மக்கள் சமயத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். இதன் காரணம், இச்சில ஆன்மாக்களில் அவர்கள் அதிசயிக்கத் தக்கதொரு தன்மைமாற்றத்தை கண்டதே ஆகும். பலர் ஆராய வந்தனர். ஒரு நேரத்தில், அல்லும் பகலும் சமயத்தைப் பற்றி செவிமடுப்போர் வந்த வன்னமாக இருந்தனர். அவ்விடத்திற்கான சமயத்தின் முதல் முன்னோடியென விளங்கியவரின் பெரிய அறை இரவுகள் தோறும் நிறைந்து வழிந்தது. வெகு சீக்கிரமே, இது வரை காணாவண்ணம், சமயத்தையும் பலர் ஏற்றனர்.

 

பலர் சமயம் வெளிப்படுத்திய உண்மைகளை உணர்ந்து அதன் ஏகோபித்த நம்பிக்கையாளர்களாகவும் ஆகினர். பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்களின் கீழ்க்கண்ட வார்த்தைகள், அந்நாட்களில் உள்ளது உள்ளபடி மெய்ப்படுத்தப்பட்டன.

 

“ஒன்றே ஒன்று மட்டும், தானே, தனித்து, தவறாமல் இப்புனித சமயத்தின் சந்தேகமற்ற வெற்றியை பெற்றுத் தர இயலும் - அஃது குறிப்பாக எந்த அளவுக்கு பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ள அனாதியான கேராட்பாடுகளின் பல கோணங்களிலான மகிமையை நமது உள்வாழ்க்கையிலும் பிரத்தியேக நடத்தையிலும் பிரதிபலிக்கின்றோம் என்பதே.” இந்த முக்கிய முன்னேற்றங்கள், லிமரிக் பஹாய் சமூகம் முழுவதற்கும் ஒரு பெரும் சவாலை அளித்தன - அது பொதுஜனங்களுக்கு இப்போது எப்படி போதிப்பது என்பதே ஆகும்.

 

ஐயர்லாந்தின் சரிதித்திரத்திலேயே முதன் முறையாக, லிமரிக் நகரின் வீதிகளிலே போதிக்கும் நடவடிக்கைக்கு, அந்த தேசத்து தேசிய ஆன்மீக சபை அங்கீகாரம் வழங்கியது. இப்போதனை முனைவு, வெற்றிகள் கொண்டதாகவும் மறக்கமுடியாக ஒரு காலகட்டத்தை உள்ளடிக்கியதாகவும் விளங்கியது. அந்நகரின் சில வீதிகளில், முதலில் நடந்த சமயபோதனை முயற்சிகளின் பயனாக, மேலும் பல மக்கள் சமயத்தை ஏற்றனர்.

 

அங்குத் திகழ்ந்த அதே அர்ப்பண உணர்வை நம்மால் அதேபோன்று இன்று வெளிப்படுத்த முடிந்தால், ‘ஆன்மீகக் குளிர்’ நிறைந்த ஐரோப்பியா கண்டம் போன்ற பிரதேசங்களில் கூட பல இன்னுயிர்களை சமயத்திற்குள் வழிகாட்டிட முடியும்.

 

தேசிய மற்றும் உள்ளூர் சபைகளினால் அன்பாக வழிகாட்டப் பெற்று, லிமரிக் நகர நம்பிக்கையாளர்கள், ஒரு வார இறுதி நாளில் ஒன்றுகூடி முதல் ‘வீதி வீதியான’ போதனை செய்யும் முயற்சியில் இறங்கினர். சில மணி நேரங்கள் தங்கள் இதயங்களை பஹாவுல்லாவை நோக்கியபடி பிரார்த்தனைகள் சில செய்தும், திருவாசங்கள் சிலவற்றை வாசித்தும், பஹாவுல்லாவைப் பற்றியும், அவரது வெளிப்பாடு, மாட்சிமை, அவரது ஸ்தானம், உயிர்த்தியாகம் செய்தோர் பற்றிய கதைகளுடன் இறைவனின் ஜோதியானவரின் சமயத்தின் சக்தி ஆகியவை பற்றி சொல்லக் கேட்டனர். இதயங்கள் நெகிழ்ந்தன, கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. இவ்வித ஆன்மீகச் சூழ்நிலையில் சில மணி நேரங்கள் மிதந்து, இருவர் இருவராக, மிகுந்த ஆர்வத்துடனும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் நம்பிக்கையாளர்கள், தம் சக நகரவாசிகளுக்குத் சமயச்செய்தியை வழங்கவென கிளம்பிச்சென்றனர்.

 

பஹாவுல்லாவின் சக்தி

 

இப்போதனை முயற்சியின் வெற்றிக்கு மூல காரணமாக விளங்கியது ஒன்றே ஒன்றுதான், அஃது, பஹாவுல்லாவின் திருச்சக்தி இம்முயற்சியில் ஒரு பெரும் பாங்காற்றிட அனுமதிக்கப்பட்டதுதான்.

 

சிருஷ்டியின் ஒரு முக்கிய அடிக்கோள் என்னவெனில், பஹாவுல்லாவின் சக்தி நமக்காக உதவிபுரிந்திட அனுமதிக்க வேண்டுவதே ஆகும். இறைவன் தம்முடைய ஆக்கச் சக்திகளை மானிடர் மீது பொழிகின்றார். ஆனால் இச்சக்தியை நாம் பெறுவதற்கு, அச்சக்திகளின் ஆதிக்கத்திற்கு நம் இதயத்தினை திறந்துவிட வேண்டும். இதுவே மனிதனிடத்தில் இறைவன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம். ஒரு மின்வினியோக நிலையத்தின் உவமை இதை நன்கு வெளிப்படுத்தும். மின் இனையம் முழுவதும் மின்சாரம் பாய்ச்சப்பட்டாலும், ஒரு மின்சாதனம் அதனோடு தன்னை தொடர்புபடுத்திக் கொண்டால் ஒழிய அது சக்தி பெற்று இயங்க முடியாது. ஒரு மின்விளக்கு, ஒரு மின்சக்தி நிலையத்தின் அருகாமையில் இருந்தாலும், அதனோடு தொடர்பு கொடுத்துக் கொண்டால் ஒழிய ஒளிவிடாது.

 

இறைவனின் திருவருள் மூலமாகவே மனிதன் படைக்கப்பட்டும் போஷிக்கப்பட்டும் வருகின்றான் எனத் தெரிந்துள்ளோம். இவ்வருளும் அவரது அன்பும் அற்ற நிலையில் எவ்வித படைப்பினங்களும் தோன்ற நேரிட்டிருக்காது. இறைவன் மற்றும் மனிதனுக்கிடையிலான ஒப்பந்தத்தை நோக்குங்கால், பஹாவுல்லாவின் சக்தியை சமயத்தை போதிப்பதற்காகவோ அல்லது வேறு எந்த காரியத்திற்கோ பயன்படுத்த, பஹாவுல்லா அவர்களின்பால் ‘தான்’ எனும் தன்மையற்றுத் திரும்பினால் ஒழிய, அச் சக்தியினை பெறமுடியாது. இங்கு முதற் கோட்பாடு என்னவெனில் : “எம்மிடம் அன்பு கொள்வாயாக, அதனால் யாம் உன்னிடம் அன்பு காட்ட இயலும். நீ எம்மிடம் அன்பு கொள்ளவிடில் எமது அன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது...” மாற்றியமைக்க முடியாத அடிப்படை இது. சரி, மீண்டும் லிமரிக் நகர போதனைக்கு வருவோம். அந்த நகர நம்பிக்கையாளர்கள், காத்துக்கொண்டிருக்கும் ஆன்மாக்கள்பால் தாங்கள் ஈர்க்கப்பட, பிரார்த்தனைகள் செய்தனர். சிலர் தாங்கள் இருவர் மட்டும் செல்லாமல், பஹாவுல்லாவின் சக்தியினையும் கூடக் கொண்டு சென்றனர். இதைச் செய்ய அவர்கள் தங்கள் இதயங்களை தூய்மையாக்கியும் பஹாய் வாழ்க்கையை வாழ வேண்டும் எனத் தெரிந்தும் வைத்திருந்தனர். அந்நகரவீதிகளில் அந்த ஆன்மாக்கள் நடந்தபோது, தங்கள் உடன் பஹாவுல்லா அவர்களின் பிரசன்னத்தை உணர்ந்தனர். அதனால் அவர்கள் வதனங்கள் அன்பினாலும் தன்னம்பிக்கையாலும் பொழிவு பெற்றிருந்தன. பஹாவுல்லா அவர்களின் திருவருகையினை, கேட்கக்கூடியவர் எனத் தென்பட்டோரிடம் எளிய தொனியில் அதைப் பற்றி உரைத்தனர். அவ்வான்மா ஈடுபட்டால், சிறு விளக்கக் கூட்டம் ஒன்றிற்கு அழைக்கபட்டார். பஹாவுல்லாவே தாங்கள் சந்திக்கவிருக்கும் ஆன்மாவின் இதயங்களை வென்றிடவென்று, எவ்வகையான கைப்பிரசுரங்களும் இல்லாமல் போதனை மிகுந்த கவனமான வகையில் நடைபெற்றது. இவ்வகையான போதனையில், நீண்ட சம்பாஷனைகளுக்கோ விவாதங்களுக்கோ இடமில்லை: சந்திப்பு சுறுக்கமானது. செவியுற்றோர் மனதில் ஏற்பட்ட ஆழ்ந்த நெகிழ்ச்சி, பஹாவுல்லா அவர்களின் சக்தியினாலேயே உண்டாயிற்று. இவ்வித வீதிபோதனைகள் மூலம் சமயத்தை ஏற்றுக்கொண்டோர் கூறியது என்னவெனில்: முதல் சந்திப்பில் தாங்கள் சமயத்தைப் பற்றி எதையும் புறிந்துகொள்ளவில்லை என்பதுதான். தங்களைக் கவர்ந்தது, தங்களை முதலில் சந்தித்த இளைஞர்களே ஆவர் என்றனர். அவர்கள் முகங்களில் பிரகாசித்த ஆனந்தம், ஒளி, மற்றும் இதற்கு முன் எங்கும் கண்டிராத ஒரு தன்னம்பிக்கையுமே, அவர்கள்பால் தங்களைக் கவர்ந்து, சமயத்தில் நிச்சயிக்கப்படும் வரை அந்த இளைஞர்களின் சிறுவிளக்கக் கூட்டங்களுக்குத் தினமும் தங்களைப் போகச் செய்தது என்றனர்.

 

ஒரு பஹாய் போதகர் பஹாவுல்லாவின்பால் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டபோது இவ்விதமாகவே நடந்து, பஹாவுல்லா ஆன்மாக்களை தமது சமயத்தின்பால் தாமே ஈர்த்திட வழிபிறந்தது.

 

போதனை வீழ்ச்சி காணும் காரணங்கள்

 

இதேபோன்ற வெற்றிகள் வேறு பல இடங்களில் நிகழ்ந்திருந்தபோதிலும், உற்று கவனிக்கும்போது, போதனை ஆரம்பத்தில் வெற்றியுடன் நடைபெற்றாலும் பின்பு சுணங்கிப் போய்விட்டிருக்கின்றது. இது கவலை தரக்கூடியது. இவற்றிற்கெல்லாம் காரணங்கள் உண்டு. உணராமலேயே, இந்த நிலை உருவாக ஒரு ஊரில் பல நம்பிக்கையாளர்கள் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லாமல், ஒருவர் மட்டும் இதற்கு போதும். இவர் பஹாவுல்லாவின் கடப்பாடுகளை வெளிப்படையாக முறித்து, அவரது ஆணைகளுக்கு எதிராகச் சென்று, சமயத்திற்குப் பொதுவில் அவமானத்தைத் தேடித் தருபவர் ஆவார். இஃது நடைபெறும்போது சமயத்தின் நிலையான வளர்ச்சி தடைபடுகிறது. பிறிதொரு காரணம், நம்பிக்கையாளரிடையே ஒற்றுமை குலைவு. இவைகள் யாவும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன. பஹாவுல்லா இதுகுறித்து ஏற்கனவே எழுதியுள்ளார். அவரது நிருபம் ஒன்றில், நிலைகுளைய வைக்கும் ஒரு கூற்றினைக் காணலாம், அதாவது, தம்முடைய கட்டளைகளுக்கு ஏற்ப எல்லா நம்பிக்கையாளர்களும் விசுவாசத்துடன் நடந்திருப்பார்களாயின், இந்நேரம் மனிதகுலம் ஒருசேற தம்மை அடையாளம் கண்டும் பனிந்தும் இருந்திருக்கும் என அவர் அறிவித்திருக்கின்றார்.

 

இன்று, உலக நீதி மன்றம், நடப்பில் உள்ள உலகப் பெரும் திட்டத்தை, நிறைவேற்றும் கடமையை நமக்களித்துள்ளது. இம்மன்றம் “எல்லா நன்மைகளுக்கும் தோற்றுவாயாகவும், சகல பிழைகளிலிருந்தும் நீங்கப் பெற்றதாக” உள்ளதோடு, பாப் பெருமானார் மற்றும் பஹாவுல்லா அவர்களின் நேரடி வழிகாட்டுகையின் கீழ் உள்ளது. சங்கல்பத்துடனும், பஹாவுல்லா அவர்களின் அன்பு நிறைந்த உள்ளத்துடனும் நாம் முயற்சி செய்தால், இத்திட்டங்களின் குறிக்கோள்கள், இவ்வுலகின் ஆக்க மற்றும் அழிக்கும் சக்திகளின் உதவிகள் மூலமாக, நேரடியாகவோ அல்லது வேறு வழிகளிலோ, நிறைவேற்றப்படும்.

 

ஆகவே, நம் உயிருக்குயிரான சமயத்தின் வளர்ச்சி, நம் கையில் உள்ளது. பஹாவுல்லா அவர்கள் நம்மை வழிநடத்திச் செல்ல நாமே வழி ஏற்படுத்திவிட்டால் ஒழிய, அவரது திருவுறுதிப்பாடுகள் நம்மை வந்தடையா. “எம்மிடம் அன்பு கொள்வாயாக, அதனால் யாம் உன்னிடம் அன்பு காட்ட இயலும். நீ எம்மிடம் அன்பு கொள்ளவிடில் எமது அன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது...” பஹாவுல்லாவின் மேல் எப்படி நேசம் கொள்வது என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். இது முழுமையாக, நாம் நமது அன்புக்குகந்த நேசர், பஹாவுல்லா அவர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை பொருத்துள்ள ஒன்று. பஹாவுல்லாவை அறிவுபூர்வமாக அறிந்து வைத்திருப்பது போதாது. இதயம் திருவுறுதிப்பாடுகள் பெறவேண்டும்.

 

மெய்நம்பிக்கை பெறுதல்

 

மெய்நம்பிக்கை அடைதலே மனிதனின் மிகப் பெரும் சாதனை. மெய்நம்பிக்கையானது இவ்வுலகார்ந்த சக்திகள் எதுவுமே நெருங்கமுடியாத ஆன்மீக சக்தியை நமக்கு வழங்குகிறது. கடக்க முடியாததென நினைத்த பெரும் சோதனைகளையெல்லாம் தங்கள் மெய்நம்பிக்கையின் அருட்சக்தியினால் வெற்றி கொண்டு, பஹாவுல்லா அவர்களின் சமயத்திற்கு மனதில் நிற்கக் கூடிய மாபெரும் வெற்றிகளைத் தேடித் தந்துள்ளனர் பலர். இவ்வித நம்பிக்கையை அடைவதற்கு, மனிதன் தன் இதயத்திலிருந்து சகல வீன் கற்பனைகளைகளுக்கான அறிகுறிகளையும், பொய்யுலக ஆசைகளையும் அகற்ற வேண்டும். இம் மிக உயர்ந்த குறிக்கோளினை அடைவதற்கான பாதையை உற்று கவனித்து, அதில் ஒர் ஆன்மா எதிர்நோக்கக் கூடிய பள்ளத்தாக்குகளையும், தடைகளையும் ஆராய்ந்து பார்ப்போம்.

 

ஒரு மனிதனுக்குள் பிரமாண்டமான இரு சக்திகளின் மையங்கள் உள்ளன. ஒன்று மனித மூளை. இது அறிவாற்றலுக்கும் சிந்தனைக்கும் மையமாகவும், அவன் அறிவு மற்றும் கல்வியின் களஞ்சியமாகவும் விளங்குகிறது. மனிதனை மிருகத்தினிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் ஆன்மாவின் விசேஷ சக்திகளை இந்த சக்தியின் செயல்பாட்டின் மூலமாக அவன் வெளிப்படுத்துகின்றான். பகுத்தறிதலே, இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கும் ஒரு மாபெரும் பரிசு. இருந்தபோதிலும், இவ்வாற்றல், மனிதன் தன்னுடைய ‘சுயமாகத் தேர்வு’ செய்யும் சக்தியைக் கொண்டு, மனிதனை இறை மெய்நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின்பாலோ அல்லது அதற்கு எதிர்மாறானவற்றிக்கோ கொண்டுசெல்லும்.

 

அடுத்தது, அன்பு மற்றும் இதம் ஆகியவற்றின் மையமான மனிதனின் உள்ளம். அது உலகின்பாலும், மனிதன் தன்பாலுமே நேசமுறச் செய்யும். இறைவனின் குனாதிசயங்கள் வெளிப்படுத்தப்படும் இல்லமும் இதுவே. பஹாவுல்லா அவர்கள் கூறுவது:

“உனதுள்ளமே எமது இல்ல; யாம் அதன்பால் வருகைத்தர அதனை தெய்வீகத் தன்மையதாய் ஆக்குவாயாக....
மனிதனின் உள்ளத்தில் தான் நம்பிக்கையொளி பிறக்கின்றது. ஆனாலும், அதற்குமுன், இதயம் உலகாதி விஷயங்களின் பினைப்பிலிருந்து விடுபட்டிருக்கவேண்டும்.

பஹாவுல்லா அவர்கள் மறைமொழிகளில் விடுக்கும் அழைப்பு:

புழுதியின் மைந்தனே!  

“மனிதனின் உள்ளத்தைத் தவிர விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள எல்லாவற்றையும் உனக்காகப் படைத்துள்ளோம்; அதை(உள்ளம்) மட்டும் எமது அழகுக்கும் மேன்மைக்கும் இருப்பிடமாக்கியுள்ளோம்; இருந்தும் எமது இல்லத்தை, எமது இருப்பிடத்தை, வேறொருவனுக்குக் கொடுத்துள்ளாய்; எமது தெய்வீக அவதாரம் தனது இருப்பிடத்திற்கு வரும்போதெல்லாம் அங்கு ஓர் அயலான் குடிகொண்டிருப்பதனை கண்ணுற்றார். ஆகவே தங்குமிடமின்றித் தனது அன்பிற்குறியவரின் பாதுகாப்பினை நாடி விரைந்து சென்றார். இருந்தும் யாம் உனது அவமானத்தை விரும்பாது, உனது இரகசியத்தை மறைத்துவைத்துள்ளோம்.”

இதயமும் மனதும் ஐக்கியமாயிருத்தல்

 

மனிதனுக்குள் உரையும் இரு மையங்களும், அதாவது அவன் பகுத்தறிவும் உள்ளமும் ஒன்றை ஒன்று நிறைவு செய்திட கடவுள் படைத்துள்ளார். உள்ளம் இல்லாமல், ‘நம்பிக்கை ஒளி’ மட்டும் பட்ட பகுத்தறிவு, இறைவனின் சமயத்தின் உண்மையினை ஆரயும் தன்மையையோ அல்லது அதைப் புறிந்துகொள்ளக்கூடிய ஆன்மீக மொழியினையோ அடையாது. ஒளி இழந்த கண் போல, அது ஆவி உலகினை ஆராய இயலாது நிற்கும். இதன் விளைவாக, அது பொருளுலகிற்கான தன் சக்திகளை வளர்த்து, இயற்கையாகவே, இறைவனையும் அவர்தம் சமயத்தையும் நிராகரிக்கும். மனிதன், மெய்நம்பிக்கை அடையும் வழியை இது பூரணமாக அடைத்தும் விடுகிறது. இச்சுழ்நிலையில், எதிலும் அன்பு மட்டுமே வைக்கத் தெரிந்த உள்ளம், வேறு வழியில்லாமல், இவ்வுலகின் மீதும், தன்பாலுமே அதன் அன்பை செலுத்துகின்றது. உள்ளத்திற்கு, இறைவனை நேசிக்க வாய்ப்பு வழங்கப்படாது போனால், அது மனிதன் மீதும் உலகப் பொருள்கள் மீதும் அதன் அன்பை செலுத்திவிடும். மறைமொழிகளில் பஹாவுல்லா குறிப்பிடும் அந்த ‘அந்நியனின்’ ஒரு கூறும் இதுவே:

உலகில் எனது நன்பனே!

சற்து சிந்தித்துப்பார். ஒரே உள்ளத்தில், நண்பனும் பகைவனும் தங்கியிருப்பதை எப்பொழுதாவது கேட்டிருக்கின்றாயா? நன்பன் தனது இல்லதில் பிரவேசிப்பதற்காக அயலானை அப்புறப்படுத்துவாயாக.

மெய்நம்பிக்கை அடைய, மனிதன் தன் இதயத்துள் உரையும் அந்நியனை அகற்றவேண்டும். இதில் எந்த அளவு வெற்றி பெறுகிறன்றானோ, அந்த அளவு அவன் நம்பிக்கை ஒளி பெருவான். இதயத்தில் மெய்நம்பிக்கைத் தீப்பொறி பிறந்தபின், சிறிது சிறிதாக, அது பெரும் ஜுவாலையாக மாற அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையேல் அது இவ்வுலகப் பற்றுகளில் சிக்குண்டு மடிந்துபோம். ஒரு மனிதன், பஹாவுல்லாவை இக்காலத்திற்கான இறைத்தூதுவர் என அறிந்துகொண்ட பிறகு, அவனது இதயம், இக்காலத்திற்கான இறைவனின் மெய்நம்பிக்கை ஒளியைப் பெறுகின்ற ஒரு நிலையை எய்துகிறது. ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கையாளர்கள், பஹாவுல்லவின் திருவெளிப்பாடெனும் சமுத்திரத்தில் மூழ்கி, அவரது புனித வாசகங்களை தினசரி அறிவை விருத்தி செய்துகொள்வதற்காக மட்டுமல்லாது, மெய் ஆவியின் உணவை பெறுவதற்காகவும் வாசித்து, நேர்மையாளர்களின் சகவாசத்தை விரும்பியும், தூய்மையுடனும், பற்றின்மையுடனும், அவரை சேவிப்பதற்கு எழும்போதினில், இவர்கள் மெய்நம்பிக்கையில் வளர்ந்தும், பிரகாசமானதும் ஆர்வமிகுந்ததுமான ஓர் ஆன்மாவாகின்றனர். புனித வாசகங்களில் ஓர் ஆழ்நிலையை அடைந்து, தன் பகுத்தறிவும் இதயமும் ஒன்றினைந்து இயங்க இவர்கள் காணலாம். இத்தகைய ஒரு நம்பிக்கையாளர், காலப்போக்கில், பஹாவுல்லா அவர்களின் போதனைகளுக்கும், தன்னுடைய சுய சிந்தனைகளுக்கும் இடையே வேறுபாடுகள் மறைந்துபோகக் காண்பார். பஹாவுல்லா அவர்களின் கூற்றுக்களில் பல விவேகம் நிறைந்த சொற்களை கண்டுபிடித்து, தன்னுடையது, குறைகள் நிறைந்ததும், அளவிற்குட்பட்டதுமான அறிவென இவர் கண்டுகொள்வார்.

 

பாதையை அனுசரிக்கத் தவறுதல்

 

நம்பிக்கையாளர்கள், பஹாவுல்லா அவர்களைக் கண்டுகொண்ட பின், அவர் வகுத்திருக்கும் வழியை கடைபிடிக்கத் தவறினால், சிறுக சிறுக, தான் செய்வதும், பஹாவுல்லா அவர்கள் அறிவுறுத்துவதும் எதிர்படையாகப் போகக் காணலாம். இவரது பகுத்தறிவு, பஹாவுல்லா அவர்களின் போதனைகளில் அடங்கியுள்ள விவேகங்களை புறிந்துகொள்ள இயலாமற் போனால், காலப்போக்கில் பஹாவுல்லா அவர்களின் போதனைகளைக்கூட ஒதுக்கித்தள்ளவும், இறுதியில் தம் மெய்நம்பிக்கை அறவே அற்றுப் போகவும் காண்பார். சிலர் இப்பிரச்சினையைக் களைய பல வருட காலம் முயற்சிகள் செய்வர், ஏனென்றால், இவர்கள் தங்கள் மெய்நம்பிக்கையில் உறுதியடைய ஆவல் கொண்டுள்ளனர். இவ்வித ஆன்மாக்கள் சமயத்தின் ஆன்மவிளக்கம் பெற, பஹாவுல்லாவின் மீது நம்பிக்கை வைத்தும் இவ்வுலகப் பற்றுகள் அகற்றியும் உள்ள மற்ற ஆன்மாக்கள் இவர்களுக்கு உதவலாம்.

 

இச்சமயத்தின் மீது சந்தேகமுற்று, எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையிலும், நம்பிக்கைத் தீப்பொறி அறவே அனையாமல் இருக்கும் ஒருவர், இச்சமயத்தின் போதனைகள்பால் தன் ஆய்வு தவறிவிட்டதென்றும், பஹாவுல்லா அவர்களின் அறிவு, இறைவனின் அறிவு என்று முடிவு செய்து, அவர்பால் தன் உணர்வுகளையும் சிந்தனைகளையும் முழுமையாகச் சரனடையச் செய்துவிட வேண்டும். மனத்தூய்மையுடனும், உண்மையாகவும் ஒருவர் தம்மை இவ்விதமாக அர்ப்பணித்ததோடு, அந்த நிலையை விடாது கடைபிடித்துவந்தால், இறையருளிற்கும் தனது இதயத்திற்கும் இடையிலான தொடர்புகள் விளங்கப் பெற்று, மெய்ஞான ஒளியினை அடைவார். உடன் நடைபெறாவிட்டாலும், காலப்போக்கில், உள்ளுணர்வாலோ அல்லது பிரார்த்தனைகள் மற்றும் தியானங்கள் மூலமாகவோ, சமயத்தின்பால் தனக்கேற்பட்ட சந்தேகங்களுக்கும் பிரச்னைகளுக்கும் விடை கிடைத்திடக் காண்பார். அவர் மனப்போராட்டத்திற்கான காரணங்களும் மறைந்து போகும். தன் பகுத்தறிவிற்குச் சவாலாக விளங்கிய போதனைகளின் உள்ளே அடங்கியுள்ள காரணங்களைப் புறிந்து, ஆரம்ப காலங்களில் தான் அறவே அறியாதிருந்த, பஹாவுல்லா அவர்களின் திருக்கூற்றுக்களில் அடங்கிக்கிடக்கும் புதிர்களையும் விளங்கிக்கொள்வார்.

 

இறைவனிடம் சரனடைதல்

 

மறைமொழிகளில் அடங்கியுள்ள பின்வரும் வார்த்தைகள், மனிதன் இறைவனிடம் சரனடையாத வரை, அவரது வெளிப்பாட்டின் அறிவைப் பெற முடியாது என்பதை விளக்குகின்றன:

புழுதியின் புத்திரனே!

உனது கண்களை மறைத்துக்கொள் அதனால் எமது அழகைக் கண்ணுறலாம்; உனது காதுகளை மூடுவாயாக; அதனால் எமது இனிய கீதத்தை செவிமடுக்கலாம்; கற்றதனைத்தையும் துறப்பாயாக, அதனால் எமது அறிவினைப் பெற்றுக் கொள்ளலாம்; செல்வங்களிலிருந்து உன்னைத் தூய்மைப் படுத்துவாயாக, அதனால் எமது அழிவில்லாச் செல்வக் குவியலிலிருந்து நீ உனது நிரந்தரமான பங்கைப் பெறக்கூடும் எமது அழகினைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் உனது கண்களை மறைப்பாயாக; எமது வார்த்தையைத் தவிர வேறெதனையும் செவிமடுக்காது உனது காதுகளை அடைத்துக் கொள்வாயாக; எமது அறிவு என்றைத் தவிர மற்றெல்லா அறிவையும் துறப்பாயாக; அதனால் தெளிவான பார்வையுடனும், தூய உள்ளத்துடனும், கவனமிக்கச் செவிகளுடன் எமது தெய்வீக அரசவையை அடையக்கூடும்.”

"தம்முடைய கட்டளைகளுக்கு ஏற்ப எல்லா நம்பிக்கையாளர்களும் விசுவாசத்துடன் நடந்திருப்பார்களாயின், இந்நேரம் மனிதகுலம் ஒருசேற தம்மை அடையாளம் கண்டும் பனிந்தும் இருந்திருக்கும்”

 

இறைவனை அடிபனிவதன் மூலம் நாம் மெய்நம்பிக்கை பெறுகின்றோம். தன்னையும், தான் இவ்வுலகில் அடைந்த யாவற்றையும் பஹாவுல்லா அவர்களில் ஒப்படைப்பதானது இவ்வுலக பந்தங்கலிலிருந்து விடுதலைப் பெற்றுத் தருகிறது. அது மனித இதயத்தே வதியும் அந்நியனை விரட்டி அப்புனித ஆலயத்துள், தன் மெய்நண்பனாம் இறைவன், புக வழி செய்கின்றது. பஹாவுல்லா அவர்கள்:

 
மனிதனின் புத்திரனே!

“எமது முன்னிலையில் பணிவுடன் நடந்து கொள்வாயாக, அதனால் யாம் அன்புகூர்ந்து உன்பால் வருகைத் தரக்கூடும்...”

மற்றொரு பகுதியில் அவர் கூறுவது:

மனிதனின் புத்திரனே,

“நீ எம்மை விரும்பினால், உன்னிடமிருந்து அப்பால் திரும்புவாயாக; எம் விருப்பத்தை வேண்டினால் உன் சொந்த விருப்பத்தினை பொருட் படுத்தாதே; அதனால் நீ எம்மில் மரித்து, யாம் என்றென்றும் உன்னுள் வாழக்கூடும்.”

 

சமயத்தின் வளர்ச்சி

 

இவ்விதமாக மனிதன் மெய்நம்பிக்கை அடையும்போது, அவன் அதை வளர வழிவிட்டு, மேலும் வலுவடையச் செய்யவேண்டும். ஒருவரின் மெய்நம்பிக்கை நாளுக்கு நாள் வளரவில்லையென்றால், அது ஏதோ ஆன்மீக நோயின் அறிகுறி எனக் கொள்ளவேண்டும். இவ்வாழ்க்கையில் எதுவுமே வளர்ச்சியற்று இருப்பதில்லை, ஒன்று வளரும் அல்லது தாழும். பஹாவுல்லா அவர்கள் பல நிருபங்களில் தமது நம்பிக்கையாளர்கள், தங்களுடைய ஆத்யான்மீக நிலை நாளுக்கு நாள் வளரும் விதம் தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

 

இறதியாக, இதுவரை நாம் தொட்டுப் பேசியவற்றின் சுருக்கங்களைக் காண்போம்.

இறைவன் முன்னிலையில், அவரது சமயபோதனையே அனைத்து நடவடிக்கைகளிலும் வாழ்த்தப் பெற்றது; அது தியாகமரணத்துக்கு ஈடானது.

 

சமய போதனை நடைபெறாத நிலையில், இறைவனின் திருவுதவி எவரையும் வந்தடையாது.

 

இறை பக்தியை, பஹாய்கள், சமயபோதனையின் மூலம் வெளிப்படுத்தலாம்

 

இவ்வித பக்திக்கான முன் தேவைகளை “ஒரு பஹாய் ஆக வாழ்க்கை வாழ்வது” என சுருங்கக் கூறலாம்.

 

ஒரு பஹாய் ஆக வாழ்க்கை வாழாத நிலையில், நம்பிக்கையாளர், தம்மைச் செவிமடுப்போரை எவ்வித்திலும் ஈர்க்க முடியாது.

 

மெய்வாழ்க்கை வாழ்வதற்கான முதல் தேவை, பஹாவுல்லா அவர்களின் மேல் ‘காதல்’ கொள்வது. இதை அடைய மெய்நம்பிக்கை அடைய வேண்டும், பின் திருவாசகங்களை வாசித்து, மெய்நம்பிக்கையாளருடன் நட்பு கொண்டு, இறைநம்பிக்கை இல்லாதாரிடம் இருந்து விலகியிருக்க வேண்டும்.

 

இரண்டாவதாக, பஹாவுல்லா அவர்களின் மேலுள்ள அன்பினால், தூய சிந்தனையுடன் சமயபோதனை மேற்கொள்வது. இந்த பக்திபூர்வமான நடவடிக்கை, மெய்வாழ்வு வாழ நமக்கு உதவிகள் செய்யும். மெய்வாழ்வு வாழ்வது, நமது போதனை முயற்சிகளை பலன் பெறச் செய்யும்.

 

பஹாவுல்லா அவர்களின் திருச்சக்திகள், நமது போதனைச் சேவைக்கு உதவிகள் புரிய அனுமதிக்கப்படல் வேண்டும்.

 

இறுதியாக, மிகவும் முக்கியமானதும், ஊட்டம் பாய்ச்சக்கூடியதுமான ஒரு செயல், பிரார்த்தனை செய்வது. அதாவது, ‘அகம்’ எனும் நிலை விலகி, ஏற்கக் காத்திருப்போரிடம் நம்மை வழிநடத்திச் செல்வதற்குத் தேவையான பிரார்த்தனை.