உலக நீதிமன்றம்

பஹாய் உலக மையம்

1 செப்டம்பர், 1983

நோர்வே பஹாய்களின் தேசிய ஆன்மீகச் சபை

அன்புமிகு பஹாய் நண்பர்களே,

பல வேளைகளில் தங்கள் சபைக்கும் உலக நீதி மன்றத்திற்கும் இடையே தியானம் மற்றும் அதுபோன்ற விஷயங்களைப் பற்றிய கடிதத் தொடர்பு இருந்துள்ளது. அத்தகைய விஷயங்கள் நோர்வே பஹாய்களுடைய கருத்து வேறுபாட்டிற்குக் காரணாமாக இருந்துள்ளது என்பதை உலக நீதி மன்றம் அறியும். உங்கள் கோடைக் காலப் பள்ளியில், தேசியப் போதனைக் குழுவின் அங்கீகாரத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட வகையான தியான வகுப்பு நடை பெற்றது என்று உலக நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆகையால், பின்வரும் இந்த விளக்கவுரைகளை உங்களுக்கு அனுப்புமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். இது இந்த நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் என்று நம்பிக்கைக் கொள்ளப் படுகின்றது.

பஹாய் சமூகத்தை ஆன்மீகமயப்படுத்தல்

டப்லின் மாநாட்டுக்கான அதன் செய்தியில் உலக நீதி மன்றம் கண்ட ஆலோசகர் வாரியத்தையும் ஐரோப்பாவின் தேசிய ஆன்மீகச் சபைகளையும், "பஹாய் சமூகத்தை ஆன்மீகமயமாக்குவதற்கான ஒரு செயல் திட்டத்தையும், இதுவரை இந்தக் கண்டத்தில் காணவியலாத தனி நபர் போதனை நடவடிக்கையையும்" இணைந்து துவங்குமாறு கேட்டிருந்தது. மேல் குறிப்பிடப் பட்டிருக்கும் கோடைக் காலப் பள்ளியில் நடந்த அந்த வகுப்பு இந்தப் போதனைத் திட்டத்தின் ஓர் அம்சமாகக் கருதப் பட்டிருக்கக் கூடும் என உலக நீதி மன்றம் உணர்கின்றது, ஆகையால் "பஹாய் சமூகத்தை ஆன்மீகமயப்படுத்தல்" என்று அது எந்த அர்த்தத்தில் கூறியுள்ளது என்பதைப் பற்றி மேலும் முழுமையாக விளக்கம் வழங்கப் பட்டால் உதவியாக இருக்கும் என்று அது நம்புகின்றது.

கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பா கண்டம், திகைக்கக் கூடிய அளவிற்குச் சமய வேறுபாடுகளும் சமய வெறியினாலும் தூண்டப்பட்ட கொடுமைகளாலும் போர்களினாலும் துன்பங்களைத் தாங்கிவந்த காரணமாகச் சமயத்தின் மீது ஒரு வெறுப்புத் தோன்றியுள்ளது. எண்ணற்ற ஐரோப்பியர்கள் சமய நடைமுறைகளின்மீது நம்பிக்கையற்றவர்களாகவும், ஏளனமாகவும் உள்ளனர், மற்றும் சமயக் கருத்துக்களைப் பற்றி உரையாடவோ, (சமய)நம்பிக்கையின் சக்திக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கோ தயங்குகின்றனர். சமயத்தில் இருந்து இந்த விலகிச் செல்லுதலானது, பொருளாதார வளர்ச்சியினால வலுவாக ஊக்குவிக்கப் பட்டுள்ளது. மேலும் உடலளவிலான சுகாதாரமும் ஆன்மீக வெறுமையும் கலந்த ஒன்றை இது தோற்றுவித்து, மக்கள் மீது சமுதாய உறவிலும் மனோவியல் தொடர்பிலும் பேரழிவை விளைவித்துள்ளது. இத்தகைய அறிவு மற்றும் உணர்ச்சி வயப்பட்ட சூழ்நிலை பஹாய் சமூகங்களுக்கு இரண்டு வகையில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. பெரிய அளவிலான பஹாய் அல்லாத மக்களின் மீதுள்ள அதன் விளைவு பஹாய்கள் மற்றவர்களிடம் செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்குச் சிரமமாய் விலங்குகிறது. பஹாய்கள் மீதான அதன் விளைவு அதைவிட நேர்த்தியானது, ஆனால் எவ்விதத்திலும் தீங்கிழைப்பில் குறைந்ததில்லை. உணர்ந்து போரிடாவிட்டால், தங்களது ஆன்மீக ஊக்கத்திற்கும் தங்களது ஆன்மாவின் வளர்ச்சிக்கும் அஸ்திவாரமாக இருக்கும் அந்த ஆன்மீகக் கடமைகளைப் புறக்கணிக்க நம்பிக்கையாளர்களை அது வழிநடத்திச் செல்லும்.

ஆன்மீக வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்

நமது ஆன்மீக வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகளைப் பற்றித் தமது திரு வாசகங்களில் பஹாவுல்லா மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார், மற்றும் இவை அப்துல் பஹாவினால் மீண்டும் மீண்டும் தமது உரைகளிலும் நிருபங்களிலும் வலியுறுத்தப் பட்டுள்ளன. நாம் அவைகளை இவ்வாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்:

 • ஒவ்வொரு நாளும் கட்டாயப் பிரார்த்தனைகளில் ஒன்றைப் புனித உள்ளங் கொண்ட பக்தியோடு ஒப்புவித்தல்.
 • புனித வாசகங்களைத் தினந்தோறும், குறிப்பாக ஒவ்வொரு காலையிலும் மாலையிலும், பக்தியுணர்வோடும், கவனத்தோடும், சிந்தனையோடும், நாள்தவறாமல் வாசித்தல்.
 • போதனைகளின் மீது பிரார்த்தனை மயமான தியானஞ் செய்தல், அதனால் நாம் அதனை மேலும் ஆழமாகப் புரிந்துகொண்டு, அதனை மேலும் விசுவாசத்துடன் நிறைவேற்றி, அதனை மேலும் தெளிவாக மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கூடும்.
 • போதனைகளில் விதிக்கப்பட்டிருக்கும் உயரிய தரத்துக்கேற்ப நமது நடத்தையைக் கொண்டுவர ஒவ்வொரு நாளும் கடும்முயற்சி செய்தல்.
 • கடவுளின் சமயத்தைப் போதித்தல்.
 • சமயப் பணியிலும் நமது வணிகம் அல்லது தொழிலிலும் தன்னலமற்றச் செவையை வழங்குதல்.
 • இந்தக் கருத்துக்கள், வேறு வார்த்தைகளைக் கொண்டு கூறப்பட்டு, ஏற்கனவே கண்ட ஆலோசகர்களினால் ஐரோப்பிய நண்பர்களுக்குத் தெரிவிக்கப் பட்டுள்ளன. ஆனால் உலக நீதி மன்றம் அதனை மீண்டும் வற்புறுத்திக் காட்ட விரும்புகின்றது, காரணம் அவை இந்நாளின் கடவுளின் இறைத் தூதரினால் குறிக்கப் பட்ட ஆன்மீகத்தன்மையை அடைவதற்கான பாதையாக உள்ளது.

  பிரார்த்தனையும் தியானமும் - தனிநபர் வழக்கங்கள்

  பஹாய் சமயத்தில் மிக அடிப்படையான ஆன்மீகப் பழக்கங்களான பிரார்த்தனையும் தியானமும் எவ்வளவு தனிப்பட்டதும் அந்தரங்கமானதுமாக இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது, நிச்சயமாக, மாஷ்ரிக்குள்-அஸ்காரி’லோ பத்தொன்பது நாள் பண்டிகையிலோ பஹாய்களுக்கு வழிபாட்டுக்கான கூட்டங்கள் உள்ளன, ஆனால் தினசரி கட்டாயப் பிரார்த்தனை ஒருவரின் அறையின் தனிமையில் கூறுவதற்காகக் கட்டளையிடப் பட்டுள்ளது, மற்றும் போதனைகளின் மீதான தியானம், அதுபோலவே, ஒரு தனிப்பட்ட நடவடிக்கையாகும், அது ஒரு கூழு சிகிச்சைமுறை கூட்டமல்ல.

  தமது சொற்பொழிவுகளில் அப்துல் பஹா பிரார்த்தனையைக் "கடவுளோடு உரையாடுதல்" என்று வர்ணித்துள்ளார், மற்றும் தியானத்தைப் பற்றி அவர் இவ்வாறு கூறியுள்ளார்: "நீங்கள் தியானிக்கும் பொழுது நீங்கள் உங்கள் சொந்த ஆவியுடன் பேசுகின்றீர்கள். அந்த மன நிலையில் நீங்கள் உங்கள் ஆவியிடம் சில கேள்விகளைக் கேட்கின்றீர்கள், உங்கள் ஆவியும் பதில் சொல்கிறது: ஒளி பிரகாசிக்கின்றது மற்றும் உண்மை வெளிப்படுத்தப் படுகின்றது." ஒருவர் தனது ஆன்மீகத்தை அதிகரிப்பதற்கு, நிச்சயமாக, அவர் செய்யக் கூடிய விஷயங்கள் பல உள்ளன. உதாரணமாக, தியானம் செய்யும்பொழுது பின்பற்றுவதற்காக பஹாவுல்லா எவ்வித வழிமுறைகளையும் குறிப்பிட வில்லை, மேலும் நம்பிக்கையாளர்கள் இவ்விஷயத்தில் தாங்கள் விரும்பியவாறு செய்ய, அது சமயத்தின் போதனைகளோடு இணக்கமாக இருந்தால், அதற்கு தடை ஏதும் விதிக்கப்பட வில்லை. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் முற்றிலும் தனிப்பட்டவையாகும் மற்றும் எந்தச் சூழ்நிலையிலும் அவற்றை நாம் ஆன்மீக வளர்ச்சிக்கு அதி முக்கியத்துவமானவை என பஹாவுல்லாவினால் கருதப்படும் செயல்களோடு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கருதப் படக்கூடாது.

  ஒரு குறிப்பிட்ட தியான முறையைப் பின்பற்றுவது தங்களுக்குப் பலன் தரக் கூடியதாக சில நம்பிக்கையாளர்கள் காணலாம். அவர்கள் உண்மையாகவே அந்த பலனைப் பெற்றிருக்கலாம், ஆனால் அத்தகைய வழி முறைகள் பஹாய் கோடைக் காலப் பள்ளிகளில் கற்றுத் தரப்படக் கூடாது அல்லது அந்த பள்ளியின் ஒரு நிகழ்ச்சியில் செயல்படுத்தப்படவும் கூடாது. காரணம், அவை சிலருக்கு விருப்பமானதாக இருப்பினும், மற்றவர்களுக்கு அது வெறுப்பைத் தருவதாக இருக்கக்கூடும். சமயத்தோடு அவற்றுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை, அதனால் அவை தெளிவாகத் தனிப்பட்டதாக வைக்கப் படவேண்டும், அதனால் சமய ஆர்வமுள்ளவர்கள் குழப்பத்திற்கு ஆளாக்கப் படமாட்டார்கள்.

  தியானத்தின் வாயிலாகக் குறிப்பிடத்தக்க நன்மையைப் பெற்றிடும் நம்பிக்கையாளர்கள் நோர்வேயில் பலர் உள்ளனர் என்பது போன்று உள்ளது. தங்களது தனிப்பட்ட தியானத்திற்காக அவர்கள் அதி பெரும் நாமமான, அல்லா-உ-அப்ஹா என்று தொண்ணூற்று ஐந்து முறை மீண்டும் மீண்டும் கூறுவதைப் பயன் படுத்த விரும்பலாம் என உலக நீதி மன்றம் ஆலோசனை கூறுகின்றது. இது மேல் நாட்டு நம்பிக்கையாளர்களுக்கு இன்னும் கட்டாயப் படுத்தப் படவில்லை என்ற போதிலும், அது கித்தாப்-இ-அக்டாசிலுள்ள கட்டளைகள், விதிகள் மற்றும் வளியுறுத்தல்களில் ஒன்றாகும். (கித்தாப்-இ-அக்டாஸின் பொருட் சுருக்கமும் சட்டத் தொகுப்பும் என்ற நூலின் 46ஆம் பக்கத்தைப் பார்க்கவும்).

  ஐரோப்பா முழுவதிலும் உள்ள நம்பிக்கையாளர்கள் தங்களது ஆன்மீகத்தை அதிகரிப்பதற்கு, மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆறு வழிமுறைகளில் மனப்பூர்வமாக கடுமுயற்சி செய்தார்களேயானால், மற்றும் தங்கள் சேவைகள் அனைத்திலும் தாங்கள் கடவுளின் நிச்சயிக்கும் சக்திக்கு வெறும் கருவிகள்தாம் என்று தங்களுடைய உள்ளார்ந்த நிலைகளில் உணர்ந்தார்களேயானால், அவர்கள் தங்கள் சக குடிமக்களின் இதயங்களைக் கவர்ந்திழுத்திடுவார்கள் மற்றும் தங்கள் நாட்டு மக்களில் எண்ணற்றவர்களின் பார்வையைத் திரைமூடும் பொருளாசை என்னும் நச்சாவியை ஊடுருவவும் செய்வார்கள். முயற்சி, நடவடிக்கை, ஒற்றுமை மற்றும் பஹாவுல்லாவின் சக்தியின் மீது உறுதியான நம்பிக்கை ஆகியவை நிச்சயமாக எல்லாத் தடைகளையும் வென்றிடும்.

  அன்பு பஹாய் வாழ்த்துக்களுடன்,

  செயலகப் பகுதி